காயங்கள் ஆரட்டும் ஆராமுதே..!
அத்தியாயம் – 1
“ஹேய் அமுது, இங்க வாடி!”
உளவியல் துறையின் நீளமான வராந்தாவில், தூரத்தில் இருந்து ஒலித்த தோழி சுருதியின் குரலைக் கேட்டு, தன் கையில் இருந்த புத்தகங்களிலிருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்தாள் அமுதினி.
அவளது கண்கள், ஒரு வருடமாக பழகிய அந்த துறையின் ஒவ்வொரு மூலையையும் ஒரு புதிய கோணத்தில் வருடின.
இது அவர்களின் கடைசி வருடம்… எம்.எஸ்.சி சைக்காலஜியின் இறுதி ஆண்டு.
இந்த ஒரு வருடமும் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டன!
அவள் தோழி சுருதி, கிட்டத்தட்ட ஓடியே வந்தாள். அதில் அவளுக்கு மூச்சு வாங்க, “என்னடி ஆச்சு? ஏன் இப்படி ஓடி வர்ற?” என்று அமுதினி புன்னகையுடன் கேட்டாள்.
“நியூஸ் கேட்டீயா? நம்ம டிபார்ட்மென்ட்க்கு புது புரொஃபசர் வந்திருக்காராம்!”
“ஆமா, கேள்விப்பட்டேன். போன செமஸ்டர் கடைசிலயே பேசிக்கிட்டாங்களே… நம்ம பிரேமா மேம் போனதுக்குப் பதிலா வர்றார்னு…” அமுதினி சாதாரணமாகச் சொல்லவும்,
சுருதி அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள்.
“சாதாரணமா சொல்லாதடி! அவர் பேரைக் கேட்டாலே நம்ம சீனியர்ஸ் எல்லாம் ஒருமாதிரி மிரளுறாங்க… பெயர் ஆரவ் கிருஷ்ணாவாம்… எங்கயோ வெளிநாட்டு யுனிவர்சிட்டில எல்லாம் வொர்க் பண்ணிட்டு வந்திருக்காராம்… பயங்கர பிரில்லியன்ட், ஆனா ரொம்ப ஸ்டிரிக்ட், ரொம்ப சைலன்ட் டைப்பாம்…”
அமுதினிக்கு இந்த மாதிரி கிசுகிசுப்புகளில் ஒருபோதும் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஒருவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை வைத்து ஒரு முடிவுக்கு வருவது அவளுக்குப் பிடிக்காத விஷயம்.
“அவர் எப்படி வேணா இருக்கட்டும் சுருதி… நமக்கு லெசன்ஸ் நல்லா எடுத்தா போதும்… இந்த ஃபைனல் இயர் ரொம்ப முக்கியம்… நம்ம ப்ராஜெக்ட், இன்டர்ன்ஷிப்னு ஏகப்பட்ட வேலை இருக்கு…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள்.
“நீ எப்போ பாரு இதே சொல்லு… லைஃப்ல கொஞ்சம் ஃபன் வேண்டாமா? அந்த ஆள் பார்க்கிறதுக்கு செம ஹேண்ட்சம்-ஆ இருப்பாராம்… ஆனா ஒரு ஸ்மைல் கூட பண்ண மாட்டாராம்… அப்படியே ஒரு மாதிரி சீரியஸ் லுக்லயே இருப்பாருன்னு சொன்னாங்க…
‘அவர் கிளாஸ்ல உட்கார்ந்தா, நமக்குள்ள இருக்கிற எல்லா சீக்ரெட்ஸையும் அவர் கண்ணு ஸ்கேன் பண்ற மாதிரியே இருக்கும்’ அப்படின்னு ஒரு சீனியர் அக்கா சொன்னா…”
சுருதி சொன்னதைக் கேட்டு அமுதினிக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.
“அப்படியா? சைக்காலஜி புரொஃபசர் அப்படி இல்லாம எப்படி இருப்பாரு? நம்ம மனசைப் படிக்கிறவங்க தானே அவங்க…”
“இல்லடி, இது வேற மாதிரி… அவர் ஏதோ ஒரு மிஸ்டரி மாதிரி… அவரு ஒரு புரியாத புதிர் ன்னு வச்சிக்க… யாரும் அவர் பர்சனல் லைஃப் பத்தி பேசினதே இல்லையாம்… அவர் எங்கிருந்து வர்றார், அவருக்கு ஃபேமிலி இருக்கா, எதுவுமே தெரியாதாம்… நம்ம டீன் மீனாட்சி மேம்-க்கே அவரைப் பத்தி முழுசா தெரியுமான்னு டவுட்தான்…” சுருதி தன் கண்களை விரித்து, ரகசியம் பேசுவது போலக் குரலைத் தாழ்த்தினாள்.
