அத்தியாயம் – 18
நந்தினியின் இரத்தமே கொதித்தது, வார்த்தைகள் வர மறுத்தாலும், அவள் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள், இப்போது தான் பேசவில்லை என்றால் அது தன் கணவனுக்கு தான் அவமானம் என்று நினைத்தவள்,… “காதலும் ரொமான்ஸும் உடலால மட்டும் வராது மனிஷா, அதை உன்னால ஒருபோதும் புரிஞ்சுக்க முடியாது, என் புருஷன் என்னை மதிக்கிறார், என் பக்கம் உறுதியாக நிற்கிறார், என்னை கவனமா பார்த்துகிறார், அதுவே எனக்கு போதுமானது, நீ எதிர்பார்க்கிற ரொமான்ஸ் எல்லாம் உடம்புக்காக அழையுற பொண்ணுங்க தான் எதிர்பார்ப்பாங்க” அவளின் வார்த்தைகள் காற்றைத் துளைத்தது போல் உறுதியுடன் ஒலிக்க, மனிஷா ஒரு நொடி
வார்த்தையற்றவளாகி தடுமாறினாள்,..
அந்த வேளையில் அங்கே வந்திருந்த தீரஜ், டைனிங் ஹாலின் வாசலில் இருந்தபடியே அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான், முதலில் மனிஷாவின் கேள்விகளைக் கேட்டவுடனே அவன் முகம் கடினமாகியது, அதே கணம் நந்தினியின் உறுதியான பதில் காதுகளில் விழுந்ததும், அவனது மனதில் எதோ இனிய ஒரு நிம்மதி பரவியது…
‘என் புருஷன் என்னை மதிக்கிறார், என் பக்கம் நின்று பாதுகாக்கிறார்’ என்று அவள் சொன்ன அந்த வார்த்தைகள் தீரஜின் உள்ளத்தில் ஒரு மின்சாரமாக பாய்ந்தது, அவளிடம் இதுவரை வெளிப்படாமல் இருந்த பாசம், அந்தச் சொற்களால் உயிர்பெற்றது போல உணர்ந்தான்….
மனிஷாவோ நந்தினியின் வார்த்தைகளால் சுருண்டு போன முகத்தோடு அமர்ந்திருந்தாள்…
தீரஜ் சற்றுநேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நந்தினியை ரசித்துக்கொண்டிருந்தான்., நந்தினியின் அந்த உறுதியான நிலைப்பாடு, அவனது இதயத்தில் ஒரு மறைமுக மகிழ்ச்சியை விதைத்திருந்தது,…
தீரஜ்ஜை கண்டதும் முக இறுக்கத்தை மாற்றி இதழ்களில் புன்னகையை கொண்டு வந்த நந்தினி,… “உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்” என்று சொல்ல,.. அவனும் மென்புன்னகையுடன் மேஜையின் அருகில் வந்தான், அந்த இரவு உணவு மேசையில் சூழல் மாறி இருந்தது, மனிஷாவின் கேள்வியால் வந்த அதிர்ச்சியும், நந்தினியின் உறுதியான பதிலும் அந்த அறையில் இன்னும் நிறைந்திருந்தன….
நந்தினி அமைதியாக சாப்பிடத் தொடங்கினாள், ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் தீரஜின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது…
அவளை மறைவாக பார்த்துக் கொண்டிருந்தான், இதுவரை மனைவி என்ற பிணைப்பு ஒரு பொறுப்பாக மட்டுமே அவனுள் இருந்தது, ஆனால் இப்போது அந்த பொறுப்பு மெதுவாக ஒரு பாசமாக மாற ஆரம்பித்தது…
தீரஜின் பார்வை அவளையே பின்தொடர்ந்தது, அவள் தண்ணீர் கேனிலிருந்து கண்ணாடி கிளாஸில் எடுத்து ஊற்றும் சின்ன அசைவுகள் கூட அவனுக்கு புதிதாய் கண்ணில் பட்டது. ‘இந்த பொண்ணு… என் வாழ்க்கைச்சூழலை எவ்வளவு அமைதியாக தாங்கிக்கொண்டு போறா’ என்று மனதுக்குள் நினைத்தான்….
மனிஷா அதற்கு மேலும் அங்கு இருக்க பிடிக்காமல் அவசரமாக எழுந்து சென்று விட, மேசையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்…
அவள் சென்றதும் அந்த அமைதியை உடைத்த தீரஜ் மெதுவாக,… “அந்த வார்த்தைகள்… எனக்காக நீ சொன்னதா, இல்ல உன் மனசிலருந்து வந்ததா?” என்று கேட்டான்…
சற்றே திகைத்த அவளுக்கு, அவன் அனைத்தையும் கேட்டுவிட்டானா? என்பதை எண்ணி வருத்தம், ஒரு பெருமூச்சுடன், கண்களைத் தாழ்த்திக்கொண்டு, மெலிதாய்,
“என் மனசிலிருந்து வந்த வார்த்தை தான், அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று பதிலளித்தாள்.
அவளது குரலின் அந்த எளிமையும் நேர்மையும், தீரஜின் உள்ளத்தில் பனி உருகியது போல பரவியது, ஒரு நிமிடம் பேசாமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…
முதல்முறையாக, ‘நந்தினி என் மனைவி மட்டுமல்ல, என் வாழ்க்கையின் துணை’ என்று அவனது இதயம் உணர்ந்தது….
அன்றைய இரவு…
அறையின் அமைதியை உடைத்தது சாளரத்தின் வழியே ஊர்ந்துவந்த காற்றின் இசை, இருவரும் வழக்கம் போல் படுக்கையின் இரு முனைகளில் படுத்திருந்தனர், நடுவில் எப்போதும் போலக் கணக்கில்லாத இடைவெளி….
தொண்டையை மெதுவாகச் செருமிக் கொண்டான் தீரஜ், அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை அவனைத் தள்ளியது, “நீ எப்போவும் இப்படி இல்லையே மது… இன்னைக்கு எப்படி தைரியம் வந்துச்சு?” என்று புன்னகையோடு கேட்டான்….
நந்தினி சற்று பக்கவாட்டாக திரும்பி அவனை நோக்கியவள்,..
“உண்மையை சொல்றதுக்கு தைரியம் தேவையா என்ன?”
அவளது பார்வையில் நிதானம் மட்டுமல்ல, அமைதியான உறுதியும் தெரிந்தது…
அவள் சொல்லும் வார்த்தைகள் தீரஜின் மனதைத் தட்டிக் கிளறியது, கண்களில் சற்றே விருப்பமும், கலக்கமும் கலந்த பார்வையோடு அவளை நோக்கி,
“உனக்கு நிச்சயமா என்னோட வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்னு நம்பிக்கை இருக்கா?” என்று கேட்டான், அவனது குரலில் ஒரு வித ஆவலும், மறைந்த பயமும் வெளிப்பட்டது…
சில நொடிகள் அவனை அமைதியாகப் பார்த்தவள்,… பிறகு மெதுவாக உதடுகளைத் திறந்து,
“நிச்சயமா நம்புறேன்…” என்றாள்…
அந்தச் சொற்கள் தீரஜின் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன, மனதில் அடங்கி இருந்த கனமான சுமை கரைந்து போனது போல ஆழ்ந்த மூச்சை விட்டான், அவனது முகத்தில் பல நாட்களாக காணாத ஓர் இலகுவான புன்னகை விரிந்தது…
அந்த இரவு, இருவருக்கும் நடுவிலிருந்த இடைவெளி குறையவில்லை என்றாலும்… மனதின் இடைவெளி ஓரளவு குறைந்திருந்தது,..
அதன் பிறகு நந்தினி.. “குட்நைட்”…என்று மெதுவாகச் சொல்லிவிட்டு பக்கவாட்டாகத் திரும்பிக் கொண்டாள், சில நொடிகளில் அவளது மூச்சின் சீரான ஓசை, அவள் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியது…
ஆனால் தீரஜின் கண்களுக்கு மட்டும் உறக்கம் வர மறுத்தது.
‘நிச்சயமா நம்புறேன்…’ என்ற அவளது வார்த்தைகள் அவனது காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன, அந்த நம்பிக்கை அவனை மகிழ்ச்சியடையச் செய்தாலும், உள்ளுக்குள் வேறு பயமும் வேரூன்றியது…
‘இவளோட வாழ்க்கையை நான் பாழாக்கிவிடுவேனோ?’ என்ற கவலையும்.. ‘என் கால்கள் நிச்சயமா குணமாகுமா?’ என்ற பதட்டமும் சேர்ந்து மனதைப் பிசைந்தது…
படுக்கையின் விளிம்பில் படுத்திருந்தவன், மெதுவாகக் கால்களை நகர்த்த முயன்றான், ஒருகாலத்தில் எளிதாக நடந்த அந்த அசைவுகள், இப்போது எரிச்சலுடன் போராட வேண்டிய ஒன்றாகிவிட்டன, ஆனாலும் இம்முறை சிறிதளவாவது நகர்ந்தன…
அந்தச் சிறு அசைவுதான் அவனுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தது, பிசியோதெரபிஸ்ட் சொன்ன ஆலோசனைகள் மனதில் ஒலித்தது ‘தொடர்ந்து பயிற்சி செய்ங்க… ஒருநாள் நிச்சயம் முன்னேற்றம் இருக்கும்’
அந்த வார்த்தைகளை நினைவு கூர்ந்து, தீரஜ் தனது முழு மன வலிமையையும் திரட்டினான், இன்னும் ஒருமுறை… இன்னும் ஒருமுறை என, முயற்சியை நிறுத்தவில்லை அவன்…
அந்த இரவு முழுவதும், அவன் தூக்கத்தை மறந்து போராடிக்கொண்டிருந்தான் தனது கால்களோடு மட்டுமல்ல, தன்னுள் பதுங்கியிருந்த பயத்தோடும்…
காலை சூரியஒளி மெதுவாக அறைக்குள் புகுந்தது, கண்களைத் திறந்த நந்தினி பக்கத்தில் படுத்திருந்த தீரஜை கண்டு,.. “குட்மார்னிங்” என்று சொல்ல,… அவளது குரலில் தான் விடிந்து விட்டதையே உணர்ந்தான்,…
“விடிஞ்சிடுச்சா” என்று கேட்டவனை விழிகள் சுருங்க பார்த்தவள்,.. “இதென்ன கேள்வி அரவிந்த், விடிஞ்சதுனால தானே நீங்க முழிச்சு இருக்கீங்க” என்றாள்,..
“நான் எங்கே தூங்கினேன்” அவன் சொல்ல,.. “என்ன? நீங்க தூங்கலையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள்,.
தீரஜ் சிறிது புன்னகைக்க முயற்சித்தான், அவன் நெற்றியில் வியர்வை சொட்டிக் கொண்டிருந்தது.. “தூக்கம் வரல… கொஞ்சம் முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்” என்றான் மெதுவாக…
“முயற்சியா?” என்று கேட்டவள் அப்போது தான் அவன் கால்கள் சிறிது உயர்ந்து, மீண்டும் மெதுவாக இறங்குவதை அவள் கண்டாள்…
நந்தினியின் கண்கள் நம்பிக்கையுடன் ஒளிர்ந்தன,
“இது… இட்ஸ் வண்டர்ஃபுல்! நீங்க கால் தூக்கறீங்க அரவிந்த்!” என்று மகிழ்ச்சியோடு சொன்னாள்….
