Loading

“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்ற ஐயர் கை காட்ட, தாலியை வாங்கி மூன்று முடிச்சிட்டான் அமரன்பன்.

அமரன்பன் சுகந்த பிரியாவின் திருமணம் இனிதே முடிவடைந்தது. அமர் தாலி கட்டி பொட்டு வைத்ததும் பிரியாவின் முகத்தில் சந்தோசம் நிறைந்தது.

திருமணத்திற்கு பிரியா சம்மதித்த நாளில் இருந்து ஏகப்பட்ட தடபுடல்களோடு திருமண வேலைகள் தொடங்கியது.

அமருக்கு பெரியவர்களாக இருந்து செய்ய ஆளில்லை என்பதால் அனைத்தையும் வளவனும் கயலுமே கவனித்தனர்.

அவர்களது உதவிக்கு ஈவண்ட் மேனேஜ்மண்ட் ஆட்களை அழைத்து துணையாக நிறுத்தியதோடு அமர் ஒதுங்கிக் கொண்டான்.

மகளுக்கு எப்படியெல்லாமோ திருமணம் செய்ய ஆசைப்பட்ட வளவன் அதை எந்த தொந்தரவும் இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டார்.

அமருக்கோ மனம் முழுவதும் பரவசம் நிறைந்திருந்தது. அவனுடைய சுகி அவனுக்கே கிடைத்து விட்டாளே. அதை விட வேறென்ன வேண்டும்? அதற்கு அவன் எத்தனையோ வழிகளை கையாண்டாலும் நோக்கம் நிறைவேறி விட்டது.

பிரியா அமரின் காதலில் மூழ்கி மூச்சுவிடவும் மறந்தாள். பல வருடமாக தன்னை காதலித்தும் தன்னிடம் கண்ணியமாக நடந்து கொண்ட அமரின் மீது கொள்ளை கொள்ளையாய் அன்பு பெருகியது.

இருவரும் சடங்குகளை முடித்து விட்டு வந்தவர்களை வழியனுப்பி விட்டு கிளம்பினர்.

நேராக பிரியாவின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த சம்பிரதாயங்களை முடித்து விட்டு அமர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

தாத்தா மற்றும் பரமேஸ்வரியின் படத்தின் முன்பு பிரியா விளக்கேற்ற அமருக்கு பெருமையில் நெஞ்சம் விம்மியது. அவன் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டான் அல்லவா?

‘ம்மா.. உங்க மருமக வந்துட்டா.. என்னோட பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வந்துட்டா… தாத்தா.. நான் சொன்ன மாதிரி அவள கூட்டிட்டு வந்துட்டேன்..’ என்று அமர் மனதில் அவர்களோடு பேச பிரியா விளக்கேற்றி கும்பிட்டாள்.

அவளது மனதில் அவளது குரு அவளை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

நேரம் பறந்து சொந்தங்கள் விடை பெற்றுச் சென்று விட, அமர் பிரியாவோடு அவளது பெற்றோர்கள் மட்டுமே தங்கினர்.

பிரியா அமரின் அறைக்குள் நுழைந்ததும் உடனே கதவை பூட்டிய அமர், அடுத்த நொடி பிரியாவை இரண்டு கையாலும் தூக்கிக் கொண்டான்.

“அன்பு என்ன பண்ணுறீங்க?” என்று அவள் கேட்டும் போதே சுற்ற ஆரம்பித்தான்.

“ஃபைனலி.. என் பொண்டாட்டியா என் கைக்கு வந்துட்ட… செம்ம ஹாப்பியா இருக்கு தெரியுமா” என்று கூறி சுற்ற பிரியா சிரிக்க ஆரம்பித்தாள்.

“போதும் போதும்.. தலை சுத்த போகுது” என்று அவள் சொன்ன பிறகே நிறுத்தியவன் அவளோடு மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“எப்படி ஃபீல் பண்ணுற சுகி?”

“ஹாப்பியா ஃபீல் பண்ணுறேன் அன்பு” என்று அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“லாஸ்ட் டைம் நீ இந்த ரூம்க்கு வந்தப்போ இதே மாதிரி என் வொய்ஃபா வரனும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?”

“அதான் நடந்துடுச்சே.. ஹாப்பி?”

