அத்தியாயம் – 31
அடுத்த நாள் விடிந்தது…
“நான் இன்னைக்கு ஆஃபீஸ் வரல…” என்று மெதுவாக சொன்னாள் நந்தினி….
“ஏன்?” அவன் புருவத்தை சுருக்கி “ஸ்டமக் பெயின்…” அவள் முகம் திருப்பியபடி சொன்னாள்…
அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன், மேலும் எதுவும் கேட்காமல், “ஓகே…” என்று சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பி விட்டான்…
அவளுக்கோ மனம் கல்லாய் நெஞ்சை நெரித்தது, கத்தி அழ வேண்டும் போல இருந்தது, தலையை கையில் தாங்கியபடி படுத்துக் கொண்டவளுக்கு அடக்க முடியாத கண்ணீர் மெதுவாக வழிந்து, தலையணையை நனைத்தது, இரவெல்லாம் உறக்கமும் இல்லை,..
‘அவரோட மனசுல ஏன் என் மேல காதல் இல்லை? நான் அவரோட முதல் காதலா இருந்திருக்கலாம்னு தோணுது’ என்ற புலம்பல் அவள் உள்ளத்தை எரித்துக் கொண்டே இருந்தது…
காலை உணவுக்குப் போக மனமில்லாம் அறைக்குள்ளேயே தான் இருந்தாள், அப்போது கதவின் அருகில் மெதுவான தட்டல் கேட்டது, கண்ணீரை விரைவாக துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தவள், வாசலில் பணிப்பெண் நின்றிருக்கவும், விழிகள் சுருக்கி பார்த்தாள்…
அவரோ… “தீரஜ் சார் உங்களுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாங்க மேம்…” என்று மரியாதையுடன் தட்டில் வைத்திருந்த உணவை நீட்டினாள்…
அந்த வார்த்தைகள் நந்தினியின் மனதைத் துளைத்தது, அவனது அன்பை எண்ணி அவள் நெஞ்சமெல்லாம் உருகி வழிந்தது, தட்டைப் பெற்றுக் கொண்டு கதவை மூடியவளுக்கு, அந்த அக்கறை தான் மீண்டும் கண்ணீராக வெளிப்பட்டது…
அறைக்குள் நீண்ட நேரம் இருந்த நந்தினிக்கு மூச்சே முட்டுவது போல இருந்தது, சுவரெல்லாம் தன்னைச் சுற்றி அடைத்து விட்டது போல தோன்றியதால் வெளியே வந்தாள், அதே சமயம், மனிஷாவும் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்…
நந்தினியை கண்டவுடன் அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து, “உனக்கு என் வலி புரியவே இல்லையா நந்தினி…” என்று அழுகுரலில் கேட்டாள்
நந்தினி அவளை நோக்கி சோர்ந்த குரலில், “என்னை என்ன செய்யச் சொல்லுற, நான் என்ன தான் பண்ண முடியும்…” என்று வினவினாள்…
அவளோ “என் தீரஜை விட்டுப் போயிடு, அவன் எனக்கு வேணும், இல்லாட்டி நான் இப்போவே மாடிலிருந்து குதிச்சு செத்துடுவேன்!” என்று கூற, நந்தினி உள்ளமெல்லாம் பதறி போனது…
“எதுக்காக இப்படி பைத்தியம் மாதிரி பேசுற?” என்று அவள் கவலையுடன் கேட்டாள்…
“வேற என்ன செய்ய முடியும்? எனக்கு வேறு வழியில்லை, அவனில்லாம வாழறதுக்கு சாவுறதே மேல்னு தோணுது” என்று கூறிய மனிஷாவின் ஒவ்வொரு வார்த்தையும் நந்தினியின் மன அழுத்தத்தை இன்னும் அதிகரித்தது…
