பிறை -5
நான்கு மாடிக் கட்டிடம் தான். வசதிகள் ஏராளம், பணத்திற்கு தகுந்தார் போல அறைகள் பிரிக்கப்பட்டு இருந்தது. குறைந்தது நாற்பது ரூம் இருக்கும். அதில் ஒன்று தான் அந்த ஹாஸ்டல் வார்டனின் அறை.
கையை பிசைந்த வண்ணம் காவல்துறைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் ஹாஸ்டல் வார்டன் நிர்மலா.
அங்கே ஐந்து மகளிர் காவலர்களும் , அவர்களோடு ஆதிதேவ் வந்திருந்தான். பெண் தற்கொலை விஷயம் என்பதால் அவனே நேரில் வந்து பார்வையிட.. மொத்த விடுதியும் கதிகலங்கி நின்றது.
கதிரையில் அமர்ந்திருக்கும் அவனை பார்க்கவே நிர்மலாவிற்கு அத்தனை பயமாக இருந்தது.
” எந்த ஊர் பொண்ணு ”
” திருநெல்வேலி பக்கம் தான் சார்.. “
” நைட்டு அந்த பொண்ணை பார்த்தீங்களா.. ஆர் எப்போ அந்த பொண்ணை கடைசியா பார்த்தீங்க ” என்றதும் அவருக்கு நினைவில் இல்லை.
” ஒரு நாளைக்கு இங்க இருக்கிற அத்தனை பேரையும் என்னால பார்க்க முடியாது சார்.. அதுனால அந்த பொண்ணை எப்போ பார்த்தேன்னு தெரியல ” நடுக்கத்துடன் நிர்மலா பதிலளிக்க..
” அப்போ இன் அண்ட் அவுட் நோட்ல சைன் பண்ணும் போது நீங்க உங்க இடத்துல இல்லையா ”
இதற்கு என்ன பதில் கூறுவது என தெரியவில்லை. நேற்று அலுவலகம் சென்று வந்திருக்கிறாள், அப்படியானால் பதிவேட்டில் அவள் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.. கையெழுத்தும் இருந்தது. அப்படி அவள் போட வந்த நேரம் இவர் எங்கே சென்றிருந்தார் என்பது தான் அவனது கேள்வி.
காதை குடைந்த வண்ணம் நிமிர்ந்து அந்த பெண்மணியை பார்த்தவன்.. ” சோ அப்போ நீங்க உங்க சீட்ல இல்ல .. அப்படித்தானே ” என்றதும் நிர்மலாவிற்கு உதறல் எடுத்தது. உண்மையை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
” ஆமா சார் எல்லா நேரமும் இங்க இருக்க மாட்டேன்.. அப்போ அப்போ வந்துட்டு போவேன் ” அவரது பொறுப்பற்ற பேச்சில் சினந்தவன்..
” சிசிடிவி எங்க இருக்கு” என்றதும் நிர்மலா, கேமரா பதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் காட்டினார்.
” இந்த பூட்டேஜ் எடுத்து செக் பண்ணுங்க ” என காவலர்களுக்கு ஆணையிட.. அந்த வேலையும் உடனே நடந்தது.
மொத்த விடுதியையும் சுற்றி வந்து விட்டான்.. சில அறைகள் வாசலில் பெண்கள் பதட்டத்துடன் நிற்பதும், சில அறைகள் பூட்டி இருப்பது, சில அறைக்குள் பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், சில அறைக்குள் பெண்கள் பயத்தால் பூட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
அந்த சில பெண்களில் நம் பிறையின் அறைகளில் உள்ளவர்களும் அடக்கம்.
” என்ன டி பிறை.. சென்னை அப்படி இப்படின்னு சொன்ன.. வந்து பார்த்தா என்னென்னமோ நடக்குது. நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு டி. அந்த பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா தூக்கு போட்டு சாகும் ” கீதா பயத்தில் பேசினாள்.
” எனக்கும் அந்த பயம் இருக்கு தான் கீதா.. இதுக்குதான் என் வீட்ல என்னைய ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வச்சாங்க ” பிறை கவலையுடன் கூறினாள்.
