Loading

அத்தியாயம் 23

விடியல் புலர்ந்திடாத அவ்வேளையில் உயிரற்ற உடலாக வீட்டின் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த நீனாவை காண்கையில் ரணமாய் துக்கம் நெஞ்சை கவ்வியது.

அவளிருந்த கோலம் கண்டு வயதில் மூத்த ஆண் என்பதையும் மறந்து சிதம்பரம், இளங்கோ, ராஜேந்திரன் மூவருமே கதறித் துடித்தனர். ஆண்களின் நிலையே இப்படி இருக்கையில் வீட்டு பெண்களின் நிலையை சொல்லவும் வேண்டுமோ?

அகனிகாவின் மெல்லிய முகம் சோகத்தில் உறைந்து போனது.

மகளின் நிலை பொருக்க முடியாது அகிலா கதறி அழுதார். அவருடன் சேர்ந்து பவானி, சந்தியா, வர்ஷினியும்
கண்ணீரால் நனைந்தனர்.

“இந்த வீட்டோட உயிர்ப்பே மொத்தமா போச்சே?” என்று
அகிலா மார்பில் அடித்துக்கொண்டார்.

விதார்த் தான் முதன் முதலில் தங்கை இருந்த கோலத்தைக் கண்டான். அப்போது உணர்வற்று சமைந்தவன், இன்னமும் அவனிடத்தில் அசைவென்பது இல்லை.

மிதுன் நடப்பது எதுவும் தெரியாது மயக்கத்தில் கிடந்தான்.

புவித் யாரை பார்ப்பது, யாரைத் தேற்றுவதென்று தெரியாது தங்கையின் காலடியில் சுருண்டு படுத்திருந்தான். அவனது கண்கள் கண்ணீரால் தரை நனைத்துக் கொண்டிருந்தது.

அகனிகாவுக்கு விபத்தினால் ஏற்பட்ட உடல் வலியோடு சேர்த்து மனமும் குத்தும் வலியைக் கொடுக்க மூச்சு விடவும் சிரமம் கொண்டவளாக நீனாவின் தலை அருகே முகம் வைத்து, அவளின் முகத்தையே வெறித்தபடி உடல் குறுக தரையில் கிடந்தாள் அகனிகா.

யாருக்கு யார் ஆறுதல் என்று தெரியாது அனைவரும் கண்ணீர் விழியோடு நீனாவின் இறந்த உடலை வெறித்தபடி இருந்தனர்.

நீனாவின் திடீர் மரணம் ரங்கராஜனின் கொடூரத்தால் நிகழ்ந்தது என்பது
அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள
முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு…

பயிற்சி நிலையம் வாயிலில் நின்று அகனிகா கதவினைத் தட்டிட, விதார்த் அவளருகில் ஓடிச் சென்றான்.

“அகா…”

“மாமா” என்று அவனது நெஞ்சில் சாய்ந்து அழுதவள், “அந்த ரங்கராஜன் கேர்ள்ஸ் விஷயத்தில்…” என்று வார்த்தையை சொல்லி முடிக்க முடியாது அழுக, “எல்லாம் தெரிஞ்சும் என்னால நீனாவை காப்பாத்த முடியாமப் போச்சு” என்று அரற்றினாள்.

“அந்த ரங்கராஜனுக்கு என் கையால தான் சாவு” என்ற அகனிகா, மீண்டும் கதவினைத் தட்டிட, விதார்த் கவனித்தவனாக, “லாக்ல இல்லை அகா” என கதவினை அழுத்தம் கொடுத்து தள்ள திறந்து கொண்டது.

“முன்ன நாங்க வந்தப்போ ரங்கராஜன் இருந்தாரு அகா” என்ற விதார்த் உள்ளே நுழையும் முன்பு அதிவேகத்தில் உள்ளே சென்ற அகனிகா…

“மேல இருக்க ஃப்ளோர் முழுக்க தேடுங்க மாமா” என்று கீழே வகுப்புகள் நடக்கும் இடத்தை சிறு மூலையையும் விடாது பார்வையிடத் துவங்கினாள் அகனிகா.

அப்போது அங்கு வந்து சேர்ந்தனர் இளங்கோ, புவித்.

அங்கு ஒவ்வொரு அறையாக திறந்துப் பார்த்துக் கொண்டிருந்த அகாவிடம் சென்ற புவித்,

“நீயிருக்க நிலையில ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாத கனி. ஒரு இடத்துல நில்லு. நாங்க தேடுறோம்” என்று புவித் எவ்வளவோ சொல்லியும் கேட்காத அகா மற்றொரு அறையைத் திறக்க முயற்சி செய்ய… இளங்கோ வேகமாக அடித்து திறந்தார்.

“அந்தாளு இல்லையா?” இளங்கோ கேட்க, “யாரும் இருக்க மாதிரி தெரியல” என்றாள் அகனிகா.

“கொஞ்ச முன்ன நான் இங்க வந்தப்பவே ரங்கராஜன் மட்டும் தான் இருந்தான். யாருமில்ல, நீனா ட்யூஷனே வரலன்னு சொன்னான். அப்போ அவன் சாதாரணமா தான் இருந்தான். பொய் சொல்றோம், தப்பு பண்றோம் அப்படிங்கிற எந்த மாற்றமும் அவன் முகத்துல தெரியலையே” என்றான் புவித்.

“இப்போ அந்த ஆராய்ச்சிக்கு நேரமில்லை” என்று அவ்வறையை விட்டு வெளியில் வந்த அகனிகா வீட்டின் பின் பகுதியில் சிறு கதவு ஒன்றிருக்கு அதனை திறந்தாள். தோட்டப்பகுதி செடிகள் அடர்ந்து புதர்கள் மண்டி கிடந்தது.

“இங்க எதுவுமில்லை” என்று மீண்டும் உள்ளே பார்வையைத் திருப்பிய அகா, சட்டென்று விழித்திரையின் பக்கவாட்டில் பதிந்த ஒன்றில் அதிர்ந்து திரும்பிப் பார்வையிட்டாள்.

புதர் ஒன்றுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தின் பின் பகுதி தெரிய,

“மிதுன் அண்ணா வண்டி” என்றாள்.

இளங்கோவும் புவித்தும் வேகமாகச் சென்று வண்டியை இழுக்க, அது மிதுனுடையதே தான்.

“மிதுன் இங்க வரவேயில்லன்னு அந்த ரங்கராஜன் சொன்னான்” என்று இளங்கோ கேட்க, “அவன் ஒரு பொ**** மாமா” என பற்களைக் கடித்துக்கொண்டு கூறினாள் அகனிகா.

அக்கணம் விதார்த்தின் குரல் இடியென காதை நிறைக்க மூவரும் ஸ்தம்பித்தனர்.

“விது மாமா மேல்மாடி பார்க்க போனாங்க” என்ற அகா வேகமாக நடக்க முடியாது தடுமாற, அவளை இளங்கோவிடம் ஒப்படைத்த புவித் மின்னலென மேல்தளம் விரைந்திருந்தான்.

அத்தளம் கீழே இருப்பதுப் போன்று பரந்த கூடம் அதனைச் சுற்றி மூன்று அறைகள் என்பதைப்போன்று சாதரணமாக இல்லை. அத்தனை செழுமையாய் பணக்காரத் தன்மையுடன் மிளிர்ந்தது.

