அத்தியாயம் – 14
இருவரும் பால்கனியில் இருந்தார்கள், காற்றின் மெல்லிய தழுவல் அவளது மனதை சற்றே இலகுவாக்கியது, அதை அவள் முகத்தில் வெளிப்படையாகக் கண்டு கொண்டான் தீரஜ்….
சில நொடிகள் அமைதியாக அவளை கவனித்தவன், மெதுவாக.. “ரொம்ப ஹர்ட் ஆகிருப்பல்ல…” என்று கேட்டான்.
அவன் கேள்வியின் பொருள் உடனே புரிந்தது அவளுக்கு, அந்தச் சொற்கள் எதை குறிப்பது என்பது தெரிந்திருந்தும் சில நொடிகள் மௌனமாயிருந்தாள்… பின்னர் தலையசைத்து “ம்ம்… ஆனா இனி பழகிக்றேன்” என்று மெதுவாக சொன்னாள்…
அவனுக்கோ ஒரு மாதிரியாகி விட்டது, இவள் எதற்காக மற்றவர்களின் வார்த்தைகளை அனுசரித்து போக வேண்டும், அதற்கு நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன் என்று நினைத்தவன்,..
“இனிமேல் இந்த வீட்ல தான் இருக்க போற… தினமும் அவங்களை பார்க்க வேண்டியது வரும், பார்க்கும் நேரமெல்லாம் ஏதாவது சொல்லியே தீருவாங்க, ஏன்னா அவங்களோட குணம் அப்படி, ஆனா நீ அமைதியா போகணும்னு அவசியமே இல்லை, அவங்க வாய அடைக்கிற மாதிரி நீயும் நேரடியா பேசணும்” அவன் குரலில் உறுதியின் எடை இருந்தது…
அவளோ அச்சத்துடன்… “ஐயோ… எனக்கு அதெல்லாம் பேச வராது, பெரியவங்களை எதிர்த்து நான் பேசணுமா? கண்டிப்பா மாட்டேன்” என்றாள் தயக்கத்தோடு….
“நீ இப்படி இருந்தா உன்னால இங்கே நிம்மதியா வாழ முடியாது, நீ குனிய குனிய அவங்க உன்னை குத்திக்கிட்டே இருப்பாங்க, என்னோட மனைவி யாருக்கும் அடிபணிஞ்சு போகக் கூடாது”
அவன் அழுத்தமாகச் சொன்ன அந்த ‘என் மனைவி’ என்ற வார்த்தை நந்தினியின் உள்ளத்தை மயிலிறகால் வருடியது போல் இருந்தது,..
சிறிது யோசித்தவள் மெதுவாக,
“நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்ல,.. அவனோ புன்னகையுடன், “குட்” என்று கூறினான்….
“நம்ம மேரேஜ் பத்தி யார்கிட்டலாம் சொன்ன?” என்று திடீரெனக் கேட்டான்..
அவளோ… “யார்கிட்டயும் சொல்லல…” என்று மெதுவாகப் பதிலளித்தாள்…
“ஏன்?” அவன் வினவ, அவளது கண்கள் சற்றே தாழ்ந்தன, “தயக்கமா இருந்தது, கண்டிப்பா எல்லாரும் ஷாக் ஆவாங்க, என்னைப் பார்க்கும் பார்வையே வேற மாதிரி மாறும், என்னால நிம்மதியா வேலை செய்ய முடியாது, அதனால தான் சொல்லல” என்றாள்,..
அவன் சிந்தனையுடன், “நானும் அனவுன்ஸ் பண்ணல, இப்போ மேரேஜை அனவுன்ஸ் பண்ணுற எண்ணமும் ஏனோ இல்ல” என்று அவன் சொல்ல,.. “எனக்கு புரியுது, ஒன்னும் பிரச்சனை இல்ல, கொஞ்ச நாள் தெரியாம இருக்கட்டும், அப்புறம் நாமளே எல்லாரிடமும் சொல்லிக்கலாம்” என்று மெதுவாகச் சொன்னாள்….
