Loading

பூ-23

 

அந்த அமைதியான அறையின் நடுநாயகமாகக் கட்டப்படிருந்த, உலோகக் கொலையாளியைச் சுற்றித்தான் காவலர்கள் நின்றிருந்தனர்.

 

“சொல்லு.. எதுக்கு இதெல்லாம் செய்த?” என்று கேட்ட ராமின் கேள்விக்கு, ஏலனப்புன்னகை ஒன்று பதிலாய்.

 

தன் கைவிலங்கு பூட்டப்பட்ட கரங்களை நன்கு உயர்த்தி, சோம்பல் முறித்து, “பழி தீர்க்கக்த்தான்..” என்ற உலோகக் கொலையாளியை, கேள்வியாய், கோபமாய் பார்த்தனர்.

 

“ஆணும் பெண்ணும் சமம்னு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்குற இந்த அற்ப உலகத்துல, ஆணும் பெண்ணுமா இருக்கும் திருநங்கைகளுக்கான நியாயம் கேட்டு வந்தது எங்க தப்புதான்.. அதான் சட்டத்தாலக்கூட குடுக்க முடியாமப்போன அற்பப் பிறவிகளுக்கு, நான் பாவ மன்னிப்புக் கொடுத்தேன்” என்ற குரல், அங்கிருந்த காவலர்கள் செவிப்பறையெங்கும் எதிரொலித்தது.

 

‘இந்தச் சாதுவுக்குள் இப்படியொரு வெறி மிகுந்த குரலா?’ என்று தான் தோன்றியது, அவர்களுக்கு…

 

“யாருமே இல்லாம அநாதை மாதிரி இருந்துருக்கீங்களா?” என்று, அமைதியான, வலி சுமந்த கேள்வி, அவர்களை நோக்கி எழ,

 

ஒரு முழு நிமிடம் அங்கே அமைதி மட்டுமே நிலவியது…

 

“நான் இருந்தேன் சார்… நான் இருந்தேன்.. ஆனா அந்த அநாதரவான நிலையைப் போக்க எனக்கும் ஒரு துணை கிடைச்சது. அம்மாவா, அப்பாவா, ஆசானா, உடன் பிறந்தவர்களா, எல்லாமா என்னைப் பாதுகாத்துப் பாசம் காட்ட எனக்கு ஒரு உறவு கிடைச்சது… என் சாரதாம்மா கிடைச்சாங்க… கடமைக்குப் பெத்துப்போட்டு, ஆளுக்கொரு பக்கமா போன என் அப்பா அம்மாவால, நடு ரோட்டுல ஒருவேளை சோறு தண்ணி இல்லாம தவிச்சப்ப, பெண்மையே இல்லைனு ஏச்சு வாங்கி, தாய்மை என்ற வார்த்தைக்கான தகுதியில்லைங்குற சொல்லடிப்பட்ட என் சாரதாம்மா தான் என்னைத் தூக்கிட்டுப்போய் வளர்த்தாங்க” என்ற கொலையாளியின் கண்களில், அதீத வலி..‌ அதீத வேதனை…

 

சில வருடங்களுக்கு முன்…

 

அதிவிரைவாக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த தார் சாலையது…

 

சிறுவன் ஒருவன், பசியில் வாடி, குப்பைத்தொட்டிகளைக் கிளறிக் கொண்டிருக்க, சாலையின் எதிர்புரமிருந்த சிற்றுண்டி கடை அவன் கண்ணில் பட்டது. ஒருநாள் முழுக்க, சாலையில் அநாதரவாய் பட்டினிக் கிடந்தவனது வயிறெல்லாம் எரிந்து, பசியில் கூச்சலிட்டது. பசியைத் தாங்கி வாழும் வாழ்வு விதிக்கப்பட்ட பிஞ்சுக்கு, அந்த வயதிலேயே வாழ்வை வெறுத்த நிலைதான்…

 

ஏழு வயது பாலகனாய், அக்கடையை ஏக்கத்துடன் பார்த்தபடி, அவன் சாலையைக் கடக்க முயற்சிக்க, வாகனங்களின் ஓட்டம், பாதி தூரத்தில் அவனை மிரள வைத்தது.

