Loading

பிறை -10

 

திடீரென வந்த தந்தையை எதிர்பாராமல் திகைத்து போனாள் பிறைநிலா.

 

ஹாஸ்டலில் தங்கி இருப்பதாக தானே அவர் நினைத்து வந்தது. ஆனால் வந்தவுடன் தான், மகள் செய்திருக்கும் விஷயங்கள் புரிபட தொடங்கியது.

 

தற்போது ரஞ்சனி வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தார் சிவானந்தம். எதிரே பயம் கவ்விய விழிகளோடு பிறை அமர்ந்திருக்க..

 

” நான் வந்துட்டு போன் போடாட்டி.. இன்னும் நீ ஹாஸ்டல்ல தான் தங்கிட்டு இருக்கேன்னு எங்ககிட்ட எல்லாம் பொய் பேசிட்டு இருந்திருப்பியா ” சிவானந்தம் கேட்டதும்.. கண்களில் நீர் நிரம்பி விட்டது அவளுக்கு.

 

” வாயை திறந்து பேசு பிறை.. உன்ன நம்பி தானே வெளியூருக்கு விட்டோம். உன் அம்மா உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கு. வீட்ல எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு தெரியுமா.. மனசு கேட்காம தான் தோட்ட வேலையை விட்டுட்டு உன்ன பார்க்க கிளம்பி வந்தேன். ஆனால் நீ என்னமோ சினேகிதி வீட்ல இருக்கேன்னு சொல்லுற ” அதட்டலும் கண்டிப்புமாக வந்தது அவரது குரல்.

 

” பா.. சத்தியமா உங்க கிட்ட மறைக்க நினைக்கல பா.. சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு. இங்க நடந்ததை சொன்னா கண்டிப்பா நீங்க என்னைய மேற்கொண்டு படிக்க விட மாட்டீங்க.. அதுனால தான் பா சொல்லல ” 

 

” அப்படி என்ன நடந்துச்சு.. என்ன நடந்தாலும் பெத்தவங்க கிட்ட உண்மையை சொல்லனுமா இல்லையா.. உன்ன அனுப்பிட்டு வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கோம். உன்ன பத்தி எங்களுக்கு தெரியும்.. ஆனால் சுத்தி உள்ளவங்க எல்லாரும் நல்லவங்கன்னு சொல்ல முடியாது. அதுக்கு பயந்துட்டு தான் நானும் உங்க அம்மாவும் பல முறை பத்திரம் சொல்லி அனுப்பினோம்.. ஆனால்…” என அவர் மகளை நம்பாத பார்வை பார்க்க..

 

” பிளீஸ் பா அப்படி மட்டும் பார்க்காதீங்க.. என்ன நடந்துச்சு நான் சொல்லுறேன் பொறுமையா கேளுங்க பா ”  என சென்னை வந்ததில் இருந்து விடுதியில் நடந்த தற்கொலை சம்பவத்தையும், அதன் பின் வந்த போலீஸ் விசாரணையும், விடுதியில் இருந்து அவளை அனுப்பியதும், அதன் பின் சுஷ்மிதாவின் மாமா வீட்டிற்கு வந்ததையும் கூறினாள். 

 

மகள் வாயிலாக அறிந்த உண்மையில் திடுக்கிட்டு போனார் சிவானந்தம். ” என்ன மா சொல்லுற.. என்ன இதெல்லாம்.. ஐயோ கடவுளே.. உனக்கு ஏதாவது ஆகிருந்தா நாங்க என்ன பண்ணிருப்போம் ” என கலங்கிய விழிகளோடு நெஞ்சில் கை வைத்துக் கொள்ள.. வேகமாக அவர் அருகே சென்று ஆறுதல் கூறினாள் பிறை.

