Loading

26. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்

“நீங்க பிச்சையா கொடுக்குற அன்பும் பாசமும் வேண்டாம்…”என்று வெறுத்துப் போய் சொன்னவள்,
அக்கா தம்பி மூவரையும் வெற்று பார்வை பார்த்து..
“சொல்லப்போனா எனக்கு யாருமே வேண்டாம்..நானும் உங்களுக்கு பாரமாக இருக்காம எங்கேயாவது போய்டுறேன்… நான் போய்ட்டா என்னால உங்களுக்கு எந்த கெட்ட பேரும் வராதுல” என்ற மதுராவின் பேச்சில் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க,

உணர்ச்சி வேகத்தில் மூச்சு விட முடியாமல் கண்களை இருட்டிக்  கொண்டு வந்தாலும், ஏதோ ஒரு வைராக்கியத்தில்
விறுவிறுவென்று தரைதளத்தில் இருந்து மின்தூக்கியின் மூலம் தன் அறைக்கு சென்றவள், போன வேகத்திலேயே தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய சில உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

தான் செல்லும் பொழுது எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் நின்ற சகோதரர்கள் இருவரையும் வினோதாவையும் ஏன் கார்முகில் வர்ணனை கூட கண்டுகொள்ளாமல் கடகடவென்று அந்த  அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே நடக்க தொடங்கி விட்டாள்.

இதற்கு மேல் அங்கே நின்று என்ன பயன்? அவ்வளவுதான் போதும் போதும் என்னும் அளவிற்கு மனதால் காயப்பட்டு இருக்க அதற்கு மேல் அங்கே நின்று வாதிட விருப்பமில்லை. விருப்பமில்லை என்று சொல்வதை விட உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை என்று சொல்லலாம்.
இனி யாரும் தனக்கு தேவையில்லை எந்த பந்த பாசமும் தனக்கு துணையாக வரப்போவதில்லை என்று வெறுத்துப் போனவளாக,
கண்களில் வழிய வழிய வற்றாத நதியாய் கண்ணீர் வந்து கொண்டிருக்க, அதை புறங்கையால் துடைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளின் பின்னால் பிரகதீஷ் ஜெகதீஷ் இருவரும் “மதுரா மதுரா இங்கிருந்து போய்ட்டா உன் கூட பேச மாட்டோம்..” என்று கூப்பிட்டது கூட அவள் காதில் வாங்கவில்லை.

‘போங்கடா’என்பது போல் அவள் போய்விட, வினோதா திக்பிரம்மை பிடித்தது போல் ஆடித்தான் போனாள். தான் ஒன்று நினைத்து இவளை மடக்க பார்த்தால், இவள் என்னவோ நழுவிய பழமாக தன் கையை விட்டு ஓட பார்க்கிறாளே?

இவள் இல்லை என்றால் அவள் நிலை என்ன ஆவது? அவர்களின் குடும்பத்தின் நிலைதான் என்ன ஆவது? அந்த கொடூர ராட்சசனை நினைத்துப் பார்க்கவே
‘ஐயோ’ என்றிருக்க,
“டேய் ரெண்டு பேரும் மதுராவ போக விடாதீங்க என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டு பொண்ணு.. வீட்டுக்கு கூப்பிடுங்கடா அவள.. வெளியே எல்லாம் விட வேண்டாம் “என்று தான் கூப்பிட்டால் வரமாட்டால் என்று தெரிந்து தன் தம்பிகளை அவளைக் கூப்பிடு மாறு ஏவ,

அதுவரை மதுரா சென்ற வழியை கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தவர்களோ, அதற்கு தயாராய் இல்லை.

“போகட்டும் வினோக்கா அவ நமக்கு வேண்டாம்..” என்றான் ஜெகதீஷ்.

