Loading

அத்தியாயம் 37 :

முன் அதிகாலை நான்கு மணியளவில் பரிதி தன் குடும்பத்தோடு பாபநாசம் சென்று சேர்ந்திருந்தான்.

பாரி அரசுவிற்கு அழைத்து அங்குள்ள சூழலை விவரித்து அனைவரும் வருவதை சொல்லியிருக்க… அவர்கள் கிளம்பிய நேரத்தை வைத்து வரும் நேரத்தை கணித்து அரசு, மணி, தங்கம் மூவரும் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

வீட்டின் முன்பு பரிதி வண்டியை நிறுத்தியதும் உறக்கத்திலிருந்தவர்கள் விழித்து காரிலிருந்து இறங்க… இளாவின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த சின்னுவை வேகமாக வந்து தூக்கினார் மணி.

“வாங்க… வாங்க…” மூவரும் வந்திருப்போரை இன்முகமாய் வரவேற்று உள் அழைத்துச் சென்றனர்.

அனைவரும் இறங்கியதும்… காரிலேயே அமர்ந்திருந்த பூவிடம்,

“அவன் வொர்க் டென்ஷன்ல கத்தியிருப்பா தமிழ். ஃபீல் பண்ணாம இறங்கு” என்று ஆறுதலாக பேசினான்.

சின்னு மடியில் ஏதுவாக உறங்க இளா பின்னிருக்கையில் அமர, பரிதிக்கு அருகில் முன்னிருக்கையில் பூ அமர்ந்திருந்தாள்.

பாரியிடம் பூ பேசும்போது, பாரி கத்தியது அவளுக்கு அருகிலிருந்த பரிதிக்கும் தெளிவாகக் கேட்டிருந்தது.

“நான் அவனுக்கு எப்பவுமே தொல்லை தான் இல்லையா மாமா” என்று கேட்டவள், அழத் துடிக்கும் கண்களை இமை தட்டி சரிசெய்து கீழிறங்கினாள்.

அவளின்றி அவனில்லை என்று பாரி பேசிய வார்த்தைகள், காட்டிய காதல் உணர்வுகள் யாவற்றையும் இந்த ஒருநாளில் அவன் நடந்து கொண்ட முறையை வைத்து வசதியாக மறந்திருக்க… அவளின் மனமே அவளுக்கு எதிராகியது.

வீட்டிற்கு பின்னால் இருக்கும் ஷெட்டில் காரினை நிறுத்திவிட்டு வந்த பரிதி பாரிக்கு வந்துவிட்டதாக தகவல் அனுப்பிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

“என்னட்டி எம் பேரன் எங்க? வந்தால் அவனோடத்தேன் வருவேன்னு சொல்லிபுட்டு போன… இப்போ ஒத்தயில வந்து நிக்குறமாட்டிக்கு இருக்குது” என்று உர்ரென வீட்டிற்குள் நுழைந்த பூவை தங்கம் வம்பிழுத்தார்.

“அதை போன்னு துரத்திவிட்ட உம்ம பேரனுக்கே போன போட்டு கேட்டுகிடு” என்று சிடுசிடுவென மொழிந்து கால்களை தரையில் தட்டி தட்டி அழுத்தமாக வைத்தவாறு பூ உள்ளுக்குள் சென்றாள்.

“பதுவுசா நடட்டி… இது எம் புருசன் எனக்கு கட்டித்தந்த வூடு. நீயி நடக்குற நடையில தரை பொத்துக்க போவுது.”

“போவும் போது முந்தானையில கட்டி இழுத்துகிட்டு போராமாட்டிக்குத்தேன் நீயி அலும்பு பண்ணுவ… செத்த வாவ சாத்து. இருக்குற கடுப்பை உன் தலையில கொட்டிட போவுதேன்” என்று திரும்பி பதில் கொடுத்தவாறே பின்னால் நடந்தாள் பூ.

“உன் வாய்க்குதேன் எம் பேரன் தள்ளியே நிக்குதான்” என்று பூ பேசியதற்கு தங்கம் எதிர்பாராமல் சாதாரணமாக சொல்லிட… பூவின் கண்கள் குளம் கட்டிவிட்டது.

அதன் பின்னரே தங்கம் தன் வார்த்தையின் பொருள் உணர்ந்து..

“என் ஆத்தே… நான் என்னமாட்டிக்கும் விளையாட்டுக்கு பேசுனா… அதிப்படி வம்பு பேச்சா போச்சே… மன்னிச்சிக்கிடு கண்ணு. அர்த்தமில்லாம சொல்லிபுட்டேன்” என்று தங்கம் பூவிடம் மன்னிப்பை வேண்ட…

“என்ன அத்தை…

“என்ன பாட்டி…

“இப்படி சொல்லிட்டிங்க?”

அங்கிருந்த மற்றவர்கள் அவரை கண்டித்தனர்.

“அது வா தவறி…”

“ம்மா என்னம்மா இது, வந்த புள்ளைக்கிட்ட வம்பு பண்ணுத” என்று அரசு அடக்கிய பின்னரே தங்கம் பேச்சினை நிறுத்தினார்.

அனைவரும் பூவை பார்க்க அவள் அப்போதே அறைக்குள் சென்றிருந்தாள்.

மணி கருப்பட்டி போட்டு கடுங்காப்பி கொண்டு வந்து கொடுக்க… அந்நேர குளிருக்கு அது இதமாக அனைவரின் தொண்டையையும் நனைத்தது.

“இம்புட்டு தூரம் வந்தது செலாத்தல இருக்கும். கொஞ்சம் உறங்கி எழும்புங்க” என்ற அரசு அந்நேரத்திற்கே கிளம்பி தோப்பிற்கு சென்றுவிட்டார்.

செல்வதற்கு முன் பூவிடம் வம்பு பேசக்கூடாதென தங்கத்தை எச்சரித்தே கிளம்பினார்.

தில்லையும் பார்வதியும் ஒரு அறைக்குள்சென்றிட… சின்னுவைத் தூக்கிக்கொண்டு இளா தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

இளாவின் பின் சென்ற பரிதி… “தமிழை பார்த்துட்டு வரேன் இளா. நீ ரெஸ்ட் எடு” என்று சொல்ல,

“நீங்க அவளை ரொம்ப பேம்பர் பண்ணாதீங்க இளா(இளம்பரிதி)… ஒரு விளையாட்டு பேச்சைக்கூட தாங்கிக்க முடியாத அளவுக்கு வீக்கா இருக்கா(ள்). பாரி என்னவோ சொல்லிட்டான்னு வர வழி முழுக்க அழுதுகிட்டு வர்றாள்” என்று இளா கூறினாள்.