நந்தினி தடுமாறியபடி, “என்னால அவர்கிட்ட எதுவும் சொல்ல முடியல… நான் போயிடுறேன்’ன்னு சொன்னா, அவர் சம்மதிப்பாரான்னு தெரியல…” என்றாள்…
“உனக்கு புரியலயா நந்தினி, உன்னை கல்யாணம் பண்ணிகிட்டதுனால தான் அவன் உன்னை கூட வைச்சிருக்கான், அன்பு காட்டுறான், ஆனா,.. உன்மேல காதல் இல்லை நந்தினி, நீ அவன்கிட்ட போறேன்னு சொன்னா, அவன் போக விட மாட்டான், ஏன்னா அவன் உன்னோட வாழ்க்கை கேள்விக்குறி ஆக்கிடக்கூடாது’ன்னு தான் நினைப்பான், அவனுக்கு நீ அழுத்தம் கொடுக்காம இருக்கணும்னா, அவன்கிட்ட சொல்லாமலேயே போயிடு, நீ போயிடுறதுனால எனக்கு மட்டும் இல்ல அவனுக்கும் நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்கும், இது நீ எங்களுக்கு செய்ற பெரிய உதவியா இருக்கும், யோசிச்சு முடிவெடு” என்று நந்தினியை நஞ்சு சொட்டும் வார்த்தைகளால் சிக்கவைத்து விட்டு, வெற்றி சிரிப்புடன் அங்கிருந்து நடந்துச் சென்றாள்…
அவளுடைய தந்திரம் தெரியாமல் சிக்கிக் கொண்ட நந்தினி, மன அழுத்தத்தின் பாரத்தில் பல நிமிடங்கள் தன்னோடு போராடினாள், இறுதியில், கண்ணீர் துளிகள் வழிய, ‘நான் போயிட்டா… என் அரவிந்துக்கு அவர் காதல் கிடைக்கும், அவரோட சந்தோசத்துக்காகவே நான் போயிடுறேன்…’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்….
கண்ணீரால் கண்கள் சிவந்து போன நிலையில், தன்னுடைய உடைகள் சிலவற்றை அவசரமாக பையில் அடுக்கினாள், கைகள் நடுக்கம் கொண்டது, கையில் பையை எடுத்துக் கொண்டு அறை கதவு வரை வந்தவளுக்கு ஒரு கணம் அவளது இதயம் தடுமாறியது,. அவனிடம் சொல்லாமல் போகும் எண்ணம் அவளைக் குத்தியது…
போன் எடுத்து அழைக்கலாமா என்று யோசித்தாள், ‘இல்லை… வேண்டாம்’ எனும் முடிவுக்கு வந்தவள் தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு, மேசை மேல் இருந்த பேப்பர், பேனாவை கைகளில் எடுத்துக் கொண்டு. நடுங்கும் விரல்களால் சில வரிகள் எழுதத் தொடங்கினாள்…
“எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல அரவிந்த்… இந்தக் கடிதத்தை நீங்க படிக்கும்போது நான் இந்த வீட்டை விட்டு போயிருப்பேன், எல்லாமே உங்க சந்தோசத்துக்காக தான்…
நீங்க உங்க முதல் காதலைப் பற்றி எதுக்காக என்னிடம் சொல்லலைனு எனக்கு தெரியல, சொல்லாமலிருந்ததுக்காக எனக்கு கோபமுமில்லை, உங்களுக்காக ரொம்ப வருத்தப் பட்டேன்…
நீங்க அதை மறந்திட்டீங்கன்னு நினைச்சேன், ஆனா அது உண்மையில்லனு எனக்கு புரிந்தது,
நிஜமா சொல்றேன் அரவிந்த் உங்க அன்புல நான் ரொம்பவே உருகி போனேன் ஆனா அந்த அன்பு ஒருபோதும் காதலாக மாறல, ஏன்னா, உங்க மனசுல இன்னும் மனிஷாதான் இருக்கா என்பதை நானும் உணர்ந்துட்டேன்.