 

சிறுவனவன் பீறிட்டு அழுதபடி, சாலையில் ஓட, அவனை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த லாரி, அவன் உயிரை ருசி பார்க்கத் தயாராய் இருந்தது. அத்தோடு முடிந்திருக்க வேண்டிய அவன் வாழ்வை, இன்னும் நீட்டி, பல இன்னல்களைக் கொடுத்து, சாதுவின் மனதில் சாத்தானை விதைக்க அப்போதே அந்த ஆண்டவன் திட்டமிட்டாரோ?

 

தன்னை நோக்கி வரும் வண்டியைக் கண்டு, அச்சம் கொண்டு, அப்படியே உரைந்து நின்றுவிட்டச் சிறுவனை, தன் மாரோடு அணைத்துக் கொண்டு, தூக்கிச் சென்று, சாலையோரம் வந்தார், சாரதா.

 

பயத்தில் வீறிட்டு அழுத சிறுவன், அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அம்மா…” என்று அழ,

 

“அய்யோ.. தங்கமே.. அழாதடா கண்ணா.. உனக்கு ஒன்னுமில்லடா” என்று அச்சிறுவனின் கண்களைத் துடைத்துவிட்டார் சாரதா.

 

சாரதா, ஒரு திருநங்கை. வீட்டாரால் கைவிடப்பட்ட, வெறும் இருபத்தி ஏழு வயதுடைய, இளம் திருநங்கை. எங்கும் வேலை கிடைக்காமல், பரிதவித்துக் கொண்டிருந்தவருக்கு, அவரது நடனக்கலை தான் மூன்றுவேளை உணவுக்கு உதவியது. 

 

தெருகூத்துகளில், நாடக மேடைகளில், சிலபல உணவகங்களில், விபச்சார விடுதிகளில், ஆடுவதற்காக மட்டுமே தன்னை அர்ப்பணிக்கும், நல் உள்ளம் படைத்தவர், சாரதா.

 

தன் கைக்கு வருவது, தன் வயிற்றுக்குப் போதுமானதாக இருப்பது போக, அனைத்தையும், ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், சேர்த்து வைத்து, மாதம் தவறாமல் சென்று கொடுத்து வந்திடுவார்.

 

மாதம் ஒருநாள் இப்படியான ஒரு இல்லத்திற்குச் சென்று, அவர்களுடன் ஆடிப்பாடி, தன் சேமிப்பை அவர்களது ஒருநாள் உணவுக்குக் கொடையாகக் கொடுத்து வருவார்.

 

சந்தோஷம் என்று சொல்லிக்கொள்ளும்படி அவர் வாழ்வில் ஏதுமில்லை என்றாலும் கூட, நிம்மதி அதிகமாகவே இருந்தது‌.

 

அப்படியானவர் கையில்தான், அச்சிறுவன் பத்திரமாய் வந்து சேர்ந்தான். “ஒன்னுமில்லடா கண்ணா..” என்று சாரதா கூற,

 

“அம்மா..” என்று அவரைக் கட்டிக் கொண்டு பாலகன் விக்கி விக்கி அழுதான்.

 

அவன் அழுகையும், அம்மா என்ற அழைப்பும், அவர் பால் மனம் உருக்க, போதுமானதாய் அமைந்தது.

 

மனம் இளகி, கண்களில் நீர் கோர்க்க, அச்சிறுவனைப் பார்த்தவர், “அம்மாதான்டா கண்ணா.. அம்மாதான்.. அம்மா தான்” என்று கூறி, முத்தமிட, “அம்மா.. பசிக்குதுமா” என்று மேலும் வீறிட்டு அழுதான்.

