Loading

வைரம்: நவரத்தினங்களில் மிக சக்தி வாய்ந்த இது சுக்கிரனுக்கு உரிய கல்.  

வைரம் ஒருவருடைய ஜாதகத்துக்கு சரியாக பொருந்தி, அதில் எந்த தோஷமும் இல்லாமல், தெளிவான நீரோட்டம் இருந்து அணிந்து கொண்டால், அணிந்து கொண்டவருக்கு வாழ்வில் எந்நாளும் ஏற்றம் தான்.  

“அப்டி நீங்க அதிர்ந்து போற அளவுக்கு என்ன தான் சார் கேட்டார்.. அந்த மேத்தா” என ஈஸ்வர் கேட்க

அம்பலவாணன் “ஏன் சார்.. நாம இங்க வரோம்..பல ஊர்க்கு போறோம்… கல்வெட்டு எல்லாம் படிக்கிறோம்,பிரதி எடுக்கறோம்
குறிப்புகள் எடுத்துக்கறோம்”

“ஆனா உங்க ஊர் கோயில் இருக்கற கல்வெட்டுக்களை மட்டும் இன்னும் நாம பாக்கலயே சார்…நீங்களும் இது வரைக்கும் அது பத்தி எதுவும் சொன்னது கூட  இல்லனு கேட்டார்..”

நானும் யதார்த்தமா..”அட ஏன் சார் அதை பத்தி கேட்டுக்கிட்டு… அங்க எதுவும் இல்ல..முழு கோயிலுமே.. இடிஞ்சு போயிருக்கு.. என்னத்தை தேடறதுனு அலுத்துக்கிட்டேன்…

அதுக்கு அந்த மேத்தா “அந்த கோயில்ல அப்டி என்ன தான் இருக்கு..வெளியூர் ஆட்களுக்கே தெரியாத மாதிரி…ஏன் நாங்க யாரும் பாக்க கூடாதுங்கற மாதிரி அங்க ஏதோ விஷயம் இருக்கானு” என கேலியாவும் குத்தலாவும் கேட்டாரா….

அதுல கோவமாகி போன நான் “சரி வாங்க உடனே எங்க ஊருக்கு போவோம்னு” சொல்லி இங்க கூப்பிட்டு கிட்டு வந்து என் அமைதியை நானே கெடுத்துக்கிட்டேன்” என அழுகுரலில் சொல்ல..

ஈஸ்வர் “என்ன சொல்றீங்க சார்..இந்த ஊர் கோயிலுக்கு அவரை கூப்பிட்டு கிட்டு போய்.. உங்க அமைதி போச்சா” என அதிர்ச்சியடைய…

அம்பலவாணன் “ஆமா தம்பி… அதுவரைக்கும்.. அந்த கோயிலுக்கு நான் போனது கூட கிடையாது.. அந்த மேத்தாவை அழைச்சிட்டு தான் மொத வாட்டியே போனேன்.. அங்க வந்தவர்…இவ்ளோ பெரிய கோயில்ல அதிகமா கல்வெட்டு கூட இல்லனு புலம்பினார்…. இருந்ததையும் என்னை படிக்க சொல்லி பிரதி எடுத்துகிட்டார்..”

“அப்பறம் இந்த இடிபாடுல தேடின போது.. ஒரே ஒரு சுவடி தான் கிடைச்சது..அதுல காப்பானின் வழிபாட்டில்…இருக்கு வெளிச்சத்தின் தடம்னு எழுதி இருந்தது”

ஈஸ்வர் “என்ன சார்.. சொல்றீங்க.. ஒண்ணும் புரியலயே..” என்க

அம்பலவாணன் “எனக்கும்  ஒண்ணும் புரியலப்பா.. ஆனா அது வரைக்கும் அமைதியா இருந்தவன்.. உடனே அங்க இருந்த கல்லை எல்லாம் கலைச்சு… எதையோ தேட ஆரம்பிச்சான்.. “

“நான் கேட்டதுக்கும் சம்பந்தமில்லாத பதில் சொன்னான்..நானும் இது போல செய்யறது எங்களை போன்ற ஆட்களுக்கு சகஜம்ங்கறதால அதை பெருசா எடுத்துக்கல”

ஈஸ்வர் “அப்டி அவர் என்ன தான் தேடினார்…அவர் தேடினது கிடைச்சுதா சார்” என ஆவலோடு கேட்க…

அம்பலவாணன் “எல்லா கல்வெட்டுக்களும் சிதைஞ்சு போயிருக்க…ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் தான் படிக்கிற மாதிரி கிடைச்சது தம்பி.. அதுல சுக்ரனும், முழுசந்திரனும் சேரும் நாள் வந்து சேரும் இருவர்.. ஆனால் ஒருவரே.. அவர்களால் தான் இந்த கோயிலுக்கு விமோசனம்னு எழுதி இருந்தது…அதை தன்னோட நோட்ல எழுதிக்கிட்டு வந்தவர் அதுக்கு பெறகு அன்னிக்கு பூரா யார், யார் கிட்டயோ பேசினபடி இருந்தார்..”

