Loading

மருத்துவமனை வாயிலில் நின்றிருந்த ஆஹில்யன் திடீரென வரதராஜனின் வரவைக் கண்டதும் வேகமாய் உள்ளே சென்றான்.

அங்கோ தனி அறையில் நிதர்ஷனா மயக்க நிலையில் இருக்க, யாஷ் பிரஜிதன் தவிப்புடன் நின்றிருந்தான்.

மருத்துவர் அவளை சோதித்து விட்டு, “சாதாரண மயக்கம் தான் கொஞ்ச நேரத்துல கான்ஷியஸ் வந்துடும்” என்று சொல்லிச் செல்ல, அவனுக்கு தான் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தது.

அந்நேரம் ஆஹில்யன் உள்ளே நுழைந்து, “பாஸ் வரதராஜன் சார் வந்துருக்காரு!” என்றவன், “மேம்க்கு மறுபடியும் என்ன ஆச்சு பாஸ்?” என்றான் திகைப்பாக.

“வரதராஜன் இங்க ஏன் வந்தாரு?” கூர்மையுடன் யாஷ் வினவ, “தெரியல பாஸ்… ரித்திகா மேமும் வந்துருக்காங்க” என்றதும், ஆதிசக்தியும் இளவேந்தனும் குழப்பத்துடன் நின்றனர்.

“மம்மா… யூ ஸ்டே ஹியர்!” என உத்தரவிட்டவன், ஒரு முறை தன்னவளை ஆழப் பார்த்து விட்டு நகர, வரதராஜன் நேராக தீவிர சிகிச்சைப் பிரிவினுள் நுழைந்தார்.

அங்கு மூவரையும் சுதந்திர போராட்டத்திற்கு மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த நிவேதனைக் கண்டதும் சடாரென நின்று விட்டார்.

கண் கலங்கியது அவருக்கு. சிறு வயதில் தொலைந்து போன மகனல்லவா அவன்!

“நிவா…” பாசம் பொங்க மகனின் அருகில் செல்ல, அவனும் அவரைக் கண்டு துணுக்குற்றான்.

“தந்தையே! தாங்கள் எதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்தீர்கள். உங்களுக்கு பிரிட்டிஷ் அதிகாரியிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் மேல்நாட்டவரின் வெறிக்கு நீங்கள் இரையாகலாம்…” எனப் பயமுறுத்தும் போதே பூட்ஸ் சத்தத்தின் எதிரொலிப்புடன் உள்ளே நுழைந்தான் யாஷ் பிரஜிதன்.

“என்ன தம்பி பேசுற… எனக்கு ஒன்னும் புரியல” அவனது கூற்றும் யாஷின் வரவும் அவரை லேசாக திணற வைத்தது.

நிவேதனோ தன்னையே விழித்து பார்த்த ரித்திகாவைக் கண்டு, “தங்கையே உன்னை மீண்டும் கண்டதும் மனம் குதூகலிக்கிறது” என உள்ளம் உருக கூற, ரித்திகா தான் இவனுக்கு எப்படி தன்னை தெரியும் என்று அதிசயித்தாள்.

“நீங்க என்ன இங்க?” யாஷ் கையைக் கட்டிக்கொண்டு கேட்க, “என் பையனைப் பார்க்க வந்தேன்” என்றார் வேகமாய்.

“பையன்? யாரு?” இரு புருவமும் அதிகாரமாய் உயர்ந்தது.

“நிவேதன் என் பையன் யாஷ். சின்ன வயசுல காணாம போய்ட்டான். இவன் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வந்தேன்…” என்றவர் கண் கலங்க நிவேதனின் தலையை வருடினார்.

அவனோ, “தந்தையே… கண் கலங்காதீர்கள். நமக்குத் துணையாய் நமது குரு இருக்கும் வரை நமது எதிரிப்படைகள் நம்மை எதுவும் செய்ய இயலாது…” என்றிட, ‘உன் டாடி சாவே என் கைல தான் இருக்கும்டா பட்டர்’ என முணுமுணுத்துக் கொண்டான் யாஷ் பிரஜிதன்.

தாதியரை அழைத்து அவனுக்கு மயக்க ஊசியைப் போட சொல்லி அவனை மயக்க மடைய வைத்து விட்டு மீண்டும் வரதராஜனை லேசர் கண்களால் அலற விட்டான்.

தெரிந்தோ தெரியாமலோ தனது உயிரானவளின் உறவுகளை இழப்பதற்கு காரணமாகி விட்டாரே! அதற்கு தக்க தண்டனை தர மாட்டானா என்ன?

