காலையில் அமரின் தாத்தா இறந்த விவரம் அலுவலகத்தில் பரவியிருக்க, சிவா பிரியாவை மட்டும் தான் தேடினான். இன்று அவள் முடிவு சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தான்.
பிரியா வரவில்லை. அவளை காலையில் அமரின் வீட்டில் பார்த்ததாக மேனேஜர் சொன்னார். அதோடு சரி. வேறு எந்த தகவலும் இல்லை.
‘அப்போ நம்ம காதல விட அமர் முக்கியம் இல்ல? அவன பார்க்க போயிருக்கா’ என்று நினைத்தவன் மனதில் காதல் சிதறிப்போனது.
இனி அதை சேர்க்க வழியில்லாமல் போக வேறு முடிவு செய்து விட்டான். அவனை காதலனாக அவளால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால், அந்த காதலே தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்தான்.
அமரின் துக்கம் பெரிதென அவனை தேடி ஓடியவளை இன்னமும் நம்ப அவன் தயாராக இல்லை. அந்த அமரையே கல்யாணம் செய்து கொண்டு வாழட்டும் என்று முடிவெடுத்தவன் ஆச்சரியப்பட்டான்.
அதிர்ஷ்டவசமாக அவனுக்கு அதிகமாக வருத்தம் கூட இல்லை. அவனது இந்த முடிவால் சண்முகியின் பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். குடும்பங்கள் ஒன்று சேரும். பணப்பிரச்சனையை ஒதுக்கி வைக்கலாம். இப்படி எத்தனையோ நன்மைகள் காத்திருக்கும் போது அவனை கொஞ்சமும் மதிக்காத பிரியாவுக்காக அவன் ஏன் துடிக்க வேண்டும்?
அன்று முழுவதும் பிரியா அலுவலகத்திற்கும் வரவில்லை. அவனிடம் பேசவுமில்லை. அதுவே சிவாவின் முடிவை உறுதியாக்கியது.
வீட்டுக்கு சென்றதும் சண்முகி ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“என்னகா சந்தோசமா இருக்க?”
“மாமாவோட மில்ல என்னை சூப்பிரவைசரா சேர சொல்லுறாருடா.. வேலை பார்க்கனும்.. பிள்ளைய படிக்க வைக்கனும்னு சொல்லிட்டு இருந்தேன். வெளிய ஏன் வேலைக்கு போற? நம்ம மில்லுல வேலை பாரு.. சூப்பிரவைசர் வேலை கூட இப்ப தான் காலியாச்சு.. நீ நாளைக்கே வானு சொல்லிட்டாரு. இப்ப தான்டா மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு”
“நல்லது தான்கா.. வெளிய போறத விட அங்கனா மாமா உன்னை பத்திரமா பார்த்துப்பாரு”
“ஆமாடா.. அந்த துரோகிக்கு வேலை போனதுல இருந்து வீட்டுல தான் இருக்கானாம். குரு சொன்னான். வீட்டு வேலைய அப்ப அப்ப பார்க்குறானாம். ஆனா பல நேரம் வீடு குப்பையா இருக்காம். யூனிஃபார்ம தேடி தேடி தினமும் லேட்டாகுதுனு சொல்லுறான். அவனெல்லாம் என்ன ஜென்மமோ”
“விடுகா.. மாமா சொன்ன வக்கீல் அவன பிடிச்சு ஜெயில்ல போடலாம்னு சொன்னாருல.. அத பத்தி பேசுவோம். அவன் ஜெயிலுக்கு போனதும் குருவ கூட்டிட்டு வந்துடலாம்”
“சரி தான்டா..”
இப்படி பேசிக் கொண்டிருக்க பாண்டியன் ஒரு முடிவுக்கு வந்தார்.
“சிவா இங்க வா”
“என்னங்கபா?”
“உன் அத்தை சொன்ன விசயத்த கேட்கல?”
“எதுபா?” என்று தெரிந்தே கேட்டான்.
“அதான் நாதினிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறாங்களாம். அத பத்தி தெரியும்ல?”
