Loading

சிலையும், சிவமும்-2
(பாகம்-1)
 
முத்து: நவக்கிரகங்களில் இது சந்திரனுக்கு உரிய கல்.
முத்தை மாலையாகவோ, மோதிரமாகவோ அணிந்து கொண்டால் சுவாச கோளாறுகள், தொண்டை சம்பந்தமான கோளாறுகள், தலைவலிகள், மனநோய் போன்றவைகள் தீரும்.
 
 
சித்தன் தன் பேச்சை தொடர்ந்தார் “கல்யாணம் முடிஞ்சு வந்ததுமே..
அவளுக்கு தன் புருஷன் அந்தஸ்தா இருந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தாலும், தன் மாமியார் சமையல் வேலை செய்யறவனு சொல்லிக்க அவமானமா இருந்தது. இதை மறைச்சுக்கிட்டு தான் மாமியார் கிட்ட நல்லவ மாதிரி பழகிட்டு வந்தா…..
 
“ஆனா எத்தனை நாள் நடிக்க முடியும் சொல்லு..அவ சும்மா இருந்தாலும் அவளை அவளோட அம்மா சும்மா இருக்கவிடல…”
 
“ஐயோ அப்பறம் என்னாச்சு ஐயா?|” என அதிர்ச்சி அடைந்த ஈஸ்வர் கேட்க…
 
சித்தன் “வேற என்ன செய்வா.. அம்மா பேச்சை கேட்டு பாசமா இருக்கிற மாமியாரை தொடர்ந்து அவமானம் செய்ய ஆரம்பிச்சா..”
 
“அத்தனையும் புருஷனுக்கு தெரியாம தான் செய்வா…அவ புருஷன் வீட்டுல இருந்தா மாமியார் கிட்ட மரியாதையா நடந்துப்பா….”
 
“அவன் வீட்டுல இல்லேனா மாமியாரை தேவை இல்லாத சுமை.. வீட்டுக்கு பாரம்னு சொல்லி சொல்லி அசிங்கப்படுத்தி அழ வைப்பா”
 
“தான் வந்த கொஞ்ச நாள்லயே…. மாமியாரை இப்படி தொடர்ந்து மனசு வெறுத்து போகும் படி
கேவலமா பேசி பேசியே வீட்டை விட்டு வெரட்டி விட்டுட்டா…அதுக்கு துணையா இருந்த அவளோட அம்மா கை கால் வராம இழுத்துக்கிட்டு போய் சேர்ந்தா” என சொல்லி முடித்தார்.
 
“எங்க பாட்டி எங்கம்மாவை எதுவுமே கேட்கலயா.. சண்டை கூட போடலையா…” என ஈஸ்வர் அடுத்த கேள்வி கேட்க
 
சித்தன் “ஏம்பா… இப்டி என்னை கேள்வி கேட்கறீயே.. இதே போல அன்னிக்கு உங்க பாட்டி வீட்டுலேந்து வெளியே போகும் போது யாரும் கேட்பாரே இல்லையே.. பாவம்..அவளுக்கு எதிர்த்து பேசவுமா தெரியாது..சண்டையும் போட தெரியாத வெகுளி பா..”
 
“பேசி வீணா மருமக மனசுக்கு கஷ்டம் குடுக்க கூடாது..யாரையும் வார்த்தையால நோக அடிக்க கூடாது…. நமக்கு எதுக்கு வம்புனு அமைதியா வீட்டுலேந்து கிளம்பி போயிட்டா” என்றார்.
 
“எங்க வீட்டுலேந்து கிளம்பி எங்க போனாங்க எங்க பாட்டி.. உங்களுக்கு தெரியுமா” என அவசர அவசரமாக ஈஸ்வர் கேட்க..
 
