மாறா 1
“மாறா! மாறா! மாறா! மாறா!” என
சுத்தி இருந்தவர்களின் கூச்சலுக்கு நடுவே தனது விசையுந்துவை வைத்து சாகசம் செய்துக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
கே.டி.எம் என்று சொல்லக்கூடிய பந்தைய வண்டியை வைத்துக் கொண்டு உறுமும் சத்தத்துடன் சுழற்றி சுழற்றி சாகசம் செய்தானவன்.
தரையோடு தரையாக ஒட்டியப்படி வண்டியை ஓட்டினான். முன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்தியப்படி வண்டியை சுற்றினான்.
எருமைமாடு போல் இருக்கும் வண்டியை வைத்து என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து விட்டு வண்டியை நிறுத்தினான்.
அவனை சுற்றியிருந்தவர்கள் வேகமாக அவனருகே ஓடிச்சென்று வாழ்த்துகளை சொன்னார்கள்.
அவன் முன்னே குமிந்த இளைஞர்கள் பட்டாளத்த தலைக்கவசத்தை கழற்றாமலே கண்ணாடியை மட்டும் உயர்த்தி கண்கள் தெரிய கண்டவன், அவர்கள் கூறும் வாழ்த்துகளை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.
“ண்ணா! செமண்ணா! பிச்சிட்ட! எப்படிண்ணா உன்னால மட்டும் முடியுது! நானெல்லாம் செய்றேன் கீழ விழுந்து அடிப்பட்டது தான் ண்ணா மிச்சம்.. வரவே மாட்டிது ண்ணா” எனச் சலித்து கொள்ள,
“இன்னும் பயிற்சி வேணும் தம்பி! உன் வயசுல எனக்கும் தான் வரல இப்ப பண்ணலயா? பயிற்சி… பயிற்சி வேணும்டா” என்றான் அவன் தோளைத் தட்டி.
மேற்கொண்டு அவர்கள் கேட்கும் சில சந்தேகங்களுக்கு பதிலளித்தபடியிருந்தான்.
“மாறா! வீடியோ எடுத்துட்டேன். ஒருவாட்டி செக் பண்ணிட்டு அப்லோட் பண்ணிக்க.” என்று தான் எடுத்த வீடியோவை தன் நண்பனுக்குக் காட்ட; அவனும் கொஞ்சம் ஓட விட்டு பார்த்தவன், “எனக்கு அனுப்பு நான் அப்லோட் பண்ணிக்கிறேன்..” என்றான்.
மீண்டும் சிற்றார்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தபடி இருந்தவனின் காதில் போலீஸின் சைரன் ஒலி கேட்டதும், “பாய்ஸ் அலர்ட்!” என்று இவன் சொல்ல, மறுநொடியே அனைவரும் மறைந்தது போல அவ்விடமே காலியானது.
நடு இரவில் ஆள் அரவமற்ற, மக்கள் அதிகம் பயன்படுத்தாத சாலையில் தான் மாறனின் சாகசத்தை பார்க்க முடியும். அவன் செய்யும் சாகத்தை பார்க்கவே பத்தொன்பது, பதினெட்டு வயது தொடங்கிய இளைஞர்கள் சிலர் தன்னுடைய கே.டி.எம் என்கிற விசையுந்துடன் ஆவலாக வந்து விடுவார்கள்.
யூடியூப்பிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ‘நைட்_ஹீரோ’ என்ற பெயரில் வண்டியுடன் அவன் செய்யும் சாகசத்தை வீடியோவாக அப்லோட் செய்வான். அதனைப் பலரும் பார்த்து அவனைப் பின் தொடர்கிறார்கள்.
(M) கணக்கில் மக்கள் அவனை பின் தொடர்கிறார்கள். ஆனால் இன்னும் அவனது முகத்தை யாரும் பார்த்தது இல்லை.
அவனது நண்பன் விஷாலைத் தவிர யாருக்கும் அவனது முகம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
இன்ஸ்டாகிராமில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியை வைத்து அந்த இடத்தில் ஒன்றுக்கூடுவார்கள். தினமும், எல்லாம் ஒன்று கூட மாட்டார்கள் வாரத்தில் மூன்று நாள்கள் கூடுவார்கள்.
