Loading

அத்தியாயம் – 27

 

அசோக் திடீரென தள்ளிய அந்த கணம், நந்தினியின் உடம்பே பறந்து போனது போலானது, தான் சாக போகிறோம் என்று நினைத்தவளை விதி காப்பாற்ற எண்ணியதோ என்னவோ, கீழே விழும் அந்தக் கணத்தில் அவளது கை, பக்கத்தில் இருந்த மெல்லிய கம்பியில் அகப்பட்டு விட்டது…

பல அடிகள் தூர உயரத்தில், தொங்கிக் கொண்டிருந்த அவளது உடல் ஒவ்வொரு நொடியும் தடுமாறும் விரல்களில் தொங்கிக் கொண்டிருந்தது, அந்தக் கம்பி வழுந்து விட்டால் அவள் கீழே தான் போய் விழுந்தாகனும், அந்த எண்ணமே அவளது எலும்பை நடுங்க வைக்க, மூச்சை பிடித்துக் கொண்டு, அந்தக் கம்பியை உயிராக பற்றிக் கொண்டிருந்தாள்..

அந்த நேரத்தில் தான் மேலிருந்து வந்தது தீரஜின் குரல், அவளுக்கு மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு உயிர் கிடைத்தது போல் இருந்தது, கண்கள் நீர்த்திரையால் மூடப்பட்டிருந்தவளுக்கு அந்த குரலை கேட்டதும், நான் காப்பாற்றப்படுவேன் என்ற நம்பிக்கையே முதலில் வந்தது…

அவனுக்கு எதிர்வினை கொடுத்தாள், அவனை பார்த்த கணம் தான் மூச்சு சீராக வந்தது,
அவன் கையை நீட்டி, அவளது நடுங்கும் விரல்களை  தழுவிக் கொள்ள, அந்தச் சிறு நொடிகளில் அவளது மனம், ‘அவர் இருக்கிறார்… எனக்காக… நான் விழ மாட்டேன்…’ என்று சொல்லிக் கொண்டது…

அவளை இறுகப் பற்றியவனின் கரங்களில் இருந்த வலி அவனது முகத்தில் தெரிந்தாலும், அவன் உறுதியின் வலிமை கம்பியை விடவும் வலுவானது என்பதை உணர்ந்தாள், சில நொடிகள் போராடியபின் அவள் மேலே தூக்கப்பட்டு அவனது மார்பில் விழுந்து சிக்கிக் கொண்டாள்…

அவளது உடல் முழுவதும் நடுங்கியது, மூச்சு அடங்காமல், அழுகையோடு அவன் மார்பில் புதைந்தாள், அவளது பயம், அழுகை, நடுக்கம் எல்லாமே அங்கே கரைந்தன, அவனோ தனக்குள் நடுக்கம் இருந்த போதிலும் அவளை இறுகத் தழுவிக் கொண்டான்,…

அந்தக் கணம் அவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதை கூட அவள் உணரவில்லை, அவ்வளவு தாக்கத்தை கொடுத்திருந்தது அசோக்கின் செயல்,..

கொஞ்ச நேரத்தில் நிதானம் அடைந்தாள் நந்தினி, ஆனால் அவனை விட்டு விலகும் எண்ணம் தான் இல்லை, ஆனால் அவனுக்கு என்னவானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்,..

மெல்ல அவளை விலக்கியவன்.. “என்ன நடந்தது” என்று கேட்டான், அவள் அனைத்தையும் சொல்ல, கேட்க கேட்க அவன் உடல் இறுகியது, அசோக்கின் மீது கொலை ஆத்திரம் வந்தது,..

தனனை மீறி கெட்ட வார்த்தையால் திட்டி இருந்தவன்,.. “அவன் சாவு என் கைல தான்” என்று கர்ஜித்தான்,…

“என் மனைவி மேலேயே கை வச்சிருக்கான்” அவனின் அந்த கோபக் குரல் நந்தினியின் எலும்பு வரை அதிர்ச்சியை ஊட்டியது, முதல் முறை பார்க்கிறாள் அல்லவா அவன் கோபத்தை,..

அந்த கணம் தான் அவள் கண்கள் அவன் நின்று கொண்டிருப்பதையும் கவனித்தது, அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் விரிந்தது…

“அ.. அரவிந்த்” என்றாள் திக்கலுடன்,.. அவள் குரலில் தான் கொஞ்சம் கட்டுக்குள் வந்தான், என்னவென்பது போல் அவளை பார்த்தான், அவளோ,… “நீங்க நிக்கிறீங்க” என்று சொன்னவளுக்கு கண்கள் நீரால் கலங்கின, ஆனால் இந்த முறை அது பயத்தால் அல்ல பேரானந்தத்தால்..

அவளது முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அமைதியாக பார்த்த தீரஜ், மெதுவாக… “என்னால… நடக்கவும் முடியும்” என்றான்,
அந்த சொற்கள் அவள் காதுகளில் விழுந்தவுடனே, நந்தினியின் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாயின.