 

” இதுக்குதான் பா சொல்லல.. இந்த ஊர்ல இந்த மாதிரி நடக்கிறது எல்லாம் சாதாரணம் பா. தயவுசெஞ்சு பதற வேணாம். இவளோட மாமா தான் என்ன பத்திரமா கூட்டிட்டு வந்து இவங்க வீட்ல வச்சிருக்காங்க ” என்றதும் ரஞ்சனியின் கணவன் சங்கரும் ஆமோதிப்பதாக தலை அசைத்தார்.

 

” கவலை பட வேண்டாங்க.. என் மருமகள் மாதிரி தான் உங்க பொண்ணும். என் பொண்டாட்டி அதெல்லாம் நல்லா பார்த்துப்பா.. உங்களுக்கு விருப்பம் இருந்தா, இன்னும் இருபது நாள் தான் இருக்கு. இங்கேயே இருந்து படிப்பை முடிக்கட்டும்.. நான் உங்களை கட்டாயப் படுத்தல.. உங்க மகள் உங்க இஷ்டம் ” என அவரும் பதமாக முடித்து விட்டார்.

 

” ஐயோ எனக்கு பிறையை கூட ரொம்ப பிடிச்சு போச்சுங்க.. வந்ததுல இருந்து என் கூடவே ஒட்டிக்கிட்டா… இங்க இருக்கிறதுல எனக்கொன்னும் சங்கடம் இல்லைங்க ” என ரஞ்சனியும் தன் பங்கிற்கு பேச.. சிவானந்தம் அமைதியாக இருந்தார்.

 

” உங்களுக்கு பிள்ளைங்க ” என மெதுவாக அவர்களை பற்றி விசாரிக்க..

 

” எனக்கு ரெண்டுமே பசங்க தாங்க..” ரஞ்சனி கூறிய மறுநொடி.. 

 

” பயலுக இருக்கிற வீட்லயா தங்கியிருக்க நீ ” என மகளை முறைக்க.. 

 

” ஐயோ என் பசங்க ரெண்டு பேரும் இப்போ இங்க இல்லைங்க.. ரெண்டு பேருமே வெளிநாட்ல தான் இருக்காங்க.. படிப்பு, வேலைக்காக அங்க போயிட்டாங்க.. நானும் என் வீட்டுக்காரர் மட்டும் தான் இருக்கோம். இப்போ சுஷ்மியும் , பிறையும் எங்க கூட இருக்காங்க ” ரஞ்சனி தெளிவாக விளக்கினாள்.

 

அதன் பின்பு தான் அவருக்கு சுற்று நிம்மதியாக இருந்தது. ” எனக்கு என்னமோ மனசு ஒத்து போகல மா.. உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப மனசு கஷ்டப்படுவா.. “

 

” அப்பா இப்போதைக்கு அம்மாட்ட சொல்ல வேணாம் பா.. அப்பத்தாக்கு தெரிஞ்சா உடனே கிளம்பி வர சொல்லிடும். இந்த இருபது நாள் மட்டும் முடிஞ்சுட்டா .. நம்மூர்ல பரீட்சை மட்டும் தான் பா எழுதனும் .. அப்பறம் படிப்பு முடிஞ்சுரும் ” தகப்பனை எப்படியாவது கரைத்து விடும் எண்ணத்தில் பிறை.

 

இதற்கே இத்தனை யோசனை செய்கிறார், கோவிலில் தீ பிடித்தது, அவளது அலுவலகத்தில் கேமரா இருந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வந்தால் , இந்நேரம் எல்லாம் அவள் ஊரில் உள்ள வீட்டில் இருப்பாள். அதனால் அதையெல்லாம் தெளிவாக அனைவருமே மறைத்திருந்தனர்.

 

எல்லாம் அவளது படிப்பிற்காக மட்டும் தான். படித்தால் மட்டுமே, வரும் காலத்தில் வளமாக வாழலாம்.

 

” அதான் பொண்ணு இவ்வளவு தூரம் கேட்டுட்டு இருக்காள .. கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க ” சங்கர் கூறியும் அமைதியாக அமர்ந்திருந்தார் சிவானந்தம்.