சித்தன் வெகு நிதானமாக “தெரியும்… கூடவே இருந்து அவளை தடுக்க முடியாம…
ஒண்ணும் செய்ய முடியாம… கையாலாகாதவனா அமைதியா பாத்துட்டு இருந்தேனே..”
 
“தன்னை ஆதரிக்க ஆள் இல்லாம போயிடவே..வாழ்க்கையில இருந்த ஒரே பிடிப்பான தன் பிள்ளைக்கு தான் பாரமா இருக்க கூடாதுனு ஒரு ஆசிரமத்துல போய் சமையல் வேலை செஞ்சுட்டு பிழைச்சுக்கிட்டு இருக்கா..”
 
அதை கேட்டு இன்னும் அதிர்ந்த ஈஸ்வர் “என்னது… என் பாட்டி இன்னும் உயிரோடவா இருக்காங்க…அவங்க செத்து போயிட்டதா சொல்லி தானே எங்கப்பா தை அமாவாசைக்கு திதி பண்ணுவார்.. ஒவ்வொரு மாசமும் தர்ப்பணம் பண்ணுவாரே” என்றான்.
 
அதை கேட்ட சித்தன் வேதனையான சிரிப்பு ஒன்றை சிரித்து விட்டு “அது எல்லாம் உங்கம்மாவோட சதி பா… உங்க பாட்டிய வீட்டை விட்டு அனுப்பினது தை அமாவாசை அன்னிக்கு …”
 
“தான் வீட்டை விட்டு அனுப்பின வேதனைல… தன்னோட மாமியார்…
நிச்சயமா எங்கயாவது குளம் குட்டைல தான் இறங்கி இருப்பாங்கற பூரண நம்பிக்கைல அவ அந்த மாதிரி உங்கப்பா கிட்ட திரிச்சு சொல்லிட்டா..”
 
“அந்த சமயத்துல உங்கப்பா சரியா ஆபீஸ் வேலையா டெல்லி போனது உங்கம்மாக்கு ரொம்ப சௌகர்யமா போச்சு…”
 
“உன்னோட பாட்டி….உங்கம்மா பண்ண கொடுமையை தாங்கிக்க முடியாம, பையன் கிட்டயும் சொல்லிக்க முடியாம…ரொம்ப மனசொடிஞ்சு போய், மனசு நிம்மதி வேண்டி அடிக்கடி பல கோயில்களுக்கு போவா..”
 
“உங்க பாட்டி அப்படி கோயில்களுக்கு போறதை வெச்சு…சரியா தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டா… உங்கம்மா..” என முடித்தார்.
 
ஈஸ்வர் “ஐயா..ஒரு நிமிஷம்…நீங்க இதுவரைக்கும் சொன்னதை கேட்கவே எனக்கு பெரிய அதிர்ச்சியாஇருக்கு…தப்பா நெனக்காம இருந்தா..எனக்கு ரொம்ப தாகமா இருக்கு.. குடிக்க தண்ணி கிடைக்குமா…”
என கேட்டான்.
 
சித்தன் “அதுக்கென்ன..தாராளமா  தரேன்.. தாகத்துக்கு தண்ணி கூடவா குடுக்காம இருப்பேன்… இரு போய் எடுத்துட்டு வரேன்..”என சொல்லி போனார்.
 
அவர் திரும்பி வர இருந்த நிமிடங்களில், அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வந்து… இனி நடந்த சம்பவங்களையும் தன் குடும்ப மர்மங்களையும் அவரிடம் இருந்து தெரிந்து கொள்ள முடிவெடுத்து அவருக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
 
சித்தன் தண்ணீர் கொண்டு வந்து தந்ததும், நன்றியோடும் மகிழ்வோடும் அதை வாங்கியவன் கட கட என தன் ஷர்ட் நனைய நனைய குடித்து முடித்தான்.
 
“இப்ப மீதி விஷயங்களை சொல்லுங்க ஐயா” என அவன் கேட்டதும்..
 