இளாவின் பேச்சிலிருந்த உண்மை பரிதிக்கும் புரியத்தான் செய்தது. வலியை அனுபவிக்க விட்டால் தான், அதனை எதிர்கொள்ளும் தைரியமும் தாங்கும் பலமும் மனதிற்கு கிட்டும்.

ஆனால் அவளை தனிமையில் அழ விட்டு அவனால் வேடிக்கை பார்க்க முடியாதே! அதனால் இளாவின் முறைப்பையும் பொருட்படுத்தாது பூவை பார்க்கச் சென்றான்.

“அவளை தனியா ஃபேஸ் பண்ண விட்டுடாதீங்க?”

இளாவின் குரல் பரிதியின் முதுகைத் தீண்டியது.

மெல்ல நின்று திரும்பியவன்…

“அதான் ஃபோர் இயர்ஸ் தனியாத்தானே ஃபேஸ் பண்ணாள்” என்றவன் இளாவின் நிஜமா என்கிற பார்வை புரிந்து… “உங்களை மாதிரி என்னையும் அவள் ஒதுக்கித்தான் வச்சிருந்தாள். ரொம்பவும் முடியலன்னு ஃபீல் பண்ணா மட்டும்தான் எனக்கு கால் பண்ணியிருக்காள்” என்றான்.

இளா அடுத்து பேசுவதைக் கேட்க பரிதி அங்கில்லை.

மூடியிருந்த பூவின் அறை கதவினை தட்டிவிட்டு உள்ளே சென்றான் பரிதி.

மெத்தையின் நடுவில் கால்களை கட்டிக்கொண்டு அதிலேயே முகம் வைத்து அமர்ந்திருந்தவளின் பார்வை அவ்வறையின் ஒருபக்கம் முழுவதும் ஆக்கிரமித்திருந்த அவளுடனான பாரியின் படத்தின் மீதே படிந்திருந்தது.

“குட்டிம்மா…”

பரிதியின் விளிப்பில் மெல்ல அவனை ஏறிட்டவள்… அவன் மெத்தையில் அமர்ந்ததும் அவனது மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

“பாட்டி சொன்னதுக்கா என் தமிழ் இவ்வளவு சோகமா உட்கார்ந்திருக்காள்?” பூவின் தலையை ஆதுரமாக வருடினான்.

“அவங்க சொன்ன மாதிரி நாங்க விலகித்தானே மாமா இருக்கோம். இதில் வருத்தப்பட ஒன்னுமில்லை” என்ற பூ… “அவன் என்னை எவ்வளோ விரும்புறான்னு மத்தவங்களுக்கு தெரிய வேண்டியதில்லை மாமா. இந்த கொஞ்ச நாளிலே எனக்கு மூச்சு முட்டுது. அவனோட காதல் என்னை திணற வைக்குது மாமா. இது எனக்கு மட்டுமே அவன் காட்டும் பக்கம். எனக்காக மட்டுமே. அது எனக்கு தெரிந்தால் மட்டும் போதும்” என்றாள்.

“அதான் இவ்வளவு தெளிவிருக்கே, அப்புறம் எதுக்கு கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?”

“அவனை விட்டு வந்தது ஒருமாதிரி இருக்கு மாமா. ஜென் ஏதோ சொல்ல வந்தாள், அவளை சொல்ல விடாம வேந்தன் மாத்தி பேசின மாதிரி இருந்தது. என்கிட்ட எதையோ மறைக்கத்தான் கோபமா பேசியிருக்கான்னு தோணுது.” பாரியை பிரிந்து வந்த வருத்தமென்று அவளின் பேச்சில் பரிதிக்கு புரிந்தது.

“தேவையில்லாம யோசித்து குழம்பிக்காத தமிழ்… அவன் அங்க நல்லாதான் இருப்பான்” என்ற பரிதி தட்டிக்கொடுத்தவாறே, “கொஞ்ச நேரம் தூங்குடா… மைண்ட் ரிலாக்ஸ் ஆனாலே பெரிய ப்ராப்ளம் கூட ஒன்னுமில்லைன்னு ஆகிடும்” என்றான்.

பரிதியின் பேச்சிலும், தட்டலிலும் அமைதியானவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல… அதன் பின்னரே பரிதி எழுந்து சென்றான்.

******

காவல் நிலையத்தில் இருந்தபடி என்னவெல்லாம் செய்திட முடியுமோ அத்தனையையும் பாரி துரித கதியில் செய்து முடித்தான்.

அத்தனை வலியிலும் அந்த ராயப்பனையும் அவனது கூட்டத்தையும் வெளியில் வர முடியாதளவிற்கு எப்படி உள்ளே தள்ள வேண்டுமோ அதற்கேற்றவாறு கட்டம் கட்டினான்.

தன் திட்டம் ஒவ்வொன்றையும் நடைமுறை படுத்திய பின்னரே சற்று ஆசுவாசமாக அமர்ந்தான். அப்போதுதான் கையின் வலியையே உணர்ந்து முகம் சுளித்தான்.

“என்னாச்சு பாரி?”

பாரியின் முகம் மாற்றம் கண்டு அவனருகில் அவி வேகமாக வந்திருந்தான்.

“டேய் நீ இன்னும் வீட்டுக்கு போகல…” அவியின் நினைவே பாரிக்கு இல்லை. அப்படி கேட்டவனை அவி வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.

“உன்னை இப்படி விட்டு எப்படி போவதாம்?” கேட்டவன் அவனின் கையில் வலி மாத்திரை ஒன்றை கொடுத்து விழுங்கச் செய்தான்.

“வேலை முடிஞ்சுதா கிளம்பலாமா?”

“நீ போ அவி…” என்ற பாரி, தன் புருவத்தை நீவியவாறு “வேண்டாம்… இன்னைக்கு ஒருநாள் நீ இங்கேயே இரு” என்றதோடு அவியை தனக்கு முன்னிருந்த இருக்கையில் அமர வைத்திட்டான்.

நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ஜென் பாரியிடம் வந்து… “இனியும் என்ன பயம் பாரி?” எனக் கேட்டாள்.

“இது பயமில்லை ஜென். முன்னெச்சரிக்கை” என்றவன் “கவனமாக இருப்பதில் தப்பில்லையே” எனக் கூறினான்.

