அத்தியாயம் – 11
“இப்படி அமைதியா பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? யெஸ் ஆர் நோ னு ஏதாவது பதில் சொல்லு…” அந்த அமைதியை கிழித்தது அவன் குரல்,…
அவன் குரலில் அதிர்ச்சியிலிருந்து சற்றே வெளிவந்த நந்தினி, தொண்டையை செருமிக் கொண்டு, தைரியம் வந்தது போல் “நோ சார்…” என்றாள் உடனே…
அந்த ஒரு வார்த்தை தீரஜின் இதயத்தைக் குத்தியது போலிருந்தது, மூச்சை ஆழமாக இழுத்து விட்டவனுக்கு இது இரண்டாம் நிராகரிப்பு போல் இருந்தது..
ஆனால் வெளியில் அமைதியாகவே,.. “எதற்காக ‘நோ’? என்னால நடக்க முடியாத காரணத்தினாலயா?” என்று கேட்டான்…
அவளோ திடுக்கிட்டு, கையை அசைத்தபடி,.. “ஐயோ! சத்தியமா இல்ல சார், நான் ஏழ்மையான வீட்டு பொண்ணு… ஆனா நீங்க எவ்வளவு பெரிய ஆளு, நான் உங்களுக்கு பொருத்தமா இருக்க மாட்டேன் சார்… அதனால தான் ‘நோ’ சொன்னேன்” என்று பதறியபடி பதில் தந்தாள்…
அந்தச் சொற்கள் தீரஜின் நெஞ்சை குளிரச் செய்தது, அவனுடைய கோபம் அடங்கியதோடு, முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையும் தோன்றியது…
“பணம், புகழ், அந்தஸ்து அதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம் தான், அதையெல்லாம் வச்சு ‘நோ’ சொல்ல வேண்டாம், என்னால நடக்க முடியாது, சாதரண வாழ்க்கை வாழ்றது ரொம்ப கஷ்டம், இதை மட்டும் வச்சு உன்னோட பதிலை சொல்லு” என்றான்,…
அவளோ சில நொடிகள் அமைதியாக இருந்தாள், உள்மனதில் பல கேள்விகள் அலைமோதின, அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்
சற்றே துணிந்து, “எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்கிறீங்க, சார்?” என்று கேட்டாள்.
தீரஜ் அந்தக் கணத்தில் தனது பார்வையைத் தாழ்த்தினான்,
சுவாசத்தை சீராக்கிக் கொண்டு.. “என் அப்பாவுக்காக…” என்றான் மெதுவாக…
அவள் கண்கள் குழப்பத்தில் சுருங்க, அவனே தொடர்ந்தான்…
“அவருக்கு ஒரே ஆசை நான் கல்யாணம் பண்ணி மனைவியோட வாழ்க்கை நடத்தணும்னு, அவரோட அந்த ஆசையை நிறைவேற்றணும்னு நான் நினைக்கிறேன்” அந்த வார்த்தைகள் நந்தினியின் இதயத்தில் ஆழமாய் பதிந்தது,
அவளது மனதில் அவனைப் பற்றிய மதிப்பு இன்னும் பலமடைந்தது….
ஆனால் அந்த கணமே உள்ளுக்குள்… ‘இவருக்கு கால்கள் இல்லைங்கிறது எனக்கு பிரச்சனையில்லை, என் மனசுக்கு அது எப்போவும் ஒரு குறையா தோணாது, ஆனா இவ்வளவு பெரிய சொத்துக்கு அதிபதியான இவரை, ஒன்றும் இல்லாத நான் கல்யாணம் பண்ணிக்கிறது
சரியா வருமா? அவருக்கும் எனக்கும் பொருத்தமா இருக்குமா?’
