Loading

அத்தியாயம் 25 :

அன்றைய நாளில் அவன் பூவிற்கு அழைத்த அனைத்து அழைப்புகளும் வீண் என்றானது.

சில அழைப்புகள் சென்ற பின்னர் எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வரவும், அதனை ஏற்காது மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தான்.

பாரியை அப்படி பார்க்க பரிதிக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது. மனம் கனத்து போனது.

இது காதலின் பித்துநிலை என்று சொன்னால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டானென்று தெரிந்து மௌனமாக வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.

ஒருவருக்குள்ளிருக்கும் காதலை அவரைத்தவிர வேறொருவர் புரிய வைக்க முயன்றால் முயற்சி செய்பவருக்குத்தான் ஏமாற்றமாகிப்போகும்.

காதல் ஒருமுறை தான் என்றிருப்பவனுக்குள், நீ உன் முறிந்து போன காதலுக்கு முன்பே தமிழிடம் காதல் கொண்டுவிட்டாய் என்று சொன்னால், அதற்கு அவன் வைக்கும் பெயர் நட்பு. அதில் அவனை குழப்பாது, இருக்கும் வேதனையில் இதனையும் அவனுக்கு சேர்க்க வேண்டாமென்று அவனது தெளிவில் அவனிருக்கட்டும் என்று அமைதியாக இருந்த பரிதிக்கு பாரியின் கண்ணீர் பூவின் மீது கோபத்தை உண்டாக்கியது.

குட்டிம்மா குட்டிம்மா என்று உருகுபவன் முன்னிலையில் தற்போது மட்டும் பூ இருந்திருந்தால், பார்வையாலேயே தன் கோபத்தால் அவளை வதைத்திருப்பான்.

பாரியை கொண்டு தானே பூ அவர்களுக்கு உறவாகினாள். அவனையே அவள் துறக்கும் நிலையில் அவர்கள் பாரியின் பக்கம் தானே நிற்க முடியும்.

அன்றைய நாளின் இறுதியில் பூவிடம் தன்னுடைய வெற்றியை பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தைவிட தன்னுடைய இத்தனை அழைப்புகளையும் அவள் உதாசினம் செய்தது தான் அவனுக்கு அத்தனை வலியை கொடுத்தது. அப்படியொரு வேதனையை மனம் முழுக்க பரப்பியது.

பரிதியை இடையோடு கட்டிக்கொண்டு அப்படியொரு கதறல் பாரியிடம்.

வாழ்நாளில் முதல்முறையாக தன் தம்பி அழுது பரிதி காண்கிறான். சகோதரனாக அவனது நெஞ்சம் விம்மியது.

பரிதிக்காக எதுவும் செய்திடும் அன்பு சகோதரன் அவன். அவனுக்காக எதுவும் செய்திடுவான். அப்படிப்பட்டவன் தன் வாழ்க்கையையே தன் தம்பிகாக என்று யோசித்து அம்முடிவை எடுத்தான்.

“பூ இல்லாம முடியல பரிதிண்ணா” என்று இறுதியாக மூச்சினை இழுத்து தன் அழுகையை கட்டுப்படுத்தியவன், “எனக்காகன்னு விட்டுப்போனவ எனக்காகன்னு ஒருநாள் திரும்பி வருவா(ள்) பரிதிண்ணா. அந்த நாளுக்காக காத்திருக்கேன்” என்றவன் அதன் பின் அனைத்திலும் அமைதியாகிப்போனான்.

பாரி சொல்லிய இவ்வார்த்தைகளை பரிதியின் மூலம் அறிந்ததாலேயே, அவனைத்தேடி அவனுக்காக அவளே சென்றதாக இருக்க வேண்டுமென டெல்லி வரை சென்றாள்.

பாரி பயிற்சிக்காக டெல்லி சென்ற அடுத்த இரு தினங்களில் பரிதி தன் முடிவை பெற்றோரிடம் கூறினான்.

தில்லையையும் பார்வதியும் ஒன்றாக அமர்த்தி, அவர்களின் முன் தானும் அமர்ந்தான்.

“நான் மேரேஜ் பண்ணிக்கலாம் நினைக்கிறேன்.” எடுத்ததும் அவன் இப்படி கூறியதும், இருவரும் புரியாது அவனை பார்த்தனர்.

“என்னடா லவ்வா?” என்று தில்லை தான் கேட்டார்.

ஆனால் பார்வதிக்கு ஒரு யூகம் இருந்தது. அடுத்து அவன் சொல்லியது, அவரது யூகத்தை சரியென்றது.

“லவ் இல்லப்பா” என்றவன், “எப்படியும் எனக்கு கல்யாணம் பண்ண ஒரு பெண்ணை பார்ப்பீங்க தான, அந்த பொண்ணு ஏன் தமிழோட அக்காவா இருக்கக்கூடாது?” என்றான்.

தில்லையிடம் யோசிக்கும் பாவம்.

“இது பாரிக்காக எடுத்த முடிவா பரிதி?” அழுத்தமாக வினவினார் பார்வதி.

“அஃப்கோர்ஸ் ம்மா. அவனை இப்படி எப்பவும் சோகமா எதையோ பறிகொடுத்தவன் மாதிரி பார்க்க என்னால முடியல. அவன் லைஃப்ல தமிழ் இருந்தா மட்டும் தான் பழைய பாரியை நம்மால பார்க்க முடியும்” என்றான்.

“அதுக்காக… உன் திருமணம்?”

“ப்பா ப்ளீஸ். பாரியையும் தமிழையும் சேர்க்க இப்படியொரு வழியிருக்கும் போது அதை ஏன் நாம முயற்சித்து பார்க்கக்கூடாது.” பரிதியிடம் ஒரு திடம். நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென்று.

“நான் இதை ஏற்கனவே யோசிச்சேன் பரிதி. ஆனால் அவ தாத்தாவை நினைச்சு அதை விட்டுட்டேன்” என்றார் பார்வதி.

“இப்போ அவர் உயிரோடில்லை ம்மா.”

“என்னடா சொல்ற. இதைக்கூட இந்தப்பொண்ணு நம்மகிட்ட சொல்லலயே.” பார்வதிக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

“அப்போ நம்ம வேற யாரோவாத்தானே நினைச்சிருக்காள்.” வருத்தமாகக் கூறினார்.