“எ… எப்போ? எப்படி? ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?” அவள் சிதறிய குரலில் கேட்டாள்,..

அவள் உள்ளத்தில் பல கேள்விகள் கொந்தளித்தன, அவன் நிற்பதைப் பார்க்க வேண்டும், அவன் நடப்பதைப் பார்க்க வேண்டும் என்று எத்தனை நாளாக ஆசையாக காத்திருந்தாள், அந்த ஆசையை பூர்த்தி செய்யும் உண்மை  இருந்தும், அவன் எதற்காக  மறைத்தான் என்பதே அவளை கலங்கச் செய்தது….

“ஏன் என்கிட்ட மறைச்சீங்க?” நந்தினியின் குரல் துடித்தது, அவன் எதற்காக மறைத்தான் என்ற வேதனையில் ஆனந்த கண்ணீரோடு வேதனை கண்ணீரும் சேர்ந்து வடிந்தது,..

மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவளோ.. “சில நாட்கள் தான் ஆச்சு,… மெதுவா மெடிக்கல் எகியூப்மெண்ட்ஸ் வைத்து பயிற்சி பண்ணேன், முதல்ல கொஞ்ச நேரம் மட்டும் நின்னேன், அப்புறம் இரண்டு அடி நடந்தேன், இன்னும் நான் ஸ்டடியா நடக்க ஆரம்பிக்கல மது,… அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தேவைப்படும்னு நினைக்கிறேன். ஆனா…” என்று அவன் மெதுவாக நிறுத்த,

அவள் மூச்சை பிடித்தவாறே அவன் வார்த்தைகளை எதிர்பார்த்தாள்.

“உன்னோட பர்த்டே வருதுல அதுக்குள்ள என்னால நல்லா நடக்க முடியும் போலத் தோணுச்சு, அப்போ சர்பிரைஸா உனக்கு சொல்லலாம்னு தான் நினைச்சேன், அதனால தான் சொல்லாம மறைச்சேன்” அந்த வார்த்தைகளை கேட்டவுடன் நந்தினியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“அரவிந்த்… நீங்க…” என்று அவள் சொற்கள் முடிவதற்குள் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் தீரஜ்,.

“எனக்கு தெரியும் மது, நான் மறைச்சது உனக்கு ஹர்ட் ஆகிருக்கும், நான் எழுந்து நிற்கணும்னு அவ்வளவு ஆசைப்பட்ட, நான் நடக்கிறத பார்க்க ஈகரா வெயிட் பண்ண, அந்த சந்தோசத்தை சட்டுனு உன்கிட்ட காட்ட எனக்கு தோணல, பெரிய சர்பிரைஸா காட்டணும்னு ஆசை பட்டேன், நிறைய பிளான் வச்சிருந்தேன், ஆனா அந்த ******* எல்லாம் சொதப்பிடுச்சு” அவன் கூறியதை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தவள்,  அவனது அந்த கெட்ட வார்த்தையை கேட்டு விலுக்கென்று அவனை விட்டு விலகினாள்,..

“நீங்க என்ன கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறீங்க” என்றாள் அதிர்வாய்

“நான் அப்படி தான் கோபம் வந்தா நிறைய பேசுவேன்” அவன் சொல்ல…

“இவ்வளவு நாள் நான் பார்க்கலயே” என்றாள்,..

“உன் முன்னாடி இதுவரை கோப பட்டதில்லை அதனால நீ பார்க்கல” அவன் தோள்களை குலுக்க,.. “கோபம் வந்தா கெட்ட வார்த்தையால என்னையும் திட்டுவீங்களா” என்றாள் சுருங்கிய விழிகளுடன்,..

“ச்சே ச்சே என் ஹனிபீயை நான் திட்டுவேனா”என்று கூறி தன்னை நெருங்க முயன்றவனை “அங்கேயே நில்லுங்க” என்று தடுத்தவள்,.. “என்ன சமாதானம் சொன்னாலும் என்னால நீங்க மறச்சதை ஏத்துக்கவே முடியல” என்றாள்,..

அவளது விழிகளில் அந்த காயம் இன்னும் எரிந்துக்கொண்டே இருந்தது…

அவனோ நெற்றியை நீவியபடி
“சரி… மறைச்சுட்டேன் இப்போ என்ன பண்ண சொல்ற? ஸாரி கேட்கட்டுமா… ஐம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி” என்றான்..

அவளோ… “ஸாரி சொன்னா சரியாகிடுமா? ரொம்ப கஷ்டமா இருக்கு அரவிந்த்… என்னால இதை ஏத்துக்கவே முடியல, என்னோட பிறந்த நாளுக்கு ரெண்டு மாசம் கிட்ட இருக்கு, அது வரைக்கும் சொல்ல கூடாதுனு நினைச்சிருக்கீங்க…”என்றவளின் கண்ணீர் மீண்டும் வழிய, அவனுக்கோ மனம் பிசைந்தது, அவளைத் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்….

