அத்தியாயம் 25
“அவ சொல்றதும் சரி தானே ம்மா? காலேஜ் முடியவே இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்கு முன்னாடியே ஏன் அவசரப்படுறாங்க?” என்றாள் தேவதர்ஷினி அன்னை லீலாவிடம் அலைபேசியில்.
“அதனால என்ன தேவா? அஷ்வினி என்ன சின்ன பொண்ணா? அஞ்சு வருஷ காலேஜ் படிப்பு. கூடவே நல்ல சம்மந்தம். அதுவும் சுந்தரி அக்காக்கு நல்லா தெரிஞ்சவங்க தான் மாப்பிள்ளையோட அம்மா. தினமும் கோவில்ல பார்த்து பேசினு பழக ரொம்ப நல்ல குணமாம். சுந்தரி அக்காகிட்ட அவங்களே கேட்டிருக்காங்க எங்க பையனுக்கு உங்க பொண்ணை தருவீங்களான்னு!” என லீலா சொல்ல,
“புரியுது ம்மா. ஆனா அஷ்வினிகிட்ட நல்லா கேட்டுட்டு ஏற்பாடு பண்ண சொல்லுங்க” என்றவளுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.”இவ்வளவு பேசுற அளவுக்கு நீ பெரிய பொண்ணாகிட்ட இல்ல தேவா?” என லீலா சிரிக்க, தேவாவிற்குமே சிறு குறுநகை தான்.
“ம்மா! அவளுக்கும் பிடிக்கணுமே! காலேஜ் முடிச்சுட்டு அவளும் வேலைக்கு போகணும்னு எதாவது பிளான் வச்சிருக்க வாய்ப்பிருக்கு இல்ல? அதோட….“ என்ற மகள் தயக்கத்தில்,
“உன் கல்யாணத்துல நடந்ததை நினைச்சு தானே பயப்படுற தேவா? புரியுது. அக்காவும் மாமாஉமன் அவ்வளவு விசாரிக்காம செய்வாங்களா? ஏற்கனவே பட்டவங்க நாம. அதனால இன்னுமே நல்லா விசாரிச்சு தான் செய்வோம்” என்றவர்,
“நான் என்ன நிலவரம்னு பார்த்துட்டு சொல்றேன். அப்படி பொண்ணு பார்க்க வந்து எல்லாம் கூடி வந்தா உடனே பூ வச்சிடணும் சொல்லுவாங்க. நீயும் தீபாவளிக்கு முன்னாடி ஊருக்கு வர்ற மாதிரி இருக்கும்!” என்று சொல்லியவர்,
“அதான் கார் வாங்கிட்டிங்களே டிக்கெட்க்கு பிரச்சனை இல்லை இல்ல தேவா?” என கேட்க,
“வரணும்னா எப்படியும் வந்துடுவோம் தானே ம்மா. கார் இருந்தா தானா?” என்றாள் தேவாவும்.
“அதுவும் சரி தான். கார்த்தி தான் நம்ம வீட்டு ஃபங்க்ஷன் எல்லாத்துக்கும் வந்துடுமே” என்று லீலா சொல்ல,
“அப்படி வந்ததுல தானே இவ்வளவும்?” என்றாள் தேவா.
“நீ விடவே மாட்டியா டி அதை?” என அன்னை கேட்க,
“பாவம் ம்மா அத்தான். வந்தோமா போனோமான்னு இருந்திருக்கும்!” என்றவளுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது அதை சொல்லும் பொழுது.
அதை நினைத்து வருந்தி வாழும் வாழ்க்கை மகளுக்கு இல்லையே என்பது வரை நிம்மதி லீலாவிற்கு.
“சரி ம்மா! பார்த்துக்குவோம்!” என்றவள், நீண்ட சிந்தனைக்கு பின் அஷ்வினி என்னை வாட்சப்பில் எடுத்தாள்.
திருமணத்திற்கு முன்னும் பின்னும் என பலமுறை இப்படி செய்தி அனுப்பி பேசி, ஆன்லைன் ஷாப்பிங்கில் தங்களுக்கு பிடித்ததை பகிர்ந்து வாங்கலாமா என பரிந்துரை செய்து அதத்தனைக்கு பழகி இருந்தார்கள் தான்.
