Loading

தூவானம் 38 :

#அனைத்தும் கற்பனையே.

ராயப்பன் தன்னுடைய அரசியல் ஆசைக்காக தான் காதலித்த பெண்ணை விடுத்து தன் கட்சியின் மூத்த தலைவர் பெண்ணை மணந்து கொண்டார்.

மணந்து கொண்டாரேத் தவிர ஒருநாள் ஒரு பொழுது தான் தாலி கட்டிய பெண்ணை மனைவியாக நடத்தியது இல்லை.

அதனை கவனித்து அப்பெண் கேட்டதற்கு… அரசியலில் சாதித்த பின்னர் தான் அனைத்தும் என்று சொல்லிவிட்டார்.

ராயப்பனை எதிர்த்து அப்பெண்ணால் எதுவும் பேசவோ செய்யவோ முடியவில்லை.

அப்பெண் தந்தைக்கு எதையும் தெரியப்படுத்தாது அவரின் மன நிம்மதியை கருதி ராயப்பனின் ஒட்டுதலற்ற குடும்ப வாழ்க்கையை சகித்துக் கொண்டாள்.

ராயப்பனும் தன் மாமனாரின் முன்பு மனைவியின் மீது உலகத்து அன்பையே பொழிய… அவருக்கும் மனதளவில் தன்னுடைய பெண் படும் துன்பங்கள் தெரியாது போனது.

ஐந்து வருடங்கள் சென்ற பின்னரே… அப்பெண்ணிற்கு தெரிந்தது, ராயப்பனுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதும், அதில் அவருக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்பதும்.

அந்நாள் அப்பெண் அடைந்த துன்பத்திற்கு வார்த்தைகளால் ஆறுதல் அளித்திட முடியாது.

அதனை அவள் ராயப்பனிடம் முயன்று வரவழைத்த தைரியத்துடன் கேட்டிட…

“அவள் தான் என் காதல் மனைவி. என் ஆசை, சந்தோஷம் அனைத்திற்கும் அவள் மட்டும் தான். என்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக மட்டுமே உன்னை மணந்து கொண்டேன்” என்று வார்த்தையால் தன்னுடைய மனைவியை கொன்றார்.

அதுதான் ராயப்பன் செய்த முதல் கொலை.

ஒரு உடலிலிருக்கும் உயிரை பிரிப்பது மட்டும் கொலை அல்ல… உணர்வுகளை வலிக்க வைப்பதும் கொலை தான். மரணத்திற்கும் மேலானதல்லவா உணர்வுகளை மறிக்க… மரிக்கச் செய்வது.

அன்று முதல் மறைந்து சென்று கொண்டிருந்தவர் தன்னுடைய மனைவியிடம் சொல்லிக்கொண்டே சென்று வந்தார்.

அவரால் தன்னுடைய கணவரின் செயலை எண்ணி அழத்தான் முடிந்தது.

கணவனை இனியும் மாற்ற முடியாதென்று தெரிந்து கொண்டவள் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டாள். தன்னுடைய வாழ்கையை அடுகளைக்குள்ளேயே சுருக்கிக் கொண்டார்.

ராயப்பன் எதிரே செல்வதில்லை. சொல்லப்போனால் ராயப்பன் அவரை தவிர்த்து போய் அவர் அவனைத் தவிர்த்தார்.

இந்நிலையில் ராயப்பனின் மாமனார் இறந்துவிட… தந்தையின் மரணத்தில் அவள் அனாதையாகிப்போனாள்.

அவரோ சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகள் வயிற்று வாரிசின் பேரில் எழுதி வைத்ததோடு, அது அவ்வாரிசின் இருபத்திரண்டாவது வயதில் திருமணம் முடித்து அவளி(னி)ன் துணையோடு மட்டுமே விற்க முடியும் அல்லது மற்றவரின் பெயரில் மாற்றி எழுத முடியும்.

தன் மகளுக்கு வாரிசு இல்லாத பட்சத்தில்… அவளுக்கு பின்னர் சொத்துக்கள் அனைத்தும் தன்னுடைய கட்சியின் நிதிக்கு சென்றுவிடுமென எழுதியிருந்தார்.

ராயப்பனுக்கு அரசியலில் பக்க பலமாக இருந்த விடயம் இரண்டு. ஒன்று சங்கரனின் நட்பு. இன்னொன்று தன்னுடைய மாமனாரின் பணபலம். அதனை இழக்கத் துணியாத ராயப்பன்… தன்னுடைய மனைவியிடம்  முறையற்று நடக்கத் தொடங்கினான்.

அதன் பலனோ விளைவோ தான் அமிர்தா.

அமிர்தாவின் பிறப்பிற்கு மட்டுமே ராயப்பன் சொந்தம். தனக்கொரு மகள் இருக்கிறாள் என்று மட்டுமே தன்னுடைய வட்டத்திற்கு தெரியப்படுத்தினார். அத்தோடு அவரின் கடமை முடிந்து விட்டது.

போதும் இந்த வாழ்வென்று இறைவன் எண்ணினானோ… அமிர்தாவின் ஆறாம் அகவையில் அவளது அன்னைக்கு இறப்பினை அளித்து மொத்தமாக விடுதலை கொடுத்திருந்தான்.

தன்னுடைய ஆசை மகன் மகளை உலகத்திற்கு காட்ட முடியாத நிலை, அமிர்தாவை தனது மகளென வெளியுலகிற்கு அடையாளப்படுத்த ராயப்பனை விடவில்லை.

அது தன்னுடைய பாதுகாப்பிற்கென அமிர்தா நினைத்துக்கொள்ள… அவளும் எந்தவொரு இடத்திலும் ராயப்பனை தன் தந்தையெனக் காட்டிக்கொள்ளவில்லை.

ராயப்பன் பாரியை வேண்டாமென மறுக்கக் காரணம், ரித்தேஷ் தன்னுடைய காதல் மற்றும் தான் பாரியை பற்றி தவறாகக் கூறியதென்று நினைத்திருக்க… ராயப்பனோ சொத்துக்கள் யாவும் தன் கைக்கு வருவதற்கு, தன் சொல் பேச்சினைக் கேட்கும் ஒருவன் அமிர்தாவிற்கு கணவனாக வரவேண்டுமென எண்ணினார். அப்படியொரு அடிமையாக பாரி இருக்கமாட்டானென்று அவனை பார்த்ததும் கண்டுகொண்டவருக்கு ரித்தேஷ் மட்டுமே தனக்கு வாய்த்தவனென கருதி அமிர்தாவை ரித்தேஷிற்கு மணம் முடித்து வைத்தார்.