“ஆமா எப்ப நம்ம பேச்ச மீறினாலோ அப்பவே அவளை நாங்க தலை முழுகிட்டோம்.. இனி அவளா மனசு மாறி வர்ற வர நாங்க அவளத் தேடி போக மாட்டோம்..” என்றபடி இருவரும் சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களைக் கவனிக்காமல் தங்களது பிளாட்டை நோக்கி சென்றுவிட, இனி என்ன செய்ய? என்று பதறிய வினோதாவிற்கு உலகே தலைகீழானது. தலை சுற்ற அந்த கார் பார்க்கிங் ஏரியாவில் தரையிலேயே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

இங்கோ தனது ட்ராலியை இழுத்துக் கொண்டு அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளியே வந்துவிட்ட மதுரா, அருகில் இருந்த டாக்ஸி ஸ்டாண்டின் அருகே போகப் போக,

அவளுக்கு குறுக்காக தனது காரை கொண்டு நிறுத்தினான் கார்முகில் வர்ணன். மறுபக்க கதவை திறந்து ஏறு என்பது போல் சுட்டிக்காட்ட,

மதுர வாணியோ, ‘எல்லாம் இவனால் தான்’என்று தீப்பார்வை பார்த்தவள் கோபத்துடன் அவனின் காரை சுற்றிக்கொண்டு டாக்ஸி ஸ்டாண்டில் நின்ற டாக்ஸி ஒன்றை பிடித்தவள் அதில் ஏறி அமர, டாக்ஸியை நகர விடாமல் மீண்டும் மரித்தது போல் காரை கொண்டு நிறுத்தினான்.

ஏற்கனவே மனதளவில் உடைந்து துவண்டு போய் இருந்தவள்,
டாக்ஸி டிரைவரிடம் அவனை சுற்றிவிட்டு செல்லுமாறு சொல்ல,
அவரோ பெங்காலி மொழியில் பதில் சொல்ல இவளுக்கோ அவர் முடியாது என்று சொல்வது மட்டும் அரைகுறையாய் புரிந்தது.

கொல்கத்தாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் பெரும்பாலும் தமிழ் மக்களும் கனடா ஹிந்தியில் பேசுபவர்களும் மட்டுமே இருக்க பெங்காலி மொழியில் பேசினால் இன்னும் மதுராவிற்கு சரியாகப் புரிவதில்லை.

“மைய்யாக ஒரு எமர்ஜென்சி சீக்கிரம் போங்க”என்றாள்.

அவர் மீண்டும் பெங்காலியில் ஏதோ சொல்ல, அதற்குள் காரில் இருந்து இறங்கி வந்திருந்த கார்முகில் வர்ணன் டாக்ஸி டிரைவரிடம் எதுவோ சொல்வதும் பணத்தை கொடுப்பதையும் டாக்ஸி டிரைவர் அதற்கு வாயெல்லாம் பல்லாக நன்றி சொல்வதையும் பார்த்தவள், தனது ட்ராலியை தூக்கிக்கொண்டு இறங்கி கொண்டாள்.

அடுத்த டாக்சியை பிடித்துக் கொள்ளலாம் என்று தான்..

“ஏய் கேட் நில்லு… “

“ப்ச்ச் என்ன அந்த டாக்ஸி டிரைவருக்கு பணம் கொடுத்து என்னை இறக்கி  விட சொன்ன எனக்கு வேற டாக்ஸி கிடைக்காதா என்ன? எத்தனை பேருக்கிட்ட நீங்க விலை பேச முடியும்”
என்று சாலையில் நடந்து கொண்டே இவள் பேச,

“இந்த நேரத்துல நீ எங்க போக போற? இது நைட் டைம்.. என் கூட வா கேட்”

“நான் தான் தெளிவா சொன்னேனே எனக்கு உறவுன்னு யாருமே வேண்டாம்.. நான் அனாதை யாருக்கும் பாரம் இல்லாம எங்கேயோ போய் தொலைறேன் உங்களுக்கு என்ன வந்துச்சு?”என்று இவள் கத்த,

“பல்ல ஒடச்சிடுவேன் மது.. அந்த வார்த்தை உன் வாயில இருந்து வர்றது இதுதான் கடைசியா இருக்கணும்.. யாருடி அனாத உன் புருஷன் நான் இருக்கும்போது எப்படி நீ அனாதை ஆவ?”