தரையே சிவப்பு கம்பளம் விரித்து பளபளவென காட்சியளித்தது. அங்கிருந்த ஒரு அறையின் வாயிலில் சிலையென நின்றிருந்த விதார்த்தைக் கண்டுவிட்டு புவித் ஓடினான்.

“அண்ணா என்னாச்சு?” என்று விதார்த்தை உலுக்கிட அவனிடம் அசைவென்பதே துளியும் இல்லை.

“விதுண்ணா” என்று விதார்த்தை நகர்த்தி உள்ளே எட்டிப் பார்த்தவனின் விழிகள் தெறித்து உறைந்தது. ரத்தம் தன் ஓட்டத்தை நிறுத்திய நிலை அவனிடத்தில்.

அதற்குள் இளங்கோ அகனிகாவை தாங்கிப் பிடித்தவராக மேல் வந்திருக்க,

“என்ன ஆருஷ், ஏன் இப்படி நிக்கிறீங்க?” என்றவர், “நீனா இருக்காளாப்பா?” என்று கேட்டுக்கொண்டே, இருவரும் அறைக்குள் பார்த்திட முயல,

“அய்யோ வேணாம் கனி” என்று சடுதியில் உயிர் பெற்றவனாக அகனிகாவின் தலையை தன் மார்பில் அழுத்திக் கொண்டான்.

உள்ளே காண கிடைத்த காட்சியை கண்டுவிட்ட இளங்கோ…

“அய்யோ எம் பிள்ளைங்களுக்கா இந்த நிலைமை” என தலையில் அடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்தார்.

அறையின் படுக்கையில் ஆடைகளற்ற உடலாய் குருதி ஓட்டத்திற்கு நடுவே நீனா குற்றுயிராய் கிடக்க, அவள் மேல் படர்ந்த நிலையில் மிதுன்.

வேறு யாரும் பார்த்திருந்தால் நீனாவின் இந்த நிலைக்கு காரணம் மிதுன் தானென்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வர். தான் இதிலிருந்து தப்பிக்க அதுதான் வேண்டுமாகவும் இருக்க ரங்கராஜன் காட்சியை உருவாக்கி மறைந்திருந்தான்.

இருப்பினும் தங்கள் வீட்டுப் பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு மிதுனை தவறாக சிறு பார்வை பார்த்திடவும் தோன்றவில்லை.

விதார்த் உயிர் இருந்தும் வெற்று கூடாய் நின்றிருக்க… இளங்கோ செய்வதறியாது அழுது கொண்டிருந்தார்.

இப்போது தான் திடமாக இருக்க வேண்டிய நிலையை உணர்ந்த புவித்,

“பீ ஸ்ட்ராங் கனி” என்றவனாக தன்னிலிருந்து அவளை விலக்கி நிறுத்தினான்.

கண்களை அழுத்தமாக மூடித் திறந்து, மூச்சினை பெரும் தவிப்பாக வெளியேற்றி அறைக்குள் நுழைந்தான்.

நீனாவின் மீது படர்ந்திருந்த மிதுனை தூக்கி அருகில் சரித்த புவித் தங்கையின் நிலை காண முடியாது தரையில் சரிந்து சுவரோடு ஒண்டியவனாக, “நீனா” என அடி வயிற்றிலிருந்து பெரிதாய் கேவல் ஒன்று வெடித்து தொண்டைக்குழி சிதற கத்தினான்.

புவித் மிதுனை தள்ளியதுமே நாணிலிருந்து சீறும் அம்பாய் நீனாவின் மீது விழுந்து தன் உடல் கொண்டு அவளின் உடல் மறைத்து கத்தி கரைந்து அழுது தீர்த்தாள் அகனிகா.

மூன்று பேரின் பெரும் ஓலமும் மிதுனை அசைக்கவில்லை. உயிர்பிக்கவில்லை.

விதார்த்தின் நிலையை சொல்லவும் வேண்டாம். என்னதான் திடமாக இருக்க வேண்டிய நிலையென புரிந்தாலும், புவித்தால் முடியவில்லை.

தங்கையை அண்ணன் பார்க்கும் நிலையா அது.

குழந்தையாய் தோள் மீது அமர்த்தி அவளோடு விளையாடிய பொழுதுகள் நெஞ்சத்தை கணக்கச் செய்தது.

“அய்யோ நீனா” என்ற புவித் சுவற்றில் முட்டிக்கொண்டு துடிக்க,

“என் பொண்ணை இப்படியொரு கோலத்தில் பார்க்க நான் உயிரோட இருக்கணுமா?” என்று இளங்கோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயக்கமாகிட, அவரை சீராக்கிட புவித் தான் தனது வலியை அடக்கும்படியானது.

அங்கு தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து எடுத்து வந்த புவித், இளங்கோவின் மீது தெளிக்க, அவர் மெல்ல கண் விழித்தார்.

“நெஞ்சு வலிக்குதா சித்தப்பா?”

இளங்கோ இதயப்பகுதியில் கை வைத்துக்கொண்டிருக்க, அவரின் உயிரை ஆபத்தில் தள்ளிவிடுவோமோ என எண்ணி வினவினான்.

“இன்னும் நெஞ்சுவலி வராம இருக்கிறது என் துரதிர்ஷ்டம்” என்றவர், “இப்போ என்னப்பா செய்யுறது?” எனக் கேட்டார்.

அவனுக்கும் அடுத்து என்னவென்று தெரியவில்லையே! தலைச்சுற்றிப் பார்த்தான்.

“பாப்பா உயிரிடதான கண்ணா இருக்கா?” கேட்பதற்குள் மூச்சு நின்று சீரானது அவருக்கு.

புவித்தின் விழிகள் நனைய தலையை மெல்லமாக இருபக்கமும் அசைத்தான்.

அழுது கொண்டிருந்த அகனிகா முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவ்விடத்தை அலச, மூலையில் நீனாவின் பள்ளிச்சீருடை சுருண்டு கிடந்தது. அதை எடுத்து நீனாவின் உடலுக்கு அணிவிக்கப் பார்க்க, ஆடை கிழிந்த நிலை நீனாவின் அந்நேர போராட்டத்தைக் காட்சியாக்கியது.

அத்துணியில் முகத்தை புதைத்து அழுதவள், “உங்க சட்டையை கொடுங்க மாமா” என்று புவித்திடம் கை நீட்டினாள்.

புவித் கண்ணீர் வழியும் விழிகளை தங்கையின் புறம் திருப்பாது சட்டையை கழட்டி அகாவின் கையில் கொடுத்தான்.

நீனாவிற்கு சட்டையை அணிவிக்க, மெல்ல அவள் உடலை அகா உயர்த்திட, “ஹக்” என்ற ஒலியோடு இமை இழைகள் புருவம் தொடும் அகண்ட விரிப்போடு, கருவிழிகள் மேல் சொருக தனது உயிர்ப்பை வெளிப்படுத்தினாள் நீனா.

“மாமா… உயிர் இருக்கு” என்ற அகனிகா, “நீனா… நீனாம்மா…” என்று அவளின் கன்னம் தட்டினாள்.

திறக்க முடியாது கண்கள் திறந்துப் பார்த்த நீனாவின் கண்ணீர், ஓரம் கசிந்து காதுமடல் தீண்டியது.

புவித்தும், இளங்கோவும் அருகில் ஓடிவர,

“அ… அண்…அ… அண்ணா” என்று உச்சரிப்பதற்குள் நீனாவின் தவிக்கும் ஜீவன் துடித்து மீண்டது.

