Loading

பிறை -9

 

நடந்ததை  ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள் பிறை. ” இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப டி.. இப்போ நீ நல்லா தான் இருக்க.. நீ முதல்ல அதுல இருந்து வெளிய வா .. என் அத்தை ரஞ்சனி உனக்காக உனக்கு பிடிச்ச சமையலா பண்ணி இருக்காங்க டி.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. நீ வந்தா தான் சாப்பாடாம் ” சுஷ்மிதா தனது தோழியை தேற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருக்க.. பிறையின் நினைவுகள் எல்லாம் கோவிலை சுற்றி தான் வந்தது.

 

புடவையை வீசி விட்டு அவன் வெளியேறியதும்..  வேகமாக நான்கைந்து பெண்கள் உள்ளே வந்தனர். அவர்களோடு ரஞ்சனியும் பதறிக் கொண்டு வந்தார்.

 

ரஞ்சனி வந்ததும் அவள் உடம்பில் தீக்காயம் இருக்கிறதா என ஆராய்ந்து விட்டு, வேகமாக புடவையை கட்டி விட தொடங்கினார்.

 

அதுவரை கல் போல் நின்றவளை, உலுக்கி எடுத்து.. ” பிறை ஒன்னும் இல்ல மா .. இங்க பாரு ” என அவளை தன் பக்கமாக இழுக்க.. ரஞ்சனியை பார்த்ததும் பாய்ந்து வந்து கட்டிக் கொண்டவள், கதறி விட்டாள்.

 

” இங்க பாரு டா.. இது ஒரு ஆக்சிடென்ட் தான். இனிமே கவனமா இருக்கனும். தைரியமா இருக்கனும்.. வா வீட்டுக்கு போகலாம் ” ஆறுதல் கூறி அழைத்து சென்றவருக்கும் மனம் கலங்கியது தான். ஆனால் தானும் கலங்கினால் அவள் மேற்கொண்டு கலங்கிப் போவாள் என்பதால் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாள் ரஞ்சனி.

 

வீட்டிற்குள் வந்ததும் விஷயத்தை தனது கணவரிடம் போனில் பகிர்ந்து கொண்டவர்.. மகளை அழைத்து விஷயத்தை கூறி பிறையை பார்த்துக் கொள்ளும் படி கூறி விட்டு, அவளுக்கு பிடித்ததை சமைக்க சென்றார்.

 

கட்டிய புடவையோடு அப்படியே தான் அமர்ந்திருந்தாள் பிறைநிலா. சுஷ்மிதாவின் அழைப்பில் மெல்ல எழுந்து வந்து டைனிங் டேபிள் முன்பு அமர்ந்து விட.. அவளுக்காக பிடித்த உணவுகளை செய்து பரிமாறினார் ரஞ்சனி.

 

” இங்க பாரு பிறை .. அதை எல்லாம் மறந்துடு. இப்போ சாப்பாட்டை மட்டும் சாப்பிடு ” என்றுதும் மெதுவாக தலையசைத்து முதல் வாயை எடுத்து வைத்து விட்டு யோசனைக்கு சென்று விட.. ரஞ்சனிக்கு தான் அவளை எப்படி தேற்றுவது என்றே புரியவில்லை.

 

” ஒருவேளை அந்த ஆளு உள்ள வந்ததை நினைச்சு பயந்துட்டு இருக்கியோ… ” என்றதும் சட்டென்று நிமிர்ந்து ரஞ்சினியை பார்த்தாள் பிறை.

 

” என்ன பிறை.. அவர் எதுவும் உன் கிட்ட தப்பா… ” என வார்த்தைகளை முழுதாக கோர்க்க முடியாமல் பாதியில் நிறுத்த..

 

” ஐயோ.. அதெல்லாம் இல்ல ஆண்டி ” என வேகமாக மறுத்தாள் பிறை.

 

” அதானே பார்த்தேன். அவரு என்ன சாதாரண ஆளா.. நம்ம ஊர் கமிஷனர். ரொம்ப நேர்மையான அதிகாரி. உன்னோட நல்லநேரம் அவரு அந்த இடத்தில இருந்துருக்காரு.. சரி சூடு போறதுக்குள்ள சாப்பிடு ” என அவர் அடுக்குகளைக்குள் சென்று விட.. சுஷ்மிதா தான் இந்த புதிய விஷயத்தில் பிறையை அதிர்ந்து பார்த்தாள்.

 

” அடியே அப்போ உள்ளே வந்து உன் தாவணியை கழட்டுனது உன் ஆளு தானா.. ” வாய் இல்லாமல் கேட்டு வைத்து விட்டு, பிறையிடம் ஒரு முறைப்பையும் பரிசாக பெற்றுக் கொண்டாள்.