ஆனால் கார்த்தி கூறியதை கேட்டபின் இதுவரை அஷ்வினியிடம் பேசவில்லை தேவதர்ஷினி. பேச கூடாது என்றல்லாமல் பேச முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.
“ஹாய் அஷ்!” என அனுப்பவுமே,
“ஹாய் க்கா! எப்படி இருக்கீங்க?” என உடனே பார்த்து கேட்டு அனுப்பி வைத்தாள் அஷ்வினி.
பொதுவாய் இருவரும் பேசிக் கொள்ள, அன்னை சொல்லியதை பேசலாமா வேண்டாமா என நீண்ட யோசனைக்கு பின் இப்பொழுது வேண்டாம் என கைவிட்டாள் தேவதர்ஷினி.
தனக்கு தெரியப்படுத்த போவதாய் ஏற்கனவே கார்த்தி அஷ்வினியிடம் கூறி இருந்ததால், தான் எதையும் மனதில் வைத்து இந்த திருமணத்தைப் பற்றி அவளிடம் பேசுவதாய் தவறாய் அவள் புரிந்து கொள்ள கூடாதே என தான் எதுவும் பேசவில்லை தேவா.
மாலை கார்த்தி வரவும் இதை அவனிடம் கூற,
“ஓஹ்! நல்ல விஷயம் தானே தேவா?” என்றான்.
“ஹ்ம்! ஆனா அஷ்வினிகிட்ட இன்னும் பேசலை போல. நானும் பேசலாமா நினைச்சேன். அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டேன்!” என்றாள்.
அவள் யோசிப்பது புரிந்தவனுக்கு சிறு புன்னகை எழ, “கணேசன் மாமாவும் சுந்தரி அத்தையும் அப்படி சாதாரணமா உடனே பார்க்க மாட்டாங்க தானே? நிறைய யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருப்பாங்க. பொண்ணு பார்க்க வந்து ரெண்டு வீட்டுக்கும் சம்மதம்னா அடுத்த ஸ்டெப் வைக்கலாம் தானே? எப்படியும் மேரேஜ் மூணு டு ஆறு மாசத்துக்கு அப்புறம் தான் வைப்பாங்க. அதுக்குள்ள காலேஜ் முடிஞ்சிடும்! சிம்பிள்!” என்றவன் சொல்லில் சரி தானே என அப்பொழுது தான் தோன்றியது தேவதர்ஷினிக்கும்.
“நீங்க ஏன் மேடம் இவ்வளவு யோசிக்குறீங்க?” என அவள் கைப்பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைக்க,
“த்தான்! என்ன நீங்க!” என நெளிந்தாள் கூச்சத்தில்.
“என்ன இவ்ளோ ஜில்லுன்னு இருக்குற தேவா! அவ்ளோ ஒன்னும் கிளைமேட் மோசம் இல்லையே!” என இன்னும் அவளுள் இவன் இறங்க,
“உங்களுக்கு பழகிடுச்சு. எனக்கு அப்படியா? எப்ப டா ஊருக்கு போவோம்னு இருக்கு. என்ன ஊரு த்தான் இது? “ என்றவள் அவனில் இருந்து மீள முயல,
“மூச்! இதெல்லாம் ஹெவன் டி! டோன்ட் டிஸ்டர்ப்!” என்றான் அவளை விலக விடாமல்.
“ஊருக்கு போனும்னு இருக்கா? அப்படியா? நிஜமாவா?” என்று கேட்டவன் குரலில்,
“ஊருக்கா? எதுக்கு? நான் சொல்லலையே!” என தேவதர்ஷினி சொல்ல,
“டேய்!” என சத்தமாய் சிரித்து மொத்தமாய் அணைத்து நெற்றி முட்டியவன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாள் வெட்கத்தில்.
இன்னுமே இரவுகளில் அவளுக்கு சரியாய் உறக்கம் வருவதில்லை அந்த ஊரில். ஆனாலும் பழகிக் கொண்டாள். பழகிட வைத்திருந்தான்.