தீரஜின் முகத்தில் சிறிய வெற்றிக் களிப்பு தெரிந்தது… “இன்னும் முழுசா இல்ல… ஆனா கொஞ்சம் முன்னேற்றம்னு தோணுது” என்றான் மூச்சை இழுத்து விடுவித்தபடி…
“முன்னேற்றம் தான் முக்கியம், பாருங்க, உங்க மேல இருந்த என் நம்பிக்கை வீண் போகல இன்னும் முயற்சி பண்ணுங்க, சீக்கிரமே இன்னும் நல்ல முன்னேற்றம் வரும்”
அவளது வார்த்தைகள் தீரஜின் மனதில் புதிதாய் நம்பிக்கையை விதைத்தன, அந்தக் கணம் அவன் உணர்ந்தது ஒன்றே ஒன்று தான்
தனக்கான போராட்டத்தில், இப்போது அவன் தனியாக இல்லை அவளும் இருக்கிறாள்,…
“தினமும் பிசியோதெரபிஸ்ட் வந்தா நல்லா இருக்கும், நீங்க ஏன் தினமும் வர சொல்ல கூடாது” என்றாள் நந்தினி,… “நான் தான் வேண்டாம்னு சொன்னேன், அவர் பயிற்சி கொடுப்பது ரொம்ப பெயின்ஃபுல்லா இருக்கு” என்றான்,..
“இப்படி சொன்னா எப்படி எழுந்து நடக்குறது, ஒன்னும் பிரட்சனை இல்ல, இனிமே நானே உங்களுக்கு பிராக்டிஸ் கொடுக்கிறேன்” என்று சொல்ல,… “நீயா?” என்று அதிர்ந்தான் அவன்,..
“எஸ் நான் தான்,.. யூடியூப்ல நான் இதை பத்தி சர்ச் பண்ணுறேன், இனிமே என்கிட்டருந்து தப்பிக்க முடியாது” அவள் சொல்ல,… அவன் தான் விழி பிதுங்கி போனான்,..
அடுத்த நாள் முதல் நந்தினி தான் தீரஜின் சிறிய பிசியோதெரபிஸ்ட் ஆனாள், காலை வேலைக்கு செல்லும் முன்பும், மாலை வீடு திரும்பிய பின்பும் அவள் அவனுடன் நேரம் செலவழித்தாள்…
அன்றைய மாலை வேளையில்,..
“சரி… இப்போ மெதுவா தூக்குங்க… நான் பக்கத்துல இருக்கேன்” என்று கையை அவனது காலின் கீழ் வைத்தபடி ஊக்குவித்தாள்…
தீரஜ் வலி தாங்கிக் கொண்டபடி முயற்சி செய்தான், அவன் நெற்றியில் வியர்வை சொட்ட, நந்தினியே அதனை துணியால் துடைத்து விட்டாள்…
“சும்மா விடாதீங்க… இன்னும் கொஞ்சம் மட்டும்” என்று உற்சாகமாக ஊக்கினாள்..
பல முறை தோல்வி அடைந்தாலும், அவள் சலிப்பாக நினைக்கவில்லை,
ஒவ்வொரு முயற்சியும் சிறிய வெற்றியாகக் கருதி பாராட்டினாள்…
“வாவ், இன்னைக்கு நேற்றைக் காட்டிலும் ரொம்ப நல்லா தூக்குறீங்க! இன்னும் சில நாள்ல நிச்சயம் நடக்க முடியும்” என்று அவள் புன்னகையுடன் சொன்னபோது, தீரஜின் உள்ளம் புத்துணர்ச்சியடைந்தது….
அவனுக்குள் சில நேரம் தோன்றும் ‘என்னால முடியாது’ என்ற நிழல் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது, அதற்குப் பதிலாக, ‘என்னால நிச்சயம் முடியும்… ஏன்னா அவ என் பக்கத்துல இருக்கிறாள்’ என்ற நம்பிக்கை வேரூன்றியது….
அவளது வார்த்தைகள் தீரஜின் உள்ளத்தில் ஒரு சிறிய நம்பிக்கையின் விதையைக் புதைத்தது, அந்த நம்பிக்கை தான் அவனுக்கு புதிய சக்தியைத் தந்தது….
இவ்வாறு ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் நடந்தபோது, அவர்களுக்குள் இருந்த அமைதியான இடைவெளியும் குறையத் தொடங்கியது,
ஆனால் எல்லையைத் தாண்டவில்லை. அதே சமயம் தீரஜின் உள்ளத்தில்.. ‘அவள் இருப்பது எனக்கு ஒரு வலிமை…’ என்ற உணர்வு உறுதியாய் கிளம்பியது,…