அவளது நிதானமான வார்த்தைகள் அவனுக்கு நிம்மதியை தந்தன, அவளின் புரிதலுக்கு நன்றி சொன்னவன், சிந்தனையில் மூழ்கியவனாய் தலையசைத்து அமைதியாக வேடிக்கை பார்த்தான்…
அன்றைய இரவு, கணவனுடனுடம் மாமனாருடனும் தான் அமர்ந்து உணவுண்டாள் நந்தினி, தியாகராஜன் நிறைய நகைச்சுவையோடு பேசி தன் மருமகளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார், அவர் மனதில் இருந்த சந்தோசம் அவரின் முகத்திலும் சிரிப்பிலும் பேச்சிலும் வெளிப்பட, தீரஜிற்கு அதில் அதிகளவு நிம்மதி,..
உணவை உண்ட பின், அறைக்கு திரும்பி வந்தாள் நந்தினி, ஏற்கனவே உதவியாளனின் துணையோடு இரவு உடைக்கு மாறியிருந்தான் தீரஜ்…
“ராமு…” என்று அவன் அழைத்தவுடன், மீண்டும் உடனே ஓடி வந்தவன், என்ன என்று கேட்கமாலேயே அவன் தேவையை செய்ய ஆரம்பித்திருந்தான்,…
வீல்சேரின் சக்கரங்களை பூட்டி வைத்து, மெதுவாக அவனை உயர்த்தி, கட்டிலின் விளிம்பில் அமர வைத்தான், அந்த காட்சியை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த நந்தினியின் உள்ளம் ஒரு மாதிரி பிசைந்தது,..
‘ஒரு மனிதன் தன் கால்களை இழந்து விட்டால் அவன் வாழ்வில் எவ்வளவு சுமையை தாங்கிக்கொள்ள வேண்டியதாக இருக்கு’ அந்த எண்ணம் அவளது உள்ளத்தை உலுக்கியது…
அவன் புன்னகையோடு “ஓகே ராமு, நீ போ” என்று சொன்னபோது தான், அவள் உள்ளே ஓடிக்கொண்டிருந்த எண்ணத்திலிருந்து வெளிவந்தாள், ராமு வெளியேற, அறையில் அவர்கள் இருவரும் மட்டும் இருந்தனர்…
அவள் அசையாமல் நின்று கொண்டிருப்பதை கண்ட தீரஜ்,.. அவளை நோக்கி சிரிப்போடு,
“என் கூட பெட்டை ஷேர் பண்ணிக்க தயக்கமா” என்று மெதுவாக கேட்டான்…
அவளோ திடுக்கிட்டவளாய்,
“இல்ல சார்…” என்று அவசரமாக பதில் தர,.. “அப்போ ஏன் இன்னும் நின்னுட்டே இருக்க? உட்காரு”
அவனது வார்த்தை அவளுக்கு மெதுவான கட்டளையாகப் பட்டது.
சிறிது தயக்கத்துடன் வலப்பக்கமாக வந்து, மெதுவாக பெட்டில் அமர்ந்தாள், அவன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, சற்றே சிரித்தபடி,.. “பயப்படாம படு, என்னால அசைய முடியாது, ஸோ உன் பக்கத்துல வந்து விடுவேன்னு நீ பயப்பட வேண்டாம்…” என்று சொன்னான்…
அந்த ஒரு சொல், அவளது மனதில் இருள் சூழ்ந்தது போல இருந்தது, அவனது அசையாமை பற்றி அவன் இப்படி நேராகச் சொல்வதை கேட்கும்போது, அவள் மனமெல்லாம் கனமாகியது,
அது அவனுடைய வலியே ஆனாலும், கேட்கும் தருணத்தில் அவளுக்கும் அந்த வலி பதிந்தது,..
