Loading

அத்தியாயம் – 13

 

திருமணத்திற்கு முன்பே தீரஜ் அமைத்திருந்த ஒரு விஷயம் பார்வதிக்கும், நந்தினிக்கும் மிகப் பெரிய நிம்மதியாக அமைந்தது,
பாரவதிக்கு துணையாக எப்போதும் அருகில் இருந்து கவனிக்க நளினி என்ற பெண்ணை நியமித்திருந்தான் அவன்…

நளினிக்கு சுமார் முப்பத்தியேழு வயது தான் இருக்கும், எளிமையான தோற்றம், சீரான சொற்கள், மனதில் அளவற்ற மென்மை, அவளது கண்களில் தெரிந்த அனுபவம், ஒருவித துயரத்தையும் தாங்கி நின்றது…

கணவன் சின்ன வயதிலேயே துறந்துபோனவர், பிள்ளைகளும் அவளுக்கு இருக்கவில்லை,
கணவனை இழந்த பிறகு, இன்னொருவரை கணவனாக ஏற்றுக்கொள்ளவும் மனம் ஒப்பவில்லை, வீட்டாரிடமிருந்தும் உறுதியான ஆதரவு இல்லை, அதனால் தான் வேலை செய்து தன் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறாள்…

தீரஜ் அவளைத் தேர்ந்தெடுத்த விதமே நந்தினியின் மனதைத் தொட்டது.. ‘திருமணத்துக்கு பிறகு உன் அம்மாவும் என் பொறுப்பு தான்’  என்று சொன்னது போல், அந்த வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றியிருந்தான்,
பார்வதியின் ஒவ்வொரு தேவையிலும் நளினி அருகில் இருந்து கவனித்துக் கொண்டாள்..

இதைக் கண்ட நந்தினியின் மனம் கனமாய் இருந்த அச்சங்களிலிருந்து படிப்படியாக வெளிவந்தது.. ‘என் அம்மாவை கவனிக்க ஒரு நல்லவங்க இருக்காங்க, நான் இனி கவலைப்பட வேண்டியதில்லை’ என்ற நிம்மதி அவளது உள்ளத்தில் மலர்ந்தது…

அந்த நிம்மதியோடு தான் அவள் கணவனுடன் இனி தனது வாழ்க்கை தொடங்கப் போகும் அந்த வீட்டை நோக்கி பயணித்தாள்,…

சில நிமிடங்களின் பயணித்திற்க்குப் பின் அந்த பெரிய காம்பவுண்டினுள் நுழைந்தது அவர்கள் வந்த கார், உள்ளே நுழைந்தவுடன், கண்களுக்கு பளிச்சென்று தெரிய வந்தது
நடுநாயகமாக அரண்மனை போல வீற்றிருந்த அந்த மாளிகை,
அதைச் சுற்றி அமைந்திருந்த பசுமையோடு பரந்த தோட்டமும் மின் விளக்குகளின் ஒளியில் அழகு பூண்ட பாதைகளும், வேறு உலகம் போலத் தோன்றியது..

அந்த காட்சியைக் கண்ட நந்தினி, மெய்மறந்தவளாய் இருந்தாள்…
‘இப்படி ஒரு வீட்டை நான் சினிமால தான் பார்த்திருக்கேன்…’ என்று மனதில் சொல்லிக் கொண்டவளுக்கு இப்போது நிஜமாக அவளின் வாழ்க்கை மேடையாக மாறிய உண்மை அவளை மலைக்க வைத்ததோடு, சிறிது பயத்தையும் உண்டுபண்ணியது…

“வெல்கம் ஹோம் நந்தினிமா”
தியாகராஜன் அன்பான புன்னகையுடன் சொன்னார், அவரின் அன்பில் அவள் இதழ்களும் மெல்ல விரிந்தது,..