 

” அதுசரி இவ்வளவு விஷயம் நடந்துருக்கா.. ஆமா அந்த கமிஷனருக்கு கோவில்ல என்ன வேலை ” 

 

” ரொம்ப முக்கியம் பேசாம சாப்பிடு டி ” என வேகமாக உணவை உள்ளே தள்ளியவள்.. எழுந்து அறைக்கு சென்றிருந்தாள்.

 

இருவரும் நன்றாக உணவு உண்ட திருப்தியில் ரஞ்சனி அனைத்தையில் எடுத்து வைத்து வேலையில் மூழ்க.. சுஷ்மிதா அறைக்குள் வந்தாள்.

 

” சரி வந்து இவ்வளவு நேரம் ஆகிடுச்சு.. சேலையை மாத்த மனசில்லையோ… ” நக்கல் கேள்வியில் சட்டென எழுந்து மாற்றுடையை எடுத்துக் கொண்டு மாற்றி வந்தாள் பிறை.

 

” ஏன் டி உன் புத்தி இப்படி போகுது “

 

” சரி உனக்கு வேணாம்னா போ. எனக்கு கமிஷனரை பிடிச்சிருக்கு பா ” சுஷ்மிதா காற்றில் அம்பு விட்டு கொண்டிருக்க.. அவளை தீயாக முறைத்தாள் பிறை.

 

” இப்போ எதுக்கு டி முறைக்கிற.. தானும் படுக்க மாட்டேன்.. தள்ளியும் படுக்க மாட்டேனா எப்படி ..”

 

” ஒழுங்கா ஊர் போய் சேரனும்.. நியாபகத்துல வச்சுக்க ” என மறுநாள் இன்டென்ஷிப் செல்வதற்கு தேவையானவற்றை எடுத்து வைக்க தொடங்கினாள் பிறைநிலா.

 

என்னதான் சுஷ்மிதாவிடம் எதுவும் இல்லாதது போல காட்டிக் கொண்டாலும்.. மனதில் அவன் முன் தாவணியின்றி இருந்த நினைவுகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. ‘ ஐயோ நெருப்பை கவனிக்காம இப்படி அந்த ஆளு முன்னாடி அப்படி ஒரு கோலத்துல இருந்திருக்கேன்.. என்னைய என்ன நினைச்சிருப்பான் அந்த ஆளு.. இனிமே அவனை பார்க்கவே கூடாது கருப்பையா ” என வேகமாக குலதெய்வத்திற்கு வேண்டுதலை வைத்தாள்.

 

இரவு முழுவதும் மெத்தையில் உருண்டு கொண்டிருந்தாள். தூக்கம் என்பது எட்டாக்கனியாகிப் போனது. நினைவுகள் முழுவதிலும் கமிஷனர் ஆக்ரமித்து இருக்க எப்படி உறக்கம் வரும்.

 

” என்ன டி கமிஷனர் ட்ரீம்ஸா ” சுஷ்மிதாவின் நக்கல் காதில் விழுந்தாலும் , அவளுக்கு பதிலளிக்கவில்லை. போர்வைக்குள் பதுங்கி இருந்தவளுக்கு உடலெங்கும் சிலிர்த்து போனது. 

 

‘ ஐயோ அவனை ஏன் தான் நினைக்கிறேனோ ‘ மனதிற்குள் அலுத்துக் கொண்டாலும்.. வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

 

மறுநாள் இருவரும் வழக்கமாக கிளம்பும் நேரத்தில் கிளம்பி இருந்தனர். சிவகாமிக்கு அழைத்து பேசினாள் பிறை.

 

” சொல்லு பிறை.. எப்படி இருக்க “

 

” நல்லா இருக்கேன் மா.. அப்பா எங்க”

 

” வயலுக்கு போயிருக்காரு மா “

 

” அப்பத்தா என்ன பண்ணுது ” அகிலாண்டேஸ்வரியின் கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என தெரியாமல் சிவகாமி மௌனம் காக்க..

 

” என்ன மா ஒன்னுமே சத்தத்தை காணோம் “

 

” ஆ.. இருக்கேன் பிறை.. அப்பத்தா இன்னைக்கு உங்க அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க “

 

” என்னவாம் “

 

” பேரனை பார்க்கவாம் “

 

” திரும்ப கல்யாணத்தை பத்தி பேசவா “

 

” இல்ல கண்ணு.. அதெல்லாம் உங்க அப்பா பேசிட்டாரு.. நீ அதை பத்தி நினைக்காத.. படிப்பை மட்டும் பாரு. நாங்க பார்த்துகிறோம் ” என்றதும் தான் மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

 

ஒரு பிரச்சனையில் இருந்து விடுதலை என்ற நினைப்பில் இன்டென்ஷிப் கிளம்பி சென்றாள் பிறை.