அமுதினி அமைதியாக இருந்தாள். ‘ஆரவ் கிருஷ்ணா’. அந்தப் பெயர் அவள் மனதில் ஒருமுறை ஒலித்து ஓய்ந்தது.
‘ஒரு புதிரான மனிதர்… சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது…’
“சரி சரி, கிளாஸ் டைம் ஆச்சு… வா போகலாம்… அந்த மிஸ்டரி புரொஃபசரோட ஃபர்ஸ்ட் கிளாஸ் இன்னைக்கு! லேட்-ஆ போனா, நம்மள பத்தி அவர் என்ன நினைப்பாரோ?” என்று சுருதியை இழுத்துக்கொண்டு வகுப்பறை நோக்கி நடந்தாள் அமுதினி.
அவர்களுடைய வகுப்பறை மிகவும் அமைதியாக இருந்தது. இது இறுதி ஆண்டு என்பதால், மாணவர்கள் மத்தியில் ஒருவித முதிர்ச்சியும், அதே சமயம் ஒரு பதற்றமும் கலந்திருந்தது.
எல்லோரும் அந்தப் புதிய பேராசிரியருக்காக தான் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு நொடியும், கதவருகே ஒரு நிழல் அசைந்தால் கூட, மொத்த வகுப்பறையும் திரும்பிப் பார்த்தது.
சரியாக ஒன்பது மணிக்கு, கிளாஸ் ரூமின் கதவு மெதுவாகத் திறந்தது.
உள்ளே நுழைந்த அந்த உருவத்தைப் பார்த்ததும், மொத்த அறையிலும் நிலவிய மெல்லிய சலசலப்பு கூட சட்டென நின்று போனது. அத்தனை பேரின் பார்வையும் அவர் மீதே இருந்தது. அமுதினியும் அவரைப் பார்த்தாள்.
சுருதி சொன்னது உண்மைதான். அவன் ஆறடி உயரத்தில் இருந்தார். கருப்பு நிற காட்டன் ஷர்ட், நீல நிற ஜீன்ஸ். சிம்பிளான உடை. ஆனால், அவனைச் சுற்றி ஒரு விவரிக்க முடியாத ஏதோ ஒன்று மட்டும் இருந்தது.
முப்பது அல்லது முப்பத்தி ஒன்று வயது இருக்கலாம். நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடி. லேசான தாடி. ஆனால் எல்லாவற்றையும் விட, எல்லோரையும் கட்டிப் போட்டது அவனது கண்கள்.
அதில் ஒரு ஆழம் இருந்தது. அமைதியாக இருந்தாலும், அந்தக் கண்களுக்குள் ஆயிரம் புயல்கள் ஓய்ந்திருக்கலாம் என்று தோன்றியது. அதில் ஒருவிதமான சோர்வும், தாகமும் கலந்திருப்பதை அமுதினியால் உணர முடிந்தது.
அவன் யாரையும் குறிப்பிட்டுப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த வகுப்பறையையுமே ஒருமுறை ஸ்கேன் செய்தான். அவனது பார்வையில் எந்த உணர்ச்சியும் இல்லை. பாராட்டு இல்லை, கோபம் இல்லை, எதிர்பார்ப்பு இல்லை. அது ஒரு வெற்றிடம் போல இருந்தது.
அவன் நேராக வந்து, மேஜையின் மீது தன் மடிக்கணினியையும், புத்தகத்தையும் வைத்தார்.
அதற்கடுத்த ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், மாணவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.
“குட் மார்னிங். நான் ஆரவ் கிருஷ்ணா. இந்த செமஸ்டர் உங்களுக்கு ‘அப்நார்மல் சைக்காலஜி’ மற்றும் ‘தெரபியூடிக் டெக்னிக்ஸ்’ பேப்பர்ஸ் நான் ஹேண்டில் பண்ணப் போறேன்.”
அவனது குரல்… அது ஒரு நதியைப் போல இருந்தது. ஆழமான, அமைதியான நதி. ஆனால் அதன் உள்ளே இருக்கும் சுழல்களையும், ஆபத்துகளையும் கணிக்க முடியாது. அந்தக் குரலில் ஒரு கம்பீரம் இருந்தது, ஆனால் ஒரு துளி கூட உணர்ச்சி இல்லை.
