Loading

அத்தியாயம் 22 :

“பாரி.”

பரிதி மற்றும் பார்வதியின் குரல்கள் வீட்டையே நிறைத்தது.

பார்வதி ட்ரேவில் கொண்டு வந்த தம்ளர் கீழே விழுந்து உருண்டது.

இரண்டடி தள்ளி கீழே விழுந்த மலரவளுக்கு கன்னம் எரிந்த பின்னரே தன்னுடைய வேந்தன் தன்னை அடித்திருக்கிறான் என்பதே உணர்வில் பதிந்தது.

“வேந்தா…”

வாய் மீது விரல் வைத்து “மூச்” என்றவன் எதுவும் பேசாதே என்பதைப்போல் தலையசைத்தான்.

“டேய் என்னடா?” அருகில் வந்த பரிதியையும் தடுத்தவன் தானே பூவை தூக்கி இருக்கையில் அமர வைத்தான்.

“மங்கா அக்கா.” பாரியின் குரலுக்கு ஓடி வந்தார்.

“ஐஸ் பேக் கொண்டு வாங்க” என்றவன் பூவின் கன்னத்தை ஆராய்ந்தான்.

சடுதியில் சிவந்து தடித்திருந்தது. ஐந்து விரல்களும் அச்சென பதிந்திருந்தன.

பூ பாரியையே பார்த்திருக்க… அவளின் கண்களை சந்திப்பதை தவிர்த்தவனாக மங்கா கொண்டு வந்து கொடுத்த ஐஸ் பேக்கை அவளின் கன்னம் வைத்தான்.

நன்கு அழுத்தி விட்டான் போலும், வலியில் ‘ஷ்’ என முகம் சுருக்கினாள்.

பாரியின் கையிலிருந்து பேக்கை வாங்கிய பரிதி, “தள்ளுடா அடிக்கிறதையும் அடிச்சிட்டு, அமைதியா ஒத்தடமும் கொடுக்குற” என்றான்.

“அடிச்ச எனக்கு மருந்து போடவும் தெரியும்” என்று ஐஸ் பேக்கை பிடுங்கியவன் இம்முறை வேண்டுமென்றே அழுத்தி அழுத்தி பூவின் கன்னத்தில் வைத்தான்.

“வேந்தா மெதுவா. அடிச்சதைவிட, இப்போ நீ பண்றது தான் வலிக்குது” என்றாள்.

“வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்” என்றவன்,

“என்கிட்ட மறைக்கணும் நினைச்சதுக்கு தான் இந்த அடி” என்றான்.

“நீ அடிச்சதுமே புரிஞ்சிடுச்சு.” உம்மென்று கூறினாள்.

“என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள.”

பார்வதி கேட்டிட பாரி பூவை கைகாட்டினான். அவளிடம் கேட்டுக்கொள்ளுமாறு.

அப்போது தான் வீட்டிற்கு வந்த தில்லை…

“அந்த பையனை டிஸ்மிஸ் செய்தாச்சு பாரி” என்றார் தன் இளைய மகனிடம்.

“எந்த பையன் மாமா?” பூ வேகமாக இருக்கையிலிருந்து எழுந்தவளாகக் கேட்டிருந்தாள்.

“மாதேஷ்.”

தில்லை பெயரை சொல்லியதும்,

“திஸ் இஸ் டூ மச் வேந்தா… அவனோட ஸடடிஸ் இதனால் பாதிக்கப்படும்” என்று பாரியிடம் சத்தமிட்டாள்.

அந்நேரம் அவியும், ஜென்னும் பூவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பார்ப்பதற்காக வந்தனர். அவர்களும் மற்றவர்களை போல் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

“எது டூ மச்” என்று அவளுக்கு சற்றும் குறையாது சத்தமிட்டான் பாரி.

“ம்ப்ச்.” சலித்தவளாக தில்லையின் பக்கம் திரும்பியவள், “அவன் சொன்னா நீங்க செஞ்சுடுவிங்களா மாமா” என்று அவரிடம் கேள்வி கேட்டாள்.

“எனக்கு பாரி செய்தது தப்பா தெரியல தமிழ்” என்றவரிடத்தில் அத்தனை அமைதி.

பாரி சொல்லியதை கேட்டவருக்கு… மாதேஷை கொன்று போடும் வேகம். ஆனால் அதனை செய்ய அவருக்குத் தடையாக அமைந்தது, அவரும் இரு பிள்ளைகளுக்கு தந்தையாயிற்றே. அதனால் பாரி சொல்லியதையே செய்தார். அதற்கு அவரின் பணம் துணையாக இருந்தது. அத்தோடு தவறும் மாதேஷ் பெயரில் இருந்திட அதிக சிரமமின்றி அவனை கல்லூரியிலிருந்து நீக்கியிருந்தார்.

“இதுக்கு… இதுக்கு பயந்து தான் உன்கிட்ட சொல்லல. லீலாவையும் சொல்லக்கூடாது சொல்லியிருந்தேன். அதையும் மீறி உன்கிட்ட சொல்லியிருக்கா” என்ற பூ ஓய்ந்தவளாக இருக்கையில் பொத்தென்று அமர்ந்தாள்.

“லீலா எதுவும் சொல்லல.” பாரி அழுத்தமாகக் கூறினான்.

“இதோடு நிறுத்திக்கோ வேந்தா. இதுவே அவனுக்கு போதும்.” பூ சொல்லிட, பாரியிடம் விஷமச்சிரிப்பு.

“இதுக்கேவா” என்ற அவி மாதேஷை பாரி அடித்ததையும், இப்போது அவன் மருத்துவமனையில் இருப்பதையும் சொல்லிட… பூ பாரியை நன்றாக முறைத்தாள்.

“உன் இந்த முறைப்பெல்லாம் என்னை ஒன்னும் பண்ணாது” என்பதைப்போல் பூவின் பார்வையை சற்றும் சளைத்திடாது தாங்கினான்.

“அவளுக்கே உடம்பு சரியில்லை. இதில் இன்னும் ஏண்டா அவளை டென்சன் பன்ற” என்று பாரியை விலக்கிய பார்வதி, பூவின் அருகில் சென்று…

“நீ எழுந்து வா” என்று அவளை அங்கிருந்து கிளப்பினார்.

பூவின் முகம் சுருங்கியிருக்க… அதனை  தாங்க முடியாது அவளின் அருகில் சென்ற பரிதி,

“பாருடா எப்படி சோர்ந்து போயிருக்கான்னு. அவளுக்கு பிடிக்காததை நீயேன் செய்ற பாரி?” என்றான்.

