Loading

அத்தியாயம் – 32

 

மனதில் பாரம் ஏற, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு தனது வீட்டை அடைந்தாள் நந்தினி, மகளை கண்டதும் பார்வதியின் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது… “எப்படி இருக்க நந்தினி, வரதா ஒரு வார்த்தை கூட சொல்லையே” என்றவர், அவள் பேக்கோடு வந்திருப்பதை கண்டு,..
“மாப்பிளை வரலையா? பேக் எல்லால் கொண்டு வந்திருக்க?” என்று குழப்பத்தோடு கேட்டார்…

அவளோ… “அ… அது… கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டில இருந்துட்டு போலாம்னு வந்தேன்மா” என்று சற்றே தயக்கத்தோடு பதில் சொன்னாள் நந்தினி…

ஒரேடியாக கணவனை விட்டு வந்துவிட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இல்லை, தாய் அதை கேட்டால் எவ்வளவு அதிர்ச்சி அடைவார் என்பதைக் கற்பனை செய்தாலே மனம் நடுங்கியது. அதனால் தான் இப்படி சொல்லி சமாளித்தருந்தாள், பின்பு மெதுவாக, கொஞ்ச நாளில் உண்மையை தாய்க்கு சொல்லலாம் என்ற திட்டம் தான் அவளிடம்,..

பார்வதியும்,.. “அப்படியா சரிமா, எனக்கும் உன்கூட இருக்கணும்னு மனசு ஏங்கிக்கிட்டே இருந்தது, வா உட்காரு” என்று மகளோடு அமர்ந்தார்,…

அந்த நேரம் வந்த நளினி,… “எப்படிம்மா இருக்க நந்தினி” என்று நலம் விசாரிக்க,… “நல்லா இருக்கேன்க்கா நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள் அவளும்,…

“நல்லா இருக்கேன்மா,.. இரு உனக்கு காபி போட்டு எடுத்து வரேன்” என்று நளினி உள்ளே சென்று விட, தாயிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள் நந்தினி, அதன் பின் நளினி தந்த காபியை குடித்து விட்டு,.. “நான் ரூம்ல கொஞ்ச நேரம் இருக்கேன்மா” என்று அறைக்கு வந்து விட்டாள்…

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர், கதவு மூடப்பட்ட உடன் அருவியாய் பொங்கி வழிந்தது, அவளே சுயமாக முடிவெடுத்து கணவனை விட்டு விலகி வந்திருந்தாலும், அந்தத் தீர்மானத்தின் வலி அவள் உள்ளத்தையே பிளந்தது, அவனின் அன்பை இழந்த துயரம், அவனை விட்டுப் போக வைத்த சூழ்நிலை, இரண்டுமே அவளது மனதை உருக்குலைத்தது,
தலையை தலையணையில் புதைத்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதவளின் கண்கள், அந்த வேதனையின் சாட்சியாய் சிவந்து காய்ந்தன….

அன்றைய இரவு விட்டத்தை பார்த்தபடி தான் படுத்திருந்தான் தீரஜ், அவனால் அவள் போனதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை, இப்போதே அவள் வீட்டிற்கு போய், நான்கு அறை விட்டு இழுத்து வர வேண்டும் என்று மனமெல்லாம் பரபரத்தது, ஆனால் அதே சமயம் அவன் தன்மானமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை,..

‘நான் எதுக்காக போகனும், அவ தானே போனா? அவ சொன்ன காரணத்தை தான் ஏத்துக்கவே முடியல, அந்த மனிஷாவை இன்னும் நான் நேசிக்கிறேன்னு எப்படி அவ நினைச்சா இவ்வளவு நாள் என் கூட இருந்து என்னை புரிஞ்சிக்கவே இல்லையா? அது தான் ஆதங்கமா இருக்கு’ என்று புலம்பலுடன் படுத்திருந்தவனுக்கு உறக்கம் எட்டாக் கனியாக தான் இருந்தது,..

இங்கு நந்தினியும் உறக்கம் வராமல் தான் கிடந்தாள், போனை அருகில் வைத்துக் கொண்டு அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள், சிறு நப்பாசை அவளுக்கு அவன் போன் செய்ய மாட்டானா என்று, ‘நீ ஏன் இப்படி எதிர்பார்க்கிற நந்தினி, அவர் எப்படி கால் பண்ணுவாறு’ என்று மனம் யோசிக்க,.. ‘அப்படினா நிஜமாவே மனிஷா மேல காதல் இருந்து தான் இருக்குபோல, இருந்தாலும் ஒரு தேங்க்ஸ் சொல்லவாச்சும் கால் பண்ணி இருக்கலாம்ல’ எனும் புலம்பல்களுடன் அவள் தன் உறக்கத்தை தொலைத்திருந்தாள்

இருவருக்குமே அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது,…

அடுத்த நாள் காலை, அலுவலகத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்த தீரஜின் மனம் முழுவதும் நந்தினியே நிரம்பி இருந்தாள், அவளை நினைத்தால் கோபமும், அதே நேரத்தில் வலியும் கலந்து வந்தது, ஆனால் எவ்வளவு கோபம் இருந்தாலும், அவள் நினைவிலிருந்து தப்பிக்க இயலவில்லை அவனால்..

தயாராகி முடித்தவன், அழுத்தமான காலடிகளுடன் படிக்கட்டுகளில் இறங்கினான், வீல் சேரின் கட்டுப்பாட்டில் இருந்தவன், இனி சுதந்திரமாக நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு அடியும் அவனுக்கே வித்தியாசமான பெருமையை தந்தது…

அந்த காட்சியை முதலில் கவனித்தது ராமு தான், அவன் கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசித்தன…

அவனருகில் வந்தவன்.. “சார்… உங்களை இப்படி  பார்க்க ரொம்ப ஹேப்பியா இருக்கு சார்” என்றான், அவன் சந்தோசம் அவனது முகத்திலும் பிரதிபலித்தது,..

நேற்று தியாகராஜனின் வாயிலாகவே தீரஜின் முன்னேற்றம் பற்றி அவனுக்குத் தெரிந்திருந்தது,
ஆனால் இன்று கண்முன்னே பார்த்தபோது, ராமுவின் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்பியது…

ராமுவின் அக்கறையையும் அன்பையும் நினைத்தவனுக்கு நெஞ்சம் உருகியது,.. மென்மையான புன்னகையுடன் அவனை நோக்கியவன்… “இவ்வளவு நாள் நீ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்க ராமு, நிறையன்னு கூட சொல்ல முடியாது, அதுக்கும் மேல பண்ணிருக்க, சில சமயம் நானே சங்கடமா நினைக்கிற செயலை கூட, சின்ன முகசுழிப்பு இல்லாம பண்ணி இருக்க,  யு ஆர் அ கிரேட் மேன் ராமு, கண்டிப்பா உனக்கு ஹான்ட்ஸ் ஆஃப் பண்ணியே ஆகணும்” என்றான்,..

“ஐயோ சார் எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க, உங்களுக்கே தெரியும் என்னோட அண்ணனும் கால்களை இழந்து ரொம்ப கஷ்டப்பட்டாரு, அவருக்கு நான் தான் எல்லாமுமா இருந்தேன், ஆனா கடவுளுக்கு என்ன கோபமோ தெரியல அவர் உடம்புல கொடிய நோயை உண்டு பண்ணி தன்கிட்ட இழுத்துகிட்டாரு, அண்ணன் போன பிறகு எனக்கு ஏசி ரூம்ல உட்கார்ந்து வேலை பார்க்கிற மைண்ட் செட்லாம் இல்ல, நடக்க முடியாதவர்களுக்கு உதவி பண்ணனும்னு நினைச்சேன், அப்போ தான் உங்களை பத்தின தகவல் வந்தது, நிஜமா சொல்றேன் சார், உங்களை என் அண்ணனா நினைச்சு தான் கவனிச்சிகிட்டேன்”

அந்த வார்த்தைகள் தீரஜின் உள்ளத்தையே நெகிழச்செய்தன,
கண்களில் ஒளிந்து கொண்டிருந்த  சின்ன சிரிப்புடன்  மெல்ல ராமுவை அணைத்துக் கொண்டவன்…”தேங்க்ஸ் டா தம்பி…” என்றான்

“தேங்க்ஸ்லாம் வேண்டாம் அண்ணா…” என்று சொன்னவனும் நெகிழ்ந்து தான் போனான், ஒவ்வொரு நாளும் அவனின் அன்பை உணர்ந்தவன் அல்லவா!

அந்த நொடி, இருவரின் உள்ளமும் ஒரே பாசத்தில் இணைந்தது…

ராமுவிடம் உரையாடலை முடித்து விட்டு டைனிங் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த தீரஜின் முன்பு,.. “தீரஜ்.. தீரஜ்…” எனும் கூவலுடன் வந்து நின்றார் வனிதா, அவரோடு மனிஷாவும் இருந்தாள்,..

“நீ நடக்குறத பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமாப்பா, நான் கும்மிட்ட அந்த கடவுள் என்னை கை விடல, ஒவ்வொரு நாளும் உனக்காக நான் செய்த பிராத்தனை வீண் போகல, உனக்காக நான் இருந்த விரதத்தை எல்லாம் ஏத்துகிட்டு தான் அந்த கடவுள் உன்னை நடக்க வச்சிருக்காரு, ஐயோ எனக்கு சந்தோசம் தாங்க முடியலையே”  என்று அவர் செயற்கை கண்ணீருடன் தன் நாடகத்தை அரங்கேற்றி இருக்க, தீரஜ் அவரை அழுத்தமான பார்வையுடன் கூர்மையாக துளைத்தானே தவிர ஒரு வார்த்தை பேச வில்லை,..

அந்த நேரம் மனிஷாவும்… “எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு, யு ஆர் வெரி ஹேண்ட்சம் பேபி” என்று கூறி அவனது புஜத்தை  பிணைத்து கொள்ள வந்த மனிஷாவை பிடித்து தள்ளி இருந்தவன், அதே வேகத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தும் இருந்தான்,..