“ஊரை விட்டும் அனுப்பாம வீட்டுக்குள்ளயே வச்சு வளத்து எனக்குன்னு அனுப்பி இருக்காங்க பாரேன் புஸ்புஸ் கன்னம் வச்சு!” என பேச்சோடு அவள் கன்னம் கிள்ளி கொஞ்சி தனக்குள் அவளை வைத்துக் கொள்பவனை அத்தனைக்கு பிடித்தது தேவதர்ஷினிக்கு.
அடுத்த ஒரு வாரத்திலேயே அஷ்வினிக்கு அந்த சம்மந்தம் முடிவானது உறுதியாகிவிட,
“ஹ்ம் குட் குட்!” என்றான் மனைவியிடம் கார்த்திகைசெல்வன்.
“என்ன குட் குட்? நான் ஊருக்கு போகணும் சொன்னேன்!” என அவள் சொல்ல,
“போலாமே! தேவா சொல்லி போகாமலா?” என்றவன்,
“என்னைக்கு?” என்று கேட்டு அடுத்த நாளே அலுவலகம் சென்று சொல்லிக் கொண்டு மாலை கிளம்பிவிட்டனர்.
கணேசன் சுந்தரி இருவருமே உறவுக்கும் மரியாதைக்கும் என கார்த்திக்கு தகவலை சொல்லி அழைக்க, கண்ணகியும் “எப்ப டா கிளம்புறீங்க?” என அழைத்துவிட்டார் மனைவி கூறிய அன்றே!
“எதாவது ஃபன்க்ஷன்னா கல்யாணம் இருக்கு வா டான்னு ஒரு போன் வரும் முன்னாடி எல்லாம். இப்ப ஒவ்வொருத்தரும் போன் பண்றாங்க. அதுவும் மரியாதை குடுத்து வாங்கனு சொல்லும் போது எனக்கே சிரிப்பா இருக்கு தேவா. ஆனா இதெல்லாம் தேவாவும் கார்த்தி லைஃப்குள்ள வந்ததனால தான் இல்ல?” என சிரித்தபடி கேட்க,
“ஹ்ம்! கல்யாணமாகிட்டா அப்படி தான் த்தான். மாலை என்ன மரியாதை என்ன?” என அவளும் கிண்டலாய் சொல்ல,
“இனி தேவாவை நாலு நாளைக்கு கையில பிடிக்க முடியாதே! இப்பவே பேச்சுல ஒரு வாலுத்தனம் தெரியுதே!” என கார்த்தி வழியில் மனைவியிடம் சொல்ல,
“த்தான்!” என முறைத்தாலும் இத்தனை மாதங்களுக்கு பின் உறவுகளை சந்திக்க செல்லும் மகிழ்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிய தான் செய்தது.
வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் “அத்தை!” என கண்ணகியை ஒட்டிக் கொண்டு சிரித்தபடி தேவா சென்று நிற்க, மகனை தான் அத்தனை ஆராய்ச்சியாய் கண்டார் பரமேஸ்வரன்.
“என்ன அண்ணி நீங்க? மாமியார் மருமகள் இலக்கணத்தையே மாத்திடுவீங்க போல?” என நிரஞ்சன் கிண்டல் பேச,
“கண்ணு வச்சுட்டானே! கண்ணு வச்சுட்டானே!” என புலம்பினார் கண்ணகி.
“என்ன ப்பா?” என கார்த்தியும் தந்தை அருகே சென்று நிற்க, ஒன்றுமில்லை என தலையாட்டி புன்னகைத்தவருக்கு கேட்கவும் சங்கடமாய் தான் இருந்தது.
“நீங்க அன்னைக்கு சொன்னது தான் ப்பா. லைஃப் அப்படியே முடியுறது இல்லையே!” என மனைவியைப் பார்த்தவன்,
“எல்லாம் லேட்டா தான் புரியுது!” என்றான்.
“சரி டா சரி டா! சந்தோஷம்!” என்றவருக்கும் புரிந்தது.
“என்னை ஏன் டி இத்தனை உலுக்குற? நல்லாருக்கியான்னு கேட்க வந்தா நீ பண்றதுல தெரியுதே ரொம்ப சந்தோசமா இருக்கன்னு” என கண்ணகி கிண்டல் பேசினார் மருமகளை.