” சென்னைல இதெல்லாம் சகஜம்.. சோ அதுனால நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கனும்.. நம்ம இங்க தங்கியிருக்கோம் அவ்வளவுதான்.. அவங்க நம்ம கிட்ட விசாரிச்சாலும் நமக்கு ஒன்னுமே தெரியாதே.. அதைத்தானே நாம சொல்ல போறோம். சோ நமக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. தேவையில்லாம நீங்க ரெண்டு பேரும் பயப்பட வேண்டாம் ” சுஷ்மிதா அவர்கள் இருவருக்கும் சற்றே தைரியத்தை கொடுத்தாள்.
” அவ சொல்றதும் சரி தான் கீதா.. நம்ம பயப்பட வேணாம்.. புது ஊர் , புது இடம் அதுனால நமக்கு அப்படி இருக்கு.. இன்னைக்கு நமக்கு லீவ் தானே.. எங்கயாவது போகலாமா ” பிறை மனதை திசை திருப்ப எண்ணி ஆலோசனை கேட்க..
” அப்போ எங்க அண்ணன் வீட்டுக்கே போகலாம் ” கீதா கூறினாள்.
” அதெல்லாம் இல்ல டி… இன்னைக்கு நம்ம ஹாஸ்டல் விட்டு எங்கேயும் போக முடியாது.. போலீஸ் முழுக்க ரவுண்ட் அப் பண்ணியிருக்காங்க.. நம்ம வெளிய போக முடியாது.. நம்மளை விட மாட்டாங்க டி.. ரூம் தான் இன்னைக்கு கதி ” என சுஷ்மிதா கூறவும் இரு பெண்களும் சேர்ந்து போனார்கள்.
” ஐயோ ரெண்டு நாள் சும்மாவே உள்ள இருக்கனுமா ” கீதா சலித்துக் கொண்டாலும்.. ” கண்டிப்பா வீட்ல பேசினாலும் இந்த விஷயத்தை நம்ம வீட்ல சொல்லக் கூடாது டி.. அப்படி சொன்னா உடனே நம்மளை ஊருக்கு கிளம்பி வர சொல்லிடுவாங்க.. அவ்வளவு தான் நம்ம படிப்பு ” கீதா மேலும் இந்த தகவலை கூற.. பிறை சற்றே யோசிக்க ஆரம்பித்தாள் .
அவளுக்கும் அது தான் சரியென பட்டது. ஏற்கனவே அகிலாண்டம் சென்னை வந்ததற்கு ஆடி தீர்த்து உள்ளார். இதில் இந்த விஷயத்தை கூறினால் மேலும் ஆடி விடுவார் என இந்த விஷயத்தை மறைத்து விடலாம் என முடிவே செய்து விட்டாள்.
இவள் எடுக்கும் சிறு சிறு முடிவுகள் கூட, அவளது எதிர்காலத்தை தலைகீழாக திருப்பி போடும் என அறியவில்லை அவள்.
” வெளிய ஒரே சலசலன்னு சத்தம்.. நம்ம போய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா ” கீதா ஆர்வமாக கேட்டாலும்.. சுஷ்மிதா அவர்களை அனுமதிக்கவில்லை.
” தேவையில்லாத வம்பு… பேசாம உள்ளேயே இருங்க ” என கீதாவை அடக்கி இன்டென்ஷிப் விஷயமாக மூவரும் கலந்து ஆலோசிக்க தொடங்கினர்.
முழு விடுதியையும் பார்வையிட்டவன்.. சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் தகவல் தெரிந்ததா என கேட்டுக் கொண்டவனுக்கு, ஒரு வீடியோ பதிவை காட்டினார்கள் சக ஊழியர்கள்.
அந்த வீடியோ பதிவையே கண் சிமிட்டாது பார்த்து வைத்தான் ஆதி தேவ். அதன் பின் நடந்தவைகள் எல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.
” ஆதிதேவ் ஆருத்ரன். சார் சென்னை சிட்டியோட கமிஷனர். உண்மையை சொன்னா பிரச்சனை இல்லை.. இல்லன்னா பின் விளைவுகள் மோசமா இருக்குமா அவ்வளவு தான் சொல்ல முடியும் ” என அந்த பெண் அதிகாரி கூற.. மூவரும் நடுங்கி விட்டனர்.
