நாட்கள் நல்ல முறையில் கடந்து சென்றது. சிவாவின் திருமண ஏற்பாடுகள் நல்லபடியாக நடந்தது. நாதினிக்கு தரையில் கால் படவில்லை. எந்த நேரமும் வானில் பறந்தாள்.
இப்படி ஒரு நாள் அவளது வாழ்வில் வரக்கூடும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லையே. தன் காதலை மறந்து விட முடிவு செய்திருக்க திடீர் திருப்பமாக சிவாவையே திருமணம் செய்ய போகிறாள்.
பிரிந்த குடும்பமும் இணைந்து விட்டது. எல்லோருமே சந்தோசமாக இருக்க சண்முகியின் வாழ்வும் சரியானால் போதும் என்ற எண்ணம் மட்டுமே எல்லோரின் மனதிலும் மிச்சமிருந்தது.
சண்முகி தனி வீட்டை பார்த்து பேசி விட்டாள். திருமணம் முடிந்த பிறகு அங்கே சென்று தங்க வேண்டும். அதற்கு முன்பு அவளுக்கு கொடுத்த சீரை எல்லாம் சுப்பிரமணியின் வீட்டிலிருந்து எடுக்க வேண்டும்.
அவன் சிறையிலிருந்து வந்த பிறகே அதை செய்யலாம் என்று காத்திருக்க தண்டனை முடிந்து சுப்பிரமணி அன்று விடுதலையானான்.
வெளியே வந்ததும் நேராக சென்று சண்முகியை அறைய வேண்டும் போல் வெறி வந்தது. ஆனால் உடனே செய்ய முடியாது.
அங்கிருந்து தன் வீட்டுக்குச் சென்றான். பத்து நாளாக திறக்காத வீடு குப்பைகளால் நிறைந்து கிடந்தது. வீட்டுக்கு நடுவே கிடந்த சாவியும் கண்ணில் பட்டது.
சண்முகியிடமிருந்த சாவியை போட்டு விட்டுச் சென்றிருக்கிறாள். இப்போது குரு அவளோடு தான் இருப்பான். அவளாக வந்து பிள்ளையை கேட்டால் கொடுக்க மாட்டான் என்று தெரிந்து அவனை சிறைக்கு அனுப்பி விட்டு குருவை அழைத்துச் சென்று விட்டாள்.
சண்முகியின் திமிரை கண்டு கோபம் கோபமாக வந்தது. அந்த குப்பையை சுத்தம் செய்ய பிடிக்காமல் அறைக்குள் சென்று தன்னுடைய உடையை மட்டும் எடுத்து குளித்து விட்டு வர வீட்டின் ஓனர் வந்து நின்றார்.
“வீட்டை காலி பண்ணிடு.. இந்த மாதிரி ஆளுங்கள குடி வச்சேன்னு என் பேரு கெட்டுப்போக கூடாது.. அடுத்த வாரம் வேற பார்டி வர்ராங்க.. அதுக்குள்ள காலி பண்ணிடு” என்று கோபமாக சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
சுப்பிரமணிக்கு பெருமூச்சு வந்தது. வேலை போய் விட்டது. ஜெயிலுக்கு போனதால் பெயரும் போனது. இப்போது தங்கும் வீடும் போனது. இனி எங்கே போய் தங்குவான்?
“அவள்” நினைவு வர உடனே கிளம்பிச் சென்றான்.
அவளோடு இனி ஒரே வீட்டில் தங்கலாம் அல்லவா? இனி எந்த தடையும் இல்லை என்று கிளம்பிச் செல்ல அங்கே “அவள்” வீட்டிலிருந்து வெளியேறினான் ஒருவன்.
சிரித்துக் கொண்டே அவனுக்கு கையாட்டினாள் “அவள்”
சுப்பிரமணியை பார்த்ததும் சிரிப்பு மறைய “எப்ப வெளிய வந்த?” என்று கேட்டாள்.
“யாரு இவன்?”
“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு”
“அவன் யாருனு நீ சொல்லு”
“ஃப்ரண்ட்”
“புது ஃப்ரண்ட்.. பத்து நாள்ல புது ஃப்ரண்ட்டா?”
“முழுசா பேச விடு மணி.. அவன் என் ஃப்ரண்டோட அண்ணன்.. இந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியல.. அதுனால காலி பண்ணிட்டு என் ஃப்ரண்டோட சேரிங்ல தங்க போறேன். அத பத்தி பேசத்தான் வந்தான்.”