வண்டி போர்டிகோவில் நின்றதும், அனைவரும் இறங்கினர்,
தீரஜ் வண்டியில் இறங்க அவனின் உதவியாளன் விரைவாக வந்து உதவி செய்து, வீல்சேரை எடுத்து, அவனை அமரச்செய்தான்…

அந்தச் சில நொடிகளில், நந்தினியின் கண்கள் தொடர்ந்து அந்த மாளிகையின் கதவுகளையே பார்த்துக்கொண்டிருந்தன இங்கிருந்து தான் தன் புதிய வாழ்க்கை ஆரம்பிக்க போகிறது என்ற உணர்வோடு…

மகன் உள்ளே போவதை கண்ட தியாகராஜன்,.. “இருப்பா ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு,.. “வனிதா… ஆரத்தி எடுத்துட்டு வாமா!” என்று உள்ளே நோக்கி குரல் கொடுத்தார்…

ஆனால் உள்ளே இருந்து எந்தப் பதிலும் வரவில்லை, சில நொடிகளில், அங்கே வேலை செய்யும் வள்ளியம்மா தான் ஆரத்தித் தட்டைப் பிடித்துக்கொண்டு வந்தார்…

தியாகராஜன் சற்று குழப்பமாக வள்ளியைப் பார்க்க, வள்ளியோ ஏதோ சொல்ல முடியாமல் தவித்தார்,…

அந்தச் சின்னச் சிக்னலிலேயே ஏதோ புரிந்துபோனது தியாகராஜனுக்கு.. “சரி… நீயே ஆரத்தி சுத்திடு,” என்று சொல்லவும், வள்ளியும் தன் முகத்தில் புன்னகையை மலரச்செய்து, ஆரத்தித் தட்டில் தீபத்தை ஏற்றி, பாரம்பரிய சடங்கைச் செய்தார்…

“உள்ளே வா மா…” என்று அன்போடு மருமகளை கைகளை விரித்து அழைத்தார் தியாகராஜன், சிறிது தயக்கத்துடன் தலையசைத்து, தன் வலது காலை முன்னே வைத்து உள்ளே நுழைந்தாள் மதுநந்தினி….

கண்கள் தானாகவே விரிந்தன,
அவள் முன்னே பறந்து விரிந்திருந்தது அளவுக்கு அதிகமான பெரிய ஹால், அதன் மையத்தில் மென்மையான சோபா செட், அதன் மேலே தொங்கி கொண்டிருந்த கண்களை கவரும் பெரிய விளக்கு, சுற்றிலும் செம்மையாக அமைக்கப்பட்ட மாடிப்பட்டுகள், பல அறைகள், வலப்பக்கத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்த லிஃப்ட் என அனைத்தும் சேர்ந்து மாளிகையின் பிரமாண்டத்தையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தியது.

வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு மிரண்டு விழித்தவளின் பார்வை சோபாவில் அமர்ந்திருந்த வனிதாவில் வந்து நின்றது,…

தீராஜும் தியாகராஜனும் கூட அவரை கவனித்திருக்க, தியாகராஜனின் கண்கள் சற்று சுருங்கின தங்கையை கண்டு, ‘இங்கே தான் இருந்திருக்கிறாள் ஆனா நான் கூப்பிட்டும் வரல’ வருத்தமாக நினைத்துக் கொண்டவர்,.. அடுத்த நொடியே அதை மறைத்து இலகுவாகச் சிரிக்க முயன்று,.. “வனிதா… பாருமா, மருமக வந்திருக்கா,” என்று பாசத்துடன் கூறினார்…

ஆனால் வனிதாவோ எரிச்சலுடன் எழுந்தவர், அங்கு சங்கோஜத்துடன் நின்றிருந்த நந்தினியைப் பார்த்தவுடன், அவர் உதடுகள் வளைந்து,.. “இந்தப் பிச்சைக்காரி…” என்று கேலியாய் ஏதோ சொல்ல முயன்றவர் “வனிதா” என்ற
தியாகராஜனின்  இடிமுழங்கும் குரலில் வாயைமூடி விட்டார்,…

வீடு முழுக்க அந்த சில நொடிகள்  அமைதி சூழ்ந்தது….