 

இறுதியாக.. ” நான் உன் அம்மாகிட்ட நடந்ததை எல்லாம் சொல்லிட்டு பேசறேன். அவ என்ன முடிவு செய்யுறாளோ அதான் என் முடிவும். நாளைக்கு பிரச்சனை வந்தா.. நானும் சேர்ந்து மறைச்சுட்டேன்னு சொல்லுவா.. அம்மா கிட்ட பேசுவோம் ” என இறுதி முடிவாக மனைவியை அழைத்தார்.

 

நீண்ட அழைப்பிற்கு பின் சிவகாமி போனை எடுத்தவர்.. ” பிள்ளையை பார்த்தாச்சாங்க.. எப்படி இருக்கா.. நல்ல இருக்காளா.. உடம்பு எலச்சு இருக்கா.. நல்ல சாப்பிட்டாளா ” என விடாது கேள்வி கேட்டு வைக்க.. சிவானந்தம் அமைதியாக இருந்தார்.

 

” என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம என்ன பண்ணுறீங்க.. ஹலோ ” என சிவகாமி அழைக்க.. ” இருக்கேன் சிவகாமி. உன்கிட்ட ஒரு யோசனை கேட்க தான் கூப்பிட்டேன் ” 

 

” என்கிட்டையா.. ” என யோசித்து விட்டு.. ” என்ன விஷயங்க ” என்ற மனைவிக்கு அனைத்தையும் கூறி முடித்து இருக்க.. முகமெல்லாம் வேர்த்து பயம் பிடித்து கொண்டது அவருக்கு.

 

” பிள்ளையை கையோட கூட்டிட்டு வந்துடுங்க.. வேண்டாங்க ” என மனைவி கூறவும் பிறையின் கண்கள் கலங்கிப் போனது.

 

” நான் பேசுறேன் பா ” என அவர் கையில் இருந்த போனை வாங்கி பேச ஆரம்பித்தாள் பிறை.

 

” மா.. ” 

 

” பிறை என்ன டி கதை.. புதுசா என்னவோ உங்க அப்பா சொல்லுறாரு. நீ தினமும் தானே என்கிட்ட பேசிட்டு இருக்க.. ஏன் என்கிட்ட சொல்லல.. நான் தான் புத்தி கெட்டவ…பிள்ளை பேசும் போதே கண்டு பிடிக்க தெரியாத மடச்சிருக்கி.. நீ அங்க இருக்க வேணாம் கண்ணு.. கிளம்பி வந்திடு ” என அவளை பேசவே விடாமல் பேசி இருந்தார் சிவகாமி.

 

நீண்ட அமைதிக்கு பிறகு.. ” மா நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க மா.. இந்த மாதிரி எல்லாம் இந்த ஊர்ல நடக்கிறது சகஜம் தான். ஆனால் அதுக்காக ஏன் மா என் படிப்பை விடனும். இதை முடிச்ச உடனே வேலைக்கு போகலாம் மா. நீதானே மா சொன்ன பொண்ணு வேலைக்கு போய் நாலு காசு பார்க்கனும்.. அப்பத்தான் நமக்கு மரியாதை இருக்கும்னு சொன்ன.. அதுக்குதானே மா நான் படிக்கிறேன் ” மகள் கூறுவதை கேட்ட சிவானந்தனுக்கு சுருக்கென்று இருந்தது. 

 

இத்தனை நாளும் மனைவி கையில் நாலு காசுகளை கொடுக்காதது எத்தனை பெரிய தவறு. அனைத்தையும் அம்மாவிடம் கொடுத்த மடத்தனத்தை எண்ணி நொந்து போனார்.

 

சிவகாமி அமைதியாக இருக்க.. மகள் கையில் இருந்த போனை வாங்கிய சிவானந்தம்.. ” பிள்ளை இங்கேயே படிப்பை முடிச்சிட்டு வரட்டும் சிவகாமி. அவளுக்கு அமைய போற புருஷன் சிவானந்தன் மாதிரி இருந்தா , அவளைப் பார்த்துக்க அவ கையில காசு வேணும்ல ..” என்றதும் சிவகாமிக்கு கண்கள் சடுதியில் கலங்கிப் போனது.