“நிச்சயம் தப்பில்லை பாரி.” கமிஷனர் குமார் வந்திருந்தார்.

“பாரி இன்னைக்கு நியூஸ் பார்த்தியா?” என அவன் முன் செய்தித்தாளை வைத்தார்.

அதில் வந்திருந்த செய்தியை படித்தவன்…

“இப்போ இது சாதாரணம் ஆகிடுச்சே சார்” என சொல்லி கையிலெடுத்த செய்தித்தாளை அசட்டையாக மேசையில் போட்டான்.

“பாரி அந்த வில்லேஜ் உன் பகுதி எல்லைக்குள்ள தான் வருது. நீ பதில் சொல்லியே ஆகணும்.”

“ஆஹான்… சொல்லிடுவோம்” என்றவன் மணியை பார்த்துவிட்டு,

“உங்க ஃபிரண்ட் வராறு. பிக்கப் பண்ண போறேன் வறீங்களா?” எனக் கேட்டான்.

“பீ சீரியஸ் பாரி” என்று கடுமையைக் காட்டிய குமார், “அந்த வில்லேஜ் பீப்புள் ப்ரொடெஸ்ட் பன்றாங்க” என்றார்.

“ஜென் நீங்க அங்க போங்க… இன்னும் ரெண்டு மணி நேரத்துல அந்த கோவில் சிலை கோவில்ல இருக்கும் சொல்லுங்க” என்றான்.

நகரத்தின் வெளிப்புறத்தில் சற்று தள்ளிய கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் இருந்த மரகத சிலை காணவில்லை.

“இந்த மாதிரி ரீசெண்ட் டைமில் நிறைய நடக்குது பாரி… இதுவரை சின்ன க்ளூ கூட இல்லை. இப்போ உன் சரவுண்டிங் வில்லேஜில் நடந்திருக்கு. நீயாவது ஸ்டெப் எடுத்து நிறுத்துவன்னு உன்கிட்ட சொன்னா, ரொம்ப அசால்ட்டா ஜென்னை அனுப்பி வைக்குற. இதை உன்கிட்ட நான் எதிர்பார்க்கல பாரி” என்று அதிருப்தியாகக் கூறினார் குமார்.

அவரின் வார்த்தைக்கு பின் ஜென் அங்கு செல்ல தயக்கம் காட்டினாள்.

“பாரி…?”

“சொல்றதை செய்யுங்க ஜென்சி” என்று அழுத்தமாகக் கூறியவன்…

“இன்னும் ஒன் ஹவரில் உங்களை உங்க ஆபீசில் மீட் பன்றேன் சார்” என்று குமாரிடம் சொல்லியதோடு அவியை அழைத்துக்கொண்டு விமானநிலையம் சென்றான்.

“இங்க யார் பாரி வராங்க?”

“சொன்னாதான் கூட வருவியா?” என பாரி கேட்டதில் அடுத்து விமான நிலையம் சென்ற பின்னர் கூட அவி பாரியிடம் எதுவும் கேட்கவில்லை.

அங்கு வந்திறங்கிய செக்ரி மற்றும் கோதையை வரவேற்ற பாரி, அவியை தன் நண்பன் என்று அறிமுகம் செய்து வைத்ததோடு…

“நீங்க தங்கப்போகும் வீடு இவனோடது தான்” என்றான்.

அவி புரியாது செக்ரியின் பார்வைக்கு சிரித்துக்கொண்டே எல்லா பக்கமும் தலையாட்டினான்.

“என்ன பாரி கையில கட்டு?” கோதை வினவினார்.

“சின்ன ஆக்சிடண்ட்” என்று மட்டும் சொல்லியவன், “எனக்கு ரொம்ப முக்கிமான வேலை ஒன்னு இருக்கு சார். நீங்க வந்தா வீட்ல விட்டுட்டு நான் கிளம்புவேன். எனக்கு டைம் இல்லை” என்று வேக வேகமாக அவர்களை அவியின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு அவர்களுக்கு உதவியாக அவியை அவர்களுடனே நிறுத்தி… பார்த்துக்கொள்ளுமாறு அவியிடம் சொல்லியவன் நிற்காமல் சென்றுவிட்டான்.

பாரி நேராக சென்றது சத்யாவின் அலுவலகத்திற்கு.

பாரியை அந்நேரத்தில் சத்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும், பாரி முன்தின இரவே உடனே வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் வேண்டுமெனக் கேட்டிருந்த அனைத்து தகவல்களையும்  தயாராக அப்போதுதான் எடுத்து வைத்து முடித்தான்.

“இட்ஸ் எவ்ரிதிங் ஓவர் சத்யா. இப்போவே இதை முடிக்கணும்” என்ற பாரியிடம்… சத்யா தான் சேகரித்த தகவல்கள் அடங்கிய கோப்பினைக் கொடுத்தான்.

“நியூஸ் பார்த்தியா சத்யா?”

“அந்த மரகத சிலை தான” எனக்கேட்ட சத்யா… மேலும் சில தகவல்களை கொடுத்தான்.

“மொத்தத்தில் ஒரே குடும்பத்தோடு தான் மோதிக்கிட்டு இருக்கேனா?” என்று ஆயாசமாக கேட்டான் பாரி.

“மொத்த குடும்பமும் கூட்டு சேர்ந்து நல்லா கொல்லையடிக்குதுங்க பாரி” என்றான் சத்யா.

சில நிமிடங்கள் கண் மூடி பாரி அமர்ந்துவிட்டான்.

ஜென்னிற்கு அழைத்தான்.

“ஜென் அந்த வில்லேஜ் போயிட்டியா?”

“போயிக்கிட்டே இருக்கேன் பாரி.”

“கணபதி அங்கிளை அங்க அனுப்பிட்டு நீ ரிட்டர்ன் வா. நான் லொகேஷன் சென்ட் பன்றேன். நீ அங்க போ” என்று உத்தரவிட்டான்.

இதுநாள் வரை பாரியிடம் இப்படியானதொறு தொனியை ஜென் பார்த்ததே இல்லை. அதனால் அவன் சொல்லியதை ஒப்புக்கொண்டாள்.

பாரியின் அலைப்புறும் மனநிலையை உணர்ந்த சத்யா…

“எதுக்கு பாரி இவ்வளவு வேகம். எல்லாமே குற்றவாளிக்கு எதிராக இருக்கு. நிச்சயம் தண்டனை கிடைக்கும். நாம பொறுமையா மூவ் பண்ணலாம்” என்றுக்கூறி பாரியை அமைதிப்படுத்த முயற்சித்தான்.