“ஹாஸ்பிடல்… ஹாஸ்பிடல் போலாம்… போலாம் மாமா” என்று அகனிகா புவித்தை துரிதப்படுத்த,

ரத்தம் படிந்த நடுங்கும் கையால் அகனிகாவின் கரம் பற்றி மறுப்பாக தலையசைத்த நீனா,

“நான்… நான் பிழைக்கமாட்டேன். எனக்குமே உயிர்வாழ ஆசையில்லை” என்று மெலிந்த குரலில் மொழிய…

பக்கவாட்டில் இன்னும் சுயஉணர்வு வராது படுத்திருக்கும் மிதுனை ஏறிட்டு,

“மாமாவை யாரும் தப்பா நினைச்சிடாதீங்க. அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது… இந்த நிலைக்கு காரணம் நான் நான் மட்டும்தான். என்னோட பயம் மட்டும் தான் காரணம். தப்பு பொண்ணுங்க மேலயே இருந்தாலும், பெத்தவங்ககிட்டயும், கூடப் பிறந்தவங்ககிட்டயும் சொல்ற தைரியம் பொண்ணுங்களுக்கு எப்போ வருதோ அப்போ தான் இங்க எங்களுக்கான தப்புகள் குறையும். என்ன மாதிரியான பொண்ணுங்ககிட்ட இருக்க பயம் தான் ரங்கராஜன் மாதிரியான ஆளுங்களோட பெரிய பலம். அப்படியே தைரியம் வந்து நிவேதா மாதிரி எதிர்த்துக் கேட்டாலும் குடும்பத்தை வச்சு மிரட்டி தன்னோட கெட்ட எண்ணத்தை நிறைவேத்திக்கிறாங்க” என்று மூச்சு வாங்க இருமியபடி இடைவெளி விட்டுவிட்டு பேசிய நீனாவின் விழிகள் அவளின் இறுதி நிமிடங்களை பறைசாற்றியது.

“அய்யோ இதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம் நீனா. முதல்ல ஹாஸ்பிடல் போலாம்” என்று அகனிகா சொல்ல, “ஆமா ஹாஸ்பிடல் போலாம்” என்று புவித் நீனாவை தூக்க முயன்றான்.

அத்தியாயம் 24

புவித் தன்னை தூக்க வருவதை பார்வையால் மறுத்த நீனா…

“கண்டிப்பா நான் பிழைக்கமாட்டேன். என்னோட சாவு கண்ணுக்குத் தெரியுது. என்கிட்ட இருக்க கொஞ்ச நேரத்துல நான் எல்லாம் சொல்லணும். என்கிட்ட அதிக நேரமில்லை. சாவும் போதாவது எனக்கு நிம்மதியை கொடுங்க” என்றிட,

“அய்யோ… நிம்மதியை கேட்கிற வயசா இது” என்று இளங்கோ வெடித்துக் கத்தினார்.

“அழாதீங்க சித்தப்பா” என்ற நீனா, “எத்தனையோ முறை அகா கேட்டும் சொல்லாத எனக்கு, சொல்லியிருக்கலாமோ… எனக்கு இன்னும் கொஞ்சநாள் உங்களோட வாழ கிடைச்சிருக்குமோன்னு தோணுது. என்னை மன்னிச்சிடு அகா” என்றாள்.

இறப்பின் தருணத்தில் தான் தன்னுடைய அமைதியின் பேரிழப்பை நீனா உணர்ந்தாள்.

அமைதி, பொறுத்துப்போதல் யாவும் எல்லா நேரங்களில் சரியான தீர்வாகிடாது. காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்.

ரங்கராஜன் தன்னை மிரட்டியது, அவன் காண்பிக்க காணொளி, புகைப்படங்கள் பற்றி அனைத்தும் கூறியவள்,

“அன்னைக்கு தீபா மயங்குனது நினைவிருக்கா அண்ணா?” என்று புவித்திடம் கேட்டாள்.

புவித் கண்ணீரோடு ஆமென்க…

“அப்போ நீயில்லன்னா அன்னைக்கு அவளுக்கும் என் நிலைமை தான்” என்றாள்.

“அய்யோ” என்று நெற்றியில் தட்டிக்கொண்ட புவித், “அன்னைக்காவது என்கிட்ட உண்மையை சொல்லியிருக்கலாமே” என்றதோடு, “அவன் காட்டினா கண்ண மூடிட்டு உன்னைத் தப்புன்னு நாங்க நம்பிடுவோமா?” எனக் கேட்டான்.

“என் குடும்பம் என்னை நம்பும் தெரியும். ஆனாலும் பார்க்குற அத்தனை கண்ணும் வக்கிரமாத்தான பார்க்கும். தப்பே பண்ணுலனாலும் பொண்ணுங்களுக்கான கோணமே இங்க வேற” என்றவள், “தீபிகாவுக்கு ஜூஸ்ல கொக்கைன் மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்கான். அதனால தான் அவன் அன்னைக்கு மயக்கமானள். கண்ணு முழிச்சும் தெளிவாயில்லாம இருந்தா. ஹாஸ்பிடல் போனா உண்மைத் தெரிஞ்சிடும்னு தான் ரங்கராஜன் அவ்ளோ தடுத்தது. அதே காரணத்துக்காகத்தான் தீபிகா குடும்பத்தை மிரட்டி நைட்டோட நைட்டா ஊரைவிட்டு போக வச்சிட்டான்” என்றாள்.

“ஒரு குடும்பத்தையே மிரட்டி காலி பண்ண வச்சிருக்கான் அப்படின்னா அவன் சாதாரண ஆளில்லை மாமா” என்றாள் அகனிகா.

“ஆமா” என்ற நீனாவுக்கு மூச்சை இழுத்து வெளியிடுவது அதிக சிரமமாக இருந்தது.

“அவனுக்கு பின்னால் அரசியலில் பெரிய ஆளுங்கெல்லாம் கூட்டு. இன்னைக்கு அந்த ரங்கராஜன் கூட சேர்ந்து என்னை” என்ற அகனிகா வழிந்த கண்ணீரை உள்ளிழுத்து, “என் சாவு அழுகையில முடியக்கூடாது” என்றவளாக நடந்ததை முயன்றளவு வேகமாகக் கூறினாள்.

பள்ளி முடித்து நிவேதாவின் நிலையைத் தெரிந்துகொள்ள வேகமாக பயிற்சி நிலையம் வந்த நீனா மற்றொரு தோழியிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்கு சொல்ல முயல, அந்நேரம் அங்கு வந்த ரங்கராஜன், “என் போனிலிருந்து பண்ணுங்க நீனா” என்று நீட்டினான்.

நீனா தன்னுடைய தோழியையும் ரங்கராஜன் நீட்டிய போனையும் மாற்றி மாற்றி பார்க்க…

“நீ அதுலே பண்ணுடி” என்று அப்பெண் தன்னுடைய அலைபேசியை வாங்கிக்கொண்டு நகர்ந்திட்டாள்.

நீனாவும் வேறு வழியின்றி ரங்கராஜன் அலைபேசியிலிருந்தே அகாவுக்கும், அகிலாவுக்கும் அழைத்திருந்தாள்.

