Loading

அத்தியாயம் – 37

 

தீரஜின் செயலை  எதிர்பார்க்காத நந்தினி, அதிர்ச்சியுடன் நின்றாள்.
அவளின் விழிகள் இன்னும் அச்சத்தில் திளைத்திருக்க, மெல்லிய குரலில்,.. “ஏன் இப்படி பண்ணிடீங்க, அரவிந்த்?” தயக்கத்துடன் கேள்வி எழுப்ப, அவளின் கேள்வி தீரஜின் இதயத்தில் இன்னொரு புயலை எழுப்பியது…

“நீ எதுவும் பேசாத மது, உன் மேலயும் எனக்கு கோபம் வருது, அவளை உனக்கு எதிர்க்க தெரியாதா, அவ்வளவு வீக்கானவளா நீ” அவன் குரல் கோபத்தில் அதிர்ந்தது…

அந்தக் கணத்தில் நந்தினிக்கு வார்த்தைகள் வரவில்லை,
அவன் கோபத்தின் முன்னே,
அவள் மௌனத்தில் மூழ்கினாள்…
அதற்கு மேலும் அவள் பேசவும் முயற்சிக்கவில்லை,…

அந்தச் சூழ்நிலையில் தியாகராஜனும் வீடு வந்து சேர்ந்தார், தந்தையிடம் அனைத்தையும் வெளிப்படையாகச் சொன்னான் தீரஜ்…

அவனது குரலில் இன்னும் கோபமும், வலியும் கலந்திருந்தது…

“நான் பண்ணது எனக்கு தப்பா தோணலப்பா, இதுக்கு மேல அவங்கள இங்கே இருக்க விடுறதுலயும் எனக்கு விருப்பம் இல்லை” அவன் சொல்லும் வார்த்தைகளில் உறுதியும் துடிப்பும் இருந்தது, ஆனால் தியாகராஜன் உடனே பதில் சொல்லவில்லை, அவரது முகத்தில் அமைதியும் ஆழ்ந்த சிந்தனையும் மட்டுமே தெரிந்தது,…

அவரது அமைதியை கண்டு நெற்றி சுருங்கியவன்,… “என்னப்பா… இன்னும் தங்கச்சி மேலயும் அவங்க பொண்ணு மேலயும் இருக்க பாசம் குறையலையா?” தீரஜின் கண்கள் கூர்மையாய் துளைத்தன…

மகனை நோக்கியவர்,.. “எப்போ அவ என் பையனோட வாழ்க்கையை பத்தி யோசிக்காம சுயநயலமா நடந்துகிட்டாளோ அப்போதே பாசமெல்லாம் ஒன்னும் இல்லாம போச்சு, கூட பிறந்தவளா போயிட்டாளேன்னு  தான் அவ என்ன பண்ணாலும் வீட்ல இடம் கொடுத்திருந்தேன், ஆனா இனி இந்த வீட்ல அவளுக்கும் அவ பொண்ணுக்கும் இடம் இல்லை” என்று அவரும் தன் முடிவை உறுதியாய் சொல்லி இருக்க,… தீரஜின் மனதில் அப்போது தான் நிம்மதியே வந்தது,..

ஆனால் அடுத்த நொடி அவர் முகம் தளர்ந்து, எண்ணங்களில் மூழ்கிட, மகனை ஏறிட்டு,.. “ஆனா, அவங்கள அப்படியே தள்ளுறதும் என் மனசுக்கு சரியா படலப்பா.
ஒரு தனி வீடும், கொஞ்சம் பணமும் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்,
உன் எண்ணம் என்ன?” மனதில் இருந்த கருணையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாமல் கேட்டிருக்க,. சில நொடிகள் யோசித்த தீரஜ்,..
பிறகு ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி,.

“உங்க மனசுக்கு அது ஆறுதல்னு தோணுசுச்சுனா அப்படியே பண்ணுங்கப்பா, ஆனா, ரெண்டு நாள் அவர்கள அப்படியே விட்டுருங்க, அப்போதான் கொஞ்சமாவது புத்தி வரும்”

தீரஜின் வார்த்தைகளில் இருந்த உறுதியை கண்டு தியாகராஜன் மெதுவாகத் தலையசைத்துக் கொண்டார்,…

வீட்டை விட்டு விரட்டப்பட்டதும் வனிதா மனிஷா இருவரும் வீதியிலே அலைந்தனர், எங்கு போவது, யாரிடம் செல்வது எனத் தெரியாமல், கால்கள் தானாகவே வழி தெரியாமல் நடந்தது….

