Loading

பிரியா அழுது கொண்டே கிளம்பி விட, அமரும் கிளம்பினான். அவள் பத்திரமாக செல்கிறாளா? என்று பார்க்க பின்னாலேயே சென்றான். வழக்கத்தை விட மெதுவாகவே சென்று வீட்டை அடைந்தாள்.

அவளது கார் வீட்டில் நின்ற பிறகே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

“கவலைப்படாத சுகி.. இந்த வலி உனக்கு சீக்கிரமா மறந்து போகும். நான் மறக்க வைக்கிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.

அழுத முகத்தை மறைத்து அமைதியாக வீட்டுக்குள் சென்றாள் பிரியா. அவளை கயல் நிறுத்தினார்.

“என்ன முகமெல்லாம் எதோ மாதிரி இருக்கு? எதாவது பிரச்சனையா? வேலையில எதாவது ஆகிடுச்சா?” என்று கேட்க மனதை மறைத்து, “இல்லமா.. அமர் வராததால நிறைய வேலை பார்த்தேன். இப்ப அவர் வந்துட்டாரு.. இருந்தாலும் வேலை ஓயல.. டயர்ட்” என்று சமாளித்தாள்.

“பேசாம ரெண்டு நாள் வீட்டுல இரு.. இப்படி துவண்டு போய் நீ வேலை பார்க்க வேணாம்”

“நான் தூங்குறேன்..” என்று விட்டு திரும்ப, “சாப்பிட்டு படு” என்று அதட்டினார் தாய்.

“வேணாம்மா.. தூக்கம் தான் வருது” என்றவள் அதற்கு மேல் நிற்காமல் அறையில் சென்று அடைந்தாள்.

இரவெல்லாம் நிறைய அழுதாள். சிவாவை நினைத்தும் இப்படி பாதியில் போன காதலை நினைத்தும் அழுகை வந்தது. அவள் எத்தனையோ கற்பனைகளை கண்டு வாழ்ந்திருக்க, அனைத்தையும் மறந்து விட்டு அவன் போய் விட்டான்.

ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்ததும் அவளை வேண்டாம் என்று விட்டான். அவனுக்கு உதவ ஒரு குடும்பம் இருப்பதால் அது அவனுக்கு பிடித்து விட்டது. எதற்கும் உபயோகப்படாத இவள் அவனுக்கு வேண்டாமாம்.

மனதின் வலி தீரும் வரை இரவெல்லாம் அழுது ஓய்ந்து உறங்க, காலையில் காய்ச்சலே வந்து விட்டது. கயல் அதை பார்த்து விட்டு வேலைக்கு போகக்கூடாது என்றார். அவளுக்கும் போக விருப்பம் இல்லை தான். போனால் சிவாவை பார்க்க வேண்டுமே.

அவளது காய்ச்சலை பற்றிக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டான் அமர்.

“நீ நல்லா ரெஸ்ட் எடு.. எத பத்தியும் யோசிக்காத.. அவனுக்கு நீ வேணாம்னா உனக்கும் அவன் வேணாம்.. அதையே நினைக்காம நல்லா தூங்கு.. வேலைய நான் பார்த்துக்கிறேன்” என்று அமர் சொன்ன போது பிரியாவுக்கு ஆறுதலாக இருந்தது.

இரண்டு நாட்கள் ஓடியது. பிரியா காய்ச்சலில் இருந்து தேறி விட்டாலும், அலுவலகம் செல்ல யோசனையாக இருந்தது. அதற்கு அமரே வழி சொன்னான்.

இது வரை அலுவலகத்தில் இருந்து கற்றுக் கொண்டது போதும். இனி வெளியே பல இடங்களுக்குச் சென்று சொல்லிக் கொடுக்கச் சொல்லி புஷ்பாவிடம் சொல்லி விட்டான்.

இந்த யோசனை பிரியாவுக்கு பிடித்திருந்தது. இப்படியே அலுவலகம் சென்று சிவாவை பார்த்தால் அழுது வைப்பாள். அவன் முன்பு அழக்கூட பிடிக்கவில்லை. அதை விட மனம் தேறும் வரை பார்க்காமல் இருந்து விடலாம்.