“முடியாது சத்யா… இப்பவே இதை முடிக்கணும்” என்ற பாரிக்கு அதிகாலை தன்னுடைய அலுவலக தொலைபேசிக்கு தன்னை தொடர்புகொண்ட ராயப்பனின் பேச்சு மூளைக்குள் ஓடியது.

இரவு மருத்துவமனையிலிருந்து நேராக அலுவலகம் சென்ற பாரிக்கு… அவியின் மீது கை வைக்க துணிந்த அவர்களை ஒருவழி செய்திடும் வேகம். அதில் அவன் நேரத்தை மறந்து தன் பணியை செய்துகொண்டிருக்க…

ராயப்பன் பாரிக்கு அழைத்திருந்தான்.

“என்ன பாரி தப்பிச்சிட்டோமுன்னு நிம்மதியா இருக்கியா? இப்பவும் ஒன்னும் கேட்டுப்போகலை இந்த வழக்கை என்னால முடிக்க முடியாதுன்னு சொல்லிட்டு போயிடு. உன்னை விட்டுடுறேன்” என்றான்.

“இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆள் நானில்லை.” பாரி பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினான்.

“அது எனக்கு எப்பவோ தெரியுமே. உன் கையில குத்துப்பட்டும் உன் திமிர் குறையலையே” என்ற ராயப்பன்…

“எனக்கு பயந்து தான உன் குடும்பத்தை ஏதோ ஒரு ஊருக்கு அனுப்பி மறைச்சு வச்சிருக்க. நொடியில அந்த ஊரை என்னால கண்டுபிடிக்க முடியும். எப்படியும் நைட் நான் அனுப்பிய ஆளுங்க உன்னை போட்டு தள்ளிடுவானுங்கன்னு நம்பி உன் குடும்பம் எங்க போனா எனக்கென்னன்னு அசட்டையா இருந்துட்டேன். கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளுறது அவ்வளவு கஷ்டமில்லை. என்னை அந்தளவுக்கு போக வைக்கமாட்டேன்னு நினைக்கிறேன்” என்று நேரடியாகவே மிரட்டியிருந்தான்.

அப்போதே பரிதிக்கு அழைத்தவன் “அங்கிருந்து நீங்க எல்லாரும் வெளியூர் கிளம்புற மாதிரி கிளம்பி பூ தோப்பு வீட்டுக்கு போயிடுங்க. ஊர்ல யாரைக்கேட்டாலும் நீங்க வெளியூர் போயிட்டதாத்தான் தகவல் கிடைக்கணும்” என்று கூறியிருந்தான். பாரி அத்தனை அழுத்தமாக சொல்லியிருக்க… ஏற்கனவே பாரியை இரு தினங்ளுக்கு முன் கொலை செய்ய ராயப்பன் ஆட்களை அனுப்பியிருந்தான் என்பதை பாரியின் வீட்டில் வைத்து ராயப்பனின் வாயாலேயே பரிதி அறிந்திருந்ததால் தற்போது பாரி சொல்லியதை எவ்வித மறுப்புமின்றி பரிதி செய்திருந்தான்.

ஆனால் பூவைத்தான் அவனால் சமாளிக்க முடியவில்லை.

அவள் தான் ஏற்கனவே அமிர்தாவின் கொலையைப் பற்றி பெண்ட்ரைவ் மூலமாக அறிந்திருந்தாளே. இப்போது பாரி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்ததும் அது சம்பந்தப்பட்ட ஒன்றென்று ஏற்கனவே கணித்திருக்க… தான் பலமுறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காதிருக்க, அவனுக்கு என்னவோ என்று பயந்து தான் சென்னை போக வேண்டுமென்று அடம்பிடிக்கத் தொடங்கியிருந்தாள்.

அதனை நினைத்த பாரி…

“அவன் என் குடும்பத்தை நெருங்கும் முன் நான் அவன் கதையை முடிச்சிருக்கணும்” என்று சத்யாவிடம் சொல்லுவதைப்போல தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

பாரிக்கு இருக்கும் சூழலில் வீட்டிற்குச் சென்று அலைபேசியை எடுக்க நேரமில்லாத காரணத்தோடு தன்னுடைய எண்ணை ராயப்பன் கவனிக்க வாய்ப்பிருக்கும் என்பதாலும், மற்றொரு கான்ஸ்டபுளின் அலைபேசியை தற்போது தேவைக்கு வாங்கி வைத்திருந்தான்.

பரிதி காலை பாரி அழைத்த எண்ணிற்கு கூப்பிட்டு… பூவின் பிடிவாதத்தைக் கூறிட… அடுத்த நொடி பூவிற்கு அழைத்தான்.

“நான் இங்க நல்லாத்தான் இருக்கேன். எனக்கு எதுவுமில்ல. நான் அங்க வரவரை நீ வாயே திறக்கக்கூடாது. இருக்குற தொல்லையில நீ வேற இம்சை பண்ணாதடி” என்று சீரியஸ் மோடிலும்… “உன்னை நினைச்சாலே என் கன்ட்ரோல் மிஸ் ஆகுதுடி” என லவ் மூடிலும் சொல்லியிருந்தான்.

அந்த வாக்கியமே பூவை அத்தனை நேர அலைப்புறுதலில் இருந்து அமைதிப்படுத்த போதுமானதாக இருந்தது.

“என்ன பண்ணாலும் என்னை மனசுல வச்சு செய் வேந்தா. நீயில்லாம நான் இருந்தவரை போதும்” என்றவள், “சீக்கிரம் வந்திடு” என சொல்லி வைத்திருந்தாள்.

அடுத்து சத்யாவையும் அழைத்துக்கொண்டு பாரி சென்றது… ஜென்னை வர சொல்லி தகவல் கொடுத்த முகவரிக்குத்தான். அங்கு ஆணையரையும் வரச்சொல்லியிருந்தான்.

___________________________

அமிர்தாவின் இறப்பு.

துணை ஆணையர் பாரி வேந்தன் சிறப்பு பிரிவில் வரவழைக்கப்பட்ட வழக்கு.

முன்னர் இந்த வழக்கை ஆராய்ந்த காவலர்கள் அமிர்தாவின் மரணம் தற்கொலையென மூடியிருந்தனர்.