சங்கடத்துடன் நின்ற நந்தினி தலையை கீழே குனிந்தாள், அவள் மனதில் அந்த ஒரு சொல்லின் தழும்பு ஆழமாகப் பதிந்துவிட்டது…

“இவ என் மருமக” அழுத்தமாய் சொன்ன தியாகராஜன்,.. “இவளுக்கான மரியாதையை நீ கொடுத்து தான் ஆகணும்”
அவரது வார்த்தைகளின் அழுத்தத்தால் வனிதாவின் முகம் சற்றே கசங்கியது… ஆனால் நந்தினியின் மனதில், அந்த நேரத்தில் ஏற்பட்ட காயம் அதிகமாய் இருந்தது,…

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா…” வனிதாவின் குரலில் சற்றே புளிப்பு கலந்த கசப்பு ஒலித்தது… “உங்களைப் போல எனக்கு பெரிய மனசு இல்ல, என்னால இப்படிப்பட்ட ஒரு பொண்ணை மருமகளா ஏத்துக்க முடியாது, இதை நான் முன்கூட்டியே சொல்லிட்டேன், எனக்கு பிடிக்கலனால தான் கல்யாணத்துக்கும் கூட வரலை”
அதனைச் சொல்லிவிட்டு சினம் கலந்த பார்வையுடன் அடியெடுத்து வைத்து வனிதா அங்கிருந்து அகன்றுவிட,.. தியாகராஜன் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டபடி மகனை நோக்கினார்,..

தீரஜ் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான், ஆனால் அவனருகில் நின்றிருந்த நந்தினியோ சங்கடத்திலும் துக்கத்திலும் சிக்கிக் கொண்டிருந்தாள்…

அவளின் முகமே சொல்லி விட்டது அவள்  மனம் மிகவும் வருந்தி இருக்கிறது என்பதை, அந்த நொடியில் தியாகராஜனின் இதயம் நொந்து போனது…

அவளருகில் வந்து மெதுவாய் குரல் தாழ்த்தி,.. “என்னை மன்னிச்சிடும்மா” என்று சொல்ல,..
அதிர்ச்சியடைந்த நந்தினி..
“ஐயோ… நீங்க ஏன் மாமா மன்னிப்பு கேட்கிறீங்க?” அவள் குரலில் நடுக்கம் இருந்தாலும் வார்த்தைகள் உறுதியாய் வந்தன…

மேலும் “சார் எல்லாம் சொல்லி இருக்கார், நான் எதுவும் நினைச்சுக்கல” என்றாள் புன்னகையை உதட்டில் கொண்டு வந்து,..

ஆம் திருமணத்திற்கு முன்பே தீரஜ், வனிதாவை பற்றியும் அவரின் மகளைப் பற்றியும் கூறி இருந்தான்,
ஆனால் மனிஷாவுடன் ஏற்பட்ட தன் காதலை கூறவில்லை, அவன் அதனை மறக்க தான் நினைத்தான், அதனால் தான் சொல்ல தோன்றாமல் விட்டு விட்டான்,..

நந்தினி தியாகராஜனிடம் அப்படி சொல்லி இருந்தாலும் அவள் மனதில் வனிதாவின் நேரடி வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தி இருந்ததும் உண்மையே, தன் மாமனார் மேலும் வருத்தப்பட வேண்டாம் என்பதற்காகவே புன்னகைத்து சமாளித்திருந்தாள்,..

மருமகளை வாஞ்சையோடு நோக்கியவர், மெதுவாய்,.. “சரிமா… நீ ரூமுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு, கூட்டிட்டு போடா” என்று மகனை நோக்கி சொன்னார்…

தந்தையின் வார்த்தைக்குத் தலை அசைத்த தீரஜ், லிஃப்டை நோக்கி நகர்ந்தான், அவனின் வீல்சேருடன் இணைந்து நடந்தாள் நந்தினி, இருவரும் அமைதியாக லிஃப்டில் ஏறினர், லிஃப்டின் மென்மையான ஓசை மட்டும் அந்த இடைவெளியை நிரப்பியது….