“மறுநாள் காலைல என் கிட்ட வந்து தனக்கு ஏதோ அவசர வேலை வந்துட்டதாகவும், திரும்ப ஒரு வாரம் கழிச்சு வர்றதா சொல்லிட்டு கிளம்பி போனார்.”

“அன்னிக்கு ராத்திரி கோயில் கிட்ட ஏதோ புகை வந்ததாக ஊர்காரங்க சொன்னாங்க.. அது தினமும் தொடர ஆரம்பிச்சதும் தெரிஞ்சது..யாராவது மந்திரவாதிகள் அது போல அடிக்கடி கோயில்ல செய்யறது வழக்கம்னு நாங்களும் அதை ரொம்ப அசட்டையா விட்டுட்டோம்”

ஈஸ்வர் “ஒரு வாரத்துல போனவர் திரும்பி வந்தாரா சார்..” என ஆவல் தாங்காமல் கேட்க…

“வந்தார் தம்பி…பத்து நாட்கள் கழிச்சு வந்தார்… வரும் போது  கூடவே ஜோசியம் பாக்கற அவனோட நண்பன் ஒருத்தனையும் அழைச்சிட்டு வந்தார்.”

“கூட வந்த அந்த ஜோசியனை பத்தி ஆஹா ஒஹோனு புகழ்ந்தார் அந்த மேத்தா.. தனக்கு அவன் சொன்ன பலன் எல்லாம் சரியா இருந்ததுனு வேற சொல்லவே..அதுல நான் மயங்கிட்டேன்…”

“அந்த ஜோசியனும் இயல்பா என் கிட்ட பேசற மாதிரி பேசி எங்களோட ஜாதகம் பாத்து பலன் சொல்றேன்.. தாங்கனு கேட்க….
நானும் எங்க எல்லாருடைய ஜாதகத்தையும் தந்தேன்”

“என்னோடதும், என் வீட்டம்மாவோடதையும் பார்த்து … நீங்க ரெண்டு பேரும் சாட்சாத் அந்த பார்வதியும், பரமேஸ்வரனும் போல என்னிக்கும் அன்னியோன்யமா இருப்பீங்க.. உங்க வார்த்தைகளை யாரும் தட்டவே மாட்டாங்கனு ஒரு பலனை சொன்னான்..”

“அடுத்தது என் பையனோட ஜாதகத்தை கையில எடுத்தான்… அதை பார்த்ததுமே அவனும் மேத்தாவும் ஏதோ புரியாத மாதிரி பேசிக்கிட்டாங்க…”

“நான் கேட்டதுக்கு.. உங்க பையனோட ஜாதகம் அமோகமான ஜாதகம்.. இது மாதிரி எல்லா கட்டங்களும் பொருந்தி வர்றது அபூர்வம்னு சொன்னான்”

“உங்க பையன் பெரிய ஆளா வருவான்.. அவன் சொல்றதை எல்லாரும் கேட்பாங்க..அவ்ளோ அமோக ஜாதகம்னு ஒரே அடியா புகழ்ந்தான்.”

“புகழ்ச்சிக்கு மயங்காதவங்க யார் இருக்காங்க… நானும் ஒரே அடியா அவனோட வார்த்தைகள்ல மயங்கிட்டேன்”

“அப்ப தான் மெதுவா.. இன்னிக்கு ராத்திரி உங்க பையன் பிறந்த நேரத்துல இருக்கிற மாதிரி கிரகங்கள் அமைப்பு ஒண்ணா சேருது….அதுல உங்க பையனுக்கு ஏதாவது பெரிய பாதிப்பு வரும்னு சொன்னான்..”

