Loading

அத்தியாயம் 26

தன்னால் கொல்லப்பட்டவர்களின் தவறுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் முந்தைய தினமே புவித் அகனிகாவின் பெயருக்கு காவல்துறை முகவரிக்கே அனுப்பி வைத்திருக்க, இன்று ரங்கராஜனின் முதல் தவறிலிருந்து, அவன் இறந்த நொடிக்கு முன்னர் வரை செய்திட்ட தவறு வரையிலான யாவற்றுக்குமான ஆதாரங்களை ஒரு கோப்பில் அடக்கி அகனிகாவிடம் கொடுத்திட்டான்.

கோப்பின் அட்டையை திறந்தவளின் விரல்கள் முதல் பக்கத்திலிருந்த புகைப்படத்தைக் கண்டதும் நடுக்கம் கொண்டது.

“நீனா…” ஓசையின்றி உதடுகள் உச்சரிக்க… அவளின் கண்கள் திரண்ட நீர் ஒற்றைத் துளியாக புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் விழுந்து தெறித்தது.

சிரித்த முகமாக அன்றிலலர்ந்த மலராகக் காட்சியளித்தவளின் தோற்றம் பழைய ரணங்களை கண்கள் முன்னே நிழலாய் காட்சிப்படுத்தியிருக்க தொய்ந்து துவள கால்கள் நிலைகொள்ள முடியாது இருக்கையில் தொப்பென்று சரிந்தாள்.

அவளின் உணர்வுகளை அவதானித்தபடி நின்றிருந்த புவித்துக்கு அக்கொடியவனை கொலை செய்த பின்னரும் நெஞ்சம் தணியவில்லை.

ரங்கராஜனுக்கு கிடைத்த இறப்பு வெகு சாதாரணமானது. அவன் நீனா போன்று பல பெண்களுக்கு செய்த கொடூரத்திற்கு அத்தனை எளிதான இறப்புக் கொடுத்திருக்கக் கூடாது.

ஆனாலும் புவித் என்பவன் மென்மையின் விம்பமாயிற்றே! அவனுக்குள் கொலை என்பது தீர்வாகப்பட்டபோதும், அதில் கடுமையை காண்பிக்க முடியவில்லை. அதனாலே ரங்கராஜன் மற்றும் அவன் போன்ற மிருகங்களுக்கு தன்னால் முயன்றளவு அமைதியான இறப்பை தண்டனையாக அளித்திருந்தான்.

“இப்பவும் நான் பண்ணது தப்புன்னு தோணுதா உனக்கு?”

உடல் விறைத்து நின்ற புவித் அழுத்தமாகக் கேட்டிட, மிதமிஞ்சிய வேதனையை விழிகளில் கசியவிட்டவளாக அவனை ஏறிட்டுப் பார்த்த அகனிகா…

“அவனுக்கு சாவு விட அதிகமான தண்டனை இருக்க முடியாது. ஆனால் அவன் சாவு இத்தனை ஈசியா இருந்திருக்க வேண்டாம்” என்றாள்.

“நான் அவன் இல்லையே கனி” என்ற புவித், இடது கண்ணிலிருந்து உருண்ட துளி நீரை சட்டென்று துடைத்திருந்தான்.

“இப்போ நான் என்ன பண்ணனும் தெரியல… அவனுக்கு என் கையால முடிவு எழுதனும்னு தான் உங்களைவிட்டு தள்ளி இருந்தேன். நான் இல்லாம நீங்க இருக்கணும் நினைச்சேன். ஆனால்” என்று நிறுத்தியவள், தொண்டைக்குழி ஏற்றி இறக்கி, “நீங்க இல்லாம நான் எப்படி மாமா?” எனக் கேட்டாள்.

“பக்கத்துல இருந்தும் தூரமாத்தான இருந்தோம். இனி கொஞ்சநாளுக்கு தூரமிருந்து பக்கமிருப்போம்” என்று தன்னுடைய இதயத்தை சுட்டு விரலால் தொட்டு காண்பித்து, அவளின் இதயம் நோக்கி விரல் நீட்டியிருந்தான்.

அகனிகாவுக்கு அவனது காதல் மூச்சு முட்ட வைத்தது. இதுநாள் வரை புதைத்து வைத்த நேசத்தின் தவிப்புகளையெல்லாம் ஒற்றைப் பார்வையில் கிளர்ந்தெழச் செய்தான்.

தன் குடும்பத்தை சிதைத்தவனை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் அவனுடையதாக இருந்தாலும், அவனுள் பெரும் காரணமாய் இருந்தது அவள். அவளுக்காக, அவள் மீண்டு வருவதற்காக, அவளின் தேடலை முற்றுப்பெற வைப்பதற்காக, பார்வையிலும் கடுமையை காட்டிடத் தெரியாதவன் இன்று அனாயசமாக பல கொலைகள் செய்திருக்கின்றான்.

அவனது தங்கை இறுதியாகக் கேட்ட நிம்மதியான மரணம்… மரணத்திலும் நிம்மதி… இப்போது இந்த நொடி கிடைத்திருக்கும்.

இத்தனை கொலைகள் செய்துவிடும் எப்போதுமான மென் புன்னகையோடு தன்னவளைப் பார்த்திருந்தான்.

புவித்தின் அப்புன்னகை மெல்ல நீண்டு விரிந்தது, அகனிகாவுக்கு அழைப்பு வந்து சுகன் சொல்லிய செய்தியில்.

“மாமா?!” கேள்வியும் அதிர்வுமாய் கண்களை விரித்திருந்தாள்.