அமரின் யோசனையை கேட்டு பிரியா வெளியே செல்ல ஆரம்பித்தாள். புஷ்பாவின் கவனிப்பில் இருக்கும் போது அவள் வேறு எதையும் யோசிக்க முடியாது. ஆனால் தனிமையான நேரங்களில் வருத்தப்பட்டாள்.

எப்படியாவது திரும்பவும் சிவாவும் அவளும் ஒன்று சேர்ந்து விட மாட்டார்களா? என்று உள்ளே ஆசை துடிக்கத்தான் செய்தது.

சுப்பிரமணிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. அவனது அனுபவத்துக்கு எங்கே சென்றாலும் வேலை கிடைக்கும் என்று நினைத்தான். ஆனால் கிடைக்கவில்லை.

கிடைத்த சில வேலைகளும் சம்பளம் மிகவும் குறைவாக இருந்தது. இருந்த பதவியை விட்டு இறங்கி கிடைத்தது. வேலை தேடி தேடி சலித்துப்போனான்.

அவன் கவனிக்காத விசயம், அவன் அனுப்பும் எந்த நல்ல நிறுவனத்திடமிருந்தும் சரியாக பதில் வரவில்லை என்பது தான். அமர் தனக்கு சொந்தமான தன்னுடைய பங்குள்ள அத்தனை நிறுவனத்திற்கும் சுப்பிரமணியின் பெயரை அனுப்பி விட்டான்.

இது எப்போதுமே நடப்பது தான். எதாவது ஒரு தவறு நடந்து ஒருவனை வேலையை விட்டு தூக்கி விட்டால், அவனுடன் தொடர்புடைய எந்த நிறுவனத்திலும் அவனை வேலைக்கு வைக்க மாட்டார்கள். சுப்பிரமணியும் அவனுடைய “அவளும்” அதற்கு விதிவிலக்கல்ல. இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை.

“இப்படியே போனா என் சேவிங்ஸ்ல தான் கை வைக்கனும்..” என்று அவளும் புலம்பினாள்.

சுப்பிரமணி மகனை கவனிக்கவே போராடினான். மகன் அவனை மதிப்பதே இல்லை. எதை கேட்டாலும் “நீ கெட்ட அப்பா..” என்று கத்தினான்.

பள்ளிக்குச் சென்று வருவதை தவிர வேறு எந்த விதத்திலும் அவனுக்கு அப்பா தேவைப்படவில்லை. சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் சாப்பிட்டான். இல்லையென்றால் கேட்காமல் பட்டினி கிடந்தான்.

சண்முகியின் பிடிவாதம் தான் அவனுக்கும் என்று கோபம் வந்தாலும், மகனை விடவும் முடியவில்லை. சுப்பிரமணி வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்க, ஒரு நாள் காலையில் மகனை விட்டு விட்டு திரும்பி வரும் போது காவல்துறையினர் வந்து அழைத்துச் சென்றனர்.

மனைவியை ஏமாற்றி விட்டதாக அவன் மீது சண்முகி வழக்கு தொடுத்திருக்கிறாளாம். மகளீர் காவல் நிலையத்திலிருந்து வந்து அழைத்துச் செல்ல, சுப்பிரமணிக்கு சண்முகியின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இதை எல்லாம் அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லையே.

அவனை அழைத்துச் சென்ற போது அங்கே சண்முகி, வக்கீல், பாண்டியன் மற்றும் அவளுடைய மாமா ராமமூர்த்தி எல்லோரும் இருந்தனர்.

“நீ பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்தி கூட குடும்பம் நடுத்துனியாமே.. அவ்வளவு பெரிய பிளே பாயா நீ?” என்று நக்கலாக கேட்டார் காக்கி சட்டை அணிந்த பெண்மணி.

அவன் சண்முகியை முறைக்க “அங்க என்ன பார்வை? இங்க பதில் சொல்லு” என்று அதட்டினார்.