“முதல்ல ஒரு விஷயம் தெளிவா சொல்லிடுறேன்… என் கிளாஸ்ல தேவையில்லாத பேச்சு, லேட் அரைவல்ஸ், மொபைல் போன் யூசேஜ் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது… நாம படிக்கப் போறது மனித மனங்களைப் பத்தி… அதுக்கு முதல்ல நமக்கு டிசிப்ளின் தேவை.”
அவன் சொன்ன விதத்தில், மொத்த வகுப்பும் அமைதியானது.
“ஓகே… இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் கிளாஸ்… லெட்ஸ் ஸ்டார்ட் வித் எ சிம்பிள் கொஸ்டின்…”
அவன் வகுப்பறையை ஒருமுறை பார்த்துவிட்டு, “வாட் இஸ் நார்மல்?” என்று கேட்க,
ஒரு நிமிடம் அறை முழுவதும் அமைதி. மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“யாராவது பதில் சொல்லுங்க. எது ‘நார்மல்’?”
ஒரு மாணவன் எழுந்து, “சார், சொசைட்டி அக்செப்ட் பண்ற விஷயங்கள் எல்லாம் நார்மல்.” என்று பதில் சொல்ல,
ஆரவ் ஒரு சின்ன தலையசைப்பு மட்டும் செய்தான்.
“ஓகே… அப்போ சொசைட்டி அக்செப்ட் பண்ணாத விஷயங்கள் எல்லாம் அப்நார்மல்-ஆ?”
அவன் கேட்ட விதத்தில், அந்த மாணவன் குழம்பிப் போய் அமர்ந்தான்.
அடுத்து ஒரு மாணவி எழுந்தாள்.
“மெஜாரிட்டி ஆஃப் பீப்பிள் ஃபாலோ பண்ற பிஹேவியர் நார்மல், சார்.”
“குட்! அப்போ சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும், ஒரு விதவை மறுமணம் பண்றது இந்த சொசைட்டில அப்நார்மலா பார்க்கப்பட்டது… ஆனா இப்போ அது நார்மல்..க்ஷ அப்போ ‘நார்மல்’ என்பது காலத்துக்குக் காலம் மாறுமா? அது ஒரு நிரந்தரமான விஷயம் இல்லையா?”
அவன் கேட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன. ஆனால், அதன் பின்னால் இருந்த தத்துவம் ஆழமாக இருந்தது. அவன் மாணவர்களை யோசிக்க வைத்தான். வெறும் புத்தகத்தில் இருப்பதை ஒப்பிப்பவராக அவன் இல்லை.
அமுதினி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் பேசும்போது, அவனது கைகள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அவனது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவனுடைய கண்கள் மட்டும் அவ்வப்போது ஏதோ ஒரு பழைய நினைவில் மூழ்குவது போலவும், சட்டென அதிலிருந்து வெளியே வருவது போலவும் அவளுக்குத் தோன்றியது.
அவன் தற்பொழுது, “அப்நார்மல் சைக்காலஜி” பற்றிப் பேசினான்.
மனநோய்கள், அதன் அறிகுறிகள், சமூகத்தின் பார்வை என்று அவன் விளக்கிய விதம் அத்தனை துல்லியமாக இருந்தது. ஆனால், அதில் எங்குமே ஒரு நோயாளியின் வலியைப் பற்றியோ, அல்லது ஒரு மனிதனின் உணர்ச்சிகளைப் பற்றியோ அவர் பேசவில்லை. எல்லாமே டெக்னிக்கலாக, அனலிட்டிக்கலாக மட்டுமே இருந்தது.
அமுதினிக்கு ஒரு கேள்வி எழுந்தது. ‘இவர் எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றுப் பேசுகிறார்? சைக்காலஜி என்பதே பல்வேறு உணர்ச்சிக் குவியல்களின் அறிவியல் தானே?’
அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“ஒருத்தர் தனக்குத்தானே பேசிக்கிட்டா, நாம அவரை அப்நார்மல்-னு சொல்றோம். ஆனா நாம எல்லோருமே நமக்குள்ள பேசிட்டுதான் இருக்கோம். தி ஒன்லி டிஃபரன்ஸ், ஒருத்தர் சத்தமா பேசுறார், இன்னொருத்தர் மனசுக்குள்ள பேசுறார். அப்போ சத்தம் தான் நார்மலுக்கும் அப்நார்மலுக்கும் உள்ள வித்தியாசமா?”