” மேடம் பிளீஸ் எங்களுக்கு எதுவுமே தெரியாது.. நாங்க அந்த பொண்ணை பார்த்தது கூட இல்ல.. அதுனால … ” என சுஷ்மிதா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண் அதிகாரி அவர்களை நிறுத்தி விட்டு.. ” இந்த கதையை எல்லாம் சார் கிட்ட வந்து சொல்லுங்க மா ” என அவர் நடையை கட்ட.. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் அறையில் இருந்து வெளியேறி இருந்தனர்.
அந்த பெண்ணுடைய பாடியை எல்லாம் எடுத்து சென்று வெகு நேரம் ஆன நிலையில், மேற்கொண்டு பெற்றோர்களுக்கு தகவல் அளித்ததோடு, அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு அவளது உடல் அனுப்பப்பட்டிருந்தது.
” நான் சொல்லுற வரைக்கும் இங்க இருக்கிற யாரும் ஹாஸ்டல் விட்டு வெளிய போக கூடாது.. புதுசா யாரும் உள்ள வரக்கூடாது ” கண்களில் அணிந்திருந்த கூலர் அவனது விழிகள் பேசும் கதைகளை மறைத்துக் கொண்டது.
போலீஸ் வேலைக்கு ஏற்ற தேகம், கட்டுமஸ்தான உடல்வாகு, போலீஸ் கட்டிங் தாடி, மீசை, தலை முடி என பக்கா போலீஸ்காரன் அவன். அவனது தோற்றத்தை பார்த்தாலே அனைவரும் எளிதில் அவனது வேலையை எடை போட்டு விடுவர்.
” சார் நீங்க கேட்ட பொண்ணுங்க ” பெண் அதிகாரியின் குரலில்.. அதுவரை குனிந்து போனை நோண்டிக் கொண்டிருந்தவன்.. மெல்ல நிமிர்ந்து எதிரில் நின்ற மூன்று பெண்களையும் கண்ணாடிக்கு உள்ளே இருந்து பார்த்து வைத்தான்.
முதலில் நின்ற சுஷ்மிதா, பின் கீதா அதன் பின் இறுதியாக பிறைநிலா. இறுதியாக தழுவிய பாவையை சற்றே கண்ணாடியை இறக்கி பார்த்து வைத்தவன்.. மூவரும் பயத்தில் இருப்பதையும் குறித்துக் கொண்டான்.
” வெல்… நீங்க எந்த ஊர் ”
” திருநெல்வேலி பக்கத்துல மஞ்சள்வயல் சார் ”
” சோ சொல்லுங்க.. எதுக்காக அந்த பொண்ணு தூக்கு போட்டா ” அவனது நேரடிக் கேள்வியில் மூவரும் அதிர்ந்தாலும், குழம்பியும் போனார்கள்.
” சார் எங்களுக்கு தெரியாது சார்.. ” சுஷ்மிதா பதில் அளிக்க..
” அப்போ உன் பிரெண்ட் கிட்ட கேளு” அவனது அழுத்தமான கேள்வியில் , எச்சில் விழுங்கிக் கொண்டு தனது தோழிகளை பார்த்தவள்..
” இல்ல சார்.. இவங்க ரெண்டு பேரும் என் கூட தான் இருக்காங்க.. அவங்களுக்கு இதை பத்தி ஒன்னுமே தெரியாது ”
” ரைட்.. நீ சொல்லு ” என கீதாவை கைகாட்ட.. அவளும் அதே பதிலை தான் கூறினாள்.
” தென்… நெக்ஸ்ட்… ” என்றவனது பார்வை பிறையை தழுவ..
” அவங்க யாருன்னே எனக்கு தெரியல சார் ” பயத்தில் இருந்தாலும், பதில் தெளிவாக வந்தது.
” ஓ அப்படியா ”
” கண்டிப்பா தெரியாது ” மீண்டும் அவளே..
” அப்போ இதுக்கு என்ன அர்த்தம் ” என லேப்டாப்பை அவள் பக்கம் திருப்ப.. அதில் தெரிந்த காட்சிகள் எல்லாம் தெளிவாக ஓடியது.