சித்தன் “உங்க பாட்டி திருச்சிக்கு உச்சி பிள்ளையாரை தரிசனம் செய்ய போய் இருந்ததாகவும்…
கோயிலுக்கு போறத்துக்கு முன்னாடி காவேரில போய் குளிக்க போனதாவும், குளிக்கும் போது திடீர்னு வந்த வெள்ளத்துல அடிச்சுட்டு போயிட்டதாகவும்…
அங்க இருந்தவங்க, பாத்தவங்க சொன்னதாவும்…”
 
“காரியம் பண்றதுக்கு கூட அவ உடம்பு கிடைக்கலனு…அத நெனச்சு தான் நிறுத்தாம அழறதாவும்…தன் கடமைய சரியா செய்யாம தவறிட்டதால எப்டி உங்கப்பாவ பாக்கறதுனு வேதனையா இருக்கிறதாவும் உங்கப்பாக்கு ஒரு கடிதாசி எழுதிட்டு போட்டுட்டு கூடவே உங்க அம்மா செத்து போயிட்டானு ஒரு தந்தியும் அடிச்சா…..”
 
“அதை உண்மைனு நம்பற மாதிரி அப்ப காவேரில வெள்ளம் வந்து நெறய பேர் உயிர் போக… உங்கப்பாவும் பதறி போய் உடனே கெளம்பி வந்து தன் அம்மாக்கு காரியம் பண்ணிட்டான்..”
 
“பாவம் அவனுக்கு இன்னும் தன்னோட அம்மா உயிரோட இருக்கானு தெரியவே தெரியாது..”
 
“பண்ண பாவம்… போறாத..
வருஷம் தவறாம…விடாம உயிரோட இருக்கிற அவளுக்கு திதி வேற குடுக்கறான் போல இருக்கு..” என சொல்லி பெருங்குரலில் சிரித்தார்.
 
“தயவு செய்து சிரிக்காதீங்க..
அவங்க உயிரோட இருக்கிறது எப்டி எங்கப்பாக்கு தெரியும்…
தெரிஞ்சிருந்தா..செய்வாரா…
யாராவது தெரிஞ்சே தப்பு பண்ணுவாங்களா…தப்புனே தெரியாம அவர் பண்ணா அது எப்படி பாவமாகும்” என ஈஸ்வர் ஈனஸ்வரத்தில்  கேள்வி எழுப்பினான்.
 
சித்தன் “ம்ம்ம்… என்ன பண்றது..
எல்லாம்..  விதிக்கப்பட்டபடி நடக்குது..எந்த மாற்றமும் பண்ண முடியாதே… இதுல உங்கப்பாவோட தப்பு என்ன இருக்கு…”
 
“ஆனா சாஸ்திரப்படி உயிரோட இருக்கிறவங்களுக்கு காரியம் பண்ண கூடாதே.. அது வீட்டுக்கு, குலத்துக்கே விரோதம்…கெடுதல் தானே தரும் பா” என வருத்தமாக சொல்லி முடித்து..சற்று அமைதியானார்.
 
திடீரென எதையோ  நினைத்து கொண்ட சித்தன் “ம்ம்ம்…எல்லாம் உங்க எள்ளு தாத்தா சுந்தரேசன் செஞ்ச பாவம்….இப்ப அது உன் தலைல வந்து விடிஞ்சிருக்கு..” என சொல்லி மீண்டும் அமைதியானார். 
 
 
(பாகம்-2)
 
அதை கேட்டதும் ஈஸ்வர் “என்னது எள்ளு தாத்தாவா… என்ன கதை விடறீங்க..மொதல்ல கொள்ளு தாத்தானு சொன்னீங்க…இப்ப எள்ளு தாத்தாவா” என சொல்லி நக்கலாக சிரிக்க…
 
“சிரி… சிரி.. நல்லா..சிரி.. உனக்கு சிரிக்கறதுக்கு இனி நேரம் கிடையாது” என சித்தன் சொல்ல..
 
