புயல் 17
அவன் மீது மஞ்சள் தடவினது தவறு என்று எண்ணும் அளவிற்கு உமாவிற்கு மனம் விட்டுப் போய்விட்டது.
அதற்காக அவள் ஒன்றும் ருத்ரன் எந்நேரமும் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அப்படிப்பட்ட ஆள் அவன் இல்லை என்று அவளுக்குமே நன்றாகத் தெரியுமே. கல்யாணத்திற்கு முன்னரும் அவன் இப்படித்தான்.. கடைவிட்டு வீடு வரும் போது தான் பேசுவான். அதிகமாக பேசியதும் கிடையாது. வெளியில் சென்றதும் அந்த ஒரு நாள் தான்..
அவளிடம் அவன் கோபத்தினை வெளிப்படுத்தினால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மணியம்மாவிற்காக என்னும் போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் மணியம்மாவைப் பார்த்துக் கெள்ளாத காரணத்துக்காக கோபம் கொண்டது சத்தியமாக முடியவில்லை. அவள் ஒருவேளை கவனித்துக் கொள்ளாதவளாய் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தும் கடைசியில் இப்படியொரு குற்றச்சாட்டினை அவன் வைப்பான் என்பதை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.
தன்னை தன் தம்பியிடம் கூட விட்டுக் கொடுக்காமல் பேசியவனா இவன்? அவளுக்கு ஆச்சர்யம்.
என்ன அதையும் இதையும் பேசி பிரச்சனையைப் பெரியதாக்கிக் கொள்ள உமா விரும்பவில்லை. அவனை பாசமெனும் விஷம் கொடுத்து மாற்றி வைத்திருக்கும் சூட்சுமம் புரிந்தது.
அதையே குடுத்து அவனை தன் வழிக்குக் கொண்டுவர அவளால் முடியும்தான். ஏனோ விட்டுவிட்டாள்.
மனம் ஒரு மாதிரி பாரமாக இருக்க அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
“ருத்ரா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” சாப்பிட்டு முடித்து அவளோடு கொஞ்ச வந்தவனின் முகத்தினை தடுத்து நிறுத்திச் சொன்னாள்.
“சொல்லுடி”
“நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்”
“என்ன திடீர்னு?”
“அவங்களைப் பார்க்கணும்னு போல இருக்கு. அப்படியே அங்க இருக்கணும்னு இருக்கு. என்னால முடியல. மனசெல்லாம் பாரமா இருக்குறது போல இருக்கு”
“என்னடி இப்படிச் சொல்லுற? நீயில்லாமல் எப்படிடி..” அவன் முகம் சோகமாய் மாறிவிட்டது.
இத்தனை நாளும் இல்லாமல் மீண்டும் காதலித்த நாட்களை எட்டிப் பிடித்த சந்தோஷத்தினை நொடியில் எட்டியிருந்தாள் அவள்.
“அவ்வளவு கஷ்டமாவா இருக்கும் மாமா”
“இல்லையா பின்ன? கவிதா மாப்பிளையோட நாளைக்கு வர்றதா இருக்கா” அவள் மாமா என்று அழைத்ததைக் கூட உணராமல் அவன் பேசியிருக்க
“அதுக்கு?” கோபம் வந்துவிட்டது உமா மகேஸ்வரிக்கு.
“அது வந்து நீ இருந்தால்தான டி எல்லாம் சரியா வரும்”
“ஆமா ருத்ரன்.. இந்த வேலைக்காரி இருந்தால் தானே வீட்டுக்காரங்க எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு சந்தோஷமா இருக்க முடியும்”
“என்னடி இப்படிப் பேசுற? வேலைக்காரியாடி நீ அடிச்சேன்னா பாரு..”
“தூக்கம் வருது ருத்ரன் தூங்குங்க” அவள் படுத்துக் கொண்டாள். அழ வேண்டும் போல் இருந்தது. அது அவனுக்குத் தெரியக் கூடாது என்று அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“உமா..” அவளை திருப்பினான்.
கண்கள் இரண்டும் சிவந்து அழுகையை அடக்கி இருக்கிறாள் என்பதை அதுவே காட்டியிருக்க ருத்ரன் துடித்துவிட்டான்.
“ஹேய் என்னடி” அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “அம்மா பாவம்டி. அவங்களுக்கு அடிப்பட்டதுல இருந்து அவங்களால வேலை எல்லாம் சரியா செய்ய முடியல தானே. அதோட கவிதா மாப்பிள்ளையோட வர்ற. வர்றவங்களுக்கு எந்த குறையும் வச்சுடக் கூடாதுல” இப்போதும் உமாவின் நிலை அறியாது அவன் பேசினான்.