முதல் மாடி வந்து சேர்ந்ததும், அமைதியாகவே  தனது அறையை நோக்கி நகர்ந்தான் தீரஜ், அவனின் பின்னால் தடுமாறும் அடிகளோடு சென்றாள் நந்தினி….

அறை முன் வந்து நின்று, கதவின் கைப்பிடியைத் திருப்பி திறந்ற தீரஜ்.. “வெல்கம்…” என்று சிறு புன்னகையுடன் அவளை தான் முதலில் உள்ளே செல்லக் கூறினான்…

முதல் தடவையாக அவன் வாழ்க்கையின் தனிப்பட்ட உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறாள் நந்தினி, உள்ளே நுழைந்தவுடன் அவளது கண்கள் வியப்பில் பெரிதாயின…

விசாலமான அறை சுத்தமாக பளீரென்று மிளிர்ந்தது, நடுவில் பரந்து விரிந்த கிங்-சைஸ் கட்டில்,
அதன் ஓரத்தில் மென்மையான சோபாசெட், ஒரு பக்கத்தில் கண்ணாடி கதவுடன் ஒளிரும் ஃப்ரிட்ஜ், மற்றொரு பக்கத்தில் அழகிய அட்டாசிட் பாத்ரூம் என இவை எல்லாமே சினிமாவில் பார்த்த அரண்மனை அறைகளை தான் நினைவூட்டியது…

உள்ளே போகவே நிறைய தயக்கம் அவளுக்கு, அடுத்த அடி எடுத்து வைக்கமால் நின்ற இடத்திலேயே  நின்று விட்டவளிடம் “என்ன நின்னுட்ட உள்ளே போ…” என்றான் தீரஜ்…

அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மெல்ல அடியெடுத்து வைத்து உள்நுழைந்தாள் நந்தினி, அவளது முகத்தில் பரவியிருந்த பதட்டத்தைப் பார்த்தவன்,..
“என்னாச்சு?” என்று கவனமாக கேட்டான்…

“எல்லாம் புதுசா இருக்கு… மலைப்பா இருக்கு… பயமாவும் இருக்கு…” என்றாள் அவள் மெதுவாக…

“பயமா? என்ன பயம்?”  நெற்றியைச் சுருக்கினான்…

“தெரியல… இவ்வளவு பெரிய வீட்டையெல்லாம் நான் நேர்ல பார்த்ததே இல்ல, இப்போ உள்ளேயே நுழைஞ்சிருக்கேன்… மூச்சே முட்டுற மாதிரி இருக்கு…” அவளது குரலில் அச்சமும்  தடுமாற்றமும் ஒலித்தது…

அவளது நிலையை உடனே புரிந்துகொண்ட தீரஜ், சிறு புன்னகையுடன் “என் கூட வா…” என்றான்…

அவன் பால்கனிக்குச் செல்லும் கதவை திறந்தவுடனே இயற்கையின் குளிர்ந்த காற்று முகத்தை வருடியது, அந்த காற்றோடு கூடிய சுவாசம் நந்தினியின் நெஞ்சை சற்று இலகுவாக்கியது…

அவனோடு மெதுவாக நடந்தாள், விசாலமாக விரிந்த பால்கனி அவளது கண்முன் திறந்து நின்றது, அங்கு மெதுவாக காற்றில் ஆடிய அழகிய ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது, அந்த காட்சியைப் பார்த்ததும், அவள் கண்களில் சிறு புன்னகை உதிர்க்க, அந்த கணம், இங்கு சற்றேனும் அமைதி கிடைக்கும் போல உணர்ந்தாள் அவள்,…

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
89
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment