Loading

பூ-24

 

இரண்டு நாட்கள், உணர்வுகளே இல்லாமல், பசி தூக்கம் மறந்த நிலையில், வீட்டில் அநாதரவாய் கிடந்தான், அச்சிறுவன்.

 

அவனுக்கான உணவோடு சக்தி அவ்விடம் வர, 

 

அவரைப் பார்த்தவன் கண்களில், மீண்டும் உவர் நீர் ஊற்றெடுத்தது.

 

காய்ந்துக்கிடந்த விழிகள், எரிந்து, கண்ணீரை வாரிக் கொட்டி, சிவந்து போக,

 

“அய்யா சாமி.. இப்படியே எத்தனை நாள் கிடப்ப?” என்று சக்தி கேட்டார்.

 

“சக்திம்மா.. எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?” என்று அச்சிறுவன் அமைதியான குரலில் கேட்க,

 

“என்ன செய்யனும் சாமி? சொல்லு” என்று சக்தி கேட்டார்.

 

“என்னைப் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போகனும். எங்கம்மாவுக்கு நடந்த அநீதிக்கு சாட்சி சொல்லனும்” என்று விரைத்துப்போன குரலில் அச்சிறுவன் கூற,

 

“சாமி.. புரியாம பேசாத. இது பொல்லாத பூமி. இங்க வாழவே படாதபாடு படனும்.. நீ சின்னப் பையன். இந்தப் போலீஸு கேஸெல்லாம் உனக்கு வேணுமா?” என்று சக்தி கேட்டார்.

 

“வேணும் சக்திமா.. எங்கம்மா சாவுக்கு எனக்கு ஒரு நீதி வேணும்.. திருநங்கைகள்னா என்ன வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம்.. கேட்க ஆளில்லைனு தைரியம் தானே இந்த மாதிரி ஆளுங்களுக்கு? அது இல்லைனு காட்டனும் சக்திமா” என்று அமைதியாய் ஆரம்பித்து அவன் உக்கிரமாய் முடிக்க,

 

சக்திக்கு அவனை அடக்கும் வழி புரியாமல் போனது.

 

அவன் சொல்வதில் உள்ள நியாயம் உரைத்தாலும், பலவற்றைக் கண்டு கடந்து வந்தவருக்கு, இதில் எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை என்ற உண்மையும் சுட்டது.

 

சிறுவனின் மன ஆறுதலுக்காகவேணும் சென்று புகார் கொடுத்து வரலாம், என்று எண்ணியவர், அவனை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றார்.

 

உள்ளே நுழைந்ததுமே சக்தியைச் சிலர் பார்க்கும் பார்வையே மாறியது‌. அங்குள்ளவர்களுக்கும் சக்தியைத் தெரியுமே. வெளியில் பொய் வேடம் போட்டுக்கொண்டு திரை மறைவில் தன் தேவைத் தீர்க்கும் சிலரில் ஓரிருவரும் அங்கு இருந்ததன் உபயம், அவர்மீதான பார்வையே மாறியது.

 

வீரமாய் காவலர் முன் சென்ற சிறுவன், “நான் ஒரு கேஸ் தரனும் சார்..” என்க,

 

முதன்மை காவல் அதிகாரி, அவனை ஏற இறங்க பார்த்துச் சக்தியைப் பார்த்தார்.

 

அவர் விடுதிக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பதை அவரைப் பார்த்தபின் புரிந்துகொண்ட சக்தி, “சாமி வாய்யா போயிடலாம்” என்க,

 

“இரு சக்தி.. தம்பி ஏதோ புகாருங்குறான்ல? என்னனு கேட்போம்” என்று அக்காவலர் கூறினார்‌.

 

“எங்கம்மா இறந்துட்டாங்க.. அவங்க இறக்கக் காரணமா இருந்தவன் மேல புகார் தரனும்” என்று அவன் கூற,

 

“யாரு உங்கம்மா?” என்று கேட்ட காவலன், சக்தியைப் பார்த்தான்.

 

“சாரதா” என்று சக்தி கூற,

 

“ஏதே.. சாரதா உனக்கு அம்மாவா?” என்று கேட்டக் காவலன், அத்தனை ஏலனமாய் கைகொட்டி சிரித்தான்.

 

கோபத்துடன் அவனை முறைத்த சிறுவன், “எங்கம்மாவை ஒரு நாய், தகாத வார்த்தைல பேசி, ரோட்ல வச்சு அவமானப்படுத்திருக்கான். அது பொருக்காம எங்கம்மா சூசைட் பண்ணிக்கிட்டாங்க.. ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுறதும் வன்முறை தானே? அவன் மேல கேஸ் குடுக்கனும்” என்று சீற்றமாய் கூற,

 

“அந்த சாரதா.. அதான்.. ஒங்கம்மா.. அதுவே பொழைக்க வழியில்லாம கண்ட வேலை பாத்துட்டுருந்தது.. அதுக்கு மானம் ரோசம் வேறயா?” என்று நக்கலாய் கேட்டான்.