“உங்க அம்மா பாவம் ஏன் தங்கச்சி தம்பி தம்பி பொண்டாட்டி பாவம்.. பட் உமா..? இப்போ எல்லாம் எனக்கு தோணுறது ஒன்னே ஒன்னுதான் ருத்ரன். நான் காதலிச்சதுதான் பாவம்” அவள் கண்மூடி படுத்துக் கொண்டாள். இனி அவளை இளக வைப்பது கடினம் என்பதை உணர்ந்தவன்
“உமா நீயே இந்த வீட்டோட சூழ்நிலையை புரிஞ்சுக்கலைன்னா எப்படிடி?”
“உங்களோட குடும்பத்துக்குக் குறை வந்துடக் கூடாதுன்னு சொல்லுற நீங்க ஒருத்திக்கு மட்டும் குறை வச்சுட்டே இருக்கீங்க. அது புரியலை தானே.. அன்னைக்கு மண்டபத்துலயே என் தம்பியையும் என் குடும்பத்தையும் உங்க அம்மா பேசாத பேச்சே இல்லை. அதுமட்டுமா இப்போ வரைக்கும் அந்த பேச்சை வாங்கிக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கேன். என் கேரக்டருக்கு நான் திருப்பி பேசுனேன்னு வைங்க யாரையும் நான் பாவம் பார்க்க மாட்டேன். காதலிச்சு தொலைஞ்சுட்டோமேன்னு அமைதியாய் இருந்தால் உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க. அன்னைக்கு நீயெல்லாம் பண்ணதை நினைச்சால் இன்னமுமே எனக்குப் புல்லரிக்குது ருத்ரன். ஆனால் உனக்கு இன்னும் உங்க வீட்டுல நடக்குறது பத்தி புரியவே இல்லைல..
நான் வந்த பிறகுதான் இந்த வீட்டுல அடுத்தடுத்து இரண்டு கல்யாணம் நடந்துருக்கு. நம்ம கல்யாணத்துக்கு புடவை எடுக்க கல்யாணப் பொண்ணு வரக் கூடாது பழக்கம் இல்லைன்னு சொன்ன உங்க அம்மாதான் உன் தம்பியோட பொண்டாட்டியை கூட்டிட்டுப் போய் புடவை எடுத்துட்டு வந்தாங்க. அது எவ்வளவுன்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணும்னு அவசியம் இல்லை. கேட்டால் அந்த பொண்ணு வீடு வசதின்னு பெருமை பேசுவீங்க. எனக்கு இதுலாம் பெரிய விஷயமே இல்லை ருத்ரன். அதெல்லாம் என்னைப் பாதிக்கவே இல்லை. ஆனால் எனக்குக் குழந்தை இல்லை.. வீரா பொண்டாட்டி உடனே மாசமாகிட்டான்னு உங்க அம்மா என் கண்ணு முன்னாடியே எல்லாமே பண்ணுறப்போ.. உச்சக் கட்ட எரிச்சல் வருது. நானும் மனுஷிதானே. இந்த வீட்டுல நான் மட்டும்தான் இருக்கேனா..? எதுக்கெடுத்தாலும் உமாவே நல்லா செஞ்சுடுவா.. அப்படிங்கிற ஒரு ஸ்டேட்மெண்ட் இருக்கு உங்களுக்கு. அதைச் சொல்லிச் சொல்லியே என்னை ஏதோ அடிமையாவே மாத்தி வச்சுருக்கீங்க. நீ கடைக்குப் போற.. வர்ற.. உன்னோட தேவைக்கு என்கிட்ட பேசுற அவ்வளவுதான். நீதான் என்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டயான்னு எனக்கு டவுட் வருது”
“நீ என்ன சொல்ல வர்ற?”
“இவ்வளவு சொல்லியும் இப்படிக் கேக்குற பார்த்தியா உன்கிட்ட என்ன பேச?” திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“உமா! நான் உன்னளவுக்கு படிக்கல”
“படிப்பை இப்போ எதுக்கு ஊடால கொண்டு வர்ற”
“என்னை பேச விடுடி”
“பேசு”
“என்னால இப்படி எல்லாத்தையும் ஒன்னோட ஒன்னு தொடர்பு படுத்திப் பார்க்கத் தெரியாது. கல்யாணத்தன்னைகே பேசுனது எனக்குத் தெரியும். அப்போ நான் நினைச்சது என்ன தெரியுமா? அம்மாவுக்கு நான் காதலிச்சது பிடிக்கலை அந்த கோபத்தை இப்படிக் காட்டத் தெரியாமல் காட்டுறாங்கன்னு தான். அதையே மனசுக்குள்ள வச்சு அம்மா இப்படியெல்லாம் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியாது. நான் வந்த சமைச்சது கூட ஒரு கோபத்துல தான். அம்மாவுக்கு முடியலையே மாத்திரை எல்லாம் போடணுமேன்னு.. இதுக்கு பின்னாடி இப்படியெல்லாம் ஒரு காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியாது. அன்னைக்கு அம்மாவை நானே திட்டிட்டேன் தெரியுமா? அப்படியெல்லாம் உன்னோட மரியாதையை தான் விட்டுட மாட்டேன். நீ ஏன்டி வேலைக்காரின்னு எல்லாம் பேசுற. எனக்குக் கஷ்டமா இருக்கு”
உமாவின் முகம் மாறிவிடும் என்று ருத்ரன் எதிர்பார்த்திருக்க என்னவோ பேசிக்கோ என்பது போல் இருந்தாள்.