 

உடனே தாய்மையில் உள்ளமெல்லாம் பதறினார் சாரதா.

 

தன் சேலைத் தலைப்பில், குழந்தையின் கண்ணீர் துடைத்து, அவனை நல்ல உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி, தானே ஊட்டியும் விட்டார்.

 

அழுதபடியே உண்டவனிடம், “உன் அம்மா அப்பால்லாம் எங்கடா கண்ணா?” என்று கேட்க,

 

“அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டாங்க.. அம்மா அப்பாவை வேணாம்னு சொல்லி, என்னையும் அவங்க வீட்ல விட்டுட்டு போயிட்டாங்க.. அப்பா என்னை ரோட்ல விட்டுட்டுப் போயிட்டாங்க” என்று அழுதபடி கூறினான்.

 

‘அய்யோ.. பெத்த பிள்ளையை இப்படி வீதில விட எப்படி மனசு வந்தது?’ என்று மனம் பதறிய சாரதா,

 

“இனி நான் தான் உனக்கு அம்மா, அப்பா, எல்லாம்… சரியா?” என்று கேட்க,

 

“என்னை நீங்களும் ரோட்ல விட்டுட மாட்டீங்க தானே?” என்று பயம் கலந்த குரலில் கேட்டான்.

 

அச்சிறுவனின் குரலே, அவன் அன்புக்கு எத்தனை தூரம் ஏங்கியுள்ளான் என்பதை அவருக்கு விளக்கியது. இவ்வுலகில் வருமையை விடவும் கொடுமையான ஒன்று, அன்புக்காக பிச்சை எடுப்பது மட்டுமே.. அதை உணரப்பெற்ற சாரதாவிற்கு, அச்சிறுவனின் குரலில் உயிரே வலி சுமப்பதாய் தவித்தார். அவன் கேட்டக் கேள்வியில், கண்ணீர் கோர்க்க, மனம் பிசைந்து வருந்தியவராய், அவன் முகம் தாங்கினார்.

 

“கண்டிப்பா மாட்டேன் டா கண்ணா.. நிச்சயம் மாட்டேன்” என்று கண்ணீரோடு கூறிய சாரதா, அச்சிறுவனை மனமார தன் மகனாய் ஏற்றுக் கொண்டார்.

 

தன்னிடம் உள்ள பணத்தையெல்லாம் திரட்டி, அவனை அரசுப்பள்ளியில் சேர்த்து, படிக்க வைத்தார். அவனுக்கான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தார். அவனுக்கு கல்வி, உணவு, உடை, உறைவிடமென்று, அத்தனையையும் கொடுத்தார். அனைத்தையும் தாண்டி, அவன் ஏங்கிய அன்பையும் அரவணைப்பையும் கணக்கின்றி கொடுத்து அவனை மனதால் செல்வந்தன் ஆக்கினார்.

 

இனி வாழ்வே இல்லை என்று மரணப்படுக்கையில் கிடந்தவனுக்கு, புதுவாழ்வுக் கொடுத்ததைப் போன்று, வீதியில் அநாதரவான வாழ்க்கையை வாழவிருந்த சிறுவனுக்கு, அன்பின் அத்தனை அம்சங்களையும், அன்னையாய், தந்தையாய், தமக்கையாய், ஆசிரியராய் கொடுத்து மகிழ்வித்தார்.

 

“சாரதாம்மா..சாரதாம்மா..” என்ற அவனது குரல் மட்டுமே, அவ்வீட்டிலும், அவர் மனதிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

 

அவர் அன்பின் ஆலாபனைகளில், அச்சிறுவன் தன் கசடுகள் மறந்து, தன் பால்ய பருவத்தை ரசித்து வாழ்ந்தான்… சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இல்லாத வகையில் அவனைப் பார்த்துக் கொண்ட சாரதாவும், அவனது தெத்துப்பல் சிரிப்பில், தன்னை நினைத்தே அத்தனை ஆனந்தம் கொண்டு மகிழ்ந்தார்.