தற்கொலைக்கு வாய்ப்பே இல்லையென அமிர்தாவின் மாமனாரும், முன்னால் காவல்துறை அமைச்சருமான சங்கரன் சந்தேகம் கொண்டு வழக்கினை மீண்டும் நியாயமான முறையில் விசாரித்து, அமிர்தாவுடைய மரணத்தின் உண்மைத் தன்மையை அறிய வேண்டுமென்று வழக்கை மேல் முறையீடு செய்தார். தன் மகன் ரித்தேஷ்வரனுக்கு தெரியாது. ஏனெனில் அவரின் சந்தேக வட்டத்தில் முதல் ஆளாய் இருந்தது ரித்தேஷ்.

“முந்தைய விசாரணையில் ஈடுபட்ட காவலர்களின் குறுக்கீடு இதில் நிச்சயம் இருக்கக்கூடாது. அவர்களின் விசாரணையில் நம்பகத்தன்மை எனக்கில்லை” என்று மேல் முறையீட்டு பதிவில் சங்கரன் குறிப்பிட்டிருக்க…

அவரிடமே உங்களுக்கு இந்த வழக்கை யார் விசாரித்தால் உண்மையை கண்டறிய முடியுமெனக் கருதுகிறீர்களோ அவர்களை குறிப்பிடுங்கள் என்று நீதிமன்றத்தில் முடிவை அவர் வசம் ஒப்படைத்தனர்.

அப்போது சங்கரனுக்கு சட்டென்று நினைவில் உதித்தது பாரிவேந்தனின் முகம் தான்.

சங்கரன் அமைச்சராக இருந்தபோது… பாரியின் நேர்மை, அதிரடியான விசாரிப்பி மற்றும் குற்றவாளியை கண்டறிய காட்டும் விவேகத்துடன் கூடிய வேகம்… யாவற்றையும் ஒரு வழக்கில் உடனிருந்து பார்த்தவராயிற்றே.

அப்போதே “உன்னைப்போல ஒருவன் நம் மாநிலத்திற்கு தேவை” என பாராட்டி, மாற்றலுக்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார். அப்போது இருந்த சூழலில் பாரி அதனை மறுத்திருந்தான்.

இப்போதும் அழைத்தால் வருவானோ என்கிற சந்தேகத்திலேயே… தற்போதைய உள்துறை அமைச்சருமான மற்றும் அமிர்தாவின் தந்தையுமான ராயப்பனின் மூலம் பாரியை இந்த வழக்கில் கொண்டுவர நீதிமன்றத்தில் அவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

வேற்று மாநில அதிகாரியை மாற்றலாகிக் கொண்டுவருவது எளிதான விடயமல்ல என்றபோதும்… தன்னுடைய நண்பனுக்காக ராயப்பன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாரியை சென்னைக்கு வரவழைத்திருந்தார்.

பாரியின் வருகைக்கு தானே காரணமாக இருக்கும்போது தன்மீது சந்தேகம் வராதென்று பாரியின் வரவில் ராயப்பன் மெத்தனமாக இருந்துவிட்டாரோ?

பாரி யாரென்று தெரிந்துகொண்ட பின்னராவது அவனின் வருகையை தடுத்திருக்க வேண்டுமோ?

இனியென்ன பயன்… பாரி தன்னுடைய ஆட்டத்தை ஆடி முடித்திருந்தான்.

பாரியின் வருகைக்கு பின்…

அவனது விசாரணையில் அமிர்தாவின் மரணம்.

முதலில் இந்த வழக்கு சம்மந்தமாக அமிர்தாவின் மரணம் நேர்ந்த ராயப்பனின் இல்லத்தில் தன்னுடைய விசாரணையைத் தொடங்கியிருந்தான்.

ராயப்பனின் விடயத்தில் பாரியின் சூத்திரம்… எதிராளியை ஆடவிட்டு அவன் போக்கில் இசைந்து சென்று அவனுக்கேத் தெரியாது அவனைச்சுற்றி கட்டம் கட்டுவது.

அதில் ராயப்பன் மொத்தமாக சிக்குவானென்று பாரியை எதிர்பார்க்கவில்லை.

விசாரணைத் துவங்கிய முதல் நாளே அமிர்தாவின் இறப்பு கொலையென்று ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

அதற்கு காரணமாக அமைந்தது அங்கிருந்த வார்ட்ரோபிற்கு அடியில் உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகள். இதுபோன்று பல வழக்குகளை ஆராய்ந்த அவனால் எளிதில் யூகிக்க முடிந்த ஒன்று அந்த துண்டுகள் யாவும் உடைந்து சிதறிய பாகங்கள்.

வார்ட்ரோப்பின் கதவில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்ததற்கான தடங்கள் உடைந்த துண்டுகள் அதனுடையதாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

அப்போது பாரி ராயப்பனிடம்…

“ட்ரெஸ்ஸிங் டேபிள் கிடையாதா?” என்று வினவ… என்ன இவன் சம்மந்தமில்லாமல் கேட்கிறான் என்று அவர் நினைத்தாலும், “அதெல்லாம் இல்லை” என்றார்.

“அப்புறம் எப்படி மிஸ்ஸஸ்.ரித்தேஷ் மேக்கப் பண்ணுவாங்க?” என அடுத்த கேள்வி கேட்டிருந்தான்.

ராயப்பனின் வீட்டிற்கு வருவதற்கு முன்… இறந்து கிடந்த அமிர்தாவின் உடலை பாரான்சிக் துறை எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கொடுத்திருந்த அறிக்கைகளை எல்லாம் உன்னிப்பாக கவனித்துவிட்டுதான் வந்திருந்தான்.

அதில் அமிர்தாவின் முகத்தில் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் முகப்பூச்சுக்கள் பூசப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனாலேயே பாரியின் மேற்கண்ட கேள்வி.

இதையெல்லாம் ஆராய்வார்களா என்ற சந்தேகம் வரலாம்… ஆனால் கொலையாளி எந்தவகை யுக்தியை பயன்படுத்தியிருப்பானென்று கணிப்பதற்காகவே, இறந்த உடலில் அந்நேரம் அவர்கள் வைத்திருக்கும் பொட்டு முதற்கொண்டு ஃபாரன்சிக்கில் ஆராய்ந்து பார்க்கப்படும்.

பாரியின் அக்கேள்வியில் ராயப்பன் ங்கே என்று விழித்தார்.