“ரொம்ப”

“நானும் நிறைய ஹாப்பி…”

“காட்டு..”

“எத?”

“உன் ஹாப்பிய காட்டு..”

“அத எப்படி காட்டுறது?”

“இப்ப நான் உன்னை தூக்கி சுத்தி காட்டுனேன்ல? நீயும் அப்படி காட்டு”

“உங்கள நான் தூக்குறதா? நடக்குறத பேசுங்க”

“என்னை உன்னால தூக்க முடியாது தான்.. அதுக்கு பதிலா வேற எதாவது செய்யலாமே”

“என்ன செய்யனும்?” என்று அவள் கன்னத்தில் கை வைத்து கேட்க, அமர் தன் கன்னத்தைக்காட்டினான்.

உடனே சிரித்து விட்டு முத்தமிட்டாள். அமர் மறு கன்னத்தையும் காட்ட அங்கும் முத்தமிட்டாள்.

“இப்ப மிச்சம் இருக்க இடத்துக்கும் கொடு பார்ப்போம்”

“மாட்டனே..” என்று சிரித்தவளை விடாமல் பற்றி கேட்டதையும் கேட்டதற்கு மேலும் வாங்கிக் கொள்ள ஆரம்பித்தான்.

சண்முகி ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள். வாங்கி ஒரு மாதம் தான் ஆகிறது. மகனை பள்ளியில் விடவும் அழைத்து வரவும் அது அவளுக்கு சௌகரியமாக இருந்தது.

குருவை விட்டு விட்டு திரும்பி வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். சாலையில் கவனமாக சென்றவளின் கண்ணில் சுப்பிரமணி விழுந்தான்.

பார்த்ததும் வெறுப்போடு திரும்பிக் கொண்டாள். இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது. சுப்பிரமணியின் துரோகத்திற்கு பின்பு அவனோடு வாழ சண்முகி விருப்பப்படவில்லை என்பதால் நீதிமன்றம் பிரிவை அறிவித்தது.

சுப்பிரமணியிடம் வேலை இல்லாததால் சண்முகியிடமே பிள்ளையை கொடுத்து விட்டனர். சண்முகியின் திருமணத்தின் போது வாங்கிய பணம் நகைகளை திருப்பிக் கேட்க அதுவும் வந்து சேர்ந்தது. அதோடு தாலியை கழட்டி எறிந்து விட்டு நிம்மதியாக வாழ ஆரம்பித்தாள் சண்முகி. அவளது வாழ்வு வேலை மற்றும் மகனை சுற்றியே அமைந்தது. சிவாவின் திருமணத்திற்கு பிறகு தனி வீடு வந்தவள் மற்ற அனைத்தையும் விட்டு பிள்ளைக்காக உழைக்க ஓடினாள்.

சுப்பிரமணி வேறு ஊரில் வேலைத்தேடிச் சென்று விட்டதாக கேள்விப்பட்டாள். அவனது வாழ்வைப்பற்றி அவளுக்கு எந்த அக்கறையும் இல்லை. இப்படி எப்போதாவது கண்ணில் பட்டால் தான் எரிச்சல் வருகிறது. ஆனாலும் அதை உடனே மறந்து விடுவாள். அவள் நினைவில் வைத்துக் கொள்ள கூட தகுதி இல்லாதவன் அல்லவா?

சுப்பிரமணியும் அவளை பார்த்தான் தான். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. அவனது வாழ்வின் அத்தனை சந்தோசங்களையும் பறித்துக் கொண்டவள் என்ற கோபமும் கசப்பும் இருந்தது. இருவரும் வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர்.

திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் தேனிலவு முடிந்து திரும்பி வந்தனர் புதுமணத்தம்பதியினர்.

இனி வேலையை பார்க்க வேண்டும் என்று நினைத்த போதே பிரியாவுக்கு அலுப்பாக இருந்தது.

“உனக்கு பிடிக்கலனா சொல்லு.. கம்பெனில வேற ஆள வச்சுடுறேன்” என்று அமர் கொஞ்ச, “பிடிக்காம இல்ல.. பட் இவ்வளவு நாள் உங்க கூடவே இருந்துட்டேன். ஃப்ரியாவும் இருந்துட்டேன்.. இனி வேலை வேலைனு அதையே பார்க்கனும்” என்று சலித்துக் கொண்டாள்.

