Loading

பூ-22

 

“சார்.. இந்த வீடியோல பாருங்க சார்.. வண்டியோட்டப்பட்ட நபரால் தான் கடத்தப்பட்டிருக்காங்க அக்னிகா. ஒரே நபர் தான். அந்த நேரம், அந்த ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் ஆள் நடமாட்டம் கம்மிங்குறதால ஆட்களைக் கூட்டிட்டு வரலையா? இல்ல ஆட்கள் அவனுக்குத் தேவையாகப்படலையானு தெரியலை சார்..” என்று சந்தோஷ் கூற,

 

அவன் காட்டிய காணொளியைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தான், சிவப்ரியன்.

 

எப்போதும் அணியும் உடையில் தான் இருந்தான், மர்ம கொலைகாரன்.

 

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவன், அக்னிகா அருகே வண்டியை நிறுத்தி, பக்கத்து இருக்கைக் கதவைத் திறந்து, அவளை உள்ளே இழுத்துக் கொண்டு, உடனே மயக்க மருந்தையும், அவளை சுவாசிக்க வைத்தபடி, கதவை மூடியது காணொளியில் ஓரளவு தெரிந்தது.

 

“எப்பவும் ஜாமரோடதானே சுத்துவான்?” என்று ராம் கேட்க,

 

“நாம இதைப் பார்த்து, பயந்தாவது இந்தக் கேஸ விடனும்னு நினைச்சிருக்கலாம்” என்று திலகா கூறினாள்.

 

அவளை நிமிர்ந்து பார்த்து, ஆமோதிப்பாய் தலையசைத்த சிவப்ரியன், 

 

அந்தக் காணொளியை மீண்டும் பார்வையிட்டான்.

 

அவளைப் பிடித்திழுத்த அந்தக் கரம்.. 

அதனை மட்டும் பெரிதுபடுத்தி, மீண்டும் மீண்டும் பார்வையிட்டான். 

 

அக்னிகாவை இழுக்கும்போது, முழுக்கை சட்டை லேசாய் விலகி, அவனது கருப்பு நிற கையுறைக்குள் இருக்கும், இளஞ்சிவப்பு நிற நீண்ட கையுறைகள் அவன் கண்களுக்குப் புலப்பட்டன.

 

சட்டென, அன்று அந்தத் தெருநாயின் மூலம் கிடைத்த காணொளி அவன் நினைவில் வந்து போனது.

 

ஏதோ பொறிதட்ட, மீண்டும் அந்தக் காணொளியை எடுத்துப் பார்வையிட்டான்.

 

அதில் தெரிந்த அந்தக் கையுறை, அதனில் தெரிந்து ஒரு வடிவமைப்பு, அவன் கவனத்தை உருத்திக் கொண்டே இருந்தது. ‘இதை நான் எங்கயோ பார்த்திருக்கேன்.. ஆனா ஏன் தெளிவா நினைவு வரமாட்டேங்குது?’ என்று தன் மூளையைக் குடைந்தவன், “இமேஜ் ப்ரிடிக்டர்ஸ் வச்சு இந்த டிசைனை முழுமையா எப்படி இருக்கும்னு கண்டுபிடிக்க முடியுதானு பாருங்க ராம்” என்று கூற,

 

“என் ஃபிரெண்ட் ஒருத்தி இருக்கா சார். நான் போய் அங்கருந்து கேட்டு வாங்கிட்டு வரேன்” என்று திலகா கூறினாள்.

 

“வேணாம் மிஸ் திலகா. அஃபீஷியல் ஆளுங்களை வச்சே மூவ் பண்ணுவோம். நீங்கப் போன இடத்தில் வேற எதும் எவிடென்ஸ் கிடைச்சுதா?” என்று சிவப்ரியன் கேட்க,

 

“இல்லை சார்.. நான் அங்க அக்கம் பக்கத்திலும் விசாரிச்சுப் பார்த்தவரை யாரும் தெரியலைனுதான் சொல்றாங்க. அதுவுமில்லாம அது வண்டி போன பாதை இல்லைங்குறதால பெருசா எந்த க்ளூவும் கிடைக்கலை” என்று கூறினாள்.

 

யோசனையில் ஆழ்ந்தவன், மனதில் நடந்த ஒவ்வொரு கொலைகளை நிகழ்வுகளையும் ஓட்டிப் பார்த்தான்.

 

அனைத்தையும் யோசித்துக் கொண்டே இருந்தவன், பட்டென்று கண்கள் திறக்க, அவன் முன் ராம் மட்டுமே நின்றுகொண்டிருந்தான்.