‘இப்படி சொல்லும் போது அவருக்கும் எவ்வளவு வலிக்கும்…’ என்று நினைத்தவளுக்கு, உள்ளமெல்லாம் வருத்தம் வந்து பரவ.. “நான் அப்படியெல்லாம் நினைக்கல சார்… ப்ளீஸ், இப்படிச் சொல்லாதீங்க…” என்று மெதுவாகக் கூறினாள்…
அவன் ஒரு நிமிடம் மௌனமாக அவளை நோக்கி இருந்தான், பின் திடீரென,.. “டோன்ட் கால் மீ சார் மிசஸ் மதுநந்தினி, இது ஆஃபிஸ் இல்ல…” என்று குரல் சற்று அழுத்தத்தோடு வந்தது…
அவள் கண்கள் சற்றே பெரிதாகி, “பின்ன எப்படி கூப்பிடுறது?” என்று கேட்க,.. “எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க? பெயர் சொல்லி தானே…?” அவன் சொல்ல,..
“ம்ம்… ஓகே…” என்று சற்று தயங்கியவள், “தீரஜ்…னு கூப்பிடட்டுமா?” என்றாள்…
அவன் கண்களில் சிரிப்பு ஒளிர்ந்தது…. “தீரஜ் அரவிந்தன்னு கூப்பிட்டாலும் ஓகே தான்” என்றான்…
அவளும் மெல்ல புன்னகைத்தவள் யோசித்துக் கொண்டிருந்தபடி,.. “நான் அரவிந்த்ன்னு கூப்பிடறேன்…” என்றாள், அவனும் புன்னகையோடு தலையசைத்தான்,..
“லைட்டை ஆஃப் பண்ணிடட்டுமா?” என்று அவன் கேட்க,.. “ஓகே… குட் நைட் அ.. அரவிந்த்” அவள் மெதுவாகச் சொல்ல, அவளது உதட்டிலிருந்து வந்த அந்த பெயர் அவன் உள்ளத்துக்குள் நெகிழ்ச்சியை பரப்பியது,..
அவனும் “குட் நைட்” என்றவன்,..
அவன் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு, இரவு விளக்கை மட்டும் ஒளிரவிட்டான், மென்மையான அந்த ஒளியில், அறை முழுக்க ஒரு புதுமை பரவியது…
அந்த இரவு நந்தினிக்கு
புதிய வீட்டில், புதிய கணவனுடன், புது வாழ்க்கையின் முதல் இரவு.
தீரஜிற்க்கும் ஒரு பெண்ணின் அருகில், பல நாட்கள் காத்திருந்த அந்த வெறுமையை நிரப்பும் முதல் அனுபவம்…
இருவருக்கும் அந்த இரவு,
ஒரு புதிய தொடக்கத்தின் இரவாக மாறியது…
அடுத்தநாள் காலை மெல்ல கண்விழித்தான் மதுநந்தினி, அவளுக்கு திருமணமாகிவிட்ட விஷயம் மெதுவாக நியாபகம் வந்தது, பக்கவாட்டில் திரும்பி பார்த்தால் தீரஜ் இருக்கவில்லை, ‘எங்கே போயிட்டாரு’ என்று யோசித்துக் கொண்டே மணியை பார்த்தாள், ஏழை காட்டி இருந்தது, அலுவலகத்திற்கு நேரமாகிவிடும் என்று தனது உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள், சல்வார் அணிந்து கொண்டு வெளியே வந்தவள்,… “குட் மார்னிங் மதுநந்தினி” என்ற தீராஜ்ஜின் குரலில் அவளது உதடுகளில் இயல்பாக ஒரு புன்னகை விரிந்தது…
“குட் மார்னிங்” அவளும் இலகுவாக பதில் தந்தாள், அவன் அலுவலக உடையில் தயாராகி இருந்தான், ‘இவ்வளவு சீக்கிரம் ரெடியாகிட்டாரா’ ஆச்சரியமாக பார்த்தவள்,.. “இன்னைக்கு நான் ஆஃபிஸ்க்கு வரலாம்ல” என்றாள் சிறு தயக்கத்தோடு,..
“ஷ்யூர்,.. வீட்லயே இருந்தா உனக்கும் போரடிச்சிடும்,” அவன் சொல்ல அவள் புன்னகைத்தாள்,..
“நான் கீழ இருக்கேன், டைனிங் ரூம்க்கு வந்திடு” அவன் சொல்லிவிட்டு நகர,.. அவளும் அவன் அறையில் இல்லாததால் சங்கடம் இல்லாமல் தயாராக ஆரம்பித்தாள், அவன் கட்டிய தாலியை மறைக்க தான் கொஞ்சம் கஷ்ட்டமாகி போய்விட்டது,..