“என்ன செண்டிமெண்டா பேசிப்பேசி என்ன கவர் பண்ண பாக்குறீங்களா? இன்னைக்கு நடந்த ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் மூல காரணமே நீங்கதான்.. நீங்க மட்டும் என்ன பாக்க வராம இருந்தா.. இவ்ளோ பெரிய பிரச்சன ஆகி இருக்காது”
என்று கடுகடுத்த மதுராவின் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க, மூக்கை உறிஞ்சினாள்.

அந்த இரவு நேரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் ஆங்காங்கே நின்ற ஓரிருவர் அவனையும் அழுது கொண்டிருந்த மதுராவையும் ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு தான் சென்றார்கள்.

கார்முகில் வர்ணன் காரை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு அவள் பின்னால் வந்து கொண்டிருக்க, இதற்கு மேல் விட்டால் சரி வராது… இவளை விட்டால் இரவு முழுவதும் கூட அழுது கொண்டே தன்னைச் சுற்ற வைப்பாள் என்று நினைத்தவன்,
அவள் எதிர்பார்க்காத வேளையில், நெருங்கி ஒற்றைக் கையால் ஏந்திக் கொண்டவன், மற்றொரு கையிலோ அவள் கைகளில் இருந்த ட்ராலி இடம் மாறி இருந்தது.

அவனின் இறுகிய பிடியில் துள்ளியவள்,
“யோவ் பிளாக் விடுங்க என்ன.. ரோட்ல வச்சு என்ன வேல பண்றீங்க..”

“சொன்னா கேளு அன் டைம் ஆகுறதுக்குள்ள வீட்டுக்கு போயிடலாம் என்கூட வா… இப்படியே ரோட்லயே நடந்துக்கிட்டு இருக்கிறது சேஃப் இல்ல”

“நான் சொன்னேன் தான? நா உங்க கூட வர்றதா இல்ல.. நான் தேஜு வீட்டுக்கு போக போறேன்.. நான் அவளுக்கு கால் பண்ணனும்… ஃபர்ஸ்ட் என்ன கீழே இறக்கி விடுங்க நான் போகணும்.. நான் போகணும்” என்று மதுரா விடாமல் அவனின் கைகளில் துள்ள,

“வாய மூடிட்டு துள்ளாம வா மதுரா… நீ என் கூட தான் ஸ்டே பண்ண போற.. காட் இட்”

“அத நீங்க முடிவு பண்ணா போதுமா?”என்றவள் இன்னும் அவன் கைகளில் இருந்து நழுவுவதற்காக துள்ளுவதை நிறுத்தவில்லை.

பொருத்து பொருத்து பார்த்தவனின் கோபம் அதன் எல்லையே கடக்க,

“இதுக்கு அப்புறமும் துள்ளிட்டு இருந்தன்னு வை.. ரோடு பப்ளிக் பிளேஸ்னு பாக்க மாட்டேன்.. நேத்து நைட் இருட்ல ஆபீஸ்ல குடுத்தத இங்க குடுக்க வேண்டி இருக்கும்.. நான் ரெடியா தான் இருக்கேன் உனக்கு ஓகேனா…”என்றதும் அய்யோ என்று பதறி மதுரா இதழ்களை மூடிக்கொள்ள,
‘அது’என்பது போல் அவளை மிதப்பாய் பார்த்தவன் தூக்கி காரில் அமர வைத்துவிட்டு ட்ராலியை பின் சீட்டில் தூக்கி போட்டான். அவன் காரை ஸ்டார்ட் செய்யும் போது கூட, எங்கே இசக்கு பசக்காக ஏதாவது செய்து விடுவானோ? என்று
மதுரா சிலை போல் அமர்ந்திருக்க,
ஆனால் மனதிற்குள்ளேயோ, ‘கடவுளே இவன்கூடவே என்ன  கோர்த்து விடுறியே!’என்று புலம்பாமல் இல்லை.