 

நாட்கள், வாரங்களாகி, வாரங்கள், மாதங்களாகி, வருடங்களுக்கும் வழிவகை செய்தது.

 

“கண்ணா.. நீ விவரம் தெரியும் வயதுக்கு வந்துட்ட. அம்மா உனக்கு புரியும்னு நம்புறேன். அம்மா மத்த மனிதர்களைப் போல, ஆணோ, பெண்ணோ இல்லை. உடம்புல உள்ள சுரபிகளின் மாற்றம் காரணமா, ஆணா பிறந்து, பெண்ணாய் மாறிய, திருநங்கை. இந்த சமுதாயத்தில், அம்மாவைப் போன்ற திருநங்கைகளுக்கு மதிப்புங்குறது எப்பவும் கிடைக்குறதில்லை.. ஏளனப் பார்வையும், பேச்சும்தான் தொடரும்.. நீ அம்மாவைப் பற்றித் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கனும்னுதான் அம்மா இதை சொல்றேன்..” என்று மகனுக்கான விளக்கத்தைக் கொடுக்க சாரதா ஆயத்தமாக,

 

அவர் வாயில் விரல் வைத்துத் தடுத்த அவரது செல்வக் குமரன், “அன்னிக்கு ஒருநாள், சிவன் வரம் கொடுத்து தவிச்சப்ப, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து ஹெல்ப் பண்ணாங்கனு எனக்கு சொன்னீங்க தானேம்மா? கடவுளே ஆணா இருந்து, பெண்ணா மாறுறாரு. அவங்களுக்கு பிறந்த ஐயப்பனைத்தானே ஊர் உலகமெல்லாம் பூஜிக்குறாங்க, வணங்குறாங்க? அப்பறம் உங்களுக்கென்னம்மா? எனக்கு நீங்க திருநங்கைனு முன்னமே தெரியும்.. என் ஃபிரெண்டு கேலி பேசினான் உங்களை.. அப்படினா என்னனு புரியலைனு எங்க மிஸ்கிட்ட கேட்டேன். அவங்க அவனைத் திட்டிட்டு, எங்க ரெண்டு பேருக்கும், திருநங்கைனா என்னனு விளக்கம் கொடுத்தாங்க… நான் உங்களை இப்பவும் என் அம்மாவா தான் பார்க்குறேன் ம்மா.. நீங்க எனக்கு அந்த விஷ்ணு பெருமான் மோகினி அவதாரம் எடுத்தபோல, எனக்கு அம்மாவா அவதாரம் எடுக்கப்பட்டக் கடவுளாதான் தெரியுறீங்க. இதனால நம்ம பந்தத்திலும் பாசத்திலும் எதுவும் மாறிடலைமா” என்று கூறினான்.

 

உச்சி குளிர்வதென்பது இதுதானோ? சாரதாவின் உள்மன சந்தோஷத்தை வார்த்தைகளில் கூறிட, அருமை தமிழில் கூட வார்த்தைகள் இல்லையே?

 

கண்கள் கலங்கி, வைரமாய் கண்ணீர் மினுமினுக்க, அவர் தொண்டையை கேவல் வந்து முட்டியது.

 

மகனை வாரி அணைத்துக் கொண்டு, சாரதா வெடித்து அழுதார். அவரது பிறவிக்கான பலனே பரிபூரணம் அடைந்ததாய் உணர்ந்தார்.

 

சேயை, தாயாய் தாங்கினான், சேய் அவன்…

 

“எனக்கு எப்பவும் நீங்க அம்மாதான்.. நீங்கப் பெண்ணா இருந்துதான் எனக்கு அம்மாவா இருக்கனும்னு அவசியம் இல்லை” என்று மனமார அவன் கூற,

 

“கண்ணா..” என்று வெடித்து அழுதார், சாரதா..