“தமிழ் பாரியை மட்டும் தான் ம்மா யோசிக்கிறாள். அவன் அவளுக்கு அடிக்ட் ஆகிட்டான். அது அவனுக்கு நல்லதில்லைன்னு தான், தனக்கும் வலி கொடுக்கும் தெரிஞ்சே… அவனுக்காக மட்டும் தான், அவர்களுக்குள்ள இந்த பிரிவே. அதை அவன் புரிஞ்சிக்கிட்டான். நாமளும் புரிஞ்சிப்போம். முன்ன மாதிரி நாமே அவங்களை திரும்ப சேர்த்து வைப்போம்” என்ற பரிதியின் பாசம் கண்டு அவனின் கன்னம் வழித்து முத்தம் வைத்தார் பார்வதி.

“பாரிக்கு தெரிஞ்சா என்ன சொல்வானோ?” கேட்ட தில்லைக்கு,

“சந்தோஷப்படுவான் ப்பா” என்றான்.

“சரி நாளைக்கே, அப்போ தமிழ் வீட்டுக்கு கிளம்பலாம்” என்ற பரிதியை,

“என்னடா பெண்ணை பார்க்க அவ்வளவு அவசரமா?” என கேலி செய்தார் பார்வதி.

“இல்லம்மா… தமிழை பார்க்கணும். ஒரு அடியாவது அடிக்கணும். பாரி அழுதது இன்னும் கண் முன்னாடியே நிக்குதும்மா” என்றான் தழுதழுப்பாக.

“அப்புறம் இன்னொன்னு, தமிழ் அக்காக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க. அதான் நாம டிலே பண்ண வேண்டாம்” என்றான்.

“உனக்கெப்படிடா இவ்வளவு விவரம் தெரிஞ்சுது?” தில்லை பரிதியை கேள்வியாய் பார்த்தார்.

“ஆள் வைத்து விசாரித்தேன் ப்பா” என்றவன், அவங்க தோட்டத்திலிருந்தும் நம் பேக்டரிக்கு ப்ரூட்ஸ் அண்ட் தேங்காய்கள் வருது. எனக்கும் இப்போதான் தெரிஞ்சுது” என்றான்.

தில்லையிடம் ஆச்சர்யம்.

“நிறைய பேசியிருக்கோம். ஆனால் ஒருமுறை கூட தொழிலைப்பற்றி பேசலயே பரிதி. அவங்களுக்கும் நம்ம தொழில் பெயர் தான் கிங் புட் என்பது தெரிந்திருக்காது இல்லையா?” என்றார்.

பரிதியும் அதனை ஆமோதித்தார்.

“தமிழுக்குத் தெரிந்திருக்குமே? கிங் புட் நம்மோடதுன்னு” பார்வதி இடைப்புகுந்தார்.

“ஆனால் அவளுக்கு அவளுடைய அப்பாவோட தொழில் விவரம் தெரிந்திருக்காதே” என்றான் பரிதி.

“தமிழ் அக்காவை நீ பார்திருக்கியா பரிதி?”

“இல்லம்மா. அவங்களை தமிழ் சொல்லி நிறைய கேட்டிருக்கேன். ஒருமுறை குடும்ப படம் காட்டினாள். அது கூட சின்ன வயசில் எடுத்தது.”

“பொண்ணு உனக்கு பொருத்தமா இல்லைன்னா?”

“எனக்கு அவள் தான் மனைவி.”

பரிதியின் உறுதி அடுத்து அவர்களை எதுவும் கேட்க விடவில்லை.

அடுத்த நாள் விடியலிலேயே மூவரும் கிளம்பி பாபநாசம் சென்றனர்.

மாலை தமிழின் ஊருக்குள் அவர்களது கார் நுழைந்தது.

“வீடு தெரியுமா பரிதி?”

“அட்ரெஸ் தெரியும் ப்பா. பட் இங்க எந்தப்பக்கம் அட்ரெசிலிருக்கும் தெரு இருக்குன்னு தெரியலையே?” என்றான்.

“யார்கிட்டவாது கேளு பரிதி.”

“சரிம்மா.”

ஊருக்குள் காரை நிறுத்திய பரிதி யாரிடம் கேட்கலாமென்று பார்வையை அலச, ஒரு இளம் பெண் மிதிவண்டியில் பரிதியின் பக்கமாக அவர்களின் காரினை கடந்துச் சென்றாள்.

அந்நேரத்தில் சாலையில் அப்பெண்ணைத் தவிர யாரும் இல்லாமல் இருக்க… அவளிடமே கேட்க நினைத்த பரிதி, காரின் கண்ணாடியை இறக்கி…

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று அழைத்தான்.

அவள் நிற்காது சென்று கொண்டிருக்க…

கதவை திறந்து ஒரு காலை மட்டும் கீழ் வைத்து இறங்கியவன்,

“ஹலோ மிஸ் ஹாஃப் சாரி” என்று சத்தமாக அழைக்க, பட்டென்று மிதிவண்டியை காலூன்றி நிறுத்தியவள் அதில் அமர்ந்தவாறே பின்னால் திரும்பி வெட்டும் பார்வை பார்த்தாள்.

அப்பெண்ணின் பார்வையில் பரிதியின் இதயம் நின்று துடித்தது. லப் டப் சத்தம் அவனின் காதுகளில் ஒலித்தது. பார்த்த கணம் ஏதோ ஒன்று அவளிடம் அவனை ஈர்த்தது. தலையை உலுக்கி தன்னை நிலை நிறுத்தினான்.

‘இத்தனை வருடங்கள் எந்த பெண்ணின் மீதும் வராத புது உணர்வது இந்த பெண்ணிடம் என்ன? பார்த்த நொடியில்?’ அவன் தனக்குள் அவளை பார்த்தபடி ஆராய்ச்சி நடத்த…

“ரோட்ல ஒரு பொம்பளை புள்ளையை இப்படித்தான் சத்தமா கத்தி கூப்புடுவாகலா?” என்றாள் அவள்.

“சாரி மிஸ்” என்றவனின் உடனடி மன்னிப்பில் அவள் இறங்கி வந்தாள்.

மிதிவண்டியை திருப்பி அருகில் வந்தவள்,

“எதுக்கு கூப்பிட்டீக” என்று வினவினாள்.

அப்போதுதான் காருக்குள் இருக்கும் பெரியவர்களை கவனித்து மிதிவண்டியிலிருந்து வேகமாக இறங்கி… ஓட்டுவதற்கு ஏதுவாக ஒருபக்கம் இடையோடு தூக்கி சொருகியிருந்த பாவாடையை இறக்கி விட்டாள்.

அதனை கவனித்த பார்வதிக்கு அப்பெண்ணின் அழகும் பெரியவர்களுக்கான மரியாதை பண்பும் பார்த்ததும் பிடித்தது.

தாங்கள் பார்க்க வந்த பெண்ணும் இவள் போலிருக்கு வேண்டுமென்று தன்னைப்போல் நினைத்தார்.