 

இன்றும் அதே சிக்னல். அதே கூட்ட நெரிசல். இருவரும் ரோட்டை கடந்து வந்து , பாதையில் நடக்க.. சுஷ்மிதா எதையோ எதிர்பார்த்து கண்களை அலைபாய செய்தாள்.

 

” என்ன டி உன் ஆள காணோம் ” என்றதும் .. பல்லை கடித்தவள்.. ” வாயை மூடு டி.. இவ வேற ” பிறை நடையை கூட்ட.. அவள் பின்னால் ஓடினாள் சுஷ்மிதா.

 

அவர்களது கம்பெனி வாசலில் கூட்டமாக இருக்கவும், இருவரும் ஓடி சென்று பார்க்க.. ஒரு மாணவனை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ். 

 

அவனை பார்த்ததும் இருவருக்கும் அதிர்ச்சி தான். ” என்ன டி அங்க தேடினோம். உன் ஆளு இங்க பெர்பார்மன்ஸ் பண்ணிட்டு இருக்காரு ” 

 

” நமக்கு.தேவையில்லாத விஷயம் இது. நான் உள்ள போறேன்.. நீ பார்த்துட்டு வா ” என பிறை உள்ளே சென்று விட.. சுஷ்மிதா நின்று சண்டை காட்சிகள் முடியும் வரை பார்த்து விட்டே வந்தாள்.

 

” அடியே பிறை.. என்னாச்சுனு கேளு.. ” சலிப்பாக பிறை ” ஐயோ நான் எதையும் கேட்க விரும்பல டி.. வேலை இருக்கு ” 

 

” ரொம்பத்தான் பண்ணுவ ” சுஷ்மிதா வேலையை தொடங்க.. அலுவலகத்தில் உள்ள அனைவரும் அந்த கதையை தான் பேசிக் கொண்டிருந்தனர்.

 

” ஆனாலும் இந்த பையனுக்கு இவ்வளவு தைரியம் இருக்க கூடாது.. யாரோட போட்டோ எல்லாம் அதுல இருக்குன்னு தெரியலையே ” அருகில் உள்ள பெண்ணின் சத்தத்தில் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

அலுவலகத்தில் உள்ள லேடீஸ் ரிலாக்சேஷன் அறையில் கேமராவை  பொருத்தி இருந்தான் அந்த ஆடவன். அவனும் இவர்களை போல இன்டென்ஷிப் முடிக்க வந்தவன் என்ற தகவலில் மேலும் அதிர்ந்தனர்.

 

வழக்கமாக அந்த அறைக்கு செல்லும் ஒரு பெண் அன்று உடை மாற்றவேண்டிய சூழலும்.. திடீரென கேமரா இருக்குமா என்ற எண்ணத்தில் அதை செக் செய்து இருக்கிறாள். 

 

அவளும் புதிதாக வந்த மாணவி தான். வீட்டில் சென்னைக்கு போவதால் ஆயிரம் அறிவுரைகளை கூறி இருந்தார்கள். அதில் இந்த கேமரா விஷயமும் ஒன்று என்பதால் அதை சோதித்து பார்க்க.. அதில் அகப்பட்டது அந்த கேமரா.

 

அதிர்ந்து போனவள் அலுவலகத்தில் யாரிடம் கூறாமல் , சென்னையில் உள்ள ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியேற.. இங்கு கமிஷனர் பற்றி தீவிரமாக நியூஸ் சென்று கொண்டிருந்ததால்.. நேரடியாக கமிஷனரிடம் புகாரை கூறி இருந்தாள்.

 

திடீரென அலுவலகத்திற்குள் வந்தவன்.. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்க்க.. வந்த இரண்டாம் நாளே.. அலுவலகம் முடிந்த அரை மணி நேரத்திற்கு பின் அந்த மாணவன் , லேடீஸ் அறைக்குள் புகுந்தது தெரிந்தது. 

 

உடனே அலுவலகத்தில் கூறி அவனை அழைத்து வர செய்தவன்.. சட்டை காலரை பிடித்து வீதிக்கு அழைத்து வந்து அடித்த அடியில் மொத்த கூட்டமும் நடுங்கிப் போனது.

 

இப்படி ஒரு அடியை பார்த்தாலே இனி யாருக்கும் தப்பு செய்ய தோன்றாது. அந்த அளவிற்கு அடி ஒன்று இடியை விட கொடுமையாக விழுந்தது.

 

கேட்டதில் இருந்து ஆணி அடித்ததை போல அமர்ந்திருந்தாள் பிறைநிலா. சென்னை அவளை ஒவ்வொரு முறையும் மிரட்டி செல்கிறது.