அன்றைய நாள், தன்னை உற்சாகம் செய்பவர்களுக்கு தனது வித்தைகளை விருந்தளித்து விட்டு அவர்களது வாழ்த்து மழையில் நனைவான்.
போலீஸ் சைரன் சத்தம் தான் அவர்களுக்கு எச்சரிக்கை மணி. அந்தச் சத்தத்தைக் கேட்டதுமே கூட்டத்தைக் கலைத்து விட்டு வண்டியில் பறந்து விடுவார்கள்.
விஷால் வண்டியை ஓட்ட, பின்னே அமர்ந்த மாறன் தனது தலைக் கவசத்தைக் கழற்றி கலைந்த முடியை சரி செய்தான். உடையின் மேல் அணிந்திருந்த ஜாக்கெட்டையும் கை உரையையும் கழற்றினான்.
மாறனின் வீட்டுத்தெரு முக்கு வந்ததும் வண்டியை நிறுத்தினான் விஷால். “இந்தாடா இதை பத்திரமா வச்சிக்க! பார்த்து பத்திரமா வீட்டுக்கு போ!” என்றான்.
“ம்…” அவனது பொருட்களை வாங்கி முன்னே வைத்தவன், “அடுத்த மீட்டிங்கு எப்போன்னு பசங்க கேக்குறானுங்க டா! நீ வேற வீடு காலி பண்ண போறதால ஒருவாரத்துக்கு மீட்டிங் இல்லைனு சொல்லிட்டு வந்துட்ட! என்னை பிடிச்சி நச்செடுக்கிறானுங்க! தேதிய சொன்னா நான் நிம்மதியா தூங்குவேன் டா..”
“மச்சி! நான் போற ஏரியாவ பத்தி எனக்கே முழுசா தெரியாது டா. ஒரு வாரம் ஆகும் டா அந்த ஏரியாவுக்கு நான் பழக.
சந்து பொந்து எல்லாம் வாட்ச் பண்ணி எப்படி நைட் ஈசியா வெளிய வரது? போலீஸ் கையில சிக்காம எப்படி வீட்டுக்கு போறதுன்னு, நீ எப்படி வீட்டுக்கு போவன்னு எல்லாத்தையும் பார்த்து வச்சிக்கிட்ட அப்புறம் தான் மச்சி மீட்டிங் போட முடியும்!
எடுத்தோம் கவுத்தோம்ன்னு செஞ்சோம் கம்பி என்ன வேண்டியது தான். இது வரைக்கும் எந்த சிக்கலும் இல்லாம தப்பிச்சிட்டு இருக்கோம். இனியும் கவனமா இருக்கணும்..
என் அம்மாவ பத்தி தான் தெரியுமே உனக்கு. இன்ன வரைக்கும் அவங்களுக்குத் தெரியாம தான் பண்ணிட்டு இருந்தேன். இனியும் தெரியாம பார்த்துக்கணும். அதுல நான் ரொம்ப கவனமா இருக்கேன். மீட்டிங் போடலாம் டா கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்வோம்..” என்றான்.
“ம்ம்…” என்றவன், “சரி நேரமாச்சி நான் கிளம்புறேன். நீ பார்த்து போ..”என்றான்.
விஷாலும் தலையசைத்து விடைபெற, இவனும் வழக்கம் போல ‘யாரும் பார்க்கிறார்களா?’ என்று சுற்றும்முற்றும் பார்த்தப்படி வீட்டிற்கு வந்தவன், சத்தம் எழுப்பாமல் வீட்டைத் திறந்து உள்ளே வந்து மீண்டும் பூட்டி விட்டு அறைக்குள் சென்று நல்லப்பிள்ளை போல படுத்துக்கொண்டான்.
இரண்டு மணிக்கு படுத்தவன், ஐந்து மணிக்கு தாயின் அழைப்பில் தான் எழுந்தான். அவ்வளவு தான் அவனது தூக்கம்!
இன்று புதுவீட்டில் பால் காய்ச்ச போகிறார்கள். பலவருடங்களாக இருந்த வீட்டிலிருந்து, வேறு இடம் வேறு தெரு என மாறி செல்கிறார்கள்.