பரிதியும் அவளின் செயலை கவனித்து மனதில் மெச்சுதலாக எண்ணினான்.

கோவிலுக்கு சென்று வருகிறாள் போலும்… நெற்றியில் கீற்றாய் மஞ்சளும், குங்குமமும் வீற்றிருக்க, மிதிவண்டியின் கூடையில் தேங்காய் பழக்கூடை இருந்தது.

“என்ன வேணும்? எதுக்கு கூப்பிடீங்க?”

பரிதி அவளையே விழி அகலாது பார்த்திருக்க வினவினாள்.

“இங்க தேங்காய் மண்டி வைத்திருக்கும் மணியரசு வீடு எங்கிருக்கு?”

பரிதி கேட்டதும் அவளின் பார்வையில் ஆராய்ச்சி.

அவளிடம் பதிலின்றி போக, தெரியவில்லையோ என நினைத்தவன்,

“அவர் அப்பா பெயர் பொன்னுவேல். அவருக்கு ரெண்டு மகள்கள். மனைவி பெயர் மணியம்மை. அம்மா பெயர் தங்கம்” என்று கூடுதல் தகவல்களாக மொத்த குடும்பத்தின் பெயரையும் கூறினான்.

“விட்டா ஜாதகத்தையே சொல்லுவீங்க போல” என்றவள் “என்ன விஷயம்?” என்றாள் மிதப்பாக.

“சொன்னாதான் வழி சொல்லுவீங்களோ!” என்றவனை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவள்,

“நான் அங்கனதேன் அந்தபக்கமா போவுதேன். என்னை ஃபாலோ பண்ணிக்கோங்க” என்றவள் முன்னால் செல்ல… பரிதியின் கவனம் அவளின் நீண்ட கூந்தலில் பதிந்தது.

“பரிதி ஸ்டெடி… ஸ்டெடி… ஸ்டெடி டா” என்று சொல்லிக்கொண்டவன் காரிலேறி அவளை பின் தொடர்ந்தான்.

“பொண்ணு அழகா இருக்காள் தான!”

பார்வதி வினவ,

“ஆமா” என்றவன், “நாம பார்க்க வந்த பொண்ணு இவங்கயில்ல” என்று கூறினான். அந்நொடி இனம் புரியாத ஏமாற்றம் அவனுள் பரவுவதை தடுக்க முடியவில்லை.

சில அடிகளில் ஒரு வீட்டிற்கு முன்பு மிதிவண்டியை நிறுத்தியவள்…

“நீங்க கேட்டது இந்த வீடு தான்” என சொல்லிவிட்டு அந்த வீட்டிற்குள்ளேயேச் சென்றாள்.

“என்னடா இந்த பொண்ணு உள்ள போகுது?” கேட்டபடி பார்வதி இறங்கினார்.

“தெரிஞ்சவங்களா இருக்கும்” என்ற தில்லையும் இறங்கிட… அரசு யாரென்று பார்க்க வெளியில் வந்தார். அவரின் பின்னால் அப்பெண்ணும்.

‘ஹோ… மாமாவை அழைத்து வரத்தான் உள்ள போனாளா’ என நினைத்த பரிதியின் பார்வை முழுக்க அப்பெண்ணிடம் தான்.

இவர்கள் மூவரையும் கண்டதும் அரசு வேகமாக ஓடி வந்து வரவேற்றார். அவரால் நம்பவே முடியவில்லை.

“மணி… மணி” என்று உள் நோக்கி மனைவியை சத்தமாக அழைத்தவர், மூவரையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்று இருக்கையில் அமர வைத்தார்.

உடன் நின்றிருந்த பெண்ணை…

“போய் தண்ணீ மொண்டா இளா” என விரட்டினார்.

அரசு இளா என்று சொல்லியதிலேயே அப்பெண் யாரென்று அறிந்த பார்வதிக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது. பரிதிக்கு மனதில் பரவிய ஏமாற்றம் விலகி அவ்விடத்தை இதம் ஆக்கிரமித்தது.

“எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குடா!” பார்வதி உற்சகமாகினார்.

“எனக்கும் டபுள் ஒகேம்மா!” பரிதியின் முகம் மத்தப்பாய் ஒளிர்ந்தது.

“முதலில் அவங்க என்ன சொல்லுவாங்கன்னு பார்ப்போம்” என்று அவர்களின் முறைப்பிற்கு ஆளாகினார் தில்லை.

மூவருக்கும் இளா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க… அரசு அதற்குள், வீட்டின் பின்பக்கம் சென்று… அங்கு தோட்டத்தில் வேலையாக இருந்த தாய் மற்றும் தாரத்தை அழைத்து வந்தார். கையில் மூன்று இளநீர்.

இளாவிடம் இளநீரை கொடுத்தவர்,

“பனங்கற்கண்டு தட்டிபோட்டு கொண்டு வாம்மா” என்றார்.

மணியும் தங்கமும் இன்முகமாய் அவர்களை வரவேற்று நலம் விசாரிக்க… அந்நொடி அனைவருக்கும் நிறைவாய் அமைந்தது.

மூவருக்கும் இளநீர் கொடுத்து மணியின் அருகில் சென்று நின்ற இளா… “யாரும்மா இவங்க?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

“பாரியோட குடும்பம் இளா” என்று அவர் சொல்லிட  “ஹோ” என்றாள். இதற்கு முன்பு அவர்களை பார்திராததால் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. பாரியை மட்டும் பூவின் அலைபேசியில் பார்த்திருக்கிறாள்.

அவர்கள் இளநீர் அருந்த,

அனைவரிடமும் கனத்த அமைதி.

பார்வதி தான் தயக்கம் உடைத்தார்.

“நடந்தது எதையும் பேச வேண்டாண்ணா… எங்களுக்கு சொந்தமுன்னு இருக்க உறவு தமிழ் தான். அவள் மூலமா நீங்க. அது கடைசிவரை தொடரனுங்கிறது தான் எங்க விருப்பம்” என்றார்.

அப்பேச்சில் தங்கம் உருகிப்போனார்.

“ஆத்தா நானிருக்கும்போது நீயி என்னத்துக்கு வெசனப்படுதத்தா” என்றவர் கலகலப்பாக பேச்சினை ஆரம்பிக்க… அடுத்த சில நிமிடங்கள் சிரிப்பும் உற்சாகமுமாய் கழிந்தது.

தங்களை அழைத்து வந்த பெண் தான் இளா என்று தெரிந்தது முதல் பரிதி அவளிடமே நிலைத்து விட்டான். தனக்கானவள் என்பதை பார்த்த கணம் மனம் அறிவுறுத்த தற்போது வஞ்சனையின்றி மனதில் படம்பிடித்துக் கொண்டிருந்தான்.