“ஆமா”
“நீ என்ன சொல்லுற?”
“நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“ரெண்டு குடும்பமும் இனியாவது ஒன்னு சேரனும்னு நினைக்கிறேன்”
“அப்ப எனக்கும் அதான் ஆசை”
கல்யாணியின் முகம் மலர்ந்து விட, சண்முகி ஆச்சரியமாக பார்த்தாள்.
“டேய்.. உண்மைய தான சொல்லுற?”
“ஆமாகா.. இத்தனை வருசமா பிரிஞ்சுருந்த குடும்பம்.. அவங்களாவே வந்து பேசும் போது தட்டிக்கழிக்க வேணாம். நாதினி நல்ல பொண்ணு தான? அப்புறம் என்ன?”
பாண்டியன் திருப்தியோடு தலையசைத்தார்.
“சரி நீ போ” என்றவர் கல்யாணியை பார்க்க அவரது முகத்தில் சந்தோசம் பளபளத்தது.
உடனே அண்ணனுக்கு அழைத்தவர் விசயத்தை சொன்னார். திருமண பேச்சை, சண்முகியின் விவாகரத்து முடிந்த பிறகு வைக்கலாம் என்க, அது முடிய பல மாதங்கள் ஆகலாம். இப்போதே ஆரம்பிக்கலாம் என்றார் கோதாவரி.
சண்முகிக்கு தம்பியின் வாழ்வை நினைத்து சந்தோசம் வந்தாலும் கூடவே சில பல கவலைகளும் வந்து சேர்ந்தது.
அடுத்த நாளில் இருந்து சண்முகி வேலைக்கு கிளம்ப மற்றவர்களும் கிளம்பினர். சண்முகி வேலைக்கு போனாலும் மகனை மறக்கவில்லை. உணவை சமைத்து காலையிலேயே மகனிடம் கொடுத்து விட்டு தான் வேலைக்குச் சென்றாள்.
சிவாவும் இனி பிரியாவை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அலுவலகம் சென்றான். அவளை பிரேக் அப் செய்ய முடிவு செய்த பிறகு அவள் யாரோடு போனால் என்ன? யாரோடு வந்தால் என்ன? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
இன்று சிவா வரும் முன்பே பிரியா வந்திருந்தாள். அவளிடம் பேச அவன் சீக்கிரமாகவெல்லாம் வரவில்லை. அதனால் அவளை கண்டு கொள்ளவில்லை. அமர் இப்போதைக்கு வர மாட்டான். அவனை பற்றி இனி அக்கறையும் இல்லை.
பிரியா நேற்று முழுவதும் வீட்டில் தான் இருந்தாள். அவளுக்கு தலை வலியோடு மனமும் வலித்தது. அலுவலகம் சென்றால் சிவாவுக்கு பதில் சொல்ல வேண்டும். பிறகு அங்கிருக்கும் வேலைகளை கவனிக்க வேண்டும்.
மனதின் சோர்வு உடலை தாக்க வேலைக்கு போக வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாள். அடுத்த நாள் வந்த போது அமர் பார்க்காத வேலைகளும் அவளுக்காக காத்திருந்தது.
வேலையே கதியென கிடக்க சாப்பிடவும் மறந்தாள். மாலை கிளம்பும் நேரம் வந்த போது தான் சிவாவை தேடினாள். அவன் இல்லை. அவளுக்காக அவன் காத்திருக்கவில்லை.
கோபத்தில் இருப்பான் பிறகு சமாளிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீடு சென்றாள். அடுத்த இரண்டு நாட்களும் அதுவே தொடர, மூன்றாம் நாள் அமர் வந்து விட்டான்.
பிரியாவின் வேலைகள் குறைந்து போக சிவாவிடம் பேச முடிவு செய்தாள். உணவு வேளையில் எல்லோரும் சென்றிருக்க சிவாவை வரச்சொன்னாள்.
“யாருமே இல்லனா மட்டும் தான் என் கிட்ட பேசுவல? இனி நீ பேசத்தேவையில்ல” என்று செய்தி அனுப்பியவன் வரவில்லை.