தற்கொலை செய்ய நினைப்பவள் நிச்சயம் அதிக அழுத்தத்தில் இருந்திருக்க வேண்டும். அந்நேரம் அவளுக்கு கண்டிப்பாக மேக்கப் செய்யும் எண்ணம் இருந்திருக்காது. எந்த வகையில் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்ற யோசனையே இருந்திருக்கும். அதனாலேயே அதை ஒரு காரணமாக வைத்து விசாரித்தான்.

“வார்டரோப் முன்னாடி சிட்டர் இருக்கே… இதுல கண்ணாடி இருந்ததா?” பாரியின் கேள்வி கூர்மையாக வந்திருந்தது.

“இல்லை” என்று அவர் சொல்லிய வேகம் பொய்யென்று கூறியது.

அவரின் பதற்றத்தையும் பயத்தையும் கண்டு உள்ளுக்குள் நகைத்துக்கொண்டாலும், வெளியில் சாதரணமாகத் தன்னைக் காட்டிக்கொண்டவன் அறையை மேலும் தன் பார்வையாலும் நடையாலும் அலசினான்.

‘கொலை என்பது உறுதி. யார் செய்திருப்பா? எதுக்காக?’ மூளையை குடைந்த கேள்வியை புறம் ஒதுக்காது மீண்டும் மீண்டும் அறையை வட்டமடித்தான்.

“கான் ஐ யூஸ் வாஷ்ரூம்?” என்று ராயப்பனிடம் வினவியவன் அவர் பதில் சொல்லும் முன்னமே அவ்வறையிலிருந்த குளியலறைக்குள் புக கதவில் கை வைத்தவன், “நீங்க வேணும்னா வெளியில் வெயிட் பண்ணுங்க. ஜஸ்ட் டூ மினிட்ஸ்” என்றான்.

உள்ளே சென்ற பாரி… கதவின் இடுக்கு வழியாக ராயப்பன் சென்று விட்டார் என்பதை தெரிந்துகொண்டு வேகமாக படுக்கையறைக்குள் வந்தவன் வார்ட்ரோபிற்கு மேலே கைவிட்டு தட்டுப்பட்டதை கையில் எடுத்தான்.

அவை யாவும் பழங்கால சிற்பங்களின் புகைப்படங்கள். அவற்றின் பின் தேதிகளும் குறிப்பிட்டிருக்க… ஒவ்வொன்றாய் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிற்பங்கள் புகைப்படம் எடுக்கப்பட்ட திகதியாக இருக்குமென்று நினைத்தவன்… அதிலேதோ இருப்பதாக மனம் வலியுறுத்த அதனை தனக்குள் மறைத்து வைத்தவனாக அங்கே சிறு மேசையில் வீற்றிருந்த அமிர்தாவின் நாட்குறிபேட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

ராயப்பனின் அதீத பதற்றம், பயம், தன்மீதிருந்து பார்வையை ரித்தேஷ் பக்கம் திருப்பும் முயற்சி என அனைத்தையும் அவரின் பார்வை, அசைவுகள் மூலம் தெரிந்து கொண்டவன்… அவரின் மறைமுகப் பேச்சுக்களை நம்புவதைப்போல் அவரை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான்.

அமிர்தாவின் நாட்குறிப்பேட்டை படித்தவனக்கு கல்யாணத்திற்கு பின்னர் அதில் அவள் ஒன்றுமே எழுதவில்லை என்பது ஏமாற்றமே. கல்யாணத்திற்கு பின் அவள் இதனை அவளது வீட்டிற்கு கொண்டு சென்றிருக்க மாட்டாளென்று கருதினான்.

‘வெறும் யூகத்தின் அடிப்படையில் மட்டும் எப்படி மேற்கொண்டு வழக்கை கொண்டு செல்வது?’ சிந்தித்தவன் அசட்டையாக அமிர்தாவின் குறிப்பேட்டை மேசையில் வீச… அது கீழே விழுந்தது.

எடுத்தபோது திறந்திருந்த பக்கங்கள் அவனுக்கு ஒருவகையில் உதவின.

இறுதி பக்கங்களில் எழுத ஆரம்பித்திருப்பாள் போலும்… ஒரு வார்த்தை பாதி எழுத்துக்களில் முற்றுப்பெறாது முடித்திருந்தாள்.

அவ்வார்த்தை…

“சிலை கடத்…”

“சிலை கடத்தல்.” வார்த்தையை முற்று பெற வைத்தவன்… ‘இதுதான் காரணமா’ என யோசனைக்குள் ஆழ்ந்தான்.

அப்பொழுது மூளையில் பளிச்சென்று எண்ணம் தோன்ற… கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் காணமல் போன பழங்கால உலோக சிற்பங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஆராய்ந்து தனியாக எடுத்து வைத்தான். அதனை அமிர்தாவின் அறையில் எடுத்த படங்களோடு ஒப்பிட்டு பார்த்தான். அவனின் சந்தேகம் நூறு சதவிகிதம் ஊர்ஜிதமாகியது.

அடுத்து பாரிக்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி… “ராயப்பன் இதை செய்றார் அப்படின்னா, அவர் ஏன் ரித்தேஷை மாட்டிவிட வேண்டும்?” என வாய்விட்டு கேட்டுக்கொண்டவன்… அடுத்து விசாரணை செய்ததெல்லாம் சிலை கடத்தல்கள் பற்றி மட்டுமே.

பாரி தான் வந்த அன்றே அமிர்தா கொலை செய்யப்பட்டுத்தான் இறந்திருக்கிறாள் என கண்டறிந்து விட்டானே.

ஆனால் என்ன அவனே எதிர்பாரதது ராயப்பன் கொலையாளிக்கு உடந்தையாக இருந்ததோடு, அமிர்தாவின் இறுதி நொடி இறப்பிற்கு அவரே காரணம் என்பது தான்.

கொலை செய்ய தூண்டியவரோ… அல்லது செய்தவரோ… அல்லது பிரியத் தவிக்கும் உயிருக்கு மோட்சம் அளித்தவரோ… இம்மூன்றுமே கொலை செய்தவர் என்ற அடிப்படையில் தானே வரும்.

அதனால் கொலையாளி ராயப்பன் தான்.

எப்போது பாரி அமிர்தாவிடமிருந்து விசாரணையை சிலை கடத்தல்கள் பக்கம் மெல்லத் திருப்பினானோ அப்போ ஆரம்பித்தது, அவனை கண்காணிக்கும் பணி, மிரட்டல் மற்றும் கொலை செய்யும் முயற்சி.