“ஓஹோ… இனி சிரிக்கவும் நேரமில்லாம நான் என்ன பண்ண போறேனாம்” என ஈஸ்வர் கேலியாக கூற 
 
“இன்னிக்கு நெறஞ்ச பௌர்ணமி.. வெள்ளிகிழமை…இப்ப சரியா சுக்ர ஹோரை முடியப்போற நேரத்துல உன் காலடி இந்த மண்ல பட்டிடுச்சு”
 
“உங்க கொள்ளு தாத்தா இந்த நவரத்னேஸ்வரரோட உற்சவரை மட்டும் ஒளிச்சு வெக்கல…”என சித்தன் புதிர் போட 
 
ஈஸ்வர் “வேற என்னவெல்லாம் ஒளிச்சு வெச்சாராம்..” என கேலியாக கேட்க…
 
சித்தன் “அப்பா… உனக்கு இப்ப எல்லாம் கேலியா தான் தெரியும்… ஆனா அனுபவப்படும் போது தான் உண்மை புரியும்” என சூசகமாக சொல்ல…
 
ஈஸ்வர் “ஐயா.. பெரியவரே… தயவு செய்து என்னை குழப்பாம..புதிர் போடாம….சொல்றீங்களா…” என மரியாதையாக கேட்க
 
சித்தன் “கெஞ்சினா.. மிஞ்சு.. மிஞ்சினா கெஞ்சு… ரொம்ப ரொம்ப பிரமாதம்…” என சொல்லி
 
“இந்த கோயிலுக்கு சொந்தமான நவரத்னேஸ்வரலிங்கம் ஒண்ணு இருக்கு…ரொம்ப பழமையானது…
விசேஷமானது”
 
“ஒரு சமயம் தேவ சிற்பி மயன் ஏதோ ஒரு சாபத்தால் இங்கே வந்து பிறந்ததாகவும்… அந்த சாபம் தீர இந்த லிங்கத்தை உருவாக்கி ஒவ்வொரு பௌர்ணமிக்கு அவரை ஆராதிச்சுட்டு வந்ததாகவும் ஐதீகம்”
 
“அந்த லிங்கத்தோட சிரசுல பெரிய வைரக்கல் பதிச்சிருக்கும். ஆவுடையார் பூரா முத்து, வைடூரியம், பவழம், மரகதம்,கோமேதம், மாணிக்கம்னு சுத்தி பதிச்சிருக்கும்… கடைசியா.. பாணம் பூரா நீலக்கல் பதிச்சிருக்கும்..”
 
“அந்த நவரத்ன கற்களோட மதிப்பு இன்னிக்கு என்னனே யார்க்கும் தெரியாது…யாராலயும் அதை மதிப்பிடவே முடியாது.. அவ்ளோ விலை உயர்ந்தது”
 
“ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த நவரத்னேஸ்வரர் லிங்கத்துக்கு உச்சி பொழுதுக்கு பால் அபிஷேகம் ஆகும். அப்ப சரியா.. சூர்யனோட கதிரோட ஒளி கோயில்ல இருக்கிற அந்த நவரத்னேஸ்வரர் லிங்கத்து மேல படும்”
 
திடீரென தன் இரு கைகளையும் கூப்பி..”நமச்சிவாய” என உச்சரித்து விட்டு 
 
“ஆஹா.. ஆஹா….அந்த அபிஷேகம் முடிஞ்சு சூரியனோட கிரகணங்கள் பட்டதுமே.. ஒவ்வொரு கல்லும் ஒரு வித ஒளியை தர….அந்த இடமே ஜெகத்ஜோதியா இருக்குமே..அதை பார்த்து தரிசனம் செய்ய கண் கோடி வேணுமே” என மெய் சிலிர்க்க விவரித்தார்.
 