“ஏன்டி இப்படி இருக்க என் தங்கம்ல”
“தங்கம்” சிரித்தாள்.
“இப்போ ஏன் சிரிக்குற?”
“ஒன்னுமில்லை ருத்ரன்.. தூக்கம் வருது. அம்மாட்ட போயிட்டு என் மெண்டல் பிசிக்கல் ஹெல்த்தை கொஞ்சம் சரி பண்ணிட்டு வரலாம்னு நினைச்சேன். நான் நினைச்சதுலாம் இந்த வீட்டுல நடக்காதுன்னு தெரிஞ்சுப் போச்சு. தூங்கவாது விடுங்க. நாளைக்கு உன் தங்கச்சி வர்றான்னு அம்புட்டு நான்வெஜ் ஐயிட்டமும் சமையல் ரூம்ல இருக்கும். குறுக்கொடிஞ்சுதான் வெளிய வரணும்.. அதுக்கு இப்போ நான் ரெஸ்ட் எடுத்தே ஆகணும்” போர்வையை மூடிக் கொண்டாள்.
மறுநாள், அவன் எழுந்த நேரத்திற்கு அவள் அருகே இல்லை.
மெல்ல கீழிறங்கியிருக்க அம்மாவும் லட்சணாவும் கூடத்தில் இருக்க உமா மட்டும் உள்ளே வேலை செய்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவன் இறங்குவது கூட தெரியாமல் மெல்லிய குரலில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“லட்சும்மா.. இன்னும் கொஞ்சம்தான்டா இதைக் குடிச்சுடு. அப்போத்தானே பையனுக்கு பால் குடுக்க முடியும். பையனுக்கு அடிக்கடி பசிக்கும்” மணியம்மாள் கொஞ்சிக் கொஞ்சிக் குடுப்பதைப் பார்க்கையில் இவனுக்கே அது எரிச்சலாக இருந்தது. இதையே காலை முதல் இரவு வரை பார்க்கும் உமாவிற்கு எப்படி இருக்கும்?
அதனால தான்டா நம்மகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற.. அவளை இன்னைக்கு எப்படியாவது குஷிப் படுத்தியே ஆகணும் என நினைத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.
குறுக்கினைப் பிடித்துக் கொண்டு அவள் சுவரோம் சாய்ந்து நின்று மூச்சு வாங்கிக் கொண்டு இருக்க “என்னாச்சு உமா?” ருத்ரன் பதறிவிட்டான்.
“நந்திங். கொஞ்சம் குறுக்கு வலி. ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்க தங்கச்சிக்கு வாய்க்கு ருசியாய் சாப்பாடு போட வேண்டியது என்னோட பொறுப்பு. அதைத் தட்டிக் கழிக்க மாட்டேன். எந்த வலியையும் சாக்கு சொல்ல மாட்டேன். கடைக்குப் போங்க ருத்ரன்”
“உம்மா…” எப்போதும் இப்படி அழைத்தால் அவள் இளகிப் போய் அவனிடம் சொக்கி நிற்பாள். இப்போது சொக்கும் நிலையிலா இருக்கிறாள். விட்டால் அவன் தலையில் குக்கரை தூக்கி அடித்துவிடுவாள் போல அந்தளவுக்கு இருக்கிறாள்..
“ஏய் உம்மா.. என்னைக் கொஞ்சம் பாரு உம்மா..”
“ஷ்ஷ்… ஆஹ்..” குக்கர் விசில் அடித்ததில் அதன் வழியே தெறித்த அந்த சுடு நீர் அவளது கையில் பட்டுவிட்டது.
“உமா.. ப்ச்.. இங்கிட்டு வாடி” அவன் தண்ணீரில் கையைக் கழுவிவிட, “நீங்க இங்க இருக்காதீங்க ருத்ரன். சீக்கிரமா வேலை செஞ்சால்தான்.. நான் போய் கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுக்க முடியும்.. குளிக்க வேற செஞ்சுட்டேன்..” என்றாள். குரல் உள்ளே போயிருந்தது.