ரங்கராஜனோடு நிறுத்திவிடுவானென நினைத்திருக்க, அவன் பணி செய்திடும் கல்லூரியிலே ஒரு பேராசிரியரை கொன்றிருக்கின்றான்.

“என் கிளாஸ் பொண்ணு நித்யா. கெஸ்ட் ஹவுஸ் கூப்பிட்டிருக்கான். தெரிஞ்சும் அமைதியா இருக்க முடியல” என்று சாதரணமாக சொல்லியவன், “அந்த ரங்கேஷ் உடைய இறப்பு செய்தியும் வந்து சேரும்” என்றான்.

“அவன் எப்பவோ செத்திருக்க வேண்டியவன் தான். அவனெல்லாம் காக்கி போடவே தகுதி இல்லாதவன்” என்றாள் அகனிகா.

“போலாமா?” என்று அறை வாயிலை நோக்கி கைக்காட்டினான்.

“நீங்கதான் இதெல்லாம் பண்ணீங்கன்னு என் டிபார்ட்மெண்டில் இன்னும் யாருக்கும் தெரியாது.” சற்று திணறித்தான் கூறினாள்.

“தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை கொடுத்த நானே, செய்த தப்புக்கான தண்டனையை ஏற்காம, தப்பிக்க வழியிருக்குன்னு தப்பிச்சா, நான் கொடுத்த தண்டனைக்கு மதிப்பிருக்காது.”

புவித் சொல்லியதில் அவனின் மீதான காதலைக் காட்டிலும், மதிப்பு பல படிகள் உயரம் தொட்டது அவளிடத்தில்.

அவனுடைய எண்ணத்திற்கான பொருளும் விளங்கிட, அவன் தண்டனையை ஏற்பதே அவனுடைய மன அமைதிக்கு சரியா இருக்குமென்று நினைத்தாள்.

“நீங்களா சரண்டர் ஆனா தண்டனை குறைய வாய்ப்பிருக்கு… நீங்க நேரா கமிஷனர் ஆபீஸ் போயிடுங்க” என்ற அகா முடிக்கும் முன்னர் மறுத்து, இருபக்கமும் தலையை அசைத்த புவித்,

“எனக்கு நீ என்னை அரெஸ்ட் பண்ணதா இருக்கணும்” என்றான்.

“முடியாது” என்றவள், புவித் புருவம் உயர்த்தியதில், “நீங்க தான் கில்லர்ன்னு கன்பார்ம் ஆனதுமே நான் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்” என்றாள்.

“வாட்?” புவித்திடம் மெல்லிய அதிர்வு.

“என்னால உங்களை கம்பிக்கு பின்னாடி அடைக்க முடியும் தோணுதா உங்களுக்கு?” எனக் கேட்டவள், “நான் என்ன செய்யணும் நினைச்சு இந்த காக்கியை போட்டனோ அதைத்தான் நீங்க பண்ணிட்டீங்களே! அப்புறம் இது எதுக்கு?” என்றவள், “நீங்களே கமிஷனர் ஆபீஸ்… இல்லை இல்லை. உங்களுக்கு வேணும்னா நான் ட்ராப் பண்றேன்” என்றாள்.

“ஓகே ஃபைன். போலாம்” என்ற புவித் முன் நடக்க, அகனிகா அவனை பின் தொடர்ந்தாள்.

கீழே கூடத்தில் அனைவரும் இருந்தனர்.

நிரூப், பெஞ்சமின், ஜானவியும் வந்திருந்தனர்.

“வா ஆருஷ்… உன் ஃப்ரெண்ட்ஸ்க்கு இப்போ தான் நம்ம வீட்டுக்கு வர வழி தெரிஞ்சிருக்கு” என்று சொல்லிய பவானிக்கு, அவர்கள் புவித்தை வழியனுப்பி வைத்திட வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சிதம்பரம், இளங்கோ, ராஜேந்திரன் மூவரும் செய்தியின் மூலமாக ரங்கராஜன் இறப்பைக் கேட்டு, அன்றைய நிகழ்வின் தாக்கத்தில் கடினமாக அமர்ந்திருக்க, அகிலா, சந்தியா ஒருவித நிறைவில் அமைதியாக இருந்தனர்.

புவித்தால் ஏற்படவிருக்கும் அதிர்வை இவ்வீட்டிலுள்ளவர்கள் எப்படி ஏற்பார்கள் எனும் தவிப்போடு விதார்த், மிதுன் மற்றும் நண்பர்கள்.

புவித் அகனிகாவை பார்க்க,

“சீக்கிரம் சொல்லிட்டு வாங்க. வெளிய இருக்கேன்” என்றவள், அவனுக்காக வாகனத்தை தயாரில் வைத்திருக்க சென்றுவிட்டாள்.

“ரங்கராஜன் இறந்துட்டான்.” புவித் மரத்தக் குரலில் நடுநாயகமாக நின்று கூறிட,

“இப்போதான் நியூசில் பார்த்தோம்” என்ற பவானி, “அவனுக்கு இந்த சாவெல்லாம் போதாது. நரகத்துக்கு போயி அனுபவிப்பான்” என்றார்.

“கொதிக்கிற எண்ணெயில் பொரிச்செடுக்க சொல்றேன் சித்தி” என்று புவித் சிறு சிரிப்போடு கூற,

“நீ சொன்னா மேலோகத்தில் தீர்ப்பு சொல்லிடுவாங்களா?” என்று தன்னுடைய மோவாயை தோளில் இடித்து வெட்டினார்.

“இந்த பூமியில் ரங்கராஜனுக்கான தீர்ப்பை எழுதினது நான் அப்படிங்கிறப்போ… நான் சொன்னா நடக்கும் தான?” எனக் கேட்டு அனைவரின் தலையிலும் சத்தமின்றி இடியை இறக்கியிருந்தான் புவித்.