முதல் காதலை யாராலும் மறக்க முடியாது அரவிந்த், அதையும் நான் புரிஞ்சுக்கிறேன், இப்போ மனிஷா தன்னோட தவறை உணர்ந்து உங்களோட வாழ ஆசைப்படுறா, அவளோட உங்க வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கணும், அதுதான் எனக்கும் சந்தோஷம்,
என்னை நினைச்சு கவலைப்பட வேண்டாம், என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன், நான் போறேன் அரவிந்த்… உங்க அன்புக்கு… ரொம்ப ரொம்ப நன்றி…”
என்று எழுதி முடித்தவுடன் பேப்பரின் மேல் விழுந்த கண்ணீர் துளிகளை அவள் கவனித்தாள், அந்தக் கடிதம் அவளது இதயத்தின் சிதைவுகளை சாட்சியமாக்கியது. அதனை மடித்து அவனது கண்களில் படும் இடம் பார்த்து வைத்து விட்டு, பையைத் தூக்கிக்கொண்டாள்…
ஒரு தடவை அறையைச் சுற்றிப் பார்த்தாள் அந்த சுவர்கள், அந்த மேசை, அந்த கட்டில், அந்த ஜன்னல் அவனோடு இருந்த இருந்த ஒவ்வொரு நிமிடமும் கண்களுக்குள் வந்தது.
உள்ளம் பிளந்தபடியே கதவைத் திறந்து வெளியேறினாள், ஒவ்வொரு அடியும் அவளை அவனிடமிருந்து இன்னும் தொலைவுக்கு இழுத்துச் சென்றது, கதவு மெதுவாக மூடிய சத்தம், அவள் காதலின் முடிவை அறிவித்தது போல இருந்தது….
**************
அலுவலக வேலையை முடித்துவிட்டு சற்று சோர்வுடன் அறைக்குள் நுழைந்தான் தீரஜ் ஆனால், ஒரு சில நிமிடங்களில் அந்த சோர்வு மறைந்து, உள்ளம் ஒரு சுழலில் சிக்கிக்கொண்டது…
அறை முழுக்க வெறுமை, அவன் கண்கள் சுழன்று சுற்றிப் பார்த்தன.
அவள் இல்லையென்பதை உடனே உணர்ந்தது அவன் உள்ளம்.
“மது…” என்று மெதுவாக அழைத்தான், பதில் வரவில்லை,..
அந்த அமைதியிலேயே மேசை மேல் இருந்த ஒரு வெண்கடிதம் அவனது பார்வையில் பட்டது, விரல்கள் நடுங்கின, உள்ளத்தில் எதுவோ சரியில்லை என்று தோன்ற, அந்தக் கடிதத்தை அவசரமாக எடுத்தான்…
படிக்கத் தொடங்கியதும், ஒவ்வொரு வார்த்தையும் அவன் இதயத்தை குத்தியது… “நான் உங்க சந்தோசத்துக்காக போறேன்..”
“உங்க மனசுல இன்னும் மனிஷாதான் இருக்கா…”
அந்த வரிகள் அவனது நரம்புகளை புடைக்க செய்தது,
மூச்சு வேகம் பிடித்தது, கண்களில் இரத்தம் நிரம்பியது போல சிவந்து போனது…
அவள் விட்டு போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தக் கடிதத்தை கசக்கி தரையில் எறிந்தவனின் பார்வையில் அருகில் இருந்த
பூவாஸ் பட, அதை எடுத்து ஒரே வீச்சலில் சுவற்றின் மீது வீசினான்,
சில்லு சில்லாய் சிதறின கண்ணாடித் துண்டுகள்…
அந்த சிதைவுகளின் சத்தம் அறைக்குள் மட்டும் அல்ல, அவனது உள்ளத்திலும் ஒலித்தது.