அரசியலில் அவர்கள் கட்சி ஆட்சி அமைத்திட… ரித்தேஷிற்கு அவனின் விருப்பம் சிறிதுமின்றி அறைநிலைத் துறையை தெரிவு செய்து கொடுத்தார். அதில் அவனுக்கு ராயப்பன் மீது மனச்சுணக்கம் ஏற்பட்டது.

அதெல்லாம் ராயப்பனின் திட்டம் தெரியும்வரை மட்டுமே.

நம் நாட்டில் பல பழமையான செல்வ வளங்கள் அதிகம் உள்ளது. அவை யாவும் மதிப்பில் வரையறுக்க முடியாதவை. புராதன காலகட்டங்களில் நம் நாட்டிலிருந்து தான் வைரங்கள் மற்றும் அரிய வகை ரத்தினங்கள் கிடைத்தது. இப்போது தொண்ணூற்றியாறு சதவிகித வைரங்கள் ஆப்பிரிக்காவிலிருந்து தான் கிடைக்கிறது.

நம் நாட்டு பழங்கால வைரத்தின் மதிப்பு எல்லையற்ற ஒன்று.

கூடவே இருக்கும் ஒன்றின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை என்பது மிகச்சரியே. அதற்கு உதாரணம் தான், மெல்ல மெல்ல தன்னுடைய மதிப்பை இழந்து சிதைந்து கொண்டிருக்கும் நம்முடைய அரசு கால பொக்கிஷங்கள்.

பொக்கிஷங்கள் என்பது பொன்னும் பொருளும் மட்டுமல்ல. கட்டிடங்கள். அதில் இடம்பெற்றிருக்கும் சிலைகள். குறிப்பாக பெரிய பெரிய கோவில்கள் முதல் சிறிய மண்டபம் வரையிலும் நம் நாட்டை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர்களால் அமைக்கப்பட்ட உலோகம் மற்றும் ரத்தினங்கள் கொண்ட சிலைகள் யாவும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. அவற்றின் மதிப்பு நமக்குத்தான் தெரியவில்லை.

வெளிநாட்டவர் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இன்று நம் நாட்டின் பெரும் மதிப்புள்ள பழங்கால பொருட்கள், ரத்தினங்கள் யாவும் அவர்கள் வசம் தான். அதற்கான பண மதிப்பீடு அதிகம் என்பதால், பாதுகாக்கும் எண்ணமின்று விற்கத்தான் மனம் வருகிறது.

நம் நாட்டு ராஜாக்கள் அனைத்திலும் வைரங்களை பதித்து வைப்பர். வைரம் என்பது அவர்களின் மதிப்பை உயர்த்திக்காட்டும் என்ற எண்ணம் அவர்களிடையே. ஆதலால் தங்களுடைய வாள் முதல் கொண்டு தாம் கட்டும் பெரும் பெரும் கட்டிடங்களில் செதுக்கும் சிலைகள் வரை ரத்தினங்களை பதித்து தங்களின் பெருமையை நாடறியச் செய்தனர்.

இப்போது அவர்களின் நோக்கம்… பழங்கால ரத்தினங்கள் அடங்கிய சிலைகள் மற்றும் கலைநயமிக்க பொருட்கள். அவை யாவும் இன்னும் ஒருசில கோவில்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை கடத்தி விற்பது தான் ராயப்பனின் வேலை.

அதனை தன்னுடைய அரசியல் பலம் கொண்டு ராயப்பன் மிக எளிதாக செய்து கொண்டிருக்க… அதற்கு மூல காரணம் ரித்தேஷ்.

ரித்தேஷ் வெளிநாட்டவரிடம் தொடர்பு வைக்க… ராயப்பன் ரித்தேஷின் மூலம் கடத்த ஆரம்பித்தான்.

ரத்தின சிலைகள் மற்றும் சிறப்புமிக்க பொருட்களை கடத்தி விவாஷிடம் ஒப்படைக்கும் வரை மட்டுமே ரித்தேஷின் பங்கு. எங்கு எப்படி யாரிடம் விற்கின்றான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனால் இந்நாள் வரை, ரித்தேஷிற்கு அவனது பங்கு சரியாக வந்து கொண்டிருக்கிறது. அவை பல கோடிகள். எண்ணி பார்க்க முடியாத பெரும் தொகைகள். அதனால் ராயப்பனின் மீதான அவனின் மன விரிசல் கூட நாளடைவில் சரியானது.

ரித்தேஷ் தன்னுடைய பதவியை வைத்து தொடர்ந்து சிலைகளை கடத்த… அதுதான் சிக்கலாகிப்போனது.

எப்போதாவது என்றால் கவனம் பெற்றிருக்காதோ என்னவோ. பல்வேறு இடங்களில் ஒரே நாளில் கூட பல சிலைகள் கோவில்களிலிருந்தும் வரலாற்று கட்டிடங்களிலிருந்தும் காணாமல் போக… மாநில அரசுவின் கவனம் அதில் முழுதாக படிந்தது.

அதற்காக சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டவன் தான் பாரி வேந்தன். இதற்காகத்தான் அவன் மாற்றல் பெற்று வருகின்றான் என்பது தெரியாமல் வேறொரு வழக்கிற்காக வருவதுபோல் காட்டிக்கொண்டால் தான் அவன் மீது கடத்துபவர்களின் கவனம் இருக்காது என்று சிந்திக்கும் நேரத்தில் தான் அமிர்தாவின் வழக்கு உதவியாக இருந்தது.

இது அமிர்தாவின் கொலை வழக்காக மட்டும் இருந்திருந்தால்… நிச்சயம் பாரி இங்கு வந்திருக்க மாட்டான்.

பாரி, பூ… இருவரும் சேரும் நிகழ்வுகள் வேறு வகையில் நிகழ்ந்திருக்கும்.

கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக மட்டுமே இங்கு வந்தான். அமிர்தாவின் கொலை வழக்கிற்காக இங்கு வந்துவிட்டு அதைப்பற்றி விசாரிக்காமல் விட்டால் நன்றாக இருக்காது… தன்மீது எதிராளிக்கு சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது என்பதற்காகவே அதில் விசாரணையை ஆரம்பித்தான்.

அசட்டையாகத்தான் ராயப்பனின் வீட்டிருக்குச் சென்றான்.

அங்கு பாரி கண்டெடுத்த புகைப்படங்கள்… நீ வந்ததே இதற்காகத்தான் என்று சொல்லாமல் சொல்லியது போல் அவனது கை சேர்ந்தது.

அதன் பிறகு தான் பாரி அமிர்தாவின் இறப்பில் உள்ள மர்மங்களில் தீவிரமாக இறங்கினான்.

*****

ரித்தேஷினை கடத்தல் விடயமாக நேரடியாக தான் விசாரித்தால் விவாஷ் சுதாரித்துக்கொள்வான் என்பதற்காக, சத்யாவின் மூலம் தான் அவனிடம் விசாரணை நடந்தது.