“மேடம்.. இது குடும்பப் பிரச்சனை..”

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.. ஆமாவா? இல்லையா?”

“ஆமா” என்று தலையை தொங்கப்போட்டுக் கொண்டான்.

“இப்பவும் அவ கூட தான் இருக்க போல?”

“அது…”

“அவள விட்டு விலகுறியா?”

சுப்பிரமணி சண்முகியை பார்த்து விட்டு “முடியாது” என்றான்.

சண்முகிக்கு இவ்வளவு திமிர் இருந்தால் அவனுக்கும் இருக்கும். ஆனால் அதை காட்டக்கூடாத இடத்தில் காட்டி விட்டான்.

சண்முகி அவனை புழுவை போல் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

“ரைட்.. கள்ள காதல் கேஸ் போட்டு இவன உள்ள உட்கார வச்சுடுறேன். நாளைக்கு கோர்ட்ல பேசிக்கோங்க” என்று சாதாரணமாக சொல்ல சுப்பிரமணி அதிர்ந்தான்.

அவன் பேச வர அதை கேட்காமல் இழுத்துச் சென்று உள்ளே தள்ளி விட்டனர்.

சண்முகி நன்றி சொல்லி விட்டு கம்பிக்குப்பின்னால் நின்றவனை நக்கலாக பார்த்து விட்டு கிளம்பி விட்டாள்.

நேராக சுப்பிரமணியின் வீட்டுக்குச் சென்று மகனின் பொருட்களை எல்லாம் அள்ளிக் கொண்டாள். வீடு அலங்கோலமாக கிடந்ததை பற்றி அக்கறைப்படவில்லை.

மகனின் பொருட்களை உடைகளை எல்லாம் தேடி எடுத்துக் கொண்டு, வீட்டை பூட்டி இனி இந்த சாவி தேவைப்படாது என்று வீட்டுக்குள்ளேயே எறிந்து விட்டு கிளம்பி விட்டாள்.

அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது எதையும் மறைக்கவில்லை. உண்மையை சொல்லி விட்டாள். அவளா தவறு செய்தால் மறைக்க?

தாய் வீட்டில் மகனின் பொருட்களை வைத்து விட்டு, மாலை பள்ளி முடிந்ததும் அவனை தானே சென்று அழைத்து வந்து விட்டாள்.

இனி தாயோடு இருக்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் குரு சுப்பிரமணியை பற்றி கேட்கவே இல்லை.

சிவாவை பார்க்கக்கூடாது என்று பிரியா அலுவலகமே வராமல் வெளியே சுற்ற, சிவாவுக்கும் பிரியாவை பார்க்கப்பிடிக்கவில்லை.

ஆனால் திருமணத்திற்குப்பிறகு தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை செய்வது சரிவராது. வேறு வேலை தேட ஆரம்பித்தான்.

நாதினியோடு நிச்சயதார்த்த வேலைகள் தடபுடலாக ஆரம்பித்தது. சண்முகியும் குருவும் வீட்டில் இருப்பதால் வீடு கலகலப்பாக இருந்தது.

நதியா சிவாவின் கைபேசி எண்ணை வாங்கிச் சென்று நாதினியிடம் கொடுத்து விட அவளே முதலில் பேசினாள்.

சிவா சற்று தயங்கினாலும் அவளோடு நன்றாகவே பேசினாள். நாதினி இனிமையான பெண். அவளோடு பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை.

சிவா தன்னை பற்றி அவளிடம் மறைக்கக்கூடாது என்று நினைத்தான். அதே நேரம் முழு உண்மையையும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தான்.

“நான் ஒன்னு சொல்லனும்.. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் இருக்கத பத்தி என்ன நினைக்கிற?”

“பாஸ்ட் ரிலேசன்சிப் எல்லாருக்கும் இருக்கது தான். உங்களுக்கு இருக்கா ராம்?”

அவள் ராம் என்று அழைப்பதே அவனுக்கு பிடித்திருந்தது.