“ஆருஷ்.” அனைவரின் குரலும் காற்றாய் ஒருங்கே ஒலித்தது.

“நடந்த நிகழ்வுக்கு முடிவுரை எழுதினா தான முற்றும் போட முடியும். அதைத்தான் செய்தேன்” என்றான்.

“நீ எப்படிடா?” அகிலா இன்னமும் அவன் சொல்வதை நம்ப முடியாது விழிகள் விரித்து வினவினார்.

“கண்டும் காணாம கடந்து போறதுக்கு நான் யாரோ இல்லம்மா. இறந்தது தேர்ட் பெர்சனும் கிடையாது. அன்னைக்கு நான் பார்த்த காட்சியை நீங்க யாரும் பார்க்கல…” என்ற புவித் அடைத்த வார்த்தைகளோடு இளங்கோவை ஏறிட்டான்.

முகம் கசங்க அவனருகில் வந்தவர், தாவி அணைத்துக் கொண்டார்.

“அதுக்கு இது சரியானது இல்லையே” என்று சிதம்பரம் கூறிட,

“பாதிக்கப்பட்டவங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்கு சரி தப்புன்னு எதுவுமில்லப்பா” என்ற விதார்த், “இதை அவன் தனியா செய்யல” என்றான்.

அடுத்த அதிர்வை உள்வாங்கும் முன்னர்,

“மெடிக்கலி ஃபுல் சப்போர்ட் என்னோடது” என்று மேலும் அதிர வைத்திருந்தான் மிதுன்.

“நீங்க மூணும் பெரும் ஏன் அமைதியா இருக்கீங்க? நீங்களும் உடைந்தயா?” ராஜேந்திரன்… பெஞ்சமின் மற்றும் நிரூப்பை பார்த்து வினவினார்.

இருவரும் தலை கவிழ்ந்ததிலே அனைத்தும் பிடிபட்டது.

“அப்போ எல்லாரும் ஜெயிலுக்கும் ஒண்ணா போகப்போறீங்க… ரொம்ப நல்லாயிருக்கு” என்று சிதம்பரம் சொல்ல,

“அவன் செத்துட்டாங்கிற நிம்மதியே போச்சு. ஏன்டா இப்படி பண்ண? ஏன்?” என்று புவித்தின் மார்பிலும் கன்னத்திலும் மாற்றி மாற்றி அறைந்த அகிலா, அவனை கட்டிக்கொண்டு அழுதார்.

“இந்த குடும்பம் இப்படி இருக்கிறது பிடிக்கலம்மா. என்ன செய்தா எல்லாம் சரியாகும் நினைச்சேன். சரின்னு பட்டதை செய்தேன்” என்றவன், “செய்ததுக்கான பலன் அனுபவிக்கணுமே! போயிட்டுவரேன்” என்றான்.

“எங்க… எங்கப்பா? எங்க?” என்று அகிலா மட்டுமில்லாது அனைவருமே பதற,

“இவங்க யாருக்கும் நான் செய்த கொலைகளில் சம்மந்தம் இல்லை. நான் என்ன சொன்னனோ அதை செய்தாங்க. அவ்ளோதான். முழுக்க முழுக்க நடந்த கொலைகள் எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். போயிட்டு வரேன்” என்ற புவித், கண்கள் நிறைவான புன்னகையை அளவாக பிரதிபலிக்க தனக்கான தன்னுடைய குடும்பத்தாரின் தவிப்புகளையும் கண்ணீரையும் நெஞ்சம் முழுக்க சேமித்தவனாக வீட்டை விட்டு வெளியேறினான்.

எல்லாரும் அழுகையோடு அவன் பின்னால் வர,

“யாரும் எனக்காகன்னு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஜெயில்ன்னு வரக்கூடாது. யாரும் வரக்கூடாது. முக்கியமா என்னை வெளிய எடுக்கிறேன்னு எதுவும் பண்ணக்கூடாது. எனக்கான தண்டனையை நான் முழுசா அனுபவிக்கனும். அப்போ தான் அவனோட இறப்பை என்னால சந்தோஷமா ஏத்துக்க முடியும்” என்றான் புவித்.

“பார்த்துக்கோங்க!”

சிதம்பரத்தின் விழிகளை சந்தித்துக் கூறியவன், அகனிகா உயிர்ப்பித்து வைத்திருந்த வண்டியில் சென்று ஏறினான்.

“எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருந்திருக்காக்கா.”

புவித்தை அகனிகா காவல் நிலையம் அழைத்துச் செல்கிறாள் என்றதும், அவளுக்குத் தெரிந்தும் செய்ய விட்டிருக்கிறாள் என்று உருவகப்படுத்திட, அதனை பவானி அகிலாவிடம் தூபமாகக் கூறியிருந்தார்.

“புருஷனை கொலை செய்யுன்னு செய்யவிட்டு வேடிக்கை பார்த்துட்டு… இப்போ ஜெயிலிலும் போடப்பொறா” என்றார். மற்றவர்களுக்கு கேட்காத மெல்லிய முணுமுணுப்பாக.

அகிலா அகனிகாவை உணர்வற்று வெறித்திட, அகனிகா புறப்பட்டிருந்தாள்.

வீட்டிற்குள் வந்தவர்களுக்கு இதனை எப்படி பார்ப்பது… எவ்வாறு ஏற்றுக்கொள்வதென்றே தெரியவில்லை. ஆனாலும் மனதின் ஓரத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் உண்மையான நிம்மதி மெல்ல பரவத் துவங்கியிருந்தது. அதனை உணரவும் துவங்கியிருந்தனர்.