என்ன தான் அமிர்தா பாரியை விரும்பியிருந்தாலும்… திருமணத்திற்கு பின் ரித்தேஷின் மனைவியாக மட்டுமே நடந்து கொண்டாள். மனதளவிலும். அதற்கு ரித்தேஷின் அவள் மீதான எல்லையற்ற காதலும் ஒரு காரணம்.

ரித்தேஷ் உண்மையில் அமிர்தாவை விரும்பி தான் மணம் செய்து கொண்டான். அதனால் தெவிட்ட தெவிட்ட அமிர்தாவை காதலித்தான் நித்தமும்.

எங்கும் பாரியின் நினைவு அவளுக்கு வந்ததில்லை. ஆனால் இறக்கும் தருணத்தில் அவள் நினைத்த முகம் பாரியுடையது தான்.

ஒருநாள் அமிர்தா குளியலறைக்குள் இருப்பது தெரியாது ரித்தேஷ் சிலைகளை பதுக்கும் ரகசிய அறைக்குள் சென்று வரும்போது, குளியலறைக்குள் இருந்து வெளியில் வந்த அமிர்தா பார்த்துவிட்டாள்.

அவள் ஆச்சர்யமாக அந்த அறையை பற்றி வினவ… “சின்ன வயசுல நான் உபயோகித்த பொருள் எல்லாத்தையும் அப்பா இதுல வச்சிருக்கார்” என்று சொல்லியவன் தன்னுடைய பதற்றத்தை மறைத்தவனாக உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

முதலில் அவன் சொல்லிச்சென்றதை சாதரணமாக எடுத்துக்கொண்டாலும், சற்று நேரத்திற்கு பின் அதற்குள் செல்ல வேண்டுமென்கிற ஆர்வம் உந்த சென்று பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அத்தனையும் கலை நயமிக்க பழங்காலப் பொருட்கள் மற்றும் சிலைகள். அளவு விகிதம் நிறைய இருந்தன. அத்தோடு இனி கடத்தப்படும் சிலைகளில் புகைப்படங்களும்… எந்த தேதியில் கடத்தப்படப் போகிறதென்ற குறிப்பும் அதன் பின்னால் எழுத்தப்பட்டிருக்க, அதை மட்டும் எடுத்துக்கொண்டு அவ்வறையிலிருந்து வந்தவள், புகைப்படத்தை தலையணைக்கு கீழ் ஒளித்து வைத்துவிட்டு ரித்தேஷிற்காகக் காத்திருந்தாள்.

ரித்தேஷ் வந்ததும்… நேரடியாகவேக் கேட்டுவிட்டாள்.

முதலில் பொறுமையாக அதில் வரும் லாபம் பற்றி பேசி… இதனை கண்டுகொள்ளாது விட்டுவிடு என்று நயமாக பேசினான்.

அமிர்தா அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்க… ரித்தேஷ் கோபத்தைக் காட்டினான்.

அதற்கும் அமிர்தா அசராது இதனை இப்போதே தன் தந்தையிடம் சொல்லப்போவதாக சொன்னதோடு… நேரடியாக கமிஷனரிடம் புகார் கொடுப்பேன் என்று சொல்ல ரித்தேஷ் தன் கட்டுப்பாட்டை மொத்தமாக இழந்து அடித்துவிட்டான்.

மேலும் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்க…

“இதுக்காகவா உன்னை சின்ன வயசிலிருந்து லவ் பண்ணி… உன் அப்பாகிட்ட பாரியை தவறா சொல்லி… அவர் அவனை மறுக்க வச்சு, உன்னை கல்யாணம் செய்துகிட்டேன்” என்று  ரித்தேஷ் தான் இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மையை உளறினான்.

அதுநாள் வரை திருமணத்திற்கு முன் கிடைத்த காதல் தான் நிலைக்கவில்லை… திருமண பந்தத்தில் உண்டான காதல் அதற்கு மேல் இன்பத்தை வாரி வழங்குகிறதே என்று பூரித்து இருந்தவளுக்கு அந்நொடி… பாரியே தன்னை மறுத்துச் சென்றபோதும், தன்னுடைய காதல் நிறைவேறாததற்கு இவனும் ஒரு காரணம் என்பது அவளுக்கு அதிர்வாக இருந்தது. அவனின் மீது கோபம் கனன்றது.

அந்த கோபத்தோடு ராயப்பனிடமே சொல்கிறேன் என்று அவரைப்பற்றி தெரியாது அவனிடம் கூற,

“உன்னை வெளியில் விட்டால் தானே” என்று சொல்லி, அவளை பயம் கொள்ளச்செய்யவே கொலை செய்வதைப்போல் அவளின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை வளைத்து பிடித்து இறுக்கினான்.

அப்போதும் அவள் நான் வெளியில் சொல்வேன் என்று திமிர, உண்மையிலேயே கொலை செய்யும் முனைப்புடன் துணியை இறுக்க அக்கணம் சங்கரன் சரியாக ஓடிவந்து அவளை காப்பத்தினார்.

ஆனால் அவனிடம் காத்து… அவனுக்கும் மேலான அரக்கனிடம் ஒப்படைத்துவிட்டு வந்தார்.

அமிர்தா சங்கரனுடன் தன்னுடைய வீட்டிற்கு செல்லும்போது அவள் ஒளித்து வைத்த புகைப்படங்களை சங்கரனுக்கே தெரியாது எடுத்துச் சென்றிருந்தாள்.

ராயப்பனிடம் சொல்ல நினைத்தவள், சங்கரனிடமே உண்மையைக் கூறியிருக்கலாம். மகன் என்று அவரும் அவனுக்கு துணை நின்றிடுவார் என நினைத்தே சொல்லாது விட்டு ஆபத்தை தன் பக்கம் தானாகவே வரவழைத்துக் கொண்டாள்.

அமிர்தா இங்கிருந்து சென்றுவிட்டாள் என்றதுமே ரித்தேஷ் அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதென ராயப்பனிடம் சொல்லிவிட்டான்.

ராயப்பன் தன்னிடம் சொல்லாதவரை மட்டுமே அவள் உயிர் அவளிடமிருக்குமென்று, அவளின் சாவிற்கு உறுதி செய்திருந்தார்.

உண்மையிலேயே காதலித்த மனைவி என்பதால், அந்நேர கோபத்தில் திட்டி அடித்து விட்டாலும், அவளின்றி இருக்க முடியாத நிலையில் அமிர்தாவிடம் மீண்டும் பேசி பார்த்து தன்னுடைய செயல்களுக்கு ஒத்து வந்தால் அழைத்து வந்து விடலாமென்று வந்த ரித்தேஷ்… அவளின் பிடிவாதத்தால் சண்டையிட்டு தனித்தே சென்றான்.