வயிறு பசியில் குத்தத் தொடங்கியது, சுற்றிலும் உணவகம் இருந்தாலும், வாங்குவதற்கு ஒரு பைசா கூட கையில் இருக்கவில்லை,..

“அம்மா… எனக்கு ரொம்ப பசிக்குது”
என்று கண்ணீர் விட்டாள் மனிஷா,
மகளின் கண்ணீர் வனிதாவிற்கு
ஆயிரம் கத்தியால் குத்தியது போல இருந்தது…

அங்கிருந்த டீக்கடைக்கு சென்றவர்,.. “ரெண்டு போண்டா கொடுங்களேன்” என்று கையேந்தி கேட்க, கடைகாரரும் எடுத்து கொடுத்தார், மகளிடம் அதனை நீட்டிட, அவர் மகளும் பசியின் கொடுமையால் வாங்கி அவசரச அவசரமாக சாப்பிட்டாள்,..

‘ச்சீ.. இந்த ரோட்டுகடைல நான் சாப்பிடுவேனா, என்னோட ஸ்டேட்டஸ் என்னனு தெரியுமா?’ என்று பெருமை பேசிய வாய் தான் இன்று அந்த சாதரண டீக்கடை போண்டாவை அமிர்தமாய் உண்டது…

காசு கொடுக்காமல் நகர முற்பட்டவர்வளை பிடித்து வைத்து, காசு கொடுத்துட்டு போ என்று கடைக்காரர் சண்டை பிடிக்க,.. “எங்க கிட்ட காசு இல்ல” என்றார் வனிதா,…

“காசு இல்லாம தான் வாங்கி தின்னியா” என்று கேட்டு அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச, தாயும் மகளும் அவரிடமிருந்து தப்பித்து வரவே மிகவும் பிரயாதனபட்டு போயினர்,..

அந்த இரவு இருவரும்
ஒரு பழைய கட்டிடத்தின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தூங்க முயன்றனர், பசி, பயம், அவமானம் அனைத்தும் சேர்ந்து கண்களை மூட விடாமல் செய்திருந்தது…

அடுத்த நாள் காலை, வயிறு பசியில் வலிக்க ஆரம்பித்து விட,.. அருகிலிருந்த கோவிலின் அன்னதானம் தெய்வ அருள்போல அவர்களுக்கு கிடைத்தது,.
அந்த ஒரு சிறிய சாதம், பருப்பு சாப்பாடு அவர்களுக்கு அந்த நேரத்தில் அமிர்தம் போலிருந்தது.

‘நாம் செய்த பாவம் தான் இப்படி வெளியில் அலைய வைத்திருக்குது, மற்றவரின் குடும்பத்தை சிதைக்க நினைத்ததற்கான தண்டனையே இது’ என்று  வனிதாவும் மனிஷாவும் புரிந்துகொண்டனர்…

அந்த இரண்டு நாட்களில்
பசி, தாகம், அலைச்சல், அவமானம்
அவர்கள் உள்ளத்தை நசுக்கியது,
ஒரு வேளை சாப்பாடு கிடைப்பதே பெரிய வரம் என உணர்ந்தனர்….

இந்நிலையில் அன்றைய மாலை வேளையில் அவர்களது முன்னிலையில் வந்து நின்றார் தியாகராஜன்,  அவர்களின் முகத்தில் பசி, களைப்பு, கண்ணீர் அனைத்தும் தெளிவாகப் படிந்திருந்தன…

அதனை கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டவர்,.. தன் கையில் வைத்திருந்த வீட்டு பத்திரத்தையும், சாவியையும், கட்டு பணத்தையும் வனிதாவின் கரத்தில் திணித்தார்,…

அதன் பின்,.. “உனக்கு என் குடும்பத்து மேல அக்கறை இல்லாம இருக்கலாம் வனிதா… ஆனா என்னால அப்படி இருக்க முடியாது
இதை எடுத்துக்கோ, இனிமேல் உங்க வாழ்வை நீ பார்த்துக்கங்க,
இதோட நம்ம உறவும் முறிஞ்சு போச்சு” அந்த வார்த்தைகள் வனிதாவிற்குள் பேரிடியாய் விழ,
கண்ணீர் வெள்ளமாய் வழிந்தது…