“இருந்தது..”

“ஓ…”

“காலேஜ் டேய்ஸ்ல.. ஒரு பொண்ண லவ் பண்ணேன்.. இப்ப பிரேக் அப் ஆகிடுச்சு” என்று சாதாரணமான விசயம் போல் சொல்லி வைத்தான்.

“அதான் முடிஞ்சுருச்சே ராம்.. இனி அது தேவையில்ல.. நம்ம கல்யாணத்த மட்டும் பார்ப்போம்”

“புரிஞ்சுக்கிட்டதுக்கு தாங்க்ஸ்”

“இதுக்கெல்லாமா?” என்று சிரித்தாள்.

“உனக்கு இப்படி எதாவது இருக்கா?”

“அது.. நான் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லவா?”

“ஹேய் பயப்படாத.. நான் உன்னை தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன். என்னோட பாஸ்ட் மாதிரி தான் கடந்துடலாம்”

“இல்ல.. அது அப்படி இல்ல.. அது வந்து…”

“கஷ்டமா இருந்தா விட்டுரு”

“இல்ல இல்ல…” என்றவள் சில நொடிகளுக்குப் பிறகு, “நாம ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் தெரியுமா?” என்று கேட்டாள்.

“ம்ம்.. தெரியுமே.. நான் யூஜி லாஸ்ட் இயர்ல இருந்தப்போ நீ சேர்ந்த ரைட்?”

“ஆமா.. நீங்க வேற மேஜர்.. நான் வேற மேஜர்”

“ஆமா.. அதான் நான் உன்னை பார்த்ததே இல்ல”

“ஆனா நான் உங்கள பார்ப்பேன் ராம்.. தினமும் பார்ப்பேன். உங்கள பார்க்காம ஒரு நாள் கூட போனது இல்ல”

சிவா அதிர்ச்சியில் பேச்சற்று நின்றான்.

“உங்கள அப்பலாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்டு பிரச்சனையில பேச பயப்படுவேன்.. அப்புறம் நீங்க பிஜி படிச்சு முடிச்சுட்டு போயிட்டீங்க. அப்ப தான் புரிஞ்சது. நான் உங்கள எவ்வளவு மிஸ் பண்ணுறேன்.. லவ் பண்ணுறேன்னு…”

“நாதினி?”

“சாக்கா இருக்குல? பட் இது என்னோட ஒன் சைட் லவ்.. அஞ்சு வருச லவ்.. படிச்சு முடியுற வரை நான் யாரு கிட்டயும் சொல்லல.. என் ஃப்ரணட் கிட்ட மட்டும் தான் சொல்லிருந்தேன்.”

சிவாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“லாஸ்ட் எக்ஸாம் அப்போ சண்முகி அண்ணி பத்தி அவ கிட்ட புலம்புனேன். அப்புறம் எனக்கும் இனி மாப்பிள்ளை பார்த்துடுவாங்க. என் காதலுக்கு கோவிந்தா தான்னு நினைச்சப்போ.. என் ஃப்ரண்ட் நான் அழுறது தாங்காம என் அக்கா கிட்ட சொல்லிட்டா. அக்கா வீட்டுல சொல்லிட்டா.. நானும் கேட்டப்போ ஆமானு ஒத்துக்கிட்டேன். ஆனா எனக்காக குடும்பப் பகைய விட்டு அம்மா அப்பா சம்பந்தம் பேச வருவாங்கனு நினைக்கல. அப்ப கூட எனக்கு பயம் இருந்துச்சு.. நீங்க வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்ணுறதுனு.. ஆனா கடவுள் கடைசியில கருணை காட்டிட்டாரு. நான் அஞ்சு வருசமா காத்து வச்ச காதலுக்கு வழி சொல்லிட்டாரு.. எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? சந்தோசத்துல அழுகையே வந்துடுச்சு”

பல வருடங்களாக பூட்டி வைத்த அனைத்தையும் அவள் கொட்ட சிவா அத்தனையையும் தாங்க முடியாமல் திகைத்து நின்றான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்