யாஷ் பிரஜிதனின் கூற்றில் உறைந்த நிதர்ஷனா, “நீ… நீ என்ன சொல்ற? என் கனவுல வந்ததுலாம் உனக்கு எப்படி தெரியும்?” எனத் திகைத்திட,
“உன் கனவுல வந்தது எனக்கு எப்படி தெரியும்?” குறுகுறுவென்ற பார்வை அவளது உயிரைக் கிழித்து ஊடுருவியது.
“இல்ல… இல்ல நீ என்கிட்ட எதையோ மறைக்கிற… கதிருக்கு எப்படி உன் ஆராய்ச்சி பத்தி தெரியும்? உன் அம்மாட்ட நடிச்சு, உன் ஆராய்ச்சிக்குத் தேவையானதை வாங்க தான கூட்டிட்டு வந்த… இப்ப நிவே பத்தி தெரிஞ்சும் ஏன் அவங்க சின்னதா கூட அதிர்ச்சி ஆகல?” என வெளிறிய முகத்துடன் கேட்டவள் பின்,
“மழை… மழை வந்துச்சு… ஆனா நம்ம தெருவைத் தாண்டி வரும்போது வெயில் அடிச்சுச்சு எப்படி?” என்றாள் எச்சிலை விழுங்கியபடி.
அவளைக் கையைக் கட்டிக்கொண்டு பார்த்தவன், “கதிருக்கு என் ஆராய்ச்சி எப்படி தெரிஞ்சுச்சுன்னு யோசிக்கிறது இருக்கட்டும். முதல்ல உனக்கு எப்படி என் ரிசர்ச் பத்தி தெரியுது. நான் சொல்லலையே!” என்றான் தலை சாய்த்து.
“நீங்க தான் சொன்னீங்க…” உர்ரென்ற முகத்துடன் அவள் உரைக்க, அவன் அர்த்தமாய் ஏறிட்டான்.
“கனவுல!” இம்முறை குரல் உள்ளே சென்றது அவளுக்கு.
“கனவுல, நான் இங்க இருந்து போறேன்னு சொன்னதும் இந்தக் கண்ணு கலங்குச்சோ?” ஒற்றைப் புருவம் நெறித்து யாஷ் கேட்க, அவளிடம் மெல்லிய அதிர்வு.
“இ… இல்லையே” வேகமாய் பொய்யுரைத்தவளைக் கண்டு அவனிதழ்களில் மர்மப் புன்னகை.
“எனக்காக அந்த மூனை பார்த்து, ‘வெண்ணிலவே’ சாங் பாடுன மாதிரி எனக்கும் கூட ட்ரீம் வந்துச்சே…” என ஆழம் பார்த்ததில், நிதர்ஷனா பதறி விட்டாள்.
“இல்ல… இல்ல… ஒ… ஒனக்காக நான் ஏன் பாட போறேன்! இல்லையே கனவுல அதெல்லாம் வரல.”
“அப்போ நான் விட்டுட்டுப் போனது மட்டும் வந்துச்சோ?”
அவளிடம் பதில் இல்லை. மௌனமாகி விட்டவளின் கன்னம் வருடியவன், “சரி உன் பிரதர் கிடைச்சுட்டான் என்ன செய்யப் போற?” என்றான் நிதானமாக.
அவனுக்குத் தான் இவளை யாரென்றே தெரியவில்லையே. அந்நினைவில் கண்ணில் குளம் கட்டியது.
மனதில் இருக்க வேண்டியவன் எதிரில் வெறும் நினைவாய்! துணையாய் உடன் நிற்க வேண்டிய தமையன் யாரோ ஒருவனாய் மாறி விட்ட நிலையில், உள்ளத்தின் அழுத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது போக, “தெரியல… எங்கயாவது போறேன். நீங்கள்லாம் யாருமே இல்லாத இடத்துக்கு” என்றாள் மெல்ல விசும்பியபடி.
