Loading

அத்தியாயம் 16 :

பார்வதியும் பரிதியும் கிளம்பிய பின்னர் கூட பாரி சிறிது நேரம் பூவுடன் இருந்துவிட்டே கிளம்பினான்.

பாரியும் அவியும் வாகனங்கள் நிறுத்துமிடம் வர… அங்கு ஒரு பெண் தன்னுடைய ஸ்கூட்டியை உயிர்ப்பிக்க முடியாது போராடிக் கொண்டிருந்தாள்.

“அந்த பொண்ணுக்கு நம்ம ஹெல்ப் தேவைப்படும் நினைக்கிறேன் பாரி” என்று அவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு அருகில் வந்த அப்பெண் தன்னுடைய பெயரைக்கூறி அறிமுகம் செய்து கொண்டாள்.

“ஹாய் அம் அமிர்தா.”

அவி ஆர்வமாக கையை நீட்டிட… பாரி நண்பனை அடக்கினான்.

“ஹாய்” என்ற பரிதி என்ன விஷயம் என்பதைப்போல் பார்க்க…

அமிர்தாவோ… “என்னை அடையாளம் தெரியலையா?” என்று கேட்டிருந்தாள்.

பூவை கண்டு விட்டதாலோ… இனி அவள் தன்னுடன் தான் இருக்கப்போகிறாள் என்பதாலோ பாரியின் முகத்தில் புன்னகை நிலையாக நின்றுவிட்டது.

அப்புன்னகையுடனே இல்லையென பாரி தலையை இடவலமாக அசைத்தான்.

உண்மையில் அவனுக்கு அமிர்தாவை நினைவிலும் இல்லை. இருட்டில் பார்த்ததால் கூட இருக்கலாம். ஆனால் இன்று காலை பாரியை கல்லூரியில் பார்த்த ஒரு மணி நேரத்திலேயே பாரியையும் அவனது குடும்பத்தைப்பற்றியும் தெரிந்து கொண்ட அமிர்தாவுக்கு பாரியின் இல்லையென்ற பதில் முகத்தை சுருங்கச் செய்தது.

அவளை வருத்திவிட்டோம் என எண்ணிய பாரி…

“சாரிங்க.. உண்மையாவே நினைவில்லை” என்றான்.

“ஹோ” என்ற அமிர்தா,

“எஸ்டர்டே நைட்” என்று சொல்ல… “யா, அது நீங்கதானா? இப்போ ஓகே தான நீங்க?” என்று சாதரணமாகக் கேட்டான்.

தான் யாரென்று தெரிந்தால் அவனிடம் சிறிது ஆர்வமாவது தோன்றும் என எதிர்பார்த்த அமிர்தாவிற்கு அவனது சாதாரண மூன்றாம் மனிதர் பேச்சு ஏமாற்றத்தை கொடுத்தது.

அதனை முகத்தில் காட்டது மறைத்தவள்,

“வண்டி ஸ்டார்ட் ஆகல” என்றிட… அவனோ அவளது கையிலிருந்த சாவியை சுட்டிக்காட்டி, “இதை போட்டு ஸ்டார்ட் பண்ணி பாருங்களேன். ஸ்டார்ட் ஆனாலும் ஆகும்” என்க அவளோ அசடு வழிந்தாள்.

“எனிவே ஃபிரண்ட்ஸ்” என்று அவள் கை நீட்டிட… முதல் நாள் கல்லூரியில் இது சர்வ சாதாரண ஒன்று என்று ஒதுக்கி பாரி அசையாது நிற்க… அவிதான் அமிர்தாவின் கரம் பிடித்து உலுக்கியிருந்தான்.

“எந்த டிப்பார்ட்மெண்ட்?”

“ECE.”

“அந்த கிளாஸ் தாண்டா பாரி தமிழோட ரூம் மெட்” என்றான் பாரியிடம் அவி.

“பூ சொன்னாள்.” பாரி தன்னுடைய வண்டியை உயிர்பித்திருந்தான்.

“கிளம்பளையாடா?”

பாரி கேட்டதும் வேகமாக தன்னுடைய வண்டியில் அமர்ந்து அவி ஸ்டார்ட் செய்திருந்தான்.