“இப்படி பண்ணலாமா? பொறுப்பு எப்பவும் போல உன் கிட்ட இருக்கட்டும்.. மத்தவங்கள வேலை செய்ய விட்ரு.. நீ அப்போ அப்போ வேலை செஞ்சா போதும். பெரிய முடிவுகள மட்டும் எடுத்தா போதும். என்ன சொல்லுற?”

“எனக்கு ஓகே” என்று துள்ளி அவன் மீது விழ சிரித்துக் கொண்டே அவளை தாங்கி அணைத்தான் அமர்.

அடுத்த வாரமே அவளுக்கு வேண்டிய ஆட்களை ஏற்பாடு செய்தான். எல்லாவகையிலும் திருப்தியான பிரியா கணவன் மீது காதலை பொழிந்தாள்.

இரவு வீட்டில் அமர் வேலை செய்து கொண்டிருக்க, பிரியா மேகசின் ஒன்றை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தாள்.

அமர் அவளை நிமிர்ந்து பார்த்து “என்ன பண்ணுற?” என்று கேட்டான்.

“மேகசின் அழகா இருக்கு.. அதான் படம் பார்த்துட்டு இருக்கேன்”

“படம் பார்க்குறியா?” என்று கேட்டு அமர் சிரிக்க “பார்க்க தான படத்த போடுறாங்க?” என்று திருப்பிக் கேட்டாள்.

அமர் சிரிப்பை நிறுத்தாமல் எட்டிப் பார்த்தான். எதோ நகை விளம்பரம் போலும்.

“இது நல்லா இருக்கு..” என்ற பிரியா இரண்டு நொடி பார்த்து விட்டு பக்கத்தை திருப்ப “உனக்கு வேணுமா?” என்று கேட்டான் அமர்.

ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தாள்.

“அது டைமண்ட் அன்பு”

“உனக்கு வேணும்னா சொல்லு.. வாங்கிடலாம்.. டைமண்ட் பிடிக்காதா?”

“எந்த பொண்ணுக்கும் டைமண்ட் பிடிக்காம இருக்காது. எல்லாருக்கும் போட்டுக்க ஆசை இருக்கும். பட் அது காஸ்ட்லிங்குறதால ஆசைய தூக்கி போட்டுட்டு ரசிக்கிறதோட நிறுத்திப்பாங்க”

“மத்த பொண்ணுங்கள பத்தி எனக்கு கவலை இல்ல.. உனக்கு பிடிக்குமா?”

“பிடிக்கும்..”

“நாளைக்கு ஆஃபிஸ் லீவ் தான? போய் வாங்கலாம்…” என்றவன் அந்த படத்தை காட்டி, “இதே வேணுமா?” என்று கேட்டான்.

“நோ நோ.. அங்க போயே டிசைட் பண்ணிக்கலாம்.. ஆனா.. நிஜம்மாவே டைமண்ட் காஸ்ட்லி…”

“என் பேங்க் பேலன்ஸ நீ பார்க்காம பேசுற.. வெயிட்.” என்றவன் தன் வங்கி கணக்கு விவரங்களை எல்லாம் அவளுக்கு போட்டு காட்டியவன் அவனது சொத்து மதிப்பையும் காட்டினான்.

அவனுக்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“அப்படினா.. நான் ஒரு மில்லியனர கல்யாணம் பண்ணிருக்கனா?” என்று அவள் அளவுக்கதிகமாக ஆச்சரியப்பட்டு போலியாக அவன் மீது மயங்கி விழுந்தாள்.

“அச்சோ.. என் பொண்டாட்டி மயங்கிட்டா.. சுகிமா.. எந்திரிடா”

“நோ.. இதுக்கு பேரு பணத்துல மயங்குறது.. இந்த மயக்கம் தெளியாது” என்று கண்ணை மூடிக் கொண்டே பேச, “இத எப்படி தெளிய வைக்கிறதுனு எனக்கு தெரியுமே..” என்றவன் கிச்சு கிச்சு மூட்ட கூச்சத்தோடு சிரிக்க ஆரம்பித்தாள் சுகந்த பிரியா.