 

திருநங்கையாய் மாறப்பெற்றவரின் ஆகச்சிறந்த ஆசையெல்லாம், அவரைப் பெண்ணாய் மதிக்கும் ஒரு மதிப்பையும், பாசத்தையும் மட்டுமே… அவை இரண்டையும் அவருக்கு அவர் பெறாத மகன் கொடுத்துவிட்டதன் மகிழ்ச்சியை சொல்லில் வடிக்க இயலவில்லை…

 

கண்ணீர் பொங்கிப் பெருகியது.. 

 

மனதில் வலி சுமந்த இரவெல்லாம், இந்தச் செல்வத்தின் அன்பை பிரசவிக்கத்தானோ? என்று உள்ளம் குளிர்ந்துபோனார்.

 

அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதவரின் கண்ணீர் துடைத்தவன், “அழாதீங்கம்மா..” என்று கண்கள் கலங்கக் கூறினான்.

 

“எனக்கு அடிப்பட்டா என்னைவிட நீங்கதானேம்மா அழுறீங்க? நீங்கத் தானேம்மா எனக்கு அம்மா அப்பா எல்லாம்? அப்ப நீங்க அழுதா எனக்கும் வருத்தமாருக்கும் தானே?” என்று அவன் கூற,

 

“ஆமாம்பா.. ஆமா.. நான் தான்.. நான் தான்டா கண்ணா.. அம்மா அழலைடா” என்று அழுதபடி அவனை அரவணைத்துக் கொண்டார்.

 

தாய்க்கும் மேலாக அவனைத் தாங்கியவர், தாங்குபவர் சாரதா தான்… கண்ணின் இமைபோல் பார்த்துக்கொள்வதென்று கூறுவார்களே? அதற்கு முழுமுதற் எடுத்துக்காட்டாய் இருந்தது, சாரதா அச்சிறுவனைப் பார்த்துக் கொண்டது.

 

அப்படித்தாங்கியவரை, தனக்கு இருக்கும் ஒரே உறவென்று இருந்தவரை, இழக்கப் போகின்றோம் என்பதை தான் அவன் அறிந்தே இருக்கவில்லை. பசியில் வாடியவன் வாயில் ஒருவாய் உணவிட்டு, பசியைத் தூண்டி, தட்டைப் பிடுங்கிக் கொண்ட நிலையில் தான் தவிக்கப் போகின்றோம் என்பதை அச்சிறுவனும் உணர்ந்திருக்கவில்லை‌.

 

அன்றைய நாள், காலை உணவை இருவரும் சேர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர்…

 

சாரதாவிற்குத் தானே உணவை ஊட்டிவிட்டச் சிறுவன், “அம்மா.. நாளைக்கு ஃபாதர்ஸ்டேவாம்… உங்களுக்கு நான் என்ன கிப்ட் தரட்டும்?” என்று கேட்க,

 

புன்னகையாய் அவனைப் பார்த்தார்.

 

‘நீங்கத் தான் எனக்கு எல்லாம்’ என்பதை அவன் வெறும் வாய் வார்த்தையாய் சொல்லிடவில்லை.. அன்னையர் தினம், தந்தையர் தினம், உடன் பிறந்தோர் தினமென்று அனைத்திற்கும், தன் கையால் கடிதமோ, ஓவியமோ வரைந்து பரிசாகக் கொடுத்து, அதை மனமார உணர்த்துவான் அவன்…

 

அவனது சின்னச் சின்ன செயல் கூட, சாரதாவின் முகத்தில் சிரிப்பைப் பார்த்துவிடும் நோக்கத்திலேயே இருக்கும். ‘என்னை சந்தோஷமா பாத்துக்குற என் அம்மாவை, நான் எப்பவுமே சந்தோஷமா வச்சுக்கனும்’ என்று எப்போதும் மனதோடு கூறிக் கொள்வான்.