அமிர்தா பாரியையே பார்த்திருக்க…

அவனோ வண்டியை இயக்கி முன் செல்ல… அவி தான் அமிர்தாவிடம் “பை” என்று சொல்லிச் சென்றான்.

“அந்த பொண்ணை உனக்குத் தெரியுமா பாரி?” ஆளரவமற்ற சாலையில் இருவரும் இணைந்து செல்லும் போது அவி கேட்டான்.

“ம்…”

“அப்புறம் ஏன் தெரியாத மாதிரி பிகேவ் பண்ண?”

“உண்மையாவே அவளை பார்த்ததும் ஞாபகம் வரல” என்ற பாரி அமிர்தாவை பார்த்த நிகழ்வை அவியிடம் கூறினான்.

தற்போது ராயப்பன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவரது ஒரே மகள் அமிர்தா. அன்னை கிடையாது. தந்தையிடம் அதீத செல்லம். நினைத்தது நினைத்த நேரம் கிடைத்திடும்.

அரசியலில் தனக்கிருக்கும் பகையால் தன் மகளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அமிர்தாவை வெளியில் தன் மகளென அவர் காட்டிக்கொண்டதில்லை. அமிர்தாவும் எல்லோரிடமும் தந்தையின் பெயரோடு நிறுத்திக்கொள்வாள். அவரின் வேலை யார் என்பதைப்பற்றி பேசமாட்டாள்.

ராயப்பனுக்கு மகள் என்று அறிந்திருப்பவர்களுக்கு அவள் எப்படி இருப்பாள் என்பது நெருங்கிய வட்டத்தை தவிர யாருக்கும் தெரியாது. அதனால் பிரபலத்தின் மகள் என்று பாதுகாவலர்களோடு இல்லாது சர்வ சாதாரணமாக தனியாகக் கூட வெளி இடங்களுக்கு சென்று வருவாள்.

அப்படித்தான் அமிர்தா நேற்று இரவு தன்னுடைய ஸ்கூட்டியில் தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.

பாரியும் அவியை பார்ப்பதற்காக அவனது வீட்டிற்கு சென்றவன் அவனிடம் விடைபெற்று அமிர்தாவிற்கு நேரெதிர் சென்று கொண்டிருந்தான்.

அவ்விடம் இருட்டாக இருக்க… சாலையில் யாருமில்லை.

தூரத்தில் பார்க்கும்போது நாய் ஒன்று யாரையோ பார்த்து பின்காட்டி நிற்பதும் அதற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையில் ஒருவர் இருப்பதும் வரிவடிவமாகத் தெரிந்தது.

நாய்க்கு பயந்து நிற்கிறார் என்பது பாரிக்கு பார்த்ததும் விளங்கியது.

அருகில் சென்ற பின்னரே வண்டியிலிருப்பது பெண் என்பதே அவனுக்கு தெரிந்தது. அப்போதும் முகம் இருளில் மங்கலாகத்தான் தெரிந்தது.

நிலத்தில் ஊன்றியிருந்த அமிர்தாவின் கால்களில் இருந்த நடுக்கம் வண்டியை பிடித்திருந்த அவளது கைகளிலும் தென்பட்டது. பயத்தில் அவளுக்கு வியர்த்து ஓடியது.

நாய்க்கு பின்னால் அதாவது அமிர்தாவிற்கு முன்னால் நாய் அடுத்து பாரி தன்னுடைய மிதிவண்டியுடன் நின்றிருக்க…

“ஒன்னும் பண்ணாது நீங்க வாங்க” என்றான் பாரி.

“அய்யோ இல்லை. நான் நகர்ந்தாலே அது கத்துது.” பயத்தோடுக் கூறினாள்.

“நாய் குரைக்கத்தான் செய்யும். ஒன்னும் பண்ணாது” என்ற பாரி நாயினை கடந்து சென்று தன்னுடைய மிதிவண்டியை ஓரமாக நிறுத்தியவன், அவளை வண்டியிலிருந்து இறங்கச் செய்தான்.

வண்டியை நாயிற்கு அந்த புறம் கொண்டு சென்று நிறுத்தியவன்,

“பாருங்க… எதுவும் பண்ணல” என்ற பாரி அமிர்தாவை இந்தப்பக்கம் அழைக்க… அவள் ஒரு அடி வைத்தது தான், நாய் தன் கூர்பற்களைக்காட்டி குறைத்தது. அவளை நோக்கி ஒரு அடி முன் பாய்ந்து சீறியது.