பிரியா அதைப்படித்து கோபம் கொண்டாலும் மாலை வரை காத்திருக்க முடிவு செய்தாள்.
“எல்லாரும் போனதும் வெயிட் பண்ணு பேசனும்” என்று பிரியாவிடமிருந்து செய்தி வர சிவாவுக்கு கோபம் தான் வந்தது.
போய் விடுவோமா? என்று நினைத்தவன், பிறகு பொறுத்திருந்தான். கடைசியாக பேசி விட்டே போய் விடலாம் என முடிவு செய்தான்.
எல்லோரும் சென்றதும் பிரியா வந்தாள். அலுவலகத்தில் அமர் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் பார்த்து விடாமல் பிரியா சிவாவை இழுத்துக்கொண்டு தள்ளிச் செல்ல சிவா கையை உதறினான்.
“என்னனு சீக்கிரம் சொல்லு.. நான் கிளம்பனும்” என்று எரிச்சலாக கேட்டான்.
“பிரச்சனை என்னாச்சு? முடிஞ்சதா?”
“முடிஞ்சது”
“ஹப்பாடா.. சொன்னேன்ல.. வேற வழியிருக்கும்னு.. சரி எப்படி முடிஞ்சது? நீ வேணாம்னு சொன்னதும் அவங்க விட்டாங்களா?”
“ஹலோ.. நான் வேணாம்னு சொல்லவே இல்லயே”
இதைக்கேட்டு பிரியாவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
“அப்படினா?”
“நான் சரினு சொல்லிட்டேன். ரெண்டு வாரத்துல நிச்சயதார்த்தம்” என்று சிவா நக்கலாக சொல்ல, பிரியாவின் மனதில் பூகம்பம் வந்தது.
இப்படி ஒரு முடிவை சிவா எடுப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எதோ அவளை மிரட்டச் சொல்கிறான் என்று நினைத்திருந்தாள்.
“சரினு சொன்னியா?” என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“ஆமா.. வேற என்ன எதிர்பார்க்குற? இதுக்கப்புறமும் முட்டாள் மாதிரி உனக்காக வெயிட் பண்ணுவேன்னா?”
“அப்போ… நம்ம லவ்?”
“அத பத்தி உனக்கே அக்கறையில்ல.. எனக்கென்ன? ஒரு நாள் டைம் கொடுத்தேன். நீ பதில் சொல்லல.. சோ என் பதில நான் சொல்லிட்டேன். இனி எனக்கும் நாதினிக்கும் தான் கல்யாணம்.. நீ சந்தோசமா….”
பிரியா அவன் கன்னத்தில் பட்டென அடிக்க பேச்சு பாதியில் நின்றது.
“ச்சீ.. போடா.. நீ என்ன சொல்லுறது.. நான் சொல்லுறேன்.. பிரேக் அப்… உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல.. நாகினியோ மோகனியோ எவள வேணா கட்டிக்க.. சந்தோசமா இரு.. ஒரே ஒரு பிரச்சனை வந்ததும்.. இதான் சாக்குனு என்னை கலட்டி விட்டுட்டல.. உன் அக்கா புருஷன் புத்தி தான் உனக்கும்..”
“ஏய்..”
“உண்மைய சொன்னா வலிக்குதா.. போடா.. மனுசனா இருந்தா என் மூஞ்சியில முழிக்காத” என்றவள் அழுது கொண்டே உள்ளே ஓடி விட்டாள்.
சிவா கோபமாக அவளை முறைத்து விட்டு கிளம்பி விட்டான். அவன் செய்ததற்கு அவன் வருந்தவில்லை. ஆனால் அவனையும் சுப்பிரமணியையும் எப்படி ஒன்றாக பேசலாம்? அவள் தானே அவனிருக்கும் போதே அமரோடு அலைந்தவள்?
பிரியா அழுது கொண்டே வரும் போது அமர் அறையை விட்டு வெளியே வந்தான். அவளை பார்த்ததும் பேசப்போனவன் அவள் கண்ணீரை பார்த்து விட்டு புருவம் சுருக்கினான்.