அதிலேயே பாரி கணித்துவிட்டான்…

‘தான் சரியாகத்தான் செல்கின்றோம்.’

அடுத்து பாரி காட்டியதெல்லாம் அவனே அவனிடம் அறிந்திடாத அத்தனை நிதானம்.

அந்நேரத்தில் பாரிக்கு கந்தன் வாயிலாகக் கிடைத்த தகவல் மூலம் ஆட்டோ ஓட்டுநர் இருவரை பிடித்தது.

அந்த ஆட்டோவில் பாரி கண்டெடுத்த முகவரி அட்டை ராயப்பனுடையது. அதில் அவரது கட்சியின் பெயரை விட, ஒரு பக்கத்தில் இடம்பெற்றிருந்த சிலையின் படம் தான் பாரியின் கண்களையும், மூளையையும் கவர்ந்தது.

அன்று ராயப்பனின் வீட்டில் அவன் கண்ட அவரது முகவரி அட்டை வேறு விதமாக இருந்தது. இது அதிலிருந்து மாறுபட்டு இருக்க… எதற்கு பயன்படுத்தும் அடையாளம் இதுவென்று அவனால் எளிதில் யூகிக்க முடிந்தது.

அதனை வைத்து பிடித்த இருவரிடமும் விசாரிக்க அவர்கள் கை காட்டியதோ வந்த முதல்நாளே பாரியிடம் சிக்கிய அந்த கவுன்சிலர்.

அன்றே கணபதி அவன் தான் அந்த கட்சியின் அடிமட்ட வேலைகளையெல்லாம் செய்பவன் என்று கூறியது அந்நேரம் அவனுக்கு பெரிய துப்பாக அமைந்தது.

அந்த கவுன்சிலர் வெளியில் இருந்தால் தான் ஏதேனும் செய்து தன்னிடம் மாட்டுவானென்று நினைத்த பாரி… அவன் வெளியில் வந்ததைப்பற்றி அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.

பெரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதாரணமாக செய்பவர்களின் குணங்களை அறிந்த பாரி… அவர்கள் எது செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பதாலேயே வழக்கின் ஆரம்பத்தில் அனைத்தையும் ஜென்னிற்கு சொல்லிக்கொண்டிருந்தவன், அவர்கள் மூலம் அவளுக்கு ஏதும் அனர்த்தம் நேர்ந்திடக் கூடாது என்பதாலேயே… அவளுக்கு சந்தேகம் வராத வகையில் அவளை மெல்ல இதிலிருந்து வெளியேற்றியிருந்தான். மற்ற வழக்குகளில் அவளை முடுக்கியிருந்தான்.

தன்னுடைய முழு சந்தேகமும் ரித்தேஷ் மீதுதான் என்பதை ராயப்பனுக்கு காட்டி.. அவனை சுதந்திரமாக உலவவிட்டு பிடிப்பதற்காகவே சங்கரனை அவர் முன்னிலையில் அனைத்தையும் சொல்ல வைத்தான்.

அதில் பாரிக்கு… அவரிடம் சிறு குற்றவுணர்வாவது எட்டிப்பார்க்கும் என்று இருந்த எண்ணம் தவிடு பொடியாகியது.

‘ஒரே பெண். எப்படி இவரால் முடிகிறது?’ வியந்துதான் போனான்.

ரித்தேஷை மாட்ட வைக்க நினைக்கும் ராயப்பன்… தன்னுடைய நிழல் உலக வேலைகளையும் ரித்தேஷை வைத்துதான் செய்வானென்று கணித்தே… அவனிடம் ஏதும் கிடைக்குமென்ற எண்ணத்தில் அவனில்லா நாளில் அவனது வீட்டிற்குள் யாருக்கும் தெரியாது குதித்தான்.

சங்கரனிடம் சொல்லியிருந்தால் அவர் நேரடியாகவே வீட்டிற்கு வந்து சோதனை செய்ய ஒத்துழைப்பு கொடுத்திருப்பார். ஆனால் ரித்தேஷிற்கு அவ்விடயம் எப்படியாவது சென்று சேர்ந்திடும் என்பதாலேயே இருட்டில் யாருக்கும் தெரியாது சென்றான்.

அப்படிச் சென்றவனுக்கு… என்னதான் அதனை எதிர்பார்த்து வந்தாலும்… கண்களால் காணும் போது அதிர்வை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

பாரிக்கு ஏற்கனவே ரித்தேஷ் அமிர்தாவை விரும்புவது தெரியும். அமிர்தாவுடன் ரித்தேஷ் மற்றும் ராயப்பனை சந்திக்கச் சென்றபோது… ரித்தேஷின் பார்வையை வைத்தே மெல்ல கணித்திருந்தான்.

அதனை உறுதி செய்திடவே அன்று… “உங்களுடையது ஒருதலை காதல்” எனக் கூறியிருந்தான்.

இப்படி ரித்தேஷின் காதல் தெரிந்த பாரிக்கு… அவனது அறையில் ஒருபக்க சுவரை நிறைத்திருந்த அமிர்தாவின் படம் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை.

ரித்தேஷ் அமிர்தாவின் மீது வைத்திருந்த காதலே அவனை பாரியிடம் காட்டிக்கொடுத்தது.

அனைத்தையும் ரித்தேஷ் அமிர்தாவின் பெயரிலேயே செய்திட… இதையும் அப்படித்தான் என்று எண்ணியே அவளின் சுவர் படத்தில் ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என கூர்ந்து கவனித்தவன் மொத்தமும் மாட்டுமென்று எதிர்பார்க்கவில்லை.

அந்த சுவற்றிற்கு பின்னிருந்த சிறு அறையில் காணமல் போனதாக பரபரப்பாக பேசப்பட்ட சிலைகள் பத்திற்கும் மேற்பட்டு இருந்தன.

‘இன்னும் சிலைகள்?’ பாரியின் மூளைக்குள் கேள்வி உதித்த கணமே பதிலும் கிடைத்தது.

‘நாடு கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது விற்கப்பட்டிருக்கலாம்.’

தோளை குலுக்கிக்கொண்டான்.

அடுத்த விசாரணையின் போது… ராயப்பனின் கோபத்தை தூண்டச்செய்து அவரை சிக்க வைக்க எண்ணியே… கொலை செய்தது அவர் தான் என்ற உண்மையை போட்டு உடைத்தான்.