“யாரும் இல்லாத இடத்துக்குப் போகலாம். பட், அங்கேயும் நான் இருப்பேனே!” தோள் குலுக்கி கூர் விழிகளால் விளாசிட,
“நீ இல்லைன்னாலும் இந்தக் கலப்பட கண்ணு என் கனவுல வந்து பயமுறுத்துது…” என்றவள், அதன்பிறகே நினைவு வந்தவளாய், “நீ என்னைக் கடத்துறதுக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு தடவை உன் கண்ணு மட்டும் என் கனவுல வந்துச்சு தெரியுமா?” என்றாள் அதிசயமாய்.
அவனிடம் அசத்தல் புன்னகை. ஆடவனின் வசீகரத்தில் மீண்டுமொரு முறை தொலைய துடித்த இதயத்தைப் பிடித்து நிறுத்தியவள்,
“எதுக்கு இவ்ளோ கேவலமா சிரிக்கிற?” என உதடு சுளித்தாள்.
அதற்கு பதில் கூறாதவன், “உன் பிரதர்க்கு ட்ரக்ஸ் இஞ்செக்ட் பண்ணிருக்காங்க” என்றான் மெதுவாக.
அதில் அதிர்ந்தவள், “எந்த நாசமா போனவன் இப்படி செஞ்சது யாஷ்? அதுக்கும் அவன் இப்படி நடந்துக்குறதுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் குழம்ப, “அளவுக்கு அதிகமான ட்ரக்ஸ் மூளையைக் குழப்பும் நிது” எனப் பதில் அளித்ததில், “மூளை குழம்புன மாதிரி தெரியல. ஒரேடியா போன ஜென்மத்துக்கு போனவன் மாதிரி பேசுறான்…” என்றாள் மூக்கை உறிஞ்சி.
“எஸ். அவன் போன ஜென்மத்துக்கு தான் போயிருக்கான்” அலட்டலின்றி யாஷ் கூறியதில், ‘பே’ வென விழித்தாள்.
“என்ன உளறுற அரக்கா?”
“அவனுக்கு மூளை கொலாப்ஸ் ஆகி, ஹாலுசினேஷன் ஆகியிருக்கு. நம்மளை பார்த்து அவன் ஏதேதோ கற்பனை பண்ணிக்கிறான். ஆனா இது பெர்மனண்ட் இல்ல. ட்ரக்ஸ் பிளட்ல இருந்து மொத்தமா வெளியேற 3 வீக்ஸ் ஆகும். அதுவரை அவனுக்கு இந்த ஹாலுசினேஷன் இருக்கும். தென் கம்ப்ளீட்டா ப்ரெசென்ட்க்கு வந்துடுவான்”
“அடக்கடவுளே! அப்போ இன்னும் 3 வாரத்துக்கு இந்தக் காந்தியவாதி உளறலை கேட்கணுமா?” நிதர்ஷனாவின் திகைப்பில் முறுவலித்தவன், “அவன் திரும்பி வந்ததே பெருசு தான…” என்றான்.
“உண்ம தான் யாஷ். கடத்தி வச்சவன், அவனை எதுவும் செய்யாம விட்டானே… அதுவே பெருசு தான்” எனும்போதே, கதிரவன் திடுதிடுவென ஓடி வந்தான்.
“என்னடா ஆச்சு?” நிதர்ஷனா பதற்றமாய் வினவ,
“என்னை அவன்கிட்ட கோர்த்து விட்டுட்டு ரெண்டு பேரும் வந்துட்டீங்க… தண்டி யாத்திரை போலாம்னு கண்மணிய கிறுக்கி பிடிக்க வச்சுட்டு இருக்கான். இதுல ஹைலைட்டே என்ன தெரியுமா? யாஷோட அம்மாவை துரோகின்னு சொல்லிட்டு இருக்கான். அவங்க செம்ம காண்டுல இருக்காங்க…” என்றதும், இருவரும் நொந்து மீண்டும் நிவேதனின் அறைக்கு வந்தனர்.
