அத்தியாயம் 16
மறுநாள் காலையில், ஆதவன் உச்சிக்கு நெருங்கும் போது தான் லேசாக கண் விழித்தான் இனியன்.
எழுந்து அமரவே முடியவில்லை. அப்படி ஒரு தலை வலி அவனுக்கு.
நன்றாக அமர்ந்து, தெளிவாக கண்களை விரித்துப் பார்த்தவன் தான் எங்கு இருக்கின்றோம் என்று தான் முதலில் சுற்றிப் பார்த்தான்.
அது தன்னுடைய அறை என்று அறிந்த பிறகு, “இங்க எப்படி வந்தோம். ஒரு வேளை நம்ம போதையிலே வண்டி ஓட்டிட்டு வந்துட்டோமா.. இல்லை ஷில்பா அவ கொண்டு வந்து விட்டாளா..” என்று யோசிக்க, அவனுக்கு எதுவுமே புலப்படவில்லை.
“ச்ச.. நேத்து ரொம்ப ஓவரா போயிருச்சு. என்ன யோசிச்சாலும் ஒண்ணுமே நியாபகம் வரல..” என்று நினைத்தவனுக்கு இன்னொன்றும் தோன்றியது.
“நம்ம வீட்டுக்கு வரும் போது எந்த நிலைமைல இருந்தோம்னு வேற தெரியல. வீட்டுல என்ன பத்தி என்ன நெனச்சி இருப்பாங்க..” என்று நெற்றியை நீவியவன், “சமாளிச்சு தான் ஆகணும்.. ” என்று குளிக்கச் சென்றான்.
நன்றாக போதை இறங்க குளித்து விட்டு வந்தவன், கிளம்பி கீழேச் சென்றான்.
நேற்று மதியம் சாப்பிட்டது. அதனால் அவனுக்கு பசி நன்றாக எடுக்க, நேராக சாப்பாடு மேசைக்கு தான் சென்றான்.
அங்கே உட்கார்ந்து முன்னறையில் இருக்கும் தன் தாயைப் பார்க்க, அவரோ முகத்தை திருப்பிக் கொண்டார்.
“அய்யயோ.. நேத்து நம்ம பண்ண வேலைக்கு அவங்களோட எதிர்வினை போல தெரியுதே.. என்னனு சொல்லி சமாளிக்கிறது. தப்பு நம்ம மேலதான். ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுரலாம்..” என்று நினைத்தவன்,
“அம்மா… ” என்று அழைத்திட,
அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
“அம்மா.. ப்ளீஸ் ம்மா.. வாங்க ம்மா.. ரொம்ப பசிக்குது..” என்று சத்தம் போட்டு அழைக்க, அவர் வந்த பாடில்லை.
சாப்பாடு மேசையில் இருந்து எழுந்து, அவனின் தாயின் அருகினில் சென்று முட்டிப் போட்டு அமர்ந்து அவரது கையைப் பிடிக்க வர, அவரோ கையை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.
“ம்மா..” என்று சிணுங்களாக அழைத்தவன், அவரது கையை மீண்டும் இழுத்து பிடித்துக் கொண்டு,
“அம்மா.. நான் பண்ணது தப்பு தான். நேத்து கோவம்.. ஆத்திரம்.. டென்ஷன்.. அதான் இப்படி.. இனிமே இப்படி பண்ண மாட்டேன் ம்மா.. என் கூட பேசுங்க ம்மா.. ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.
இதுவரைக்கும் பேசாத அவர், இப்பொழுது வாயைத் திறந்து, “இது உனக்கு பழகிருச்சுனா, அப்போ திரும்பவும் உனக்கு அது வேணும்னு தோணும். அப்டியே பழகிரும்.. அப்புறம் அதுக்கு நீ அடிமையாகி கெடப்ப..” என்றார் ஆதங்கமாக.
“ம்மா.. அப்படி எல்லாம் ஆகாது ம்மா. இனிமே நான் இப்படி பண்ண மாட்டேன். இது தான் முதலும் கடைசியும். அது உங்க மேல ஆணை..” என்றான் மகன்.
“சரிப்பா.. வா சாப்பாடு போடுறேன். வந்து சாப்பிடு..” என்று அவனுக்கு பரிமாற, அவனும் உண்ண ஆரம்பித்தான்.
“தம்பி…” என்று அழைக்க,
அவனும் சாப்பிட்டுக் கொண்டே என்னவென்று கண்ணால் கேட்டான்.
” நீ தூங்கி எழுந்து வந்ததும் பரிதி உன்ன வர சொன்னான் ப்பா.. ” என்று சொல்லவும் அவனுக்கு சாப்பிட்ட உணவு புரையேறி, இருமல் வந்து விட்டது.
” டேய்.. பார்த்து டா.. மெல்ல சாப்பிடு..” என்று சொல்ல,
“எங்க மெல்ல சாப்பிட.. அதான் உங்க மூத்த மகன் கூப்பிட்டதா சொன்னீங்களே.. அப்புறம் சீக்கிரம் தான் போகணும்..”என்று அவசர அவசரமாக உண்டு முடித்து விட்டு, அண்ணனை காணச் சென்றான்.