முதல் நாள் ராயப்பனிடம் சொல்ல வருவதுமாகவும் தயங்குவதுமாகவும் இருக்க… அமிர்தாவின் நோக்கத்தை உணர்ந்தே இருந்தார் ராயப்பன்.

அரசுக்கு எதிரான ஒன்றை தெரிந்து கொண்டதற்கே… அமிர்தா அத்தனை தவித்தாள். என்னவோ அந்த குற்றத்தை தானே செய்வதுபோல்.

இதற்கு மேலும் இந்த அவஸ்த்தயை தாங்க முடியாதென ராயப்பனிடம் சென்றவள் அவரிடம் ரித்தேஷ் செய்யும் குற்றத்தைப் பற்றி விரிவாக சொல்லி முடித்து… அங்கு மேசையில் வீற்றிருந்த குவளை நீரை அப்படியே முழுவதும் வாய்க்குள் சரித்திருந்தாள். அதன் பின்பே அவளின் முகத்தில் ஒரு அமைதி.

“இதற்கு மேல் என்ன செய்யணுமோ செய்திடுங்கப்பா. உங்க மகள் கணவன் என்றெல்லாம் பார்க்க வேண்டாம். நாளைக்கு கமிஷனரை வீட்டிற்கே அழைத்து வாங்க. நானே உண்மையை சொல்றேன்” என்றவள் தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அன்று முழுவதும் இவ்விடயத்தை எப்படியாவது ராயப்பனிடம் சொல்ல வேண்டுமென்ற சிந்தனையிலேயே இருந்தவள் உண்ண, உறங்க, குளிப்பதற்கும் கூட மறந்திருக்க… ராயப்பனிடம் பேசிவிட்டு வந்ததும் குளித்துவிட்டு வந்தவள், இரவு நேர க்ரீம்களை முகத்தில் பூசிவிட்டு படுக்க ஆயத்தமாக… அப்போதுதான் நினைவு வந்தவளாக ரித்தேஷிற்கு தெரியாமல் எடுத்து வந்த புகைப்படங்களை ராயப்பனிடம் கொடுக்கலாமென்று எடுத்துக்கொண்டு அவரின் அறைக்குச் செல்ல…

அங்கு ராயப்பன் ரித்தேஷை திட்டிக் கொண்டிருந்தார்.

“ஒரு சின்ன விஷயம் இதைக்கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா… அவள் கமிஷ்னரை பார்க்கலாம் அது இதுன்னு சொல்றாள். நான் கண்டுக்காம விட்டாலும், அவளே நேரா போய் சொல்லுவா போலிருக்கு. அந்த கமிஷ்னரும் நேர்மையானவன். நமக்கு பணியமாட்டான்.

இதனை தீர்க்க ஒரே வழி அவளை போட்டுத்தள்ளுறது தான்” என்றார்.

அவர் சொல்லியதில் ரித்தேஷ் அவரை அதிர்ந்து பார்க்க… அவர்களுக்கு முன் இருக்கையில் அமர்ந்து அதுவரை ராயப்பன் ரித்தேஷிடம் கத்துவதை அசட்டையாக பார்த்திருந்த விவாஷ் ராயப்பனை நம்பாத பார்வை பார்த்தான்.

கதவிற்கு அருகில் பேச்சுக்குரல் கேட்டு அப்படியே நின்று கவனித்த அமிர்தாவின் இதயம் சுக்கு நூறாக வெடித்தது. அன்றைய நாளின் அதிர்ச்சி தாங்காது கண்ணில் நீர் வடிய கீழேயே மடங்கி அமர்ந்தாள்.

“என்னடா அப்படி பார்க்குற. செய்யமாட்டேன் நினைக்குறியா?” என தன் மகனிடம் கேட்டவர்,

“இதுநாள் வரை அவளை சீராட்டி வளர்த்தது இந்த சொத்து ஆஸ்திக்காகத்தான். ஒரு கையெழுத்து வாங்கிக்கிட்டு போட்டுத் தள்ளிடலாம்” என்று குரூரமாகக் கூறினார்.

ரித்தேஷ் வேண்டாம் என்று மறுக்க…

“அவளால ஜெயிலுக்குத்தான் போகணும்… போக ரெடியா? இதில் வரும் பணத்தை பார், காதலெல்லாம் பின்னால ஓடிடும்” என்றார் ராயப்பன்.

அப்போதும் இறுதியாக ஒருமுறை அவளிடம் பேசி பார்க்கலாமென ரித்தேஷ் கூற… அவனை மேலும் கீழுமாக அளவிட்ட ராயப்பன்,

“நான் சொல்றதுக்கெல்லாம் மறுப்பு பேசாது நீ தலையாட்டுவன்னு தான், அந்த பாரியை வேண்டான்னு சொல்லி உனக்கு அவளை கல்யாணம் செய்து வைத்தேன். அவனை கல்யாணம் செய்து கொடுத்திருந்தால் இந்நேரம் நம்ம நிலை என்னவோ” என்றதோடு, “நீ ரொம்ப யோசிக்கிறதை பார்த்தால் அவளோட சேர்த்து உன்னையும் போட்டுத் தள்ளணும் போலவே” என அவர் நாடியை தடவ ரித்தேஷ் வேகமாக அவருக்கு உடன்பட்டான்.

மூவரும் அறையைவிட்டு வெளியில் வர… அங்கிருந்து ஓடிவந்தவள் தன்னுடைய அறைக்குள் புகுந்து கதவினை சாத்தி அதிலேயே சாய்ந்து நின்றாள். தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.

என்ன தான் ராயப்பன் கொன்றுவிடுவதாக சொன்னாலும், அவரால் தன்னை கொலை செய்ய முடியாதென்றே அமிர்தா நம்பினாள்.

ஆனால் அவளின் நம்பிக்கை பொய்த்து போகப்போவதை அவள் அறியவில்லை.

அவர்கள் அருகே வந்துவிட்ட அரவம் கேட்டதும்… தன்னிடமிருந்த புகைப்படங்களை வார்ட்ரோபிற்கு மேலே தெரியாதவாறு வேகமாக மறைத்து வைத்தவள் அதன் முன்னிருந்த சிறு இருக்கையில் அமர்ந்து… அதிலிருந்த கண்ணாடியை பார்த்து தலைவாறுவதைப்போல் தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டாள்.

மூவரும் அறைக்குள் நுழைவதை கண்ணாடியின் வழியே பார்த்த அமிர்தா, பார்க்காத்தைப் போலவே தன்னுடைய குழலில் கவனமாக இருந்தாள்.