“இவன் ஏன் ஒரு மாதிரி பேசுறான்?” வரதராஜன் மகனை உற்றுப் பார்க்க,

யாஷோ, “அது இருக்கட்டும். இவன் தான் உங்க பையன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அதுவும் இங்க இருக்கான்னு…?” ஆழப்பார்வையில் வினவிட, ஒரு கணம் திணறியவர் :இவனை நான் ரொம்ப வருஷமா தேடிட்டு தான் இருந்தேன். இவன் கிடைச்சுட்டா என் சாம்ராஜ்யத்துக்கு உன்னை சேர்மன் ஆக்க கெஞ்ச வேண்டியது இல்லையே” என வெறுப்பை உமிழ்ந்தார்.

“ஓ! அப்போ பாசமா தேடலை?” ஆடவனின் கேள்வியில் மிரண்டவர், :என் பையன்னா எனக்கு உசுரு… உனக்கு எங்க தெரியும் அன்போட அருமை எல்லாம்…” என்றார் மீண்டும் குத்தலாக.

“உங்களுக்கு ரொம்பத் தெரியுமோ? ஓவர் டோஸ் பாசம் இருக்கறதுனால தான் நிதுவ ஐ மீன் உங்க பொண்ணு நிதர்ஷனாவை கொலை செய்யப் பார்த்தீங்களோ” எனத் தாடையை தடவியபடி கேட்டவனின் பளபளத்த விழிகளின் வழியே வெளிப்பட்ட கோபத்தீயில் நடுநடுங்கிப் போனார் பெரியவர்.

“என்… என்ன சொல்ற? எனக்கு ரெண்டே பசங்க தான். நிவேதன் ரித்திகா அவ்ளோ தான். கண்டதை உளறாத!”

“நான் உளறுறேனா? குட் ஜோக்! நிதுவை நான் வைஃபா நடிக்க கூப்பிடும்போதே உங்களுக்கு தெரியும் மிஸ்டர் அவள் உங்க பொண்ணுன்னு. சோ, தஞ்சாவூர்ல அவளை கொலை செய்ய ட்ரை பண்ணிருக்கீங்க. அவள் உயிரோட இருக்குறது தெரிஞ்சா உங்களோட ஸ்டேட்டஸ், சொத்துக்கு எல்லாம் பங்கம் வரும்னு ஆம் ஐ ரைட்?” என அவர் முன்னே காலடி எடுத்து வைக்க, அவரோ நடுங்கிய கால்களை பின்னால் அடியெடுத்து வைத்தார்.

இங்கு, சில நொடிகளுக்கு முன்னே நிதர்ஷனா கண் விழித்து விட, அவளையே பயத்துடன் பார்த்தனர் ஆதிசக்தியும் இளவேந்தனும்.

தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்தவள், அவர்களை அமைதியாகப் பார்த்து, “அப்போ எனக்கு வந்ததெல்லாம் கனவு இல்லையா சார். நிஜமாவே நீங்க எனக்கு மாமாவா? எனக்கு ஏன் எல்லாமே குழப்பமா இருக்கு. ஒன்னும் புரியல…!” எனத் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது நிலை இருவருக்கும் வேதனையைக் கொடுக்க, ஆதிசக்தி அவளருகில் அமர்ந்து அவளது கேசத்தை கோதி விட்டார்.

“நிதா… தயவு செஞ்சு கொஞ்சம் நிதானமா இரு. உன்னை சுத்தி ஏதோ சூழ்ச்சி நடந்துருக்கு. நிவேதனுக்கும் சேர்த்து தான். இந்த நேரத்துல நீ தான் மனசை ஸ்ட்ராங்கா வச்சுக்கணும். உனக்கும் நிவேதனுக்கும் நாங்க எப்பவும் இருப்போம். அதுக்கு மேல யாஷ் இருக்கான். அந்த நம்பிக்கையை மட்டும் எங்க மேல வை அது போதும்…” என்றார் தீர்க்கமாக.

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், “சரி சொல்லுங்க. எனக்கு என்ன தான் ஆச்சு?” என்றதும் இளவேந்தனும் அவளுக்கு மறுபுறம் அமர்ந்து கொண்டு, நடந்ததை எடுத்துரைக்க அவளுக்கு இப்போதும் தலையை சுற்றியது.

“நான் யாஷ்ட்ட லவ் சொன்னேனா? அவர் எனக்காக கல்யாணத்தை நிறுத்திட்டு வந்தாரா?” அதிகபட்ச அதிர்வு அவளிடம்.

இவற்றை எல்லாம் நம்பவும் இயலவில்லை. நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.

“ஆமா நிதா… இப்ப நடந்தது எல்லாம் உனக்கு மறுபடியும் அவன்மேல் லவ் வரவைக்கணும்ன்ற முயற்சி தான். ஆனா அது பாதிலேயே முடிஞ்சுடுச்சு. இதுல ஒரு நல்ல விஷயம் நீ ஆசைப்பட்டு எதிர்பார்த்த உன் அண்ணன் கிடைச்சுட்டான்.”