“யாரு… நானா?” என்றவன், “எனக்கும் நடந்தது முழுசா தெரியாது. பாதி தெரிஞ்சதுக்குத்தான் இத்தோட விட்டேன். எனக்குத் தெரிஞ்சது உங்களுக்கு தெரிஞ்சா? நானாவது இதோடவிட்டேன்” என்றான் பாரி.

“என்னதாண்டா சொல்றான்…” பரிதி அவியை பார்த்திட, “எனக்கும் தெரியாதுண்ணா. பாரி மாதேஷை அடிச்சதுதான் தெரியும்” என்றான்.

“என்னடா… என்ன தான் குட்டிம்மா நடந்தது?”

பூ பாரியை பார்க்க…

“அங்க சொல்லு” என்று பரிதியை கண் காட்டினான் பாரி.

“உனக்கும் தெரியணும் தான?”

“அஃப்கோர்ஸ்.” தோளை குலுக்கினான்.

“பட் என்கிட்ட நீ சொல்லக்கூடாதுன்னு நினைச்சதான!” என்றான்.

“இப்படி எதுவும் நீ செய்யக்கூடாதுன்னு தான் சொல்லல. அதான் எல்லாம் பண்ணிட்டியே” என்ற பூ நடந்ததைக் கூறினாள்.

“ஹீ ப்ரொபோஸ்ட் மீ.”

“வாட்?”

பூவின் வார்த்தையில் நண்பர்கள் மூவரும் ஒரு சேரக் கேட்டிருந்தனர்.

“திரும்பத்திரும்ப அதை சொல்ல முடியாது” என்றவளை பாரி நன்கு முறைத்தான். இன்னும் தன்னிடம் எதையெல்லாம் மறைத்திருக்கிறாய் எனும் விதமாக. அதனால் பூ பாரியை பார்த்திடவே இல்லை.

பூ முதல் வருடத்தில் இருந்த போது மாதேஷ் மூன்றாம் வருடம். சீனியர் என்கிற முறையில் அவளுக்கு மட்டுமல்ல அவளது நண்பர்களுக்கும் அவன் பரிச்சயம். அந்த வகையில் அவனிடம் ஒரு சிலமுறை பூ பேசியிருக்கிறாள்.

அதனை கொண்டு மாதேஷ் பூவை காதலிப்பதாக பலமுறை சொல்ல முயற்சிக்க, ஆரம்பத்தில் புரியாவிட்டாலும்… அடுத்தடுத்த சந்திப்பில் எந்த எண்ணத்தில் பேச வருகிறான், பார்க்கிறான் என்பது பெண்ணவளுக்கு புரிந்தது. அதனால் நாசூக்காக அவனை தவிர்த்தும் வந்தாள்.

மாதேஷ் காதலை சொல்ல வரும்போதெல்லாம் இயல்பாக பேசி அவனை சொல்லவிடாது திசை மாற்றிவிடுவாள்.

பாரியிடம் அப்போதும் சொல்லாததற்கு காரணம் மாதேஷை பாரி அடித்துவிடுவான் என்று பயந்து தான்.

இப்படியே இரண்டு வருடங்கள் முடிந்துவிட… மாதேஷ் பூவிற்காகவே முதுகலை அங்கேயே சேர்ந்தான்.

தொல்லை விட்டதென அவளிருக்க… மாதேஷ் நேரடியாக அவளை சீண்டினான்.

அதனையெல்லாம் பூ கண்டுகொள்வதாகவே இல்லை. ஆனால் மாதேஷ் விடுவதாக இல்லை.

ஒருமுறை நேரடியாக மாதேஷ் கேட்டிட…

“தெரிஞ்சும் தெரியாத மாதிரி என்னை அலையவிடுற தமிழ்.”

“எனக்கு இதெல்லாம் செட் ஆகாது” என அவனை கடந்திட்டாள்.

ஆனால் இம்முறை மாதேஷ் வலுவாக திட்டம் தீட்டினான். அவனின் பின்னால் துணையாக வேறொரு ஆளும் இருக்க அதனை தைரியமாகவே செயல்படுத்த முனைந்தான்.

எப்போதும் கல்லூரி முடிந்த பின்னரும் பூவுடன் நேரம் செலவழித்தே பாரி வீட்டிற்கு செல்வான். அன்றும் அப்படித்தான். பாரி சென்றதும், பூ விடுதிக்கு வந்து சற்று ஆசுவாசமாக அமர்ந்திருப்பாள். அவ்வளவே. அவளின் அலைபேசி அலறியது.

மாதேஷின் எண் என்றதும் எடுப்பதற்கே மனமில்லை. நான்கு முறைக்கு மேல் அடித்து ஓய்ந்தது.

லீலாவிற்கு மாதேஷ் பற்றி தெரியும். அதுவும் மாதேஷ் நேரடியாக பூவிடம் கேட்ட பின்னர் தான், பூ லீலாவிடமே சொல்லியிருந்தாள்.

“நீயெடுக்கும் வரை நிறுத்த மாட்டான் போல. அட்டெண்ட் பண்ணி என்னன்னு கேட்டுடு தமிழ்.” லீலா கடுப்பாக மொழிந்துவிட்டு வெளியில் சென்றாள். அதே கடுப்பின் சாயல் பூவிடமும்.

“நான் தான் எனக்கு விருப்பமில்லன்னு, நோ சொல்லிட்டனே சீனியர். திரும்பத்திரும்ப எதுக்கு தொல்லை பன்றீங்க?” எடுத்ததும் கோபமாக பேசினாள்.

“நீ’ன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும் தமிழ். ப்ளீஸ் ஓகே சொல்லேன்” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான்.

பூ தன்னுடைய மறுப்பினைத் திடமாக உறுதியாகக் கூறிட,

“சரி நேரில் வந்து என் முகத்தை பார்த்து நோ சொல்லிட்டு போ” என்றான்.

“அதெல்லாம் முடியாது.” பூ மறுத்தாள்.

“அப்போ என்னை லவ் பண்றன்னு அக்செப்ட் பண்ணிக்கோ. இல்லை நேரில் வந்து நோ சொல்லு” என்றவன், “நான் நம்ம டிப்பார்ட்மென்டில் தான் இருக்கேன்” என்று அவளை வரச்சொல்லி வற்புறுத்தினான்.

பூ முடியாதென எவ்வளவோ சொல்லியும் கேட்காதவன், “நீ இப்போ வரலன்னா நான் ஹாஸ்டல் முன்னாடி வந்து நின்னு கத்தி சொல்லுவேன்” என்றிட… பூ அரண்டு விட்டாள்.