உள்ளுக்குள் அத்தனை பயம். நா வறண்டு தொண்டை அடைத்தது.

ரித்தேஷ் கதவருகே நின்றுகொள்ள…

ராயப்பன் அவளுக்கு அருகில் ஒரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்து அவளின் தலையில் கை வைத்தார்.

அமிர்தாவிற்கு ராயப்பன் தன் தலையில் ஆதுரமாக கை வைத்தது போல் தான் இருந்தது.

ஆனால் அவளின் நினைப்பு அடுத்த இமைப்பொழுதில் பொய்யென்றானது.

அமிர்தாவின் தலையில் கை வைத்தவர் அப்படியே அழுத்தம் கொடுத்து… அவளுக்கு முன்னிருந்த கண்ணாடியில் முட்டினார்.

வார்ட்ரோப் உயரத்திற்கு அதில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி சில்லு சில்லாக சிதறியது.

முன் நெற்றியில் குருதி வழிய…

“அப்பா” என்று அதிர்வாக ஏறிட்டாள்.

“யாருக்கு யார் அப்பா? அவர் என்னோட அப்பா!” வேகமாக எழுந்த விவாஷ்  அமிர்தாவின் முதுகில் காலை வைத்து உதைத்து தள்ளினான்.

கீழே குப்புற விழுந்தவள் அந்நிலையில் தலையை மட்டும் திருப்பி வாயிலில் மரம் போல் நின்றிருந்த ரித்தேஷை உணர்வற்று பார்த்தாள். கேள்வியாய் விழிவீச்சில் தாக்கினாள்.

ரித்தேஷின் முகத்தில் அவனது காதலுக்கு ஆதாரமாக சிறு வேதனை மட்டுமே. அதை தாண்டி அவளை காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் துளியும் இல்லை. அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாது தன்னுடைய பார்வையை நிலம் தாழ்த்தினான்.

அந்நொடி அமிர்தாவினுள் தோன்றியது…

‘இது தான் உன் காதலா? அந்த காதல் மட்டும் இல்லையென்றால், நான் உனக்கு மனைவியாகியிருக்க மாட்டேன். உன்னுடைய மறு பக்கம் தெரிந்து கொண்டிருக்கமாட்டேன். இந்நிலையில் வந்து நின்றிருக்கமாட்டேன். பாவிகளின் கையால் உயிர் துறக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டேன்.

தப்போ சரியோ நான் கொண்ட காதலை நிறைவேற்றிக்கொள்ள முயன்றிருந்தால்? காதல் இல்லாத போதும்… சொன்ன வார்த்தைக்காக என்னை கைவிடக் கூடாதென்று நினைத்த பாரியை எளிதில் விட்டிருக்கக்கூடாதோ?

என் காதலை ஏற்றுக்கொண்டதற்காக மட்டுமே என்னை தவிக்க விட்டுவிடக்கூடாதென்று அத்தனை முயன்ற பாரி எங்கே? காதலென்று அனு தினமும் அன்பை பொழிந்தவன் பணமென்றதும் தன்னுடைய மரணத்தையே வேடிக்கை பார்க்கும் ரித்தேஷ் எங்கே?’

அமிர்தாவால் ஒப்பிட்டு பார்க்காது இருக்க முடியவில்லை. ரித்தேஷ் இடத்தில் பாரியை வைத்து பார்த்து உள்ளம் குமுறினாள்.

அந்நொடி ஒரு கணவனாக ரித்தேஷ் பெரும் அடி வாங்கினான்.

எழ முயலாது அப்படியே தரையோடு கிடந்த அமிர்தாவை இழுத்து தூக்கிப்பிடித்து, மீண்டும் இருக்கையில் அமர வைத்தான்.

இரு அடிகளுக்கே அவள் துவண்டிருந்தாள்.

துக்கம் தொண்டையை கவ்வி பிடித்திட… நீர் அருந்த வேண்டும் போலிருந்தது.

“இறுதியா நீ உயிரோடிருக்க உனக்கொரு வாய்ப்பு” என்ற விவாஷின் முகத்தை அப்போது தான் உற்று நோக்கினாள்.

‘இவனுக்கு அவர் அப்பாவா?’ அவன் அவரை அப்பா என்று சொன்னதன் பொருள் அவளுக்கு விளங்கவில்லை.

“இதில் கையெழுத்து போடு.” ராயப்பன்  அவள் மேலேயே பத்திரங்களை தூக்கி எறிந்தார்.

“முடியாது.”

“இப்போ நீ போடலன்னா உன்னை கொன்னுடுவேன்.” விவாஷ் அவளின் கழுத்தை நெறித்தான்.

“போட்டாலும் என்னை கொலை பண்ணத்தான் போறீங்க.”

“நாங்க உள்ள வரும் போதே கவனிச்சேன், எங்களை பார்த்ததும் உன்கிட்ட சின்ன சலனமோ பதட்டமோ எதுவும் இல்லை. அப்போ உனக்கு எங்க நோக்கம் தெரிஞ்சிருக்கு… ரைட்?” விவாஷ் நிதானமாக அவளை நெருங்கி… இரு பக்கமும் கை குற்றி அமிர்தாவின் முகத்திற்கு நேரே தன் முகத்தை கொண்டு சென்றான்.

அப்படியொரு பழியுணர்வு அவனது கண்களில்.

“கையெழுத்து போடு” என்று அமிர்தாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அடிவாங்கிய கன்னத்தை கையால் பொத்தியபடி, கண்கள் தேங்கிய நீரை இமை தாண்டி வெளிவிடக் கூடாதென்ற அழுத்தத்துடன் ராயப்பனை பார்த்தாள்.

“அங்க என்னடி பாக்குற?” என்ற விவாஷ் அவளின் கன்னம் பற்றி, “அவர் என் அப்பா. அவருக்கு மகன் நானும் மகள் என் தங்கையும் இருக்கோம். நீ அவருக்கு வேண்டாம். உன்னை மக(ள்)ன்னு சொல்லக்கூட அவருக்கு விருப்பமில்லை. அதனால் தான் உன்னை அவர் எங்கயும் அடையாளபடுத்திக்கல” என்றான்.

‘தன்னுடைய தந்தைக்கு இன்னொரு குடும்பமா?’ மனம் விட்டு போனது.

தனக்கென யாருமில்லை. இந்நிலையில் உயிருடன் இருப்பதற்கு இறப்பதே மேல் என்று எண்ணினாளோ இறுதியாக ஒருமுறை ராயப்பனை “அப்பா” என்று அழைத்தாள். கலங்கிய குரலில்.

