பிறை -2
காலை நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தார் திவாகர். அவர் வழமையாக செய்யும் விஷயம் தான் என்றாலும், இன்று மீனாட்சி பட்டென்று அவர் முன்பு டீயை வைத்துச் சென்றாள்.
மனைவியின் செயலுக்கு வாய்க்குள்ளே சிரித்தவர், பேப்பரை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
” என்ன பா நைட்டு என்னாச்சு ” ஆர்வமாக வந்த மகளுக்கு பதில் கூற முடியாமல், கரண்டி விழும் சத்தத்தில் மொத்தமாக மூடிக் கொண்டார் திவாகர்.
” அப்போ ஏதோ நடந்திருக்கு ” என பார்கவி சிரிக்க.. மேலே இருந்து கேட்ட பூட்ஸ் சத்தத்தில் கப் சிப் என ஆகிப் போனார்கள்.
தந்தை முகத்தை காட்டவே இல்லை. பார்கவி அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தாள். அவன் வரும் சத்தத்தில் மீனாட்சி தான் அவசரமாக வந்து டிபனை பரிமாறினார்.
வீட்டில் உள்ளவர்களது அமைதியிலேயே விஷயம் பெரிது என உணர்ந்து கொண்டான் ஆதிதேவ்.
” இன்னைக்கு லஞ்ச் வேண்டாம் மா.. வெளிய மீட்டிங்ல சாப்பாடு கொடுப்பாங்க ” என்ற தகவலோடு அமைதியாக உண்டவன்.. மீனாட்சி கையை பிசைந்து கொண்டு அவனையும், தனது கணவனையும் மாறி மாறி பார்ப்பதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
இறுதியாக உண்டு முடித்தவன்.. எழுந்து கையை சுத்தம் செய்து கொண்டு ஹாலிற்கு வந்தவன்.. ” உங்க முடிவு தான்.. என்னவும் பண்ணுங்க ” என்ற வார்த்தையில் மூவருமே அதிர்ந்து தான் போனார்கள்.
பார்கவியை நெருங்கி வந்தவன்.. ” இந்த டேலன்ட் வேற இருக்கா உனக்கு” என அவளது கையில் தலைகீழாக இருந்த புத்தகத்தை திருப்பி வைக்க.. நாக்கை கடித்துக் கொண்டாள் பார்கவி.
அவன் கார் கிளம்பும் சத்தத்தில் அனைவரும் பெரும் மூச்சுடன் அமர்ந்தனர்.
” ஒரு வழியா அவன் ஓகே சொல்லிட்டான்.. ” குதூகலமாக மீனாட்சி வந்ததும்.. ” அப்பா பாவம் இந்த மீனாட்சிகிட்ட மாட்டிட்டு முழிப்பாருன்னு என் மகன் எனக்கு கருணை காட்டிருக்கான் மீனு ”
” அதுசரி பேசுறதும் இல்ல.. இதுல நக்கல் பேச்சு வேற .. உனக்கு நேரம் ஆகலையா, கிளம்பி சாப்பிட்டு போ டி ” என மகளை விரட்டினார் மீனாட்சி.
” ஏன் மா இவ்வளவு அவசரம்.. “
” கல்யாணம் வேலை எல்லாம் தலைக்கு மேல கிடக்குல” என்ற மீனாட்சியை பார்த்து இருவருமே வாய் விட்டு சிரித்தனர்.
காரில் சென்று கொண்டிருந்தவனின் நினைவுகளில் வந்து விழுந்தாள் அவள். கமிஷனர் என்பதால் காதல் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் கூட அவன் முன் வந்து நின்றதில்லை. ஓரப் பார்வையால் அவனை களவாடிக் கொண்டு, அவன் சென்று பின்பு அவனது அழகை வர்ணிப்பதும் அவனுக்கு தெரியாமல் இல்லை. இதுவரை திருமணத்தை பற்றி பெரிய ஆசை ,கனவு என எதுவும் இருந்ததில்லை.