இத்தனை வருடங்களில் காதலிக்க சொல்லி அவன் கொடுக்கும் தொல்லைகளில் அவனின் பிடிவாதம் தெரிந்தவள், அலைபேசி தன் கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததையும் கவனிக்காது… கல்லூரியை நோக்கி வேகமாக ஓடினாள்.

எதிரில் வந்த தன்னை இடித்துக்கொண்டு ஓடும் பூவை வினோதமாக பார்த்த லீலா, மெத்தையில் கிடந்த பூவின் அலைபேசியை எடுக்க… அது இன்னும் இணைப்பில் இருந்தது. எடுத்து செவிமடுத்தாள்.

“ஹலோ.”

“வேகமா நம்ம டிப்பார்ட்மெண்ட் ஓடிவா பார்ப்போம்.” யாரென்று குரலை கூட உணராது, மிரட்டிய மாதேஷ் நிச்சயம் பூ வருவாளென்று பதிலை எதிர்பாராது துண்டித்திருந்தான்.

திரையில் பெயரை பார்த்த லீலா, மாதேஷ் என்றதும்…

‘இவ்வளவு நேரம் என்ன பேசியிருப்பான்’ என யோசித்தவள் இறுதியாக அவன் சொல்லியதை நினைத்து… ‘எதையோ சொல்லி மிரட்டி வரவழைத்திருக்கிறான்’ என யூகித்தாள்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்” என்ற லீலா விடுதியிலிருந்து மெல்ல நடந்து சரக்கொன்றை மரத்தின் கீழ் வந்து பூவுக்காகக் காத்திருந்தாள்.

லீலாவுக்கு பூவை தனித்து விடவும் பயமாக இருந்தது. அதனாலேயே அவளது துறைக்கு அருகில் வந்து நின்றாள்.

கல்லூரிவிட்டு வெகு நேரமாவதால் வளாகமே வெறிச்சோடி இருந்தது. பயந்தபடி வேகமாக ஓடிவந்த பூ தன்னுடைய துறையின் வாயிலில் தான் சற்று இளைப்பாறினாள். கீழ் குனிந்து கைகளை கால்களில் குற்றி மூச்சு வாங்கிட அவளின் முன் இரண்டு கால்கள் வந்து நின்றன.

“என்மேல அவ்வளவு லவ்வா பேபிம்மா… நான் கூப்பிட்டேன்னு இப்படி ஓடிவர” என்றவன் அவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டினான்.

“ச்சீய்” என்று போத்தலை தட்டிவிட்டவள்,

“கிறுக்குத்தனமா நீயெதுவும் செஞ்சிடக்கூடாதுன்னு தான் ஓடிவந்தேன். வேறெதுவும் நீயே கற்பனை பண்ணிக்காத” என்ற பூ திரும்பி செல்ல பார்க்க…

அவளின் கையை இறுக்கமாக பிடித்திருந்தான்.

“ஹேய்… என்ன பன்ற? கையை விடு… விடுடா!” என்று பூ எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

“உன்னை மைண்டால் டச் பண்ணனும் தான் இத்தனை நாள் காத்திருந்தேன். பட் அது முடியாது போலிருக்கே. அதான், நான் வேற பிளான் பண்ணிட்டேன். அதாவது பிசிக்கல் டச், அப்புறம் எப்படி என்னை பிடிக்காமல் போகுதுன்னு பார்கிறேன்” என்றவன், அவன் வார்த்தைகளை பூ கிரகிக்கும் முன்னே தான் பிடித்திருந்த பூவின் கையை வளைத்து அவளை சுற்றி திருப்பி… அவள் முதுகோடு சேர்த்து அணைத்தபடி தனக்குள் கொண்டு வந்திருந்தான்.

பூ தன்னால் முடிந்தவரை திமிரிட… அவளால் அவனது பிடியை சிறிதும் உதறிட முடியவில்லை. அத்தனை வலுவாக இறுக்கமாக பிடித்திருந்தான்.

உடல் மொத்தமும் அவனது பிடியில் இருக்க… தன்னுடைய மொத்த திடத்தையும் அந்நேரம் மொத்தமாகத் தொலைத்திருந்தாள் பூ.

“விடு ப்ளீஸ்… விடுடா” என்று தன் கால்களை வளைத்து அவனது காலில் உதைத்தவளுக்கு கண்ணீர் பொங்கியது. அவளது முயற்சி வீண் என்றானதும்.

அவனது அழுத்தமான பிடியில் அருவருப்பாக உணர்ந்தவளுக்கு மனம் முழுக்க பயம் பீடித்தது. இன்னும் என்ன கிறுக்குத் தனங்கள் எல்லாம் செய்வானோ என்று. வெளிப்படையாக அவளின் நடுக்கம் அவன் உணர்ந்தான்.

“என்கிட்ட என்ன பயம் பேபிம்மா உனக்கு. நான் உன்னை எதுவுமே பண்ணமாட்டேன், ஒரே ஒரு கிஸ் தான். அப்புறம் என் லவ்வுக்கு எஸ் சொல்லிட்டு நீ போய்க்கிட்டே இரு” என்றவன் தன்னுடைய முகத்தை பூவின் தோள்பட்டையில் அழுந்த பதித்தான்.

“ச்சீய்” என்று பூ முகத்தை சரிக்க…

“என்னடி ரொம்ப சீன் போடுற?” எனக் கேட்டவன், “அந்த பாரி முதுகுல ஒட்டிகிட்டுக்கு பைக்ல ஊர் சுத்தும்போது மட்டும் சந்தோஷமா இருக்கோ” என்றவன் தன் தாடை பதிந்திருந்த இடத்தில் முத்தம் வைக்க முற்பட… எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ அவனது பிடியிலிருந்து விலகியிருந்தாள்.

“யாரை யாரோட கம்பேர் பன்ற? என் வேந்தன் பக்கத்தில் நிற்கக்கூட ஒரு தகுதி வேணும்” என்று அவ்வளவு நேரமிருந்த பயம் தொலைத்து பாரியை ஒன்று சொன்னதும் சீறியிருந்தாள்.

கிழே விழுந்தவன் எழ… பூ அங்கிருந்து ஓட முயற்சித்தாள்.

முயன்றாள் அவ்வளவே… அதற்குள் அவளை எட்டி பிடித்திருந்தான். இப்போது நேராகவே அவளை தன் கட்டுக்குள் பிடித்து வைத்தவன்… அவளின் கன்னம் நோக்கி முகத்தை கொண்டு செல்ல…

பின்னந்தலையில் சுரீரென்று உணர்ந்த வலியில் கீழே சரிந்திருந்தான்.