 

தரிகெட்டுப்போன தன் வாழ்வில், கலங்கரை விளக்கைப்போல் வந்தவன் என்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் தானும், உள்ளம் குளிர்ந்துதான் போனார் சாரதா..

 

பாசத்துடன் அவனுக்கு உணவை ஊட்டி, “அம்மாக்கு நீ எது தந்தாலும் சந்தோஷம்தான்டா கண்ணா” என்க,

 

“ஈவ்னிங் வரும்போது கிஃப்டோட வருவேன் பாருங்க” என்றவனாய், பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.

 

மாலை அவன் வரும் நேரம், அவன் வீட்டைச் சுற்றி, ஆட்கள் அதிகம் காணப்பெறவே, ஒன்றும் புரியாமல், வீட்டின் அருகே சென்றான்.

 

அவனைப் பார்த்த அக்கம் பக்கத்தாரெல்லாம் தங்களுக்குள் என்னென்னவோ பேசிக்கொண்டு ஒதுங்கி, வழிவிட, அவர்களையெல்லாம் குழப்பமாய் பார்த்தபடி உள்ளே சென்றவன், நடு கூடத்தில் படுக்கவைக்கப்பட்டிருந்த சாரதாவின் சடலத்தைப் பார்த்து, அதிர்ந்து போனான்…

 

அதிர்ச்சியில் விழிகள் விரிய நின்றவன் கரங்களில் இருந்த, தந்தையர் தினக் காகித மடல்கள், நழுவி, கீழே விழுந்து, சாரதாவின் காலுக்கடியில் பறந்து அடைக்கலம் பெற்றது… அவருக்கானவை என்பதால், காற்றும் அவரிடமே மடலைச் சென்று சேர்த்திட்டது போலும்…

 

“ம்..ம்மா..” என்று தட்டுத்தடுமாறி அவன் அழைக்க,

 

சாரதாவுடன் சேர்ந்து, நடனம் ஆடும் சக்தி, ஓங்கி அழுது, “இந்த புள்ளையவாது நீ மனசுல நினைச்சிருக்கக்கூடாதாடி சாரதா” என்று கதறினார்.

 

உலகமே இடிந்துபோனதைப் போல், விறைத்து, அதிர்ந்து, உறைந்து நின்றான், அவன்…

 

“அம்மா..” என்று காற்றுக்கும் கேட்காத குரலில், மெல்லமாய் முனுமுனுத்தவனை இதமாய் தீண்டிச் சென்ற காற்று கொடுத்த அரவணைப்பு, அவன் தாயின் அன்பை உணர்த்தி, நூறாய் உடைக்கப் போதுமானதாய் இருந்தது.

 

“அம்மா..” என்று கதறியபடி சென்று, சாரதாவின் அருகே பொத்தென விழுந்தவன், அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு வெடித்து அழுதான்..

 

“அய்யோ.. கண்ண எம (இமை) காக்குறபோல காத்தியேடி சாரதா.. புள்ள துடிக்குதே” என்று சக்தி அழுதபடி கூற,

 

அன்னையின் உடலை கட்டியணைத்து, சிறுவனவன் கதறித் துடித்தான்.

 

“எனக்கு உங்களவிட்டா யாரும்மா இருக்காங்க? இப்படி என்னை விட்டுட்டு ஏன்மா போனீங்க? வீதில விட்டுட மாட்டேன்னு சொன்னீங்களே ம்மா..” என்று வெடித்தவனை ஆற்றுப்படுத்தக்கூட அங்கு ஆளில்லை.