“ஆனா என் அண்ணனா கிடைக்கலையே” குரல் கம்மியது அவளுக்கு.

ஆதிசக்தியோ, “இதோ பாரு நிதா. இப்ப நிவேதன் மனநிலை வேற. இதை நினைச்சு நீ குழம்பி உன் ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்காத. என்னை பொறுத்தவரை அவன் வரதராஜன் கைல போகாம இருக்குறதே நல்லது. உன் அண்ணனை உன் கூட இருக்க வைக்கிறது உன் திறமை. ஒன்ஸ், அவனை இங்க இருந்து கூட்டிட்டுப் போய்ட்டா, வரதராஜன் எந்த எல்லைக்கும் போவான்.”

“அது மட்டும் இல்ல நிதா… இதுல இன்னொரு விஷயமும் இருக்கு!” என்று தீவிரத்துடன் உரைக்க, அதில் அதிர்ந்தவள் தனது திடத்தை மீட்டுக்கொண்டாள்.

“இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க…”

“நீ நீயா இரு. ஆட்டோமேட்டிக்கா எல்லாம் கரெக்ட்டா நடக்கும்மா” இளவேந்தன் சின்னப் புன்னகையுடன் கூற, “ரைட்டு! அந்த ஆளு நிவேவ எப்படி கூட்டிட்டு போறான்னு ஒரு கை பாத்துடுறேன்” என்று வீறு கொண்டு எழுந்தவளைக் கண்ட பிறகு இருவரின் மனமும் நிம்மதி அடைந்தது.

ஒரு முடிவோடு நிவேதனின் அறைக்குச் சென்றவள், யாஷ் பிரஜிதனின் கூற்றில் அதிர்ந்தாள்.

கதிரவனோ, வரதராஜனையே சில நொடிகள் யோசனையாகப் பார்த்து விட்டு, “யாஷ் யாஷ்… இந்த ஆள நான் நிவேயோட ஒரு தடவை பார்த்தேன். நிவே காணாம போறதுக்கு ஒரு வாரம் முன்ன இவன் கார்ல இருந்து நிவே இறங்குனான். நான் என்னன்னு கேட்டதுக்கு நிவே எதுவும் சொல்லல. ஏதோ வேலைக்கு கேட்ருந்தேன்னு சமாளிச்சான். எனக்குத் தெரிஞ்சு அப்பவே இந்த ஆளு கண்டுபிடிச்சு தான் இவனை மறைச்சு வச்சிருக்காரு. இந்த ஆளை சும்மா விடாத யாஷ்!” என்று பொங்கினான்.

இப்போது யாஷ் பிரஜிதனின் பார்வையில் தீவிரம் மெருகேற, அரண்டு விட்டார்.

“நான்… நான் ஏன் இவனைக் கடத்தி வச்சுருக்க போறேன்? இவனைத் தேடி தான் இவ்ளோ வருஷம் அலைஞ்சேன். ஒருவழியா இவனைக் கண்டுபிடிச்சு என் தொழிலுக்கு வாரிசாக்க நினைச்சேன். ஆனா அவன் என்னோட வர மறுத்துட்டான். அந்த அனாதைக் கழுத தான் வேணும்னு போனவனை மனச மாத்த நினைக்கும்போதே… அவன் காணாம போய்ட்டான் மறுபடியும்!” எனும்போதே கையை இறுக்கி மூடி கழுத்து நரம்பு புடைக்க வெடித்தான்.

“மைண்ட் யுவர் ஒர்ட்ஸ் மிஸ்டர் வரதராஜன். நொவ் ஷீ இஸ் மை பெட்டர் ஹாஃப். தி கிரேட் யாஷ் பிரஜிதனோட வைஃப். என் முன்னாடி என் வைஃபை பத்தி ஒரு வார்த்தைப் பேசுறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்குப் பல தடவை யோசிச்சுப் பேசுங்க. அடுத்த வார்த்தை பேச நீங்க உயிரோட இருக்கணுமா வேணாமான்னு!”

அவனது அமைதியான கோபத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார் தான். ஆனால், இந்த அவதாரத்தில் திகைத்துப் போனவர், எச்சிலை விழுங்கினார்.

“அவ உன் வைஃப்னு நீ முடிவு பண்ணுனா மட்டும் போதாது” உள்ளே சென்ற குரலில் வரதராஜன் உரைக்க, “வேற யார் முடிவு பண்ணனும்?” எனக் கர்ஜித்தான்.