சிறிது நாட்கள் திருமணத்தை மறைத்து வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள், அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் அல்லவா!
தயாராகி முடித்து விட்டு தாயிடம் கொஞ்ச நேரம் பேசியவள், கீழே சென்றாள், அந்த பெரிய வீட்டில் எந்த பக்கம் போவது என்று பெரும் குழப்பமாக இருந்தது, அங்கே வீட்டை துடைத்து கொண்டிருந்த ஒரு பணியாளிடம் தான் “டைனிங் ரூம்க்கு எந்த பக்கம் போகனும்” என்று கேட்டு தெரிந்து கொண்டாள், தீரஜ் அவளை டைனிங் அறைக்கு தானே வர சொல்லிவிட்டு போயிருந்தான்,…
அவளும் சரியாக டைனிங் அறைக்கு வந்து சேர்ந்து விட, அங்கு ஏற்கனவே தந்தையும் மகனும் ஆஜராகி இருந்தனர், முதல் நாளே நந்தினியை தனியாக விட்டு சாப்பிட மனதில்லாமல் அவள் வரும் வரைக்கும் பிஸ்னசை பற்றி கொஞ்ச நேரம் பேசிகொண்டு இருந்தனர்,…
நந்தினியை கண்டதும்,.. “குட்மார்னிங் நந்தினி,” என்று தியாகராஜன் சொல்ல,.. அவளும் புன்னகையுடன்,.. “குட்மார்னிங் மாமா” என்றாள், தந்தை இல்லாததால் அவரின் பாசத்தில் தன் தந்தையையே கண்டாள்,…
“சாப்பிடலாமா?” அவர் தான் கேட்டார்,.. “ஹாங்,.. ஓகே மாமா” என்று சொன்னவளோ,.. மேஜையில் பரப்பி வைத்திருந்த உணவுகளை கண்டு,.. “நான் பரிமாறட்டுமா” என்றாள் சிறு தயக்கத்தோடு,…
“அதெல்லாம் வேண்டாம்மா இங்கே தனக்கு தேவையானதை அவங்களே தான் போட்டு சாப்பிட்டுப்பாங்க, நீயும் உட்காரு” அவர் சொல்ல, அவளும் அமர்ந்து கொண்டாள், இட்லி, தோசை பூரி, பொங்கல், வடை கேசரி என்று பல வகை உணவுகள் இருந்தது,…
“கூச்சப்படாம சாப்பிடுமா, இது உன் வீடு” தியாகராஜன் சொல்ல, அவளும் மென்புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டாள்…
“இன்னைக்கு ஆஃபிஸ் போலாம்னு இருகேன் மாமா” நந்தினி சொல்ல,.. “இன்னைக்கே போகனுமாமா” என்றார் அவர்..
“வீட்ல சும்மா தானேப்பா இருப்பா, அதுக்கு ஆஃபிஸ் போறதே பெட்டர்” தீரஜ் கூற,… “புருஷனும் பொண்டாட்டியும் முடிவு பண்ணிட்டீங்க, இனி நான் என்ன சொல்றது” என்று புன்னகைத்தவரோ,… “ஒரு பார்ட்டி வச்சு உங்க மேரேஜை அனவுண்ஸ் பண்ணலாம்னு இருக்கேன் தீரஜ்” என்று மகனிடம் சொல்ல,… “இப்போ வேணாம்ப்பா, கொஞ்ச நாள் போகட்டும்” என்றான்,..
“ஏன்” அவர் வினவ,.. “காரணம் எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, இப்போ வேண்டாம்னு தோணுச்சு” அவன் சொல்ல, அதற்க்கு மேலும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை, “சரி.. ஆனா ரொம்ப லேட் பண்ணாத” என்று சொல்ல, அவனும் தலையாட்டிக் கொண்டான், அந்த நேரம் சரியாக வனிதாவும் மனிஷாவும் டைனிங் அறைக்குள் நுழைந்தனர்,..