“மன்னிச்சிடுங்க அண்ணா… தெரியாம பண்ணிட்டேன்…
என்னை மன்னிச்சிடுங்க…”
என்று கை கூப்பி அழுதார், ஆனால் தியாகராஜனின் பார்வை
ஒரு நொடிக்கூட அவரை நோக்கவில்லை, அவரின் முகத்தில் எந்த மென்மையும் இல்லாமல்,
பாறைபோல் இறுகிய மனதுடன்
மௌனமாக திரும்பி நடந்து சென்றார்…

வனிதாவின் அழுகையும், மனிஷாவின் நடுங்கும் பார்வையும்
அவரின் முடிவை மாற்றவில்லை,
அவர் போன பின்பு வனிதாவின் கையில் வீட்டு பத்திரமும் சாவியும் பணமும் மட்டும் எஞ்சியது, தமையனின் அக்கறை நிறைந்த உறவு அன்றோடு முறிந்து போயிருந்தது…

நாட்கள் மெல்ல நகர்ந்தது,
வனிதாவும் மனிஷாவும் இல்லாமல் வீட்டின் சூழலும் சுத்தமாகி, ஒரு விதமான அமைதி ஒவ்வொரு மூலையையும் நிரப்பியது….

தியாகராஜனின் உள்ளத்தில் எங்கோ சிறிய நெருடல் எப்போதாவது எழுந்தாலும்,
அவர் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு… ‘என் பிள்ளைகள் சந்தோஷம் தான் எனக்கு நிம்மதி’  என்ற உணர்வுடன், நிதர்சனத்தை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு விட்டார்…

மகனுடனும் மருமகளுடனும் ஓய்வான நிம்மதியை உணர்ந்தார், அவர்கள் சிரித்து பேசும் குரல், அவரின் மனதை மென்மையாய் வருடியது…

அந்த மாலை, சாமானிய உரையாடலில் தியாகராஜன் மகனை நோக்கி.. “ஏன்டா… உங்க மேரேஜைப் பத்தி
அனவுன்ஸ் பண்ணுற ஐடியா இருக்கா இல்லையா?
மாதங்களே ஓடிப்போச்சு.” என்று கேட்டார்,..

அந்த கேள்விக்குப் புன்னகையுடன் “இன்னும் ரெண்டு நாள்ல மதுவோட பர்த்டே வருதுலப்பா,
அன்னைக்கே பார்ட்டி வச்சி
அனவுன்ஸ் பண்ணிடலாம்” என்ற பதிலை அவன் தர, தியாகராஜனின் முகத்தில் பெருமகிழ்ச்சி பரவியது.
“அதுவும் சரிதான்…” என்றார் மனதில் ஒரு இனிய நிம்மதியை அடைந்தபடி…

******************

அன்று அலுவலகத்தில் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் மதுநந்தினி, பக்கத்தில் சுபாவும் ஹரிணியும் வேலை சுமையை மறந்து போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தனர்..

அந்த நேரத்தில் திடீரென்று சுபா சிரித்தவாறு,… “ஹேய் சூப்பரா இருக்குல! எனக்கும் இந்த மாதிரி ஒரு பாய் ஃபிரண்ட் இருந்தா செமையா இருக்கும், நல்லா ஸீன் போடுவேன்” என்று கூறினாள்..

அதற்கு ஹரிணியும்,.. “நானா இருந்தா அந்த ஆஃபீஸையே என்னோட கண்ட்ரோல்ல கொண்டு வந்திருப்பேன்” என்று கிண்டலாகச் சிரித்தாள்,…

“நான் ஆபிஸ்லயே என் ஆள் ரூம்ல ரொமான்ஸ் பண்ணுவேன்” சுபா வெட்க புன்னகையை சிந்திக் கொள்ள,.. “அடிப்பாவி,.. சரியான ஆளுதான் நீ” என்றாள் ஹரிணி சிரித்துக் கொண்டு,..

அவர்களின் உரையாடல் நந்தினியின் காதில் விழ, “என்னடி பேசிக்கிறீங்க” என்று ஆர்வத்துடன் கேட்டபடியே வீல் நாற்காலியை நகர்த்த முயன்றாள், ஆனால் பழுதான நாற்காலி அசைய மறுத்தது…

“ப்ச்! இது வேற” என்று முகம் சுழித்துக் கொண்டவளின் அருகில் வந்த ஹரிணி,.. “இந்த ரீல்ஸை பாரு” என்று தனது போனை காட்டினாள்..