“பிரியா என்னாச்சு?”
உடனே கண்ணை துடைத்துக் கொண்டவள் “ஒன்னுமில்ல” என்று தன் பொருட்களை எடுக்க ஆரம்பித்தாள்.
விறுவிறுவென வந்து அவளது கையிலிருந்ததை பிடுங்கிக் கொண்டான்.
“என்னாச்சுனு கேட்டேன்”
அவள் பதில் சொல்லாமல் மேலும் அழ “ஹேய்.. எதாவது ஆகிடுச்சா? என்ன பிரச்சனைனு சொல்லுமா.. இப்படி அழுதா எப்படி?” என்று கேட்டவன் அவளை கவலையோடு பார்த்தான்.
சிவா வீட்டில் நடந்த எதுவும் அவனுக்குத் தெரியாது. தாத்தா இறந்த துக்கத்தில் இருந்தவன் சிவாவை பற்றி கவனிக்க மறந்து விட்டான்.
“பிரியா..”
“அமர்.. அவன்.. அவன் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறான்” என்றவளால் அழுகையை அடக்க முடியவில்லை.
அமருக்கு ஒரு நொடிக்கு பிறகு தான் புரிந்தது. உடனே ஒரு வித திருப்தி வந்தது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் “யாரு?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் அழுதாள்.
“பிரியா.. உள்ள வா நீ” என்று அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன் பொருட்களை மேசையில் போட்டு விட்டு அவளருகே மண்டியிட்டான்.
“கண்ண துடை.. என்னனு சொல்லு.. யாரு வேற பொண்ண கல்யாணம் பண்ண போறா? உன் லவ்வரா?”
தலையாட்டி வைத்தவளின் அழுகை அதிகரித்தது.
“ஏன் இப்படி பண்ணுறான்? உன்னை ஏமாத்திட்டானா? அவன் யாருனு சொல்லு.. நான் பேசிப்பார்க்குறேன்”
அவள் மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்ல.. அவன் போயிட்டான்.. கல்யாணம் பண்ணிக்க போயிட்டான்..” என்று கதறினாள்.
அமருக்கு சந்தோசம் ஒரு பக்கமும் துக்கம் ஒரு பக்கமும் வந்தது. சிவா பிரிந்து விட்டான் என்று சந்தோசமும் பிரியா அழுவதை தாங்க முடியாமல் துக்கமும் வந்தது.
முதல் முறையாக இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்து அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான். பிரியாவும் அந்த அணைப்பில் கண்ணீர் விட்டு கதறினாள்.
அவள் அழுது ஓயும் வரை அமர் எதுவும் பேசவில்லை. அவளாக அழுது முடித்து தேறியபிறகு தன்னுடைய கைக்குட்டையால் அவளது முகத்தை மெல்ல துடைத்தான்.
“இப்ப ஓகேவா? அழாத.. அவன் கிட்ட பேசனும்னா சொல்லு.. நான் பேசுறேன்”
மறுப்பாக தலையசைத்தாள் பிரியா.
“இல்ல அமர்.. இனி அவன் எனக்கு வேணாம்..”
“பிரியா கோபத்துல முடிவு பண்ணாத”
“இல்ல அமர்.. அவன் நான் வேணாம்னு முடிவு பண்ணி நிச்சயம் வரை போயிட்டான். எனக்கும் அவன் வேணாம்..” என்றவளின் கண்ணில் மீண்டும் கண்ணீர் வர துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“தாங்க்ஸ் அமர்.. நான் வீட்டுக்கு போறேன்”
“பட்.. பிரியா.. ஒரு வேளை இத சரி பண்ண முடிஞ்சா என் கிட்ட சொல்லு.. நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்றதும் அவனது மனம் “நீ எந்த மாதிரி ஹெல்ப் பண்ணுவனு எனக்குல தெரியும்.. பாவம் அவளுக்கு எங்க தெரிய போகுது?” என்று கேட்டு வைத்தது.
ஆனால் பிரியா எதுவும் சொல்லாமல் கிளம்பிச் சென்று விட்டாள்.
தொடரும்.