Loading

அத்தியாயம் – 21

 

நந்தினி அருகில் வந்த அந்த நொடி தீரஜின் மனம் பரவசத்தில் துள்ளியது, தன்னுள் சுருங்கிக் கிடந்த உணர்வுகள், அன்பின் வடிவமாக அவள்மீது பொங்கி வழிந்தன..

சற்றே தடுமாறும் குரலில்.. “என்னை உனக்கு பிடிக்குமா மது?” என்று கேட்டான்,.. நந்தினியின் இதயம் அந்தக் கேள்வியில் சற்றே நின்றதுபோல் உணர்ந்தாள்,
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை, குனிந்திருந்தவளின் தலை மட்டும் மெதுவாக அசைந்தது..

அவள் தலையசைவோடு தீரஜின் முகம் ஒளிர்ந்தது, சிறிது நேரம் அவளை பார்த்தபடி இருந்தவன்… “ஷால் ஐ கிஸ் யூ?” என்று நிதானமாக வினவினான்..

அந்தக் கேள்வி, நந்தினியின் கண்களை பீதியுடனும் புதுமையான உச்சக்கட்ட உணர்ச்சியுடனும் அகலத் திறந்தது,
அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, தீரஜை இன்னும் அதிகமாக ஈர்த்தது…

அவளது விரிந்த விழிகளை பார்த்தபடியே மெதுவாக முனைந்து தன் இதழ்களை அவளது இதழ்களோடு இணைத்திருந்தான்…

நந்தினியின் விழிகள் இன்னும் அதிகமாக விரிந்தது, முதலில் நடுங்கினாள், மூச்சு முட்டியது,
ஆனால் சில நொடிகளுக்குப் பின் அந்தத் தடுமாற்றமும் கரைந்தது,
சம்மதம் சொல்ல வார்த்தைகள் இல்லாத நிலையில் அவள் விழிகளை மெதுவாக மூடி கொண்டாள், அந்த இதழ் பிணைப்பு இருவரின் உள்ளங்களையும் ஒன்றாகக் கட்டிப் பிணைத்தது….

இருவருக்கும் இன்னதென்று சொல்ல முடியாத உணர்வைத் தந்தது, இதயம் அதிவேகமாக துடித்தது, உலகமே அந்தச் சின்ன இடைவெளிக்குள் சுருங்கி விட்டதுபோல் இருந்தது,..

முதல் தீண்டல் என்பதால் இருக்கலாம், ஆழமாக சென்றது அந்த இதழ் தீண்டல், ஒரு இனிய பந்தமாக அவர்கள் இருவரையும் கட்டி இழுத்தது…

தீரஜ்க்கு விலகவே மனம் இல்லை,
அவளது நெருக்கமே அவனது உயிர்க்காற்றாய் தோன்றியது,
அவனது உள்ளம் முழுதும், ‘இது போதும்… வாழ்க்கை முழுக்க இது தான் வேண்டும்’ என்று கத்திக் கொண்டிருந்தது…

நந்தினிக்கோ மூச்சு முட்டியது, நெஞ்சுக்குள் காற்று சிக்கியதுபோல் இருந்தது,
ஆனால் அவளுக்கும் விலகும் எண்ணமே இல்லை, அவளது சுயம், அவளது மனம் எல்லாம் அந்தக் கணத்தில் அவனுக்கே ஒப்படைக்கப்பட்டிருந்தது…

அவள் சிரமப்படுவதை உணர்ந்தவன் மெல்ல, மெதுவாக, அதே இனிமையோடு விலகினான்,
அந்த நொடி அவர்களது உள்ளங்களில் மறக்க முடியாத நினைவாகப் பதியப்பட்டது…

அவன் முகம் பார்க்காமல் கன்னம் சிவக்க முதுகை காட்டி வந்து படுத்துக் கொண்டாள் பெண்ணவள், அந்த இதழ் தீண்டல் அவளது உள்ளத்தை என்னென்னவோ செய்தது, இதுவரை யாரிடமும் உணராத ஓர் புதுமையான இனிமையோடு துடித்தாள்….

இதயம் சின்னஞ்சிறு பறவையைப் போல இரைச்சலுடன் துடித்துக் கொண்டிருந்தது, உடலெல்லாம் மின்சாரம் ஓடியதுபோல் நரம்புகள் எல்லாம் பரபரத்தன, அவள் அறிந்திராத ஒரு உலகிற்குள், அந்தக் கணத்தில் தீரஜ் அவளை அழைத்துச் சென்றது போல உணர்ந்தாள்,..

‘இது என்ன…? ஏன் இப்படி உணர்கிறேன்…?’ என்று மனம் குழம்பியது, ஆனால் அந்த குழப்பத்துக்குள் மறைந்திருந்தது ஒரு இனிமையான பூரிப்பு மட்டுமே,
அவனது கரங்களின் சூடும் இதழ்களின் நெருக்கமும்
அவளுக்குள் இருந்த எல்லா எதிர்ப்பையும், பயத்தையும் கரைத்து விட்டன, அதனால் தான் அமைதியாக கட்டுபட்டுவிட்டாள் போலும்…

இதழ் தீண்டலின் பின் மெதுவாக அவள் விழிகளைத் திறந்த போது,
அவன் முகம் அவளுக்கு மிக அருகில் இருந்தது, அவனது பார்வையில் இருந்த அந்த உணர்வு, அவளது நெஞ்சுக்குள் ஓர் அலைபோல் பாய்ந்தது…

இதுவரை தீரஜின் மீது இருப்பது பாசம், அக்கறை, கருணை என்று  நினைத்துக் கொண்டிருந்தவள், அந்த நெருக்கமான தருணத்தில் தான் அவளது உள்ளத்தில் காதல் முளைத்திருப்பதை உணர்ந்தாள்..

தீரஜின் மனமும் அவளை போல தான் தத்தளித்துக் கொண்டிருந்தது, அவளுடனான அந்த இதழ் தீண்டல், அவனது உடல் முழுவதையும் ஒரு வெப்ப அலை போலச் சுற்றிக் கொண்டது….

மொத்தமாக அவளுள் அவன் மூழ்கிவிட துடித்தாலும் அவன் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை,..

அந்த தருணத்தில், தன் ஆசைகளுக்கும் தன் உடல்நிலைக்கும் இடையே சிக்கித்
தவித்தான் தீரஜ், இதயம் அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏங்க, உடல் அதற்குப் பக்கபலமாக இல்லாதது
அவனை உள்ளுக்குள் சிதறடித்தது…

காதல் என்று சொல்லத் தகுந்த நிலை இன்னும் வரவில்லை, ஆனால் அவளின் அருகாமை அவனுக்கு அவசியமாகி விட்டது…

கைகளை இறுக்கிக் கொண்டு, பலமுறை மூச்சை இழுத்து விட்டான்… ‘நான் இப்படியே ஆயுள்வரை சிக்கிக்கொண்டால் என்னாகும்? அவள் என்னோடு சந்தோஷமாக இருக்க முடியுமா?’ என்ற பயம் அவன் இதயத்தில் அடங்காத குரலாய் ஒலித்தது…

ஆனால் அதே நேரத்தில், அவளது அருகாமையிலிருந்து வந்த அன்பின் நம்பிக்கை, அந்தக் கவலையை மெதுவாக அணைத்தது, இரவு முழுக்க அந்த இரண்டு உணர்வுகளின் போராட்டமே அவன் வெகுநேர தூக்கத்தை பறித்திருந்தது…

அடுத்த நாள் நந்தினி தான் முதலில் விழித்தாள், தீரஜ் இன்னமுமே உறக்கத்தில் தான் இருந்தான், அவனை பார்த்த கணமே இரவில் நடந்த இதழ் தீண்டல் தான் நினைவில் வந்தது, அவள் கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது,..

மெதுவாக அவளின் கண்கள் அவனை தான் அளந்தது,..
கூரிய விழிகள், கூரான நாசி, அழுத்தமான உதடுகள் என்று ஆண்மை ததும்பும் முகத்துடன் ஆறடியில் இருந்தவன், அவளை கவர்ந்திழுக்க தவறவில்லை, இத்தனை நாட்கள் அவனை இப்படியெல்லாம் ரசிக்க தோன்றவில்லை, இன்று ரசித்தாள், வெகுநேரம் ரசித்தாள், அவன் தூக்கத்தில் உசும்பவும் தான் பதட்டத்துடன் எழுந்து குளியலறைக்குள் ஓடி விட்டாள்..

குளியலறைக்குள் ஓடி வந்தவள், கதவில் சாய்ந்து சுவாசத்தை சரிசெய்ய முயன்றாள், இதயம் துடித்துக் கொண்டே இருந்தது…
‘நான் என்ன பண்ணுறேன்னே எனக்கு புரியலை… அவரை பார்க்கும் போது ஏன் வேற மாதிரி தோணுது? இதுக்கு முன்னாடிலாம் இப்படி இல்லையே’ என்று மனதில் புலம்பிக் கொண்டாள்,..

நீர் துளிகள் முகத்தில் விழ, அவள் கண்ணாடியில் தன் பிரதிபலிப்பை பார்த்தாள், கன்னங்கள் இன்னும் சிவந்திருந்தது, அந்தச் சிவப்பில் அவளுக்கே புதிதான அழகு தெரிந்தது…

வெளியே படுக்கையில் விழித்துக் கொண்ட தீரஜோ, அவள் இல்லாமல் பக்கத்தில் கிடக்கும் வெறுமையை பார்த்தபோது ஒரு வினோதமான ஏக்கம் அவனை தொட்டது, அவளை அருகில் இழுக்க முடியாத தன்னுடைய நிலை மீண்டும் அவனைக் கொஞ்சம் கசப்பாகத்தான் உணர வைத்தது,
ஆனால், அவள் இருப்பதால் தான் தன் வாழ்வுக்கு  ஒரு அர்த்தம் உண்டு என்ற உண்மை அவனுக்குள் திடமாக பதிந்தது…

அதன் பின், அலுவலகத்திற்கு கிளம்பும் வேலையில் பிஸியாகி விட்டான் தீரஜ், நேரமாகி விட்டதால் அன்று கார்டனுக்குப் போய் இயற்க்கை காற்றை சுவாசிக்க கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை, ஆனால் அவன் விழிகள் நந்தினியை மட்டுமே தேடின…

காலை ஒளியில் அவளது கன்னங்கள் இன்னமும் சிவந்தவாறே இருந்தது, அதை பார்த்தவன், பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந்தும், சொல்ல வார்த்தைகள் வரவில்லை,
வார்த்தைகள் மௌனத்தில் மறைந்துவிட்டன, இருப்பினும் அவள்மேல் விழும் பார்வை மட்டும் நகரவே இல்லை…

தயாராகி முடித்ததும், இருவரும் ஒன்றாக தான் உணவறைக்கு சென்றனர், அங்கே தியாகராஜனும் அவர்களோடு இணைந்து கொண்டார்,.

அலுவலகத்தை அடைந்த பின்னரும் இருவரின் உள்ளங்களும் ஒரே சத்தத்தில் துடித்தன, அந்த இதழ் தீண்டலின் நினைவு இன்னும் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது,
வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் அமைதியான அதிர்வை ஒருவரின் கண்களில் மற்றொருவர் படித்துக் கொண்டனர்….

அன்றைய தினமும் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது, தீரஜின் பார்வை நந்தினியை தான் சுற்றி வந்தது, அவளுக்கு தான் பெரும் அவஸ்தையாகி போனது,..

‘ஏன் இப்படி பார்க்கிறாரு, யாராவது கவனிச்சா என்ன ஆகும், சந்தேகம் வராதா…’ என்ற எண்ணம் அவளை வாட்ட, ஆனால் தீரஜோ ‘எனக்கு அதெல்லாம் கவலை இல்லை’ என்ற ரீதியில் பார்வையால் அவளை தான் சுற்றிக் கொண்டே இருந்தான்…

அந்தப் பார்வையில் ஒரு ஆண்மையின் உறுதி, ஒரு பாசத்தின் ஆழம், சொல்லமுடியாத ஓர் ஈர்ப்பு இருந்தது, அதை எதிர்க்க முடியாமல் நந்தினியின் இதயமும் வேகமாகத் துடித்தது…

மீட்டிங் முடிந்தவுடன், அனைவரும் அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர், அந்த நேரத்தில், ஹரிணி நந்தினியை நெருங்கி வந்து சிரித்தபடி,.. “நந்து இன்னைக்கு சார் பார்வை ஒரு தினுஷா இருந்ததுல…” என்று கிசுகிசுத்தாள்…

நந்தினி சற்றே தடுமாறி,.. “அப்படியா? எனக்கு தெரியலையே…” என்று சொல்ல,
அதற்கு ஹரிணி உடனே,
“தெரியலையா? அப்படின்னா உனக்கு கவனமே இல்லை போல, எனக்கு என்னமோ அவர் பார்வை உன்னையே சுற்றிக் கொண்டிருந்த மாதிரி எனக்கு தோணிச்சு…” என்றாள்…

நந்தினியின் உள்ளம் பதற்றத்தில் துடிக்க, அவள் வெளியில் சிரித்தபடி,.. “என்னை ஏன்டி சுத்தி வருது உளறாத நீ…” என்று சொல்ல,

ஹரிணி தலையை சொறிந்தபடி,..
“அப்போ எனக்கு தான் அப்படி தோணுச்சா என்ன? ஒருவேளை நீயும் நானும் பக்கத்துல உட்கார்ந்து இருந்ததால அப்படி தோணி இருக்குமோ…” என்று வினவ,..
“இருக்கும்… இருக்கும்…” என்று வேகமாகச் சொன்ன நந்தினி, தன்னை மறைக்க முயன்றாள்.

‘சரி… அப்படித்தான் இருக்கும் போல…’ என்று எண்ணிக் கொண்டவளும் அதோடு அந்தப் பேச்சை விட்டுவிட்டு, வேறு பேச்சிற்க்கு மாறி இருந்தாள்,…

நந்தினிக்கோ அப்போதுதான் ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சொன்று வெளிவந்தது,.. ‘இவளுக்குக் கூட இப்படி தெரிந்துருக்கு, அப்போ மற்றவர்களுக்கும் தெரிந்திருக்குமோ…?’ என்று சிந்தித்தவளின் கன்னங்கள் பதட்டத்தை மறந்து,  அவனது பார்வையை எண்ணி மீண்டும் சிவந்து போனது,..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
34
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்