சுத்தமும் அவர்களுக்கு பழக்கப்படாத இடத்திற்குச் செல்கிறார்கள்.
மகன் வைத்திருக்கும் மெக்கானிக் கடைக்கு அருகே வீடு பார்த்து அங்கு செல்கிறார்கள்.
தாய், மகன் என இருவருக்கு ஏற்றது போல வீடு பார்த்து குடியேறப் போகிறார்கள். அங்கே அவனுக்கு வைத்திருக்கும் விதியின் விளையாட்டை அறியாது புது வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறான்.
ஐந்தரை மணிக்கு எழுந்து குளித்து விட்டு புது உடை அணிந்து பால் காய்ச்ச தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு தெரிந்த ஆட்டோக்காரை அழைத்து; அவனது தாய் கோமதியை முன்னே அனுப்பி வைத்து, பின்னே இவன் தனது ஸ்பளெண்டர் பைக்கில் பின்தொடர்ந்தான்.
வீடும் வந்திட , இருவரும் இறங்கிக் கொண்டனர்.
அவர் உள்ளே பால் காய்ச்ச, தேவையானவற்றை எடுத்து வைத்தவர் பூஜை அறையில் கடவுள் புகைப்படத்தை வைத்து பூ போட்டு இதரப் பொருட்களை எடுத்து வைக்க, மாறனோ வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.
முருகனின் கந்த சஷ்டி கவசத்தில் தொடங்கியது அன்றைய அதிகாலைவேளை. ஐந்து புள்ளி ஐந்து வரிசையில் கம்பி கோலத்தில் மிக பொறுமையாக வளைத்து நெளித்து போட்டுக்கொண்டிருந்தான் வெற்றி
மாறன்.
சுற்று வட்டாரத்தை பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாது, சிரத்தை எடுத்து மிக கவனமாக புள்ளிகளை கடந்து கம்பிகளை இழுத்துக் கொண்டிருந்ததை ஆச்சர்யமாக பார்த்தப்படி அங்கு வந்து நின்றார் வைத்தியநாதன்.
தன் முன்னே வெள்ளை வேஷ்டியின் நிழலாட நிமிர்ந்து பார்த்தான். கைகளைக் கட்டிக் கொண்டு அவனையும் கோலத்தையும் மாறி மாறி அதிசயத்தைப் பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தார்.
‘இவர் யாருனு தெரியலையே! ஒருவேல இவரும் இதெல்லாம் ஆம்பளைங்க பார்க்கிற வேலை இல்லை நீயேன் பா பார்க்கிற? உன்னால வீட்ல இருக்க பெண்களும் அடுத்து இந்த வேலையும் எங்களையும் பார்க்க வைக்கவானு ஆரம்பிச்சிடுவாரோ! அப்படி மட்டும் பேசட்டும் நானும் நாக்க புடுங்கற மாதிரி கேட்டிடனும்!’ என்ற நோக்கிலே எழுந்து நின்று அவரைத் தான் பார்த்தான் பதிலடி கொடுக்க,
ஆனால் மாறாக அவரோ “தம்பி! இது ஐஞ்சு புள்ளி ஐஞ்சு வரிசை தானே” என்றவரைக் கண்டு வியப்பில் விழிகளை அகல விரித்தான்.
“நானும் அதை தான் போடலாம் வந்தேன் தம்பி நீங்க போட்டீங்க! நான் வேற போடுறேன்..” என்றவர் பின்னால் மறைத்து வைத்திருந்த கோலப்பொடி டப்பாவை அவனிடம் காட்டி விட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் போட அமர்ந்தவரை, இப்போது அவன் அதிசயத்தை காண்பது போல பார்த்தான்.
அவரும் சின்ன கோலமாக ஐந்திலிருந்து மூன்று புள்ளிகளை வைத்து கம்பி இழுக்கத் தொடங்கினார்.
“அங்கிள்! உங்க வீட்ல நீங்க தான் எல்லாமே வா?”
“ஆமாப்பா! நீயும் அப்படி தானா?”
“ஆமா அங்கிள்! நான் தான் எங்க வீட்ல எல்லாமே..”
“லேடீஸ் வீட்ல இல்லையாப்பா?”
“அம்மா மட்டும் தான் அங்கிள்! ஒரு சின்ன ஆக்சிடென்ட்ல இருந்து அவங்களை அதிகமா வேலைப் பார்க்கக் கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க. அதனாலே இங்க எல்லா வேலையும் நான் தான் அங்கிள் பார்க்கிறேன்.” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவருக்குள்ளும் கண்களில் சிறு வலி தென்பட்டது. அதை மறைத்து லேசாகப் புன்னகைச் செய்தவர், “எங்க வீட்டையும் விடிஞ்சதுல இருந்து அடையற வரைக்கும் எல்லாம் வேலையும் நான் தான் பா!” என்றார் பாவமாக..
“ஆன்டி..!” என தயக்கமாக இழுத்தான்.
“இல்லப்பா நானும் என் பொண்ணு மட்டும் தான். பொண்ணு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல டாக்டரா இருக்கா! வேலை அதிகமால இருக்கும், அதனாலே வீட்டுல எல்லா வேலையும் நானே பார்ப்பேன்..”
அவனும் சிரித்துக்கொண்டே, “உங்களை பார்த்துல மீ ரொம்ப ஹாப்பி அங்கிள்! நான் வெற்றிமாறன், மெக்கானிக் ஷாப் வச்சிருக்கேன்..” என அறிமுகப்படலத்தை ஆரம்பித்தான்.
“நான் வைத்தியநாதன்! ரிடையர்ட் கவர்மென்ட் டீச்சர் பா! இப்போ ஹவுஸ்ஃபாதர் பா நானும்..”
அதில் பற்கள் தெரிய சிரித்தவன், “என் இனம் அங்கிள் நீங்க!”
“ஹா ஹா.. உன்னை போல ஒரு பையனை ரொம்ப நாள் கழிச்சி பார்க்கிறேன் வெற்றி! இந்த தெருவுல பொண்டாட்டியோட வாக்கிங் போற ஆம்பிளைங்க எல்லாரும் என்னை இன விரோதியா பார்ப்பாங்க..
அவங்க வீட்டு பெண்கள் என்னச்சொல்லி திட்டுவாங்களோ? இல்ல என்னை சொல்லி திட்டுவாங்களோ! அந்த கோபத்துல என்னை வடிகால ஆகிட்டு போவானுங்க.. இப்போ என் இனத்துல உன்னை பார்க்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் பா..”
“யூ டூ அங்கிள்! நீங்களும் அதை அனுபவிச்சு இருக்கீங்களா?”
“ஆமா பா! இதுக்காகவே அலாரம் வச்சி கோலம் போட்டு மறுபடியும் தூங்க வேண்டிய தா இருக்கு..”
“இனி அப்பிடி பயந்து கோலம் போடணும் அவசியம் இல்ல அங்கிள் நாளையிலிருந்து நான் உங்களுக்கு துணையா இருக்கேன் இனி நீங்க என்னோட ஃப்ரெண்ட், கிரைம் பாட்னார் ஓகே வா?”
“ஓகே பா..” என்றார் புன்னகையுடன்.
“நீங்க சக்கரை பொங்கல் சாப்பிடுவீங்க தானே?” என அவருக்கு மட்டும் கேட்க கேட்டான்.
“சாப்பிடுவேன் பா.. ஆனா என் பொண்ணுக்கு தெரியாம..” என்றவரை கண்கள் சுருங்கப் பார்த்தான்.
அசடு வழிய சிரிப்புடன், “கொஞ்சமா சுகர் இருக்கு. அதை பெரிய அளவில சொல்லிச் சொல்லி கண்ணுல இனிப்புன்ற வார்த்தைய கூட காட்ட மாட்டிக்கிறா என் பொண்ணு! சக்கரை டப்பாவ ஒளிச்சு வைக்கிறாப்பா.. அவளுக்கு தெரியாம சாப்பிட்டாலும், பேச்சு வாக்குல உளறி வச்சி திட்டும் வாங்கிப்பேன்..” என்றார் வெள்ளந்தியாக.
“அப்போ கொண்டு வர வேணாமா பாட்னர்?” என பாவமாகக் கேட்டான் உதட்டில் சிரிப்பை மறைத்து.
“என் பொண்ணு தூங்கிட்டு இருக்கா. அவ இப்போதைக்கு எழுந்துக்க மாட்டா. நீ கொண்டு வா..”
“தெரிஞ்சதும் எனக்கு எதுவும் ஊசி குத்திட மாட்டாங்களே?” என பயந்தது போல வினவியவனை கண்டு சிரித்தார்.
“வெற்றி!” என உள்ளிருந்து குரல் வர, “எங்க அம்மா அங்கிள், பால் காய்ச்ச நேரமாகிடுச்சி நினைக்கிறேன். நீங்களும் உள்ள வாங்க அங்கிள்!” என்றழைத்தான்.
“இல்லபா.. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேன். குக்கர்ல பருப்பு வச்சிட்டு வந்திருக்கேன். நீங்க பால் காய்ச்சிங்க! இங்க வந்த நாள்ல இருந்து உங்களுக்கு எல்லாமே நல்லாதவே நடக்கும்!” என்று வாழ்த்து சொல்லவும், அவரது வீட்டிலிருந்த குக்கர் விசில் அடிக்கவும் சரியாக இருந்தது.
“தேங்க்ஸ் அங்கிள் அப்புறம் பார்க்கலாம்..” என வீட்டிற்குள் சென்று விட்டான்.
அவன் செல்வதை பார்த்தவருக்கு பலநாள் கழுத்து நண்பர்களை பார்த்து சிரித்து பேசும் தருணத்தைத் தந்து விட்டு போயிருந்தான் மாறன். முகத்தில் சிரிப்புடன் நின்றவர், மீண்டும் விசில் சத்தம் கேட்கவும் வேகமாக உள்ளே சென்றார்.
“வெற்றி! யார் கிட்ட பேசிட்டு இருந்த?” என அலங்கரித்திருந்த பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றியப்படி கேட்டார் கோமதி, வெற்றி மாறனின் தாய்.
“என்னை போல ஒரு ஜீவனை பார்த்து நட்பு பாராட்டி வரேன் மதி!”
“உன்னை போல ஜீவனா? யாரு வெற்றி அது?”
“எதிர்த்த வீட்ல ஒருத்தர் மா. அப்பா வயசு இருக்கும். அவர் தான் வீட்ல எல்லாமே போல, என்னை போல அவரும் கோலம் போட வந்தார். பேசிட்டு இருந்தோம்மா..”
வாயில் கை வைத்தவர், “அவரும் கோலம் போட வந்தாரா? ஏன் வீட்ல அவர் மனைவி இல்லையா?”
“இல்ல போல மா! ஒரு பொண்ணு தானாம். வேலைக்கு போறாங்க போல! இவர் தான் வீட்ல எல்லாம்மா..”
“என்ன டா கூத்து இது? வேலைக்கு போனா எதுவும் பார்க்க கூடாதா என்ன? சமைச்சிட்டு வச்சிட்டு வீட்டு வேலை பார்த்திட்டு போனா என்ன? ஆம்பள நீயே வீட்டு வேலை பார்த்து வச்சிட்டு தான் போற, அந்தப் பொண்ணுக்கு என்ன?
சமைக்க வீட்டு வேலை பார்க்க சொல்லி தர வேணாமா? நாளைக்கு அந்த பொண்ணுல இன்னொரு வீட்டுக்கு போய் கஷ்டப்படும்! என்ன மனுஷர் பொண்ணை வேலை வாங்காம செல்லம் கொடுத்து வச்சிருக்கார். அம்மா இருந்திருந்தா இடிச்சிருப்பாங்க..” என அவர் பாட்டுக்கு ஓட விட்ட ரேடியோவைப் போல பேசிக்கொண்டே போனார்.