 

“ஏய்..” என்று சிறுவன் சீற்றமாய் காவலர் மீது பாய,

 

“அய்யா சாமி..” என்று சிறுவனை பிடித்துக் கொண்டார், சக்தி.

 

“என்ன தைரியம்டா உனக்கு?” என்று கோபம் கொண்ட காவலன், சிறுவனை ஓங்கி அறைய, தரையில் சுருண்டு விழுந்தான்‌‌.

 

காவலனின் கால்களைப் பிடித்துக் கொண்ட சக்தி, “அய்யா தெரியாம பண்ணிட்டான்யா.. சின்ன பையன் விட்ருங்கய்யா” என்று கெஞ்ச,

 

தரையிலிருந்து மெல்ல எழுந்தமர்ந்தபடி அக்காட்சியைக் கண்ணீரோடு பார்த்தான், அச்சிறுவன்.

 

“சொல்லி வை.. இல்ல சமாதி கட்டிடுவேன்” என்று சக்தியை உதைத்துத் தள்ளியவன், “இங்க இல்ல, நீ எங்க போனாலும் உங்கம்மா கேஸ்ல ஒன்னும் பு**க முடியாது” என்று கூற,

 

“எங்கம்மாக்கு நியாயம் வாங்கிக் குடுப்பேன்” என்று கத்திவிட்டு, காவல் நிலையத்திலிருந்து ஓடினான்.

 

“அய்யா சாமி” என்று சக்தி அவன் பின்னோடே ஓட,

 

கண்களில் கண்ணீர் பொங்கி வழிய, அதைத் துடைத்துக் கொண்டே ஓடியவனை, சாலையில் வேகமாய் வந்த ஒரு வாகனம், இடித்துவிட்டு நிற்காமல் சென்றது.

 

“அய்யயோ..” என்று அலறியபடி அங்கு ஓடிவந்த சக்தி, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மடியில் போட்டுக்கொண்டு கதறி அழுதார்.

 

அங்கிருந்த நல் மனம் கொண்ட வெகு சிலரில் யாரோ, அவசர ஊர்திக்கு அழைப்பு விடுக்க, சிறுவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

 

பெரும் போராட்டத்தோடு, அவன் உயிரை காத்து, சிகிச்சையை முடித்துவைத்த மருத்துவர்களுக்கு, அடுத்த நாளே, அவன் கோமா சென்றுவிட்டான் என்பது புரிந்து, பெரும் வருத்தமானது‌.

 

சக்தியின் விடாத வேண்டுதலோ? மருத்துவர்களின் சிகிச்சைக்கான பலனோ? ஏதோ ஒன்று, செல்லவிருந்த அவன் உயிரையும், தப்பியிருந்த அவன் சுயத்தையும் மீட்டுக் கொடுத்து, மாறாய், அவன் நினைவுகளைப் பெற்றிருந்தது.

 

சக்திக்கு இவ்விடயம் தெரியப்படுத்த, அந்த மருத்துவர் காலில் விழுந்து அழுதபடியே, “என்னால முடிஞ்ச பணத்தக் குடுத்துபுடுறேனுங்கம்மா.. அந்தப் புள்ளைக்கு வைத்தியம் பாத்து, ஏதாது ஒரு ஆசிரமத்துல சேத்து விட்டுடுங்க.. போதும்.. இந்தப் பிறவிகளோட அவன் பட்ட பாடொல்லாம் போதும். அநாதையாருந்தாலும் மூனுவேளை சோறும், தங்க இடமும் கொடுத்து அவன நிம்மதியா வச்சுகிட்டாளே போதும்..” என்று கூற,

 

மருத்துவரும், அவனுக்கான சிகிச்சைகள் பூரணமாய் முடிந்ததும், அருகிலிருந்த ஆசிரமத்தில் அவனைச் சேர்த்து விட்டிருந்தனர். அவ்வப்போது அவன் எதிரில் வராமல் சக்தி அவனை வந்து பார்த்துச் செல்ல, பின், ஏதோ ஒரு தம்பதியர், அவனைப் பார்க்க, இறந்துபோன தங்கள் மகனைப் போல் உள்ளதென்று கூறி, தத்தெடுத்துச் சென்று, அவனுக்குப் புது வாழ்வு கொடுத்திருந்தனர்…

 

தன் பழைய கதைகளைச் சொல்லி முடித்தவன் தலை, குனிந்தவண்ணமிருக்க,

 

சுற்றியிருந்த காவலர்கள் அமைதியாய், அவனைப் பார்த்திருந்தனர்.