******************

இங்கு வினோதாவோ நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
“பாவம்டா மதுரா சின்ன பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா தயவு செஞ்சு அவள கூட்டிட்டு வாங்கடா”என்று தம்பிகள் இருவரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“அக்கா போதும் நம்ம பேச்ச மீறி போனவள பத்தின பேச்சு இந்த வீட்ல இனி எடுக்க கூடாது”என்ற ஜெகதீஷ் கோபத்துடன் உள்ளே சென்றுவிட, இன்னும் கொதித்துக் கொண்டிருந்த மனதை அடக்க முடியாமல், பிரகதீஷ் ஹால் சோபாவில் தான் அமர்ந்திருந்தான்.

கடைசி முயற்சியாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பிய வினோதா,
“பிரகா நீயாவது அக்கா சொல்றத கேளுடா ..மதுராவ கூட்டிட்டு வா அவளுக்கு நம்ம பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி கொடுத்துடலாம்.. அதுக்கப்புறம் நமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது டா.. நம்ம நிம்மதியா இருக்கலாம்” என்றதும்,
அதுவரை அமைதியாக இருந்த பிரகதீஷும்,
“அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலனா மட்டும் என்ன பிரச்சனை வரப்போகுதுக்கா?” என்று கேட்க,

முகமே மாறிவிட்டது வினோதாவிற்கு…
இவர்களிடம் சொன்னால் இவர்கள் மதுராவிற்கு அல்லவா துணையாய் நிற்பார்கள்..ம்ம்கூம் சொல்லக்கூடாது.. அப்படி சொன்னாலும் தன்மேலுள்ள நல்லெண்ணம் போய்விடுமே என்று நினைத்தவள்,

“அது..அது.. மதுரா லைஃப்ல நல்லபடியா செட்டில் ஆயிட்டா நம்ம நிம்மதியா இருப்போம் ல்ல..  அததான் சொன்னேன்”என்று சமாளிக்க,
“வேண்டாம் க்கா..போனவ போனவளாவே இருக்கட்டும் … நீ அவள நெனச்சு கவலைப்பட்டு உடம்பையும் மனசையும் கெடுத்துக்காத…”என்ற சொல்லோடு அவனும் தன்னறைக்கு சென்று விட்டான்.

இருவரில் ஒருவனும் அவள் பேச்சைக் கேட்பதாக இல்லை.
தலையில் கை வைத்து அமர்ந்தவள், அவசரமாய் தன் கணவனுக்கு அழைத்தாள்.

அவன் அழைப்பை ஏற்றதும் விஷயத்தை பட படவென்று சொல்லிவிட,
அவன் இவளுக்கும் மேலே பயந்தான்.

“வினோ இப்போ சார் கேட்டா என்ன சொல்றது?”

“எனக்கு அது தான் தெரியல அந்த நாசமா போனவ இந்த நேரத்திலேயா ரோஷம் வந்து வீட்ட விட்டு போகணும்”

“அவ புருஷன் கூட தான் போயிருக்காளா?”

“ப்ச்ச் நான் எங்க பார்த்தேன் வெளில போகும்போது தனியா தான் பெட்டிய  தூக்கிட்டுபோனா…”

“அப்ப தனியா தான் போய் இருக்காளா? அப்ப பிரச்சனை இல்ல”
” என்ன பிரச்சனை இல்ல? நம்ம கண்ணு முன்னாடி தனியா போய்ட்டு அதுக்கப்புறம் கூட சேர்ந்து போய் இருக்கலாம்” என்றாள் கடுப்பாகி.

“இப்ப என்ன பண்றது? மாஹித் சார் கிட்ட என்ன பதில் சொல்றது?”
அந்த பெயரை கேட்டதுமே வினோதாவிற்கு நடுங்கியது.

