அத்தியாயம் – 30
அன்றைய இரவு எதுவும் பேசாமல் அமைதியாக வந்து படுத்துக் கொண்டாள் நந்தினி, தீரஜுக்கோ… அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அவள் தன்னிடம் ஏதோ மறைக்கிறாள் என்ற உணர்வு அவனுள் கோபத்தை கிளப்பியது, அதனால் அவனும் எதுவும் கேட்காமல், அமைதியாக அவளோடு படுத்துக் கொண்டான்.
அடுத்த நாளும் அவள் மாறவில்லை, சின்ன புன்னகை கூட சிந்தாமல் அமைதியான முகத்தோடு இருந்தாள், அந்த அமைதியான புறக்கணிப்பு தீரஜின் மனதில் தீயை மூட்டியது… இறுதியில், ‘இது எது வரை போகுதுன்னு நானும் பார்க்கிறேன்’ என்று உள்ளத்தில் முடிவு செய்து, பொறுமையுடன் அவளது நடத்தைப் பார்ப்பதற்குத் திட்டமிட்டான்….
அலுவலகத்திலும் நந்தினியின் முகத்தில் அதே சோகம் பிரதிபலித்தது, வேலையில் மனம் சேராததால் வீடு திரும்பி விட்டாள், வீட்டிற்குள் காலடி வைத்தவள் முன்பே வந்து நின்றாள் மனிஷா…
“என்ன முடிவு எடுத்த்திருக்க நந்தினி? என் தீரஜை எனக்கே விட்டு கொடுத்தடறியா ப்ளீஸ் நந்தினி… ப்ளீஸ்…” என்று சொல்லிக்கொண்டே அவளது கைகளைப் பற்றிப் பிடித்து அழுதாள் மனிஷா…
அந்த காட்சி நந்தினிக்கோ தாங்க முடியாததாக இருந்தது, இயல்பாகவே இளகிய மனம் கொண்டவளுக்கு, ஒருத்தி தன்னிடம் கெஞ்சி அழுவதைக் கண்டு பக்குவமாக நிற்க முடியவில்லை,எப்படியோ மனிஷாவைத் தவிர்த்து அறைக்குள் சென்றாலும், அந்த அழுத்தமான காட்சிகள் அவள் மனதை வாட்டத் தொடங்கின…
‘நான் விலகி விட வேண்டுமா? என் அரவிந்தின் வாழ்க்கையிலிருந்து நான் விலகிட வேண்டுமா?’ அந்த எண்ணமே அவள் உள்ளத்தை கூர்மையாய் குத்தி, கதற வைத்தது,..
‘ஒரு வேளை நான் அவர் வாழ்க்கையில நுழையாம இருந்திருந்தா அவர் மனிஷாவை ஏற்றுக் கொண்டு இருப்பாரோ? அவர் முதல் காதலும் கிடைச்சிருக்குமோ, இப்போ நான் தான் இடைஞ்சலா இருக்கேனா?’ என்ற வேதனைக்குரிய கேள்வியும் அவளின் மனதை அடித்துக்கொண்டு வந்தது….
‘மனிஷா இத்தனை நாட்கள் தவறு பண்ணி இருந்தாலும், இப்போ அழுது வருத்தப்படுறா? தன்னோட தவறை உணர்ந்து அவர் கூட சேரனும்னு நினைக்கிறா? இது தப்பில்ல தானே, ஆனாலும் நான் அவரை விட்டு விலகனும்னு நினைச்சா தான் உயிரே போற மாதிரி வலிக்குது, என் அரவிந்தை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு தோணுது, ஆனா மனசு கேட்க மாட்டேங்கிது, இப்போ எனக்கு என்ன பண்ணுறதுன்னு ஒன்னும் புரியல’
மனிஷாவின் கண்கலங்கும் பாசாங்கோடு கூடிய வேண்டுகோள் நந்தினியின் தெளிவான யோசனைகளையே சிதைத்து, குழப்பத்தின் சுழலில் அவளை மேலும் ஆழ்த்தியது, தலையை தாங்கியபடி அப்படியே படுத்து விட்டவள், தன்னையும் அறியாமல் உறங்கி போயிருந்த்தாள்…
அவள் விழித்தது தீரஜின் “மது” என்ற குரலில் தான், அவன் எழுப்பிய பிறகே தான் தூங்கிவிட்டோம் என்பது புரிந்தது,
அலுவலகம் விட்டு அறைக்கு வந்தவனோ, உறங்கி கொண்டிருந்த நந்தினியை கண்டு, அவளுக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையோ என்ற கவலையோடு அவளது நெற்றியைத் தொட்டு பார்த்தான், நார்மலாக தான் இருந்தது,..