அவனுடைய ஆசை , கனவு எல்லாம் நிறைவேற்றி இருந்தது. காவல் அதிகாரியாகி நாட்டுக்கு சேவை செய்வது தான் அவனது கனவு. அதற்கு அடுத்து அவன் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.
இதோ இரண்டு வாரங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் அனைவரும் கோவிலுக்கு சென்றிருக்க.. டியூட்டியை முடித்து கொண்டு அப்படியே அவனும் சென்றிருந்தான் எல்லாம் மீனுவின் முக வாட்டத்திற்க்காக தான்.
வீட்டில் உள்ள நால்வரும் சன்னிதியில் நின்று கடவுளை வணங்க.. நால்வரது பேருக்கும் அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.
பின்னே அங்கிருந்த தூண் ஓரத்தில் அமர்ந்து கொள்ள.. அப்போதும் அவன் கேஸ் விஷயமாக ஓரமாக நின்று போன் பேசிக் கொண்டிருந்தான் ஆதி.
” இவன் ஏங்க இப்படி வேலை வேலைன்னு கிடக்கான்.. நீங்கலாம் என்னைய லவ் பண்ணிட்டு தானே இருந்தீங்க ” என மீனாட்சி வருத்தமாக கேட்க.. கிளுக்கென்று சிரித்து விட்டாள் பார்கவி.
” என்ன டி சிரிப்பு” மகளை முறைத்தவருக்கு பதிலாக , ” அவளை ஏன் முறைக்கிற மீனு.. உன் பையன் அப்படித்தானே கஞ்சி போட்ட சட்டை மாதிரி விறைப்பா இருக்கான் .. இதுல எங்க இருந்து லவ் வரது. அப்படியே உங்க அப்பா மாதிரி… இதுல அப்படியே லவ் வந்தாலும் ஒரு பொண்ணாவது இவன் கிட்ட தைரியமா வந்து சொல்லிடுமா என்ன.. மூஞ்சிய இஞ்சி திண்ண குரங்கு மாதிரி வச்சிருக்கான் ” திவாகர் அவர் பங்குக்கு எடுத்து வைத்தார்.
” போதும் போதும் என் மகனை பேசுனது. அவனுக்குன்னு ஒருத்தி பிறக்காமலா இருப்பா.. கண்டிப்பா வருவா.. அவ தான இந்த வீட்டு மருமகள் “
” நல்லா இருக்கு மா சினிமா டயலாக் ” பார்கவி சிரிக்கும் நேரத்தில்.. அவனை நெருங்கி வந்தாள் ஒரு பெண்.
ஏதோ உதவி என நினைத்து பேசிக் கொண்டிருந்த போனை வைத்து விட்டு நிமிர்ந்தவன்.. ” யா எனி ஹெல்ப்.. ” என்றான் நேர்ப்பார்வையில்.
தவித்து போனவள்.. நேரில் வந்து விட்டு சொல்ல முடியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள். மொத்த குடும்பத்தின் போகஸ்சும் அங்கே தான் இருந்தது.
” ஹலோ ” என மீண்டும் அழைத்தான்.
” சா… சார்.. காணாம போச்சு சார்… ” திக்கி திணறி கூறினாள்.
” என்னது..ஓ திருட்டு கேசா”
” ஓகே.. எங்க இருந்து வரீங்க “
” அடையார்ல இருந்து “
” அங்க இருந்து இவ்வளவு தூரமா “
” முருகனை பார்க்க “
” எங்க தொலைஞ்சது “
” இங்க தான் சார் “
” என்ன பொருள் ” என்றதும் தைரியத்தை திரட்டிக் கொண்டு .. ” அது வந்து மனசு.. சார் ” என்றாள் பரிதாபமாக..
” வாட் … ” என சற்றே அதிர்ந்தவன்..
” சார்.. அது உங்களை.. எனக்கு .. பிடிச்சிருக்கு சார் ” என அழும் நிலைக்கே சென்று விட்டாள் அந்த பெண்..
