அத்தியாயம் – 19
அன்றைய மாலை ஹாலின் அமைதியில் தீரஜும் நந்தினியும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர், நந்தினி திடீரென ஒரு காமெடி சொல்ல, அதனை கேட்டு தீரஜ் வாய்விட்டு சிரித்தான், அந்த சிரிப்பு அவன் முகத்தில் பல நாட்கள் கழித்து ஒலித்தது,…
அந்த நேரம் அறையிலிருந்து வெளியே வந்த தியாகராஜன், மகனின் சிரிப்பொலி காதில் விழுந்ததும் உள்ளமெல்லாம் பூரித்து போனார்,.. ‘என் பையன் இப்படி சிரிச்சு எத்தனை நாட்களாச்சு என் மருமக நந்தினி வந்த பிறகுதான் அவன் கண்களில் மீண்டும் உயிர் திரும்ப ஆரம்பிச்சிருக்கு’ என்று எண்ணிக்கொண்டார்..
சற்று நேரம் தொலைவில் நின்றே மகனின் சிரிப்பை பார்த்தபடி இருந்தார், தியாகராஜனின் கண்களில் பெருமையோடு கலந்த நெகிழ்ச்சி துளிகள் மிளிர்ந்தன, ‘கடவுளே… இவங்களோட வாழ்க்கை நல்லா போகணும், என் பையன் மீண்டும் பழைய மகிழ்ச்சியோட வாழணும்…’ என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டவர்,.. அவரும் மகனின் மகிழ்ச்சியில் கலந்து, அவர்களோடு வந்து அமர்ந்து கொண்டார், மூவரும் சேர்ந்து பேசியபடி சிரித்துக்கொண்டிருந்த அந்த வேளையில், அங்கே வந்த வனிதா சிறிது எரிச்சலோடு,.. “என்ன அண்ணா இது.. நடுவீட்ல உட்கார்ந்து இப்படியா சத்தம் போட்டு சிரிக்கிறது” என்று கேள்வியெழுப்பினார்,..
அவரின் வார்த்தையை கேட்டு சற்று நிதானமாகத் திரும்பிய தீரஜ், சிறு புன்னகையுடன்,.. “ஏன் அத்த… அந்த ஷ்யாம் வந்தா, நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்து இப்படி தானே சிரிப்பீங்க, இப்போ நாங்க சிரிச்சதுல மட்டும் என்ன தப்பிருக்கு?” என்று கேட்டவுடனே,
வனிதாவின் முகம் சற்றே சுணங்கி வாய் தாமதமாக கப்பென்று மூடிக் கொண்டது…
தியாகராஜனோ வருத்தமாக பார்த்தார் தங்கையை,… ‘இவள் ஏன் இப்படி இருக்கிறாள், எங்க சந்தோசம் ஏன் அவளுக்கு அவ்வளவு கடுப்பா இருக்கு, இப்போ வரை அவளுக்கும் அவ பொண்ணுக்கும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தானே கவனிச்சு கொடுக்கிறேன், அந்த நன்றிகடன் இல்லைனாலும் பரவாயில்ல, இப்படி மனம் நோகும்படி நடந்துக்காம இருக்கலாமே’ என்று எண்ணிக் கொண்டார்,..
**********************
அன்று அலுவலக கேன்டினில் நந்தினி, ஹரிணி, சுபா மூவரும் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள், அப்போது சுபா திடீரென்று சிரிப்புடன்,.. “இன்னைக்கு தீரஜ் சார் வழக்கத்தை விட ஹேண்ட்சமா இருந்தாருல, அந்த நேவி கலர் ப்ளூ ஷர்ட் அவருக்கு ரொம்ப சூப்பராயிருந்தது” என்று சொன்னாள்…..
அதற்கு ஹரிணியும் உடனே,
“நானும் கவனிச்சேன்… இப்போலாம் அவரோட முகத்துல இறுக்கம் தளர்ந்து ஸ்மைல் பண்ண ஆரம்பிச்சிருக்காரு” என்று சொன்னாள்,..
“ஆமா ஆமா, அந்த கன்னக்குழி சிரிப்புக்கு நான் அடிமை!” சுபா கைகளை அசைத்து சொல்ல…
“நீ மட்டுமா, இந்த ஆபீஸ்ல உள்ள எல்லாரும் தான், நானே பல தடவை கனவுல அவர்கூட டூயட் பாடி இருக்கேன்” என்று ஹரிணி சொல்ல, அத்தனை நேரம் அமைதியாக பற்களை கடித்துக் கொண்டு கேட்டிருந்த நந்தினி,… “என்னது” என்று திகைத்தாள்,..