 

” ஐயோ நான் அப்படி சொல்ல வரலைங்க.. “

 

” எது எப்படியோ.. ஆனால் நீ சொன்ன விஷயம் சரி தான். இங்க இருக்குற மனுஷங்க நல்ல மனுஷங்க.. நம்ம பிள்ளைய பார்த்துப்பாங்க.. அதுனால விட்டுட்டு வரேன்.. இருபது நாள் தானே ” என்றதும் அரை மனதாக தலை அசைத்தார் சிவகாமி.

 

” உன்னோட கவலை எனக்கு புரியாம இல்ல.. ஆனால் பிள்ளையோட எதிர்காலம் இருக்குல்ல.. “

 

” புரியுதுங்க.. பார்த்து பத்திரம் ” என போனை வைத்திருந்தார் சிவகாமி.

 

” இனி எதையும் அப்பாகிட்ட மறைக்க கூடாது கண்ணு.. எதுனாலும் போனை போட்டு சொல்லிடு. நான் வந்து நிப்பேன்.. ” என அவளுக்காக கொண்டு வந்த பலகாரத்தைக் கொடுத்தார்.

 

” உங்க வீட்ல இருப்பான்னு எனக்கு தெரியல.. இல்லைனா வயல்ல இருக்கிற காய்கறி எல்லாம் கொண்டு வந்துருப்பேன்..” என அவர் தயங்க.. கிராமத்து மனம் மாறாத மனிதரை பார்த்து வியந்த சங்கர்.. ” அதுனால என்ன, பிறைக்கு கல்யாணம் வைங்க.. கல்யாண சாப்பாடே சாப்பிடலாம் ” என்றவருக்கு நிறைவாக தலை அசைத்தார் சிவானந்தம்.

 

” கீதா புள்ள எங்க இருக்கு “

 

” அவ அண்ணன் வீட்ல இருக்காப்பா.. அங்க அண்ணி பாப்பா எல்லாம் இருக்காங்க “

 

” சரி மா உடம்பை பார்த்துக்க.. ஜாக்கிரதையா இரு.. அப்பா வரேன் மா ” என அங்கிருந்த அனைவரிடம் சொல்லிக் கொள்ள.. தங்கும்படி கூறிய சங்கரை சமாதானம் செய்து ஊருக்கு கிளம்பி இருந்தார் சிவானந்தம்.

 

தந்தை சென்றதும் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டவாறே சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள் பிறை.

 

” திடீர்னு என்ன டி உங்க அப்பா விசிட்டு ” சுஷ்மிதா நக்கல் செய்ய..

 

” அதான் டி எனக்கும் தெரியல.. இதுவரை இப்படியெல்லாம் வீட்டை விட்டு வெளிய வந்தது இல்லையா.. அதான் பார்க்க வந்துருப்பாரு”  என்றதும்.. மூவரும் கமிஷனர் ஆபிசில் இருந்து ஓடி வந்தது நினைவிற்கு வந்தது.

 

” கீதா வீட்டுக்கு போயிட்டாளான்னு கேளு டி ” என்றதும் தான் சுஷ்மிக்கு அவளது நினைவே வந்தது.

 

அழைப்பு விடுத்தவளுக்கு வீட்டிற்கு சென்றதாக தகவல் வர.. பிறகு பேசுகிறேன் என போனை வைத்திருந்தாள் சுஷ்மிதா. மதியம் அவர்கள் கமிஷனர் ஆபீஸ் வாசலில் நின்று கமிஷனரை பார்க்க வந்திருப்பதாக கூற.. உள்ளே சென்று பத்து நிமிடத்தில் வருமாறு கூறி விட்டு சென்றனர்.

 

அதே போல மூவரும் பத்து நிமிடத்தில் உள்ளே அழைக்கப்பட.. முதலில் சுஷ்மிதா பின்னால் கீதா அதற்கு பின்னால் பிறை என மூவரும் உள்ளே சென்றனர்.