“ஸாரி மது… நீ இவ்வளவு ஹர்ட் ஆவேன்னு நான் எதிர்பார்க்கல…” அவன் குரல் தளர்ந்து வந்தது..

கொஞ்ச நேரம் அவன் அணைப்பில் அமைதியாக இருந்தவள், பின்னர் மெதுவாய்,
“சரி விடுங்க… இந்த சந்தோஷமான நேரத்தை நான் சிதைக்க விரும்பல, வாங்க, மாமாக்கிட்ட சொல்லலாம், அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாரு…” என்றாள்…

“அப்பாவுக்காச்சும் சின்ன சர்பிரைஸோட சொல்லலாம்னு  நினைச்சேன்…” அவன் மெதுவாய் சொன்னதும், அவனை முறைத்தவள்,.. “இப்போ மாமாக்கிட்ட சொல்லவேண்டாம்னு சொல்றீங்களா?” என்று கேட்டாள்.

“சொல்லவே வேண்டாம்னு சொல்லல, கொஞ்சம் லேட்டரா  சொல்லலாம்னு சொல்றேன், டாக்டர் சில எக்ஸர்சைஸ் கொடுத்திருக்கார், இன்னும் கொஞ்ச நாள்ல என்னால ஸ்டடியா நடக்க முடியும், என் அப்பா முன்னாடி நான் வழக்கமான நடையோட போய் நிற்கணும், அந்த ஆசை தான் எனக்கு” என்று சொன்னான்…

அவனது ஆசையைக் கேட்டு அவளுக்கும் மறுக்க மனமில்லை,
“சரி… உங்க இஷ்டம்” என்பதோடு அவள் ஒப்புக் கொண்டாள்…

அதன்பிறகு தீரஜ் மீண்டும் வீல்சேரில் அமர, அவளுக்கு தான் ஒருமாதிரியாக இருந்தது, இருப்பினும் அமைதியாக அவனோடு லிஃப்டை நோக்கி நடந்தாள், அவன் முகத்தில் தெரிந்த இறுக்கம், அவன் மனம் இன்னும் அசோக்கை பற்றித் தான் சுழன்று கொண்டிருக்கு என்பதை அவளுக்கு புரிய வைத்தது,..

“அந்த அசோக்கை வேலைலிருந்து நீக்கினா போதும், வேற எதுவும் பண்ணாதீங்க… ப்ளீஸ்…” அவள் வேண்டிக் கேட்டி கொண்டாள்,
தன்னால் தான் அசோக் இப்படி மாறி விட்டானோ என்ற குற்ற உணர்ச்சி அவளின் உள்ளத்தை கொத்தியது…

அவனோ, “அதை நான் பார்த்துக்கிறேன், அவனை பத்தி நாம பேச வேண்டாம்” என்பதோடு முடித்துக் கொள்ள, அவளிடமிருந்து பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது…

அன்று அறையில் தான் இருந்தார்கள் தீரஜூம் நந்தினியும், அவன் இன்னமும் அறைக்குள் கூட வீல்சேரிலேயே சுற்றி திரிவது அவளுக்கு கோபத்தை உண்டாக்க,.. “உங்களுக்கு இந்த வீல்சேரை விட மனசே இல்ல போல” என்றாள்,..

மேஜையின் மீதிருந்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது சொல்லில் அவன் பக்கம் திரும்பினான், அவள் முகத்தில் கோபம் அச்சாக தெரிந்தது,..

அதனை கண்டு மெலிதாக புன்னகைத்தவன்,… “நோ.. நோ டியர், அப்படியெல்லாம் இல்ல, பழக்கமாகிடுச்சு” என்றவன் மெல்ல எழுந்தான், அவன் எழுந்து நிற்பதைப் பார்த்தவுடன் நந்தினியின் இதயம் முழுதும் சந்தோஷத்தில் நிறைந்தது, மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் வழிந்தது, அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவளது மனதுக்குள் புது உயிர் ஊட்டியது போல் இருந்தது,..

தனதருகே வந்து நின்றவனிடம்.. “நீங்க நடக்குறீங்க அரவிந்த், உங்களை இப்படி பார்க்க எனக்கு எப்படி இருக்குன்னு தெரியுமா?” என்று எமோஷனலாய் பேசினாள்,…

“எப்படி இருக்கு?” அவன் கிண்டலாய் புருவத்தை உயர்த்தி கேட்டிட,.. அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள்,.. “என்ன சொல்றது நான், எனக்கு வார்த்தையே வரல” என்றாள்,…

“சும்மா அழுத்துட்டே இருக்காத மது, சரி நான் நடந்த பிறகு இதெல்லாம் பண்ணனும்னு ஆசை வச்சிருக்கேன்னு சொன்னியே, இப்போவாச்சும் அதை சொல்லுவியா?” அவன் கேட்க, அவளும் தலையசைத்து தன் ஆசைகளை பற்றியெல்லாம் சொல்ல தொடங்கி இருந்தாள்,..

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
95
+1
3
+1
5

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்