அடுத்த நாள் சொன்னது போலவே நகை வாங்க அழைத்துச் சென்றான் அமர். அவனை பார்த்ததும் கடையின் பொறுப்பில் இருப்பவர் மரியாதையாக பேசினார்.

“புதுசா கல்யாணம் ஆகிருந்ததுனு கேள்விப்பட்டேன் தம்பி வாழ்த்துக்கள்.. என்ன பார்க்குறீங்க?”

“மேடம்க்கு டைமண்ட்ல எதாவது வாங்கலாம்னு வந்தோம்”

“மேல இருக்கு தம்பி.. உள்ள போங்க..” என்றவர் ஆட்களை அழைத்து உதவிக்கு அனுப்பினார்.

“இவர தெரியுமா?”

“தாத்தாவுக்கு தெரிஞ்சவுங்க”

பிரியா தலையாட்டி விட்டு நகைகளை பார்க்க ஆரம்பித்தாள். நிறைய வைர நகைகள் இருந்தது. கழுத்தாரம் பார்த்தவள் அதில் இரண்டை தேர்வு செய்தாள்.

“இதுல எத எடுக்கலாம்?”

“ரெண்டுமே நல்லா இருக்கா?”

“ஆமா.. நீங்க ஒன்ன சொல்லுங்க”

“ரெண்டையும் பேக் பண்ணிடுங்க” என்று விட பிரியா அதிர்ந்தாள்.

“ஹேய் ரெண்டெதுக்கு?”

“ஸ்ஸ்.. அந்த தோடு பாரு அழகா இருக்கு” என்றவன் அடுத்ததுக்கு தாவினான்.

பிரியா அவனிடம் சண்டை போடுவதை விட்டு அவன் வாங்கச் சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டாள்.

வைரத்தில் போதாது என்று தங்கத்திலும் சிலவற்றை வாங்கி விட்டு தன் பிஏவை பணத்தை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான்.

பணம் வரும் வரை மற்ற நகைகளை வேடிக்கை பார்த்தனர். பிஏ வந்ததும் பணத்தை வாங்கி பிரியாவின் கையில் கொடுத்தவன், “கட்டிரு.. நான் ஃபோன் பேசிட்டு வர்ரேன்” என்று நகர்ந்தான்.

பிரியா பணக்கட்டை எடுத்து வைக்க, அவளருகே வேறு யாரோ நிற்பது போல் தோன்றியது.

திரும்பிப் பார்த்தவள் உடனே கோபத்தோடு திரும்பிக் கொண்டாள். சிவராமன் தான் நின்றிருந்தான். அவனும் எதோ வாங்க வந்திருக்கிறான் போலும்.

அவனை இத்தனை நாட்களுக்குப் பிறகு பார்க்க வேண்டுமா? சுத்தமாக பிடிக்கவில்லை.

“இந்த செட் தான மேடம்?” என்று அவளிடம் உறுதி செய்ய கேட்க, “ஆமா” என்றதும் பில் போட ஆரம்பித்தனர்.

பணத்தை எண்ணி முடித்து பில்லை கொடுத்த போது அமர் வந்து விட்டான்.

“முடிஞ்சதா?”

“ம்ம்..” என்றவள் திரும்பிப் பார்க்க, சிவா இருந்த இடம் வெறுமையாக இருந்தது.

‘போய் தொலையட்டும்..’ என்று திரும்பிக் கொண்டாள்.

சிவா அங்கிருந்து செல்லவில்லை. அவர்களை பார்த்துக் கொண்டு சற்று தள்ளி நின்றிருந்தான்.

அவன் வாங்க வேண்டிய வெள்ளி தண்டை மற்றும் அரைஞாண் கயிறு இரண்டும் கையில் இருந்தது.

அவனது மகனுக்காக வாங்க வந்திருந்தான். மகன் பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. பேரனுக்கு வெள்ளியில் இதை எல்லாம் உடனே போட்டாக வேண்டும் என்று மருமகனிடம் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டார் ராமமூர்த்தி. அதை வாங்க தான் வந்தான்.

ஆனால் இங்கு இப்படி பிரியாவை பார்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவளை விட்டு பிரிந்த பிறகு இன்று தான் மீண்டும் பார்க்கிறான்.