“அது உன் அப்பா…” என ஆரம்பிக்கும்போதே, இதழ்களை இழிவாய் வளைத்தவன், “என் விஷயத்துல தலையிடுறது என் பப்பாவா இருந்தாலும் கல்லறையில் சேஃபா தூங்க வச்சுடுவேன்!” என அசட்டையாய் கூற, உள்ளுக்குள் குளிர் பரவியது வரதராஜனுக்கு.

“இது எனக்குத் தேவை இல்ல. என் பையனை என் கூட அனுப்பிடு. உனக்கும் எனக்குமான பார்ட்னர்ஷிப் பிசினஸ் டீலிங்கை கேன்சல் பண்ணிக்கலாம்… கடைசி நேரத்துல என் கழுத்தை அறுத்துட்டுப் போனவனுக்கு இனி என் ஆபிஸ்ல சிஇஓவா இருக்கத் தகுதி இல்ல…”

“கேன்சல்? தகுதி?” அவனிடம் நக்கல் புன்னகை.

“என்ன பேசுறீங்க மிஸ்டர் வரதராஜன், அதை நீங்க மட்டும் முடிவு பண்ணுனா போதுமா. எலைட் க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட ஆரம்பிக் கட்ட கண்டுபிடிப்புல இருந்து, இப்ப வரைக்கும் முதுகெலும்பா இருக்குறது என் பேமிலி மெம்பர்ஸ் தான்.

இப்ப நீங்க சேர்மனா உக்காந்துருக்குற கம்பெனியோட முதுகெலும்பு என் மம்மா. அவங்களை பெர்சனல் ப்ராபளம்ல ப்ரெஷர் செஞ்சு தேவையான அளவு உழைப்பை வாங்கிட்டு வெளில அனுப்பியாச்சு. அவங்க ஃபைண்ட் அவுட் பண்ணுன ப்ராடக்ட்ஸ் எல்லாம் ஓரளவு முடிஞ்சு அடுத்த அப்டேடட் வெர்ஷன்ல சர்வைவ் பண்ணியே ஆகணும்ன்ற நிலமைல என்னை உள்ள கொண்டு வந்தாச்சு. இப்ப என் ரிசர்ச் முடிஞ்சதும், எனக்கும் செக் வச்சாச்சு. வாட் வரதராஜன்? கேவலம் இந்த சொத்துக்காகவும் பதவிக்காகவும் உங்க பொண்ணை எனக்கு அடமானமா வைக்கத் துணிஞ்ச நீங்க, என்னன்ன செஞ்சுருப்பீங்க?” என ஏளனத்துடன் வினவினான்.

“இதோ பாரு யாஷ். நீயும் உன் அம்மாவும் நான் இன்வெஸ்ட் பண்ணுன கம்பெனில உழைச்சீங்க சரி தான். ஆனா, பாதில விட்டுட்டுப் போறதே அவளுக்கும் உனக்கும் வேலையா போச்சு” பின்னால் நின்றிருந்த ஆதிசக்தியையும் ஒரு முறை முறைத்தார்.

“பாதில விட்டுட்டுப் போக வச்சது யாரு?” யாஷ் ஏற்ற இறக்கத்துடன் கேட்டதில் வரதராஜனுக்கு நெற்றி வியர்த்து விட்டது.

ஆதிசக்தி புருவம் சுருக்கி “யாஷ்?” எனப் புரியாது பார்க்க, அவர் புறம் திரும்பாமலே கையை மேலே தூக்கிப் பேச விடாது செய்தவன்,

“சொல்லுங்க மிஸ்டர் வரதராஜன்… உங்ககூடவே நான் எவ்ளோ நேரம் பேச்சு வார்த்தை நடத்துறது. ஒருத்தி என்னை முழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்கா. அவள் கூட நான் போய் ரொமான்ஸ்லாம் பண்ண வேணாமா… ம்ம்?” என்றவனின் கூற்றில் நிதர்ஷனா ‘பே’ வென விழித்தாள்.

தனக்காக பேசும் யாஷ் பிரஜிதனின் தீவிர அன்பில் மலைத்துப் போயிருந்தவள், அவன் மீதிருந்த பார்வையைத் திருப்பாதிருக்க, அவளது முதுகைத் துளைக்கும் பார்வையை திரும்பாமலேயே உணர்ந்திருந்தான்.

“வைஃப்ன்றான், ரொமான்ஸ்ன்றான்… இவனை…” எனப் பல்லைக்கடித்த நிதர்ஷனாவிற்கு முதன்முறை உள்ளுக்குள் சில்லென்ற உணர்வு.

வரதராஜனுக்கு அவனது அமைதியான உரையாடலே சித்தம் கலங்க வைத்தது.

அதில் அமைதியாக நிற்க, யாஷ் தொடர்ந்தான்.