களைப்பாக இருக்கிறாள் போல என்ற எண்ணத்தில் அவளை தொந்திரவு செய்யாமல் தூங்க விட்டவன், இரவு சாப்பிடும் நேரம் வந்த பிறகும் அவள் சாப்பிடாமல் உறங்குவது கண்டு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை, சாப்பிட்டு தூண்கட்டும் என்ற எண்ணத்தில் தான் அவளை மெல்ல தொட்டு,.. அவள் பெயரை சொல்லி அழைத்து எழுப்பி இருந்தான்,..
“என்னாச்சு,.. இந்த டைம்லலாம் தூங்க மாட்டியே, உடம்புக்கு எதுவும் முடியலையா?” அக்கறையாக கேட்டவனிடம்,.. “அதெல்லாம் ஒன்னுமில்ல, டையர்ட்டா இருந்தது” அவள் கூற,.. “சரி வா சாப்பிட்டு வரலாம்” அவன் சொல்ல அவளும் அவனோடு சாப்பிட சென்றாள்…
இன்றும் சாப்பிடும் நேரத்தில் அவள் ஒரு மாதிரியே இருந்தது தியாகராஜனின் மனதை நெருட, அவள் அறைக்கு சென்றதும்,… “என்னாச்சுடா என் மருமகளுக்கு ரெண்டு நாளா அவ முகமே சரி இல்லை” என்று மகனிடம் விசாரிக்க,.. அவனோ,… “எனக்கு தெரியாதுப்பா” என்றான்,..
“என்னடா இப்படி சொல்ற” ஆதங்கமாக சொன்னவரோ… “உனக்கு பொறுப்பே இல்லடா, அவ கிட்ட என்னனு விசாரி, என்ன கவலையோ தெரியல, பார்வதிகிட்ட பேசுனியா, நல்லா இருக்குதாம்மா” தாயை பற்றி கவலை படுகிறாளோ என்ற எண்ணத்தில் அவர் வினவ,.. “அத்த நல்லா இருக்காங்க, நேத்து கூட பேசினேன்” என்றான்,…
“அப்போ என்னவா இருக்கும், நீ பேசுடா, எதுக்காக சும்மா இருக்க” மகனை சிறிதாய் கடிந்து கொண்டவரோ,.. “எனக்கு தெரியாது நாளைக்கு என் மருமகளோட வழக்கமாக புன்னகையை நான் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு சென்று விட, தீரஜூம் ஒரு நீண்ட நெடிய பெருமூச்சோடு அறைக்கு சென்றான்…
அறைக்குள் நுழைந்தவுடன் தீரஜின் பார்வை நேராக நந்தினியையே வருடியது, அவள் படுக்கையின் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, சாளரத்துக்கு அப்பால் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்…
அந்த முகத்தைப் பார்த்தவுடனே அவனுக்குள் ஏதோ சுமையோடு வலி பாய்ந்தது. ‘ஏன் இவ இப்படி இருக்கா? என் கிட்ட சொல்ல தயங்குறாளா? என்ன காரணமா இருக்கும்?’ என்ற எண்ணம் தான் அவனது மனதில் ஓடியது…
அதே கணம் ‘என்ன கஷ்டம்னாலும் என் கிட்ட ஷேர் பண்ணிக்க வேண்டியது தானே, என்னிடம் சொல்லாம அவ மனசுலையே சுமந்துட்டு இருக்ககா’ என்ற கோபமும் எட்டி பார்த்தது…
ஆனால் அந்த நேரம், அவளைப் பார்த்தவுடனேயே அந்த கோபமும் கரைந்துவிட்டது, மெதுவாய் சென்று, அவளருகில் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அவனது அருகாமையை உணர்ந்து மெல்ல தலையை திருப்பி பார்த்தாள்…
அவனோ அவள் கண்களில் படிந்திருந்த சோகத்தை உணர்ந்து, மெதுவாய் அவளது கையைப் பற்றி,.. “என்ன தான் ஆச்சு மது, ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிற” அவள் பேச வாய் திறந்தாலும், வார்த்தைகள் வரவில்லை,..