அதில் அமிர்தா சிலையென நின்றுவிட்டாள். தன்னுடைய ஆடையை இறுக பற்றியவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.

“உங்களை அதுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நினைக்கிறேன்” என்ற பாரி மீண்டும் அமிர்தாவின் பக்கம் வந்து “என்னோட வாங்க” என்று அவளை தனக்கு பின்னால் வருமாறு செய்தான்.

இருவரும் நடந்து நாயிற்கு அருகில் வந்ததும்… அது பாரியைத் தாண்டி அமிர்தாவை நோக்கி சீறியது.

அமிர்தா அலறி பாரியின் புஜத்தினை இறுகப்பற்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

பயத்தில் நெருங்கி பிடித்திருப்பவளை விலக்கிவிட முடியாது நின்ற பாரி அப்போதுதான் வலது புறத்தில் மாட்டி அவளுக்கு இடது பக்கம் தொங்கிக்கொண்டிருந்த பையினை கவனித்தான்.

“அந்த பேக்கில் என்ன இருக்கு?”

பாரி கேட்டதும் அமிர்தா திருதிருத்தாள்.

அவள் சொல்லத் தயங்கிட…

“உங்க பேக்கில் இருக்கிறதை கேட்டுத்தான் அந்த டாக் உங்களை போகவிடமாட்டேங்குது நினைக்கிறேன்” என்றான்.

“அது… பிரியாணி இருக்கு” என்று தயங்கியவாறே கூறினாள்.

பிறந்தநாள் விழாவில் நேரமாகிவிட்டதென சாப்பிடாமல் கிளம்பிய அமிர்தாவிடம் அவளது தோழி தான் பிரியாணியை பார்சல் செய்து கொடுத்து அனுப்பியிருந்தாள். அது இப்படி ஒரு நாயிடம் தன்னை மாட்டிவிடுமென்று அமிர்தா நினைத்திருக்கமாட்டாள்.

அவள் சொல்லிய விதத்தில் பாரிக்கு சிரிப்பு வர சத்தமாக சிரித்தும் விட்டான். அந்நேரம் எதிர்புறமிருந்து ஒரு வாகனம் வர அதன் ஒளியில் பாரியின் சிரித்த முகம் அமிர்தாவை வெகுவாக கவர்ந்தது.

அவர்களுக்கு அருகில் வந்துவிட்ட அந்த வாகனத்திலிருந்தவர்,

“வழியை விட்டு அப்படி ஓரமாப்போய் லவ் பண்ணுங்க” என்று கத்திவிட்டுச் செல்ல… அமிர்தாவின் உடலில் அதிர்வு. பாரியின் முகத்தை மேலும் ரசித்து பார்த்தாள். அவளின் மனதில் ஏதோ குறுகுறுப்பு.

யாரோ லவ் என்று சொல்லிவிட்டு போக… அமிர்தாவிடம் பாரியின் மேல் பெரும் தாக்கம் அந்நொடி ஏற்பட்டது. ஆனால் பாரி அதையெல்லாம் தன் கருத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.

“பிரியாணியை அதுகிட்ட கொடுத்திடுங்க… உங்களை விட்டுடும்” என்ற பாரியின் பேச்சினை அமிர்தாவும் செய்ய நாய் அவளுக்கு வழிவிட்டது.

“இந்த ஸ்ட்ரீட் டாக்ஸால் ரோட்டில் நடக்கவே பயமா இருக்கு” என்று அமிர்தா சொல்லிட,

“இது முடியாத சர்ச்சைங்க. இப்போ போங்க” என்ற பாரி அமிர்தாவின் கண்ணிலிருந்து மறைந்துவிட்டான். அத்தோடு அவளை மறந்தும் விட்டான். ஆனால் அவளது மனதிலிருந்து அவனை மறக்க முடியாது போனது. வீடு வந்தும் பாரியின் சிரித்த முகமே அவளின் கண் முன் தோன்றி அவளை ஆட்டுவிக்க… அவனை இன்று தான் படிக்கவிருக்கும் கல்லூரியில் பார்ப்போமென்று அமிர்தா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

காலை ஆடிட்டோரியத்திலேயே அவனை பார்த்துவிட்டாள். அவனுக்குத் தெரியாது புகைப்படம் எடுத்து தன்னுடைய தந்தையின் காரியதரிசிக்கு அனுப்பி வைத்து அவனைப்பற்றிய தகவல்களையும் அறிந்து கொண்டாள்.