அவளது பார்வை நெருடலோடு அவனை நோக்கியது, அவளின் அந்த அமைதியான கண்களில் திகைப்பும், எண்ணமும், சற்றே பயமும் கலந்து தெரிந்தது,…
மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டாள், அவன் பணம், புகழ் இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லி இருந்தாலும், அவளால் அவனை போல் யோசிக்க முடியவில்லை, அவன் உயரத்திற்க்கும் அவளுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது, முகத்தில் குழப்பமும் தயக்கமும் தெரிய,.. “சார்…” என்று தொடங்கினாள்…
தீரஜோ கவனமாய் அவளது உதடுகளை நோக்கி இருந்தான்…
“திரும்பவும் சொல்றேன் சார், உங்களுக்கு கால்கள் இல்லையென்பது எனக்கு ஒரு பிரச்சனையில்ல, ஆனா…” என்று இழுத்தபடி அவள் பார்வையைத் தாழ்த்தினாள்…
“ஆனா?” என்று அவன் மெதுவாகக் கேட்டான்…
“நான் ஒன்னும் இல்லாத வீட்டு பொண்ணு சார், நீங்க அவ்வளவு பெரிய சொத்துக்கு அதிபதி,
உங்க வாழ்க்கையும், என்னோட வாழ்க்கையும் கொஞ்சம் கூட பொருந்தாது” திரும்ப சொன்னதையே சொன்னவளின் குரலில் அச்சமும், அதே சமயம் உள்ளம் நிறைந்த நேர்மையும் இருந்தது….
தீரஜ் அந்த வார்த்தைகளை அமைதியாகக் கேட்டான், அவன் கண்களில் சற்று வலியும், அதே சமயம் மென்மையான புன்னகையும் ஒளிர்ந்தன…
“உனக்கு என் சொத்து, என் புகழ் வாழ்க்கை தான் தடையா தோணுதா?” என்றான், அவள் சற்றே தலையசைத்தாள்….
தீரஜின் இதயம் அந்தக் கணத்தில் மெல்லிய நெகிழ்ச்சியில் மூழ்கியது.
‘பணம், புகழ் அந்தஸ்த்தை வைத்து பழகும் நபர்கள் அவன் வாழ்க்கையில் ஏராளம் பேர் வந்து போயினர், மனிஷா கூட அவனிடம் நிறைய பணத்தை தான் எதிர்பார்த்தாள், வாரம் வாரம் விலையுயர்ந்த பொருளை எப்படியும் அவனிடமிருந்து பறித்துக்கொள்வாள், வெளியே அழைத்து சென்றால் அவனின் கிரெடிட் கார்ட் அவளின் கையில் தான் இருக்கும், தன் இஷ்டப்படி செலவு செய்வாள், அவர்களுக்கெல்லாம் மத்தியில் இவள் தனியாய் தெரிந்தாள், இப்படியும் சிலர் இருக்க தான் செய்கிறார்கள்’ என்று அவன் மனம் நினைத்துக் கொண்டது,..
தீரஜ் சற்றே நிமிர்ந்து அவளை நோக்கி.. “மிஸ் மதுநந்தினி…”என்று மெதுவாகத் தொடங்கியவன்.. “நீ சொன்னதெல்லாம் எனக்கு புரியுது ஆனா…” என்று சிறு இடைவெளி விட்டு.. மீண்டும்… “நானும் மறுபடியும் சொல்றேன், சொத்து, புகழ், இந்த பெரிய வாழ்க்கை இதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம் தான் அவை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எனக்கு முக்கியமாமது உன் பதில் மட்டும் தான், நீ என்னை வாழ்க்கைத் துணையா ஏற்கிறியா இல்லையாங்கிறது தான் இப்போ எனக்குத் தேவையான ஒன்று” அவனது பார்வையில் இருந்த நேர்மையைத் தாங்க முடியாமல் நந்தினி சற்றே பார்வையைத் தாழ்த்தினாள், கைகளை பிசைந்து கொண்டாள், அவளது உள்ளத்தில் இன்னும் பதட்டமும் குழப்பமும் இருந்தாலும், அந்தக் கணத்தில் தீரஜின் வார்த்தைகள் அவளது மனதை மெதுவாகத் தொட்டதும் உண்மை…
இருப்பினும் அப்போதும் அவனுக்கான பதிலை சொல்லாமல், சற்றே நடுங்கிய குரலில்… “சார்… என் அம்மா உடம்பு முடியாதவங்க, அவங்க கூடவே இருந்து நான் பத்திரமா பார்த்துக்கனும்னு நினைக்கிறேன், நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற வீட்டுக்கு போயிட்டா அவங்கள என்னால பார்த்துக்க முடியாம போயிரும்” தாயை பற்றி கூறிய கணம் அவளது கண்களில் சின்ன நீர் துளிகள் ஒளிர்ந்தன,..