“அதை கேட்டு பயந்து போன நான் இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கானு கேட்க…அதுக்கு அவன் ரொம்ப யோசிச்சான்…
இல்ல.. இல்ல.. யோசிக்கற மாதிரி நடிச்சிருக்கான்…

“அந்த கிரகங்கள் சேரும் நேரம்.. உங்க பையனை உட்கார வெச்சு ஒரு பூஜை பண்ணணும்…அது இன்னிக்கு ஊர் அடங்கின பின்னால தான் செய்ய முடியும்.. “

“அதுவும் உங்க ஊர் கோயில்ல தான் செய்யணும்… இல்லேனா உங்க பையனுக்கு நிறைய பிரச்சனைகள் வரும்னு சொல்ல.. நானும் அவன் வார்த்தைகளை கேட்டு…கொஞ்சம் கூட யோசிக்காம சரினு
சொல்லிட்டேன்…”

“இல்ல.. இல்ல.. அவன் என் கண்ணை பார்த்தான்.. என்னை சொல்ல வெச்சிட்டான்..” என வேதனையோடு சொல்ல..

“என்னது ராத்திரில எந்த கோயில்ல பூஜை செய்வாங்க.. அதுவும் பூஜையே செய்யாத கோயில்ல..”என ஈஸ்வர் வியப்பாக கேட்க…

“இப்ப உங்களுக்கு தோணினது அன்னிக்கு எனக்கு தோணாம போச்சே தம்பி..” என வேதனையோடு சொன்ன அம்பலவாணன்….

“அவங்க பேச்சை கொஞ்சமும் நம்பாத என் வீட்டம்மா..என்னை உள்ள கூப்பிட்டு…அவனை பாக்க நல்லவன் மாதிரி இல்லை…எனக்கு என்னவோ நம்பிக்கையே வரல…”

“ராத்திரி ஊர் அடங்கி… கோயில்ல வெச்சு அவங்க சொல்ற மாதிரி பூஜை எதுவும் நம்ம பிள்ளைக்கு செய்ய வேண்டாம்னு சொன்னா.. சண்டை போட்டா..கடைசில என் காலை பிடிச்சு அழுதா..”

“என் மருமகளும் வேணாம்…அத்தை சொல்ற மாதிரி அவங்க நல்லவங்களா தெரியல…அவங்களோட வார்த்தைகளை நம்பி உங்க பையனை கூப்பிட்டுகிட்டு போகாதீங்க…ஏதாவது செஞ்சுட போறாங்கனு என்னை வெளிய போக விடாம அந்த ரூம் வாசப்படி கிட்ட நின்னு அழுதா”

“என் கெட்ட நேரமோ…இல்ல.. என் விதியோ.. நல்லா கண்ணை மறைச்சுடுச்சு…அவங்க ரெண்டு பேரும் சொன்ன எதுவும் எனக்கு காதுல விழல..எங்க அவன் தான் என் கண்ணை கட்டி வெச்சிருந்தானே.. என்னோட இல்லாம.. என் பையனோட கண்ணையும் கட்டிட்டான்” என வேதனையோடு சொன்னார்

6.(பாகம் 2)

ஈஸ்வர் “அப்பறம் என்னாச்சு சார்…நீங்க கோயிலுக்கு போனீங்களா” என வேகமாக கேட்டான்…

அம்பலவாணன் “போனேன் தம்பி…என் வீட்டம்மா, மருமகளோட வார்த்தைகளை அலட்சியம் செஞ்சுட்டு என் பையனை கூப்பிட்டுகிட்டு
ராத்திரி நேரம் ஊர் அடங்கின பின்னால….கோயிலுக்கு போனேன்…”

“அங்க போனதும்.. அந்த ஜோசியனும் மேத்தாவுமா சேர்ந்து ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்ய ஆரம்பிச்சாங்க..
ரெண்டு கூண்டு விளக்கு  வெளிச்சத்துக்கு ஏத்தி வெச்சிருந்தாங்க”

“சுத்தம் செஞ்சதும்.. அங்க என் பையனை உட்கார வெச்சு அந்த ஜோசியன் ஏதேதோ மந்திரங்களை சொல்ல ஆரம்பிச்சான்…”

“ஒரு பக்கம் மந்திரம்.. மறுபக்கம் ஒரு வித புகை போட்டு அந்த இடத்தை வேற மாதிரி ஆக்கியிருந்தாங்க..”

“என் பக்கம் வந்த ஜோசியன்.. என் பையன் கிட்ட போ.. போய் நல்லா தேடு.. தேடி எடுனு நிக்காம தொடர்ந்து சொல்லி சொல்ல சொன்னான்…அவனும் விடாம மந்திரத்தை சொன்னபடி இருந்தான்…”

“என் பையனும் தொடர்ந்து அந்த இருட்டிலேயே தேட ஆரம்பிச்சான்.. கொஞ்சம் நேரத்துல விடிய ஆரம்பிச்சது.. உடனே பூஜை செஞ்ச எல்லாத்தையும் அங்கயே ஒளிச்சு வெச்சிட்டு திரும்பி வீட்டுக்கு வந்துட்டோம்..”