இதற்காகத்தானே புவித்தின் இச்செயல்.

அக்கணம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. இருப்பினும் அவனுக்கான முடிவு வலியைக் கொடுத்த போதும், அவன் கூறிய மன அமைதி இத்தனை நாட்களின்றி இன்று கிட்டியது.

இவ்வீட்டின் அமைதிக்காக, நிம்மதிக்காக, மகிழ்வுக்காக, மொத்த பாரத்தையும் தன் தலையில் ஏற்றிக்கொண்டு சென்றிருப்பவனுக்காக அவ்வீடு காத்திருக்கத் துவங்கியது.

மகிழ்வாய்! எதிர்பார்ப்பாய்!

வானத்தின் எல்லையற்ற அன்பால் தடம் அமைத்து.

புவித்தின் அன்பும் அந்த வானத்தின் பரந்த பரப்பைப் போன்றது.

குடும்பத்திற்காக, தன்னுடைய உறவுகளுக்காக, தங்களுக்காக என்று ஒருவனால் தன்னலமற்று பெரும் காரியம் ஒன்று செய்திட முடியுமெனில் அவனது அன்பு எல்லைகள் நீளும் வானம் போன்றது.

இங்கு அவனது முடிவால் அவனது வானம் மட்டுமல்ல, மொத்த குடும்பத்தின் வானமும் சோகத்தின் மேகங்கள் கலைந்து நிறைவாய் பூத்தது.

அத்தியாயம் 27

வண்டியில் சென்றுக் கொண்டிருந்த புவித், அகனிகா இருவரிடத்திலும் ஆழ்ந்த அமைதி.

அமைதிக்குள் மனதின் பாஷைகளை விளங்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தனர்.

தன்னால் நீனாவை காப்பாற்ற முடியவில்லையெனும் பெருந்தவிப்பின் தேடலால் தான் புவித் இப்பெரும் முடிவை செய்திருப்பானோ என்று உள்ளுக்குள் குமைந்துக் கொண்டிருந்தாள்.

“இப்பவும் மேடம் பேசமாட்டிங்களா?”

இருவருக்குமான அமைதியை புவித்தே கலைத்தான்.

“காரணம் புரியுது. ஆனாலும் எனக்காகன்னு வர காரணம் கில்ட் ஆகுது மாமா” என்றாள். சீரற்ற குரலில்.

“உனக்காகவும் தான்” என்று அழுத்தமாகக் கூறிய புவித், “அந்த உனக்காகவில் நீ மட்டுமில்ல கனி. நான்… நான் இருக்கேன்” என்றான்.

அன்றைய நாளில் கூட, வேதனையின் மிகுதியில், தான் பேசாது ஒதுங்கிச் சென்றாலும் அன்பை மட்டுமே முன்னிறுத்தி சுற்றி வந்தவன், இக்கணம் கூட அந்த அன்பை மட்டுமே பிரதிபலிப்பவன், அவனிடத்தில் அவள் பெறுவதெல்லாம் அன்பு மட்டுமே!

தன்னுடைய வருத்தம், சோகம், குற்றவுணர்வென தான் அவனிடத்தில் காட்டிட மறுத்த காதலை எல்லாம் இக்கணம் அவனது பாதத்தில் மிச்சமின்றி சேர்பித்திட நெஞ்சுக்கூடு தவித்திட, வழியற்று வருந்தி நிற்கின்றாள்.

“லவ் யூ மாமா!”

“சொல்லலனாலும் தெரியும்.” கண்கள் சிமிட்டி அவன் கூறியதை, விழிகள் திருப்பாது பார்த்திருந்தாள்.

“எதாவது சொல்லணுமா கனி?”

“ம்ம்” என்றவள் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவனது கைகளை பிடித்து தனது இரு உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்து, அவனின் முகம் பார்த்தாள்.

“அன்னைக்கு நானும் கொஞ்சம் யோசனையா நடந்திருக்கலாம்ல மாமா?” எனக் கேட்டாள்.

“உன்னை தப்பு சொல்லவே முடியாது கனி. அப்போ சொன்னதுதான் எப்பவும், உனக்கு ஆக்சிடென்ட் ஆகாம நீ போயிருந்தாலும், நீ வீட்டுல நிவேதா சொன்னதை சொல்லியிருந்தாலும், நான் போனப்போ என்ன காரணம் சொன்னானோ அதைத்தான் சொல்லியிருப்பான். நடக்கக்கூடாது நடந்திருச்சு” என்றவனுள் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் தீ ரங்கராஜன் இறந்துவிட்டான், அதுவும் தன்னால் இறந்துவிட்டான் என்பதால் மட்டுமே தன்னுடைய தகிப்பைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.

“ம்ம்… இப்போ இந்த கொலைகள் எல்லாம் செய்தது நீதான்னு தெரிஞ்சதும் என்ன வேணாலும் நடக்கலாம் மாமா. மீடியா, கோர்ட், போலீஸ்ன்னு எதுவேணாலும் கேட்பாங்க” என்றாள்.

“எல்லாத்துக்கும் நான் ரெடி தான்” என்றான்.

“உங்க முகத்துல உறையாம இருக்க சிரிப்பே சொல்லுது. நீங்க எல்லாத்தையும் எதிர்நோக்க தயாராகிட்டிங்கன்னு” என்ற அகனிகா, “எனக்கு புரியாத தெரியாத ஒரு விஷயம் இருக்கு. கேட்கவா?” எனக் கேட்டாள்.

“நான் ஸ்பாட்டுக்கே போகாம எப்படி கொலை செய்தேன்னுதான?” என்றான்.