“சரிங்க ஐயா… இப்ப நீங்க சொன்னதுக்கும்…அந்த லிங்கத்தை மறைச்சு வெச்சதுக்கும் என்ன தொடர்பு” என ஈஸ்வர் சரியாக கேட்க…
 
சித்தன் “இப்ப தான் நீ சரியான கேள்வி கேட்டு இருக்க..பதில் சொல்றேன்… இரு” என சொல்லி…திடீரென தான் நின்ற பக்கத்தில் இருந்து திரும்பி கிழக்கு பக்கம் பார்த்து “நமச்சிவாய… நமசிவாய” என ஐந்து முறை சொல்லி வணங்கி விட்டு…
 
“இந்த ஊர் ஜமீன்தார் மார்த்தாண்ட பூபதிக்கு அந்த ஈஸ்வரன் மேல ஒரு பிரியம்…அதுக்காக அவருக்கு ஈஸ்வரன் மேல அளவு கடந்த பக்தினு நெனச்சுடாத…”
 
“அவருக்கு அந்த லிங்கத்து மேல பதிச்சு இருக்கிற கல் எல்லாத்தையும் எடுத்து தனக்கு ஒரு பெரிய மாலை செஞ்சுக்கணும்னு ஒரு எண்ணம்..
பேராவல்.. பேராசைனு கூட வெச்சுக்கலாம்..”
 
“அதை தூண்டி விடறதுக்குனே அவரோட கூட சில பேர் இருந்தாங்க.. அவங்க ஜமீன்தார் தூக்கி போடற பிச்சை காசுக்கும், அவரோட தென்னந்தோட்டத்துல அவங்களுக்கு எப்ப போனாலும் கிடைச்ச அளவில்லாத கள்ளுக்காகவும்..ஜமீன்தார்க்கு 
ஆதரவா நின்னாங்க”
 
“ஜமீன்தார் பல முறைகள் உங்க கொள்ளு தாத்தா கிட்ட இந்த தடவை நம்ம அரண்மனைல அந்த ஈஸ்வரனை கொண்டு வந்து வெச்சு அபிஷேகம் செய்யுங்களேன்..
அவரோட அருள் நம்ம அரண்மனைலயும் படட்டுமேனு தந்திரமா சிரிச்சுக்கிட்டே கேட்பார்.”
 
“உங்க கொள்ளு தாத்தா கிட்ட சரியான நேரத்துல, மார்த்தாண்ட பூபதியோட பையன் மகேந்திர பூபதி அவரோட கெட்ட எண்ணத்தை தெரிஞ்சு, ரகசியமா வந்து சொல்லிடவே, அவர் கேட்ட ஒவ்வொரு தடவையும் அடுத்த தடவை ஈஸ்வரன் உத்தரவு குடுத்தால் பார்க்கலாம்னு தட்டி கழிச்சுட்டு வந்தார்.
 
“இப்படியே சில வருஷம் அவரால ஜமீன்தாரோட கோரிக்கையை தட்டி கழிக்க முடிஞ்சது …அப்பப்ப ஜமீன்தாரோட கைக்கூலிகள் வந்து மிரட்டிட்டு போவாங்க.. ஒரு தடவை அவரை ஆள் வெச்சும் அடிச்சாங்க..
உங்க கொள்ளு தாத்தா எதுக்கும் மசியல”
 
“நேரா போய் ஜமீன்தார் கிட்ட தன்னை அடிச்சவங்கள பத்தி புகார் குடுத்துட்டார்..அதுக்கு பிறகு.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.. அமைதியா இருந்தது…”
 
“வழக்கம் போல அந்த ஈஸ்வரனுக்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பால் அபிஷேகம் தடபுடலா ஜமீன்தாரோட செலவுல நடக்கிறதும், ஜமீன்தார் 
அதை வந்து தரிசனம் செய்யறதும் தொடர்ந்துக்கிட்டு இருந்தது.. “
பேசுவதை நிறுத்தி சற்று பெருமூச்சு விட்ட சித்தன் 
 