மூவரும் காட்சிகளை பார்த்து அதிர்ந்து அவனை பார்க்க.. ” இவங்க எங்க ஊர் பொண்ணு சார்.. நாங்க பேசுற பேச்சு வழக்கை பார்த்து திருநெல்வேலி சைடான்னு கேட்டாங்க.. அவங்களுக்கு அந்த ஊர் தானாம்.. அதான் சொன்னாங்க.. ” என பிறை காட்சிகளுக்கு விளக்கம் கொடுக்க.. அவளை நம்பாத பார்வை பார்த்து வைத்தான் ஆதி.
நண்பிகள் இருவரும் அவளையே பார்க்க.. நேற்று நடந்ததை அவர்களிடம் கூறினாள்.
நேற்றைய இரவு மூவரும் கீழே மெஸ்ஸில் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது பிறை வேகமாக சாப்பிட்டு முடிக்கவும், அவளது அன்னைக்கு அழைத்து பேசுவதாக கூறி வேகமாக எழுந்து சென்று கை கழுவும் இடத்திற்கு செல்ல.. அங்கேதான் அந்த பெண் பிறையை பார்த்தாள்.
” ஹாய்.. ” இளவரசி தான் முதலில் பேசினாள்.
” ஹாய் நீங்க ” அவளது தெரியாத பார்வையை கண்டு..
” நீங்க திருநெல்வேலியா ”
” எப்படி சரியா சொன்னீங்க ”
” நீங்க மூணு பேரும் பேசிக்கிட்டதை கேட்டேன்.. நம்ம ஊர் தமிழ் .. அதான் கேட்டேன் ”
” ஓ நீங்களும் திருநெல்வேலியா ”
” ஆமா… ” என அப்பெண் சிரிப்புடன் கூறினாள்.
” ஓகே பார்க்கலாம் ” என தட்டை கழுவிக் கொண்டு பிறை சென்று விட.. அவள் போன திசையை வெறித்து பார்த்தாள் இளவரசி.
இதுதான் நடந்தது. அவள் சென்ற பின்பு மறையும் வரை இளவரசி அவளை பார்த்ததே அந்த வீடியோவை பார்த்து தான் அவளுக்கு தெரியும். எதற்காக தன்னை இப்படி பார்க்கிறாள் என மனதிற்குள் நினைக்காமல் இல்லை.
” ஆனால் சார்.. இந்த பொண்ணு கூட பேசுனதுக்கும், இப்போ ஒரு பொண்ணு இறந்து போனதுக்கும் என்ன சார் சம்மந்தம்” சுஷ்மிதா கேட்டதும்…
” ஏமா இந்த பொண்ணு தான் மா செத்து போனது ” என அந்த பெண் அதிகாரி கூறியதும் மூவருக்கும் தூக்கி வாரிப் போட்டது..
அதிலும் பிறை அரண்டே போனாள். தன்னிடம் இரவில் அத்தனை கலகலப்பாக பேசியவள், எதற்காக சாக வேண்டும் அதுவும் சில மணி நேரங்களில் அப்படி என்ன நடந்து விட்டது , சாகும் அளவிற்கு அவளது வாழ்வில் என்ன பிரச்சனை.
ஆனால் அதையும் விட.. தற்போது இவளும் அல்லவா மாட்டிக் கொண்டாள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது. அதில் ஒருவள் இறந்து விட்டாள், மற்றொன்று பிறை. அவள் கூறியதை இவர்கள் நம்ப வேண்டுமே.. அயாசமாக இருந்தது. தவறே செய்யாமல் எத்தனை பெரிய செயலில் மாட்டிக் கொண்டோம், நினைக்க நினைக்க மனம் கதறியது.
வீட்டிற்கு தெரிந்தால் அவளது கதை முடிந்து விட்டது. அகிலாண்டம் ஆடியே தீர்த்து கட்டி விடுவார். ” ஹலோ…… ” சற்றே அழுத்தமான குரலில் திடுக்கிட்டு நிதானம் அடைந்தாள் பிறை.
” என்ன … இப்போவே என்ன என்ன பொய் எல்லாம் சொல்லி தப்பிச்சு போகலாம்னு பிளான் பண்ணுறியா ” ஆதி கேட்ட கேள்விக்கு , சட்டென இல்லை என்பதாக தலை அசைத்தாள் பிறை.
” நீங்க மூணு பேரும் ஸ்டேஷன் வாங்க.. தென்.. இனிமே புதுசா யாரையும் அலோ பண்ணாதீங்க.. இங்க இருக்குற யாரும் நான் சொல்லுற வரைக்கும் வெளியே போக கூடாது ” என எழுந்து சென்று காரில் ஏறினான் ஆதிதேவ்.