இன்று முழுக்க அவனைத் தொடர்ந்த விழிகள் அமிர்தாவுடையது தான்.

இதில் அவளுக்கு பிடிக்காத ஒன்று பூ பாரியின் நெருக்கம். பாரி பூவிடம் காட்டும் அக்கறை அமிர்தாவிடம் வேறொரு எண்ணத்தை தோற்றுவித்தது.

அன்றைய பொழுது முழுவதும் அவன் பின்னே சுற்றியதன் பலன்… அவர்களை முதலில் காதலர்கள் என நினைத்து பின் நண்பர்கள் மட்டுமென அறிந்து கொண்டது.

அதன் விளைவு…

‘தோழியையே இவ்வளவு தாங்குபவன் அவனுக்கென வரும் பெண்ணின் மீது எத்தனை அன்பு அக்கறையை காட்டுவான்’ என்ற எண்ணத்தின் விளைவால் அவன்மீது கொண்ட ஈர்ப்பை அடுத்த கட்டடத்திற்கு முன்னேற்றிக்கொண்டாள். பாரி மீது காதல் கொண்டாள்.

ஆனால்… அவளுக்கு முன்பாகவே அவன் மீது உயிர் நேசம் கொண்டு இன்னும் அதனை உணராது பூ இருக்கின்றாள் என்பது தெரியவில்லை.

தான் கொண்டிருக்கும் காதலை உணரும் முதல் தடத்தில் பூந்தமிழ்.

பாரி கிளம்பியதும் அறைக்குள் வந்து உடைக்கூட மாற்றாது மெத்தையில் விழுந்த பூவின் எண்ணவோட்டம் யாவும் பாரியையே சுற்றி வந்தது.

இன்று அவன் கண்களில் அவளுக்காக கண்ட அக்கறை மனதில் புதிதாக சில்லிப்பை உணர்த்தியது. உள்ளத்தை சிலிர்க்க வைத்தது.

‘என்னதிது புதுசா?’ புரியாது குழம்பினாள்.

“யாரு தமிழ் அது, கீழே பேசிட்டு இருந்தியே?” என்ற லீலா “டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு நான் வந்துட்டேன்” என்றாள்.

“என் பிரண்ட் லீலா. அவங்க அவனோட பேமிலி” என்று பூ அவளுக்கான பதிலை கூற,

“பார்த்தா அப்படித் தெரியல?” என தன் உடைகளை எடுத்துக்கொண்டே லீலா கூறினாள்.

“எப்படி?”

“பிரண்ட்…” சொல்லிய லீலா, குளிக்க போவதாக சொல்லி அறையின் கதவை அடைத்துவிட்டு சென்றாள்.

பூவின் மனம் தான் குழம்பிய குட்டையானது.

‘எப்போதும் தான் இது போலில்லையே!’

‘வேந்தனிடம் பேசாது உன்னால் இருக்க முடியுமா?’

“முடியாது!” மனம் கேட்ட கேள்விக்கு பட்டென்று பதில் வந்தது அவளிடம்.

‘பார்க்காமல்?’

“நிச்சயம் முடியாது!”

‘அவன் இல்லைன்னா வாழுற வாழ்க்கையே… அவனில்லாம தனித்திருக்கிறதே  எல்லாத்தையும் இழந்த மாதிரி இருந்ததுல, இந்த ரெண்டு மாதம்?’

“ஆமா.”

‘அப்போ இது அதுதான்.’

“எது?”

அவளுக்கும் அவளின் மனதிற்கும் வாதம் நடைபெற்றது. தன்னுடைய இறுதி கேள்விக்கு மனம் சொல்லப்போகும் பதிலுக்கு ஆர்வமாக அவள் காத்திருக்க…

பாரியிடமிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக புலனம் வழி தகவல் வர… மற்றதை மறந்து அவனுடன் சிறிது நேரத்தை கழிக்க…

அரசு கால் செய்தார்.

“அப்பா கால் பன்றாங்க வேந்தா” என்று அவனுக்கு தகவலை அனுப்பிவிட்டு அரசுவிற்கு அழைத்தாள்.