“கொஞ்ச நாள்ல மறுபடியும் ஒரு கண்டம் வந்தது…திடீர்னு உங்க கொள்ளு பாட்டி, தாத்தானு குடும்பத்துல தொடர் மரணத்தால..
உங்க கொள்ளு தாத்தா நிலை குலைந்து போக.. அவரோட நிலையை தனக்கு சாதகமாக்கிட்டு ஜமீன்தார் ஒரு விபரீத முடிவு எடுத்தார்.”
 
“ஒரு வருஷத்துக்கு உங்க கொள்ளு தாத்தா செத்து போனவங்களுக்கு காரியம் பண்ற போறதால ஸ்வாமியை தொட்டு பூஜை செய்ய கூடாது.. அவருக்கும் தீட்டு உண்டுனு தான் கூப்பிட்டு கிட்டு வந்த ஜோசியர் மூலமா சொல்ல வெச்சார்”
 
“அதனால அவருக்கு தீட்டு போறவரைக்கும், அந்த நவரத்ன லிங்கத்தை  தன்னோட அரண்மனைல, தானே வெச்சு பூஜை பண்ணணும்னு ஜோசியர் சொன்னதாக சொல்லி அதை உத்தரவாக போட்டார்..”
 
“சாஸ்திரப்படி கோயில்ல இருக்கிற ஸ்வாமியை வீட்டுக்கு எடுத்துட்டு போய் பூஜை செய்ய கூடாதுனு நெறைய பெரியவங்க அவரை சந்திச்சு சொன்னாங்க..”
 
“ஏன் நான் கூட தான் சிவன் சொத்து குல நாசம்.. அதை அபகரிக்க நினைக்காதே… வீணா விபரீதத்தை வரவழிச்சுக்காதனு சொன்னேன்.. “
 
“எதுவும் அவர் காதுல ஏறல…ஏறக்கூடாதுனு தான் விதி போல..விதியை ஏற்படுத்தின கடவுளே அதுக்கு கட்டுப்படும் போது.. நாமெல்லாம் யாரு “
 
“காலம் போன காலத்துல திடீர்னு ஜமீன்தார்க்கு…அருவியில குளிக்கணும்னு ஆசை 
வர.. தான் போயிட்டு அடுத்த பௌர்ணமி க்குள்ள வர்றதாகவும்.. தான் வர்றத்துக்குள்ள அந்த லிங்க திருமேனியை தன்னோட அரண்மனைல ஒப்படைக்க சொல்லிட்டு.. இனி அவர் ஜமீன்தாரோட அரண்மனைல தான் இருப்பார்னு தீர்மானமா சொல்லிட்டு கிளம்பினார்” என்றார்.
 
“அவர் கிளம்பினதும் அவரோட அடியாட்கள் வந்து உங்க கொள்ளு தாத்தாவை மிரட்ட ஆரம்பிச்சாங்க…அப்ப தான் அவர்க்கும் மகேந்திர பூபதிக்கும் ஒரு யோசனை தோணிச்சு” என்க
அது வரை குறுக்கிடாமல் கேட்ட ஈஸ்வர் “என்ன யோசனை…”என கேட்டான்
 
“அந்த ஜமீன்தார் ஊர்லேந்து வந்ததும்…. எங்க கொள்ளு தாத்தா பத்திரமாக அந்த ஸ்வாமியை கொண்டு போய் அவர் கிட்ட ஒப்படைச்சுட்டார்… அதானே” என ஆவலாக கேட்டான்..
 
சித்தனும் “அது போல நடந்திருந்தா… நீ இங்க வர வேண்டிய அவசியமே வந்திருக்காதே பா” என அவனுக்கு பதில் சொல்லி விட்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்…
(இரண்டாம் அத்தியாயம் முடிந்தது)
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்