பார்வையை தாழ்த்திக் கொண்டாள், அவனோ அவளது கன்னங்களை கரங்களில் தாங்கி கொண்டவன்,.. “என்கிட்ட சொல்ல மாட்டியா மது” என்று ஏக்கமான குரலில் வினவ,.. அவளோ,.. “அ.. அதெல்லாம் ஒன்னு” என்று சொல்ல வந்தவளின் வார்த்தைகள் அவனின் இதழ்களுக்குள் அடங்கி போனது,..
அவள் மீண்டும் மீண்டும் இதே பதிலை சொல்வதை ஏற்க முடியாமல் தான் இதழ்களால் அவள் வாயை அடைத்திருந்தான், கடந்த இரண்டு நாட்கள் அவள் தன்னை விட்டு தள்ளிப் போன உணர்வு அவனுக்கு, அதனால் தான் இன்றும் தள்ளி போக விடாமல் நெருங்கி விட்டான்,..
அவளுக்கும் அந்த முத்தம் அப்போது தேவைப்பட்டதுபோல், விழிகளை மூடிக் கொண்டாள்,
அவன் ஆழ்ந்து அவள் இதழ்களை முத்தமிட்டபோது, நந்தினியின் உள்ளத்தில் இருந்த குழப்பங்களெல்லாம் ஒரு கணம் கரைந்துவிட்டது போலிருந்தது.
அவள் கரங்களை அவன் தோள்களில் வைத்தபடி, அந்த நெருக்கத்தை உணர்ந்து கொண்டாள்…
சற்று நேரத்தில் விலகியவன் அவள் நெற்றியோடு நெற்றி மோதி.. “உன் மனசுல என்னவோ இருக்கு, ஆனா அதை சொல்ல மாட்டேங்கிற, பரவாயில்ல, சொல்ல தோணும் போது சொல்லு, ஆனா ஒன்னு மது நான் எப்போதும் உனக்கு துணையா இருப்பேன்” அந்த வார்த்தைகள் நந்தினியின் கண்களில் கண்ணீரை கொண்டு வந்தன, ஒரு வேகத்துடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
‘இவரோட அன்பு உண்மையானது, தூய்மையானது… ஆனாலும், மனிஷா சொன்ன வார்த்தைகளை என்னால தவிர்க்க முடியல, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்துக்காக தான் இவர் என் மேல அன்பு காட்டுறாரு, மனசுல மனிஷாவின் மீதான காதல் இருந்தாலும் என்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னும் நினைக்கிறார் போல’ என்று உள்ளத்தில் போராடியவள், அவன் அணைப்பிலும் சிறிது தளர்ந்தாள், அந்த நொடி அவளுக்குத் தேவையான ஆறுதலையும் அவன் கொடுத்திருந்தான்…
தீரஜோ அதற்கு மேலும் தாமதிக்க விரும்பாமல் அன்று அடுத்த கட்டத்திற்கு செல்லத் துடித்தான்,
கால்கள் சரியான பிறகு அவளை விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு சகிக்கவில்லை, தன்னை அணைத்துக்கொண்டிருந்தவளின்இடையில், மெல்ல விரல்கள் வழிந்து கரங்களைப் படர விட்டான்….