கோபம், வேதனை, இழப்பின் வலி அனைத்தும் ஒன்றாகக் கலந்து அவன் கோபத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருந்தது,…
மகனின் அறையிலிருந்து திடீரென்று ஏதோ கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டு, பதறிப்போன தியாகராஜன் அங்கே ஓடிவந்தார்…
அறைக்குள் நுழைந்ததும், அவர் கண்கள் கண்டது நின்று கொண்டிருந்த அவரது மகனை தான், பார்த்ததுமே அதிர்ச்சியும் ஆச்சரியமும் சந்தோஷமும்..
“தீரஜ்…!” என்று துடித்தபடி ஓடி வந்தார் அவனருகில், ஆனந்தம் கலந்த கண்ணீர் விழியில் பட்டு வழிந்தது…
“தீரஜ்… நீ நிற்கிறடா…!” தன் தந்தையின் குரலைக் கேட்டு கல்லாய் நின்றவன்.. “நடக்கவும் முடியும்ப்பா” என்றான்
அவருக்கோ வியப்பு…. “எப்போ…? இதை ஏன் என்கிட்ட சொல்லலடா…?” என்றார்
“சர்ப்ரைஸா சொல்லலாம்னு நினைச்சேன்” உணர்வில்லா குரலில் சொன்னவனின் முகம் இறுக்கமாய் உறைந்திருந்தது,
அந்த முகத்தைக் கண்டு ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த தியாகராஜன், மெதுவாக… “என்னாச்சுப்பா” என்று கேட்டார்..
தன் உள்ளத்தை வெளிப்படுத்தாமல், “அவ… வீட்டை விட்டுப் போயிட்டா?” என்றான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்…
அதிர்ச்சியில் மூச்சு அடைத்த தியாகராஜன்.. “என்ன சொல்ற…? நந்தினி அப்படியெல்லாம் பண்ணறவ கிடையாது…” என்று கேட்டவருக்கு, அவன் மௌனத்தையே பதிலாய் கொடுக்க, அந்த நேரம் அவன் கசக்கி எறிந்திருந்த கடிதம்
அவர் பார்வையில் விழுந்தது…
அதை எடுத்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கியதும் உண்மை புரிந்தது.
“அவளா போகலடா… அவளை போக வச்சிருக்கா மனிஷா” என்றார் அவர், சட்டென்று புரிந்து கொண்டார்..
அவனோ, கண்களில் நெருப்பு பொங்கியவனாய்.. “இருக்கட்டுமேப்பா… அவளுக்கு புத்தி எங்க போச்சு? அந்த மனிஷாவை நான் இன்னும் காதலிக்கிறேன்னு அவ நினைச்சிருக்கா…? இந்த விஷயத்துக்காகவே அவளை நான் மன்னிக்க மாட்டேன்” குரல் உயர்ந்து கத்தினான்,…
“இப்படி பேசாதடா, அவகிட்ட போய் பேசு, புரிய வைச்சு அழைச்சிட்டு வா” என்றவரின் குரல் அமைதியாக இருந்தாலும் அன்பில் கசிந்து வந்தது..
ஆனால் அவனோ இறுகிய முகத்துடன்,.. “அவளா தானே போனா… வரணும்னா அவளாவே வரட்டும், எனக்கு தெரியாம நீங்களும் எதுவும் பண்ணாதீங்கப்பா” என்று சொல்லிவிட்டு அழுத்தமான காலடிகளுடன் அங்கிருந்து சென்றிருந்தான், அவனின் ஒவ்வொரு அடியும் வலிமையுடன் ஒலித்தது, மகன் நடந்து செல்வதை பார்த்த அந்த நிமிடம்… தியாகராஜனுக்கு பெரும் சந்தோசம் தான் முதலில் தோன்றியது…
ஆனால் அடுத்த கணமே அந்த மகிழ்ச்சியை அடித்து நொறுக்கியது மகனின் உறுதியான முகம்,
அந்தச் சந்தோசத்தை கூட முழுதாய் உணர முடியாமல், நெஞ்சை பிளக்கும் பெறுமூச்சுடன் அவரும் தனது அறையை நோக்கி நடந்தார்…