“அண்ணா.. ” என்று அழைத்தவாரே அறைக்குள் நுழைய, அவனை எதிர் நோக்கி காத்து இருந்த பரிதியோ,
“உட்காரு..” அவன் அமர்ந்ததும், “நேத்து என்ன ஆச்சி உனக்கு. என்னைக்கும் இல்லாம புதுசா.. ஆள் நிதானமே இல்லாம குடிக்கிற அளவுக்கு.. ” என்று சற்று காட்டமாகவே கேட்டான்.
தம்பிக்காரனிடம் மௌனம்.
“சொல்லு… இனியா. கேக்குறேன்ல..” பரிதி கேட்டதற்கு,
ஒரு பெருமூச்சுடன், “தப்பு தான். அந்த சஞ்சய் மேல உள்ள ஆத்திரத்துல நான் இப்படி நடந்துகிட்டேன். இனிமே அப்படி நடக்காது ண்ணா..” என்றான்.
“அப்படி என்ன ஆத்திரம் உனக்கு..” என்று பொறுமையாக பரிதிக் கேட்க,
“அவன் தான் எல்லாத்துக்கும் காரணம் னு தெரிஞ்சி அவனை ஒன்னும் பண்ண முடியாத சூழ்நிலை இருக்குல்ல.. அதுனால தான் நேத்து என்னையும் மீறி நடந்துருச்சு. ” என்றான்.
“எல்லாத்துக்கும் னா..” நெற்றி சுருங்க யோசனையில் கேட்டான் பரிதி.
“நேத்து காயத்திரி கால் பண்ணா..” என்று ஆரம்பித்தவன், அவள் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.
“ஓஹோ.. அப்போ நம்ம ப்ராடக்ட்டை ஸ்டீபன் ரிஜெக்ட் பண்ணது கூட அவன் பார்த்த வேலையா தான் இருக்கனும். எப்படியும் நான் ஒன் வீக்ல ஆபீஸ் வந்துருவேன். அதுக்கு அப்புறம் அவனுக்கு என்ன பண்ணனுமோ நான் பார்த்துகிறேன். இந்த மாதிரி வேலை எல்லாம் இனி பாக்காத. நேத்து அம்மா உன்னால ரொம்பவே வருத்தப் பட்டாங்க. வைஷு மட்டும் கூட்டிட்டு வரலனா நீ நைட் முழுக்க அங்கேயே தான் இருந்து இருக்கனும்.” என்றான்.
“என்னது வைஷு தான் கூட்டிட்டு வந்தாளா என்ன..” என்று கேட்டான் தம்பிக்காரன்.
“ஆமா.. நல்ல வேலை அவகிட்டயாவது எங்க போனேனு சொல்லிட்டு போனியே. அது வரைக்கும் சந்தோசம்..” என்று பரிதி சலித்தபடிக் கூறினான்.
“ம்ம்ம்ம். சரிண்ணா. அப்போ நான் ஆபீஸ் கிளம்புறேன். போகும் போது நேத்து லேப் ல கொடுத்த சாம்பிள் க்கு இன்னைக்கு வரச் சொன்னாங்க. அதையும் போய் என்னனு பாக்குறேன். ” என்றவன் அண்ணனிடமும் அன்னையிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான்.
அவன் நேராக சென்றது என்னவோ பரிசோதனைக் கூடத்திற்கு தான்.
“வாங்க. Mr. இனியன்…” என்று அவனை அமர வைத்து விட்டு, அவனிடம், ” உங்களோட தோல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள்ல, அதிகமான அளவு சல்பேட் சேர்த்து இருக்காங்க. அது அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. உங்க தயாரிப்புகளை யூஸ் பண்ண பிறகு, அவங்களுக்கு தோலில் அரிப்பு, அப்புறம் சிவப்பா தடிப்பு தடிப்பா வரும். ” என்று விளக்கம் கொடுக்க,
“ஆனால் நாங்க சல்பேட் அப்படின்ற கெமிக்கல் யூஸ் பண்ணவே இல்லையே.. ” என்று அவன் வாதாட,
“என்ன சார்.. அவ்ளோ பெரிய பேக்டரி. உங்களுக்கு தெரியாம கூட யாராவது இதை மிக்ஸ் பண்ணிருக்கலாம். தெரிஞ்சி. பண்ணாங்களோ இல்லை தெரியாம பண்ணாங்களோ அது யாருனு என்னனு பாருங்க..” என்று அவர் கூற,
இப்பொழுது தான் அவனுக்கு மூலையில் பொறித் தட்டியது.
இதை எப்படி தான் யோசிக்காமல் விட்டோம் என்று.
அந்த சஞ்சய் அலைபேசியில் யாருடனோ பேசியதாக சொன்னாளே. காயத்ரி. ஒரு வேளை அவன் தான் நம் தொழிற்சாலைக்கு யாரையாவது அனுப்பி இருக்கலாம். என்று சரியாக யோசித்தான்.