அழுத்தமாக அவனது தழுவலுடன், அவளது தோள்வளைவில் ஆழமாக அவன் இதழ்களும் பதிந்தன…
விழிகளை மூடி ஏற்றுக்கொண்ட நந்தினியும் அவன் எண்ணத்தை தெளிவாக உணர்ந்தாள், தடுக்க முயற்சிக்கவில்லை… மாறாக அவன் அரவணைப்பில் கரைந்து விட்டாள்…
அவனோ மெதுவாக அவளது முகத்தை விலக்கி, புன்னகை கலந்த பேராசையுடன் அவள் முகமெங்கும் தனது இதழ்களைப் பதிக்கத் தொடங்கினான்,
ஒவ்வொரு இதழ்தீண்டலுக்கும் நந்தினியின் உடல் மெல்ல சிலிர்த்தது, இதயம் வேகமாக துடிக்க, மூச்சே அடங்கி விட்டது போல தோன்றியது…
அந்த கணம், அவள் விழிகளைத் திறந்து அவனை நோக்கினாள்,
அதே வேகத்தில் அவனும் பார்த்தான், இருவரின் பார்வைகளும் நேர்கோட்டில் சங்கமிக்க, அந்த நொடியில் உலகமே அவர்களுக்கு மறைந்துவிட்டது போல இருந்தது.
அந்த சுவாச நொடியில் நந்தினியின் இதழ்கள் துடித்தன,
தன்னுள் நிறைந்த காதலை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், மென்மையாக குலுங்கிய குரலில்.. “ஐ லவ் யூ… அரவிந்த்…” என்றாள்… முதல்முறையாக வாய்மொழியாக தன் காதலை வெளிப்படுத்தி இருந்தாள்…
அந்த வார்த்தைகளை கேட்டு அவன் இதயம் அந்த நொடி ஆடிப்போனது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகள் அவனுள் எழுந்தன, ஆனால்… பதிலுக்கு எந்தச் சொல்லும் அவன் இதழ்களிலிருந்து வரவில்லை,
நந்தினிக்கோ அது நெருடலாக இருந்தது..
அவள் மெதுவாகக் கண்களைச் சுருக்கி, சற்றே நடுக்கத்துடன் “நீங்க… சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டாள்…
அந்த கேள்வியும் கூட அவனின் நெஞ்சை உலுக்கி, உணர்ச்சிகளை அலைபாயச் செய்தாலும்,.. தொண்டையை செருமிக் கொண்டு,.. “என்னால சொல்ல முடியாது…” என்றான்…
அந்த வார்த்தைகள் நந்தினியின் உள்ளத்தை பரிதவிக்க வைத்தது,
அவளின் நெஞ்சில் இருந்த உணர்வுகள் அனைத்தும், அந்த ஒரு வார்த்தையால் வடிந்து போன உணர்வு,..
அந்தக் கணம் நந்தினியின் மனம்… ‘அவர் இன்னும் மனிஷாவை மறக்கல, அதனால தான் எனக்கு ஐ லவ் யூ சொல்ல முடியலையா…’ என்ற துயரமான எண்ணம் அவள் நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போல் இருந்தது…
அவனோ அவளது உள்ள போராட்டத்தை உணராமல், அவள் கழுத்தினடியில் புதைய முயல, அவளுக்கோ அந்த தழுவலை ஏற்க மனம் வரவில்லை.. “இ… இன்னைக்கு வேணாம்…” என்று மெல்லிய குரலில் சொன்னாள்….
அவளின் விழிகளை யோசனையுடன் பார்த்தவன்… “ஏன்?” என்று வினவ..
“பீரியட்ஸ்…”
அவளுக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை, மனம் சரியில்லை, பிடிக்கவில்லை என்று சொன்னால் வருத்தம் கொள்வானோ என்ற எண்ணத்தில் இந்த காரணத்தை சொல்லி இருக்க,
அவனும் மெதுவாக ஒப்புக்கொண்டு, “ஓ…”என்றவன்,..
பின், “ரெஸ்ட் எடு” என்று கூறி விலகிப் படுத்துக் கொண்டாள்…
நந்தினிக்கு தான் மனமெல்லாம் என்னவோ செய்தது, அவன் தன்னை காதலிக்கவில்லை என்ற எண்ணமே வலிக்க வலிக்க அவளை கொல்வது போல் இருக்க, உதட்டை கடித்து வரவிருந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்…