பக்கத்தில் அமர்ந்திருந்த அவனது குடும்பத்தினருக்கு வாயில் ஈ போகாதா குறை தான்.
” மா என்னமா நடக்குது அங்க ” பார்கவி வாயை பிளக்க..
” லவ் புரோபோசல் டி.. கொஞ்சம் அமைதியா பாரு டிஸ்டர்ப் பண்ணாம ” என்ற தாயை மார்மகாக பார்த்தவளுக்கு அண்ணன் என்ன பதில் சொல்வான் என்ற ஆர்வமே மேலோங்கி இருந்தது.
பெருமூச்சு விட்டவன்.. ” என்ன படிக்கிறீங்க ” என்றான் அவளை மேலிருந்து கீழ் வரை அளந்த வண்ணம்.
” பிளஸ் டூ முடிக்க போறேன் சார் ” என்றதும் மூவருக்கும் புஸ்சென்று ஆனது.. இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியாமல் பார்கவி வாயை மூடிக் கொண்டு சிரிக்க.. திவாகர் அவளை அடக்கினார்.
அவளது படிப்பிற்கும் உடல்வாகிற்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தாள் அந்த பெண்..கல்லூரி முடித்த பெண் போல தோற்றம்.
” உங்க வீட்டுக்கு தெரியுமா இந்த விஷயம்..” என்றதும்.. பயத்தோடு அவள் இல்லை என தலையசைக்க.. அவள் கையில் இருந்த போனை சட்டென்று வாங்கிக் கொண்டவன்..
” ம்ம் பாஸ்வேர்ட் போடு ” என்றதும் விரல் நடுங்க அதையும் செய்தாள். போனில் ‘டாடி மை வேர்ல்ட் ‘ என சேவ் செய்திருந்த நம்பருக்கு அழைத்து அனைத்தையும் கூறி, உடனடியாக கோவிலுக்கு வரச் செய்தான்.
பயத்தில் அழுது விட்டாள் அந்த பெண். அவளை பார்க்க மீனாட்சிகே பாவமாக போனது. எழுந்து சென்று ஆறுதல் கூறினால் கூட மகனிடம் கடி வாங்க வேண்டுமே என அமைதியாக அமர்ந்து கொண்டார்.
அரை மணி நேரத்தில் அருகில் இருந்ததால் அவளது தந்தை வந்து சேர்ந்தார். நடந்ததை விளக்கி விட்டு, ” கவனமா பார்த்துக்கோங்க.. படிக்கிற வயசு.. எல்லாரும் நல்லவனுங்க கிடையாது.. இங்குளூடிங் மீ ” என தனது குடும்பத்தை பார்க்க.. அவர்களும் எழுந்து, கிளம்பி விட்டனர்.
அதை நினைத்து பார்த்தவனுக்கு கீழ் உதடுகள் லேசாக மலர்ந்து தான் போனது. அப்போதிலிருந்தே மீனாட்சி வேகமாக பெண் தேட ஆரம்பித்தார். இவனுக்கும் காதல் வராது, காதல் வந்த பெண்ணையும் தகப்பனிடம் மாட்டி விடுவான் பாவி என நினைத்தவர், தீவிரமாக பெண் தேடினார்.
அதன் விளைவு தரகரிடம் கூறி ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தார். இப்போது மகன் சம்மதம் கூறவும் உடனே தரகருக்கு கால் பறந்தது. பெண் பார்க்கும் படலமும் ஆரம்பம் ஆனது. திருமணம் என்று கூறினால் சட்டென அந்த சின்ன பெண் நினைவிற்கு வருகிறாள் அவனுக்கு. முதல் முதலில் காதல் கூறிய பெண் அல்லவா.
***
சோர்ந்த முகத்துடன் இருக்கும் மகளை காண பொறுக்காத சிவகாமி.. ” அப்பா வரவும் நான் பேசுறேன் கண்ணு.. முகத்தை அப்படி வைக்காத ” சமாதானம் செய்தும் அவளது முகம் தெளிவாகவில்லை.