“அதெல்லாம் நீ போக வேணாம். நானும் இங்கயே தங்குறேன். நாம சேர்ந்து வாடகை கொடுக்கலாம். நீயும் இங்கயே இரு”
“உனக்கு வேலை இல்ல மணி”
“உனக்கு மட்டும் இருக்கா?”
“இருக்கு.. சம்பளம் கம்மியா இருந்தாலும் சரினு ஒரு இடத்துல வேலைக்கு சேர்ந்துட்டேன். இனியும் வேலை இல்லாம என்னால சமாளிக்க முடியாது.”
“நாம ஒன்னா இருக்கலாம்னு சொன்ன? இப்ப இப்படி போற?”
“நான் உன்னை விட்டு மொத்தமா போகல மணி. நீ ஒரு வேலைய தேடு.. செட்டிலாகு.. நானும் உன் கூட வந்து இருக்கேன். இப்ப எனக்கு வேற வழியில்ல.. போய் தான் ஆகனும்”
சுப்பிரமணி அவளை தடுக்க வாதாடினான். அவள் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் பண விசயத்தை பற்றி மட்டுமே பேசினாள். அவளது பிரச்சனை மட்டுமே அவளுக்கு பெரிதாக இருந்தது.
வேறு வேலை தேடு என்று சுப்பிரமணியை வற்புறுத்தி விட்டு பேச்சை முடித்துக் கொண்டாள்.
சுப்பிரமணி அனைத்தையும் இழந்து திரும்பி வந்தான். அவனுக்கென இப்போது யாரும் இல்லை. ஆனால் இது அனைத்துக்கும் காரணம் சண்முகி. அவளை நன்றாக வாழவே விடக்கூடாது என்று வெறி வந்தது.
ஒரு வாரம் வீடு தேடி அலைந்து கடைசியாக பெற்றோரிடமே சென்று விடப் பார்க்க சண்முகியின் தந்தையும் மாமாவும் வந்து நின்றார்கள். அவளுக்கு கொடுத்த சீர்களை சத்தமே இல்லாமல் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
அவனை திட்டவில்லை. சண்டை போடவில்லை. அடிக்கவில்லை. அவர்கள் அவ்வளவு அமைதியாக வேலை செய்ததை பார்த்து அந்த குடியிருப்பே ஆச்சரியப்பட்டது.
“அவன அடிச்சு மட்டும் என்ன செய்ய? போடா நாயேனு உதறிட்டு போறாங்க பாரு.. அதான் பெரிய மனுசத்தனம்” என்று பேச அதைக்கேட்ட சுப்பிரமணிக்கு தான் மனம் எரிந்தது.
அவனிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
சிவாவிற்கு திருமணம். அதுவும் அவனது மாமா மகள் தான் மணப்பெண். அந்த மாமாவின் உதவியோடு தான் அவனை சிறைக்கு அனுப்பினார்கள் என்று எல்லா விவரமும் சுப்பிரமணியின் தாய் ஒப்பித்தார்.
சண்முகியின் மாமா ராமமூர்த்தி மிகவும் செல்வாக்கான ஆள் தான். இப்போது அந்த குடும்பத்தை பகைத்துக் கொண்டால் மீண்டும் சுப்பிரமணியை சிறைக்கு அனுப்பி விடுவார்.
இப்போது சண்முகியை விட “அவள்” தான் சுப்பிரமணிக்கு முக்கியம். அதற்கு அவனுக்கு ஒரு வேலை வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் எவ்வளவு சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று தேட ஆரம்பித்தான்.
அவனுக்கு வேலை கிடத்தால் “அவளை” திரும்ப அடையலாம் என்று அவன் ஆசை கொண்டிருக்க அந்த ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பது விதியின் கையில்…!
✦
அமர் பிரியாவின் பொறுப்பில் அனைத்தையும் விட்டு விட்டு கிளம்பி விட்டான். பிரியாவும் வேலை மட்டுமே உலகம் என்று வாழ ஆரம்பித்தாள். வேறு எந்த எண்ணமும் இல்லை. ஆசையும் இல்லை.
தந்தையின் கனவு தொழிலை திறம்பட நடத்துவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
சிவாவின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அமர் பிரியாவை எங்காவது அழைத்துச் சென்று விட நினைத்தான்.
குவாரி போகப்போவதாக சொல்லி பிரியாவை அழைக்க அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. கிளம்பி விட்டாள். அவளுக்கு சிவாவின் திருமண தேதி பற்றித் தெரியவில்லை.
நாளை திருமணம் என்ற போது அமரோடு இன்று கிளம்பினாள். குவாரிக்குச் சென்று விட்டு உடனே திரும்பப் போவதில்லை. ஒரு புது பிராஜெக்ட்டை பற்றி பேசி விட்டு அடுத்த நாள்தான் திரும்புகின்றனர்.