நீனா அழைத்து பேசியது வைத்தே இன்று அவளுடன் துணைக்கு யாரும் வரவில்லையென அறிந்திட்ட ரங்கராஜன், அன்று ஒருமணி நேரத்திலேயே வகுப்பு முடித்து அனைவரையும் அனுப்பி வைத்திட்டார்.

பிள்ளைகளின் கூட்டத்தோடு வெளியேற முயன்ற நீனாவை, ரங்கராஜன் அழைத்திட, அவள் காதிலே விழாததைப் போன்று வெளியேறினாள்.

நீனா அங்கிருந்து முக்கிய சாலை நடந்து வருவதற்குள் ஆள் அரவமற்ற அப்பகுதியில் ரங்கராஜன் ஆட்களால் தூக்கி செல்லப்பட்டாள்.

“என்னை விடுங்க… விடுங்க” என்ற நீனாவின் திமிரல்கள் எல்லாம் வீணென்றானது.

ஐந்தாறு தடியர்களுக்கு நடுவே நீனா இருக்கையில் கட்டி வைக்கப்பட்டிருந்தாள்.

“சார் என்னை விட்ருங்க சார்… எங்க வீட்டுல எல்லாரும் பாவம் சார்” என்று அழுகையோடு நீனா கெஞ்சிட…

“நீ என்னை ரொம்பவே காக்க வச்சிட்ட… உன்னை அவ்ளோ ஈசியா விடமாட்டேன்” என்றார் ரங்கராஜன்.

“தினம் ஒரு ஆளு பாடிகார்ட் வேலை பாக்குறாங்க உனக்கு. எந்த பொண்ணா இருந்தாலும் நாலே நாள் தான். வேலையை முடிச்சிட்டு தடயமே இல்லாம என் வழியிலிருந்து விலக்கி வச்சிருப்பேன். ஆனா நீ… என்னை ரொம்ப சுத்தல்ல விட்டுட்ட. ஊருக்குள்ள பெரிய ஆளோட பொண்ணு நீ. அதனால அவசரபடாமா நானும் வெயிட் பண்ண வேண்டியதாப் போச்சு. உன் அப்பன் பெரிய ஆளுன்னு தெரிஞ்சதும் எதுக்கு ரிஸ்க் அப்படின்னு யோசிக்கத்தான் நினைச்சேன். ஆனா நீ ட்ரெஸ் மாத்துன வீடியோ பார்த்தே எனக்கு போதையாகிப்போச்சு. உனக்காக எவ்வளவு ரிஸ்க் வேணும்னாலும் எடுக்கலாம் தோணுச்சு” என்று கிறக்கமாகப் பேசிய ரங்கராஜன், “தீபிகாவை ஊரைவிட்டே ஓட வச்சிட்டேன். எம்எல்ஏ என் மச்சான்னு சொன்னதும் போதும். பொண்ணு தான் முக்கியம்னு நைட்டோட நைட்டா குடும்பத்தோட ஓடியாச்சு” என்றான்.

பல பாவனைகளைக் காட்டி ரங்கராஜன் பேசிய விதத்திலே நீனா அரண்டுப் பார்த்தாள்.

“என்னை விட்ருங்க சார்…” இறைஞ்சினாள்.

“விடுறதுக்கா தூக்கியிருக்கேன்” என்ற ரங்கராஜன், “என்ன இருந்தாலும் பிஞ்சுக் கோழிக்குத்தான் ருசி அதிகம்” என்றார்.

“நான் ஒன்னும் ஸ்கூலே முடிக்கல சார்… என்னை விட்ருங்க. நான் வீட்டுக்கு போவனும்” என்று நீனா தேம்பிட, “சரி போலாம். உன்னை விட்டுடுறேன்” என்ற ரங்கராஜனை நம்ப முடியாது பார்த்தாள்.

“நம்ப முடியலையா? நிஜமா விட்டுடுறேன்” என்றவர், “அதுக்கு முன்ன நடக்க வேண்டியது நடக்கட்டும். விட்டுடுறேன்” என்றார்.

“சார்… ப்ளீஸ்…”

“நீ வந்ததும் அந்த நிவேதாவை தேடனத்தான?” ரங்கராஜன் கேட்க,

“அய்யோ அவளை என்ன பண்ணீங்க?” நீனா தனக்கு உதவ வந்து அவளுக்கு எதுவுமாகிவிட்டதோ என அதிர்ந்து வினவினாள்.

“ஒன்னுமே பண்ணல. அதுதான் வருத்தம்” என்ற ரங்கராஜன், “அவளுக்கு அப்பா இல்ல போலிருக்கே! அவள் அம்மாவை கூப்பிட்டு மிரட்டினேன். பொண்ணு வாழ்க்கை, உயிருன்னு அடங்கியாச்சு. அந்தப் பொம்பளை நல்ல விவரம். தன்னோட பொண்ணு இங்கிருந்தா தானா வம்பை இழுத்துப்பான்னு சொந்த ஊருக்கே கூட்டிட்டு கிளம்பியாச்சு” என்று சிரித்தார்.

“உன்னை முடிச்சிட்டு அவகிட்ட தான் வரலாம்னு, அவளையும் சிக்க வைக்க வழி பண்ணி வச்சிருந்தேன். அது அவளை ஊரைவிட்டு துரத்த ஹெல்ப் பண்ணுச்சு” என்றார்.

“இப்படி பண்ணுறது தப்பு சார்.”

“தப்பு தான்.” உடனடியாக ஒப்புக்கொண்ட ரங்கராஜன், “ஆனா எனக்கு சந்தோஷம் இதுலதான இருக்கு” என்று கண்ணடித்தார்.

“வேணாம் சார்.”

“எனக்கு வேணும்” என்ற ரங்கராஜன், “பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம். வேலையை முடிச்சிட்டு உன்னை அனுப்பி வச்சிடுறேன். நீயும் ஒன்னுமே நடக்காத மாதிரி வீட்டுக்கு போயிடு. சிம்பிள்” என்றிட,

“டேய் என்னடா பண்றீங்க?” என்று கேட்டபடி அங்கு வந்தான் மிதுன்.

“ம்ப்ச்…” நெற்றியைத் தேய்த்த ரங்கராஜன், “கதவை லாக் பண்ணலையாடா?” என தன் ஆட்களிடம் கடிந்தார்.

“இப்போ என்ன சார் பண்றது?” தடியர்களில் ஒருவன் கேட்டிட…

“இவனை போட்டுடலாம் சார்” என்றான் ஒருவன்.

“இதுமாதிரி நிறைய செய்தும் நான் மாட்டாமா இருக்க ஒரே காரணம் யாரும் நான் சம்பந்தப்பட்டு இறந்து போனதில்லை. இப்போ இவன் செத்தா பெரிய நியூஸ் ஆகிப்போகும்” என்ற ரங்கராஜன், “இவன் இங்க வந்திருக்கான் அப்படின்னா, இவன் வீட்டுக்கு இவள் வந்திருக்கிறது தெரிய வாய்ப்பிருக்கு…” என்று தீவிரமாக யோசித்தார்.

ரங்கராஜன் யோசிக்கும் இடைவெளியில் நீனாவை காப்பாற்ற மிதுன் முயல, அனாயசமாக ஒரே அடியில் தடியர்கள் அவனை வீழ்த்தி சுருண்டுபோகச் செய்திருந்தனர்.

“எப்படியிருந்தாலும் இந்தப்பொண்ணு இங்க வந்திருக்கிறது தெரியும் தான சார். உங்க போனிலிருந்து தான வீட்டுக்கு கால் பண்ணாள்” என்றான் ஒருவன்.

“என்னோட நெட் கால்ஸ் சிஸ்டம். ஒவ்வொரு முறை கால் பண்ணும் போதும் ஒவ்வொரு நெம்பர், ஒவ்வொரு இடம் காட்டும். சோ என் நென்பர்னு காட்டாது” என்ற ரங்கராஜன், நெற்றியைத் தட்டியவராக, “டியூஷன் போறேன்னு பொய் சொல்லிட்டு வேறெங்கயோ போயிட்டாள். இங்க வரவேயில்லை. அவ்ளோதான். நம்பமாட்டங்கதான். இவன் வந்திருக்கானே” என்றதோடு, “இவளைத்தேடி வந்த இவன் திரும்பிப்போகலன்னா வேற யாராவது தேடிட்டு வருவாங்க. அப்போ இதை சொல்லி சமாளிச்சு அனுப்பிடலாம். அனுப்பிட்டாலும் நம்ம இடத்தில் அவங்களுக்கு ஒரு கண்ணிருக்கும். சோ, அதுக்குள்ள வேலையை முடிச்சிட்டு, இங்கிருந்து போயிருக்கணும்” என்றார்.

“ரெண்டு பேரும் வெளியில் போய் உண்மையை சொல்லிட்டா?”

“சொல்ல முடியாத மாதிரி செட்டப் பண்ணுவோம்” என்ற ரங்கராஜன், அடுத்து நீனாவிடம் செய்ததெல்லாம் மிருகத்தின் வரையறைக்கும் அப்பாற்பட்டது.

துடிக்க துடிக்க சிறுமியின் உயிரை மகிழ்வின் பெயரில் சிறுக சிறுக மரிக்கச் செய்திட்டான்.

உயிர் போராட்டம் அவளுக்கு ரங்கராஜனோடு நின்றுவிடவில்லை. அடுத்தடுத்தென்று ரங்கராஜனின் ஆட்களின் வேட்டையும் அரங்கேறியது.

யாவும் மிதுனின் கண் பார்க்க, அவனின் ஓலத்தில்.

தடுக்க மனதில் போராடியவனின் கைகள் ஒத்துழைக்கவில்லை. போதை மருந்தின் வீரியத்தில் உடல் பலமற்று தொய்ந்து துவண்டிருந்தான்.

அனைத்தும் முடிய நீனா குற்றுயிராகியிருந்தாள்.

“செத்துடுவா போலிருக்கு.” ஒருவன் சொல்லிட…

“செத்தா சாவட்டும். இந்த ஊருக்கு வந்த வேலை இவளோட முடிஞ்சுது. இனி இங்க நாம தொழில் பண்ண முடியாது. வேற ஊருக்கு போக வேண்டியது தான்” என்ற ரங்கராஜன், “வீடியோ நல்ல க்ளியரா இருக்கா?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் பக்காவா இருக்கு.”

“ஹ்ம்ம் இந்த வீடியோவுக்கு எவ்வளவு மவுஸ் தெரியுமா?” என்ற ரங்கராஜன், “பாக்குறதுல என்ன சுகம் கிடைக்குது தெரியல. அவ்வளவு காசை கொட்டுரானுவ” என்றான்.

“இப்போ இவனை என்ன பண்றது?” கீழே மயக்கத்தில் கிடந்த மிதுனைப் பார்த்து மற்றொருவன் கேட்க, “இன்னொரு டோஸ் இன்ஜெக்ஷன் போட்டுவிடு” என்றான்.

“செத்திடுவான்.”

“அதனால நமக்கு லாஸ் எதுவுமில்ல” என்ற ரங்கராஜன், “அவனைத் தூக்கி அவள் மேல் படுக்க வச்சிட்டு. அதையும் எடுக்க வேண்டிய ஆங்கிளில் வீடியோ எடு. இங்கிருந்து நம்ம பொருள் சின்னதா கூட விட்டுடாம காலி பண்ணிப் போகனும்” என்றான்.

அப்போது ரங்கராஜன் எதிர்பார்த்தது போலவே புவித், இளங்கோ வந்து விசாரிக்க, ஏற்கனவே போட்டு வைத்த திட்டப்படி கூறி அவர்களை அனுப்பி வைத்தவன் துரித கதியில் இடத்தை காலி செய்திருந்தான்.

உண்மையை, அச்சூழலை அனுபவித்தவளின் வாய் வழியாகவே நடந்ததை தெரிந்துக் கொண்டவர்களுக்கு எப்படி இருக்கிறதாம்?

இளங்கோ பேச்சற்று சிலையாகியிருந்தார்.

அத்தியாயம் 25

உண்மை அறிந்திட்ட அகனிகா குறவுணர்வில் தவித்திட்டாள்.

“எல்லாம் என்னால தான்… என்னால்தான் மாமா. நீனாவை காப்பாத்த வாய்ப்புக் கிடைச்சும் தவறவிட்டுட்டேன்” என்று அகனிகா தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதாள்.

ரங்கராஜனுக்கு பயந்து அன்னையின் கெஞ்சலுக்கு உடன்பட்டு ஊருக்கு புறப்பட்டிருந்தாலும் நிவேதா அகனிகாவிடம் உண்மையை சொல்ல நினைத்தாள்.

ஒருமுறை நீனா, தன்னுடைய அலைபேசியிலிருந்து அகனிகாவிற்கு அழைத்திருக்க, அப்போது அந்த எண்ணை நிவேதா சேமித்து வைத்திருந்தாள்.

ஊருக்கு சென்றதும் அன்னையின் கண்ணில் படாது, அகனிகாவுக்கு அழைக்க அவளின் அழைப்பு ஏற்கப்படாது போனது. திரும்ப அகாவுக்கு அழைக்கும் வாய்ப்பு அமைந்திடாது என நினைத்த நிவேதா, நீனா ரங்கராஜனின் மிரட்டலில் மாட்டியிருப்பது, அவனின் எண்ணம், தன் அன்னையை மிரட்டி அனுப்பி வைத்ததென தனக்குத் தெரிந்தவரை அனைத்தையும் குரல் பதிவாக அனுப்பி வைத்திருந்தாள்.

நல்லதோ, கெட்டதோ இதுதான் நடக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டதை காலத்தினாலும் மாற்றிட முடியாது என்பது நீனாவின் விஷயத்தில் உண்மையாகியிருந்தது. இதில் நேரம் ரங்கராஜன் பக்கம் துணை நின்றது தான் அநியாயத்திற்கு சாதகமாகிப்போனது.

நிவேதா அனுப்பிய தகவலை நீனாவால் தாமதமாகத்தான் கேட்க நேரிட்டது. தான் அறிந்த தகவல் அதீத பயத்தைக் கொடுத்தாலும், எந்தளவிற்கு உண்மையெனத் தெரியாது வீட்டிலிருப்பவர்களை பயம் கொள்ளச்செய்ய வேண்டாமென நினைத்து பயிற்சி நிலையம் நோக்கிச் செல்ல எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியிருந்தாள்.

அகனிகா தன்னால் தானென்று மொத்த பழியையும் தன்மீது போட்டுக்கொண்டு அழுது அரற்றியவாறு தனக்குத் தெரிந்த வகையைக் கூறிட,

கேட்டுக்கொண்டிருந்த புவித், இளங்கோவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதில் அவள் மீது தவறென்பதில்லை என்றாலும் அவர்களிடம் மௌனம் மட்டுமே!

நீனா தான் அந்த நிலையிலும்,

“நீ வந்திருந்தாலும் மிதுன் மாமா மாதிரி உன்னையும் எதுவும் பண்ணியிருப்பான். உன் தப்பு எதுவுமில்ல அகா” என்றவள், தொண்டைக் குழியில் முடிச்சிட்ட மூச்சினை கடினப்பட்டு வெளியேற்றி இழுத்தாள்.

அனைத்தும் சில நிமிடங்களில் பகிரப்பட்டிருக்க, நீனாவின் சுவாசம் குறையத் துவங்கியிருந்தது.

“இப்போவாவது ஹாஸ்பிடல் போலாம் நீனா” என்று புவித் தங்கையை தூக்கிட, “என் கடைசி ஆசை நிறைவேத்துவியா அண்ணா?” எனக் கேட்டிருந்தாள் நீனா.

“நீ உயிரோட வந்து கேளு. நான் செய்றேன்” என்ற புவித் அடிகள் வைத்திட, “என் நிம்மதிக்காக” என்றாள்.

“நீ கொஞ்சம் பேசாம இரு” என்று கண்ணீர் சிந்தியவன், அவள் பார்த்த பார்வையில், “சொல்லு” என்றான்.

“நான் செத்ததுக்கு அப்புறம் என்னை காட்சிப்பொருளக்கிடாதீங்க. இந்த உலகம் பத்தி தெரிஞ்சும் எனக்கு நியாயம் வாங்குறேன்னு என்னை திரும்ப திரும்ப அப்யூஸ் பண்ணிடாதீங்க” என்றவளின் தீனமானக் குரல் ஹக் என்ற ஒலியோடு முடிவுக்கு வந்திருந்தது. நீனாவின் வாழ்வும்.

மரத்த நிலையில் நின்றிருந்த விதார்த்துக்கு,

மூவரின் கதறல் செவியை நிறைத்தாலும் உணர்வுகொள்ள முடியவில்லை.

உயிரற்ற தன்னுடைய தம்பியின் கைகளில் தொய்ந்து தவழ்ந்திருக்கும் நீனாவின் முகத்திலே விதார்த்தின் பார்வை குற்றி நின்றது.

எத்தனை நேரம் அங்கு அந்நிலையில் இருக்க முடியும்?

“வீட்டுக்குப் போலாம்” என்று விம்பலோடு இளங்கோ கூற,

“எனக்கு போலீசுக்கு போகலாம் தோணுது. அந்த ரங்கராஜனை சும்மாவிடக் கூடாது” என்றாள் அகனிகா.

அந்நேரம் அப்பகுதி ஆய்வாளரே தனித்து அங்கு வந்தார்.

“என்கிட்ட வந்து என்ன சொல்லுவீங்க?” என்று ஆய்வாளர் ரங்கேஷ் திமிராகக் கேட்டான்.

அவன் உடல்மொழியில் காண்பித்த தெனாவெட்டு, குரலில் நிறைந்த நக்கல் எதையும் உணரும் நிலையில் இல்லாத அகனிகா நடந்த அனைத்தையும் மூச்சுவிடாது சொல்ல, ரங்கேஷ் குறுக்கிடாது முழுவதும் கேட்டான்.

“அவன் மேல நான் கம்பிளெய்ன்ட் கொடுக்கிறேன் சார். அவனைத்தேடி கண்டுபிடுச்சு அரெஸ்ட் பண்ணுங்க” என்றாள். ஆவேசமாக.

“ஆமா அவனை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போடணும்” என்றார் இளங்கோ.

“ஹோ…” என்ற ரங்கேஷ், “இந்த வீடியோ பார்த்திட்டு யாரு குற்றவாளின்னு நீங்களே சொல்லுங்க” என்று அலைபேசியில் சில நொடிகள் ஓடும் காட்சியை காண்பித்தான்.

“சார் இது பொய்…” அகனிகா அதிர்ந்திட, புவித் உணர்வற்று வெறித்துப் பார்த்தான் ரங்கேஷை.

“இதுதான் உண்மை. உங்க வீட்டுப் பையன் தான், உங்க பொண்ணு மேலிருந்த ஒன் சைட் லவ்வால, டியூஷனுக்கு வந்தப்பொண்ணை, இந்த நேரம் இங்க யாரும் இருக்கமாட்டங்க தெரிஞ்சு இப்படி பண்ணிட்டான். இங்க டியூஷன் வச்சிருந்த ரங்கராஜன் காலையிலே வேற ஊர்ல வேலை கிடைச்சிருக்குன்னு காலி பண்ணி போயிட்டார். இப்போ உங்க பையனை காப்பாத்த குடும்பமா சேர்ந்து வேற கதை சொல்றீங்க” என்று அசராது கதை ஒன்றை புனைவு செய்தான்.

“இப்படி காசுக்காக தப்புக்கு துணை போறீங்களே” என்று இளங்கோ சீற,

“உன்னையும் சேர்த்து உள்ளத் தள்ளனுமா? செத்துப்போனது உனக்கு அண்ணன் பொண்ணுதான? உன் பொண்ணு இல்லையே” என்றிட, இளங்கோ ரங்கேஷின் காக்கியை கொத்தாகப் பற்றியிருந்தார்.

“இப்படி ஆவேசப்படுறதால ஒரு பலனுமில்லை. உயிர்ப்போன பின்னாடியும் உங்க பொண்ணு மானம் தான் போகும். கூடவே உங்க பையனும் ஜெயிலுக்குப் போவான். பெரிய இடம் நீங்க. அந்தப்பேரு போயி உங்க குடும்ப மானம் தான் விமர்சனம் செய்யப்படும்” என்றான்.

“என்ன ஆனாலும் பரவாயில்லை. நாங்க டிஜிபி’கிட்ட போறோம்” என்றாள் அகனிகா.

“எங்கப்போனாலும் இந்த வீடியோ பேசும்” என்று தன்னுடைய அலைபேசியை ஆட்டிக் காண்பித்தான் ரங்கேஷ்.

போதையின் வீரியத்தால் ஒன்றும் உணர முடியாத நிலையில் நீனாவின் மீது படுத்திருப்பது ஒவ்வாத ஒன்றாக மனம் அறிவுறுத்த, அந்நிலையிலும் அவள் மீதிருந்து விலக முயன்று மிதுன் செய்த அசைவுகள் யாவும், அவன் நீனாவிடம் தகாத முறையில் நடந்துகொள்வதைப் போன்று தோற்றம் கொண்டிருந்தது அக்காணொளியில்.

“இதில்லைன்னா என்ன? என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு” என்ற அகனிகா, “என் போன் எங்க?” என்று புவித்திடம் வினவினாள்.

புவித் புரியாது பார்க்க…

“நிவேதா அதுல ரங்கராஜன் பற்றி சொன்னது எல்லாம் இருக்கு” என்றாள்.

“போலீஸ் ஆக்சிடென்ட் ஆன

இடத்தில் கிடைச்சதா கொடுத்தாங்க. பட் ஃபுல்லி டேமேஜ்ட்” என்றான் புவித்.

“அப்போ அப்போ தீபிகாவை கண்டுபிடிச்சு சாட்சி சொல்ல வைப்போம்” என்றவளை பார்த்து எள்ளி நகைத்த ரங்கேஷ், “உயிருக்கு பயந்து ஊரைவிட்டுப் போனவங்களா வந்து சாட்சி சொல்லுவாங்க” என்றான்.

“நிவேதா சொல்லுவா” என்றாள்.

“அவளோட அம்மா விடனுமே! புருஷன் இல்லாத பொம்பளை. தினம் ஒருத்தன் வீட்டு கதவை தட்டுவான் சொன்னது தான். மிரண்டுப்போச்சு” என்ற ரங்கேஷ், “உங்களுக்கு ஆப்ஷனே கிடையாது. சப்போர்டுக்கு பெரிய ஆளுங்ககிட்ட போனாலும். நான் சொன்னதைத்தான் சொல்லுவாங்க. தேவையில்லாத பிரச்சினை எதுக்கு. உங்க குடும்ப மானத்தை, இருக்கிற பெயரை நீங்களே கெடுத்துக்கப் போறீங்களா?” என்றான்.

உண்மை, நியாயம் அனைத்தும் தங்கள் பக்கமிருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையை அறவே வெறித்து கையாலாகாத நிலையில் நின்றனர்.

நேர்ந்த அனர்த்தத்தில் மிதுன் சிக்கிக்கொள்ளாமல் இருந்தாலாவது நீனாவிற்கு நியாயம் வேண்டுமென்று ஏதாவது முயற்சி செய்து பார்த்திருக்க முடியும். இங்கு அந்த வழியும் அடைப்பட்டிருக்க,

“இறந்த பின்னராவது எனக்கு நிம்மதி வேணும். என் உடம்பை மீடியாவுக்கு காட்சியாக்கி திரும்ப திரும்ப சாகடிச்சிடாதீங்க” என்று இறுதியாக நீனா கேட்டுக்கொண்டது அனைவருக்கும் காதில் எதிரொலிக்க, மௌனமாக வீடு வந்திருந்தனர்.

வீடு வந்த பின்னரும் மௌனம் நீடிக்க, அகிலா கத்திய கத்தலில் இளங்கோ தான் ரங்கேஷ் வந்து பேசிய இறுதி வார்த்தைகள் வரை ஒன்றை விடாது தன் குடும்பத்தினருடன் கனத்த மனதோடு, வழியும் கண்ணீரோடு சொல்லியிருந்தார்.

அந்த நேரம் அனைவரும் மிதுனுக்காக என்று மட்டுமே நீனாவின் இறப்பின் உண்மையை மறைக்க நினைத்தனர்.

விதார்த் உணர்வுகளற்று வெகு நேரமாக அப்படியே இருக்க,

“வாய்விட்டு கதறி அழுதிடு விது” என்று ராஜேந்திரன் அவனை தோளில் சாய்த்துக்கொண்டு கூற,

“மாமா… நீனா” என்றவன் தான் பார்த்த காட்சியின் தாக்கம் சற்றும் குறையாது அந்நேர வலி போன்று பெருங்குரலெடுத்து கதறினான்.

மகனின் ஓலம் நெஞ்சத்தின் சுமையைக் கூட்டிட, நீனாவின் உடல் மீது விழுந்து அகிலா அழுதிட,

“அத்தை” என்று அவரிடம் அரவணைப்பு வேண்டி கைகள் நீட்டினாள் அகனிகா.

அகா நீட்டிய கரத்தை அதிவேகத்தில் உதறித் தள்ளிய அகிலா,

“எம் பொண்ணு நிலைக்கு நீதான் காரணம்” என்று கூறிட, அகாவின் உயிர் உள்ளுக்குள் சுருண்டு ஓலமிட்டது.

என்னதான் அவளே தன்னை குற்றவாளியக்கிட நினைத்தாலும் அது உண்மையல்லவே. உண்மை அறிந்த அகனிகாவுக்கு விபத்து ஏற்பட்டதும் அவ்வளவில் நல்லதுதான். இல்லையேல் ரங்கராஜன் எனும் அரக்கனிடம் மாட்டிகொண்ட நீனாவின் நிலை, அவளைத்தேடிச் சென்ற அகாவுக்கும் நேர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகமாயிற்றே! மிதுன் ஆண் என்பதால் வேறு வழியில் காட்சியை வடிவமைத்த ரங்கராஜனுக்கு அகனிகாவை வைத்து இன்னும் வேறுமாதிரி காட்சிப்படுத்தியிருப்பான். இல்லையேல், நீனாவின் நிலைக்கு அவளையும் ஆட்படுத்தியிருப்பான். அகனிகா அங்கு சென்றிருந்தாலும், அவள் செல்வதற்கு முன்பே நீனா ரங்கராஜன் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்தாள் என்பது நேரங்களை கணக்கீடு செய்யும் போது விளங்கத்தான் செய்கிறது. இந்த கோணம் புரிந்தாலும் ஏனோ அனைவராலும் அதனை ஏற்க முடியவில்லை.

தவறு செய்தவன் கண்ணுக்கு முன்னில்லாமல் போயிருக்க, தவறு நேராமல் தடுக்கக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட அகனிகா அகிலாவின் பார்வையில் குற்றவாளியாகிப் போனாள்.

“அத்தை…”

“இனி என்னை அப்படி கூப்பிடக்கூடாது நீ” என்ற அகிலா அதற்கடுத்து பேசிய வார்த்தைகள் யாவும் அவரது வலியின் பிரதிபலிப்பு என்று உணர்ந்தாலும் வார்த்தைகளின் வீரியத்தை அகனிகாவால் மட்டுமல்ல, அங்கிருந்த யாராலும் ஏற்கமுடியவில்லை.

முழு குற்றத்திற்கும் மூலம் அகனிகா தான் எனும் வகையில் தன்னுடைய ஆற்றாமையை அகிலா வெளிப்படுத்திட, ஒருகட்டத்தில் பொறுக்க முடியாது சந்தியாவும் பதிலுக்கு பேசியிருந்தார்.

“என்னதான் ரத்த உறவாயிருந்தாலும், சொந்த பிள்ளைங்களா நினைச்சு வளர்த்தாலும் வாயும் வயிறும் வேற, உம் பிள்ளை வேற எம் பிள்ளை வேறன்னு பிரிச்சுப் பார்த்துட்டீங்களே” என்று சந்தியா அகிலாவிடம் கேட்டதோடு இல்லாம, அகனிகாவை அடி வெளுத்துவிட்டார்.

“பொம்பளை பிள்ளைக்கு அப்படியென்ன பெரியத்தனம். தன்னால எல்லாம் செய்ய முடியும்னு அப்படியென்ன கண்மூடித்தனமான நெனப்பு” என்று கேட்டு கேட்டு அடித்திட்டார்.

அவரைத் தடுக்க முயன்ற புவித், இளங்கோவின் செயல்கள் எல்லாம் வீணானது.

அகிலா புரிந்துகொள்ளாது பேசிய பேச்சுக்கள் யாவும், தன் மகளே அவரது மகளை கொன்றதுப்போன்று உருவகப்படுத்தியிருக்க, அதன் கணம் தாளாது மொத்த வேதனையையும் மகளை அடிப்பதில் காட்டியிருந்தார்.

சூழல் புரிந்து சிதம்பரம் அகனிகாவை தன்னுடைய கைவளவில் இழுத்துக் கொள்ளும்வரை சந்தியாவின் ஆவேசம் அடங்கவில்லை.

“அவ நேரங்காலம் சரியில்லாமப் போச்சு. அதுக்கு இருக்கிறவளை வதைக்கிறது சின்னத்தனமா இருக்கு” என்ற பொதுவாகக் கூறிய சிதம்பரம், “உம் பொண்ணு இந்தநிலையில் செத்ததுக்கு முழு பொறுப்பும் அவள் மட்டும்தான். ஆரம்பத்திலே இதுதான் விஷயம்ன்னு சொல்லியிருந்தா இந்த நிலையே வந்திருக்காது” என்று அகிலாவை ஏறிட்டு அழுத்தமாகக் கூறினார்.

“இருந்தாலும் இவள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இப்போ நம்ம பிள்ளை தான” என்று பவானி வாய் பொத்திக் கூற, சிதம்பரம் பார்த்த பார்வையில் ஒடுங்கிவிட்டார்.

நீனா மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாக அவளின் இறப்பு வெளியில் தெரியப்படுத்தப்பட்டது. அதற்கு சிதம்பரத்தின் பணம் காரணமாகியது.

தவறுக்கு துணை நிற்கும் இந்த செழிப்பு, உண்மையை வெளிவர வைப்பதில் தடையாக அமைந்துவிட்டதே என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் புலம்பி அழுதார்.

மிதுன் கண் விழிக்க இரண்டு நாட்களாகியது.

அவனறிந்த பக்கங்கள் தவிர்த்து மற்றைய பக்க நிகழ்வுகளை பவானி மூலமாகத் தெரிந்து கொண்டவனுக்கு, நடந்த தவறுக்கு அகனிகா காரணமில்லை என்றாலும், கல்லூரியில் விஷயம் அறிந்த உடனே தங்களில் யாரிடமாவது அதனை பகிர்ந்திருக்கலாம் எனும் கோபத்தை தன்னுடைய விலகளில் காண்பித்தான்.

“நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை. நீங்க உங்க இன்ப்ளூயன்ஸ் யூஸ் பண்ணுங்க. நாம அந்த ரங்கராஜனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம்” என்று மிதுன் சிதம்பரத்திடம் பிடிவாதம் பிடிக்க…

“அந்த டாக் என்கன்னே தெரியல” என்று பற்களைக் கடித்தான் விதார்த்.

“நமக்கு ஒரு பக்கம் பெரிய ஆளுங்க சப்போர்ட் இருக்குன்னா, அவனுக்கு அரசியல்வாதிங்க சப்போர்ட் இருக்கு. அந்த ரங்கேஷ் சொன்னது உண்மை. எங்கப் போனாலும் என் பொண்ணு மானம் தான் போகும். மிதுன் தான் குற்றவாளியாவான். லேட்டானாலும் அந்த ரங்கராஜனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். இறந்துபோன உயிருக்காக உங்க வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க” என்று அமைதிப்படுத்தினார்.

சந்தியாவுக்கு குற்றவுணர்வு. காரணமேயில்லாது மகளை அடித்த குற்றவுணர்வு. அவளது முகம் பார்த்து பேச தடையாக அமைந்துவிட்டது.

அன்று அகிலா பேசிய பேச்சிற்கு அமைதியாகிய அகனிகா, அதற்கு பின்னர் முழுவதுமாக அமைதியாகிப்போனாள். அனைவரிடத்திலும் பேசுவதையே தவிர்த்துவிட்டாள்.

அகிலாவுக்கு அகனிகாவை பார்க்கும் நேரங்களிலெல்லாம், ‘கிடைத்த வாய்ப்பு சரியாக கையாண்டிருந்தால்?’ என்ற எண்ணத்தையே எழுப்ப அகனிகாவின் மீது தேவையில்லாத கோபத்தை இழுத்துப் பிடிக்கத் தொடங்கினார்.

மிதுனால் தன்னுடைய கண்கள் முன்னால் நீனாவுக்கு நேர்ந்த கொடுமையை மறக்க முடியாது, அவள் சுற்றித் திரிந்த இடத்தில் நிலைக்கொள்ள முடியாது படிப்பைக் காரணம் காட்டி வெளியூர் சென்றவன் தான், தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கு கூட வரவில்லை.

நாட்கள் வருடங்களாக அனைவரும் இயல்பாக நடமாடினாலும் அவ்வீட்டில் பழைய மகிழ்ச்சி இல்லை.

விதார்த், வர்ஷினிக்கு குழந்தைகள் பிறந்த போதும் அவ்வீட்டின் கனத்த சூழல் மாற்றம் பெறவில்லை.

தனது குடும்பத்தினரை மீட்பதற்காக வீட்டில் சுப நிகழ்வு ஒன்றை நடத்தலாமென சிதம்பரம் தீர்மானித்து, ஒரு வருடத்திற்கு முன்பு புவித்திற்கு திருமணம் செய்யலாமென தனது முடிவை அனைவரிடத்திலும் தெரியப்படுத்தினார்.

“பொண்ணு யாரு?” அகிலா கேட்க,

“அகா தான்” என்று சிதம்பரம் முடிக்கவில்லை,

“என் பொண்ணை கொன்னவளை என் மருமமகளாக்கிக்கனுமா நான்” என்று ஆவேசமாகக் கத்தியிருந்தார்.

விஷயமறிந்து வெகு நாட்களுக்குப் பின்னர் புவித்திடம் தானாக பேசச் சென்றாள் அகனிகா.

“அத்தைக்கு இதுல விருப்பமில்லை மாமா. அவங்களை கஷ்டப்படுத்தி இந்த கல்யாணம் வேணாம். எனக்கு நீங்களும் வேணாம். இப்போ கல்யாணம் பண்ணிக்கிற நிலைமையில நானும் இல்லை” என்றவள், “கல்யாணம்னு ஒண்ணு நடந்தா உன்னோடத்தான். இல்லைன்னா வாழ்க்கை முழுக்க என்னால் தனியாவே இருக்க முடியும்” என்ற புவித்தின் அழுத்தமான வார்த்தையில் அவனைப்பற்றி அறிந்தவள் தான் இறங்கி வர வேண்டியதாகியது.

அகிலாவின் மறுப்பு, அகாவின் வேண்டாமென்ற மன்றாடல் அனைத்தும் புவித்தின் அமைதியான பிடிவாதத்தில் ஒன்றுமில்லாமலாகியது.

“எனக்கு கனி தான்” என்ற புவித்தின் பிடிவாதத்தால் மட்டுமே புவித், அகனிகாவின் திருமணம் நடந்திருந்தது.

திருமணம் முடிந்திருந்தாலும், அகனிகாவின் எண்ணங்களுக்கு மதிப்பளித்துக் காத்திருந்த புவித்திற்கு, அத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்த ரங்கராஜனைப் பற்றித் தகவல் கிடைக்க, மாற்றம் தேவையென்று ராயல்டி டைம்சில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, ஜானவியின் உதவியோடு ரங்கராஜன் பங்குதாரராக இருக்கும் அக்கல்லூரியில் பேராசியராக சேர்ந்தான்.

அன்று முதல் ஒவ்வொரு அடியாக நிதானத்துடன் எடுத்து வைத்து, தன்னுடையக் கூட்டினை சிதைத்த ரங்கராஜனை இன்று கொன்று, தனது தங்கையின் மரணத்திற்கு தானே தீர்ப்பெழுதியிருந்தான் புவித் ஆருஷ்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
17
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்