“இதே போல..தொடர்ந்து ஒரு வாரம் ராத்திரில நாங்க கோயிலுக்கு போறது.. அந்த இருட்டுல என் பையன் விட்டு தேடறது..”

“எனக்கு என்ன தேடறீங்கனு அவங்கள கேக்க கூட யோசனை வரல.. நானும் அவனை தேடு.. தேடுனு சொல்லிக்கிட்டே இருந்தேன்…”

“திடீர்னு அந்த ஜோசியனோட கண்களை பாக்கறேன்.. பல வருஷமா போராடின ஒண்ணு கெடைக்க போறப்ப..எப்டி மலர்ச்சியாவும், சந்தோஷமுமா இருக்குமோ..அப்டி அவனோட கண்கள் இருந்தது.. மேத்தாவும் கெடைச்சுடுச்சுனு சந்தோஷமா… கத்த ஆரம்பிச்சார்”

“அப்ப திடீர்னு அங்க சித்தன் வந்தார்.. அவரை நான் அதுவரை பார்த்தது கூட இல்லை….வந்தவர் யார் நீங்க.. என்ன தேடறீங்கனு மிரட்டலா கேட்க.. அது அந்த அமைதில.. ரொம்ப சத்தமா கேட்டது”

“அவரோட தோற்றம் ஏதோ பரதேசி போல இருக்கவே.. மேத்தாவும் அந்த ஜோசியனும் அவரை அங்கிருந்து விரட்ட ஆரம்பிச்சாங்க..”

அவர் கொஞ்சம் கூட நகராம, அதை சட்டை செய்யாம, அங்க இருந்த கல்லுல உட்கார்ந்து நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பிச்சார்..”

“எங்க இருந்தோ ஒரு பெரிய ராஜநாகம் அங்க வந்து சித்தன் பக்கத்துல படமெடுக்க ஆரம்பிச்சது..அதை பார்த்து அந்த ஜோசியன்..பயத்துல வேற மந்திரத்தை மாத்தி சொல்ல ஆரம்பிச்சான்…”

சித்தன் அவங்க ரெண்டு பேரையும் ஆழமாக பாக்க.. அதுல இன்னும் நடுங்கின ரெண்டு பேரும் அங்கேயிருந்து ஒடிட்டாங்க…”

“கொஞ்ச கொஞ்சமா விடிய ஆரம்பிச்சிது….தொடர்ந்து நமச்சிவாய மந்திரம் கேட்டதாலோ..என்னவோ…
அவங்க கண் கட்டுலிருந்து வெளியில வந்த நான் அப்ப தான் அதிகாலைல….கோயில் இடிபாடுகளுக்கு நடுவில இருக்கிறதை உணர ஆரம்பிச்சேன்…”

எப்படி வந்தேனு புரியாம குழப்பமா இருந்த எனக்கு பக்கத்துல இருந்த என் பையன் இன்னும் புதிரா தெரிஞ்சான்” என சொல்லி பக்கத்தில் இருந்த தண்ணீரை குடித்து தன்னை ஆஸ்வாசப்படுத்தி கொண்டார்.

ஆவல் தாங்க முடியாத ஈஸ்வர் “உங்க பையனுக்கு என்னாச்சு சார்” என கேட்க

அம்பலவாணன் “என் பையன் பிரமை பிடிச்ச மாதிரி அங்க நின்னுட்டு இருந்தான் தம்பி…. என்ன கேட்டாலும் பதில் சொல்லல..என்னை திரும்பியும் பார்க்கல”

“எப்படியோ போராடி அவனை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்துட்டேன்..அவன் இருந்த கோலத்தை பார்த்து என் பொண்டாட்டி அதிர்ச்சி ஆகி..அவங்கள நம்பாதீங்க.. நல்லவங்க மாதிரி தெரியலனு நான் சொன்னா கேக்காம போனீங்களே..இப்ப என் பையனை இப்படி சித்த பிரமையா ஆக்கிட்டீங்களேனு தலையில அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சா”

“நான் சொன்னது எதையும் காதுல வாங்கிக்கல..இதுல என் தப்பு எதுவும் இல்லனு பல தடவைகள் சொல்லியும் கேக்கல..”

“அவன் பொண்டாட்டியும்.. நான் தான் ஏதோ என் பையனுக்கு செஞ்சுட்டேன்னு சொல்லி சண்டை போட்டா… அவ உடனே அவங்க அப்பாவுக்கு தகவல் சொல்லிட்டா….அவங்க வந்து பெரிய பஞ்சாயத்து நடந்தது.”