அங்கோ, கண்மணி உதட்டைப் பிதுக்கியபடி நின்றாள்.
ஆதிசக்தி ஆத்திரம் கக்க நிவேதனை முறைக்க, அவனோ “என்னை இங்கு சிறையெடுக்க வைத்தது நீங்கள் தானே! என்னை விடுவியுங்கள். கண்மணி நீயாவது சொல். என்னை விட்டுப் பிரிய முடிவெடுக்கும் முன், நாம் இருவரும் உயிருக்குயிராய் காதலித்தோம். அந்தக் காதலுக்கு சிறிதளவு உண்மையாய் இருக்கலாமே! எப்போதும் உன் குடும்பத்திற்கு மட்டுமே விசுவாசமாய் இருப்பது உன் வழக்கம் அல்லவா?” எனக் காதலைப் பிழிய,
சிந்தாமணி தான், “பாவம் அண்ணா. ரொம்ப கதறுறாங்கள்ல… விடுதலை குடுத்துடு கண்மணி” என்றாள் நக்கலாக.
“வாயை மூடுடி!” கண்மணி அதட்டிட, நிவேதன் சில நொடிகளில் தலை கிறுகிறுத்து மயங்கி விட்டான்.
“அப்பாடா மயங்கிட்டான்” என்ற நிலையில் அனைவருமே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
—-
“இளா… நீ ரெண்டு பொண்ணுங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போ. அங்க எல்லாரும் பயந்துருப்பாங்க. அவங்ககிட்ட விவரத்தை சொல்லிடு மாமா” என்றதும், சிந்தாமணி “ஏன் அத்தை நாங்களும் இங்க இருக்கோம்…” என்றாள் வேகமாக.
கண்மணியும் மறைமுகமாய் தலையசைக்க, அவரோ உறுதியாய் மறுத்தார். நிவேதனின் மீது கண்மணிக்கு காதல் எதுவும் வந்து தொலைத்து விடுமோ என்ற பயம் ஆதிசக்திக்கு.
அவளும் நிவேதனின் நித்திரை கொள்ளும் முகத்தை அவ்வப்பொழுது பார்ப்பதும் பின் குனிந்து கொள்வதுமாக இருந்தாளே!
கதிரவன் தான் தீவிர சிந்தனையில் இருந்தான்.
“நீ என்னடா யோசிச்சுட்டு இருக்க?” என நிதர்ஷனா வினவ, “அதில்ல… காந்தி காலத்துக்குப் போய் கூட காதல் ரீல் ஓட்ட முடியும்னு தெரியாம போச்சு எனக்கு” என்றான் வருத்தமாக.
“தெரிஞ்சுருந்தா மட்டும் அப்படியே புடிங்கிருப்ப…” நிதர்ஷனா வரைமுறையற்று திட்ட,
அவளை முறைத்தவன் “நம்ம ஏரியால இருக்குற தனலட்சுமி, வரலட்சுமியை எல்லாம் எனக்கு முன்ஜென்மத்துல நீ தான் காதலியா இருந்தன்னு உருட்டிருப்பேன். உசாராவது பண்ணிருப்பேன். இப்படி சிங்கிளா உங்ககிட்ட மாட்டிட்டு அவஸ்தை பட வேணாம்ல…” எனப் போலிக்கண்ணீர் சிந்தினான்.
இதைக் கேட்ட சிந்தாமணியோ, “ஹலோ மிஸ்டர் கதிரவன்… அப்படியெல்லாம் உருட்டுனா பிகர் செட் ஆகாது. மெண்டல் ஹாஸ்பிடல் வேன் தான் வரும். உச்சி மண்டைல எலுமிச்சையை தேய்ச்சு விட்டுருவாங்க…” என வாயைப் பொத்தி சிரித்தாள்.