அதைப் பார்த்தவுடன் தீரஜின் நெஞ்சம் நெகிழ்ந்தது, தாயின் மீது அவள் வைத்திருக்கும் அன்பு புரிந்தது, மெல்லிய புன்னகையோடு.. “கல்யாணத்துக்குப் பிறகு உன் அம்மாவை கவனிச்சிக்கிற பொறுப்பு உன்னோடது மட்டும் இல்ல… என்னோடதும் தான்”
அந்த வார்த்தைகள் நந்தினியின் மனதை எங்கோ ஆழமாகத் தொட்டன, அவளது கண்ணீர் இப்போது வலியின் கண்ணீராக இல்லாமல் நெகிழ்ச்சியின் கண்ணீராக மாறியது….
அவள் அப்போதும் எதுவும் பேசாமல் மெதுவாகத் தலை குனிந்தாள், அவனோ “வேறு எதுவும் சொல்லனுமா?” என்று கேட்க,.. அவளும் தயக்கத்துடன்
மெல்ல தலையசைத்து… “இன்னொரு விஷயம் கேட்கணும்” என்றாள்..
தீரஜ் அமைதியாக அவளை நோக்கி, “கேளு” என்றான்..
அவள் சற்றே தடுமாறிய குரலில்..
“இந்த அளவுக்கு வசதியும், புகழும் இருக்கிற நீங்க என்னை மாதிரி ஒரு பொண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? உங்க தகுதிக்கு ஏற்ற ஒரு பொண்ணைத் தேடி கல்யாணம் பண்ணிக்கலாமே…” என்று கேட்டவள், அவனது பார்வையைச் சற்று பயத்தோடு எதிர்கொண்டாள்..
அவனோ சற்றே சிரித்தான், ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் அவனது மன வலி மறைந்திருந்தது…
உடலை முன்னோக்கி நகர்த்தியவன்,.. “பணத்துக்காக வர பொண்ணு எனக்கு வேணாம் மிஸ் மதுநந்தினி” என்றான் மெதுவாக,
அவள் விழிகள் ஆச்சரியத்தோடு பெரிதாய் விரிந்தன…
தீரஜ் தொடர்ந்தான்…
“என்கிட்ட இருக்கும் வசதிக்காக வரவங்க நிறைய பேர் இருக்காங்க, ஆனா எனக்கு அது தேவையில்லை, என்னிடம் உள்ள குறையை ஏத்துக்கிட்டு, என் வாழ்க்கையை உண்மையா பூர்த்தி பண்ண வர பொண்ணு தான் எனக்கு தேவை, அது உன்கிட்ட இருக்குனு எனக்கு தோணுச்சு, அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்” அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நந்தினியின் மனதில் புயலை கிளப்பியது, அவள் அறியாமலேயே அவளது பார்வை அவன் முகத்தில் ஆழ்ந்து விழுந்தது, அவன் குரலில் இருந்த அந்த உண்மைத்தன்மை, அவனது கண்களில் இருந்த அந்த ஏக்கம் அவள் மனதையும் மெதுவாக உலுக்கியது…
“வேற எதுவும் கேட்கணுமா?” என்றான் தீரஜ்,.. ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவள்,.. குரலை மெதுவாகத் தாழ்த்தி… “என் அம்மா கிட்ட கேட்கணும் சார்…” என்றாள்…
தீரஜ் சற்றே முன்வந்து, அவள் முகத்தை நோக்கி,.. “தாராளமா கேளு ஆனா…” என்று நிறுத்தி சிறிது இடைவெளி விட, அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்….