“வீட்டுக்கு போயிட்டு ஒரு ஃபைல் எடுத்துட்டு போயிடலாம்” என்று அமர் சொன்னதும் தலையாட்டினாள்.
“இப்பலாம் வீட்டுக்கு போகவே பிடிக்கிறது இல்ல.. சமைக்கிறவங்க.. வாட்ச் மேன் தவிர யாருமே இல்ல.”
“உங்க ஃபேமிலில யாருமே இல்லையா அமர்?”
“தாத்தாவும் நானும் தான் இருந்தோம்.. இப்போ தாத்தாவும் விட்டுட்டு போயிட்டாரு”
“வருத்தப்படாதீங்க…”
“ப்ச்ச்.. லைட்டா எப்பவாவது தோணும்.. அப்புறம் வேலை பார்க்குறதுல மறந்துடுவேன்” என்று புன்னகைத்தவன் காரை வீட்டின் முன்பு நிறுத்தினான்.
பிரியாவும் இறங்கினாள்.
“உள்ள வா.. வெயிட் பண்ணு.. நான் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று விட்டு சென்றான்.
அவன் அறைபக்கம் சென்றதும் பிரியா சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள். அங்கே குடும்பப்படம் இருந்தது. அமர் சிறு பையனாக இருந்தான். அவனது தாயை பார்த்தவள் புருவம் சுருக்கி விட்டு பிறகு அதிர்ந்தாள்.
அவளுடைய குரு பரமேஸ்வரி அல்லவா இவர்? அதிர்ந்து போய் அவள் நிற்க அதை பார்த்துக் கொண்டே அமர் வெளியே வந்தான்.
“இது என் ஃபேமிலி ஃபோட்டோ.. நான் கொஞ்சம் குண்டா தான் இருக்கேன். அதுக்காக இப்படி சாக் ஆகி பார்க்க கூடாது” என்று அமர் சிரிக்க உடனே புன்னகைத்தவள் “இவங்க?” என்று பரமேஸ்வரியை காட்டினாள்.
“என் அம்மா..”
“இவங்க என் குரு..”
ஒரு நொடிக்குப்பிறகு “தெரியுமே” என்றான்.
அதிர்ச்சியோடு அவன் பக்கம் திரும்பினாள்.
“தெரியுமா? எப்படி?”
“உனக்கு தான் என்னை தெரியாது.. நான் உன் அரங்கேற்றம் அப்போ வந்துருந்தேன்.”
“சொல்லவே இல்ல..? நான் உங்கள பார்த்தனா?”
“ம்ம்.. வாழ்த்து கூட சொன்னேன்..”
“அப்புறம் ஏன் முதல் தடவ பார்க்கும் போது எதுவும் சொல்லல?”
“உனக்கு ஞாபகம் இல்ல.. சோ நானும் காட்டிக்கல.. அண்ட் அப்போ பிஸ்னஸ் முக்கியமா இருந்துச்சு”
“அமர்.. நீங்க சொல்லிருக்கலாம்”
“சரி இப்ப கிளம்புவோம்.. போற வழியில பேசலாம்.. லேட்டாகிடும்” என்றதும் இருவரும் வெளியே வந்தனர்.
காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து பிரியா பரமேஸ்வரியை பற்றி கேட்டு பேசிக் கொண்டே வந்தாள். அவர் இறந்தது அவளுக்கு பெரிய வருத்தம். அவளுக்கு யாருமே சொல்லவே இல்லையே.
அவர் சிகிச்சை பலனின்றி வெளிநாட்டில் இறந்ததால் யாருக்குமே பெரிதாக விசயம் தெரியாது என்ற பின்பே சமாதானம் ஆனாள்.
வழக்கத்துக்கு மாறாக இன்று வேலையை விடுத்து நிறைய பேசினால் பிரியா. பரமேஸ்வரியின் மகன் அமர் என்பதால் அவள் மனதில் அவன் மீது புது சொந்தம் உருவானது.
எப்போதும் மனதை திறந்து எதுவும் பேசாதவள் இன்று மடை திறந்த வெள்ளமாக பேசிக் கொண்டே இருந்தாள்.
அந்த பயணம் அமர் நினைத்தது போலவே இனிமையாக இருந்தது. போன வேலை முடிந்து இருவரும் திரும்பும் போது சிவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக தான் செய்தி கிடைத்தது.
அதைக்கேட்ட போதும் சாதாரணமாக பிரியாவால் கடந்து போக முடிந்தது.
தொடரும்.