அடுத்தநாள் காலை எழுந்ததும் கிளம்பி கணவன் கண் விழிக்க காத்திருந்தவளுக்கு அத்தனை ஆர்வம் தாய் தந்தயை காண.
ஆனாலும் உறங்குபவனை எழுப்பிட மனமும் இல்லை. இத்தனை தூரம் தனியாய் அவன் காரை ஓட்டி வந்திருக்க, அவன் களைப்பையும் அறிந்து தான் இருந்தாள்.
அலைபேசி சத்தத்தில் கார்த்தி கண் விழிக்க, கண்ணகி தான் அழைக்கிறார் என்றதும்,
“சொல்லுங்க த்தை!” என ஏற்க, அவர் கூறிய பதிலில், பாதி தூக்கம் கலைந்திருந்த கணவனிடம் அவன் கை நீட்டுவதை பார்த்தவள்,
“அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்களாம் த்தான். நான் பார்த்துட்டு வந்துடுறேன். அதுக்குள்ள நீங்க கிளம்பிடுங்க” என சொல்லிக் கொண்டு அவள் சிட்டாய் பறந்துவிட,
“ஹ்ம்!” என மீண்டும் தூக்கத்திற்குள் சென்றான் கார்த்திகைசெல்வன்.
கணேசன் வீட்டில் தான் திருமணம் என்ற போதும் கார்த்தியின் வீட்டோடு தேவாவின் வீட்டிலும் என அத்தனை பரபரப்பும் வேலைகளும் என மொத்த வீட்டிலும் அத்தனை சந்தோஷங்கள்.
அஷ்வினியின் பூ வைக்கும் படலம் ஒருபுறம் கூடவே திருமணமாகி வெளியூர் சென்ற கார்த்தி தேவாவின் முதல் வருகை என அவர்களையும் கவனிக்கவும் மறக்கவில்லை குடும்பங்கள்.
அன்று காலை பொழுதின் துவக்கத்தின் முதலே தேவா அத்தனை உற்சாகமாய் துள்ளி வர, கூடவே கணவனுடன் தாய் வீடு வந்த பின் இன்னுமே கொண்டாட்டம் தான் கயல்விழியோடு சேர்ந்து.
“அஷ்!” என அஷ்வினியைக் காண கணேசன் வீட்டிற்குள் தேவதர்ஷினி கணவனோடு வர,
“தேவா க்கா!” என வரவேற்று மகிழ்ந்த அஷ்வினி, “வாங்க த்தான்!” என கார்த்திகைசெல்வனிடமும் புன்னகைத்தாள்.
அவனுமே பதிலுக்கு பேசிவிட்டு, “நான் வீடு வரை போய்ட்டு வரட்டுமா தேவா?” என கேட்க,
“ஏன் த்தான்?” என்றவள் உடனே,
“நானும் வரவா?“ என கேட்க,
“ச்சோ! இந்த நியூ கப்பில்ஸ் வேற!” என கயல்விழி கிண்டல் செய்ய அஷ்வினியும் சிரிப்புடன் பார்த்து நின்றாள் அவர்களை.
“நீ இங்க பாரு! நான் வந்துடுறேன்! அப்பாவும் கணேசன் மாமாவும் வேலையா வெளில போயிருக்காங்களாம். அம்மா கூப்பிட்டாங்க!” என சொல்லவும் சரி என அனுப்பி வைத்தாள் தேவதர்ஷினி.
அடுத்து சகோதரிகள் ஒன்றாய் அமர்ந்து கதை பேச, அஷ்வினியிடம் திருமணம் அவளின் சம்மதம் என பேச ஆரம்பித்தாள் தேவா.
அன்று மாலையே அஷ்வினிக்கு பூ வைத்து திருமணம் உறுதி செய்யப்பட, இன்னும் ஏழு நாட்களில் நிச்சயமும் இரண்டு மாதங்களில் திருமணமும் என பெரியவர்களால் பேசி முடிவெடுகப்பட்டது.
இதை எதிர்பார்க்கவில்லை தான் தேவதர்ஷினியும். இரண்டு நாட்கள் விடுப்பில் வந்த கார்த்திகைசெல்வன் அடுத்த நாள் மனைவியை முறைத்தபடி தனியாய் பெங்களூர் நோக்கி புறப்பட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
3
+1