 

தலையை உயர்த்தாமல், மேஜையில் தாளம் போட்டவன், “அப்றம் புது குடும்பம், படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைனு வாழ்க்கை நல்லாதான் போச்சு… நல்லாதான் போயிருக்கும்.. சமீபமா, படிக்கட்டுகள்லருந்து கீழ விழுந்து, தலையில் அடிப்பட்டு, என் பழைய நினைவுகள் நினைவு வராம இருந்திருந்தா” என்றபடி சட்டென்று நிமிர்ந்தான், அதிரூபன்.

 

அவன் முன், காக்கி உடையில், கால்மேல் காலிட்டு, கைப்பிடியில் முழங்கை ஊன்றி, மடக்கப்பட்ட விரல்கள்மேல், தன் தாடை பதித்தபடி, சிவப்ரியன் அமர்ந்திருந்தான்.

 

அவனைப் பார்த்து, ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்ட அதிரூபன், “நினைவுக்கு வந்த பழைய நினைவுகள் என்னைத் தூங்க விடலை, சாப்பிட விடலை.. நிம்மதியாவே இருக்க விடலை.. பைத்தியம் பிடிக்காத குறைதான் காட் டேமிட்” என்றபடி மேஜையில் ஓங்கி தட்ட,

 

சற்றும் அசராமல் அவன் கண்களையே அழுந்தப் பார்த்திருந்தான்.

 

“சமூக வளைதளங்கள்ல, பொது வெளியிலனு திருநங்கைகளைக் கேலி பேசுறதையெல்லாம் கேட்டா, ஆத்திர ஆத்திரமா வரும்.. அப்பவே கொன்னு புதைக்கனும் போல இருக்கும். அப்பத்தான்… அப்பத்தான் அக்னிகாவைக் காதலிச்ச.. அதைக் காதல்னு சொன்னா காதலுக்கே அசிங்கம்.. ஆசைப்பட்ட அந்தக் கேடு கேட்டவன், அவளைப் பேசின பேச்செல்லாம் என் காதுல விழுந்துச்சு.. என்னால அவன் பேசினதையெல்லாம் தாங்கிக்கவே முடியலை.‌ அவனைக் கொன்னு புதைச்சாத்தான் நிம்மதினு தோனுச்சு.. எனக்குள்ள ஒரு வெறி.. அதை கட்டுப்படுத்த முடியல. எவ்ளோவோ முயற்சி செய்தும் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியலை.. ஒரு கட்டத்தில், அவனைப் போட முயற்சி பண்ணேன்.. ஆனா மிஸ் ஆயிட்டான்” என்று அதிருப்தியாய் மேஜையைத் தட்டிக் கொண்டு கூறினான்.

 

“சரி.. பொறுமையா, நிதானமா இறங்குவோம்னு முடிவு பண்ணேன். ரெண்டு வருஷமா, எப்படி எப்படியெல்லாம் கொல்லலாம்? எதை பயன்படுத்தலாம்? கொலையில் மாட்டிக்காம இருக்க என்னெல்லாம் செய்யனும்னு யோசிச்சேன்.. திட்டம் போட்டேன். அதுக்கு வேண்டிய பொருள் எல்லாம், யாருக்கும் தெரியாம சேகரிச்சேன்.. கொல்லப்போறப்பலாம் நைட், என் பொண்டாட்டி பிள்ளை குடிக்குற பால்ல தூக்க மாத்திரியைக் கலந்து குடுத்து, அவங்கள குடிக்க வச்சுட்டு, என் தாகத்துக்கு ரத்தம் குடிக்க, கிளம்பி வர ஆரமிச்சேன்.. சும்மா ரோட்ல பார்க்குறது, சமூக வளைதலங்கள்ல பார்க்குறதுனு, இந்த சுத்துவட்டாரத்துல உள்ள ஆட்களையெல்லாம் நோட் பண்ணி, ப்ளான் பண்ணி, பாவ மன்னிப்புக் குடுத்தேன்.. யூ க்னோ.. இட் வாஸ் அ டெரிபில் ரிலீஃப்.. அன்ட் இட்ஸ் டிவைன்.. அந்த ஒவ்வொரு உயிர் போகும்போதும், துடிக்கும்போதும், எங்கம்மா சாவுக்கு நியாயம் கிடைச்ச போல இருக்கும்.. அவ்ளோ நிறைவா இருக்கும்.. அந்த துடிதுடிப்பு.. அப்படியே பாக்கப் பாக்க மனசெல்லாம் மயிலிறகு வச்சு வருடுறபோல அவ்ளோ இனிமையா இருக்கும்.. ஆஹா..” என்று கண்கள் மூடி, அத்தனை ரசனையோடு கூறியவன், சட்டென குனிந்து அமர்ந்து, கரங்கள் இரண்டையும், மேஜையில் ஊண்றினான்.