“உங்களுக்கு என் மம்மாவும் ப்ரெண்ட் தான். என் பப்பாவும் ப்ரெண்ட் தான். என் பப்பாவோட கேரக்டர் எப்படின்னு அவங்க லவ் ஸ்டார்ட் பண்ணும் போதே தெரியும். அப்படி இருந்தும் ஏன் அவங்கள அலெர்ட் பண்ணல? ஓகே… அதை விடுங்க, ஆஃப்டர் மேரேஜ் அவங்க செப்பரேஷன்க்கு அப்பறம், பார்ட்னரா இருந்த மம்மாவுக்கு எதுவுமே தராம அனுப்பி இருக்கீங்க. பார்ட்னெர்ஷிப்பை கேன்சல் பண்ணவும் இல்ல. ஏன்?” என ஊடுருவும் பார்வையுடன் கேட்க,

“அது… அது… எப்பவா இருந்தாலும் அவ திரும்பி வரணும்னு தான் என் ஆசையும்…”

“இதெல்லாம் பொய் யாஷ்” ஆதிசக்தி குமுறினார். தனக்காக தனது மகன் ஒரு வார்த்தைப் பேசுகிறான் என்பதே அவருக்கு பலம் கொடுத்தது போலும்!

“மொதல்ல ரோபோட்ஸ் ரிலேட்டடான ஆராய்ச்சின்னு நினைச்சு தான் என் முழு உழைப்பையும் குடுத்தேன். ஆனா இவனும் அலெஸ்ஸும் அது மட்டும் செய்யல. வேர்ல்ட் வைடா பெரிய பெரிய ஆளுங்களை கைக்குள்ள போட்டுட்டு இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிற மாதிரியான கண்டுபிடிப்புல இறங்கணும்னு முடிவு செஞ்சாங்க. இவங்களோட கெட்ட புத்தி தெரியாம, இப்ப நீ செஞ்ச இதே ரிசர்ச்ச தான் நான் அன்னைக்கு செஞ்சேன், அப்ப இருக்குற அட்வான்ஸ் டூல்ஸ் வச்சு.

ஸ்பேஸ்க்கு ரோபோவை அனுப்பி, மத்த நாடுகள் நம்ம ஸ்பேஸ் ஸ்டேஷனை சேதப்படுத்தி வான்வழி போர் செய்ய துணியக் கூடாதுன்றது தான் என் நோக்கம். அண்ட், அது ஸ்பேஸ்ஸ மட்டும் பாதுகாக்காது. நம்ம நாட்டு மேல அணுகுண்டு வீச்சு நடக்க இருந்தாலும், நாட்டோட மூலைல ஏதோ ஒரு இடத்துல பாம் வச்சா கூட, அது நமக்கு எச்சரிக்கை குடுக்கும். பல வருஷமா கண்ணு முழிச்சு நாட்டோட வளர்ச்சிக்காக கண்டுபிடிச்ச ஒரு பொருளை இவனுங்க மேல்நாட்டுக்கு விக்க முடிவு செஞ்சாங்க.

அந்த நேரத்துல, நம்ம நாட்டோட ஸ்பேஸ் ஸ்டேஷன் சாட்டிலைட்டை எல்லாம் மத்த நாடுகள் குறி வச்சது. உலக நாடுகள்ல இருந்து நம்ம இந்தியா வித்தியாசமா தெரியணும்னு அப்ப இருக்குற தலை சிறந்த அறிவியல் வல்லுநர்கள் நாட்டை உயர்த்த எவ்ளவோ அட்வான்ஸ்ட்டான கண்டுபிடிப்புகள் எல்லாம் செஞ்சாங்க.

அதை தடுத்து நிறுத்தணும்னு மற்ற நாடுகள் யோசிச்சுட்டு இருக்கும்போதே, அவங்க அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க பயப்படுற மாதிரி இருக்கணும் நம்மளோட கண்டுபிடிப்புன்னு இந்திய நாட்டோட சைன்ஸ்டிஸ்ட், பிரதமர், கவர்னர்னு எல்லார்கிட்டயும் அப்ரூவ் வாங்கி நான் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிக்கவும் செஞ்சேன். அப்பறம் தான் இவனுங்களோட உண்மையான எண்ணமே புரிஞ்சுது…” என வெறுப்பாய் வரதராஜனைப் பார்த்தார்.

“பொதுவா நான் ஒரு விஷயத்தை ஸ்டார்ட் பண்றப்ப இது தான் செய்ய போறேன்னு யார்ட்டயும் சொன்னது இல்ல. அது வெளில கசிஞ்சுட கூடாதுன்றதும் ஒரு காரணம். அலெஸ் வரதராஜன்கிட்ட கூட நான் சொன்னது இல்ல. அப்படி தான் ஸ்பேஸ் ரோபோ பத்தியும் நான் மூச்சு விடல. ஆனா ரெண்டு பேருமே தானா தெரிஞ்சுக்கிட்டானுங்க என் ரிசர்ச் பேப்பர்ஸ் வச்சு. நான் இவங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சு ஆரம்பிக்க, இவனுங்க எனக்கே தெரியாம எனக்கு குழி தோண்ட ஆரம்பிச்சானுங்க.