“ஆமா… வாட்சை டூலா யூஸ் பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது. ஆனால் எப்படின்னு புரியல. வாட்ச் எப்படி காணாமப்போகும்?” என்று முக்கியமான ஒன்றை சந்தேகமெனக் கேட்டாள்.

“Smart Electro-Pulse Watch” என்ற புவித் விளக்கமாக சொல்லலானான்.

இதனை வடிவமைத்தது புவித். கொடூரர்களை தன் இருப்பு இல்லாமலே கொலை செய்வதற்காக அதீத மெனக்கெடலில், மிதுன் மற்றும் நிரூப்பின் உதவியால் மருத்துவ யுக்திகளைப் பயன்படுத்தி உருவாக்கினான்.

சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போலத் தெரியும். ஆனால், அது உள்ளே மிக நுணுக்கமான Micro-Pulse Delivery Unit கொண்டுள்ளது.

அதை அணிந்தவுடன் அது அவரது கையோடு இறுக ஒட்டிக்கொள்ளும். உடல் நரம்புத் தளங்கள் (Peripheral nerves) மற்றும் மூளைக்குச் செல்லும் சில மின்சுற்றுகளை நுட்பமாக கணிக்க ஆரம்பிக்கும்.

அதனின் முக்கிய செயல்பாடு… “Nerve Disruption Mechanism.”

முதலில் கைக்கடிகாரத்தில் எந்த மாதிரியான நுட்பங்களை பயன்படுத்தினான் என்பதை தெளிவாகக் கூறினான்.

*Bio-scan – வாட்ச் அணிபவரின் உடல் அமைப்பைப் புரிந்து கொள்ளும். இது “Biofeedback circuit” மூலம், அந்நபரின் இதயத் துடிப்பு, நரம்பின் செயல்பாடு, எலக்ட்ரோடெர்மல் செயல்பாடு (Electrodermal activity) போன்றவை மூலம் செயற்படுகிறது.

*Triggered Countdown – 3 மணி நேர டைமர் உள்ளே செயலில் இருக்கும். அந்த நேரத்தில், கொடுக்கப்பட்ட டாஸ்க்கை அந்நபர் செய்யவில்லை என்றால், “Non-compliant target” என நினைத்து, “Triggered mode” இல் செயல்படும்.

*Electric Micro-Shock Pulses – ஒரே நேரத்தில் பத்து கிலோஹெர்ட்ஸ் (kHz) அளவிலான low-frequency but high-impact pulses, வயிற்றுப்பகுதி மற்றும் மூளைக்கு செல்லும் நரம்பு மையங்கள் வழியாக விடப்படும்.

இது ஒரு சில வினாடிகளில் அந்நபரின்… மூளையின் திட பிளப்பு (Synaptic Overload), மனநிலை சிதைவு, கோபமோ பயமோ இல்லை, ஆனால் உடலை இயங்க விடாத உறை நிலைக்கு இட்டுச் செல்லும்.

*Final Shut-down – (Heart Block via Vagus nerve attack.) Vagus nerve என்பதனைத் தாக்குவதன் மூலம் அவனது இதயத்தைச் சில வினாடிகளில் மெதுவாக நிறுத்துகிறது. இதனால் இறப்பு மிக அமைதியாகவும் எவ்வித உணர்வு வெளிப்பாடும் இல்லாமல் நடைபெறும்.

மருத்துவத்தில் இதனை “திடீரென ஏற்படும் நியூரோஜெனிக் கார்டியாக் அரெஸ்ட் (Sudden Neurogenic Cardiac Arrest)” எனக் கூறப்படுகிறது.

அகனிகா புவித்தை மலைத்துப் பார்த்தாள்.

“கொலை செய்த எல்லாருக்குமே நான் ஒரு வாய்ப்புக் கொடுத்தேன் கனி” என்ற புவித், “வாட்ச் அவங்க கட்டியதும், அவங்களோட மொபைலோடா கனெக்ட் ஆகிடும். அடுத்த செக் அதுல வாட்சில் இருக்கும் டிரான்ஸ் மீட்டர் மூலமா நான் பிளே பண்ற வீடியோ அவங்க மொபைலில் விஷுவல் ஆகும். அது என்ன வீடியோன்னா, அவங்க பண்ண தப்புக்கான எவிடென்ஸ். அதைக்காட்டி, அந்த வீடியோ முடியும் போது நீங்க தப்பை ஒத்துக்கிட்டா உங்களுக்கு ஒரு வாய்ப்புத்தரேன்… நீங்க உயிர் பிழைக்கலாம். இல்லன்னா இப்போவே இறந்துடுவீங்கன்னு AI வாய்ஸ் நோட் செட் பண்ணியிருந்தேன். எவனுமே உண்மையை ஒத்துகிட்டு சரண்டர் ஆகணும் நினைக்கல. கடைசி நொடியிலக்கூட திருந்தமாட்டேன்னு அவனுங்க இறப்பை அவனுங்களே தேடிக்கிட்டாங்க” என்று தோள்களை உயர்த்தி இறக்கி உச்சுக் கொட்டினான்.

அகனிகா அவனை பிரம்மித்துப் பார்த்திருக்க…

“இந்த வாட்ச் எப்படி வொர்க் ஆச்சு, அதெப்படி மறைஞ்சுது சொல்றேன்” என்றவன் அதனையும் விவரித்துக் கூறினான்.

“இந்த வாட்ச் Bluetooth/5G Enabled Embedded chip உடையது.