அவர் அழைப்பை ஏற்றதும்,

“தேன்க்ஸ் ப்பா… தேன்க்ஸ். தேன்க் யூ சோ மச் ப்பா” என ஆர்ப்பரித்து விட்டாள்.

“நீங்க இந்நேரம் மண்டியில இருப்பீங்கன்னு தான் ப்பா காலேஜிலிருந்து வந்ததும் கால் பண்ணல. நைட் பண்ணலாம் இருந்தேன்” என்ற பூ…

“நான் இதை எதிர்பார்க்கவே இல்லைப்பா. இனி வேந்தன் என்னோடவே இருப்பான். அத்தை இங்க வந்தாங்கப்பா, அவங்க எல்லாம் சொன்னாங்க… லவ் யூப்பா” என்று ஆர்ப்பரித்து விட்டாள்.

மகளின் துள்ளலும் மகிழ்ச்சியும் அவளது குரல் வழி அறிந்துகொண்ட அரசுவின் மனம் நிறைந்துவிட்டது. அவர் வேண்டியதும் இதைத்தானே. மகளின் இத்தகைய மகிழ்ச்சியை பார்ப்பதற்குத்தானே பொன்னுவிற்கு தெரியாது இவை அனைத்தையும் செய்தார். தான் செய்ததற்கு கிட்டிய பலன் அவருக்கும் பல மடங்கு சந்தோஷத்தை கொடுத்தது.

தந்தைக்கு மகள்களின் சந்தோஷத்தில் கிடைக்கும் நிறைவு வேறெதிலும் வாய்க்கப்பெறுவதில்லை.

“அத்தை என்னை இந்த வார இறுதியில் வீட்டுக்கு வர சொன்னாங்கப்பா.” பூ உற்சாகமாகக் கூறினாள்.

“தாராளமா போய் வா கண்ணு. அவங்களை வேத்து ஆளா ஏனோ நினைக்க முடியல. அங்க விடுதியில உள்ளூர் கார்டியன் இருக்கணும் சொல்லிட்டாங்கடா… அதனால பாரி அப்பா, அம்மா பெயர் தான் ரிஜிஸ்டரில் இருக்கு” என்று அரசு கூறிட இது ஏற்கனவே பரிதியின் மூலம் அறிந்திருந்தாலும்… அரசுவே கூறிய இவ்விடயம் அவருக்கு அவள் மீதுள்ள நம்பிக்கையை காட்டிட,

ஆண் பெண் ஒன்றாக நின்று பேசினாலே தவறாக சித்தரிக்கும் சமுதாயத்தில்,

தான் கொண்ட உறவிற்காக ஒரு குடும்பத்தையே தன் குடும்பமாக பாவிக்கும் அவரின் மனதை நினைத்து நெகிழ்ந்து போனாள்.

பாரியின் வீட்டாரும் இப்படித்தானே… அவன் ஒருவனின் நட்பிற்காகத்தானே தன் மொத்த குடும்பத்தையும் தங்கள் உறவாக பார்க்கின்றனர்.

நினைக்கையில் பூ தன்னை வரம் பெற்றவளாக உணர்ந்தாள்.

அந்நொடி பாரியைப்பற்றி தன் மனம் வேறு விதமாக பார்ப்பதை தவறென்று எண்ணியவள் அதுவரை தன் உள்ளத்தை ஆராயத் தொடங்கி இருந்ததை அத்தோடு நிறுத்தினாள்.

‘இது தப்பு… நான் இப்படிலாம் யோசிச்சேன்னு சொன்னாலே வேந்தன் வருத்தப்படுவான்’ என்று தேவையில்லா சிந்தனைகளை புறம் தள்ளினாள்.

“தமிழு… தமிழு…”

தனக்குள்ளேயே பூ உழன்று கொண்டிருக்க, அரசு பல முறை அவளை அழைத்து விட்டார்.

“ஆங்… அப்பா” என்ற பூ, “அக்கா இல்லையாப்பா?” எனக் கேட்டாள்.

“நான் இன்னும் வூட்டுக்கு போவல கண்ணு. நீயி அம்மா செல்லுக்கு போடு” என்றவர் அவளின் பத்திரம் அறிவுறித்திவிட்டு வைத்தார்.