எனக்கும் அலெஸ்க்கும் கல்யாணம் ஆனதுல இருந்து, முக்கால்வாசி நேரம் நான் லேப்ல தான் இருந்தான். நீ பிறந்தப்பறம், அலெஸ் உன்னை எப்படி பார்த்துப்பானோன்னு நினைச்சு, உன்னையும் லேப்லேயே வச்சுப்பேன். அஞ்சு வயசுலயே உனக்கு நல்ல பிரில்லியண்ஸ் இருந்துச்சு… நான் யூஸ் பண்ற கோடிங்கை எல்லாம் தெளிவா சொல்லுவ. என்னோட ரோபோஸ்ட்ட பேசி, அது பதில் கொடுக்கும்போது எக்ஸைட் ஆகுவ.

லேப்க்கு போறதுன்னா அப்பவே உனக்கு ரொம்ப பிடிக்கும். அலெஸ்ட்ட அடிக்கடி நான் சொல்லுவேன். இவன் கண்டிப்பா என் பீல்டு தான் சூஸ் பண்ணுவான். இப்பவே சிஸ்டம் யூஸ் பண்றதுல அவ்ளோ இண்டரெஸ்ட்டா இருக்கான். ரோபோஸ் கூட மிங்கில் ஆகி, அது எப்படி ஒர்க் ஆகுதுன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசைப்படுறான்னு சொல்லிட்டே இருப்பேன். அது தான் நான் செஞ்சதுல மிகப்பெரிய முட்டாள்தனம்.

ஓரளவு என் கண்டுபிடிப்பு முடியிற நேரத்துல தான் அலெஸ் வேற பொண்ணோட ரிலேஷன்ஷிப்ல இருக்குறது தெரிஞ்சுது. முதல்ல நான் அவனுக்கு சரியான வைஃபா இல்லாம முழுக்க வேலைல மூழ்கிட்டேன்னு கில்டியா தான் ஃபீல் பண்ணுனேன். ஆனா என்ன லவ் பண்ற டைம்ல கூட அவன் வேற ரிலேஷன்ஷிப்ல தான் இருந்துருக்கான்.

அவன் என்னை அஃபிஷியல் வைஃபா, ஜஸ்ட் ஒரு ஷோகேஸ்ல ஷோ பண்ற சைன்டிஸ்ட் பொண்டாட்டியா ஷோ பண்ண தான் நினைச்சு கூட வச்சுருக்கான்னு அப்பறம் தான் புரிஞ்சுது… அப்பவும் இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. என் முடிவு தப்பானது என்னோட போகட்டும்னு, சமாளிச்சு வாழ்ந்துட தான் நினைச்சேன்.

அவனும் இந்த வரதராஜனும் சேர்ந்து என்னை இந்தியாவுக்கு எதிரா யூஸ் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சப்பறம் நடுங்கிட்டேன். என் கண்டுபிடிப்ப, பல நாடுகளுக்கு விலை பேசிருக்கானுங்க. மீதி இருக்குற வேலையையும் முடிச்சே ஆகனும்னு என்னை ப்ரெஷர் செஞ்சாங்க. என்னால இந்த பிரஷரை ஹேண்டில் பண்ண முடியலைன்னு கொஞ்ச நாள் வேலைல இருந்து ரிலீவ் ஆகிடலாம்னு நினைச்சேன். ஆனா அலெஸ் என்னை விடல. பாம்பு பொத்துக்குள்ள கையை விட்ட மாதிரி கொத்திட்டே இருந்தான். சாகவும் முடியல. வாழவும் முடியல…” எனும்போதே தரையில் மடங்கி அமர்ந்து தேம்பி அழுதார்.

“ஆதி…” இளவேந்தன் ஆதிசக்தியின் தோளைப் பிடித்துக் கொள்ள, கண்மணிக்கும் தாயின் கண்ணீர் மனதை அழுத்தியது. அவளும் அவருக்கு மறுபுறம் அமர்ந்து கையைப் பிடித்தாள்.

யாஷ் சலனமின்றி அவரைப் பார்த்திருக்க, அவரோ மேலும் தொடர்ந்தார்.