கில்லர் உடலோடு அந்த சிப் சிங்க் ஆகும்போது வாட்சிலிருக்கும் க்ளவுட் சர்வர் வழியா அவனுடைய இதயத்துடிப்பு அளவை அது கண்ட்ரோல் பண்ணலாம். அவன் நான் சொன்ன மாதிரி தவறை ஒத்துக்கலன்னா வாட்ச் தானாவே இதயத்துடிப்பை கண்ட்ரோல் பண்றதை டிடெக்ட் (detect) பண்ணிடும்.

இதுல ட்ரிகர் செட்டிங் செட் பண்ணியிருக்கேன். அதனால ஒவ்வொரு முறையும் வாட்சில் எதையும் டச் பண்ணி புஷ் பண்ண வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு ஏத்த மாதிரி தானாவே தன்னோட இயக்கத்தை செயல்படுத்தும்” என்ற புவித் “பார்னசிக் டீம் வாட்ச்-ஐ ஆராயும்போதும் எதுவும் எவிடென்ஸ் கிடைக்கூடாது நினைச்சேன். உன் டீமில் பெஞ்சமின் வந்தா ஓகே. வேற யாரும் வந்துட்டா… அதுக்காக அதுக்கான வேலையும் பார்த்தேன். பெஞ்சமின் சில ட்ரிக் சஜஸ்ட் பண்ணான்” என்றான்.

அகனிகாவிடம் பேச்சே இல்லை. ஆனால் சாதாரண யுக்தி இல்லை இது என்று மட்டும் அவளுக்கு விளங்கியது.

வாட்சின் மூலம் சில அறிவியல், மருத்துவ செயல்பாட்டுகளை உட்புகுத்தி, இதயத்தை நரம்புகள் மூலம் கட்டுப்படுத்தி, நொடிப்பொழுதில் இதயம் நின்றுப்போக வைத்து இறப்பை ஏற்படுத்தியிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“இன்னும் எதாவது இருக்கா?” அத்தனை வியப்பில் மலைப்பாய் பார்த்தபடி வினவினாள்.

புவித் மேலும் தொடர்ந்தான்.

“அவன் தப்பை ஒத்துக்க முடியாதுன்னு முடிவை எடுத்தா, அவனோட மனவுணர்வுகள் மாறுபாடு மூலம் அதையும் அந்த வாட்ச் ஃபைன்ட் பண்ணும். அப்போ வாட்ச் அவனுக்கு வார்னிங் சிக்னல் அவனோட போனுக்கு அனுப்பும்.

“Regret cannot be undone. But silence must end” அப்படின்னு.

அப்பவும் அதை அவன் அலட்சியப்படுத்தினா, நெர்வ் சிஸ்டம் கொலாப்ஸ் ஆகும். அது இதயத்துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஃபைனல்லி அட்டாக் வரும். மொத்தமா காலி” என்ற புவித்,

Bio-degradable Smart Watch Housing” என்றான்.

அகனிகா புரியாது ஏறிட…

“வாட்ச் “poly-lactide composite /bio-polymer-இல் ஆனது. இது நான் செட் பண்ணி வச்ச சில மணி நேரத்துக்குள் தானாவே மெல்ட் ஆகி மறைஞ்சிடும், பாரன்சிக்கால் கூட கண்டுபிடிக்க முடியாது. வாட்ச் இருக்கவே இருக்காது. அதுக்கான புள்ளி அளவான எவிடென்ஸ் கூட கிடைக்காது. இதனால தான் வாட்ச் எந்தவொரு இடத்திலும் உனக்கு கிடைக்கல.

வாட்சில் Self-Clearing Nano-circuit உள்ள இருக்கும் nano-chip-ல் volatile memory தான் (RAM மாதிரி). அது ஒருமுறை ட்ரிக்கர் ஆன அப்புறம், அடுத்த ஐந்து நிமிடங்களில் தானா பார்மட் ஆகிடும்.

என்னோட பிளான், அதாவது இந்த வாட்சோட செயல்பாடு முழுக்க முழுக்க இதயத்தோட செயல்பாட்டை நிறுத்த வைக்கிறது தான். முழுசா நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துறது (purely nerve-control) மூலம் நடக்குது. அவ்ளோதான்” என்று தான் கொலை செய்த முறையை கூறி முடித்தான்.

பெரு மூச்சோடு அகனிகா தலையை பிடித்துக்கொண்டு இடவலமாக ஆட்டினாள்.

அவளின் அத்தகைய வியப்பு அவளோடு நின்றுவிடவில்லை…

மாநிலத்தையே வியப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆணையர் மற்றும் பத்திரிகை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தான் கொலை செய்ததற்கான காரணமென அனைத்தையும் மறைக்காது நிமிர்ந்து நின்று அவன் சொல்லியத் தோரணையானத் தோற்றத்தில்.

ஆணையர் அலுவலகம் வந்து சரணடைந்த அடுத்த அரை மணி நேரத்தில் புவித் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.

விசாரணை, கொலையாளி உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காலாவிரையம் ஆகியிருக்கக்கூடும். ஆனால் இங்கு புவித் கொலை செய்ததற்கான காரணம், நோக்கம், செயல்பாடுகள் என அனைத்தையும் நேரடியாக ஒப்புக்கொண்டதில் நேரமிழப்பு ஏற்படவில்லை.

இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் செய்தவன் என்கிற முறையில், சில சட்ட ஒழுங்கு நடவடிக்கைக்காக அவனது முகத்தை கருப்புத் துணி கொண்டு காவலர்கள் மூடிட முயன்றிட, நிமிர்ந்து நேர்கொண்டு மறுத்துவிட்டான்.