அவன் பார்வை கூர்மையடைந்தது… பின்.. “அதுக்கு முன்னாடி உன்னோட பதில் எனக்கு வேணும்” அந்தக் கணத்தில் அவளது இதயம் துடிக்க, தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொண்டன, தடுமாறியவள்… பின் தைரியத்தைத் திரட்டி, கண்களைச் சற்றே உயர்த்தி,.. “எ… எனக்கு சம்மதம் சார்” என்று மெதுவாகச் சொன்னாள்…
அந்தச் சொற்கள் தீரஜின் மனதைப் புயல்போல தாக்கின, அவனது உதட்டில் ஒரு நெகிழ்ச்சிப் புன்னகை மலர்ந்தது, அந்த புன்னகை வெறும் சிரிப்பல்ல வெற்றியின் அடையாளம்,
இவ்வளவு நாளாக தனக்குள் சுமந்திருந்த வலி, நிராகரிப்பு, சந்தேகம் அனைத்தையும் தாண்டி ஒரு நம்பிக்கை அவனுக்குள் பூத்தது…
***********
பலவித யோசனைகளின் பின் தன் தாயின் முன்னிலையில் வந்து நின்றாள் நந்தினி, தீரஜின் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு வந்திருந்தாலும், ‘அம்மாவிடம் இதை எப்படி சொல்வது?’ என்ற சங்கடம் அவளை உள்ளிருந்து தின்றுக்கொண்டிருந்தது,
ஆனால் சொல்லாமலும் இருக்க முடியாதே நாளை அவர் கேட்பாரே என்ற எண்ணத்திலேயே மனதை திடப்படுத்திக் கொண்டு… “அம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்
“என்னமா?” என்றார் பார்வதி,
மகளின் முகத்தில் இருந்த பதட்டம் புதிதாய் இருந்தது அவருக்கு…
“அ.. அது” என்று அவள் திணற, அவரின் புருவங்கள் சுருங்கியது,
அவளது குரலில் இருந்த திணறலை கவனித்த பார்வதி, சற்று யோசனையுடன்,
“சொல்லுடி என்ன?” என்று கேட்டார்..
“அ… அது… அம்மா, அன்னைக்கு நமக்கு ஹெல்ப் பண்ணாருல…அவரை நான் இப்போ கொஞ்ச நாள் முன்னாடியே பார்த்துட்டேன், அவர் தான் என்னோட பாஸ்…”
அவள் சொன்ன அந்த வார்த்தைகள் பார்வதியின் முகத்தில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒளியை பரப்பியது..
“நிஜமாவா நந்தினி? இதை பத்தி ஏன்டி முன்னாடியே சொல்லல?” சிறிது கோபம் கலந்த குரலில் அவர் வினவ,.. “நீங்க அவரைப் பார்க்கணும்னு அடம் பிடிப்பீங்கன்னு தெரியும்… அதனால தான் சொல்லலம்மா” என்றாள் அவள் குற்றவுணர்ச்சியோடு…
“இப்போவும் நான் அடம் பிடிக்க தான் போறேன், நாளைக்கே அவரை நான் பார்க்க வரேன், அந்த தம்பியை நான் நேர்ல பார்க்கணும், நன்றி சொல்லணும்” என்றார்
அந்த நேரம் நந்தினி மனதை இன்னும் பெரிதாய் தைரியப்படுத்திக்கொண்டு…
“நா… நான் இன்னொரு விஷயமும் சொல்லணும்மா…” என்று சொல்ல,.
பார்வதி சற்று ஆர்வத்துடன், “என்னடி? சொல்லு.” என்றாள்…
நந்தினி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டபடி,.. “இன்னைக்கு ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கிட்டு அவர்கிட்ட கொடுக்க போனேன், அப்போ அவர்…” என்று ஆரம்பித்தது தங்களுக்குள் நடந்த அனைத்து உரையாடல்களையும் சொல்லி விட்டு தயக்கமாக நிமிர்ந்து பார்க்க, அவள் தாயோ அதிர்ச்சியில் உச்சக்கட்டத்தில் தான் நின்றிருந்தார்…