அவர் கேட்ட அந்தக் கேள்வி, அமுதினியின் இதயத்தில் ஒரு மணியை அடித்தது போல இருந்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
அவள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவர் ஒரு புதிர். எளிமையான வார்த்தைகளில் ஆழமான தத்துவங்களைப் பேசுகிறார். ஆனால் அவரிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. இது ஒரு வேஷமா? இல்லை, இதுதான் அவரது இயல்பா?’
நேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணி நேரம் முடிந்து, கிளாஸ் முடியும் தருணம் வந்தது.
“ஓகே, தட்ஸ் ஆல் ஃபார் டுடே. நெக்ஸ்ட் கிளாஸ்ல நாம வெவ்வேறு விதமான மனச்சிதைவு நோய்களைப் பத்திப் பார்க்கலாம். தேங்க் யூ.”
அவன் சொல்லி முடித்ததும், தன் புத்தகங்களையும் லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானான்.
அங்கிருந்து மாணவர்களும் மெதுவாகக் கலைய ஆரம்பித்தார்கள்.
சுருதி, அமுதினியின் காதருகே குனிந்து, “அம்மாடியோவ்… என்னமா கிளாஸ் எடுக்குறார்! ஆனா, அவர் ஒரு தடவை கூட ஸ்மைல் பண்ணல பாத்தியா?” என்றாள்.
அமுதினி புன்னகைத்தாள். ஆனால் அவள் பார்வை ஆரவ் மீதே இருந்தது.
அவன் அறையை விட்டு வெளியேறும் முன், ஒரு கடைசி முறை வகுப்பைத் திரும்பிப் பார்த்தான். ஏதோ ஒரு கணத்தில், அவனது பார்வை கூட்டத்தின் நடுவே இருந்த அமுதினியின் மீது நிலைத்தது.
ஒரே ஒரு நொடிதான்.
ஆனால், அந்த ஒரு நொடியில், அவளது ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்து நின்றது போல உணர்ந்தாள் அமுதினி.
அவனது கண்கள்…
அந்தக் கண்கள் அவளிடம் ஏதோ பேச முயற்சிப்பது போல இருந்தது.
அதில் ஒரு வலி, ஒரு தேடல், ஒரு சொல்ல முடியாத சோகம்… எல்லாம் அந்தக் கண்களில் மின்னல் போலத் தோன்றி மறைந்தது. அவன் அவளைப் பார்க்கவில்லை; அவளை ஊடுருவி, அவளுக்குள் இருக்கும் ஆன்மாவைப் பார்ப்பது போல இருந்தது.
அமுதினியின் இதயம் ஒரு நொடி வேகமாகத் துடித்தது. அவள் பார்வையை விலக்க முடியாமல் அவரையே பார்த்தாள். அவரும் அவளையே பார்த்தார். அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்தக் கண்கள்.. அந்தக் கண்கள் மட்டும் ஆயிரம் கதைகள் பேசின.
அடுத்த நொடியே, அவன் பார்வையை விலக்கிக்கொண்டு, அறையை விட்டு வெளியேறினான்.
வகுப்பறை மெதுவாகக் காலியானது. ஆனால் அமுதினி மட்டும் அதே இடத்தில், அதே அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள். அவள் காதுகளில் சுருதி பேசுவது எதுவும் விழவில்லை. அவள் மனதில் அந்த ஒரு நொடிப் பார்வை மட்டுமே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது.
‘யார் இவர்? ஏன் இப்படி ஒரு பார்வை? இது வெறும் பார்வையா, இல்லை… புயலுக்கு முன்னான அமைதியா?’ என்று அவள் மனம் என்னென்னவோ அசைப்போட்டுக் கொண்டிருந்தது.
அன்றுதான் அவள் முதன்முதலில் ஆரவ் கிருஷ்ணாவைப் பார்த்தாள்.
ஆனால், அவள் அறியவில்லை… அவள் பார்க்க ஆரம்பித்தது அவரை மட்டுமல்ல; அவளுக்குள்ளேயே அவள் இதுவரை கண்டிராத ஒரு புதிய உலகத்தையும் தான்.
அன்று முதல், அவளது நாட்கள் முன்பு போல் இல்லை. அவளது மனதில், ‘ஆரவ் கிருஷ்ணா’ என்ற பெயர், ஒரு சாய்ந்த கவிதையின் முதல் வரியாக எழுதப்பட்டுவிட்டது.
********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
7
+1
+1
1