“நீயென்னை அப்படி கூப்பிடாத. என் பிள்ளைங்களால வெளிப்படையா கூப்பிட முடியாத நிலையில நீ என்னை உரிமையா அழைக்கும் போதெல்லாம் அப்படியே பத்திக்கிட்டு எரியும். உன்னை இத்தனை வருஷம் சகித்துக் கொண்டதே இந்த ஆஸ்திக்காக மட்டும் தான். என் காதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் தான் என் மகன், மகள். நீ பிறந்ததே இந்த சொத்து என் கை சேர்வதற்குத்தான்.

உன் அம்மாவோட ஆசையா குடும்பம் நடத்தி பிறந்தவள் இல்லை நீ. பணம், பணம்… இவ்வளவு பணம், செல்வம், அரசியல் இதெல்லாம் எனக்கு கிடைக்க… ஒரு வெறியில் உதித்த பிண்டம் அவ்வளவு தான். நீ உதிக்க மட்டுமே நான் காரணம்” என்று தன் ஒட்டு மொத்த குரூர எண்ணத்தையும் வாய் வார்த்தையாகக்கூறி மனதால் அவளை மரிக்கச் செய்தார்.

உயிரை கொல்வதைக் காட்டிலும் மனதை வதைப்பது பெரும் வலியல்லவா. அவர்களின் முன் அழுது வலியை கரைக்கக்கூட அவளுக்கு வழியின்றி போனது.

“கையெழுத்து போடு.” அவளின் முன் மீண்டும் பத்திரங்களை வைத்தார்.

‘உலகமே எதிராக தெரிந்த பின்னர் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது’ உள்ளுக்குள் எடுத்த வலியோடு வேகமாக கையெழுத்து போட்டு காகிதத்தை ராயப்பனின் முகத்தில் விட்டெறிந்தாள்.

“ஏய் என்ன திமிரா?” ராயப்பன் கொதித்து எழ…

“பிச்சை போடுறவங்களுக்கு கொஞ்சம் திமிர் இருக்கத்தானே செய்யும்.” சற்று மிடுக்காகவேக் கூறினாள்.

இதெல்லாம் ரித்தேஷுக்கும் புதிது. காப்பாற்றும் எண்ணம் இல்லையென்றாலும், அதிர்ச்சியில் நடப்பதை அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

“அவ்வளவு திடமா நீ. அழ மாட்டியோ” என்ற விவாஷ்… அமிர்தாவின் கன்னங்களை மாற்றி மாற்றி அறைந்தான். அவனுக்கு வலிக்கும் வரை அறைந்து கொண்டே இருந்தான். தன் தந்தைக்கு இன்னொரு மகள் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டதிலிருந்து அவனுள் காரணமின்றி முளைத்த ஒட்டு மொத்த கோபத்தையும் தன் அடியில் தீர்த்துக்கொள்ள முயன்றானோ. அவளின் அசாராத திடமான பார்வையில் வெறிகொண்டு அடித்தான். அவளின் உதடு கிழிந்து ரத்தம் வரும் வரை அடித்தான். அப்போதும் அவளின் கண்ணீர் கண்களை தாண்டவில்லை.

“எவ்வளவு ஏத்தம்டி உனக்கு” என்ற விவாஷ் அமிர்தாவின் நெஞ்சிலே கால் வைத்து கீழே தள்ளினான்.

தலையில் பட்ட அடியில் அவள் முகம் சுருக்க…

அமிர்தாவின் கழுத்தில் ஷூ காலை வைத்து அழுத்தினான்.

“உன் முகத்தில் இந்த வலியை பார்க்கும் போது அப்பா இல்லாத பசங்கன்னு கேட்ட பேச்சோட வலியெல்லாம் பறந்து போகுதுடி. அதான் உன்னை நானே கொல்லப்போறேன்” என்ற விவாஷ் அமிர்தாவின் உடலிலிருந்து கண்கள் சொருக… தொண்டையில் அழுத்தம் கூடி, மூச்சடைத்து உயிர் போன பின்னும் மிதித்துக்கொண்டே இருந்தான்.

அமிர்தாவிற்கு இறுதி நொடிகள் முழுக்க ரணமாக வலியோடு கழிந்தன. அவை யாவும் உடல் வலியல்ல. மனவலி.

மன வலியோடு உயிர் துறப்பது எத்தனை கொடுமையானதென்று, பார்த்துக்கொண்டிருந்த ரித்தேஷிற்கு அத்தனை புரிந்தது. இறுதிவரை அவளிடமிருந்த திடம் அவனை அசைத்துப் பார்த்தது.

ரித்தேஷ் கணவனாகவுமில்லை. காதலனாகவும் இல்லை. பணம் அனைத்தையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பது ரித்தேஷ் விடயத்திலும், ராயப்பனின் விடயத்திலும் உண்மையானது.

அமிர்தா இறந்ததை உறுதி செய்தவர்கள், உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்து, குளியலறை வாயிலில் வழுக்கி விழுந்து அருகே இருந்த கட்டில் முனையில் நெற்றி முட்டி பின்பக்கமாக சரிந்து பின்னந்தலை தரையில் பலமாக அடித்து இறந்ததைப்போல் முதலில் செட் செய்தவர்கள் அதில் மாட்டிவிடும் அபாயம் இருப்பதாக உணர்ந்தவர்கள், சீலிங்கில் ஒரு கயிற்றை தொங்கவிட்டனர்… அங்கிருந்த மேசை மீதிருந்த கத்தியை எடுத்து அவளின் கையாலே பிடிக்க வைத்து மற்ற கையின் மணிக்கட்டினை கிழித்து , கத்தியை அருகிலே போட்டனர். திறக்கப்படாத விஷபாட்டிலை எளிதாக கண்ணில் படும்படி வைத்துவிட்டு, உட்பக்கமாக அறையை பூட்டிவிட்டு, அவ்வறையின் குளியலறை வழியாக அதன் பக்கத்து அறைக்கு சென்று அதன்வழி ஒன்றும் நடவாததைப்போல் வெளியில் சென்றிருந்தனர்.

மறுநாள் வெகுநேரமாகியும் அமிர்தா வெளியில் வராததால் கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதைப்போல் சென்ற ராயப்பன், அங்கு தன்னால் ஜோடிக்கப்பட்ட காட்சியை முதல்முறை பார்ப்பது போல் அதிர்ந்து நின்றார். அந்நிலையிலும் தன்னால் உருவாக்கப்பட்ட கதை மற்றவர்களால் ஏற்கப்பட வேண்டுமென எதையும் தொடாது… குறிப்பாக இறந்து கிடக்கும் மகளின் உடலை தொட்டு அழக்கூட செய்யாமல்… வெளியில் வந்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

வந்தவர்களும் அறையை நோட்டமிட்டுவிட்டு… அங்கு தொங்கும் கயிறு, அமிர்தாவின் அருகில் கிடந்த கத்தி, விஷபாட்டில், தூக்கமாத்திரை குப்பி, என அனைத்தையும் ஆராய்ந்து ராயப்பன் ஜோடித்த காட்சிக்கு தெளிவாக திரைகதை எழுதினர்.