ரங்கராஜன் அரசியல்வாதியின் உறவினன் என்பதாலும், அவன் தற்போது சமூகத்தில் பெரும்புள்ளி என்பதாலும், அவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த புவித்துக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டுமென்று அரசியல் அழுத்தங்கள், குறுக்கீடுகள் இருந்திட அன்றே அவனுக்கு தண்டனை அளித்து தீர்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.

ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. ஆயுள்தண்டனை விதிக்கப்பட வேண்டிய நபர். அவனது இழப்பு, நோக்கம், இறந்தவர்களின் குற்றங்கள், உண்மையை ஒப்புக்கொண்டு தானாக சரணடந்தது, அவனது இயல்பான குணங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

தண்டனை பெற்று காவலர்கள் சூழ்ந்து வெளியில் வரும்போது பத்திரிக்கைக்காரர்கள் புவித்தை சூழ்ந்துகொள்ள, காவலர்களாலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை.

அப்போது அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் புவித் அளித்த ஒரே பதில்…

“எதுவாயிருந்தாலும்… எவ்வளவு பெரிய தவறு உங்கமேலயே இருந்தாலும் வீட்ல சொல்லுங்க. யாருக்கும் பயப்படாதீங்க. தப்பே பண்ணாலும் பயப்படாதீங்க. உங்களோட பயம் யாரோ ஒருத்தருக்கு பலமாகிடுது. நீங்க மறைக்கிற விஷயம் உங்க வாழ்க்கையையே புரட்டிப்போட்டுடுது. எந்த விஷயமா இருந்தாலும் மறைக்காதீங்க. பயப்படாதீங்க. உங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லுங்க. அவங்க நிச்சயம் சரி செய்வாங்க.

இங்க எல்லாம் எல்லாருக்கும் சமமானது. எல்லாருக்கும் ஒரே வானம் தான்” என்றிருந்தான்.

புவித் என்பவன் குற்றவாளியாக பார்க்கப்படவில்லை… குற்றங்களை கலைபவனாக மக்கள் மனதில் குடியேறியிருந்தான்.
____________________________________

ஒன்பது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு…

சிறை வாசலின் பழுப்பு நிற இரும்புக் கதவு திறந்தது.

வெளியே புவித்தின் காலடி படிந்த அந்த நொடி, காவலர்களின் கண்களிலும் ஒரு வித மரியாதை தெரிந்தது. குற்றவாளி என்ற பெயரில் ஒன்பது ஆண்டுகள் கழித்தாலும், அங்கு இருந்தவர்களுக்கு அவன் ஒரு வித்தியாசமான மனிதன் என்பதை ஏற்க வேண்டியதாயிற்று.

புவித் மெதுவாக வெளி வாசல் நோக்கி நடந்தான். அவன் முகத்தில் பழைய புன்னகை இருந்தது. ஒன்பது ஆண்டுகள் சிறைச் சுவருக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், அந்த புன்னகை மட்டும் அழியவில்லை.

சிறைக்கு யாரையும் வர வேண்டாமென சொல்லியிருந்த புவித் தானாக வீடு வந்து சேர்ந்தான்.

வாசலுக்கு அப்பால், அவனுக்கு வேண்டிய முகங்கள் அவனை வேண்டிக் காத்திருந்தன.

முதலில் அகனிகா. வயது கூடினாலும், அவள் கண்களில் இருந்த உறுதி மாறவில்லை. அவளுக்குப் பக்கத்தில் விதார்த், மிதுன். பின்னால் நிரூப், ஜானவி பெஞ்சமின். சிதம்பரம், இளங்கோ, ராஜேந்திரன், அகிலா, பவானி, சந்தியா எல்லோரும் அங்கே.

ரீனா, ரித்விக் நன்கு வளர்ந்திருந்தனர். புவித்தைக் கண்டதும் ஓடிச்சென்று அணைத்து வரவேற்றனர். அதிலே அவனது முகம் மகிழ்வைக் காட்டியது.

புவித் வாசலைத் தாண்டியவுடன், அகிலா சத்தமாக அழுதபடி ஓடி வந்து அவனை ஆரத் தழுவினார்.

“என்னடா இது? இத்தனை வருஷமா பார்க்கவும் விடாம நெஞ்சை நொறுக்கிட்டியே.”

அகிலாவின் கண்ணீரை மெல்லத் துடைத்த புவித், “அதான் வந்துட்டனேம்மா” என சிரித்தான்.

“இழந்த வருடம் திரும்ப வருமாடா?” சிதம்பரம் ஆதங்கமாகக் கேட்டிட, “இப்போ இருக்க நிம்மதி இருந்திருக்காதேப்பா” என்றான்.

புவித் சிறைக்குச் சென்ற பின்னரான காலம் அனைத்தையும் மாற்றியிருந்தது.

குடும்பத்தின் நிம்மதிக்காக புவித் செய்த செயல், அனைவரையும் அவர்களது நிலையிலிருந்து, பிடிவாதத்திலிருந்து, கோபத்திலிருந்து, வேண்டாத குணங்களிலிலிருந்து இறங்கி வரவைத்திருந்தது.

அகாவின் மீதான வீண் ஒதுக்கம், தவிர்த்தல், கோபம், என வீட்டினரிடத்தில் இல்லாமல் ஆகியிருக்க, அனைவரும் ஒன்றாகியிருந்தனர்.

அகாவை மகனது வாழ்விலிருந்து அகற்ற நினைத்த அகிலா, தன்னுடைய மகனுக்கான அவளின் தேடலில் காத்திருப்பில், முழுதாய் அவள் பக்கம் சாய்ந்திருந்தார். தனது கோபங்கள் துறந்து. பவானியும் முன்பு போன்று நினைத்ததை பேசி பிறரை காயப்படுத்துவதை நிறுத்தியிருந்தார். பிறரின் நலனுக்காக புவித் செய்த செயல் அவரின் சிறுமை குணத்தை மாற்ற வைத்திருந்தது.