“ச்ச எல்லாம் உங்களால வந்தது…”

“உன் தங்கச்சி வீட்ட விட்டு போனா.. நான் என்ன வினோ பண்ணறது? எதுக்கெடுத்தாலும் என்னைய குறை சொல்லிட்டு இருக்க”என்று அவளின் கணவன் ரூபேஷ் ஒரு பக்கம் கத்த, எரிச்சலில் அழைப்பை துண்டித்து விட்ட வினோதா அடுத்து என்ன செய்வது? என்று சிந்திக்கலானாள்.

அவளின் நடவடிக்கைகளை வரவேற்பு அறையில் இருந்த டெடி பியர் பொம்மையின் கையில் இருந்த ஒற்றைக் கண் இயந்திரம் ஒன்று பதிவு செய்து கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

*******************
கார்முகில் வர்ணன் மதுராவை தான் தங்கி இருக்கும் மாளிகைக்கு கூட்டி வந்தான்.
அவளைக் கீழிருந்த ஒரு அறையில் தங்கிக் கொள்ளுமாறு சொன்னவன், அவள் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்று அவளுக்கான உணவை தயார் செய்ய சமையலறைக்குப் போய் இலகுவான பதார்த்தம் ஒன்றை சமைத்துக் கொண்டு வர அவன் வரும் வரை கூட
உர்ரென்ற முகத்தோடு அவன் கொண்டு சென்று விட்ட அறையின் மெத்தையில் குத்து கால் இட்டு அதில் முகம் புதைத்தப்படி அமர்ந்து இருந்தாள் மதுரா.

அவளுக்கு ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரின் திடீர் மாற்றத்தை நம்பவே முடியவில்லை.
அது எப்படி தன்னை ஒரு வார்த்தை கேட்காமல், இவ்வளவு தூரம் தன்னை சந்தேகப்பட முடியும்?

இத்தனை நாள் தன் மீது காட்டிய அன்பு முழுவதும் பொய்யா? இல்லையென்றால் அவர்களின் வினோதா அக்கா வந்தவுடன் தங்கை என்பவள் தேவையில்லாதவளாக ஆகிவிட்டாளா?
இதற்கு முன்பாக விடுதியில் படித்த நாட்களில் இவர்களில்லாமல் தானே கடந்து வந்தோம் இப்பொழுது என்ன? என்று தோன்ற, இருந்தாலும் உள்ளுக்குள் கடுக்காமல் இல்லை.

மன உளைச்சலில் கண்ணீர் வேறு கசிய அவள் அமர்ந்திருக்க,
தான் தயாரித்த கோதுமை ரவை கிச்சடியை ஒரு ஸ்பூன் போட்டு எடுத்துக் கொண்டு வந்த கார்முகில் அவளின் முகத்திற்கு நேராக காட்டி “சாப்டு கேட்” என்று சொல்ல,
பல்லை கடித்தவள்,
“நான் சாப்பிடுற நெலமைல இல்ல பிளாக்”என்றாள்.

“நீ சாப்பிடாம இருந்தா மட்டும் உன்னோட ப்ராப்ளம் எல்லாம் சரியாகிடுமா?”

“எனக்கு மனசு சரியில்ல நான் இன்னைக்கு ஒரு நைட் மட்டும் தான் இங்கே இருப்பேன்.. நாளைக்கு இங்க இருக்க மாட்டேன்.. என்ன நீங்க கட்டாயப்படுத்த கூடாது”

“அத நாளைக்கு பாத்துக்கலாம் இப்ப சாப்டு”

“எனக்கு பசிக்கல…”

“அப்போ சரி “என்றவன் அவளின் கண் முன்னேயே அவளுக்கு கொண்டு வந்திருந்த கிச்சடியை சாப்பிட ஆரம்பிக்க,

தாளிப்பின் போது முந்திரிப் பருப்பை நெய்யில் தாளித்து கொட்டியிருந்தான் போலும், வாசம் மூக்கைத் துளைத்தது. கோபம் வருத்தம் எல்லாம் பின்னுக்கு போக பசி முன்னுக்கு வந்தது.
‘கல்நெஞ்சகாரன் ஒரு தடவ தான கேட்டான். இன்னொரு தடவ கேட்கவே இல்ல… ஐயோ இந்த வெட்டு வெட்டுறானே!’ என்று மனதிற்குள் திட்டி தீர்த்தவள்,

“என் கண்ணு முன்னாடி உட்கார்ந்து தான் சாப்பிடனுமா? வெளிய போய் சாப்பிடுங்க..”
என்றாள் எரிச்சலாய்.