அது கொரியன் டிராமாவின் ஒரு காட்சி, அலுவலகத்தில் நாயகி அமர்ந்திருந்த நாற்காலி பழுதாகி இருந்ததை பார்த்து, அருகில் இருந்தவர்கள் சிரித்துக்கொண்டே கிண்டல் செய்கின்றனர், ஆனால் அவளோ அந்த கணம் யாருக்கோ போன் செய்ய, சில நிமிடங்களில் அந்த நிறுவன உரிமையாளர் நேரடியாக புதிய நாற்காலியை தனது தோளில் சுமந்தபடி வர, எல்லோரும் வாய்பிளந்து பார்க்கின்றனர்,..

அந்த காட்சியை பார்த்துவிட்டு ஹரிணி நந்தினியிடம், “சூப்பரா இருக்குல! உன்கிட்டருக்கும் சேர் கூட ரொம்ப நாளா டேமேஜா தான் இருக்கு…” என்று சலிப்பாகச் சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள்…

அந்த நேரம் நந்தினியின் கண்களில் ஓர் யோசனை மின்னியது, புன்னகையுடன் தனது போனை எடுத்தாள், யாருக்கோ கால் செய்து மெதுவாக பேசியவள், அழைப்பை முடித்தவுடன் தோழிகளை நோக்கி.. “இன்னைக்கு உங்களுக்கு ஒரு ஷாக்கிங் இருக்கு” என்று சொல்லிவிட்டு சிஸ்டத்தில் மூழ்கினாள்…

“ஷாக்கிங்கா?” என்று திகைத்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, சில நிமிடங்களில் தாங்கள் பார்த்த காட்சியே நிஜமாகி கொண்டிருப்பதை கண்டு கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விழும் அளவிற்கு விரிந்து கொண்டது,..

லிப்டின் பக்கத்திலிருந்து  தனது தோளில் ஒரு புதிய நாற்காலியை தூக்கிக்கொண்டு, நேராக நந்தினியைக் நோக்கி நடந்துவந்தான் தீரஜ்..

அந்த தருணம்…
ஹரிணி சுபா மட்டுமல்ல, அங்கிருந்த ஒவ்வொருவரும் உறைந்துபோனார்கள், அந்த கொரியன் டிராமா சினிமாவை விடவும் ரியல்-லவ் ஹீரோ பெரிய சீனை அலுவலகத்தில் கொடுத்து விட்டிருந்தான்….

தனது தோளில் சுமந்து வந்த நாற்காலியை நேராக நந்தினியின் இடத்தில் வைத்தவன், சற்று வளைந்து அவளிடம்,.. “வேற எதுவும் வேணும்னா கேளு மது” என்று தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு அவளை நோக்கி ஒரு காதல் பார்வையை வீசினான்.

அந்த பார்வை நந்தினியின் உடம்பில் சிலிர்ப்பை பரப்பியது, முகத்தில் மலர்ந்த புன்னகையை அவளால் அடக்க முடியவில்லை…

தோழிகள் எல்லாம் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, தீரஜ் புன்னகையுடன் நடந்து அங்கிருந்து சென்றான்…

அவன் சென்ற பின்பு நந்தினி, ஹரிணியை நோக்கி புருவத்தை உயர்த்தி,.. “ஷாக்கிங் எப்படி?” என்று பெருமை நிறைந்த பார்வையுடன் கேட்டாள்….

“எ… என்னடி நடக்குது இங்கே? எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு… சுபா, என்னைப் பிடிடி!” என்று சொல்லியபடி ஹரிணி பக்கத்து நாற்காலியில் தடுமாறி அமர்ந்தாள்…

“போடி! என்னை பிடிக்கவே இன்னொரு ஆள் தேவைப்படுது” என்று சொன்ன சுபாவிற்கும் தான் பார்த்த காட்சியிலிருந்து மீள முடியவில்லை,…

அவர்களை பார்த்த நந்தினி வாய்விட்டு சிரிக்க,.. அதே வேளையில், ஹரிணி விழிகளை பெரிதாக விரித்து, “அப்போ… உனக்கும் தீரஜ் சாருக்கும்?” என்று கேட்க முடியாமல் இழுக்க,… நந்தினியோ,… “அது சர்ப்ரைஸ், இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டிக்கு வருவீங்கள்ல… அப்போ ரிலீஸ் பண்ணிடலாம்,” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு சிஸ்டத்தில் மூழ்கினாள்…

அவளது முகத்தில் இருந்த அந்த ரகசிய புன்னகை, ஹரிணி-சுபா இருவரின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்துவிட்டது போல் இருந்தது,…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
46
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்