“என்னால தான் லேப்க்கு போக முடியலைன்னு வீட்டையே லேபா மாத்த முடிவு செஞ்சான் அலெஸ். நான் வேலை பார்த்தா தான், உன்னை என்கிட்ட தருவேன்னு உன்னை அவன் ரூம்க்குள்ளயே வச்சுப்பான். ஒரு தடவ உன்ன ரூம்ல போட்டு பூட்டிட்டு, வேறொரு பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கூத்தடிச்சுட்டு இருந்தான். நீ பயத்துல மயங்கிட்ட. பேச்சு மூச்சு இல்லாம உன்னைப் பார்த்ததும் எனக்கு உயிரே போய்டுச்சு.

இதுக்கு மேல அங்க இருந்தா, உன்னையும் என்னையும் சும்மா விடமாட்டான்னு அங்க இருந்து நான் தஞ்சாவூருக்கே வந்துட்டேன். மெய்ன் காரணமா என்னை தப்பான வழிக்கு பயன்படுத்துறாங்கன்னு சொன்னா, எனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுன்றது புருஞ்சு என்னையும் உன்னையும் கண்டிப்பா கொன்னுடுவானுங்க. அதுனால, அவன் கேரக்டர் பிடிக்கல. மத்த பொண்ணுங்க கூட அவன் வச்சுக்குற ரிலேஷன்ஷிப் பிடிக்கலைன்னு சொல்லி தான் பிரிஞ்சேன்.

இங்க வந்தா, அமுதாவோட இறப்புல குடும்பமே உடைஞ்சு வேற மாதிரி இருந்துச்சு. அதுக்கு காரணம் இந்த பாஸ்டர்ட்னு தெரிஞ்சு இன்னும் சுரீருன்னு ஆகிடுச்சு. இளா இவனோட போராட, நான் அலெஸோட போராடன்னு… ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க விட மாட்டேன்ட்டானுங்க.

எனக்கும் அலெஸ்க்கும் பெரிய போராட்டமே நடந்துட்டு இருக்கும்போது, இந்த குள்ளநரி என் மூலமா அவனோட சாம்ராஜ்யத்தை பெரிசு படுத்த என்னை மறுபடியும் இத்தாலிக்கு அனுப்பி வைக்க ட்ரை பண்ணுனான். உன் பெர்சனல் ப்ராப்ளம்க்கு கேரியரை ஏன் விடுறன்னு தூண்டில் போட்டான். ‘எனக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கு. ஸ்ட்ரெஸ்ல என்ன செய்றேன்னு எனக்கே புரியல. யாஷை கூட என்னால பாத்துக்க முடியல’ன்னு அவன்கிட்ட என்னன்னவோ சமாளிச்சேன்.

எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்குன்னு, என்னால வேலை பார்க்க முடியலைன்னு நம்ப வைக்க, உன்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சேன்.

அப்படியும் இவன் என்னை விடல. இவனோட ஆசையைத் தூண்டுற மாதிரி, நான் கண்டுபிடிச்சத பத்தின விவரத்தை மேலோட்டமா கூறிட்டு, அதுக்கான பேஸ் பார்முலாவை மட்டும் மறைச்சுட்டு மீதி ஒர்க்கை அவன்கிட்ட குடுத்தேன். அதை வச்சு கண்டுபிடிச்சுடலாம்னு மிதப்புல இருந்தான். ஹண்ட்ரட் பெர்சன்ட், இவனுங்களால கண்டுபிடிக்க முடியாதுன்ற தைரியத்துல அலெஸ்ட்ட இருந்து எப்படியாவது டைவர்ஸ் வாங்கிடணும்னு தவிச்சுட்டு இருக்கும்போது தான், நான் கேஸ்க்காக இத்தாலிக்குப் போக வேண்டிய சூழ்நிலை. உன்னை தஞ்சாவூர்ல விட்டுட்டு நான் மட்டும் இத்தாலிக்குப் போனேன்…” அதற்கு மேல சொல்ல இயலாமல் தயங்கி தலையைத் தரையில் புதைத்தார்.

அப்போது தான் அலெஸ்சாண்ட்ரோ உடல்ரீதியாக அவரை வதைத்து விவாகரத்தை இன்னும் உறுதிப்படுத்தியது.

அதன்பிறகு இன்னும் தீவிரமாய் போராடி, அவர் மீது வழக்கை தீவிரப்படுத்தி… ஆனால், அதற்காக ஆதிசக்தியின் உடலும் மனதும் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமில்லை. இவ்விஷயத்தைக் கூற இயலாமல் அவர் மௌனக் கண்ணீர் சிந்த, அவர் சொல்லாமல் விட்டது யாஷ் பிரஜிதனுக்குப் புரிந்தது.

கண்மணியோ, “அப்பறம் ஏன்மா அண்ணாவை அந்த ஆளுட்ட விட்டீங்க?” எனக் கேட்டதும் அவர் கண்ணில் நீர் தளும்ப மகனைப் பார்க்க, அவன் கூர்பார்வை வீசினானே தவிர அசையவில்லை.