பார்வதி பெண்களுடன் பேச்சில் ஆழ்ந்துவிட…

தில்லை தான் நினைவாக “தமிழ் எங்க?” என்று வினவினார்.

“அவ உன்கூட தான வந்தா(ள்)” என்று அரசு கேட்க…

“கோவில்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன் சொன்னாப்பா” என்று இளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தங்கள் வீட்டின் முன் நின்றிருக்கும் காரை வைத்தே வந்திருப்பவர்கள் யாரென்று அறிந்து “வேந்தா” என்று சத்தமாக அழைத்தபடி வேகமாக ஓடிவந்தாள் பூ.

அங்கிருந்த மூவரையும் கண்டதும் அவளின் கண்களில் ஒளி. இருப்பினும் அவளது வேந்தன் இல்லாதது அவளுள் சிறு ஏமாற்றமே.

தமிழை கண்டதும் பார்வதி முகத்தை திருப்பிட…

பரிதி எழுந்து வந்து அவளை தோளோடு அணைத்து விடுத்தான்.

“யாரோ ஒரே ஒரு அடியாவது அடிக்கணும் சொன்னாங்க” என்று பரிதி சொல்லியதை தில்லை போட்டுக்கொடுக்க… “மாமா” என்று பூ பரிதியின் வயிற்றில் குத்தினாள்.

“பார்க்க வேண்டியவகளை பார்த்தமாட்டிக்குதேன் எம் பேத்தி மொகத்துல வெளிச்சம் வருது” என்று தங்கம் சொல்ல…

“அதெல்லாம் சும்மா. அப்படியிருந்திருந்தா இவ்வளவு நாள் பார்க்காம இருந்திருப்பாளா?” என்று ஆற்றாமையாக வினவினார் பார்வதி.

இரு காதிலும் கை வைத்து முகம் சுருக்கி பூ மன்னிப்பு வேண்டி அவரின் முன் சென்று மண்டியிட்டு அமர, அவளை உச்சி நுகர்ந்து நெற்றியில் இதழொற்றி தன் கோபம் விடுத்தார்.

அதன் பிறகு பெண்கள் அனைவரும் சிற்றுண்டி செய்வதாக அடுக்கலைக்குள் ஐக்கியம் ஆகிட… மூத்த ஆண்கள் இருவரும் தொழிலைப்பற்றி பேசி… தங்களின் தொழில் சம்மந்தத்தை பகிர்ந்துக்கொண்டனர். தில்லை சொல்ல அரசுவிடம் ஆச்சர்யம்.

“இம்புட்டு வருசமா இது தெரியலிங்களே!” என்றார்.

பரிதியும் பூவும் தனியாக பேசியபடி இருந்தனர்.

பரிதி பாரியைப்பற்றி சொல்லும் அனைத்தையும், எவ்வித குறுக்கீடுமின்றி கேட்டுக்கொண்டாள்.

“உன்னால பாரியில்லாம இத்தனை நாள் எப்படி முடிந்தது தமிழ்?”

அவளிடம் விரக்தி புன்னகை.

எங்கே தன் மனம் கட்டுப்பாடின்றி தன் காதலை அவனிடம் வெளிப்படுத்திடுமோ அதனை அவன் மறுத்திடுவானோ என்று அஞ்சியே தான் விலகி இருந்ததாக அவளால் சொல்ல முடியவில்லை. தனக்குள் தன் வலியை வருத்தத்தை பிரிவின் வேதனையை புதைத்து ஒரு புன்னகையில் அவனுக்கு உணர்த்திட்டாள்.

“இட்ஸ் ஓகே டா” என்றவன் அவளின் வேதனை புரிந்து அதன் பின்னர் அதைப்பற்றி கேட்கவில்லை.

மாலை நேர சிற்றுண்டி அனைவருக்கும் மகிழ்வாக நகர்ந்திட… பார்வதி தான் வந்த விடயத்தை ஆரம்பித்தார்.

இரண்டு குடும்பமும் சில மணி நேரத்தில் ஒன்றுக்குள் ஒன்றாகியிருந்தனர். அதனால் எவ்வித தயக்கமுமின்றி பளிச்சென்று கேட்டிருந்தார்.

“பரிதிக்கு இளாவை கேட்கலான்னு தான் நாங்க இங்க வந்தோம் அண்ணா.”

பூவுடன் நின்றிருந்த இளா பரிதியைத்தான் வேகமாக பார்த்தாள். அவனும்.

அரசுவிற்கு பார்வதி இப்படி உரிமையாய் கேட்டது மகிழ்வை கொடுத்தது. அவரும் அந்நொடி இத்திருமணம் நடந்தால் பாரிக்கும் பூவுக்கும் இடையேயான பிரிவு ஒரு முடிவிற்கு வருமென்றே எண்ணினார்.

“பாரி, தமிழுக்காகத்தான் பரிதிக்கு இளாவை பெண் கேட்க எண்ணி இங்க வந்தோம். ஆனா பார்த்ததும் இளாவை ரொம்ப பிடிச்சுப்போச்சு. இதை என் மனசார சொல்லுறேன்” என்று எதையும் மறைக்காது கூறினார்.

அரசு தன் மனைவியை பார்த்தவாறு இருக்க…

“உங்க விருப்பம் எதுவாயிருந்தாலும் சொல்லுங்கண்ணா” என்றார் பார்வதி.

“அவன் என்னத்த சொல்லுறது… நான் சொல்லுதேன். சம்மதந்தேன்” என்றார் தங்கம்.

“புள்ளைங்க விருப்பம் தான நமக்கு” என்று அரசு தன் மூத்த மகளை ஏறிட்டார்.

“அக்கா ஓகே சொல்லு ப்ளீஸ். பரிதி மாமா உனக்கு செம மேட்சிங். அங்க மாமாவை பாருக்கா. எப்படி ஹீரோ மாதிரி இருக்கார். ப்ளீஸ்… ப்ளீஸ்… ஓகே சொல்லுக்கா” என்று இளாவின் கையை பிடித்துக்கொண்டு அவளின் காதில் ஆர்ப்பரித்தாள் பூ.

தன்னுடைய வேந்தனின் அண்ணன், அதுவும் தனக்கு மிகவும் பிடித்த தனது பரிதி மாமா, அவன் தன்னுடைய அக்காவிற்கு கணவனாக வந்தால் வேண்டாமென்றா சொல்லுவாள். எப்படியாவது அக்கா ஓகே சொல்லிட வேண்டுமென்று அப்போதே இறைவனிடம் வேண்டுதல் வைத்தாள்.