“குளிச்சுட்டயா? இந்த மாசம்.. ப்ச்..” ருத்ரன் தலையை நீவிக் கொண்டான்.
“ரொம்ப வலிக்குதாடி”
“ம்ம் டேப்லெட் எல்லாம் சாப்பிடுறேன்ல அதனால வலி அதிகமாத்தான் இருக்கு. நீங்க போங்க இதெல்லாம் எனக்குப் பழக்கம் தான் செஞ்சுக்குவேன்” எதையுமே எளிதாக எடுத்துக் கொள்பவளாய் இப்போது முழுதாய் மாறியிருந்தாள்.
“மன்னிச்சுக்கோ டி..”
“வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” அவள் கவனம் வேலையில் குவிந்தது.
ருத்ரன் கிளம்பிப் போய்விட்டான்.
கடைக்குச் செல்லாமல் அவன் சரவணனிடம் தான் சென்றான்.
அப்போதுதான் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவன் ருத்ரனைப் பார்த்ததும் “வாடா ருத்ரா.. என்னடா..” என்று கேட்டான்.
“கொஞ்சம் பேசணும் சரவணா.. அவசரமா ஏதாவது வேலை இருக்குதா.. “
“அப்படியெல்லாம் இல்லையே.. சொல்லுடா”
பேசினான். மனதில் உறுத்திக் கொண்டிருந்ததை எல்லாம் சொன்னான்.
“தப்பு பண்ணிட்ட ருத்ரா. நீயாடா இப்படி.. பாவம் உமா”
“அவ என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. ரொம்பவே அமைதியாய் ஒரு மாதிரி இருக்கா. அது கொஞ்சம் பயமா இருக்கு”
“ஏன்டா அறிவு கெட்டவனே. எவ்வளவு முக்கியமான ப்ராசஸ். திடீர்னு நீ வந்து வீரா குழந்தைக்கு அடுத்த மாசம் மொட்டை போடுறாங்க. அதுக்காக நாம இந்த மாசம் தள்ளிப் போடுவோம்னு சொன்னா உமா மனசு என்ன பாடுபடும்னு நீ யோசிச்சுப் பார்க்கவே மாட்டயா. உன் குடும்பத்துல உன் அம்மாதான் விஷம்னு நினைச்சேன். நீ அவங்களை விட ஒரு பங்கு சேர்த்துத்தான் இருக்க. எவ்வளவு பெயின் இருக்கும் தெரியுமா ஸ்கேன் பண்ணும் போது. நீ ஈசியா சொல்லுற? இவ்வளவு தெளிவா இருக்க நீ ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணாமலேயே முதல்ல அந்த வேலையைப் பார்த்திருக்க வேண்டியது தானே.. உன் குடும்பத்துக்கு நல்லவனா இருக்குறதால உன் குடும்பம் உனக்கு ஊருக்கு நடுவால சிலை வைக்கப் பேகுதா என்ன? அவங்க எல்லாரும் அப்படித்தான் இருக்காங்களா.. நீ கடைசி வரைக்கும் உமாவுக்கு அநியாயம் தான் பண்ணுற..? பேசாமல் அவளை கொஞ்ச நாளைக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி வை. அதுதான் இப்போதைக்கு நீ அவளுக்காக பண்ணுறது”
“அவளை விட்டு என்னால?”
பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்தவன் “அப்படியே சொருகிடுவேன்.. ஏதாவது பேசுனால்” என்றுவிட்டான்.
நண்பனின் கோபம் கண்டு அவன் வெளியேறிவிட்டான்.
கடைக்குச் செல்லும் முன்னர் அவனுக்கு பழனிச்சாமியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க அண்ணே..”
“தம்பி ஒரு விஷயம் சொல்லணும்” தயங்கிட “சொல்லுங்க அண்ணே” என்றான் இவன்.
பழனிச்சாமி சொல்லி முடிக்க நான் வர்றேன்ண்ணா என்றவன் உடனே அங்கு சென்றான்.
செல்லும் வழியிலேயே அவனது மனம் எதையோ உணர்த்த சட்டென்று கண்ணாடியை எடுத்து அணிந்துக் கொண்டான்.
“கண்ணாடி போட்டுட்டு வண்டி ஓட்டுங்கன்னு சொன்னால் கேட்குறீங்களா?” உமாவே இப்போது கடிந்துக் கொள்வது போல் இருக்க அவன் பார்வை இப்போது தெளிவானது.
புயல் தாக்கும்..