“ஸ்டுப்பிட்,… என்னை தொடுற தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது, அசிங்கமா இல்ல, இனி என் பக்கத்துல வந்த, நின்ன இடத்துலயே கொன்னு புதைச்சிடுவேன்” என்று எச்சரித்துவிட்டு அவன் டைனிங் அறையை நோக்கி சென்று விட, தாயும் மகளும் கல்லாய் உறைந்து நின்றனர்,..

வனிதாவின் செயற்கை அழுகை கண்களில் உறைந்து போனது, மனிஷாவின் கன்னத்தில் எரிந்த வலி அவளை நடுங்கவைத்தது…

மகனின் இந்த அதிரடியை சற்று தொலைவில் நின்று பார்த்த தியாகராஜனும்,.. ‘இவளுங்களுக்கு இது தேவை தான்’ என்று முணுமுணுத்துக் கொண்டு கண்டும் காணாமலும் இருந்து விட்டார்,…

சாப்பாட்டை முடித்ததும் தீரஜ் அலுவலகத்திற்குச் செல்லத் தயாரானான், அன்று, டிரைவரை அழைக்கவே இல்லை… ‘இன்று நான் தான் ஓட்டுவேன்’ எனும் தீர்மானத்துடன் ஸ்டியரிங்கைப் பிடித்தான்…

பல மாதங்களுக்கு பிறகு கார் ஓட்டியதால் ஆரம்பத்தில் ஓரளவு சங்கடமாகத் தோன்றியது ஆனால் சில நிமிடங்களில் பழைய பழக்கம் திரும்பி வந்து, ஸ்டியரிங் மீதே கைகள் நம்பிக்கையோடு படிந்தன,
அவனது முகத்தில் வெற்றிக்கொண்ட வீரனின் புன்னகை விளையாடியது…

அலுவலகத்தை அடைந்ததும் கார் அவனுக்கே உரிய பார்க்கிங் ஏரியாவில் நின்றது, கதவைத் தள்ளி, உறுதியான அடிகளுடன் அலுவலக வாசலை கடந்தான்…

அந்த மிடுக்கான நடையின் ஒவ்வொரு அடியும்
‘நான் திரும்பிவிட்டேன்’ என்று உரக்கச் சொன்னது…

அனைத்து ஊழியர்களின் விழிகளும் அவனை தான் பார்த்தது, முன்பு கண்ட சோர்வான, வலிமை இழந்த தீரஜ் இல்லை இவன்,..

இப்போது அவர்கள் முன் சென்றது பழைய தீரஜ். அதிகாரமாய், ஆளுமையோடு, தன்னம்பிக்கையோடு கால் பதித்த தீரஜ் அரவிந்தன்…

“சார்… சார் நடக்கிறாரே…!” என்று ஒருவரின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தை நொடியில் முழு வளாகத்துக்கும் பரவியது…

அவன் மிடுக்கான நடை, தரையில் ஒலித்த அந்த காலடிச் சத்தம்  அனைவருக்கும் புதிய உயிரோட்டத்தை கொடுத்தது, அந்த நேரம் ஊழியர்களின் கண்களில் இருந்த ஒரேஉணர்ச்சி.. ‘இது தான் நம்ம பழைய தீரஜ் சார்’ என்பது தான்… அவர்களின் கண்களில் பெருமையும், இதயத்தில் மகிழ்ச்சியும் பொங்கியது…

அன்றும் மீட்டிங் இருந்தது, மீட்டிங் ஹாலில் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கூடியிருந்தனர், அவன் பார்வை சாதாரணமாக தெரிந்திருந்தாலும் ஒரே ஒருவரையே தேடிக் கொண்டிருந்தது…

அவள் வரமாட்டாளென்று மனம் சொல்லிக் கொண்டிருந்தாலும்,
அவளை காண வேண்டும் என்ற ஏக்கத்தில், கண்கள் ஒவ்வொரு இருக்கையையும் தேடி சென்றது,
ஒவ்வொரு முறையும் அவள் முகம் கண்ணில் படாதபோது,
அந்த ஏமாற்றம் அவனது முகத்தில் மெல்லக் காட்டியது…

‘அவள் இங்கேயும் இல்ல…’
அவன் மனதில் சொன்ன இந்த வார்த்தை, அவனை அறியாமலே இன்னும் வலியடையச் செய்தது…

ஆனால் வெளியில் அந்த வேதனையை காட்டாமல்,
உறுதியான முகத்துடன் மீட்டிங்கை துவங்கினான்…

இங்கு அவன் நாயகியோ சோகமே உருவமாய் தன் வீட்டு வெளியே வாசல் படியில் அமர்ந்திருந்தாள்,
மெல்லிய காற்றில் கூட அவளின் கண்ணீரின் வாசனை கலந்து கொண்டிருந்தது…

அந்த தருணத்தில், ஒரு பக்கம் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த தீரஜும்,
மறுபக்கம் அவனை இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நந்தினியின் மனங்களும் ஒரே வலியில் இணைந்திருந்தன…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
23
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்