” என்ன கண்ணு அதான் சொல்லுறேன்ல “
” என்ன மா புதுசா சொல்லுறீங்க.. நீங்க சொல்றதை என்னைக்கு இந்த வீட்டில கேட்டிருக்காங்க.. ” கவலையில் இருந்த மகளின் முகத்தை நிமிர்ந்தியவர்..
” வெளிய இருந்து பார்க்குறவங்களுக்கு அப்படி தான தெரியும்.. எனக்கும் உங்க அப்பாவுக்கு நடுவில என்ன நடக்கும்னு தெரியுமா உனக்கு.. இருபத்தி அஞ்சு வருஷம் அவரோட குடும்பம் நடத்திருக்கேன். என் பேச்சை ஒன்னு கூட கேட்கலைனா இத்தனை வருஷம் தாண்டிருக்க முடியுமா சொல்லு. நான் பேசுறேன் ” என்ற தாயை அதிசயத்து பார்த்தாள் பிறைநிலா.
” நிஜமாவா மா ” என்ற மகளுக்கு ஆம் என தலையாட்டி வைத்தார் சிவகாமி.
” எப்போ கிளம்பனும் “
” இந்த வாரம் கடைசில “
“எத்தனை நாள் “
” ஒரு மாசம் “
” ஒரு மாசமா “
” ஆமா மா.. இன்டன்ஷிப் அப்படித்தான் இருக்கும்.. அதை முடிச்சுட்டா அவ்வளவு தான் காலேஜ் முடிச்சிடலாம் ”
” சரி தான்..” என இழுத்தார்.
” அம்மா பிளீஸ் மா.. அப்பத்தா கிட்ட எப்படி மா சொல்லுறது.. ”
” அதெல்லாம் உங்க அப்பா பேசிப்பாங்க “
” என்னமோ சொல்லுறீங்க மேஜிக் நடந்தா சரிதான் ” என வேலையை பார்க்க ஆரம்பித்தாள் பிறைநிலா.
எம்பிஏ முடிக்கும் தருவாயில் இருக்கிறாள் பிறை. மேற்படிப்பு படிக்கவே வீட்டில் அத்தனை போராட்டம்.. வீட்டில் இருந்து தான் கல்லூரி சென்று வர வேண்டும் என்ற அகிலாவின் கட்டளையை ஏற்று இரண்டு மணி நேரம் பயணம் செய்து பக்கத்தில் உள்ள மதுரையில் நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள்.
இப்போது இன்டென்ஷிப்காக தாயிடம் பேசி வீட்டில் சம்மதம் கேட்டு நிற்கிறாள். போகும் இடத்தில் அவளுக்காக பெரிய விஷயங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருப்பதை அறியாது போனாள். தெரிந்திருந்தால் சென்றிருக்க மட்டாளோ. விதி இழுத்துக் கொண்டு அல்லவா செல்ல போகிறது.
மறுநாளே விதி வேலையை காட்டியது. தாயை சமாதானம் செய்து ஒரு வழியாக சம்மதம் வாங்கி இருந்தார் சிவானந்தம். உண்மையிலேயே அவளால் இந்த விஷயத்தை நம்ப முடிவில்லை. தாயை அதிர்வாக பார்க்க..அவரோ சிறு புன்னகையுடன் வேலையை பார்க்க சென்று விட்டாள். 25 வருட தாம்பத்திய வாழ்க்கை அவருக்கு தெரியாதா கணவனை பற்றி.
ஒரு மாதம் சென்னையில் நாட்களை கழிக்க வேண்டும்.. எப்படியெல்லாம் கழிக்க வேண்டும் என நண்பர்களோடு சேர்ந்து திட்டம் தீட்டினாள் பிறை. அவளது திட்டத்தை உடைத்தெறிய ஒருவன் காத்திருக்கிறான் அங்கே..
நடப்பது யாவும் நன்மைக்கே..
சனா💝