பூ வர தாமதமாக… எங்கே என்று தேடிக்கொண்டே வந்த லீலா மாதேஷின் செயலைக்கண்டு அதிர்ந்து நின்றது ஒரு கணம் தான். அடுத்தநொடியே சத்தமில்லாது வகுப்பிற்குள் சென்று நாற்காலி ஒன்றை தூக்கி வந்தவள் அவனின் முதுகை பதம் பார்த்தாள். நாற்காலியின் முனை அவனின் தலையில் நன்கு தன் தடத்தை பதிக்க… வலியில் மொத்தமாக சுருண்டிருந்தான்.

அந்நேரத்தை பயன்படுத்தி… எங்கே தனக்கு முத்தம் கொடுத்துவிடுவானோ என்று பயத்தில் சிலையென நின்றவளை உலுக்கி விடுதிக்கு இழுத்து வந்திருந்தாள் லீலா.

இன்னமும் பூவிற்கு நடுக்கம் குறையவில்லை. கண்ணீர் அதுபாட்டிற்கு கன்னம் தாண்டி வழிந்தோடிக் கொண்டே இருந்தது.

லீலா பூவின் அருகில் அமர… அவளைத் தாவி அணைத்துக்கொண்டாள்.

“அவன் மிரட்டிக்கூப்பிட்டா தனியா போயிடுவியா?” லீலா பூவின் மடத்தனத்தை நினைத்து சினம் கொண்டாள்.

“லீ… லீ… உடம்பெல்லாம் பூச்சி ஊறுற மாதிரி இருக்கு. மேலெல்லாம் எரியுது லீ” என்று தன் கை முகமென்று துடைத்த பூ வேகமாக தேய்த்தாள்.

“ஹேய் தமிழ்… ஒண்ணுமில்லை” என்று அவளை லீ அணைக்க முற்பட,

வேகமாக குளியலறை புகுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஆடை மாற்றி வந்தவள்…

“நீ மட்டும் வரலைன்னா…” அஞ்சி நடுங்கியவள் அழுகையில் வெடித்தாள்.

“தமிழ்… தமிழ்… ஒன்னுமில்லை. இங்கு பார் தமிழ். என்னைப்பார் தமிழ், நான் வரலன்னாலும் எதுவும் நடந்திருக்காது. நீயே அவனை ஒருவழி செய்திருப்ப ” என்று தனக்குள் பூவை பொத்தி வைத்துக்கொண்ட லீலா அவளின் முதுகை மெல்ல நீவினாள்.

நேரம் கடந்தபோதும்… பூவின் அரற்றல் நிற்கவேயில்லை.

லீலாவும் பல விதங்களில் சமாதானம் செய்யவும் பூவின் பயம் மட்டும் தெளியவில்லை.

இன்னமும் மாதேஷின் பிடியில் இருந்ததும், அவன் முத்தம் பதிக்க முயன்றதுமே நினைவில் ஆட… கன்னத்தை பரபரவென்று தேய்த்தாள்.

“டேய் தமிழ்… ஒன்னுமில்லை” என்று பூவை தடுத்த லீலா… “நான் பாரிக்கு கால் பன்றேன், நீ வீட்டுக்கு போ” என்று அலைபேசியை எடுக்க பூ சட்டென்று அலைபேசியை பிடுங்கி அவளை தடுத்தாள்.

“என்ன தமிழ்?”

“அம் ஓகே லீ. வேந்தாக்கு எதுவும் தெரியக்கூடாது.” அவ்வளவு நேரம் அழுதுக்கொண்டிருந்த பூவா இதென்று லீலாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

பாரியென்றதும் தன்னை சடுதியில் மீட்டிருந்தாள். பாரி உடனிருந்திருந்தால் எப்படி ஆறுதல் அளித்திருப்பான் என்று நினைத்தவள், தன்மீது தவறில்லாத பட்சத்தில் தான் ஏன் அழ வேண்டுமென சுயம் மீண்டிருந்தாள்.

“அப்போ அந்த மாதேஷை சும்மா விடச்சொல்றியா?”

“வேந்தனுக்கு தெரிஞ்சா கோவத்துல எதாவது செய்து வைப்பான். அது அவனோட(பாரி) படிப்புக்கு பிரச்சனை ஆகிட்டா? அதுக்குத்தான் சொல்றேன் அவன்கிட்ட நீ சொல்லக்கூடாது. இதை இத்தோட விட்ருவோம்.”

“மாதேஷ் விடுவான்னு எனக்குத் தோணல.”

“பரிதி மாமாகிட்ட சொல்லி பொறுமையா அவனை டீல் பண்ணிக்கிறேன்” என்ற பூ இரவு உணவைக்கூட தவிர்த்தவளாக படுத்துவிட்டாள்.

என்ன தான் பூ லீலாவிடம் தன்னை திடமாகக் காட்டிக்கொண்டாலும் நடந்த நிகழ்வு அவளை வெகுவாக பாதித்திருந்தது. இரவு முழுக்க லீலாவின் கவனத்தை ஈர்க்காது அழுகையில் கரைந்தாள். அதன் விளைவு அவளை காய்ச்சலில் தள்ளியது.

மறுநாள் லீலாவே பூவை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று சொல்லிட… பூவாலும் படுக்கையிலிருந்து எழவே முடியவில்லை.

“என்ன பண்னுது?” என்று அருகில் வந்த லீலாவையும் பூ தன்னை தொட அனுமதிக்காது விலக்கி வைத்தாள்.

நேற்றைய நிகழ்வின் தாக்கமென்று நினைத்த லீலாவும் கல்லூரிக்கு விடுப்பு அளித்து உடனிருக்கேன் என்க நிர்தாட்சண்யமாக மறுத்து அடம்பிடித்து அவளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தாள்.

நடந்ததை பூ விவரித்து முடிக்க…

அருகிலிருந்த பிளவர் வாஷை சுவற்றில் விட்டெரிந்திருந்தான் பாரி. அது சுக்கு நூறாக சிதறியது.

“இதுக்குத்தான் இந்த கோவத்துக்குத்தான் உன்கிட்ட சொல்லல” என்ற பூவின் முகம் பார்ப்பதை தவிர்த்தவனாக தன்னுடைய அறைக்குள் புகுந்தவன் காலாலே கதவினை வேகமாக அடித்து சாற்றினான்.

“ஆரம்பத்திலே சொல்லியிருந்தா, இவ்வளவு தைரியம் அவனுக்கு வருமளவிற்கு விட்டிருக்கமாட்டோமே தமிழ்.” என்னிடம் கூட நீ சொல்லவில்லையே என்கிற பரிதியின் உள்பொதிந்த அர்த்தம் பூவிற்கு விளங்கத்தான் செய்தது.

“அவன் விஷயத்தை நான் பொருட்டாவே நினைக்கல மாமா” என்றிட,

“பாரி பண்ணது சரிதான்” என்றான் பரிதி.

“அப்போ அவனை அடிச்சது சரின்னே வச்சிக்குவோம். அவன் படிப்பை முடிக்க விடாம செய்றது சரியா மாமா. இதனால் அவன் மட்டும் பாதிக்கப்படப்போறதில்லை. வருங்காலத்தில் அவனை நம்பி அவன் குடும்பம் இருக்கலாமே!”

“அப்போ அவனை சும்மா விட சொல்றியா? நானா இருந்திருந்தா வெட்டி போட்டிருப்பேன். யார் வீட்டு பொண்ணு மேல கையை வச்சிருக்கான்.” கோபத்தின் உச்சியில் சீறியது பார்வதி.

“அத்தை நீங்களுமா?” பூவுக்கு ஆயாசமாக வந்தது. ஒருவன் செய்த தவறுக்கு அவனின் வருங்காலத்தை பாதிக்கும் தண்டனையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறைக்குள் நுழைந்த வேகத்தில் வெளியில் வந்த பாரி…

“அவன் இனி காலேஜ் வர முடியாதுன்னு தான் சொன்னேன். எக்ஸாம் வந்து எழுதலாம்” என்று அதே கோபத்தோடு மொழிந்தவன், “நீ அன்னை தெரசாவுக்கு பேத்தியாவே இரு. ஆனால் என்னால முடியாது. என் பூவோட நிழலை ஒருத்தன் தப்பா தொட்டாலும் அவனுக்கு கை இருக்காது” என்று விரல் நீட்டி கூறியவனின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.

பரிதி தான் அவனை அமைதிப்படுத்தினான். ஆனாலும் பாரிக்கு உள்ளுக்குள் கோபம் புகைந்து கொண்டு தான் இருந்தது.

“உங்களுக்கு எப்படிங்க விஷயம் தெரிஞ்சுது?” பார்வதி தன் கணவருக்கு இதில் எப்படி பங்கு என்பதை தெரிந்துகொள்ள வினவினார்.

பாரி பூவை பரிதியுடன் அனுப்பி வைத்துவிட்டு வாகனங்கள் தருப்பிக்கும் இடத்திற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது, மாதேஷ் அங்கு தன் நண்பனுடன் பேசிக்கொண்டிருப்பதை பாரி தற்செயலாகக் கேட்க நேரிட்டது.

மாதேஷும் அவனின் நண்பனும், பாரிக்கு முதுகு காட்டி வண்டியில் அமர்ந்திருந்தனர்.

“என்ன மச்சி நேத்தும் அந்த தமிழ் உனக்கு மடியில போலிருக்கே” என்று மாதேஷின் நண்பன் சற்று கிண்டல் போல் அவனை சீண்டினான்.

“கடைசி நேரத்தில் அந்த லீலா வந்து சொதப்பிட்டாடா” என்ற மாதேஷ் தன்னுடைய அலைபேசியில் புகைப்படம் ஒன்றை காட்டினான்.

அதை பார்த்த மற்றவனின் கண்கள் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி பாவனையை ஒருங்கே காட்டின.

மாதேஷின் பிடியில் பூ இருந்திட… அவன் அவளின் தோளில் தாடை பதித்த காட்சி நிழலுறுவமாக அலைபேசியில் காட்சியளித்தது.

“யாருடா இதை எடுத்தது?”

“உனக்கெதுக்கு அது” என்று நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாது,

“இதை வச்சு அவளுக்கு நான் கொடுக்கப்போற அதிர்ச்சியில் என் பின்னால தானா ஓடிவருவாள்” என்றவன் எக்களித்தான்.

தமிழ் என்ற பெயர் அடிப்பட்டதாலேயே அவர்களின் பேச்சினை நின்று கவனித்தான் பாரி.

‘என்ன போட்டோ?’ என்று அவர்களுக்கு பின்னால் சில அடிகள் தூரத்தில் நின்றிருந்த பாரி ஓசை எழுப்பாது சற்று முன் சென்று எட்டி பார்த்தவன்… நின்று இடத்திலிருந்து மாதேஷின் முதுகில் உதைத்து அவனை கீழே தள்ளியிருந்தான்.

அதன் பின்னர் நிமிடத்தில் இருவரையும் ஒருவழி செய்தவன், கீழே விழுந்து கிடந்த மாதேஷின்  அலைபேசியை எடுத்தவன் புகைப்படத்தை நன்றாக பார்த்த நொடி… துவைத்து தொங்கவிட்டுவிட்டான்.

“வேறெதும் காப்பி இருக்கா?” என்று அவன் கேட்டிட… மாதேஷ் இல்லை என சொல்லிய போதும், “இனி இந்த மொபைல் உனக்கில்லை” என்றவன் மீண்டும் தன் கோபம் குறைய அவர்களை அடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவி வந்து அவனை தடுத்திருந்தான்.

வீட்டிற்கு வந்தவன் பூவை மருத்துவர் வந்து பார்த்துச் சென்ற பின்னர் சிறிது நேரம் யோசனையில் இருந்தான்.

பரிதி பூவுடனே இருக்க அவனிடம் சொல்லாது, சில நிமிடங்களில் தில்லைக்கு அழைத்தவன் தனக்குத் தெரிந்ததை கூறிட அவருக்கும் மாதேஷின் மீது அத்தனை கோபம் எழுந்தது. அந்த கோபத்தின் சூட்டிலேயே பாரி சொல்லியதை செய்து முடித்திருந்தார்.

புகைப்பட விடயம் பூவுக்கு புதியது. மாதேஷ் கெட்டவன் என்பது தெரியும். ஆனால் இந்தளவிற்கு இறங்கி செய்பவன் என்பது தெரியவில்லை. தெரிந்ததும் அடுத்து அவனின் திட்டமென்பதில் ஸ்தம்பித்து நின்றாள்.

அந்நிலையில் பூவை பார்த்திட பாரியால் முடியாது போக, அவளின் அருகில் சென்றவன்…

“இப்பவும் நான் பண்ணது தப்புன்னு சொல்றியா மலரே?” எனக் கேட்டான். தான் அடித்து சிவந்திருந்த கன்னத்தை வருடியபடி.