“ப்ச் இப்ப கூட சொல்லாம உங்களுக்கு என்னமா அழுத்தம். அப்பா நீங்களாவது சொல்லலாமே?” கண்மணி வலுக்கட்டாயமாகக் கேட்க,

“எனக்கும் தெரியல கண்மணி. திடீர்னு இவளே முடிவு எடுத்துட்டா. ஏன் இப்படி செஞ்சன்னு கேட்டதுக்கு, எனக்கு ரொம்ப அழுத்தமா இருக்கு. யாஷ பாக்கும் போது அலெஸ் ஞாபகம் வருதுன்னு சொல்லிட்டா. ஆனா உண்மையா அவள் அப்டி நினைக்கல. அது மட்டும் எனக்குத் தெரியும். நான் தடுக்க நினைச்சப்ப கூட, என் பையன் விஷயத்துல தலையிட எனக்கு உரிமை இல்லைன்னு சொல்லிட்டா… உரிமை இல்லாத விஷயத்துல நான் எப்படி தலையிடுறது?” என்றவரின் குரலில் வேதனை தெறிக்க, “என்னமா இது?” எனக் கண்மணி ஆதங்கப்பட்டாள்.

அவரோ அப்போதும் அமைதி காக்க, வாசலில் நின்றிருந்த நிதர்ஷனா வெடுக்கென உள்ளே நுழைந்து, “இப்ப நீங்க யாரை காப்பாத்த இவ்ளோ சைலண்ட்டா இருக்கீங்க? உங்க எக்ஸ் புருஷனையா?” எனக் கேட்டதும் ஆதிசக்தி நிமிர்ந்தார்.

“அவனை நான் ஏன் காப்பாத்தணும்?”

“நீங்க சைலண்ட்டா இருந்தா, யாஷோட அப்பா மேல இருக்குற கோபமும் உங்க மேல தான் வரும். இவரை தனி ரூம்ல போட்டு அடைச்சு கொடுமை படுத்திருக்குற ஆளு கூட யாஷ அனுப்புனதுக்கு என்ன தான் காரணம் இருக்க முடியும்? அந்த ஆளு உங்களைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனானா? இல்ல யாஷ கொன்னுடுவேன்னு மிரட்டுனானா?” என்றாள் கடுப்பாக.

வெகு நாள்களுக்குப் பிறகான, தனக்கே தனக்கான தன்னவளின் கோபம் ஆடவனைக் குஷி படுத்தியது.

ஆதிசக்தியோ கீழுதட்டைக் கடித்தபடி, “அமுதாவோட கேஸ் போயிட்டு இருந்த சமயத்துல எனக்கும் அலெஸ்க்கும் விவாகரத்து ஆகிடுச்சு. அப்போ அவளோட ஹியரிங்காக இளாவும் அப்பாவும் சென்னைக்குப் போயிருந்தாங்க. அழகு அண்ணாவும் கிருஷ்ணவேணியும் வேண்டுதலுக்காக கோவிலுக்குப் போயிருக்க, நானும் யாஷும் வீட்ல தனியா தான் இருந்தோம். அந்த நேரத்துல அலெஸ்ஸாண்ட்ரோ வீட்டுக்கு வந்தான்” என்றதும் இளவேந்தன் அதிர்ந்தார்.

“ஆதி? அவன் வந்தனா?”

“வந்தான். எனக்கு யாஷ் வேணும்னு கேட்டு வந்தான்” என்று மகனைப் பார்க்க, அவனோ நிதர்ஷனாவைப் பார்த்தபடி கவனத்தை மட்டும் தாயிடம் வைத்துக் கொண்டான்.

“அவன் கேட்டா?” இளா கடுகடுக்க,

“இவனும் அலெஸ்ஸும் ஏதோ பண்றாங்க இளா. ரோபோடிக்ஸ் கம்பெனின்ற பேர்ல, ஏதோ திருட்டுத்தனம் பண்றானுங்க. யாஷை அவன்கிட்ட தர்லைன்னா, அவனோட சோதனை எலியா பயன்படுத்துவேன்னு சொன்னான் இளா. கைல ஏதோ டூல்ஸ் வச்சிருந்தான். அவனைக் கூட அனுப்பலைன்னா, யாஷ ஏதோ பண்ணிடுவேன்னு சொன்னான்… அவன் சொன்னதே விசித்திரமா இருந்துச்சு.” எனப் பயத்துடன் கூறியவரை யாஷ் பிரஜிதனும் புருவ முடிச்சுடன் ஏறிட்டான்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
159
+1
6
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Super epi sis… Neraia twist open pannirukinga… Waiting next epi sis… Next epi sikiram kutunga sis…