 

அவர்கள் மூவரையும் பார்த்தவனுக்கு யோசனை மேலோங்க.. ” இப்போ என்ன பிரச்சனை பண்ணிட்டு வந்தீங்க ” என மூவரையும் ஒன்றாக பார்த்து நக்கலாக கேட்டான் ஆதிதேவ்.

 

” சார் இன்னைக்கு எங்க ஆபீஸ்ல நடந்த இன்சிடென்ட் பத்தி தான் பேச வந்தோம் ”  சுஷ்மிதா பேசினாள்.

 

” அந்த கேமரா கேசா “

 

” ஆமா சார்.. “

 

” அதுல என்ன.. அவன் இப்பவும் என் கண்ட்ரோல்ல தான் இருக்கான் ” 

 

” அது .. நாங்க எப்பவுமே அந்த ரூம்ல ப்ரீ டைம்ல பேசிட்டு வெளிய வந்துடுவோம் சார். மத்தபடி எதுவும் பண்ண மாட்டோம்.. ஆனால் நேத்து தான்.. கீதா டிரெஸ்ல சாப்பாடு பட்டு.. அந்த ரூம்ல அவ ட்ரெஸ் சேன்ஞ் பண்ணா..  ” அதற்கு மேல் என்ன பேசுவது என அவளுக்கு தெரியவில்லை.

 

கீதா பதட்டமாக அவனை பார்த்து.. ” வீட்ல தெரிஞ்சா படிக்க விட மாட்டாங்க சார்.. ” கூறும் போதே கண் கலங்கியது. 

 

அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்தவன்.. அவர்கள் பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கும் பிறையை பார்த்தவன்.. ” பின்னாடி அந்த பொண்ணு எதுக்கு வந்தாங்க ” என பிறையை காட்ட.. இருவரும் விலகி அவளுக்கு வழி விட.. 

 

பல்லை கடித்தவள்.. ” என் ப்ரெண்ட்க்கு பிரச்சனை வரக்கூடாது சார். அதுக்கு தான் வந்தோம் ” பளிச்சென்று வந்தது பதில்.

 

பின்னே அவர்கள் இருவரும் எத்தனை பெரிய விஷயத்தை கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் விடுத்து என்னை துருவி கேட்கிறானே என்ற ஆதங்கம் தான்.

 

” ஓ.. சரி நீங்க ரெண்டு பேரும் வெளிய இருங்க.. பிறை கிட்ட டீடெயில் கேட்டு வாங்கிக்கிறேன் ” என்றதும் இருவரும் முழித்து விட்டு வெளியேற.. ஆதியின் பார்வை மொத்தமாக அவள் ஒருத்தியின் மீது.

 

தலை முதல் கால் வரை ஆராயும் பார்வை பார்க்க.. உடல் கூசிப் போனாள் பிறைநிலா.

 

” கீதா டிரஸ் மாத்திட்டு வந்தது ஓகே.. ஆனால் அதை தவிர நீ அந்த ரூம்ல எதுவும் பண்ணலையா ” கூர் பார்வையுடன் அவன் கேட்டதில்.. விக்கித்து போனவள்.. 

 

” உங்க லிமிட் தாண்டி பேசுறீங்க.. ” என மூக்கு விடைக்க முறைத்தவளை.. சுவாரசியமாக பார்த்தவன்..  ” என்னோட லிமிட் என்னனு உனக்கு தெரியுமோ ” என்றவனது கேள்விக்கு பதில் கூற முடியாமல் .. தவிப்பாக நின்றாள் பிறைநிலா.

 

இவன் ஏன் தன்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறான் என்பது அவளுக்கு இன்னும் புரியவில்லை.

 

அப்படி என்ன நடந்தது அந்த அறையில் என யோசித்தவளுக்கு விடையாக ஒரு விஷயம் மண்டையில் உரைக்க.. அதிர்ந்து போனாள் பிறைநிலா.

 

சனா💖

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
16
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்