பூ ஆர்ப்பரிக்க… இளா பரிதியைத்தான் விழியோடு விழி சந்தித்தாள்.

இளமதி பரிதியின் விழி மொழியில் என்ன உணர்ந்தாளோ…

“எனக்கு சம்மதம் ப்பா” என்றாள். அவனது விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டபடி. விழிவழி அவனின் மன மொழியை அவதானித்தபடி.

“அப்புறம் என்ன சம்மந்தி… நிச்சயத்துக்கு நாள் பார்ப்போம்.” தில்லை மகிழ்வாய் கூறினார்.

“பாரிக்கு ட்ரெயினிங் பீரியட் முடியட்டும் ப்பா. இப்போ வச்சா அவனால வர முடியாது. அவனுக்கு ஈஸியா லீவ் கொடுக்க மாட்டாங்க” என்று மறுத்தான் பரிதி.

“இப்போன்னா இப்போவே கிடையாது பரிதி. மூணு மாசம் அப்புறம் நிச்சயம் பண்ணிப்போம். அடுத்து ஆறு மாசம் கழித்து திருமணம் வைப்போம். அதற்குள்ள பாரிக்கும் ட்ரெயினிங் ஆல்மோஸ்ட் ஓவராகும். லீவ் கிடைக்கும்” என்றார் தில்லை.

அனைவரும் அதையே ஆமோதித்தனர்.

அதன் பின்னர் அவர்களின் பேச்சு இளா பரிதியின் நிச்சயத்தைப்பற்றி இருக்க…

பூ இருவரையும் தனியாக அழைத்துக்கொண்டு மாடிக்கு வந்தவள், “இதைத்தான மாமா எதிர்பார்த்தீங்க. உங்க மனசு எனக்கு புரிஞ்சுது. ரெண்டு பேரும் பேசிக்கோங்க, நான் அப்படி ஓரமா நிக்கிறேன்” என்று ஓடிவிட்டாள்.

“ஹேய் தமிழ்…” இளாவின் குரல் காற்றில் தான் மிதந்தது.

மாடி சுவற்றில் சாய்ந்து மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்ற பரிதி…

இளாவின் முகத்தில் தெரியும் பதற்றத்தை ரசித்திருந்தான்.

அவள் தலை கவிழ்ந்து, தாவணி நுனியை திருகியபடி இருக்க, பரிதியின் அருகாமை அவளுள் முரசு கொட்டியது.

“நான் அந்த தாவணியா இருந்திருக்கலாம்.” பரிதியின் குரலில் அப்பட்டமான பொறாமை.

அவனது வார்த்தைகளின் பொருள் புரிந்தவள் விழி உயர்த்தி அவனது முகத்தை சந்திக்க…

“உன்னை பார்க்க வைக்க நான் வேற மாதிரி பேசணும் போலிருக்கே” என்றவன் அவளின் சட்டென்ற விழி வீச்சில் மயங்கித்தான் போனான். தன்னவளாக பார்த்ததும் பதிந்து போனவளை ஏனோ மரியாதையாக அழைத்து தள்ளி வைக்க அவன் மனம் இடமளிக்கவில்லை.

“ஊப்…” என்று காற்றை வெளி ஊதியவன்,

“உன் முன்னால ஏதோ இங்க பண்ணுது” என்று இதயப்பகுதியை தொட்டு காண்பித்தான்.

“மூச்சு முட்டுது” என்றான்.

அவன் தன்னைப்பற்றி எல்லாம் கூறினான். அதில் பூவை எத்தனை பிடிக்கும் என்பதையும் சொல்லியிருந்தான்.

அத்தோடு அவளை பார்த்ததும் மனதில் எழுந்த தடுமாற்றத்தை மறைக்காது சொல்லியவன்,

“பாரி, தமிழுக்காக யோசிச்சு இங்க வந்தாலும்… உன்னை பிடிச்சதால் மட்டும் தான் இந்த திருமணம்” என்று தன்னுடைய மனதை அழகாய் வெளிப்படுத்தினான்.

அவள் கேட்க நினைத்த கேள்விக்கு, அவள் கேட்காமலேயே பதில் வழங்கியிருந்தான்.

இளாவிற்கும் அவனை பார்த்ததும் பிடித்திருந்தது. கீழே அவளிடம் சம்மதம்  கேட்கும் போது, அவனதுவிழியை சந்தித்த பின்னர் ஏனோ மறுத்துக்கூற மனமில்லை.

சம்மதம் சொல்லிய பின்னர், ‘தமிழ் உடனிருப்பதற்காகத்தான் இத்திருமணமா?’ என்று கேள்வி எழும்பிட… அதற்கான அவனின் பதிலில் இப்போது தெளிந்திருந்தாள்.

தங்கையின் சந்தோஷம் அவளுக்கும் முக்கியமாக இருந்த போதிலும், எந்தவொரு பெண்ணும் தனக்காக மட்டுமே ஒருவன் தன்னை விரும்ப வேண்டும் என்பது நினைப்பது இயல்பு தானே.

அதையே பரிதியும் அவளிடம் வினவினான்.

“வீட்ல எல்லோருக்கும் ஓக்கேன்னு நீயும் ஓகே சொன்னியா?”

பரிதி இயல்பாக பேசிட…

இல்லையென இடவலமாக தலையசைத்தாள்.

“இந்த மௌன மொழியெல்லாம் எனக்கு புரியாது. வாய் திறந்து சொல்லு” என்றான்.

உண்மையில் அவனுக்கான அவளின் பிடித்தத்தை அவள் வாயால் கூறி கேட்க ஆசை கொண்டான்.

“பிடிச்சிருக்கு.”

“தரையவா?”

இளா தலை கவிழ்ந்து சொல்ல… அவ்வாறு கேட்டிருந்தான்.

வேகமாக தலை உயர்த்தி “இல்லை” என்று சத்தமின்றி சொன்னாள்.

“அப்போ யாரை?”

“உங்களை” என்று விரல் நீட்டி சொல்லியவள் அவன் முன் நிற்பதற்கு நாணம் தடைவிதிக்க வேகமாக கீழே ஓடிவிட்டாள்.

படியில் அமர்ந்திருந்த பூ, தன் அக்காவின் முகத்திலிருந்த சிவப்பை கண்டு சந்தோஷமாக பரிதியிடம் வந்தாள்.

“மாமா” என்று பரிதியை கட்டிக்கொண்டவள், “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள்.

“பாரிகிட்ட பேசுறியா டா?”

பூவிடம் மௌனம்.

“பேசிக்கலாம் மாமா” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு கீழ் சென்றாள்.