“பஞ்சாயத்தா.. எதுக்காக பஞ்சாயத்து சார்” என குழப்பமாக ஈஸ்வர் கேட்க..

அம்பலவாணன் “அதான்.. என் பிள்ளை பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்தானே..நல்லா இருந்த எங்க மாப்பிள்ளை இப்டி ஆனதுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லி என் மருமகளோட அப்பா பயங்கர கோவத்தோட தன் சொந்தத்தை எல்லாம் கூப்பிட்டு கிட்டு வந்து என் கூட சண்டை போட்டாரு…”

“நான் பேச, அவர் பேச..கடைசில பெரிய கைகலப்பு வந்து அவர் என் பையனுக்கு சரியானா தான் திரும்ப மருமகளும், பேரனும் இங்க வருவாங்க..அதுவும் அவங்க சொல்ற டாக்டர் செக் பண்ணி சரியாயிடுச்சுனு சொன்னா.. தான் வருவாங்க..
அதுவரைக்கும் என் பொண்ணும் பேரனும் எங்க வீட்டுல இருக்கட்டும்னு சொல்லி அவங்களை தன் வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போயிட்டார்..”

“என் வீட்டம்மா என் பையனுக்கு சீக்கிரமே சரியாகிடும்…
பயப்படாதீங்க..உங்க பொண்ணை விட்டுட்டு போங்க… அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாம பத்திரமா பாத்துக்கறேன்னு சொன்து எதையும் அவர் காதுல வாங்கல…”

அதுல வெறுத்து போன என் வீட்டம்மா அவங்க எதிர்க்கவே என் கிட்ட வந்து இப்ப உங்களுக்கு சந்தோஷமா…நானும் உங்க மருமகளும் அவங்க ஆளுங்க பாக்கவே சரியில்லை.. ஏதேதோ சம்பந்தமே இல்லாம பேசறாங்க..நடு ராத்திரி பூஜைனு வேற சொல்றாங்க…அவனை கூப்பிட்டு கிட்டு போக வேணாம்னு சொன்னோமே.. கேட்டீங்களா…”

“எங்களோட வார்த்தைகளை அலட்சியம் செஞ்சுட்டு போனீங்களே… கடைசில..இப்டி என் பையனுக்கு குடும்பமே இல்லாம பண்ணிட்டீங்களே..
சொல்லி அழுதுகிட்டே சண்டை போட்டா..”

“அவங்க எல்லாம் நாங்க ரெண்டு பேரும் சேந்து நடிக்கறதா சொல்லி கேலி வேற பேசிட்டு போனாங்க..எங்க சொந்தமும்.. அவங்க சொல்றது தான் சரினு சொல்லி அவங்களுக்கு ஆதரவா நின்னாங்க..”

“அப்பறம் என்னாச்சு சார்” என ஈஸ்வர் வேதனையாக கேட்க…

அம்பலவாணன் “என்னாகும் தம்பி…சம்பந்தியோட எங்க மருமகளும்.. பேரனும் கிளம்பி போயிட்டாங்க..”

“அதுக்கு பிறகு சொந்தம்ங்கற பேர்ல இருக்கிறவன் எல்லாம் நேர்லயும்… போன்லயும் எங்களுக்கு ஆறுதல் சொல்றேன்னு சொல்லி எங்களை ரொம்ப நோகடிச்சாங்க..என் வீட்டம்மா ஏதோ கொடுமை செஞ்சு மருமகளை அனுப்பிட்டதா கதை கட்ட ஆரம்பிச்சாங்க..”

“அதை இவ காதுல விழாத மாதிரி நான் பாத்துக்கிட்டேன்..ஆனா விதி மருமகளோட சித்தி ரூபத்துல வந்து எல்லாத்தையும் என் வீட்டம்மாக்கு தெரியப்படுத்திட்டு.. அவளை கேவலமாவும் பேசிட்டும் போச்சு..”

“அதுல ஆவேசமான என் வீட்டம்மா  தப்பே பண்ணாம பழி என் பேர்ல வந்துடுச்சு.. இதுக்கு காரணமான உங்க கிட்ட இனி பேச மாட்டேன்..”

“என் கையால சமையல் செஞ்சு போட மாட்டேன்….நீங்க செத்து போற மாதிரி இருந்தா கூட என் கையால பச்சை தண்ணி குடுக்க மாட்டேன்னு சொல்லி என்னை வீட்டுலயே ஒதுக்கி வெச்சிட்டா தம்பி” என கண்ணீரோடு சொல்லி வாய் விட்டு அழ தொடங்கினார்..(ஆறாம் பாகம் முடிந்தது)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்