‘தற்கொலை முயற்சிக்கு பல வகைகளில் அமிர்தா முயற்சித்திதாகவும்… இறுதியாக கையை கிழித்துக்கொண்டதாகவும், அதன் விளைவாக அதிக ரத்தம் வெளியேறி மயங்கி விழும் நேரம் கட்டில் முனையில் முட்டி பின்னால் விழ, தலையில் அடிபட்டு உயிர் பிரிந்தது. இது முழுக்க முழுக்க தற்கொலை தான்.’

காவல்துறையின் ரிப்போர்ட்டை பார்த்து ராயப்பன் தன்னையே மெட்சிக்கொண்டார்.

தன் பக்கம் எவ்வித சந்தேகமும் வந்துவிடக் கூடாதென அமிர்தாவின் உடலை கட்டிக்கொண்டு அழுதபடியிருந்த ரித்தேஷ் நடந்ததை நினைத்து தனக்குள் ஒரு கணக்கை போட்டான்.

‘பெற்ற மகளையே சிறிதும் தயக்கமின்றி கொலை செய்திட முடிவெடுத்த ராயப்பன், பின்னாளில் தன்னையும் ஏதும் செய்ய துணியமாட்டான் என்பதில் என்ன நிச்சயம்’ என நினைத்த ரித்தேஷ் அமிர்தாவின் அறைக்குள் நுழைந்தது முதல் அங்கு நடந்த யாவற்றையும் தன்னுடைய அலைபேசியில் காணொளி காட்சியாக பதிவு செய்திருந்தான். அதனை லிங்க வடிவ பெண்ட்ரைவில் சேமித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். பின்னாளில் அதை வைத்து ராயப்பனை ஆட்டுவிக்க நினைத்தான்.

அதையே முதலில் பூ பார்த்து திடுக்கிட்டுப்போனாள். பாரியிடமும் காண்பித்தாள்.

இருவருக்குமே அமிர்தாவின் இறுதி நொடியை காண்கையில் கடினமாகத்தான் உணர்ந்தனர்.

இருப்பினும் அக்காட்சி பதிவிலும் அவர்கள் அங்கிருந்து எப்படி அவர்கள் வெளியேறினர் என்பது இடம்பெறாததால் அதையும் சத்யாவை கண்டறிய பாரி கூறியிருந்தான்.

இரு அறைக்கும் பொதுவாக இருந்த குளியலறையைப்பற்றி சத்யா தான் பாரியிடம் சொல்லியிருந்தான். பாரி கேட்டுக்கொண்டதன்படி சத்யா ராயப்பனின் வீட்டிற்கு இரவில் வந்து கண்டறிந்த விடயம் அது.

*****

பாரி இன்று நடந்திருக்கும் கடத்தல் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தான். அதற்கு உதவியாக இருந்தது அமிர்தா. அவள் மறைத்து வைத்துச் சென்றிருந்த புகைப்படம். அதன் பின்னாலிருந்த தேதி மற்றும் இடம் வைத்து முழுக்க முழுக்க வைரங்கள் பதிக்கப்பட்ட சிலை கடத்தப்படப்போகிறது என்பதை தெரிந்து கொண்டிருந்தான்.

தெரிந்தும் தடுக்க நினைக்கவில்லை. தவறை செய்ய வைத்து மாட்ட வைக்க திட்டம் போட்டான். அதற்கு துணை நின்றது, அன்றைய இரவில் ஹோட்டலில் விவாஷும், நீபாவும் பேசியதை சர்வரின் உதவியோடு ரெக்கார்ட் செய்திருந்தான். அதில் பாரிக்கு கிடைத்த தகவல்…

கடத்தப்பட்ட சிலை எங்கு எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது.

அதில் விவாஷ் பேச்சு வார்த்தையோடு நின்றுகொள்ள… நீபா தான் பொருளுடன் சென்று கைமாற்றி பணம் பெற்று வருவாள். பெண் என்றால் எளிதில் சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்பதை சாதகமாகப் பயன்படுத்தினர். ஆனால் இம்முறை தொகையை உயர்த்துவதைப்பற்றி பேச நீபாவுடன் விவாஷும் செல்வதாக இருக்க… இருவரையும் கூண்டோடு பிடிக்கவே சிலை கடத்தலை தடுக்காது இருந்தான்.

பாரியின் எண்ணப்படி சிலை களவாடப்பட்டது. முழுவதும் பழங்கால ராஜ வம்ச வைரங்கள் பதிக்கப்ட்ட அந்த சிலைக்கு டிமாண்ட் அதிகம் என்பதால் அன்றே அதனை கைமாற்ற திட்டம் வைத்தனர்.

இப்போது அவ்விடத்திற்கு தான் ஜென்னை அனுப்பி வைத்துவிட்டு, சத்யா மற்றும் கமிஷனருடன் வந்த பாரி குமாரின் முன்னிலையில் அனைவரையும் கையும் களவுமாக கைது செய்து அவரிடமே ஒப்படைத்திருந்தான். அந்த இடம் நீபாவின் மென்பொருள் நிறுவனம். மேலே மென்பொருள் நிறுவனம் கண்துடைப்பிற்காக. அதன் அடியில் கடத்தல் தொழில். அதுவே அவர்களின் முதன்மை தொழில்.

“உன்னை அன்னைக்கு விட்டதுக்கு இதுதாண்டா காரணம்.” சொல்லிய பாரியிடம் தன் கோபத்தை காட்ட முடியாத கையறு நிலையில் தலை கவிழ்ந்து நின்றான் விவாஷ்.

இப்படி மாட்டுவோம் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

தன் பிடியிலிருந்த நீபாவை முடிந்த மட்டும் ஜென் முறைத்து வைத்தாள். அதற்கான காரணம் நீபாவிற்கு தெரியவில்லை. ஆனால் தெரிந்த பாரிக்கு அந்நிலையிலும் சிரிப்பு வந்தது.

அடுத்த சில நிமிடங்களில் கமிஷனர் அலுவலகம் வந்து சேர்ந்தனர். சிலை உரிய இடத்தில் சேர்பிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற மக்கள் போராட்டமும் சீர் பெற்றது.