இரவு உணவு உண்டுவிட்டு அவர்கள் கிளம்பிவிட…

செல்வதற்கு முன் பூவிடம் இளாவின் எண்ணை வாங்கிக்கொண்டான் பரிதி.

அங்கு பாரிக்கு பயிற்சியில் நிற்பதற்கு கூட நேரமில்லை. பயிற்சி என்ற பெயரில் சக்கையாக பிழிந்தனர். அவனுக்கும் அதுதான் வேண்டுமாக இருந்தது. சிலதிலிருந்து ஓடுவதற்கு. இரவு உவணவிற்கு பின்னர் கூட, மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக வழக்குகளை எப்படி ஆராய்வதென்ற அடிப்படையில் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அதனால் வீட்டிற்கு பேச வேண்டுமென்றால் பாதி இரவிற்கு மேல் தான் அழைப்பான். இல்லையென்றால் அதிகாலை நேர பயிற்சிக்கு செல்லுமுன் ஒரு இரண்டு நிமிடம் பேசிவிட்டு ஓடிவிடுவான்.

அன்றும் அப்படித்தான் அவனின் நேரத்தை கணித்து பாபநாசத்திலிருந்து கிளம்பிய இரவு பயணத்தின் போது பரிதி பாரிக்கு அழைத்திருந்தான்.

அப்போதுதான் அறைக்குள் வந்த பாரி அசதியாக இருக்க உடைகூட மாற்றாது மெத்தையில் குப்புற விழுந்தான்.

அலைபேசி அதிர்வில் எட்டி எடுத்தவன், கண்களைக்கூட திறவாது…

“பரிதிண்ணா” என்றான். தற்போது அவனுக்கு அழைக்கும் நிலையில் இருக்கும் ஒரே ஆள் பரிதி மட்டுமே. அதனாலேயே யாரென்று திரை பார்க்காதும் சரியாகக் கூறினான்.

அவனின் குரலில் அப்பட்டமான சோர்வு.

“ஹெவி டாஸ்க்கா பாரி. வாய்ஸ் டல்லா இருக்கு.”

“ஹ்ம்ம்… பரிதிண்ணா. நாளைக்கு பேசவா” என்றான்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் பாரி.” அவன் அத்தனை சோர்வாக பேசவும் பரிதியால் சொல்ல முடியவில்லை. அவனிடம் சொல்லாமல் இருக்கவும் முடியாது இழுத்தான்.

பரிதியை பொறுத்தவரை தான் என்ன செய்தாலும் அதனை முதலில் பாரியிடம் சொல்லிட வேண்டும். இப்போதும் அதனாலேயே தன் தம்பியிடம் சொல்ல முடியவில்லையே என்று தன் வருத்தத்தை தன்னை அறியாது குரலில் வெளிப்படுத்தியிருந்தான்.

அதனை பாரியும் உணர்ந்தானோ!

“சொல்லுண்ணா” என்றான்.

“இட்ஸ் ஓகே பாரி. நீ தூங்கு. நான் மார்னிங் சொல்றேன்.”

“அச்சோ அண்ணா சொல்லுங்க. இல்லைன்னா எனக்கு தூக்கம் வராது.” இப்போது பாரி பரிதியை வற்புறுத்தினான்.

பரிதி சொல்லிடத் தயங்க…

“கொடுடா… நான் சொல்றேன்” என்றார் பார்வதி.

“இல்லை இல்லை… நான் தான் சொல்வேன்” என்ற பரிதி…

“உனக்கு அண்ணி ரெடியாகியாச்சு பாரி” என்றான் பட்டென்று.

“வாவ் அண்ணா. சூப்பர்” என்ற பாரி “உங்களுக்கு பிடிச்சிருக்காண்ணா?” என்று மட்டும் தான் கேட்டான்.

பரிதி பிடித்திருக்கிறது என்று சந்தோஷம் வழியும் குரலில் சொல்லிட… அதனை உள்வாங்கிய பாரிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

அதன் பின்னர் அவனது ஓட்டம் பயிற்சியில் அதிகரிக்க… வீட்டு நபர்களுடன் பேசும் நாட்கள் குறைந்தது.

கால் செய்யும் போதெல்லாம் அவனின் நலன் அறிய மட்டுமே நேரம் இருக்கும்.

“உன் அண்ணியை பற்றி ஒரு வார்த்தையாவது கேட்டியாடா?” என்றி பரிதி ஒருநாள் குறைபட…

“என் அண்ணாக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னா அவங்க பெஸ்ட்டா தான் இருப்பாங்க. நிச்சயம் எனக்கும் அவங்களை பிடிக்கும்” என்றுவிட்டான்.

போட்டோ அனுப்புவதாக சொல்லவும், “நேர்லே பார்த்துக்கிறேன். முதன் முதலா போட்டோவிலா பார்ப்பது” என்று மறுத்துவிட்டான்.

அதனாலேயே பாரிக்கு இளாவைப்பற்றி தெரியாமல் போனது.

நிச்சயத்திற்கு பத்து நாட்கள் இருக்கும்போது தங்கத்திற்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட… அவர் தன்னுடைய ஒரு பேத்தி திருமணத்தையாவது பார்க்க வேண்டுமென்று ஆசைக்கொள்ள அவருக்கு அந்தளவிற்கு சீரியஸ் இல்லையென்ற போதும் அவரது பேச்சில் மகனாக அரசு பயந்துவிட்டார்.

ஆதலால் பார்வதி மற்றும் தில்லையிடம் பேசி நிச்சய நாளில் திருமணம் செய்ய ஏற்பாடாகிவிட்டது.

பயிற்சி ஆரம்பித்து குறுகிய காலம் தான் ஆகிறது என்பதால் விடுமுறை எடுத்து வருவது கடினம் திருமணத்திற்கு வருகிறேன் என்று சொல்லியிருந்த பாரிக்குத்தான் விரைவான திருமண ஏற்பாட்டால் சங்கடமாகிப்போனது.

எப்படியும் அண்ணனின் திருமணம் என விடுப்பு கேட்டால் கிடைக்காதென்று அறிந்தவன், எமெர்ஜென்சி எனக் காரணம் காட்டி விடுப்பு பெற்றான்.

பூ பாரியை தானே நேரில் சென்று அழைத்து வருகிறேன். அப்போது நானே எல்லாம் சொல்லிக்கொள்கிறேன் என்று பரிதியிடம் சொல்லியிருக்க… பரிதி, பாரி இங்கு வரும்வரை அவனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை.

விடுமுறை கிடைத்த அன்று தான் எங்கு வர வேண்டுமென்று ஊரின் பெயரையேக் கேட்டான்.