அவன் எண்ணத்து படியே ராயப்பன் பாரியை வீடு தேடிவந்து மிரட்டியதோடு அதற்கு பாரி அடி பணியாததால் மீண்டும் கொல்லுவதற்கு முயற்சி செய்து அவரது ஆட்களை பாரியின் வீட்டிற்க்கே இரவு நேரத்தில் அனுப்பி வைத்தார்.

அதற்கு முன்பு பாரியின் கவனம் சிலை கடத்தல் பக்கம் சென்றதுமே… ராயப்பன் குமாருக்கு அழைத்து பாரியை எச்சரிக்கை செய்தார்.

குமாருக்கு தன்னிடம் பேசியது யாரென்று தெரியாதபோதும்… பாரியை பார்த்து கவனமாக இருக்க சொல்லியதோடு அந்த எண்ணையும் கொடுத்திருந்தார்.

அப்போதே பாரி ராயப்பனை சத்யாவிடம் சொல்லி தன்னுடைய கண்காணிப்பில் வைத்திருந்ததால், இன்று ஆள் அனுப்பியிருக்கும் விடயமும் தெரியவந்தது. பாரி அலட்டிக்கொள்ளாது தன்னுடைய வீட்டில் நடக்கவிருக்கும் அனைத்தும் தெரியும் படி… அவி அவனது அறைக்குள் சென்றதும் காமிராவினை ஓரிடத்தில் தெரியாது ஆன் செய்து வைத்துவிட்டு வரும் தடியர்களுக்காகக் காத்திருந்தான்.

வந்தவர்கள் பாரி வைத்த பொறியில் எளிதாக மாட்டிக்கொண்டனர். அதில் அவர்களோடு கவுன்சிலர் வந்தது, அவன் ராயப்பனின் பெயரை உளறியது அனைத்தும் பாரியே எதிர்பாராது அவனுக்கு கிடைத்த ஆதாரங்கள்.

பாரியை இல்லாமல் செய்திட ராயப்பன் செய்யும் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிய கடுப்பானவர் பாரிக்கே அழைத்து அவனின் குடும்பம் தான் அவரின் அடுத்த டார்கெட்டாக இருக்குமென்று மிரட்டினார்.

அதன்படி பாரி இச்சூழலில் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பாகத் தன்னால் இருக்க முடியாது என்பதாலேயே பரிதியின் கண்காணிப்பில் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தான்.

இந்த வழக்கில் பெரிய ஆதாரமே…

ரித்தேஷின் அறையில் பாரிக்கு கிடைத்த லிங்கம்.

அதனை ஏதோவொன்றென்று ஒதுக்க முடியாது ஆராய்ந்தவனுக்கு அதன் உட்பொருளும் பிடிபடவில்லை.

பூவின் மூலம் அவன் அதில் கண்டது மொத்தமாக அவனையே புரட்டிபோட்டது.

இப்படியும் ஒரு தந்தையா என அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் கொலை செய்ய என்ன காரணம்… அவர்கள் செய்யும் இருட்டுலக விடயம் தெரிந்திருந்தாலும், பெற்ற மகளை கொலை செய்திட அது மட்டும் போதுமான காரணமாக இருக்குமென்று பாரியால் நம்ப முடியவில்லை.

அதனால் சத்யாவிடம் தன் சந்தேகத்தைக்கூறி விசாரிக்க செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் அவனின் பார்வைக்கு வந்தது.

அந்த சந்தேகம் முளைக்க காரணமாக இருந்தது… லிங்க வடிவ பெண்ட்ரைவ். அதில் ராயப்பன் மட்டுமல்ல இன்னொரு நபரும் இருந்தார்.

அது யாரென்று பாரிக்கு நன்கு தெரியும்.

பரிதியின் தொழில்முறை எதிரி விவாஷ்.

அவனுக்கும் ராயப்பனுக்கும் என்ன சம்மந்தமாக இருக்குமென்று எவ்வளவு யோசித்தும் பலனில்லை. அடுத்து பாரிக்கு சந்தேகம் வந்தது அவியின் பின்னால் காதலென்று தொல்லை செய்துகொண்டிருந்த நீபா.

ஆம் நீபாவே தான்.

அன்று ஹோட்டலில் நீபாவுடன் இருந்த ஆடவன் விவாஷ். ஏற்கனவே ராயப்பனின் கூட்டில் விவாஷ் இடம்பெற்றிருக்க தற்போது நீபா.

விவாஷ் மற்றும் நீபாவிற்கு என்ன உறவாக இருக்குமென்று கண்டறிந்திடவே அன்று இரவு அவர்களை பின்தொடர்ந்து சென்றான்.

அதில் இருவரும் ஏதோவொரு வகையில் நெருங்கிய உறவு என்பது மட்டும் தான் தெரிந்தது. அது என்ன உறவென்று தெரியவில்லை.

இவற்றை அவனே களத்தில் இறங்கி நேரடியாக கண்டறிந்திருக்கலாம். ஆனால் அவனைச் சுற்றித்தான் ராயப்பன் ஆட்களை நியமித்திருந்தானே.

இந்நிலையில் பாரியால் தன்னுடன் பணி புரியும் நபர்களையே நம்ப முடியவில்லை.

அதில் ஜென்னும் கணபதியும் விதிவிலக்கு. அவர்களை ராயப்பனிடம் சிக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே தன்னிடமிருந்துகூட இவ்வழக்கின் இடையில் விலக்கி வைத்தான்.

இவற்றையெல்லாம்…

அதாவது ராயப்பன், விவாஷ், நீபா இவர்களுக்கிடையேயான உறவு என்ன என்பதைத்தான்… பூங்காவில், அமிர்தாவின் அறைக்குள் அவ்வீட்டிலிருந்து வேறெப்படி நுழைய வழியிருக்கிறதா என சத்யாவிடம் கண்டறிய சொல்லியபோது கொடுத்த துண்டுசீட்டில் எழுதி கொடுத்திருந்தான்.

அதற்கான விடைகள் யாவும் பாரிக்கு கிடைத்த போதுதான்…

“ஒரே குடும்பத்தோட தான் இத்தனை நாளும் மல்லுகட்டிட்டு இருந்தேனா” என பாரி சத்யாவிடம் கூறியிருந்தான்.

பாரி அவ்வாறு சொல்ல காரணம்?

விவாஷ் மற்றும் நீபா… அண்ணன், தங்கை.

அவர்களின் தந்தை ராயப்பன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
39
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. wow . sema twist sister next enanu theriya payankara intrest ta iruku