அதற்கும் சரி என்றவன் உணவு தட்டை தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட, பசியில் வயிற்றை பிடித்தபடி, அமர்ந்திருந்தாள் மதுரா.

சற்று நேரத்தில் கார்முகில் வர்ணன் திரும்பவும் வந்தான். அவனின் கையில் பால் டம்ளர் இருக்க, “சாப்பிட தான் இல்ல இதையாவது குடி..”
என்றான்.

“ம்ம் எனக்கு பால் ஸ்மெல் பிடிக்காது…”

“தெரியும் அதனால தான் ஸ்மெல் போறதுக்காக ஒரு பின்ச் ஏலக்காய் பொடி போட்ருக்கேன்”

எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்? என்பது போல் ஆச்சரியமாய் பார்த்தவள், மறுக்காமல் வாங்கி குடித்தாள்.

“சரி எதையும் யோசிக்காம தூங்கு… மார்னிங் எதுனாலும் பேசிக்கலாம்”என்ற கார்முகில் வர்ணன் அவளிடம் எந்த வம்பும் வைத்துக் கொள்ளாமல் தன்னறைக்கு சென்று விட, மனபாரத்துடனும் குழப்பத்துடனும் இருந்தவளோ தான் எங்கே தூங்கப் போகிறோம் என்று நினைக்க, ஆனால் படுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள் மதுரா. பாலில் இரண்டு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்திருந்தான் கார்முகில்.

தன்னறையில் அமர்ந்து லேப்டாப்பில் முக்கிய ஆதாரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு மொபைலில் அழைப்பு வர, யார் இந்நேரத்தில் என்று எடுத்துப் பார்த்தவுடன் இதழ் பிரியா சிரிப்பு அவனிடம்..!
அழைப்பை ஏற்று,
“ம்ம் சொல்லு ஜெகதீஷ்” என்றான்.

எடுத்த எடுப்பிலேயே, “மது என்ன பண்றா? ரொம்ப அழுதாளா?”என்றெல்லாம் தவிப்போடு கேட்க,

“ரிலாக்ஸ் ஷி இஸ் பெர்பஃக்ட்லி ஆல்ரைட்… நான் பாத்துக்குவேன்”

“அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன சும்மா விடமாட்டேன்…” என்றான் மிரட்டும் தொனியில்,

“சரி விடு மச்சான் நான் பாத்துக்குறேன்”

அந்தப் பக்கம் மொபைல் ஸ்பீக்கரில் இருந்தது போலும். ஜெகதீஸ் அருகில் இருந்த பிரகதீஷோ,
“வாட்? மச்சானா? இது எப்ப இருந்து” என்று அதிர,

“ஆமா என் பொண்டாட்டிக்கு அண்ணனா எனக்கு மச்சான் தானே! சின்ன மச்சான்”

கடுப்பாகிப் போன பிரகதீஷ்,
“யூ யூ… “என்று வார்த்தைகள் அற்று திணற,

“டேய் நீ வேற சிச்சுவேஷன் தெரியாம..அமைதியா இரேன் டா”என்று விலக்கி விட்டு ஜெகதீஷ் ஸ்பீக்கரில் இருந்து எடுத்து விட்டு தனியாக சென்று பேசினான்.

சீக்கிரம் இந்த ஆடு புலி ஆட்டத்திற்கு முடிவு கட்ட தகுந்த நேரத்திற்காக காத்திருந்தனர்.

தொடரும்…

கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் மன்னிச்சு…
போன அத்தியாயத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஜெக்கு பிளாக் தொடர்பிலேயா?செம