“அப்படி தேய்ச்சி விட கூட ஒரு பொண்ணும் வராது சிந்தா…” நிதர்ஷனாவும் தன் பங்கிற்கு வாரியதில், “அடிப்பாவி” எனக் கதிரவன் நெஞ்சைப் பிடித்தவன், “நான் என் மச்சானை எழுப்பி விடப் போறேன்…” என்றான் வேகமாக.
“அடேய் அவனை ஏன்டா எழுப்புற. நான்லாம் ஹிஸ்டரி ஒழுங்கா படிக்காம, சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் வருசத்தை மாத்தி போட்டு என் ஹிஸ்டரி டீச்சர்ட்ட பெரம்படி வாங்கி, ஸ்கூலை விட்டே ஓடிருக்கேன். நீ எல்லாம் மேப்ல ஆசிய கண்டத்தை ஆப்ரிக்கா கண்டத்துல குறிச்சு விட்டு, உன் சோசியல் சார்ட்ட செருப்படி வாங்குனதுலாம் மறந்து போச்சாடா… இவன் எந்திரிச்சா தண்டி யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம்னு ஸ்டார்ட் பண்ணிடுவான்டா… மூணு வாரத்துக்கு இவனை யாரும் எழுப்பாதீங்க…” என நிதர்ஷனா மன்றாடிட, கண்மணி சிந்தாமணியுடன் ஆதிசக்தி இளவேந்தனும் சிரித்து விட்டனர்.
சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, ஒரு விரலால் கன்னத்தை தாங்கி அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதன் நிதர்ஷனாவை மட்டுமே பார்த்திருந்தான்.
கூடவே பற்பல யோசனைகளும் ஓடிக்கொண்டிருக்க, ஆதிசக்தி அவனுக்கு கண்ணைக் காட்டி வெளியில் அழைத்தார்.
அதில் அவனுடன் பெரியவர்களும் வெளியில் நகர, அவர்களை கவனியாது நடைபெற்றது இளையவர்களின் அரட்டை.
“நான் செருப்படி வாங்குன கதையை எல்லாம் பப்லிகா சொல்ல சொன்னாங்களா…” கதிரவன் கடுப்படித்து விட்டு,
“இவன் எந்திரிச்சா, இவனோட ஹாலூஸினேஷன் உலகத்துல, என் ஆளு யார்னு கேக்கலாம்ல. விட்ட குறை தொட்ட குறையா நம்ம ஏரியால ஏதாச்சு ஒரு பொண்ணு இருந்துருக்கும்ல. அது யாருன்னு சொல்லிட்டா, நான் போய் பொண்ணு கேக்குற வேலையை பார்ப்பேன்…” என்று அனைத்துப் பற்களையும் காட்டிட,
“உங்கம்மா உன்ன சாணில முக்கி அடிக்கும் பரவாயில்லையா?” என நக்கலடித்த நிதர்ஷனாவைப் பார்த்து பக்கென சிரித்தனர் இரு பெண்களும்.
“சாணில முக்குனாலும் பரவாயில்ல. இந்த நாய்க்குலாம் போன ஜென்மத்துல லவ் இருந்துருக்கு. எனக்கு இருக்க கூடாதா?” எனும்போதே நிவேதனிடம் அசைவு தெரிந்தது.
நால்வரும் அவனை பயத்துடன் ஏறிட, அவனோ கண்விழித்து விட்டு கண்மணியைக் கண்டு காதல் பார்வை வீசினான்.
‘இதுக்கு இது ஒரு குறைச்சல்…’ தலையில் கை வைத்து நிதர்ஷனா ஓரமாக அமர்ந்து விட, கண்மணி நெளிந்தாள்.
“எப்போதும் என் கண் பார்த்து கதைக்கும் உன் விழிகளுக்கு இன்று என்னானது கண்மணி?” நிவேதன் கணீர் குரலில் கேட்க,
“ம்ம் ‘மெட்ராஸ் ஐ’ வந்துடுச்சு…” கதிரவன் குறுக்கிட்டான்.
சிந்தாமணி முடியாமல் கெக்க பெக்கவென சிரித்து விட, நிவேதன் அவளை தீயாய் சுட்டான்.
“கண்டவனின் பேச்சுக்கெல்லாம் எதற்கு சிரித்து வைக்கிறாய் சிந்தாமணி. உன்னை வீட்டில் சித்தி தேடிக்கொண்டிருப்பார். விரைந்து வீட்டிற்குச் செல். நீ எவ்வளவு அடம்பிடித்தாலும் இந்த துரோகி கதிரவனுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்க, நான் ஒரு போதும் உடன்படமாட்டேன்…” என்று தீர்மானமாய் கூற, கதிரவனும் சிந்தாமணியும் ஒரு சேர திகைத்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்வாய் பார்த்துக்கொள்ளும் கண நேரத்தில் இருவரின் விழிகளிலும் மோதல்.
சற்றே சங்கடம் மிகுந்திட இருவரும் அமைதியாக நிதர்ஷனா தான், “என்ன கருமாந்திரம் ட்ரக்ஸ் அது… என் அண்ணனை மாமா வேலை எல்லாம் பார்க்க வைக்குது” எனப் பொருமியபடி வெளியில் செல்ல, அங்கோ ஆதிசக்தி தீவிர முகபாவையுடன் மகனிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“நிவேதனோட பேக்ரவுண்ட் செக் பண்ணியா யாஷ்?”
“போயிட்டு இருக்கு மம்மா. எனிதிங் சீரியஸ்?”
“ம்ம்… கன்பார்மா தெரியல. ஆனா நிவேதன் வரதராஜனோட பையனா இருக்கலாம்னு தோணுது” என்ற அன்னையின் கூற்றில் திகைத்தான்.
“வாட்? அங்கிள்க்கு ஒரு பொண்ணு மட்டும் தான?”
“இல்ல… ஒரு பையனும் பொண்ணும் இருந்தாங்க. ஆனா சின்ன வயசுலயே அவனோட பையன் காணாம போயிட்டு திரும்ப கிடைக்கவே இல்லன்னு கேள்விப்பட்டேன். அந்த நேரத்துல தான் நிதாவும் காணாம போயிருக்கா…” என்று இழுத்தார்.
“ம்ம்… இப்பவாவது நிதாவோட அப்பாவைப் பத்தி சொல்லுவீங்களா?” எனக் கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவன் வினவ, இருவரிடமும் கடும் அமைதி.
“எல்லாம் கை மீறி போகும்போதும் எதுக்கு இந்த சைலன்ஸ்னு எனக்குப் புரியல மிஸ்டர் இளவேந்தன்?” காட்டத்துடன் கேட்டான் யாஷ்.
“வரதராஜன் அங்கிளாவும் நான் மிஸ்டராவும் இருக்கும்போது, மனசு விட்டு எதையும் சொல்ல முடியல யாஷ்!” இளவேந்தன் வேதனை அப்பிய குரலில் அவனிடம் இருந்து உரிமையைப் பெற்றுக்கொள்ள தவித்தார்.
ஒரு நொடி அவரை ஊடுருவியவன், பதிலேதும் கூறவில்லை.
ஆதிசக்திக்கு மனது வலித்தது.
“என்னால எல்லா நேரமும் எல்லாருக்கும் கஷ்டம் தான் வந்துருக்கு யாஷ்… என்னால நானும் நல்லாயில்ல. என்னை சுத்தி இருக்குறவங்களும் நல்லாயில்ல” என்றார் விரக்தியுடன்.
“நான் கேட்டதுக்கான பதில் இது இல்ல?” தனது பிடியில் அழுத்தமாய் நின்ற மகனிடம் மறைக்க இயலாது, “உனக்கே தெரிஞ்சுருக்கும். இவ்ளோ நாளும் தெரிஞ்சுக்காமலா இருந்துருப்ப?” அவரும் சாமர்த்தியமாய் பதில் அளித்தார்.
“ஆள் யார்னு தெரிஞ்சுது? ஏன் எப்படி எதுக்குன்ற ரீசனிங் புரியலையே!” தாடையைத் தடவினான் யாஷ் பிரஜிதன்.
“மிஸ்டர் வரதராஜன் உங்க பிலவ்ட் ஹஸ்பண்ட்டோட தங்கச்சி அமுதவல்லியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அது ஓகே… அவங்களுக்கு நிது பிறந்தா. அதுவும் ஓகே… ஆனா நிவேதனும் ரித்தியும்?” எனக் கேள்வியுடன் நோக்க, தான் சொன்னதற்கிணங்க வரதராஜனை ‘மிஸ்டர்’ என அழைத்ததில் இளவேந்தனுக்கு சற்றே புன்னகை பிறந்தது.
கூடவே கசந்த முறுவலுடன் பேச்சைத் தொடர்ந்தார்.
“அந்தத் துரோகி, ஆதியும் அலெஸ்ஸும் கல்யாணம் பண்ணிட்டு இத்தாலி போனதும், ரிசர்ச் பண்றேன்னு தஞ்சாவூர்ல தான் ரொம்ப நாளா இருந்தான். இடைப்பட்ட வருஷத்துல கல்கத்தாலையும் இத்தாலியையும் மாறி மாறி இருந்திருக்கான். அது எங்களுக்கு தெரியல… ஆனா அவனோட அப்பா, எங்க ஊர்க்காரர். மரியாதையான ஆளு. அவனுக்குன்னு சொந்தம் அவர் மட்டும் தான். பையன் பிசினஸ்லயே மூழ்கி போயிருக்கான்னு, அந்தப் பெரிய மனுஷன் தான், அவனுக்கு அமுதாவைப் பொண்ணு கேட்டாரு.
அமுதாவுக்கும் அவனைப் பிடிச்சு இருந்துச்சு. ஏற்கனவே அலெஸ்ஸால மனஸ்தாபம் ஆனதுல, மாமா மறுத்துட்டாரு. ஆனா அமுதாவுக்கு ஒன்னு வேணும்னா வேணும்தான். பிடிவாதத்தை யாருக்காகவும் மாத்திக்க மாட்டா. மாமாகிட்ட பயமும் இருக்காது அவளுக்கு. எதையும் நேரா பேசிடுவா. நிதா மாதிரி தான்… ஆனா நிதாவுக்கு இருக்குற நிதானமும் விவேகமும் அவளுக்கு இல்லைன்னு தான் சொல்லணும். நான் சரியா வளர்க்கலையோ என்னவோ, வம்படியா வரதராஜனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. கொஞ்ச நாளைக்கு அவன் அவளை தஞ்சாவூர்லயே தான் வச்சுருந்தான். கொஞ்ச நாள் கழிச்சு கல்கத்தா கூட்டிட்டுப் போனான். அங்க போனதும் அவள் உண்டாகிட்டா… அவனால அவளை தனியா பாத்துக்க முடியலன்னு, புருஷனை விட்டு வரமாட்டேன்னு அடம்பிடிச்சவளை நான் தான் வலுக்கட்டாயமா தஞ்சாவூருக்கு கூட்டிட்டு வந்தேன்.
நிறை மாசம் ஆகிடுச்சு. அவளுக்கு வளையல் போடுற பங்க்ஷன் அப்பவும் அவன் வரல. அமுதாவால அமைதியா இருக்க முடியாம, வரதராஜனைப் பார்த்துட்டு வரேன்னு கல்கத்தா கிளம்பிட்டா. அவள் கூட நானும் போனேன். அங்க போனதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது, அந்த பரதேசிக்கு ஏற்கனவே ஒரு குடும்பமே இருக்குன்னு. காலேஜ் முடிச்சு கல்கத்தாவுக்குப் போன புதுசுலயே அங்க ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கான். வசதியான பொண்ணு, தனக்கு வியாபாரத்துக்கு யூஸ் ஆகும்னு…
அந்த பொண்ணுக்கு அப்போ தான் குழந்தை பிறந்துருந்துச்சு. அந்தக் கைக்குழந்தை தான் ரித்திகாவா இருக்கும். ஒரு சின்ன பையனும் இருந்தான். என் தங்கச்சியை வச்சிருந்த அதே வீட்ல அந்தக் குடும்பத்தை வச்சு சேவகம் பண்ணிட்டு இருந்தவனைப் பார்க்கையில அங்கேயே வெட்டி போடணும்னு இருந்துச்சு.
அமுதாவைப் பார்த்தும் கூட அவன் பெருசா ரியாக்ட் பண்ணல. அவனை பொறுத்தவரை அவனோட அப்பா ஆசைக்காக, அவனோட இச்சைக்காக என் தங்கச்சியை பயன்படுத்திருக்கான். அதை அமுதாகிட்டயே சொன்னதும், அவள் ரொம்ப உடைஞ்சுட்டா.
மேற்கொண்டு அவன்கிட்ட ஒரு வார்த்தை பேசல. அமைதியா என்னைக் கூட்டிட்டு வந்துட்டா. அப்ப மட்டுமில்ல. அதுக்கு அப்பறம் அவள் சாகுற வரைக்கும் என்கிட்ட பேசவே இல்ல. எவ்ளவோ கெஞ்சுனேன். அவனைக் கொன்னு கூட போடுறேன். உன் கோபத்தை அவன் மேல காட்டிடுன்னு, ஆனா அழுத்தமா இருந்துட்டா.
குழந்தை பிறந்ததும், பித்து பிடிச்ச மாதிரி உக்காந்துருப்பா. அவன் மேல அளவு கடந்த நம்பிக்கை வச்சதோட வெளிப்பாடுன்னு புரிஞ்சுது. ஆனா அந்த நம்பிக்கையை தப்பானவன் மேல வச்சுட்டாளே… கையில குழந்தையை வச்சுட்டு, யாரை பார்க்குறதுன்னு தெரியாம அந்த பரதேசியை ஒன்னும் செய்யாம இருக்கோமேன்ற குற்ற உணர்வோட இருக்கும்போதே, தண்டவாளத்துல தலையைக் குடுத்து என் தங்கச்சியும் அவள் குழந்தையும் செத்துட்டாங்கன்ற நியூஸ் தான் வந்துச்சு” என்றவரின் கண்கள் கலங்கிப் போனது.
இன்னும் அந்த துயரத்தின் தாக்கம் அவரது வதனத்தில் பிரதிபலிக்க, யாஷ் “அதுக்கு அப்பறம் நீங்க கேஸ் குடுக்கலையா?” எனக் கேட்டான்.
“குடுத்தேன். அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சதுல இருந்தே நான் சும்மா இல்ல யாஷ். லீகலா அவனை உள்ள தள்ளணும்னு நினைச்சேன். ஆனா சட்டப்படி அந்தப் பொண்ணு தான் அவனோட மொதோ பொண்டாட்டி, அதனால கேஸ் நிக்காதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல கேஸை நடத்துனா, என் தங்கச்சி மனநிலை சரியில்லாதவ… அது இதுன்னு சொல்லி அவள் பேரை நாறடிக்க தான் பார்த்தான். அதை விட குழந்தை அவனோடதே இல்லன்னு, பொய்யா அவதூறு பரப்பி என் தங்கச்சியோட ஒழுக்கத்தையே கேள்விக் குறியாக்குனான். அதெல்லாம் இன்னும் என் தங்கச்சியைப் பாதிச்சுது.
நாங்க தான் பொய் கேஸ் போட்டுருக்கோம்னு சொல்லி எங்களை ரெண்டு நாள் முழுக்க ஸ்டேஷன்ல இருக்க வச்சான். அப்போ மாமாவோட குடும்பமெல்லாம் ஒண்ணா தான இருந்தாங்க. இந்தப் பிரச்சினைக்கு அப்பறம் தான், எல்லாருமே ஊரை விட்டுப் போறதை பத்தி பேச்சு வார்த்தை நடத்துனாங்க. அமுதவல்லியும் இறந்து போகவும், நான் இந்த கேஸை விடமாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டேன். அதுல என் சொந்தக்காரங்க என்மேல கோபப்பட்டு மொத்தமாவே இங்க இருந்து போய்ட்டாங்க. ஆனா மாமாவும் அழகேசனும் எனக்குத் துணையா நின்னாங்க.
அந்த வரதராஜன் அப்படி எல்லாம் அடங்குற ஆள் இல்லைன்னு அப்பறம் தான் தெரிஞ்சுது. அழகேசனுக்கும் கிருஷ்ணவேணிக்கும் அமுதா கல்யாணம் நடக்குறதுக்கு கொஞ்ச மாசம் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு. அப்போ கிருஷ்ணவேணி மூணு மாசம். அவங்க ஜீப்ல போறப்ப ஆக்சிடென்ட் பண்ணிட்டான். கிருஷ்ணவேணி குழந்தை கலைஞ்சு, கால் உடைஞ்சு ரொம்ப மாசம் படுத்த படுக்கையா இருந்தா. அந்தப் பொண்ணு அப்போ கூட அமுதாவை ஏமாத்துனவனை சும்மா விடக்கூடாது எனக்காக பாக்காதீங்கன்னு தான் சொல்லுச்சு… இந்த அன்பானவங்களை நான் எப்படி காயப்படுத்த விட முடியும்.
என் வீட்ல எனக்குன்னு இருக்குறவங்களை இழக்க எனக்கு மனசு வராம, மொத்தமா எல்லாத்தையும் நிறுத்திட்டேன்.
சரியா அந்த நேரத்துல தான், அலெஸ் கூட பிரச்சினை ஆகி ஆதி வந்துட்டா… அதுக்கு அப்பறம் மறுபடியும் அவனோட போராடி… ப்ச்…” எனக் கண்ணில் இருந்து சூடான திரவம் வழிய பேசியவர் எதேச்சியாய் நிமிர, அங்கு நிதர்ஷனா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.
‘கனவுல வந்த மாதிரி, நான் இவங்க தங்கச்சி பொண்ணா? அப்போ அதெல்லாம் கனவு இல்லையா?’ தலை வலித்தது அவளுக்கு. அமுதவல்லி திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து பெண்ணுள்ளம் கொதித்தது. முகமே பார்க்கவில்லையென்றாலும் அவளது தாயல்லவா? அனைத்தும் சேர்ந்து அவளை அழுத்தி மயக்க நிலையை அடைய வைக்க, நிதர்ஷனா கீழே விழும்முன்னே தனது நீண்ட கரத்தால் தாங்கிப் பிடித்தான் யாஷ் பிரஜிதன்.
வரதராஜனைப் பற்றி நல்ல எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை தான். ஆனால், தற்போது அவரது பெயரை உச்சரித்தாலே வெறுப்பு பரவியது. இதில், தன்னவளின் மயங்கிய நிலை அவனை அதிகமாய் அச்சுறுத்தியது.
இப்படி மயங்கி விழுந்து தானே… தன்னை மறந்தாள்! இப்போது எதை மறக்கப் போகிறாளோ! என்ற பயம் எழுந்தாலும், அவளை அள்ளி அணைத்து தூக்கியவன், “என்னைக் கூட மறந்துக்கோடி, உன் ப்ரதர் மாதிரி பல டீகேட்ஸ் முன்னாடி போய் என்னை சாவடிக்காத…” எனப் புலம்பியவாறே வேறொரு அறைக்குத் தூக்கிச் செல்ல,
இவர்களின் பேச்சுக்கு காரணமான வரதராஜன் முகம் முழுதும் படர்ந்த ஆத்திரத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தார்.
அன்பு இனிக்கும்
மேகா