 

அவ்வளவு தானா? தனக்கு உறவென்று கடவுள் கொடுத்த ஒரே உறவும், இல்லாமல் போய்விட்டதா? இனி மீண்டும் தான் அநாதையா? தார் சாலையில் யாரும் இல்லாமல், குப்பைகளில் உணவைத் தேடி உண்டோமே? அந்த நிலைதானா இனியும்? உயிரே போனாலும் அழுவதற்கு ஆளில்லாமல், தனக்கொன்றெனில் தாங்கவும் அரவணைக்கவும் ஒரு அன்பு இல்லாமல் தவிக்கப்போகும் நிலைதான் இனி தான் சாகும் வரை வாழ வேண்டுமா? என்று அவன் உள்ளம் தவியாய் தவித்தது…

 

சக்தியை ஏறிட்டவன், “என்னாச்சு? அம்மாக்கு எப்படி?” என்று கேட்க,

 

“பாவி உயிர மாச்சுக்கிட்டாளேபா” என்று அழுதார்…

 

முதலில் அதிர்ந்தான்… உயிரை மாய்த்துக் கொண்டாரா? இல்லையே.. தன் அன்னை அத்தனைக் கோலை இல்லையே? என்று மனதோடு அடித்துக் கொண்டான்.

 

சிறுவனவன் சக்தியை நடந்தவைப் புரியாத நிலையில் பார்க்க, சக்தி அழுதபடி நடந்தவற்றைக் கூறினார்.

 

அன்று சாரதாவும் சக்தியும் தான், ஒரு விடுதிக்கு நடனம் ஆட சென்றிருந்தனர்.

 

அங்கு நல்ல போதையில் இருந்த ஒருவன், இருவரும் நடனம் ஆடும் போதே, மேடையேறி, சாரதாவை அணைத்து முத்தம் பதித்துவிட, கோபத்தில் வெகுண்டெழுந்த சாரதா, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்‌.

 

அதில் போதை தெளிந்து, கதி கலங்கி விழுந்தவன், ஆத்திரத்தோடு எழுந்து சாரதாவைப் பார்த்தான்.

 

அந்த பெரும் விடுதியின் மத்திய அறையில், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஆடிக் கொண்டிருந்த சாரதாவின் மீது கண்மண் தெரியாத கோபம் எம்பிக் குதித்தது, அவனுக்கு.

 

ஆத்திரத்தோடு அவன் எழ, சக்தி பயந்து சாரதாவைப் பிடித்துக் கொண்டு, “போயிடலாம் சாரதா” என்று கூறினார்‌.

 

“இம்புட்டு பேர் மத்தியில குடிச்சுட்டு பொறுக்கித்தனம் பண்றான்.. இவனுக்குலாம் என்னடி பயம்?” என்று சாரதா கூற,

 

“ஏதோ கலக்டர் ஆஃபிஸ்ல ஆடுறபோல பேசுற? நாயே விபச்சார விடுதிலதானடி ஆடுற நீ?” என்று உறுமினான்.

 

“விபச்சார விடுதியை அவ்வளவு அசிங்கமா பாக்குறன்னா அந்த இடத்துக்குள்ள நீ காலடியே வச்சுருக்கக்கூடாதுடா.. பொண்ணுங்க மட்டுமாவா விபச்சாரம் பண்ணிட முடியும்? நீங்களும் சேந்துதானே அதை செய்றீங்க?” என்று சாரதா கத்த,

 

ஆத்திரத்தோடு அவளை அடிக்கப் பாய்ந்தான்.

 

சாரதா சட்டென நகர்ந்திடவும், நிலைதடுமாறி விழுந்தவனைப் பார்த்து, அங்குக் கூடியிருந்த சிலர் சிரித்துவிட, அவன் ஆத்திரம் பண்மடங்காய் அதிகரித்தது.

 

உக்ரமாய் எழுந்தவன், அத்தனைப்பேர் மத்தியில், சாரதாவின் உடையைப் பிடித்திழுக்க, பதறிப்போன சாரதா, அவனை தன் பலம் கொண்டும் நகர்த்த முயற்சித்தார்‌.

 

“அய்யோ பாவி” என்று சாரதாவிற்கு உதவ வந்த சக்தியையும் அவன் பிடித்துத் தள்ளிவிட,

 

“அய்யா அய்யா.. யாராது போய் உதவுங்கய்யா” என்று சக்தி அங்குள்ளோரிடமெல்லாம் கெஞ்சினார்.