மூத்தவர்கள் புவித்தின் நலன் அறிய விலகி நின்ற விதார்த், மிதுன், பெஞ்சமின், நிரூப் ஆகியோர் பின் வந்து அவனைத் தழுவினர்.

அவர்களது கண்களில் பாசமும் பெருமையும் கலந்திருந்தது.

புவித் தன்னுடைய வழமையான மென் புன்னகையில் அனைவரின் மகிழ்வையும் பிரதிபலித்து நின்றான்.

அந்த நேரத்தில் அகனிகா மட்டும் வார்த்தையின்றி நின்றிருந்தாள். அவள் பார்வையில் அடக்கி வைத்த காதலும், வருடங்களாய் அழியாத வேதனையும் பிரதிபலித்தது.

புவித் அவளிடம் சென்று நின்றான்.

“கனி…” என்று அவனது அழைப்பில், அவளது கண்களில் நீர்த்துளிகள் வழிந்தன.

புவித் மெதுவாக அவளது கையைப் பிடித்தான்.

சிறு பிடி… இருவரிடத்திலும் ஆத்மம் நிறைவு கொண்டது.

அடுத்த சில மணி நேரங்களில் காயத்ரியை சந்திக்கச் சென்றிருந்தான் புவித். ஜானவி மூலம் தன்னுடைய கணவனின் மறுபக்கம் அறிந்ததில், அவரின் இறப்புக்காக வருந்தியதை எண்ணி அதிகம் வருந்தினார்.

புவித்தைக் கண்டதும் கட்டிக்கொண்டு அழுதவர் மறந்தும் தனது கணவனை கொன்றதைப் பற்றி பேசவில்லை. அவருக்கு அவன் என்றும் மகன் தான். அதிலே அவருக்காக அவனுள்ளிருந்த சிறு குத்தலும் நீங்கியிருந்தது.

அன்றைய இரவில்…

தங்கள் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் புவித். அவனது விழிகள் இருள் வானை வெறித்திருந்தது.

‘இந்த வானத்தின் கீழ் தான் எத்தனை வகையான மனிதர்கள்.’ அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் பார்த்து, பழகி, பயணித்த ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு குணங்கள் வாய்க்கப்பெற்றவர்கள். இங்கு யாரும் சரியுமில்லை. தவறுமில்லை. அத்தோடு தன்னுடைய எண்ணத்தை நிறுத்திக்கொண்டான்.

தன்னை பின்னிருந்து அணைத்த மனைவியின் தேகம் கடத்திய சூட்டில்…

“என்னவாம் கனிக்கு?” என்றவன் அவள் பக்கமாகத் திரும்பி, அவளின் கழுத்தில் மாலையாக கைகள் கோர்த்து தன் பக்கம் இழுத்து நெருக்கினான்.

“வாழ்க்கை ரொம்ப தூரம் போயிடுச்சேன்னு வருத்தமில்லையா மாமா?”

அவளின் நெற்றி முட்டியவன்,

“இருக்கும் வாழ்க்கையை உன்னோட வாழனுங்கிற ஆசை கொட்டிக்கிடக்குடி” என்றான்.

“நிஜமாவா?”

“வாழ்ந்து காட்டட்டுமா?” என்றான். விரலால் அவளின் மூக்கின் நுனி நிமிண்டி.

“எப்படி கல்யாணம் ஆகியும் ஒரு வருஷம் தள்ளியிருந்த மாதிரியா?”

அவள் கேட்ட பாவனையில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன்,

“நான் குட் பாய்டி…” என்றான்.

“எதே… நீங்க பையனா? நாப்பது ரீச் பண்ணப் போறீங்க பாஸ்” என்றவள், “அரை கிழவன் ஆகியாச்சு” என்றாள். பார்வையில் கேலிநகை தேக்கி.

“மேடம் மட்டும்” என்று அவளின் கன்னத்தைக் கடித்தவன், “ப்ரூவ் பண்ணட்டுமாடி?” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.

“உனக்கு வாழ்க்கை வீணாகிடுச்சுன்னு வருத்தம் இருக்கா கனி?” எனக் கேட்டவனின் உதடுகள் செய்த ஜாலத்தில் கிறங்கியிருந்தவள், அவனின் பிடரி கேசத்தை கொத்தாகப் பற்றி இழுத்தாள்.

“அடியேய்” என்றவன், “ராட்சசி” என்று அவளின் உதட்டில் வலிக்கக் கிள்ளினான்.

“இனி நமக்கான வாழ்க்கை… இந்த பரந்து விரிந்திருக்க வானம் மாதிரி எல்லையே இல்லமா நீண்டிருக்கு மாமா” என்று அவனின் மார்பில் சாய்ந்து, அவனை இறுகக் கட்டிக்கொண்டு அகனிகா சொல்லிட, புவித் வானத்தை தலை உயர்த்திப் பார்த்தான்.

அந்த வானம்… இப்போது சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் அவனுடன் (அவர்களுடன்) பயணிக்கத் தயாராயிற்று.

இனி புவித் ஆருஷ், அகனிகா இருவரின் வாழ்வெனும் வானம் காதலால் தினம் தினம் பூத்திடும்.

சுபம்.

கதையோடு என்னோடு பயணித்து கருத்துக்கள் பகிர்ந்துகொண்ட வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி 🥰🥰🥰🥰.

மகிழ்… மகிழ்வித்து வாழ்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்