புதுத்தாலியோடு நிற்கிறாள். அது மட்டுமா? கட்டுக்கட்டாக படத்தை கொடுத்து வைர நகைகளை வாங்கிக் குவிக்கிறாள்.

அவள் வருவதற்கு முன்பே சிவா பில் போட்டு விட்டதால், இப்போது அவன் வாங்கிய பொருளை பையில் போட்டு கொடுக்க தள்ளி வந்து விட்டான்.

பிரியாவோடு அமரை பார்த்த போது அவன் ஆச்சரியப்படவில்லை. ஓரளவு அப்போதே எதிர்பார்த்தது தானே?

அந்த கடையின் பொறுப்பில் இருந்தவரே இருவரையும் தனியாக கவனித்து, எல்லாவற்றையும் கொடுத்து அமரையும் பிரியாவையும் வழியனுப்புவதை பார்த்தான்.

அவனும் வெளியே வர காரில் பிரியா அமர்ந்து கொண்டிருந்தாள். அமர் சுற்றிச் சென்று காரை எடுக்கும் முன்பு சிவாவை பார்த்து விட்டான். அவனையும் மீறி உதடுகளை வெற்றிப்புன்னகையில் வளைந்தது.

ஆனால் அதை சிவா உணரும் முன்பே காரில் ஏறிக் கொண்டு கிளம்பி விட்டான். சிவா பெருமூச்சு விட்டான்.

இது தான் சரியான வாழ்வு. பணத்தில் பிறந்து பணத்திலேயே வளர்ந்தவளுக்கு அமர் தான் சரியான துணை. அதே போல் எத்தனையோ கஷ்டமிருந்தாலும், தாங்கிக் கொண்டு வாழும் சிவாவுக்கு நாதினியை போன்ற அன்பானவள் தான் சரியான துணை.

பைக்கில் பையை பத்திரமாக வைத்ததும் நாதினியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளை நினைத்ததுமே கூப்பிட்டு விட்டாளே. அவனது வாழ்வில் கிடைத்த பெரிய சுகம் நாதினி.

“சொல்லுமா.. வாங்கிட்டு கிளம்பிட்டு இருக்கேன்”

“அத கேட்க தான் கூப்பிட்டேன் ராம். பத்திரமா வாங்க.” என்று விட்டு வைத்து விட்டாள்.

அவளது நினைவு தந்த சுகத்தோடு சிவா கிளம்பி விட்டான்.

பிரியா காரில் ஏறியதிலிருந்து அமைதியா வர, “சுகி.. பசிக்குது.. சாப்பிட்டு வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டான் அமர்.

“அதெல்லாம் வேணாம்.. கார்ல நகை இருக்கு. அதோட வெளிய அலைய கூடாது. நேரா வீட்டுக்கு போய் பத்திரமா வச்சுட்டு அப்புறம் போகலாம்”

“வர வர உன் அத்த மாதிரியே பேசுற நீ.. அவங்களும் இப்படி தான்.. காஸ்ட்லியா எதாச்சும் இருந்தா வெளிய போக கூடாதுனு ஆர்டர் போடுவாங்க”

“அவங்க சிஷ்யை தானே நான்.. அப்படித்தான் இருப்பேன்”

“சிஷ்யையா? மினி வெர்சன் நீ”

“அம்மா மாதிரி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும் அன்பு.. பிள்ளையாரு எவ்வளவு வருசமா வெயிட் பண்ணுறாரு தெரியுமா?”

“அப்ப கடவுளுக்கே கிடைக்காத வரம் எனக்கு கிடைச்சுருக்கு.. லக்கி மேன்டா அன்பு நீ” என்று அவன் காலரை தூக்கி விட, பிரியா வாய்விட்டு சிரித்தாள்.

அந்த சிரிப்பை கேட்ட சுகத்தோடு அவனது சுகத்தையும் தாங்கிக் கொண்டு அமரன்பன் வீட்டை நோக்கிச் சென்றான்.

விதியும் அவரவர் சுகங்களை சரியாக சேர்த்து விட்டு விடை பெற்றுக் கொள்ள நாமும் விடைபெறுவோம்.

நிறைவு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்