தான் இவ்வழக்கு விடயத்தில் கைது செய்த நபர்களோடு சேகரித்த ஆதாரங்கள், அவை எந்த வகையில் உதவியாக இருந்தன என்ற விளக்கங்களையும் தெளிவான குறிப்பாக சேர்த்து… ரித்தேஷிடமிருந்து கிடைத்த காணொளி பதிவு… அத்தோடு தன் வீட்டிலே புகுந்து தன்னை கொலை செய்ய முயற்சித்த காணொளி பதிவு ஆகியவற்றையும் குமாரிடம் ஒப்படைத்தான். ரித்தேஷின் வீட்டில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால பொருட்களையும் கணபதி மூலம் வரவைத்து ஆணையரிடம் சேர்பித்தான்.

‘கடத்தலில் அதிக பங்கு ராயப்பனுக்குத்தான்… ஆனால் அவன் இதில் மாட்டும்படி ஆதாரம் இல்லையே’ என குமார் கேட்டிட,

விவாஷ் ஆசுவாசம் அடைந்தான். அது அவனுக்கு சில நொடிகள் கூட நீடிக்கவில்லை.

கடத்தல் பொருள் கைமாறும் போது தொழில்முறை சந்திப்பு என்ற அடிப்படையில் அவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குமாரிடம் கொடுத்தான் பாரி.

அதில் ராயப்பன், ரித்தேஷ், கவுன்சிலர் உட்பட அவர்களது குழு நபர்கள் அனைவரும் இருந்தனர்.

அதனை கண்ட விவாஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிய…

“உன் மொபைலில் இருந்து தான் எடுத்தேன்” என்று விவாஷின் அலைபேசியையும் ஆணையரிடம் கொடுத்தான்.

நீபாவின் அருகில் வந்த பாரி…

“இவங்களோட கம்பெனியையும் இழுத்து மூடி சீல் வைக்கணும் சார். அதற்கு காரணம் கடத்தல் பரிமாற்றம் நடைபெறும் இடம் அப்படின்னு குறிப்பிடுங்க” என்றான் குமாரிடம் அவளை பார்த்துக்கொண்டே!

“நாட்டுக்கு புறம்பான காரியமெல்லாம் செய்துக்கிட்டு, ராணுவத்துக்கு உதவியா இருக்கும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கும் செயலியை வடிவமைக்கும் போட்டியில் நீ?” என நீபாவிடம் கேட்ட பாரி… “இப்போ உனக்கு அந்த கம்பெனியே இல்லை” என்றான்.

அடுத்து அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில்…

“உனக்கு என் அவி கேட்குதா? உன்னை மாதிரி பொண்ணுக்கெல்லாம் என் அவி நிழலை நெருங்கக்கூட தகுதி இல்லை” என்று அடிக்குரலில் சீறினான்.

மொத்தமாக அனைத்தையும் குமாரிடம் ஒப்படைத்த பாரி… விவாஷ் மற்றும் நீபா யாரென்றும், அதற்காக சத்யா கண்டறிந்த சாட்சியங்களையும் சேர்த்து கொடுத்தான்.

“நான் வந்த வேலை முடிந்தது. இரண்டு வழக்கையுமே முடிச்சிட்டேன். அதற்கான எல்லா ஆதாரங்களும் உங்ககிட்ட கொடுக்கிறேன். இதை வச்சு என்ன செய்யணுமா அது இனி உங்க பொறுப்பு. நான் என் கடமையை சரியா செய்து முடிசசிட்டேன்” என்று கம்பீரமாக மொழிந்தவன் மிடுக்காக சல்யூட் வைத்தான்.

“வெல்டன் பாரி. ரொம்ப ஷார்ட் டைமில், யூ டன் அ கிரேட் ஜாப்” என்ற குமார்…

“செக்ரி உன்னைப்பற்றி பெருமையா சொல்லும்போதுகூட நான் நம்பல பாரி. இப்போ எனக்கே பெருமையா இருக்கு” என்று மனம் திறந்து பாராட்டினார்.

“ஓகே சார் நான் வந்த வேலை முடிஞ்சுது கிளம்பட்டுமா?” என்று பாரி கேட்க…

“ஹேய் அதான் நீ பூவோட சேர்ந்துட்டதான? அப்புறம் எங்க போற” என்று ஜென் அதிர்ந்து கேட்டாள்.

அவளின் பதற்றத்தில் சத்தமாக சிரித்த பாரி… “இங்க இருந்து… ஐ மீன் ஆபிசிலிருந்து போறதைப்பற்றித்தான் சொன்னேன். அடுத்த ட்ரான்ஸ்ஃபருக்கு குறைஞ்சது ஆறு மாசமாவது வேணும் ஜென். நான் வந்தே ஒரு மாசம் தான் ஆகுது” என்றான்.

அப்போதுதான் ஜென்னிற்கு அப்பாடா என்றானது. எங்கே அவன் சொல்லியதைப்போல் வந்த வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவானோ என ஒரு நிமிடம் ஜென் ஆடிப்போய்விட்டாள்.

“ஓகே சார், அம் லிவிங்” என்று பாரி சொல்ல…

“நீ இங்க இப்படியே கன்ட்னியூ பண்ணலாம். இல்லைன்னா உன் விருப்பம் என்னவோ அதுக்கு நான் உதவுறேன்” என்றார் குமார்.

“தேவைப்பட்டால்…” என்றவன் புன்னகையோடு விடைபெற்றான்.

அவனுடன் வந்த ஜென்…

“அப்போ நீ அமிர்தா கேஸுக்காக இங்க வரலையா?” என வினவினாள்.

இல்லையென தலையசைத்தவன்… “பட் நானே எதிர்பார்க்கல நான் வந்த கடத்தல் கேஸுக்கு லீடா அமிர்தாவே இருப்பான்னு” என்றான்.

“அவங்களுக்கு தண்டனை கிடைக்குமா பாரி?” ஜென் சந்தேகமாகக் கேட்டாள்.

அர்த்தமாக அவளை ஏறிட்ட பாரியிடம் புன்னகை மட்டுமே.

நம் நாட்டு சட்டத்திட்டத்தினையும் அதிலுள்ள ஓட்டைகளையும் காவல்துறை அதிகாரியாக தெரிந்திருந்த ஜென்னிற்கு பாரியின் புன்னகைக்கான காரணம் தெளிவாக விளங்கியது.

சட்டங்கள் மக்களுக்காக அமைந்த காலம் போய் அரசியல்வாதிகளுக்காக பல்வேறு மாற்றங்கள் கொண்டு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

குற்றத்திற்கான அனைத்து ஆதாரங்களும் சரியாக இருக்கும் நிலையில்… ராயப்பன், ரித்தேஷ், விவாஷ், நீபா, கவுன்சிலர் ஆகியோருக்கான தண்டனை நீதிமன்றத்தின் கையில். (அவரவர் கற்பனைக்கே!)

அனைத்தும் முடிந்துவிட்டதென பாரி நினைத்திருக்க… இனிதான் ஆரம்பமென்று அவனுக்கு தெரியவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
43
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்