பரிதி நெல்லை என்றதுமே அதிர்வோடு பூவின் நினைவு அவனை அதிகம் தாக்கியது. ஆனால் நிச்சயம் பரிதிக்கு பார்த்திற்கும் பெண் பூவின் அக்காவாக இருக்குமென்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அதனாலே பாரிக்கு இன்றைய நாள் அதிகளவு ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் நிறைந்திருந்தது.

பாரியின் அணைப்பிலிருந்த பரிதி… அனைத்தையும் தன் தம்பிக்கு விளக்கமாக கூறி முடித்து அவனிலிருந்து பிரிந்தான்.

“உங்க ரெண்டு பேரோட சிரித்த முகத்தை பார்க்கும்போது நான் பொண்ணா பிறந்திறக்கலாம் தோணுது பரிதிண்ணா” என்று அவர்களை பார்த்து ஏக்கமாக சொல்வதைபோல் அவி சொல்லிட…

“இப்பவும் ஒண்ணுமில்லை… இளா அக்காகிட்ட நான் சொல்றேன். நீ போயிட்டு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்திடு. பரிதிண்ணா, பாரி ரெண்டு பேரையும் நீயே கல்யாணம் பண்ணிக்கோ…

அதுவுமில்லைன்னா… இன்னொரு சிம்பிள் வே இருக்கு. அதுக்கு அவங்க ரெண்டு பேரும் சம்மதிக்கணும். நீ ஆணாவே இருக்கலாம்” என்று அங்கு வந்த ஜென் அவியை டேமேஜ் செய்திட,

அவியின் முகம் போன போக்கில், அவ்வறை சிரிப்பில் மூழ்கியது.

இந்த மகிழ்ச்சி இன்னும் சில கணங்களில் காணாமல் போவதை அறியாது மண்டபத்திற்கு செல்வதற்காகத் தயாராகத் தொடங்கினர்.

“என்ன ஜென் நீ இங்க வந்துட்ட… பூ எங்க?” எனக் கேட்டான் பாரி.

“இவன் ஆரம்பிச்சிட்டாண்டா” என்று அவியிடம் சலிப்பாக சொல்லிய ஜென், “இதுதான் கொஞ்ச நாள் இல்லாம இருந்தது. இனி பூ பூ’ன்னே சுத்திட்டு இருப்பான்” என்றாள்.

அவளின் கேலியையெல்லாம் பாரி கருத்தில் கொள்ளவில்லை. சிறு சிரிப்பில் கடந்துவிட்டான்.

“அவள் குளிக்க போனா(ள்). ரூம்ல தனியா இருக்க பிடிக்கல. இளா அக்காக்கு மேக் ஓவர் நடக்குது. அதான் இங்க வந்தேன்” என்று அவன் கேட்காததற்கும் சேர்த்து பதில் வழங்கினாள்.

“நான் பூ எங்கன்னு தான் கேட்டேன்” என்ற பாரி போட்டிருந்த சட்டையை கழுட்ட… அவனது பனியனில் உரசியபடி நெஞ்சுக்கு மேலாக காட்சியளித்த சங்கிலியினை கண்ட அவி…

“இன்னுமா பாரி இந்த செயினை நீ போட்டிருக்க?” எனக் கேட்டான்.

“அதில் தொங்கும் பூ என்கிற எழுத்துக்காகவே அவன் கழுட்டாம இருப்பாண்டா” என்றாள் ஜென்.

“ஷீ இஸ் கரெக்ட்” என்ற பாரி துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றிட…

“ஏன் பரிதிண்ணா நாம எதாவது பிளான் பண்ணி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாமா?” என அவி கேட்க…

“அப்படி ஒண்ணு நடந்தா நல்லாத்தான் இருக்கும்” என்று சொல்லிய பரிதிக்கும் அவ்வாசை உள்ளது.

இன்னும் சில நிமிடங்களில் அது பலிக்கவும் போகிறது.

*********

குளித்து முடித்து தயாரான பூ, தங்கத்தை காண அவரின் அறைக்கு வந்தபோது பார்வதியும் தங்கமும் பேசிக்கொண்டிருந்தனர்.

தங்கம் பார்வதியின் கையை பிடித்துக்கொண்டு கண்ணீரோடு திணறலாக ஏதோ கேட்டுக்கொண்டிருக்க… பார்வதி அமோதித்தபடி இருந்தார்.
   
இருவரும் சேர்ந்து பெரிய திட்டத்தையே தீட்டியிருந்தனர்.

“என்ன அப்பத்தா உடம்பு சரியில்லைன்னு எல்லாரையும் ஏமாத்திட்டு கல்யாண வேலையியலிருந்து தப்பிச்சு இப்படி படுத்துகிட்ட” என்று கேலி பேசிய பூ அவர்கள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.

“என் ராசாத்தி” என்று தன் முன் குனிந்திருந்த பூவின் கன்னம் வழித்த தங்கம்… “உன் கல்யாணத்தையும் பார்த்துப்புட்டா என் கட்டை சாயுறதுல நிம்மதியா போய் சேருவேன்” என்றார். தழுதழுப்பாக.

“அப்போ என் புள்ளையெல்லாம் யாரு வளக்குறதாம். அம்புட்டு அவசரமா உனக்கு” என்றவள், “நீயில்லாம நம்ம குடும்பம் இல்லை அப்பத்தா” என்று தொண்டை அடைக்க கூறியவள், “சீக்கிரம் எழுந்து வர… அம்புட்டுதேன்” என்று விரல் நீட்டி மிரட்டினாள்.

முடியாது எழுந்து அமர்ந்தவர்…

“பாரியை கூட்டியா கண்ணு… நான் இன்னும் பாக்கலையே!” என்றார்.

சரியென்ற பூ பாரியை அழைக்க சென்றுவிட…

தங்கம் தன் மகன் மற்றும் மருமகளை அழைத்து பார்வதியும் தானும் பேசியதைப்பற்றிக் கூறினார்.

“எனக்கு சம்மததேன்… ஆனா புள்ளைங்க விருப்பமில்லாம எப்படி?” என்று இழுத்தார்.

“பாரியை பார்வதி ஒத்துக்க வைச்சுடுவாள்” என்று தில்லை திடமாகக் கூறிட…

தன் மகளின் மனம் ஓரளவு அறிந்த அரசுவிற்கு அவளும் ஒப்புக்கொள்ளுவாள் என்கிற எண்ணம் இருந்ததால் அவர்களின் திட்டத்திற்கு சரியென்றார்.