மணியின் அலைபேசிக்கு அழைத்த பூ அவரிடமும் தங்கத்திடமும் பேசிவிட்டு இளாவிடம் பேசினாள்.

இங்கு தனக்கு கிடைத்த ஆச்சர்யத்தை பூ தன் தமக்கையிடம் சொல்ல… தான் யூகித்ததை இளாவும் சொல்லி சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

தனக்குள் தோன்றிய மாற்றத்தை பூ இளாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்திக்க… ‘இனி இதைப்பற்றி யோசிக்க வேண்டாமென முடிவெடுத்த பின்னர் இளாவிடம் சொல்வதும் அவசியமற்றது’ என கருதி அந்த நினைப்பிற்கே முற்றுப்புள்ளி வைத்தாள்.

பூ அரசுவுடன் பேசி முடித்திருப்பாள் என கணித்த பாரி அவருக்கு அழைத்து… அவர் செய்த எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவித்தான்.

“நீங்க ரெண்டு பேரும் இதே அன்போடு ஒத்துமையா இருந்தா போதும்ய்யா” என்று அவர் சொல்லிவிட…

“அடுத்த முறை வரும்போது கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டு தான் போகணும்” என்று பாரி கட்டளை விதிக்க… அவரும் சிரிப்புடனே சரியென்றார்.

“என்ன பாரி ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது?”

கேட்டுக்கொண்டே பாரியின் அறைக்குள் பரிதி நுழைந்தான்.

“ரீஸன் உங்களுக்குத் தெரியாதா பரிதிண்ணா” என்று திருப்பிக்கேட்ட பாரி… “லவ் யூண்ணா” என்று அவனை தழுவிக்கொண்டான்.

“டேய் விடுடா” என்ற பரிதி,

“உனக்காக எல்லாம் தமிழை இங்கு சேர்க்கல… எனக்காக, எனக்காக மட்டும் தான். என் டார்லிங் கிட்ட பேசாம எனக்கும் என்னவோ போலிருந்தது. அதான்” எனக்கூறி பாரியை வெறுப்பேற்றினான்.

“டார்லிங்கா… யாருடா அது?”

“என்னடா மரியாதை காணாமப்போச்சு…”

“நான் காலேஜ் போயிட்டேன். இப்போ நானும் பெரிய பையன். இனி அண்ணாலாம் கூப்பிட முடியாது போடா…”

“பாரி…” பரிதி நெஞ்சில் கை வைத்து கீழே விழுவதைப்போல் செய்ய…

“ஆக்டிங்கை நிறுத்துங்க… பூ இங்க வந்ததுக்கான காரணமும் எனக்குத் தெரியும். என்கிட்ட பொய் சொல்லாதீங்க” என்ற பாரி… “டார்லிங் டியர் அப்படி என்ன வேணாலும் சொல்லிக்கோங்க… பூ எப்பவும் எனக்குத்தான்” என்றான்.

பாரியின் வார்த்தையில் என்ன இருந்தது என்பதை பரிதியால் இனம் காண இயலவில்லை. தனக்குள் எழுந்த கேள்வியையும் பாரியின் வயதை கருத்தில் கொண்டு அவனால் கேட்டிட முடியவில்லை.

அப்படி இல்லாத ஒன்றை தானே கேட்டு மனதை சஞ்சலப்படுத்த வேண்டாமென்றும் நினைத்த பரிதிக்கு ‘அப்படி ஒன்று இருந்து தமிழ் நிரந்தரமாக தங்களது வீட்டிற்க்கே வந்துவிட்டாலும் சந்தோஷம் தான்’ என்றே தோன்றியது.

“என்னண்ணா பலமான தின்கிங்?”

சில கணங்கள் யோசனையோடு பாரியின் முகத்தை கூர்ந்து நோக்கிய பரிதி…

“ஐ தின்க் யூ ஆர் இன் லவ் வித் த..”

பரிதி தமிழின் பெயரை முடிக்கவில்லை.

“அண்ணா ஸ்டாப் இட்.” பாரி அவ்விடமே அதிரக் கத்தியிருந்தான்.

‘நட்பில்…
நட்பு நட்பாகவே பார்க்கப்பட்டுவிட்டால் நட்பு எப்படி ஆழம் கொண்டிடும்?’

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
34
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments