அத்தியாயம் – 36
“ஏதாவது பேசிட்டு வரலாமே” தீரஜ் வினவ,.. “என்ன பேசுரது நான், எனக்கு வார்த்தையே வரல, சந்தோசத்துல மூச்சு முட்டி போயிருக்கேன்” என்றாள்,..
“ஆஹான்”அவன் குறும்பு புன்னகையில் வினவியவன், திடீரென்று,… “அந்த மனிஷா என்னவெல்லாம் சொன்னா” என்று கேட்டான்,…
“இப்போ எதுக்கு அந்த சாத்தனோட பேச்சு” அவள் சலித்துக் கொள்ள,.. “என்னை பத்தி என்னவெல்லாம் சொல்லி இருக்கானு நானும் தெரிஞ்சுக்கனும்ல,” என்றான்,…
“என்ன சொன்னா என்ன? அதையெல்லாம் நான் மனசுல ஏத்திக்கல” அவள் சொல்ல,… “ஓஹோ மனசுல ஏத்திக்காம தான் என்னை விட்டு போனியாக்கும்” அவன் சிறு கடுப்புடன் சொல்ல,… “பார்த்தீங்களா கோப போடுறீங்க, இதுக்கு தான் அவளை பத்தி பேச வேண்டாம்னு சொன்னேன்” அவள் சொல்ல,… “சரி நான் கோபப்படல சொல்லு” அவன் வினவ,… அவளும் மனிஷா சொன்ன அனைத்தையும் மெதுவாக விவரிக்கத் தொடங்கினாள்.
அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தீரஜ் கவனமாகக் கேட்டு கொண்டிருந்தான்,
சில நேரங்களில் புருவம் சுருங்க, சில நேரங்களில் கண்களில் கோபம் சுட்டெரிந்தது, ஆனால் அவள் கையை விட்டுவிடாமல் இறுகப் பிடித்திருந்தான்…
“நீ என்ன நினைக்கிற?” என்று அவன் ஆழமாக அவள் விழிகளில் பார்த்து வினவிட,. அவள் சற்றே சலிப்புடன், “இப்போ எதுக்கு தோண்டி தோண்டி துருவுறீங்க? அதெல்லாம் உங்க பாஸ்ட்… காதலிச்ச டைம்ல எல்லா ஆம்பிளைகளும் பண்ணதை தானே நீங்களும் பண்ணி இருக்கீங்க” என்றாள்.
தீரஜ் சற்று அமைதியாய் புன்னகைத்து,.. “ம்ம்… ஆனா நான் அவளை கிஸ்லாம் பண்ணினதே இல்ல, அவ கையைத் தாண்டி வேற எதையும் தொட்டதில்ல, என்னோட ஃபீலிங்ஸ்… உண்மையிலே ஃபர்ஸ்ட் டைம் வெளிவந்தது உன்கிட்டதான் மது, நான் கொடுத்த முதல் கிஸ் கூட உன்னோட உதடுகளுக்குத்தான்” அந்த வார்த்தைகளை கேட்டவுடனே அவள் ஆச்சரியமாய் அவனை திரும்பிப் பார்த்தாள்…
‘அந்த சாத்தான் இதையும் பொய் தான் சொன்னாளா? பிசாசு… அவளெல்லாம் மனித ஜென்மமே இல்லை!’ என்று உள்ளுக்குள் கொந்தளித்தவளுக்கு… அடுத்த நொடியே.. ‘என் அரவிந்தோட முதல் முத்தமும் முதல் அணைப்பும்… எனக்குத்தான்’ என்ற உண்மையை நினைத்தவளின் மனம் நெகிழ்ந்து போனது, அவனது விழிகளில் தெரிந்த அந்த நேர்மையை, குரலில் தெரிந்த அந்த நிச்சயத்தை அவளால் மறுக்கவே முடியவில்லை, அந்த உணர்வு,.. அவளது இதயத்தை ஆழமாக உலுக்கியது…
அதன் பிறகு அந்த இரவு,
இருவரின் உரையாடல்கள் காதல் சொட்ட சொட்ட நெஞ்சை நிரப்பின,
கடந்த காலத்தில் நடந்த முக்கிய தருணங்களை பகிர்ந்து கொண்டனர், இதற்கு பிறகு வரவிருக்கும் நாட்களை கனவுகளால், ஆசைகளால், எதிர்பார்ப்புகளால் நிறைத்தனர்.
பேசிச் சிரித்து கொண்டிருந்ததில் நேரம் கடகடவென்று ஓடிபோனது, இருவரும் வீடு திரும்பினர், அவர்கள் வீட்டினுள் நுழைந்த போது கடிகாரம் ஒன்றைத் தாண்டி இருக்க, வீடே மயான அமைதியில் மூழ்கியிருந்தது…
அந்த நேரம் திடீரென்று அவளை கரங்களில் தூக்கிக் கொண்ட தீரஜ், எதுவும் சொல்லாமல் மாடிப்படிகளை நோக்கி நடந்தான்.
முதலில் அதிர்ச்சியடைந்த நந்தினி,
அடுத்த கணமே தன்னுடைய கரங்களை அவன் கழுத்தைச் சுற்றி வளைய வைத்தாள், அந்த நிமிடத்தை ரசித்தாள்… அவள் மனதில் பதிந்திருந்த ஆசைகளுள் இதுவும் ஒன்றல்லவா!
அவள் முகத்தில் தெரிந்த அந்தச் சந்தோசம், அவனுக்கு உலகின் எல்லா செல்வத்தையும் தாண்டிய பொக்கிஷமாக தோன்றியது. ‘இவள் மகிழ்வில்தான் என் நிம்மதி அடங்கியுள்ளது’ என்று உணர்ந்தவன், அந்த நொடியே அவளுக்காக மட்டுமே வாழ வேண்டும் என தீர்மானித்தான்…
அறைக்குள் வந்ததும், அவளை மெதுவாக மெத்தையில் கிடத்தியவன், மெல்ல அவளது தலைமுடியை வருடியபடி,.. “நீ ஆசைப்பட்டதையெல்லாம் நிறைவேத்திட்டேன்… இன்னும் ஏதாவது ஆசை இருக்கா, மது?” என்று கேட்டான்..
அவள் சிரிப்பு கலந்த பார்வையோடு ஆம் என்று தலை அசைக்க, ஆர்வம் பீறிட்டு எழுந்த அவன், அவளது விழிகளை ஆழ்ந்து நோக்கி.. “என்ன ஆசை?” என்று மெல்ல கேட்டான்…
அதற்குப் பதிலால் அவள் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு, மெல்லிய குரலில்.. “இந்த ஜென்மம் முழுக்க உங்களோட இதே அன்பும், இதே காதலும் குறையாம வேணும்” அவளது வார்த்தைகள் அவன் உள்ளத்தையே உருகச் செய்தன… அவளை நெருக்கமாக அணைத்தபடி,.. “என் அன்பும், காதலும் உனக்கு மட்டுமே மது,
நான் சுவாசிக்கிற காற்றிலிருந்து என் உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கூட உன்னால தான் வாழ்கிறதா உணர்கிறேன், என் வாழ்க்கையில் எது மாறினாலும், உன்னை நேசிக்கும் இந்த மனசு மட்டும் ஒருபோதும் மாறாது, நான் உன்னோடு இருக்கும் வரை உனக்கு சின்ன வேதனையையோ கண்ணீரையோ வரவிட மாட்டேன்,
உன் சந்தோஷத்துக்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டேன், நீ என் மனைவி மாத்திரமில்லை மது… என் உயிரின் அர்த்தமே நீ தான், நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்னு சொல்ல வார்த்தை இல்ல, ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ, இந்த காதல், இந்த அன்பு, இந்த இதயம் எல்லாம் உனக்காகத்தான், உனக்கு மட்டும் தான்” என்றான்,…
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளின் இதயத்தின் ஆழத்தில் பாய்ந்து, மனதை பூரிக்கச் செய்தது, கண்களில் தன்னிச்சையாக நீர் பெருகி, கன்னத்தின் வழியே வழிந்தது,
அந்தக் கணநேரத்தில் அவள் தன்னுடைய வாழ்நாள் முழுவதற்கும் ஆசைப்படும் பேரன்பு, அவள் கணவனின் அன்பில் நிறைவேறிவிட்டதாய் எண்ணினாள்,…
அவள் நடுங்கும் கரங்களை அவன் கரங்களின் மேல் வைத்து,
“இதுவே எனக்கு போதும் அரவிந்த், எனக்கு வேற எதுவும் இனி வேண்டாம், உங்களோட இந்த அன்பால வாழ்க்கையில் வரும் எல்லா சங்கடங்களையும் நான் சந்தோஷமோட தாங்கிடுவேன்,” என்று இதழ்கள் துடிக்க சொன்னாள்….
அவளின் கண்ணீரை விரல்களால் துடைத்து விட்டு, அவள் கன்னத்தில் அவன் முத்தமிட்ட போது, அவளோ அன்பால் உருகி அவன் மார்பில் தன்னை புதைத்துக் கொண்டாள், அவளின் அந்த உச்சமான நெகிழ்ச்சி, அவன் சொன்ன அன்பின் வலிமையை முத்திரையாய் குத்தியது….
***************
சமையலறை முழுக்க மசாலா வாசம் பரவியிருந்தது, கணவனுக்கு மிகவும் பிடித்தமான உணவை சமைத்து கொண்டிருந்தாள் நந்தினி, வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும், அவள் கையால் சமைத்து கொடுப்பதே அவளுக்கும் இஷ்டம் அவனுக்கும் இஷ்டம், அதனால் அன்று மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வந்திருந்த காரணத்தினால் அவள் சமையல் செய்ய வந்து விட்டாள்,..
கடாயில் இருந்ததை கரண்டியால் கிண்டிக் கொண்டிருந்தவள்,… “ஏய்” சடுதியில் கேட்ட குரலில் திரும்பினாள், வனிதாவும் மனிஷாவும் கதவின் வாசலில் நின்று கொண்டிருந்தனர்,..
சலிப்போடு அவர்களை பார்த்தவள், மீண்டும் தனது வேலையில் மூழ்கிட, மனிஷாவிற்கோ கோபமாக வந்தது..
“உனக்கு அவ்வளவு எகத்தளமாடி? என் மேல கை வைக்கிறியா?” என்று நந்தினியை நெருங்கி அவள் கரத்தை பலமாகப் பற்றிட,
வலியில் நந்தினியின் முகம் சுருங்கியது…
“பிரச்சனை பண்ணாம போயிடு, மனிஷா,” என்று அமைதியாகச் சொன்னாலும், அவளது குரலில் வலியின் கரகரப்பு தெரிந்தது,..
“அப்படி தான்டி பண்ணுவோம்,” என்று வனிதா நெருங்கி வந்து
“பிச்சைக்கார நாய்க்கு வந்த வாழ்வை பார்த்தியா? இதுல திமிரு வேற” என்று நஞ்சைக் கக்கினார்,..
நந்தினி கண்களில் தீப்பொறிகள் மின்னிட.. “நான் பிச்சைகாரினா… அப்போ நீங்களும், உங்க பொண்ணும் யாரு?” அவளது வார்த்தைகள் கூரிய கத்திபோல் விழுந்தன…
“என் அம்மாவையே எதிர்த்து பேசுறியா?” என கோபத்தில் சத்தமிட்ட மனிஷா, அவளது கையைப் பிடித்து முறுக்கினாள்…
வலியின் உச்சியில் துடித்த நந்தினி, வலி தாங்க முடியாமல், உடனே அவள் கரத்தைத் தட்டி உதறினாள்,
அந்தச் செயல் மனிஷாவின் சினத்தை எரிமலையாக வெடிக்கச் செய்தது…
“உன் திமிரு இன்னும் குறையல இல்லடி! என்னை தள்ளி விடுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா? இனிமே இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது… போடி!” என்று அவளை தன் முழு வலிமையோடு பலமாக தள்ளிட,..
அவள் கீழே விழ இருந்த நேரம் ஒரு வலுவான கரம் அவளைத் தாங்கிக் கொண்டது…
“மது…”
அந்த பரிச்சயமான குரலில் அவள் கண்கள் பளிச்சிட்டன, அவள் கணவனே அவளை தாங்கி பிடித்திருந்தான், அந்த கணம் அவள் நிம்மதியோடு மூச்சை வெளியிட, அவன் விழிகளோ தீஞ்சுவாலையாய் மின்னியது,..
நந்தினியை மெதுவா நிற்க வைத்தவன்,.. மனிஷா மற்றும் வனிதாவை ஆத்திர பார்வையுடன் நோக்கி… “என் மனைவி மேல கை வைக்க எவ்வளவு தைரியம் இருக்கனும் உங்களுக்கு?” என்று கர்ஜிக்கும் குரலில் கேட்டான்,..
அவனது கர்ஜனை குரலில் சமையலறையின் சுவர்களே அதிர்ந்தன…
மனிஷாவோ சிறிதும் பயப்படாமல் சினக்கண்ணில் பார்த்து, “அவ மேல கை வைக்குறது என்ன கொலை பண்ணுற அளவுக்கு ஆத்திரம் வருது?” என்றாள்..
அந்த வார்த்தை தீரஜின் நரம்பை பிளந்து சென்றது, ஒரு கணம் கூட தாமதிக்காமல் பாய்ந்து சென்று மனிஷாவின் கூந்தலை கொத்தாகப் பிடித்தவன், தர தரவென்று அவளை இழுத்துக் கொண்டே, வீட்டின் வாயிலை நோக்கி சென்றான், மனிஷாவின் அலறல் வீடு முழுக்க ஒலித்தது…
வனிதா பதறி,.. “என் பொண்ணை விடுடா! அவளை விடு” என்று கெஞ்சிக்கொண்டு வந்தார்…
ஆனால் தீரஜ் அவரின் குரலைக் காதில் வாங்கவே இல்லை
வீட்டின் வாசலுக்கு இழுத்து வந்து, ஒரே தள்ளலில் மனிஷாவை வெளியில் வீசியவன், பின் வனிதாவையும் கரங்களால் தள்ளி விட்டு, “என் முன்னாடியே என் மதுவை அப்படி பேசுன உன்னை சாகடிக்க தான் கையெல்லாம் பரபரக்குது, என் அப்பா முகத்துக்காக விடுறேன்” வெறியோடு எச்சரித்தவன்,.. “என் வீட்டிலிருந்து ஓசி சோறு சாப்பிட்டு, ஆத்தாலும் மகளும் சேர்ந்து என்ன ஆட்டம் ஆடுறீங்க? போங்கடி! பிச்சை எடுத்துப் பசிச்சு துடிச்சா தான் உங்களுக்குப் புத்தி வரும்!” அவன் குரல் முழங்கத்தோடு வெளிவர, தாய் மகளின் முகமே வெளிறிப் போனது,..
வேடிக்கை பார்த்தபடி இருந்த வாட்ச்மேனை நோக்கி, “கேட்டை உடனே சாத்து! இனிமே இவளுங்க கால் உள்ளே வரக்கூடாது!” என்று கட்டளையிட்டான்..
அதிர்ந்த முகத்துடன் வனிதாவும் மனிஷாவும் கதவுக்குப் புறம்பே நிற்க, வீட்டின் கேட் சத்தமிட்டு மூடப்பட்டது,..