“பெறவு என்ன… உங்க நாடகத்தை ஆரம்பிச்சிடுங்க அத்தை.” மணி மனம் நிறைந்த சந்தோஷத்தோடு சொல்ல…

“இப்படியொரு நாடாகமில்லாம பாரிகிட்ட நாம நேரடியாவே பேசி பார்க்கலாமே” என்றார் அரசு.

பாரியை பற்றி அறிந்த பார்வதி…

“நிச்சயம் பாரி ஒத்துக்க மாட்டான் அண்ணா. அவன் காதலிச்சானா இல்லையான்னு அவன்கிட்ட கேட்டா காதலிச்சேன்னு தான் சொல்லுவான். ஆனால் எனக்குத் தெரியும், ஏன் அவனோட பிரண்ட்ஸ் எல்லாருக்குமே தெரியும், அவன் காதல் சொன்னதே பூவுக்காகத்தான். தங்களுக்கு ஏத்த பொண்ணா இருந்தா ரெண்டு பேரும் எப்பவுமே ஒண்ணா இருக்கலான்னு நினைச்சு தான் காதலை ஏத்துக்கிட்டான்.

அதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள காதல் இருந்ததா தெரியாது. முடிஞ்சுப்போச்சுன்னு சாதரணமாத்தான் சொன்னான். இந்த ரெண்டு வருஷத்தில், ஒரு முறைகூட அந்த பொண்ணுகாக அவன் வருத்தப்பட்டு நாங்க யாரும் பார்க்கல.

ஆனால் பூவுக்காக ஒவ்வொரு நொடியும் அவன் தவித்தான்.

எனக்குத் தெரிஞ்சு அவன் மனம் முழுக்க தமிழ் மட்டும் தான் இருக்கா. கேட்டா பிரண்ட்ஷிப்ன்னு டயலாக் அடிப்பான். அவனுடைய காதல் எதுன்னு அவனே புரிஞ்சிக்கல. அதுக்கு தடையா இருக்கிறது… நட்புங்கிற எண்ணம்.

இப்பவும் அதை சொல்லித்தான் மறுப்பான். ஆனால் பூவில்லாம இருக்க முடியாதுன்னு சொல்லுவான்.

அந்த அமிர்தா மீது காதலே இலைன்னாலும் காதல்னு சொன்ன அப்புறம் அதெப்படி இல்லாமப் போகும் சொல்லுவான்.

மருந்து குழந்தைகளுக்கு கசப்பாத்தான் இருக்கும். அதுக்காக கொடுக்காம இருக்க முடியுமா அண்ணா. இப்போ நாம அவங்களை வற்புறுத்துறதாத்தான் தெரியும். ஆனால் அவங்க சந்தோஷமா இருக்கும்போது, அது நமக்கும் சந்தோஷம் தான அண்ணா.

அவங்க ரெண்டு பேருமே ஒருத்தர் இல்லாமல் இன்னொருத்தர் கிடையாதுண்ணா.

இதுல இன்னொரு சுயநலமும் இருக்கு… ஏற்கனவே எங்க நட்புக்கு தடை வராதுன்னு நம்பிய பொண்ணே அவங்க பிரிவுக்கு காரணமா இருந்துட்டா… இதுல இன்னொரு பொண்ணை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க பாரி சம்மதிக்க மாட்டான். அதுக்கு தமிழையே கல்யாணம் பண்ணி வைக்கலாமே!” என்றார் பார்வதி.

அமிர்தாவால் ஏமாற்றம் கொண்ட பாரியின் மனம் இன்னொரு பெண்ணை நிச்சயம் ஏற்காது. அதே தமிழென்றால் இப்போது இல்லையென்றாலும் திருமணம் ஆகிவிட்டால் அவனை அவளது வழிக்கு கொண்டு வந்துவிடுவாள் என்பது பார்வதியின் கருத்தாக இருந்தது.

“எப்படியும் தமிழுக்கு ஒரு பையனை பார்ப்பீங்கதான அது ஏன் அவள் மேல உயிரே வச்சிருக்கும் பாரியா இருக்கக்கூடாது.

என் பையன் நல்லதுக்காக ஒரு அம்மாவாக நான் கேட்கிறதாவே நீங்க எடுத்துக்கோங்கண்ணா.

அவங்க நல்லாயிருப்பாங்கன்னு நம்பி சேர்த்து வைப்போம். நிச்சயம் நல்லாவே இருப்பாங்க.”

பார்வதி இவ்வளவு விளக்கம் கொடுத்த பின்னர் அங்கு அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவு.

அடுத்து நடக்க வேண்டியதில் கவனம் செலுத்தினர்.

பூ பாரியை தங்கத்தின் அறைக்கு அழைத்துவர… அப்போதுதான் மண்டபத்திற்கு செல்வதற்காக தங்கம் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

பாரியை பார்த்ததும் தங்கத்தின் கண்களில் முதலில் பட்டது… அவனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த சங்கிலி. அதிலிருக்கும் பூ என்ற எழுத்து.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பூவிடம்…

கழுத்தில் போகும்போது போட்டுச்சென்ற சங்கிலி தற்போது வேறாக இருப்பதை கண்டுபிடித்து பொன்னு கேட்க…

இதுதான் அதென்று பூ சத்தியம் செய்யாத குறையாக அவரை நம்ப வைத்ததோடில்லாமல், அரசுவையும் பொய் சாட்சி சொல்ல வைத்த காட்சி கண் முன் விரிந்தது அவருக்கு.

பொன்னு இல்லாத நேரம்,

“அந்த செயின் வேந்தன் போட்டுக்கிட்டா. இது அவன் எனக்கு வாங்கிக்கொடுத்தது” என்று முகம் முழுக்க பொலிவுடன் புன்னகையாக பூ சொல்லியதை நினைத்து பார்த்தவருக்கு… அச்சங்கிலியை இன்னமும் அவன் போட்டிருப்பதே அவனுக்கு பூவின் மீது எத்தனை பிடித்தம் என்பது அம்முதியவருக்கு உணர்த்தியது. இதுமட்டுமில்லாது அரசு சொல்லி பாரியின் பாசத்தை அறிந்திருந்தவர் தானே.

அத்தோடு எப்போதும் தனிமையில் எங்கோ வெறித்தபடி கழுத்தில் போட்டிருக்கும் சங்கிலியிலுள்ள எழுத்தை பிடித்தபடி சோகமே வடிவமாக அமர்ந்திருக்கும் பேத்தியின் சந்தோஷம் பாரி தானென்று அவனுடன் நிற்கும் அவளின் பூரித்த முகமே சொல்ல… அனைவரும் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு நல்லபடியாக நடக்க வேண்டுமென்று அக்கணம் தங்கம் இறைவனிடம் வேண்டுகொண்டார்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
35
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்