நீர் ததும்பும் விழிகளுடன் இல்லையென இருபக்கமும் தலையாட்டியவள் பாரியை இடையோடு கட்டிக்கொண்டாள்.

நடக்க இருந்ததை எண்ணிய பயம் அவளுள்.

“நான் இருக்கும்போது உனக்கு எதுவும் நடக்கவிடமாட்டேன் பூ” என்றவன், பார்வதியை பார்க்க… அவர் அவளை சகஜ நிலைக்கு மாற்றி உணவு உண்ண வைத்தார்.

அவியும் ஜென்னும் கூட அங்கேயே உண்டுவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனர்.

அன்றைய இரவு பூவை தனித்துவிட ஏனோ பாரிக்கு மனமில்லை. அதனால் பூவுடன் படுத்துக்கொள்கிறேன் என்ற அன்னையை தடுத்த பாரி, தான் அவளுடன் தங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டான்.

பகல் முழுக்க உறங்கியபடியே இருந்ததால் பூவிற்கு உறக்கம் வரவில்லை.

பூவின் அறைக்குள் நுழைந்த பாரி மெத்தையில் அமர்ந்திருந்த பூவை கண்டுகொள்ளாது அமைதியாக படுக்கையின் மறுபக்கம் சென்று அவளுக்கு முதுகுக்காட்டி படுத்துக்கொண்டான்.

பூ பாரியின் முதுகையே வெறித்திருந்தாள்.

அந்நேரம் பாதி திறந்திருந்த கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த பரிதி… பூவிடம் மாத்திரை போட்டுவிட்டாயா எனக்கேட்டு அவளின் உடல் சூட்டை தொட்டு பார்த்து… நலம் அறிந்தான்.

பூ பரிதியிடம் பாரியை நோக்கி கண் காட்டினாள். தன்னிடம் பேச வைக்குமாறு.

புரிந்துகொண்ட பரிதி,

“இன்னும் என்னடா உனக்கு, கோபம் போகலையா?” என பாரியிடம் கேட்டவன், “என்ன இப்போ தமிழ் உன்கிட்ட சாரி சொல்லணுமா?” என்றான்.

பாரியிடம் அசைவில்லை.

“நீ தூங்கலன்னு தெரியும் பாரி.”

“அச்சோ பரிதிண்ணா இப்போ என்ன?” என்றவன் எழுந்தமர்ந்தான்.

“கோபப்படாதா பாரி, அவள் தான் காரணம் சொல்லிட்டாளே!” என்றான் பரிதி.

“இது மறைக்கிற விஷயமா பரிதிண்ணா. லீலா சரியான நேரத்துக்கு போகாம இருந்திருந்தா, தனியா இவளால் சமாளிச்சிருக்க முடியுமா?” என்று கேட்டவனுக்கு அந்நொடியும் நடந்ததை எண்ணி விரல்கள் நடுங்கின.

“இவளுக்கு ஒண்ணுன்னா என்னை யோசிச்சாளா பரிதிண்ணா. என்கிட்ட சொல்லணுங்கிறதைவிட மறைக்கணுன்னுதான் அவ்ளோ யோசிச்சிருக்கா. ஆரம்பத்திலே சொல்லியிருந்தா அவன் இவ்வளவு பண்ண விட்டிருக்கமாட்டேன். அப்போவே ஒரு முடிவு பண்ணியிருப்பேன். ரெண்டு மூணு வருஷமாவே மறைச்சிருக்காள். இனி இந்த மாதிரி எதையும் மறைக்கணும் நினைக்கக்கூடாது இல்லையா அதுக்குத்தான் இந்த கோபம்” என்றவன் மீண்டும் படுத்துவிட்டான்.

“அவன் சொல்வதும் கரெக்ட் தானே குட்டிம்மா” என்ற பரிதியை பூ முடிந்த மட்டும் முறைத்தாள்.

அந்நேரம் பாரியின் அலைபேசி ஒலிக்க, எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவன் இன்னும் அங்கேயே அமர்ந்திருக்கும் பரிதியை ஒரு பார்வை பார்த்திட்டு படுத்துவிட்டான்.

“தனியா போய் பேசுறளவுக்கு பெர்சனல் இருக்கா பாரி உனக்கு?” பரிதிதான் கேட்டிருந்தான்.

“லவ்வர்கிட்ட… இப்படி அண்ணா முன்னாடியும், பிரண்ட் முன்னாடியுமா பேச முடியும் மாமா?” என்று கேள்வி கேட்பதுபோல் பரிதியிடம் பாரியின் காதல் விடயத்தை பாரிக்கு முன்பாகவே போட்டுக் கொடுத்திட்டாள். ஏற்கனவே பூ பரிதியிடம் சொல்லியிருந்தாலும், அது பாரிக்கு தெரியுமென்றாலும்,

பரிதி இப்போதுதான் தெரியும் என்பதைப்போல் முகத்தில் அதிர்ச்சி பாவனையைக் காட்டி…

“அண்ணாகிட்டவே சொல்லலை பார்த்தியா?” எனக் கேட்க…

அவனோடு சேர்த்து,

“இந்த அம்மாகிட்டயும் சொல்லவேயில்லை பார்த்தியா?” என்ற பார்வதியின் குரலும் ஒலித்தது.

அடித்து பிடித்து போர்வையை விலக்கி எழுந்தமர்ந்த பாரி… இடுப்பில் கைகுற்றி நின்ற பரிதியையும், கையில் பால் தம்ளர்கள் அடங்கிய ட்ரேவுடனும் நின்றிருந்த அன்னையையும் ஏறிட்டவனின் பார்வை பூவில் முடிந்தது.

“பொண்ணு நேம் என்னடா?” பரிதி.

“அழகா இருப்பாளாடா?” பார்வதி.

நெற்றியில் தட்டிக்கொண்ட பாரி,

“பையன் லவ் பன்றான்னு தெரிஞ்சால் இதெல்லாம் தப்புன்னு சொல்லுற அம்மாவைத்தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இப்படி கேட்பீங்கன்னு நிச்சயம் நான் எதிர்பார்க்கல” என்ற பாரியை தொடர்ந்து…

“நானும் தான்” என்று வந்தார் தில்லை.

“அவங்களை மாதிரியெல்லாம் நானில்லை” என்றவர்,

“பொண்ணு உன் கிளாஸேவாடா, போட்டோ இருந்தால் காட்டு பார்க்கலாம்” என்றார்.

“நல்ல குடும்பம்” என்று இழுத்து சொல்லிய பாரி… “நியாயமா ஒரு அப்பாவா நீங்க சொல்லியிருக்க வேண்டிய டயலாக் என்ன?” எனக்கேட்டு “அண்ணன் எப்படி பொறுப்பா இருக்கான், உனக்கென்னடா படிக்கும்போதே லவ் அதிதுன்னு” என கடுப்பாக மொழிந்ததோடு “நான் லவ் பண்றன்னு சொன்னவகிட்டவே கேட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டான்.

பார்வதி பூவை பிடித்துக்கொண்டார்.

பெயரில் ஆரம்பித்து, யார் ப்ரோபோஸ் செய்தது எப்படி என்ன ஏதென்று அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

பூவிற்கு அவரின் ஒவ்வொரு கேள்வியும் உள்ளுக்குள் தன்னுடைய காதலை எண்ணி வலியை கொடுத்தபோதிலும் இன்முகமாகவே பதில் சொன்னாள்.

பார்வதி தன் கேள்விகளை நிறுத்துவதாக இல்லை.

ஒரு கட்டத்தில்,

“அவன்கிட்ட சொல்லுங்க அத்தை வீட்டுக்கே கூட்டிட்டு வருவான்” என்று பூ சொல்லியபிறகே பார்வதி அவளைவிட்டார்.

அவ்வளவு நேரமும் பரிதி பூவைத்தான் கவனித்திருந்தான்.

என்னதான் சிரித்த முகமாக பார்வதிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், அவளின் முகத்தில் ஏதோவொன்று குறைவது போல் உணர்ந்தான்.

அது தங்கள் இருவருக்குமிடையில் அமிர்தாவால் பிரிவு வந்திடுமோ என்று பூ அன்று சொல்லியதன் பயம் இப்போதும் இருக்கிறதென்று எண்ணிய பரிதி…

“புது ரிலேஷன்ஷிப்பால் உங்களுக்குள்ள எதுவும் கேப் வந்துடாதே?” என பாரியை பார்த்துக்கொண்டே அர்த்தமாக வினவினான்.

விலுக்கென பரிதியை ஏறிட்ட பாரி…

“இது உங்களுக்கு வந்திருக்கும் டவுட்டா இல்லை உங்க குட்டிம்மாவின் டவுட்டா?” என வினவினான்.

பூ பாரியை நோக்கினாள்.

“சில விஷயங்களை அப்படியே நம்பணும். விளக்கம் கொடுக்க நினைச்சா திருப்தி அடையவே முடியாது” என்றான் பாரி.

“பூ என்னோட நிழல்.” அத்தனை அழுத்தம் அந்த குரலிலும், வார்த்தையிலும்.

“எங்களுக்குள்ள வருவது யாரா இருந்தாலும், எங்களை புரிஞ்சிக்கிட்டவங்களா மட்டும் தான் இருப்பாங்க. உங்களைப்போல” என்று தன் குடும்பத்தோடு பூவின் குடும்பத்தையும் சேர்த்துக் கூறினான்.

********

நாட்கள் வேகமாக விரைந்தது.

நான்காம் வருடத்திற்கான முதல் பருவத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

அவியும் ஜென்னும் யாருக்கும் அறியாது தங்களுடைய காதலை வளர்த்த அதே சமயம், அமிர்தா பாரிக்கும் தனக்குமிடையேயான காதலை கல்லூரிக்கே தெரியப்படுத்தியிருந்தாள்.

பூவிற்காக தன்னுடைய காதலை பாரி முறித்துக்கொள்வானோ என்றே அதற்கேற்றவாறு அமிர்தா நடந்துகொண்டாள்.

“காதல் நமக்கானது. அதை இப்படி தம்பட்டம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை” என்று பாரி பிறர் கண்களை உறுத்தாதவாறு நடந்துகொண்டாலும் அமிர்தாவிடம் அதெல்லாம் எடுபடவில்லை.

அன்று பூவை காணாது அவன் தவித்ததில் அமிர்தாவிற்கு ஒன்று விளங்கியது. அது எச்சூழ்நிலையிலும் யார் வந்தாலும் பாரி பூவை விடுவதென்பது நடக்காத ஒன்று என்று.

பூவால் தான், அன்று ரித்தேஷை பார்க்க முடியாது போனது என்ற எண்ணத்தில் அமிர்தா பூவிடம் வெளிப்படையாகவே தன்னுடைய கோபத்தை காட்டத் துவங்கியிருந்தாள்.

பாரி கவனித்துக் கேட்க முற்படும்போதெல்லாம் பூ தான் அவனைத் தடுத்துக்கொண்டிருக்கிறாள்.

“எல்லாம் உனக்காத்தான். தான் விரும்பும் ஆண் வேற ஒரு பொண்ணோட நட்பாவே இருந்தாலும் நெருக்கமா பழகுறது எந்த பெண்ணிற்குத்தான் பிடிக்கும்” என்று.

“நம்மைப்பற்றி தெரிஞ்சுதான…”

“டோன்ட் ஆர்க்யூ வேந்தா.”

பாரியின் வாக்கியத்தை முடிக்கவிடாது சலிப்பாகக் கூறினாள்.

அமிர்தாவின் பக்குவமில்லா நடவடிக்கைகள் பூவை அதிகம் சோர்வடையச் செய்திருந்தது. அதனால் அதைப்பற்றி மேலும் மேலும் விவாதிக்க அவளுக்கு உடன்பாடில்லை.

பூவின் வருத்தம் பாரிக்கும் வருத்தத்தைக் கொடுக்க… இதைப்பற்றி அமிர்தாவிடம் பேச வேண்டுமென நினைத்துக்கொண்டான்.

“சில் மலரே… ஒழுங்கா எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ணு” என்றவன் அன்றைய தேர்வு முடிந்ததும் அமிர்தாவிடம் பேசினான்.

“பூ மேல உனக்கென்ன கோபம் அமிர்தா?” எவ்வித மறைமுக வார்த்தைகளுமின்றி நேரடியாகவேக் கேட்டிருந்தான்.

இதற்குமேலும் நடிக்க முடியாது உண்மையை கூறிவிடலாம் என்று நினைத்த அமிர்தா…

“அவளை எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று அவ்விடமே அதிர கத்தினாள்.

பாரியிடம் அதிர்வெல்லாம் இல்லை. இதை அவன் காதலிப்பதாகக் கூறிய சில நாட்களில் கண்டுகொண்டான். ஆனால் தான் பிறர் பார்வையில் ஏமாற்றுக்காரனாகிவிடக் கூடாது என்பதற்காகவே அமிர்தாவின் மீதிருந்த காதலை முறிக்கவில்லை. நாளானால் புரிந்துகொள்வாள் என்று பொறுமையாக இருந்தான்.

ஆனால் அது எத்தனை வருடங்கள் ஆனாலும் நடக்காது என்பது தற்போது அமிர்தாவின் முகத்தில் தெரியும் வெறுப்பு அவனுக்கு உணர்த்தியது.

“எங்களோட பிரண்ட்ஷிப் தெரிஞ்சுதான லவ் பண்ண?”

“நான் லவ் பண்றது உன்னை. உன் ஃபிரண்ட்ஷிப்பை இல்லை” என்று உடனடியாகக் கூறியவள்,

“நீ அவளை கேர் பன்றது பார்த்துதான் உன்மேல காதல் வந்துச்சு. ஃபிரண்டையே இப்படி பார்த்துகிறானே, அவளுக்குன்னு வரப்பொண்ணை எப்படி பார்த்துப்பான்னு… ஆனால் இப்போ, எனக்கு அவள் பின்னாலே நீ பூ..  பூன்னு… சுத்துறது பிடிக்கல” என்றாள். அப்படியொரு ஆங்காரம்.

“ஓகே உன்னுடைய கோபம் எதுவா இருந்தாலும் என்கிட்ட காட்டு. இனி பூவை தொந்தரவு செய்யாத” என்றான்.

“இப்போக்கூட அவளுக்காகத்தான் பேசுற” என்ற அமிர்தா அங்கிருந்து சென்றிருந்தாள்.

பாரிக்கு அடுத்து என்னவென்றே புரியவில்லை. அவனால் நிச்சயம் அவனது நட்பை விட்டுக்கொடுத்திட முடியாது.

தன்னுடைய புருவத்தை கீறியவனாக அவன் யோசனையில் நின்றிருக்க… அவி அவனது தோள்மீது கை வைத்தான்.

“அவசரப்பட்டுட்டேன் தோணுது அவி” என்றான். பாரி முற்றிலும் உடைந்திருந்தான்.

“அப்போ வேண்டாம் சொல்லிடு பாரி. இப்படி கஷ்டப்பட்டு அந்த லவ் தேவையா?” என்றான் அவி.

“லவ் ஒருமுறை தான் அவி” என்ற பாரியிடம் கசந்த முறுவல்.

“இந்த காதல் எனக்கு பூ மீதே வந்திருக்கலாம்தான அவி” என்று ஏதோ அழுத்தத்தில் தன்னைப்போல் கேட்டவன், “நான் இப்படி நினைப்பதுக்கூட பூவோட நட்புக்கு செய்யுற துரோகம்” என்று தன் தலையில் தானே தட்டிக்கொண்டான்.

அன்றைய இரவு அவி பூவிற்கு அழைத்திருந்தான்.

பாரிக்கும் அமிர்தாவுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையைக் கூறியவன்,

“அவன் உன் சம்மதம் கேட்டப்போ… நீ மறுத்திருக்கலாம் தமிழ்” என்றான் வருத்தமாக.

“நான் எனக்காக சொல்லியிருக்க மாட்டேன் அவி” என்ற பூ பாரிக்கும் அமிர்தா மீதிருந்த ஈர்ப்பைக் கூறினாள்.

“இருந்தாலும் நீ மறுத்திருந்தா பாரி அமிர்தாவை ஏத்திருக்கமாட்டான். இத்தனை வருஷ பழக்கத்தில் அவனை நான் இப்படி பார்த்ததே இல்லை தமிழ்” என்றான் கலங்கிய குரலில்.

“நான் என்ன சொன்னாலும் கேட்பான் அப்படின்னு, அவனுக்கு பிடிச்ச ஒன்னை மறுக்கிறது சரியிருக்காது அவி. நட்புங்கிற பேர்ல அவனை எனக்குள்ள பிடிச்சு வச்சிக்க நான் நினைக்கல.

விட்டுக்கொடுக்கிறது தான் ஒருத்தர் மேல நாம வச்சிருக்கும் அன்பின் அதிகபட்ச வெளிப்பாடுன்னு நான் நினைக்கிறேன். நான் அதைத்தான் செய்தேன்.

அவனுக்காக அவனையே விட்டுக்கொடுக்கிறதில் எனக்கு சந்தோஷம் தான்.”

இறுதி வாக்கியத்தை தன்னை அறியாது சொல்லிய பூ, சொல்லிய பின்னரும் அதன் பொருளை அறியவில்லை.

ஆனால் அவிக்கு கேட்டதோடு அதன் பொருளும் புரிந்தது. மேற்கொண்டு அவன் ஏதும் கேட்காதபடி அனைத்து வினாக்களுக்குமான பதிலும் அந்த வரியிலேயே கிடைத்திட அவி அமைதியாகிவிட்டான்.

“சரியாகிடும் அவி, அமிர்தாவுக்கு என்னைத்தான் பிடிக்காது. வேந்தனை ரொம்பவே பிடிக்கும்” என்றாள் விரக்தியாக.

*****

கடைசி தேர்விற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அமிர்தா பாரியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

ராயப்பனுடன் ரித்தேஷ் இருக்க நிச்சயம் தன் காதலுக்கு மறுப்பிருக்காது என்று அதீத நம்பிக்கையுடன் பாரியை அழைத்து வந்திருந்தாள்.

அமிர்தா முன்னரே ரித்தேஷிடம் தெளிவாகக் கூறியிருந்ததால் தந்தையிடம் அவள் சொல்லுமாறு சூழ்நிலை இல்லை.

பாரியை பார்த்த ராயப்பன்…

அவனை வாவென்று கூட அழைக்கவில்லை.

தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் ரித்தேஷை கைகாட்டி…

“அமிர்தா படிப்பை முடித்ததும், ரித்தேஷுக்குத்தான் கட்டி வைக்கப்போறேன். ரித்தேஷ் தான் என்னுடைய அரசியலுக்கும் சரியா இருப்பான்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ரித்தேஷ் அமிர்தாவிடம் இது தனக்கும் புதிய செய்தி என்பதைப்போல் காட்டிக்கொண்டு, தான் பேசி சம்மதிக்க  வைப்பதாகக்கூறி அவள்முன் அவளுடைய காதலுக்கு துணை நிற்பதாகத் தன்னைக் காட்டிக்கொண்டான்.

அவனின் திட்டம் வேறல்லவா!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. லூசுங்க பாரி பூ