“ஓகே சார். நான் கிளம்புறேன். இன்னொரு நாள் மீட் பண்ணலாம்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தவன் முதலில் அழைத்தது என்னவோ பரிதிக்குத் தான்.
இங்கு பேசிய அனைத்தையும் கூற, “நெனச்சேன். இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு.. ஓகே.. நான் மேனேஜர் கிட்ட பேசுறேன். நீ ஆபீஸ் க்கு கிளம்பு. வைஷு மட்டும் இருப்பா..” என்று அவனை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தான்.
அலுவலகம் வந்தவன் நேராக சென்றது என்னவோ வைஷுவை பார்க்கத் தான்.
அவளோ கணினியில் மும்மரமாக வேலை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வைஷு..” என்று அழைத்தபடி அவளின் அருகில் சேரைப் போட்டு அமர, அவளோ பக்கவாட்டாக திரும்பிப் பார்த்து,
“துரைக்கு போதை தெளிஞ்சிருச்சா..” என்று நக்கலாக கேட்டாள்.
“இங்க பாரு நீயும் ஆரம்பிக்காத. இப்போதான் அவங்க ரெண்டு பேரையும் சமாளிச்சிட்டு வந்தேன். நீ வேற ஸ்டார்ட் பண்ணாத. ” என்றான் சலிப்புடன்.
“நீ பண்றதை சொல்லிக் காட்டுனா, உனக்கு கோவம் வருதா. எதுக்கு முதல்ல அவ வீட்டுக்கு போன நீ.. அவளை பத்தி தான் உனக்கு தெரியுமே.. அப்புறமும் அவளைப் பாக்க போகணுமா. இன்னமும் அவ கூட நீ சகவாசம் வச்சிட்டு இருக்க. அது உனக்கு தான் ஆபத்து. அது உனக்கு புரியல.” என்றாள் சற்றுக் கடுப்புடன்.
” சரிடி.. இனி பார்த்துகிறேன்.. அப்புறம் தேங்க்ஸ்.. நேத்து நீதான் அழைச்சிட்டு வந்ததா அண்ணா சொன்னான்.. ” என்றதற்கு,
“ம்ம்க்கும்.. ” என்று உதட்டை சுழித்தபடி முகத்தை திருப்பி கொண்டாள்.
” ரொம்ப பண்ணாத.. சரி வா.. வெளிய போய்ட்டு வரலாம்.. ” என்று அவளை அழைக்க,
“இங்க ஒர்க் இருக்கு.. ரெண்டு பேரும் இல்லனா நல்லாவா இருக்கும். மாமா நம்மள நம்பித்தான் அங்க இருக்காரு. இப்படி பொறுப்பு இல்லாம இருக்காத. அதுனால தான் எங்க அம்மாவும் சரி உங்க அம்மாவும் சரி உனக்கு பொறுப்பு இல்லனு சரியாத்தான் சொல்றாங்க..” என்றாள் வைஷ்ணவி.
“அம்மாத் தாயே.. ஒரு அரை மணி நேரம் வெளிய போய் ஏதாவது சாப்பிட்டு வரத் தானடி கூப்பிட்டேன். அதுக்கு இவ்ளோ பேசுற.. போடி..” என்று அவளிடம் சொல்லி விட்டு, தனது அறைக்குச் சென்று விட்டான்.
அவன் செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தவள்,”ஆமா.. இவன் கூப்பிட்டா உடனே போகணுமா. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு தான் நம்மள தெரியுது.. போடா.. ” என்று சொல்லிவிட்டு, மீண்டும் விட்ட வேலையை தொடர ஆரம்பித்தாள்.
இங்கோ, நிரஞ்சனாவுக்கு, “மகாலிங்கம் காஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற கம்பெனியில் இருந்து அவளுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்து இருந்தது.
அதைப் பார்த்தப்படி மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருந்தாள்.
“விக்ரம்.. அக்கா க்கு, இன்டெர்வியூக்கு வரச் சொல்லி மெயில் வந்து இருக்குடா.. ” என்று தன் சந்தோசத்தை தம்பியிடமும் பகிற,
“சூப்பர் க்கா.. எப்படியும் செலக்ட் ஆகிருவ நீ.. என்னைக்கு வரச் சொல்லி இருக்காங்க..??” என்று கேட்டான் தம்பி விக்ரம்.
“ஃப்ரைடே வரச் சொல்லி இருக்காங்க..” என்றாள் நிரஞ்சனா.
“ஓ.. அப்போ ரெண்டு நாள் தான் இருக்கு.. சரி க்கா.. நான் என் ஃப்ரண்ட் வீட்டுக்கு போய்ட்டு வரேன். ஒரு அசைன்மென்ட் எழுதணும். ” என்று சொல்லிவிட்டு கிளம்பப் போனவனிடம்,
“டேய்.. ஜாக்கிரதை. சீக்கிரம் வந்துரு..” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
நித்தமும் வருவாள்…