 

“நீ தான்.. நீ மட்டும் தான் எனக்கு பிரச்சினையா இருந்த..” என்று அமைதியாய் கூறியவன், நன்கு சாய்ந்து அமர்ந்து, “அக்னி..” என்று அழைக்க, அத்தனை நேரம் இல்லாத ஒரு மென்மை அவன் குரலில் எதிரொலித்தது.

 

“எங்கம்மா… எங்கம்மாபோலதான் அவளைப் பார்த்தேன்.. அவ என்கிட்ட வீடு வாடகைக்குக் கேட்டு வரும்போதே அவளை அடையாளம் தெரிஞ்சுடுச்சு.. மனசார அவளுக்கு வீடு வாடகைக்குக் குடுத்தேன்.. வெறும் வீட்டை மட்டுமில்ல, என் அன்பையும், ஆறுதலையும் குடுத்தேன்.. அவ சந்தோஷத்துல, எங்கம்மாவோட சந்தோஷத்தைப் பார்த்தேன்.. அவளுக்காக என்னால முடிஞ்சதெல்லாம் செய்து, அவ தனி ஆள் இல்லை, அண்ணனா நான் இருக்கேன்னு காட்டினேன்” என்று கூற,

 

சிவப்ரியன் அழுத்தமாய் அவனைப் பார்த்தான்.

 

“அவ உன்னை விரும்பினா.. மனசார விரும்பினா.. நீ அதுக்குத் தகுதியானவன் தான்.. உன் காதலும், உன்னை அவ விரும்புறானும் தெரிஞ்சு அவ்ளோ சந்தோஷப்பட்டேன்.. நீ அவளை நல்லா வச்சுப்பனு.. ஆனா எதிர்பாராத விதமா, நீ இந்த வழக்கைக் கையில எடுத்த. அக்னியைத் தூக்கிவச்சு மிரட்டினா, இந்த வேலையை விட்டுட்டு அவளோட எங்கயாது கண்காணாத இடத்துக்குப் போய் சந்தோஷமா இருப்பனு நினைச்சேன்.. அது நடக்குறதுக்கான அறிகுறிகளை நீ காட்டவும், ரொம்ப சந்தோஷமும் பட்டேன்.. பட் யூ ஆர் வெரி க்ளெவர்.. வெரி வெரி க்ளெவர்” என்று அதிரூபன் கூற,

 

சிவப்ரியன் ஒரு பெருமூச்சு விட்டான்.

 

“சட்டம்..” என்று கூறி, இளக்காரமாய் ஒரு சிரிப்பு சிரித்தவன், “என்னடா சட்டம்? ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் உங்க சட்டமா? அதுசரி.. அவங்களுக்கே உங்களால ஒழுங்கா தீர்ப்பு வழங்க முடியலை‌. பிறகு சமூகமே தப்பா சித்தரிக்குற திருநங்கைகளுக்கு எப்படி நீதி குடுப்பீங்க? திருநங்கையானதால கொலை செய்துட்டான், திருநங்கைனு தெரியாம தன் தேவையைத் தீர்க்க வந்து, முடியாம போன ஆத்திரத்தில் கொன்னுட்டான், திருநங்கையைத் தகாத வார்த்தையில் பேசி தற்கோலை செய்துக்கத் தூண்டிட்டான், தப்பான தொழில் செய்பவர்னு பொய் புகாரில் உள்ள தள்ளிட்டான்னு எத்தனை வழக்குகள்? எதுக்கு நீதி கிடைச்சுது இங்க? உங்களால ஒன்னும் கழட்ட முடியலைல? அதான் அந்த பாவிகளுக்கு நான் பாவ மன்னிப்புக் குடுத்து அனுப்பினேன்” என்று நன்கு சாய்ந்து அமர்ந்து, அத்தனை நிம்மதியோடு கூறினான்.

 

ராம், சந்தோஷ் மற்றும் திலகா, மூவரும், சிவப்ரியனையே நோக்க, 

 

நன்கு மூச்சை இழுத்துவிட்டு, கரங்களை, நாற்காலியின் கைப்பிடியில் அழுத்தி, எழுந்தவன், மற்ற மூவரையும் பார்த்துவிட்டு, “ப்ரொசீட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு வெளியேறினான்.

 

-தொடரும்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அதி பிடிக்கத்தான் திலகாவா?.