“ஆமாடி… நல்லா இருக்கும்ல எனக்கும் அவருக்கும் ஜோடி பொருத்தம்…” அவள் சிறு வெட்கத்துடன் வினவ, நந்தினிக்கோ தூக்கி வாரிப்போட்டது,…
‘ச்சே… என்ன இப்படியெல்லாம் பேசுறா? அவர் என் புருஷன், என் முன்னாடியே இப்படி பேசுறாளே!’ என்ற எண்ணம் அவளுக்குள் கொந்தளித்தது… கையில் இருந்த காபியை தூக்கி அவள் முகத்தில் ஊற்றிவிடலாமா? என்று கூட ஒரு கணம் தோன்றியது, அந்த கணம் அவள் தோழி என்பதையும் மறந்து போனவள்… “இப்படி பேசுறது தப்பில்லையா?” என்றாள் கட்டுப்டுத்தபட்ட கோபத்துடன்,..
“இதுல என்னடி தப்பிருக்கு, அழகை ரசிக்கிறதுல தப்பில்லயே” என்று சொல்லவும், அவளோ உள்ளுக்குள்ளேயே தோழியை நன்றாக அர்சித்தாள்….
அவளது முகத்தில் சற்றே சிவப்பு தோன்றியதை கவனித்த சுபா,
“என்னடி நந்தினி, உனக்கு என்னாச்சு?” என்று வினவ,.. வலுக்கட்டாயமாக புன்னகைத்தவள், “ஒன்னும் இல்லயே… நீங்க பேசுறது ரொம்ப காமெடி ஆ இருக்குது…” என்று மட்டும் சொல்லி கொண்டவளுக்கு பற்களை கடித்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை தான்,…
ஆனால், உள்ளுக்குள் முதல் முறையாக எழுந்த அந்த பொஸஸிவ் உணர்வு, அவள் முகத்திலிருந்து அழிக்க முடியாத சிவப்பை வரைந்துவிட்டது….
அன்று வேலையொன்றை காரணமாக வைத்து தீரஜின் அறைக்கு சென்றாள் நந்தினி, கையில் இருந்த கோப்புகளை வைத்து சில விஷயங்களை அலசியபடி பேசிக்கொண்டிருந்தாலும், அவளது பார்வை அவன் சட்டையில் தான் சிக்கிக் கொண்டிருந்தது…
இன்று அது அவளே தேர்ந்தெடுத்து கொடுத்த நீல நிற சட்டை, உண்மையில் அந்த சட்டை அவனுக்கு ஒளிவீசும் அழகையே கூட்டியது, ஆனால் ஏனோ, அந்தக் கணம் அவளுக்குப் பிடிக்கவில்லை, அந்த நிறம் அவன் மேல் இருக்கக் கூடாது என்ற எரிச்சல் உள்ளுக்குள் எழ…
“எதுக்காக இந்த கலர் ஷர்ட் வியர் பண்ணிட்டு வந்தீங்க?” ஒருவித இறுக்கமான குரலில் அவள் கேள்வி எழுப்பினாள்…
அவளது வார்த்தையைக் கேட்டு சற்று வியந்த தீரஜ், குனிந்து தன் சட்டையை ஒருமுறை பார்த்தான்.
பிறகு அவளது கண்களை நோக்கி,
“ஏன்? நல்லா தானே இருக்கு…” என்றான் குழப்பத்தோடு…
அவளோ, முகத்தில் வெளிப்படும் அந்தத் தொல்லை உணர்வை மறைக்க முடியாமல், “நல்லா இல்ல…” என்று ஒரே சொல்லில் முடித்தாள்…
தீரஜின் விழிகள் சுருங்கின, சற்றே மெல்லிய புன்னகையோடு,
“மார்னிங் இந்த ஷர்ட் நல்லா இருக்கும்னு சொல்லி எடுத்து கொடுத்ததே நீ தான்…” என்று நினைவூட்டிட,.
அவளோ உடனே தலையைத் திருப்பிக் கொண்டு, தன் உணர்வுகளை மறைக்க முயன்று,
“காலைல நல்லா இருந்த மாதிரி தோணுச்சு… இப்போ நல்லா இல்ல, இனிமே இந்த கலர் போடாதீங்க…” என்று சொல்லிவிட்டு, அடுத்த கணம் வெளியேறிவிட்டாள்,..
அவள் வெளியேறும் வரை, தீரஜ் அவளது முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான், அவளது காலடிச் சத்தம் மெதுவாக மறைந்ததும், அவனுக்கோ குழப்பம் மட்டுமே…
‘காலைல நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இப்போ நல்லா இல்லைனு சொல்லிட்டு போறா? எனனாச்சி இவளுக்கு?’ அவன் உள்ளத்தில் ஊர்ந்த கேள்விக்கு விடை தான் தெரியவில்லை,…
அடுத்த நாள் விடுமுறை நாள்…
நந்தினியின் தாய் பார்வதி மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் காலையிலேயே அவள் வீட்டிற்கு வந்திருந்தார்….
மகள் வாரத்தில் ஓரிரு முறை வந்து போய் இருந்தாலும், தீரஜும் தியாகராஜனும் அன்போடு அடிக்கடி வீட்டிற்கு அழைத்துக் கொண்டிருந்ததால், அந்த அழைப்பை மறுக்க முடியாமல் இம்முறை வந்து விட்டார்….
அந்த வீட்டு வாசலில் காலடி வைத்தவுடனே, பார்வதி மலைத்து நின்றார், அவ்வளவு விரிவான மாளிகை! உயர்ந்த கூரைகள், பரந்து விரிந்த ஹால்கள், பளிச்சென ஒளிரும் தரை…
மகள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம் இவ்வளவு பிரம்மாண்டமா என்று நினைத்து, கண்களில் பெருமிதமும் பாசமும் கலந்த ஒளி திகழ்ந்தது…
‘இவ்வளவு பெரிய வீட்டில் என் மகள் வாழ்கிறாளா…’ என்ற உணர்வு, மனதின் ஆழத்தில் ஒரு சந்தோஷக் கண்ணீரை உந்தியது,
இதழ்களில் இனிய புன்னகை மலர்ந்தது….
தாயைக் கண்டதும் நந்தினியின் கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன… “அம்மா…” என்று குழந்தைபோல் அழைத்து அவரை அணைத்துக் கொண்டாள், அவர் வருவதை அவள் அறியவே இல்லை, சர்ப்ரைஸாக வந்த அந்த தருணம் அவளது மனதை நிறைவு செய்துவிட்டது….
அதற்கெல்லாம் காரணம் தீரஜ்தான், பார்வதிக்கு வண்டி அனுப்பி வைத்திருந்தவன் அவனே, நந்தினியின் முகத்தில் தெரியும் அந்த அளவற்ற மகிழ்ச்சியை காண்பதற்காகவே இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான், தாயை கண்டு அவள் சந்தோஷ கண்ணீரில் திளைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது, அவனது இதயத்துக்குள் இனிய நிம்மதி மலர்ந்தது….
பின்னர் நந்தினி, தீரஜ், தியாகராஜன், பார்வதி ஹாலில் அமர்ந்து நிறைய கதைகள் பேசினர், பார்வதியின் சிரிப்பும் மகிழ்ச்சியும் அந்த வீட்டை ஒளிரச்செய்தது…
“இன்னைக்கு என் கையால தான் சாப்பிடணும்மா” என்று புன்னகையுடன் சொன்ன நந்தினி, சமையலறைக்கு போய் அவருக்காக சிறப்பாக சமைத்து எடுத்து வந்தாள்…
மகள் தனக்கு அன்போடு பரிமாறிய அந்த உணவை பார்த்தபோது, பார்வதியின் கண்கள் மீண்டும் ஈரமானது.. ‘என் மகள் சந்தோஷமா இருக்கா, அதுதான் எனக்குப் பெரிய விருந்து’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவரின் மனதை கலைக்க வேண்டும் என்றே வந்து சேர்ந்தார் வனிதா,..
பார்வதி அவரை இது வரை பார்த்ததில்லை என்றாலும் அவரின் முகஜாடையை வைத்து அவர் தான் தியாகராஜனின் தங்கை என்பதை அறிந்து கொண்டு,.. “எப்படி இருக்கீங்கமா” என்று நலம் விசாரித்தார், வனிதாவோ அவரை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட, பார்வதிக்கு தான் ஒருமாதிரியாகி போனது..
தீரஜ் தான்,… “அவங்கள விடுங்க அத்த, சில பேர் குணம் நம்ம எண்ணத்தோடு சேராது,” என்று சொல்ல, தன் மருமகன் சொல்லும் பக்குவத்தை கேட்டதும் பார்வதி அமைதியாக தலை அசைத்து கொண்டார்,..
மகளின் மூலம் கொஞ்சம் அவரின் குணத்தை பற்றி கேள்விபட்டிருக்கிறார்,.. ‘அப்படியொரு நல்ல மனிதனுக்கு இப்படியொரு தங்கையா’ என்று ஆச்சரியாக இருந்தது,..
‘சரி… எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது, ஆனா என் பொண்ணுக்கு தங்கமான மாமனாரும், அன்பான அரவணைப்பான கணவனும் கிடைத்திருக்காங்க, இந்த சந்தோஷமே எனக்கு போதும்’ என்று உள்ளுக்குள் நிம்மதி அடைந்தவர், பொழுது சாய்ந்த பிறகு தான் தன் வீட்டிற்கு புறப்பட்டார்,…
நாட்கள் மெதுவாக உருண்டோடியது, அதிகாலை சூரியஒளியில் தோட்டத்தின் பசுமை புது உயிர் பெற்றது போலத் தோன்றியது, அந்த நேரத்தை தவறாமல் அனுபவிப்பது தீரஜின் வழக்கம், பறவைகளின் குரலோடு கலந்து, குளிர்ந்த தென்றல் முகத்தை வருட சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான் தீரஜ்,..
சில நேரங்களில் தியாகராஜனும் மகனின் அருகே வந்து அமர்ந்து விடுவார், அலுவலகம் பற்றிய முக்கிய உரையாடல்களை பேசிக் கொள்பவர்களுக்குள் சமீபத்திய உரையாடலில் நந்தினியின் பெயரும் வந்து விடும்….
அன்றும் அப்படி தான்,.. “ரொம்ப நல்ல பொண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க தீரஜ், நான் தேர்ந்தெடுத்திருந்தாலும் இப்படி ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது,” என்றார்,.. மருமகளின் அன்பிலும் அக்கறையிலும் நெகிழ்ந்து போய் விட்டார் அல்லவா!
அந்த வார்த்தைகள் தீரஜின் உள்ளத்தை ஆழமாக கிளறின, சிறிது நேரம் அமைதியா இருந்தவன்,… பிறகு மெதுவாக,
“நல்ல பொண்ணுதான், ஆனா…கொஞ்சம் குற்றவுணர்ச்சியும் இருக்குப்பா, என் கால்களுக்கு சின்ன முன்னேற்றம் வந்தாலும், இன்னும் நடக்க முடியல, என்னால நடக்க முடியாமலேயே போயிட்டா… அவளோட வாழ்க்கையையே நான் பாழாக்கிட்டேனோங்கிற குற்றவுணர்ச்சியே என்னை கொன்றுடும் போல இருக்கு” என்றான்… அவன் குரலில் ஓர் அடங்காத வேதனை இருந்தது..
“ஏன்டா பைத்தியம் மாதிரி பேசுற? உன்னால நிச்சயம் நடக்க முடியும், டாக்டரே சொல்றாரு, நீ ஏன் இப்படி நெகடிவ்வா நினைக்குற?” தியாகராஜன் சற்றே கடிந்து கொண்டார்…
தீரஜின் கண்களில் அந்த வேதனை இன்னும் நீடித்தது… “தெரியலப்பா… இப்போலாம் என் கால்கள் குணமாகி எழுந்து நடக்கணும்னு ஒரு வெறி எனக்குள்ள, விடாம முயற்சி பண்ணுறேன், ஆனா சின்ன முன்னேற்றத்தை தாண்டி ஒன்னும் முடியல, மனசு கொஞ்சம் உடைந்து போயிடுது” என்றான்..
தியாகராஜன் மெதுவாக மகனின் தோளில் கை வைத்தபடி,.
“பொறுமை ரொம்ப முக்கியம் தீரஜ், உன் முயற்சி வீண் போகாது, எல்லாம் நல்லபடியா நடக்கும், நீ நம்பிக்கையை விடாம இரு” என்றார்….
அந்த வார்த்தைகள் ஒரு மருந்து போல தீரஜின் மனதில் இறங்கின, ஆனால் மனதை பிடித்துக் கொண்டிருந்த அந்த குற்றவுணர்ச்சி முழுவதும் அவனை விட்டு செல்லவில்லை…