 

விபச்சார விடுதிகளில் இதெல்லாம் சாதாரணமாக நிகழ்பவை தானே? என்ற எண்ணத்தோடே யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

 

“விடுடா.. விடுடா” என்று கத்தி அடித்த சாரதாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்தவன், தரதரவென்று அவரை விடுதிக்கு வெளியே இழுத்துவந்து போட்டான்.

 

பாதி உடை பரிபோன நிலையில், வீதியில் வந்து விழுந்தது அவரைக் கூனிக் குறுக வைத்தது. எங்கும் வேலை கிடைக்கவில்லை என்றுதானே, தன்னிடம் உள்ள திறமையை எங்கேனும் சென்று பயன்படுத்திப் பணம் பெறலாம் என்று அவர் போராடியது? அது இப்படியொரு சூழலை உருவாக்கிக் கொடுத்துவிட்டதே? என்று மனம் கனத்துப்போனார்.

 

“கேவலம் உனக்கே இம்புட்டா? பொம்பளையா நீ? இல்ல தான? அப்றம் என்ன உனக்கு மான ரோசம் வருது?” என்று அவன் ஆத்திரத்தோடு கத்த,

 

சுற்றியிருந்த கூட்டமெல்லாம் அவர்களை வேடிக்கைப் பார்க்கக் கூடியது.

 

கண்ணீர் பெருகியோட, தன்னைத் துளைத்தெடுக்கும் பார்வையில் கூசிப்போன சாரதாவை, தனது தகாத வார்த்தைகளில் இன்னும் நோகடித்தான், அந்த ஆத்திரக்காரன்.

 

“அறவாணி ஒனக்கே இம்புட்டா? நீங்கல்லாம் இந்த தொழிலைத்தான செய்றீங்க? பிறகு என்னத்த மறைக்க ஓவரா சீன் காட்டுற? பெருசா மானம் மரியாதை இருக்குறபோல மூடிக்குற? யாரை ஏமாத்தனும்னு நினைக்குற? ஒங்களையெல்லாம் பார்த்தாளே பத்திட்டுத்தான் வருது. ஒங்களமாதிரி ஆளுங்களையெல்லாம் சுட்டுப்போடனும்னு சட்டம் போடனும். ச்சி அசிங்கமே.. கேவலமான தொழில் செய்யுற உங்களபோல ஆளுங்களுக்கு மானம் ரோசமெல்லாம் ஒரு கேடா?” என்று துவங்கி, இன்னும் பல தகாத வார்த்தைகளில் அவரைத் திட்டிவிட்டு சென்றான்.. 

 

போதையில் அவளைத்தான் அணைத்து முத்தமிட்டோம் என்பதையெல்லாம், மறந்தவனாய், ஏதோ புழுவைப்போல் அவளை நடத்திவிட்டுச் செல்ல,

 

கேட்டுவிட்ட வார்த்தைகள் கொடுத்த வலியிலும், சுற்றி நின்றவர்களில் ஒருவர்கூட தன் மானத்தை மறைக்கவோ? அவன் அவச்சொற்களைத் தடுக்கவோ முன்வரவில்லையே! என்றும் மனதால் நொந்து போனார், சாரதா.

 

அங்கு மனிதம் செத்துப்போனது என்பதை உணர்ந்த சாரதாவும், மனிதமற்ற அந்த சமூகத்தில் உயிர்வாழ மனமின்றி, வேகவேகமாய் தன் உடைகளை மாற்றிக்கொண்டு, வீட்டை நோக்கிச் சென்றார்.

 

பெற்ற காயமும் அவமானமும், அவரைத் தீயாய் சுட, அதன் வலி பொருக்காதவர், பூச்சிக்கொல்லியை குடித்து, மீளா துயர் தீர்க்க, மீளா துயிலில் ஆழ்ந்தார்…

 

-தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்