“மதி! மதி! உடனே பொண்ணுங்க வேலை செய்யணும் ஆம்பளைங்க நீட்டி நிமிரனும்னு ஆரம்பிக்காத! அவர் கிட்ட பேசின பத்து நிமிஷத்துல பேசினதை உன் கிட்ட சொன்னேன். உடனே பொண்ணு ஆம்பிளை ஆரம்பிக்க கூடாது.
அவங்க வீட்டுல சூழ்நிலைபடி இருக்காங்க. நாம நம்ம வீட்டு சூழ்நிலைபடி இருக்கோம் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பேசாதே! பால் பொங்க போகுது பார்..” என்று அவரது பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க கவனத்தை திசை திருப்பினான்.
கிழக்கு திசையை நோக்கி பால் பொங்கிட, கையெடுத்து கும்பிட்டார். பூஜை அறையில் பாலை வைத்து கடவுளை வணங்கினார்கள்.
இரண்டு டம்ளரில் பாலை ஊற்றி, “இந்த உன் புதுபிரெண்ட்க்கு போய் குடுத்திட்டு வா..” என்று நீட்ட, மாறன் சிரித்து விட்டான்.
இது தான் அவனது தாய் இந்தக் காலத்திலும் ஆண், பெண் என பிரித்து விவாதம் செய்பவர். ஆனாலும், கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்டவர். இளகிய மனம் கொண்டவர். எதைக் கேட்டாலும் வாரி வழங்கும் வள்ளல்.
கொஞ்சம் சக்கர பொங்கலோடு காய்ச்சின பாலை இரண்டு டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தவன், எதிர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
நடுக்கூடத்தில் உறங்கி கொண்டிருந்தவளின் முகம் லேசாக சுணங்கியது. மீண்டும் மீண்டும் அழைப்பு மணி ஆர்வம் கேட்டு, “வைத்தி” என கண் விழிக்காமல் கத்தினாள்.
“அச்சச்சோ!” என அவரும் பதறியப்படி வேகமாக சென்று கதவை திறந்தார்.
வெளியே மாறன் நிற்பதைக் கண்டு அதிர்ந்தவர், மரியாதையின் பொருட்டு உள்ளே அழைத்தார்.
உள்ளே வந்தவன் கூடத்தில் இழுத்து போர்த்தி உறங்கும் அந்த ஜீவனை கண்டு, “உங்க பொண்ணா பாட்னர்?” என்றான் மெல்லமாய்.
“ஆமாப்பா!” என்றார் அவன் நீட்டியது வாங்கியப்படி..
“உங்க பொண்ணு எந்திரிக்கிறதுக்குள்ள சக்கரபொங்கலை சாப்பிடிருங்க பாட்னர்!”
அவரோ வாயெல்லாம் பல்லாகக் காட்டினார்.
வேகமாக ஒருவாய் வைக்க போகும் நேரத்தில் “வைத்தி..” என எழுந்து உட்கார்த்திருந்ததை கண்டு கொள்ளாது வாயில் வைக்கப் போனார்.
“என் பொண்ணுக்கு பாம்பு காது! நான் ஸ்வீட் நினைச்சாலே போதும் உடனே என் முன்ன வந்து நின்னுடுவா! அந்த அளவுக்கு சார்ப்..” என அவனது காதை கடித்தவர்,
“இல்லம்மா தம்பி மனசு கஷ்டப்பட கூடாதுனு பேருக்கு ரெண்டு பருக்கை வாயில போடலாம்னு..” என்று வழிந்தவரை முறைத்தவள், பக்கத்தில் நின்றிருந்தவனைப் புதிதாக பார்த்தாள் சம்ருதி.
நெற்றியில் திருநீறிட்டு அழகான நீலநிற சட்டையும் வேட்டியை கட்டி அம்சமான பக்க தொண்ணூறுகளில் வரும் ஹீரோக்களை போலவே இருந்தான்.
ஒருக்கணம் அவனை அசந்து பார்த்தவள், மீண்டும் தந்தையின் மீது பார்வையை செலுத்தி, “சுவீட்னு எழுதி கொடுத்தாலே முழுங்கற ஆளு நீ! நீ ரெண்டு பருக்கை வாயில போட போறீயா? இந்த தம்பி ஒரு நாள் தான் கஷ்டப்படுவார், நான் தினமும் உன்னால கஷ்டப்படனும் அதுனால… சக்கரை பொங்கல் வேணாம் உனக்கு!”
“பாப்பா…” எனச் சக்கரை பொங்கலை கண்டு கண் வழியே ஜொள்ளு வடித்தார் வைத்தி.
“ஒருநாள் சாப்பிடுறதால் ஒன்னும் ஆகிடாதுங்க.. ரெண்டு வாய் அவர் சாப்பிட்டும் மீதிய நீங்க சாப்பிடுங்க..”
என வைத்திக்காகப் பரிந்து பேச,
“ரெண்டு வாயென்ன நாலுவாய் இனிப்பு கொடுக்க நான் ரெடி! சுகர கண்ட்ரோல் வைச்சிக்க ரெடியா கேட்டு சொல்லுங்க!”
மாறனோ வைத்தியைப் பார்க்க, வைத்தியோ வழிந்து நின்றார்.
“என்ன பாட்னர்? நம்ம பக்கம் எல்லாம் சரியா இருந்திருந்தா உங்க பொண்ணோட வாயடைச்சிருக்கலாம் நீங்க சரியா இல்லாததால் வழிஞ்சுட்டு நிக்கிறீங்க! போங்க பாட்னர் என்னால உங்களுக்காக பேச முடியாது. ஐ ஆம் ஹெல்ப்ல்ஸ்!” என்று உதட்டை பிதுக்க, அவரோ பாவமாக பொங்கலையும் மாறனையும் பார்த்தார்.
முதுகு வரை படர்ந்திருந்த நீண்ட கூந்தலை அள்ளி முடித்தப்படி, அவர்கள் அருகே எழுந்து வந்தவள் பொங்கலை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
“ரிட்டர்ன் அனுப்ப கூடாதுல வைத்தி அதுக்கு தான்..” என்றவள் அவனிடம் நன்றி உரைத்து அறைக்குள் சென்று விட்டாள்.
‘வடை போச்சே..’ என்பது போல ‘பொங்கல் போச்சே!’ என அவனை பாவமாகப் பார்த்து, “இது தான் பா என் தலையெழுத்து..” என்றவர் பாலை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவர் கழுவிய குவலையை அவனிடம் கொடுத்தார்.
“அங்கிள்!” என சத்தமில்லாமல் அழைத்தான்.
“சுகர் ப்ரீ பொங்கல் வேணும்னா செஞ்சு கொடுக்கவா?”
“அதே எப்படி பா?” என ஆவலாக கேட்டார்.
“சுகர் போடாம மிளகு போட்டு வெண்பொங்கல் அங்கிள் வேணுமா?” என இதழை மடக்கி சிரிப்பை அடக்கியபடி கேட்டவனை செல்லமாக முறைத்தார்.
“ஓகே அங்கிள் வேலை இருக்கு அப்புறம் பார்க்கலாம்..” என்று அங்கிருந்து விடைப்பெற, தலையசைத்து அனுப்பி வைத்தார். அவன் சென்றதும் சமையலறைக்குள் சென்றவர் சமைக்கும் வேலையை தொடர்ந்தார்.
சிரிப்புடன் வீட்டிற்கு வந்த மகனிடம் விசாரிக்க, அவனும் சொல்ல அவருக்காக பரிதாபம் கொண்டார் கோமதி அம்மா.
அன்று வீட்டில் பொருட்களை ஒதுங்க வைக்க வேண்டும் என்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து பார்க்க முடிவு செய்திருந்தான்.
முதலில் சமையலறையில் மட்டும் தேவையானதை எடுத்து வைத்து காலை, மதியம் என இரண்டு நேரத்துக்கான உணவை சமைக்க ஆரம்பித்தான்.
மருத்துவமனைக்கு செல்ல தயாராகி வந்தவள் சாப்பிட அமர, அவளுடன் அமர்ந்தவர் இருவருக்கும் தோசை எடுத்து வைத்து சாம்பாரை ஊற்றினார்.
அவளோ வெற்றி கொடுத்த, சக்கரைப்பொங்கலை ஒருவொரு விள்ளளாக தந்தைப் பார்க்க சாப்பிட்டாள் .
“இதெல்லாம் நல்லா இல்ல சம்மு பாப்பா! அப்பாவ சாப்பிடக் கூடாதுனு சொல்லிட்டு பார்க்க வச்சி திங்குற பார்த்தியா? போ பாப்பா..” என முகத்தை திருப்பிக்கொள்ள..
“அச்சோ வைத்தி! உன்னை பார்க்க வச்சி தின்னல, உன்னை சுத்தி எத்தனை பேர் சுவீட் சாப்பிட்டாலும் நீ கட்டுக்கோப்பா சாப்பிடக் கூடாதுனு ஸ்டெடியா நிக்கணும்னு உன்னை டிரைன் பண்றேன் வைத்தி..” என்று சிரிப்பை மறைத்து சொன்னாள் அவள்.
“அப்படி தானே இத்தனை வருஷமா இருக்கேன். இப்ப என்ன புதுசா டிரைன் பண்ற என்னை நீ?”
“நான் இருக்கும் போது தான் இருக்க, நான் இல்லைன்னா திருட்டுத்தனம் பண்ணி சுகரை கூட்டி வச்சிருக்க, இதோ இன்னைக்கி நான் எந்திருக்கலேனா சாப்பிட்டிருப்பேல..” என்க, அவரோ வழிந்தார்.
அவரை முறைத்து விட்டு கடைசி வரை பொங்கலை வாய்க்குள் திணித்தவளுக்கு அமிர்தமாய் இருந்தது.
“நல்லா இருக்கு பொங்கல் யார் பண்ணா? அவங்க அம்மா வா?”
“இல்ல பாப்பா! தம்பி தான் பண்ணிச்சி. அந்த தம்பி தான் அவங்க வீட்ல எல்லாம் போல..” என்று அவர்கள் பேசிக் கொண்டதை சொல்லி, “அந்த தம்பியோட அம்மா குடுத்து வச்ச மகராசி! நானும் தான் இருக்கேனே” என சலித்துக்கொண்டார்..
அவரை ஏறிட்டு பார்த்தவள், “சோ என்னை பெத்துட்டு எதையும் கொடுத்து வைக்கலனு சொல்ல வர அதானே?”
“அப்படி நான் சொல்லுவேனா பாப்பா!” என இளிக்க, “சொல்ல வேற செய்வீயா நீ?” என எகிறிக் கொண்டு வர வாயை ஜிப் போட்டது போல பூட்டிக் கொள்ள, ‘அது’ என்று உண்ண ஆரம்பித்தாள்.
பழைய வீட்டிலிருந்து பொருட்களை டெம்போவில் ஏத்தி இங்கே கொண்டு வர வெற்றி வண்டியில் கிளம்பிட, அவரது தாயோ அவனிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வைப்பதை கண்ட சம்ருதியோ தந்தையை பார்த்தாள்.
அவரோ, ‘மகள் எப்போடா கிளம்புவாள்?’ என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
“யோவ் வைத்தி! ஆம்பிள பிள்ளைய பெத்த அந்த அம்மாவே ஆயிரம் பத்திரம் சொல்லுது. பொண்ணை பெத்த நீ ஒரு பத்திரம் சொன்னீயாயா? எப்ப டா போவா காத்துட்டு இருக்கேல நீ!” என்று அவர் எண்ணத்தை அப்படியே சொல்ல..
மீண்டும் வழிந்தவர், “அப்படி இல்ல பாப்பா! அவங்க பிள்ளைக்கு எதுவும் ஆகிட கூடாதுனு பத்திரம் சொல்றாங்க, ஆனா எனக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கு! என்ன ஆனாலும் சேதாரம் ரோட்டுக்கும் எதிர்த்து வரவனுக்கும் தான் அதான் அப்பா பத்திரம் சொல்லலடா..” என்று அவளை வார, அதில் கடுப்பானாள்.
“நேரமாச்சி.. உன்னை வந்து வச்சிக்கிறேன்யா யோவ்..” என்று மிரட்டி விட்டுச் செல்ல, சிரித்துக் கொண்டே வழியனுப்பி வைத்தார் வைத்தி.
- Select