சந்தேகம் என வந்துவிட்டால் யாராக இருந்தால் என்ன என்ற ரகம் அவன். வேலையில் சற்றும் இரக்கம் என்ற சொல்லுக்கு இடம் இல்லை அவனுக்கு.
கீதா இதில் அழுதே விட …சுஷ்மிதா கொஞ்சம் தைரியமாக இருந்தாள். ஆனால் பிறை எந்த நிலையில் இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. நினைவு முழுவதும் வீட்டை சுற்றி தான் இருந்தது.
கார் ஸ்டேஷனை அடைந்ததும்.. மூவரும் இறங்கி உள்ளே சென்றனர்.. “உன் பிரெண்ட் உண்மையை சொல்லிட்டா நீங்க ரெண்டு பேரும் போகலாம். இல்லைனா இங்க தான் … ” என அவன் உள்ளே சென்று விட.. மூவரும் செய்வதறியாது திகைத்து போனார்கள்.
உள்ளே சென்றவன், அந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தானோ… பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் அவனுக்கு ஒரு விஷயம் பொறி தட்டியது. உடனே போனை எடுத்து தகவலை கூறி வரவைத்தான்.
பிறையை தவிர மற்ற இருவருக்கும் தெரியும் பிறை மீது எந்த தவறும் இல்லை என்பது. ஆனால் அவள் உண்மையை கூறியும் கூட அங்கு அவளை நம்புவதற்கு தான் ஆட்கள் இல்லை.
மூவரது உறவினர்கள் யாரேனும் சென்னையில் இருக்கிறார்களா என கேட்க… பிறையை தவிர மற்ற இருவரும் உறவினர்கள் விசாலத்தையும், கைபேசி எண்ணையும் கொடுத்தனர்.
எத்தனை முறை கேட்டாலும் பிறை இந்த ஒரே பதிலை தான் கூறினாள். அதுதானே உண்மையும் கூட.. இவர்களுக்காக ஏதேனும் கதையா கூற முடியும்.
தனிப்பட்ட முறையில் அந்த பெண் அதிகாரியும் அவனை சந்தித்து பேசி, அவள் மீது தவறில்லை. ஒரே பதிலை தான் கூறுவதாகவும்.. இதை எப்படி அவர்களுக்கு நிரூபிப்பது என தெரியவில்லை என்று புலம்புவதாகவும் கூறினார்.
” அந்த பொண்ணை மட்டும் உள்ளே அனுப்புங்க ” என்றவனது கட்டளைக்கு இணங்க.. பிறை உள்ளே அனுப்பப்பட்டாள்.
” சோ என்ன முடிவு பண்ணிருக்க.. கடைசி வரைக்கும் உண்மையை சொல்லக் கூடாதுன்னா ” போலீஸ் விசாரணையை அவன் தொடங்கி விட்டான்.
மெலிந்த தேகமும் இல்லை பருத்த உடலும் இல்லை. இரண்டும் கலந்த கலவை. சற்றே பூசினார் போல உடல் வாகு. சந்தன நிறம்.. சிவந்த இதழ்கள்.. சுருள் முடி அங்காங்கே அவளது கன்னத்தை தீண்டிக் கொண்டிருக்க.. விழிகள் என்னவோ நான் எதற்கும் கலங்க மாட்டேன் என்ற ரீதியில் அவனை பார்த்தது.
அவள் அவனை பார்ப்பது தெரிந்தது தான். ஆனால் அவன் அவளை அங்குல அங்குலமாக பார்வையிட்டு வைத்தது அவளுக்கு எப்படி தெரியும்.. கண்ணாடிக்குள் இருந்த கரு விழிகளோ அவனது கள்ளத்தனத்தை மறைத்து விட்டதே.
” என் மேல தப்பு இல்லை சார் ” மீண்டும் அதே அழுத்தம்.. அவளது குரலில்.
” ஓகே … ஆனால் உன் மேல தப்பு இருக்குன்னு நான் ப்ரூவ் பண்ணிட்டா ” ஆருத்ரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என தெரியாமல் முழித்து நின்றாள் பிறைநிலா.
சனா💖