 

” என்ன சுஷ்மி இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்ன “

 

” பின்ன இதுவே வேலையா இருக்காங்க.. நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கனும் ” எனும் போதே கீதா கதையை கேட்ட படி உள்ளே வந்தாள்.

 

” நீங்க ரெண்டு பேரும் அந்த ரூம்ல எதுவும் டிரஸ் மாத்தி இருக்கீங்களா டி ” கீதா பதட்டத்துடன் கேட்க.. இருவரும் இல்லை என்பதாக தலை அசைத்தனர். ஆனால் அடுத்த நொடியே இருவருமே அதிர்ந்தார்கள்.

 

பின்னே நேற்று தான் கீதா அங்கே உடை மாற்றினாள். அதுவே இப்போது தான் அவர்களுக்கு நினைவிற்கு வந்தது.

 

நேற்றைய தினம் மதிய உணவின் போது தான், ரசம் கீதா மீது சிதறி விட.. ஆடை முழுவதும் அபிஷேகம் ஆகியது. உடனே சுஷ்மிதா அருகில் இருக்கும் கடைக்கு சென்று அவளது சைசில் ஒரு டாப்பை மட்டும் வாங்கி வந்தாள்.

 

அதை வாங்கியவள், அந்த அறையில் தான் உடை மாற்றி இருந்தாள்.

 

” இப்போ என்ன டி செய்யுறது.. ” கீதா கண்ணீர் மல்க கேட்க.. இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை.

 

” வேற வழி இல்ல கமிஷனரை தான் பார்க்கனும்” சுஷ்மிதா கூறவும் அதுதான் இருவருக்கும் சரியென பட்டது. ஆனால் பிறைக்கு அவனை சந்திப்பதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் தோழிக்காக செய்ய வேண்டிய நிலை.

 

” கண்டிப்பா எதாவது பண்ணியே ஆகனும் சுஷ்மி. என் அண்ணனுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா அவ்வளவு தான்.. ” பதறினாள் கீதா.

 

” இரு டி.. இன்னைக்கு  மூணு மணிக்கு முடிஞ்சதும் நம்ம நேர அங்க போய் கமிஷனரை பார்த்து பேசுவோம் ”  தைரியம் கூறினாள் சுஷ்மிதா.

 

***

 

எண்ணையில் போட்ட கடுகை போல வெடித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.  ” எவ்வளவு நாளைக்கு தான் அடுத்தவங்க கல்யாணத்துக்கே போறது. என் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா ” மூக்கை சித்தினார்.

 

” நியாயமான ஆசை தான் ” பேப்பரை வாசித்துக் கொண்டே திவாகர் பதில் அளித்தார்.

 

” வாயை மூடுங்க.. எப்பவுமே உங்களுக்கு அந்த பேப்பர் தான்.. அதுல என்ன இருக்குன்னு தெரியல.. மகனுக்கு கல்யாணம் ஆகலைன்னு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையே உங்களுக்கு ” 

 

” மீனு.. புரியாம பேசாத டி.. அவனுக்கு நேரம் வரும் போது அவனே கல்யாணம் பண்ணிப்பான் “

 

” அவனே பண்ணிக்க.. அப்போ நம்ம எதுக்கு .. பெத்தவங்க எதுக்கு ” சீறினார்.0

 

” ஐயோ அப்படி சொல்லல டி.. அவனே நம்ம கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணுவான்னு சொல்ல வந்தேன்..” மனைவியை சமாதானம் செய்தார் திவாகர்.

 

” என்னமோ போங்க.. எதோ தப்பா நடக்க போற மாதிரி மனசுல படுது.. நிம்மதியே இல்ல “

 

” கோவிலுக்கு போவோமா மீனு ” 

 

” ம்ம் நான் போய் கிளம்புறேன் ” 

 

” நான் கல்யாண நாளைக்கு எடுத்து கொடுத்த பச்சை பட்டை கட்டு மீனு ” அதுவும் பேப்பரை பார்த்த வண்ணம் தான் இருந்தது. 

 

அவரை முறைத்தாலும், அவர் கூறிய பச்சை பட்டோடு கிளம்பி வந்தார் மீனாட்சி. மனைவியை அந்த பட்டில் பார்த்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. கண்களில் பருகிக் கொண்டார்.

 

இருவரும் தம்பதிகளாக கிளம்பி கோவிலுக்கு சென்றனர். 

 

இங்கு முப்பெருந்தேவிகளும் கமிஷனர் அலுவலகத்தின் முன் நின்று கொண்டிருந்தனர். 

 

சனா💖

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்