 

அடுத்த அரைமணி நேரத்தில், அனைத்து செய்திகளிலும், ‘உலோகக் கொலையாளியின் வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருந்த காவல் அதிகாரி சிவப்ரியன், திடீரென்று வழக்கையும் பாதியில் கைவிட்ட நிலையில், தற்போது தனது வேலையினையும் ராஜினாமா செய்துவிட்டதாக, தகவல் கிடைத்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது’ என்ற செய்தி தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

தான் கட்டப்பட்டிருக்கும் அறையில், ஒலித்துக் கொண்டிருந்த செய்தியைக் கேட்ட அக்னிகாவின் விழிகளில், சொல்லொன்னா வலியுடன் கூடிய கண்ணீர் பொங்கி வழிந்தது‌.

 

‘இந்த வேலைனா எனக்கு ரொம்ப உயிர் அக்னிமா.. கிடைக்கவே கிடைக்காதானு தவம் இருந்து, ஏங்கி, பிறகு கிடைக்கும் பாரு.. அந்த ஃபீலுக்கு வார்த்தைகளே இல்லை.. அந்த சந்தோஷத்துக்கும் சுகத்துக்கும் நூறு வருஷம் சொத்து சுகத்தோட வாழும் வாழ்க்கையும் ஈடு கொடுக்காதுடா’ என்று தன்னிடம் அவன் பலமுறை சொன்னவை தற்போது அவள் காதுகளில் ஒலித்தது‌.

 

‘எனக்காகவா? ஏன்? எதுக்கு? நான் என்னத்த பண்ணிட்டேன் அப்படி? அப்படி என்ன காதல் என்மேல? அய்யோ.. ஏன்? ஏன் ப்ரியன் இப்படி பண்ணீங்க? எப்படி உங்களால இதை செய்ய முடிஞ்சது?’ என்று அவள் மனதோடு அலற, அதன் வலி அவள் உள்ளமெங்கும் அடைத்தது.

 

“ஆ…” என்று அவள் கத்த,

 

அவளையே அமைதியாய் பார்த்து நின்றது அவ்வுருவம்.

 

அங்கு செய்தியாளர்கள் முன்பு நின்றுகொண்டிருந்தான், சிவப்ரியன்.

 

“மக்கள் உங்கமேல வச்சிருந்த பெருமளவு நம்பிக்கையை உடைச்சுட்டீங்க. இதுக்கு உங்க பதில் என்ன சிவப்ரியன்?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,

 

‘சார்’ என்ற அழைப்பு ‘சிவப்ரியன்’ என்று ஆனதை எண்ணி, ஏலனமாய் சிரித்துக் கொண்டவன், “இது என் வேலை, இதை தொடருவதும், விடுவதும் என் சொந்த விருப்பு வெறுப்புனு நினைக்குறேன்” என்றான்.

 

அவன் விழிகளில் அப்படியொரு வலி, அப்பட்டமாய் தெரிந்தது.

 

“இதை சொல்ல ஒரு காவலரா உங்களுக்கு வருத்தமாவோ? அசிங்கமாவோ இல்லையா?” என்று ஒருவர் கேட்க,

 

“அவங்கவங்க இடத்தில் இருந்தா தான் அந்த இடத்தின் வலி புரியும். உங்களுக்கு என்னோட வலி இப்பப் புரியாது” என்று கூறினான்.

 

“அப்ப இந்த வழக்கு? இதை இனி யாரு பார்ப்பாங்க?” என்று ஒரு பெண் கேட்க,

 

“அதுக்கு மேலிடத்தில் யாரை ஒதுக்குறாங்களோ அவங்க பார்ப்பாங்க. இனி அந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை” என்று கூறினான்.

 

அவன் விழியோரத்திலிருந்து, அவனையும் மீறி, ஒருதுளி கண்ணீர் கசிந்து, காதுமடலைச் சென்று சேர்ந்தது.

 

“என்ன மிஸ்டர் சிவப்ரியன்? இவ்வளவு பொறுப்பில்லாம பேசுறீங்க? என்ன தான் இப்ப நீங்க வேலையை விட்டுட்டாலும் இத்தனை நாள் ஒரு காவலரா தானே இருந்தீங்க? அந்த வேலை மீதுள்ள ஒரு மரியாதைக்காகவாது மதிப்புக்கொடுக்கலாமே? இது எவ்ளோ சென்ஸேஷனல் கேஸ்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. மினிஸ்டர் மகன் முதற்கொண்டு இறந்து போயிருக்காங்க. அப்படியிருக்க ரொம்ப விட்டேற்றியா பதில் கொடுக்குறீங்க. உங்கக்கிட்ட இப்படியொரு அலட்சியத்தை நாங்க யாருமே எதிர்ப்பார்க்கலை” என்று ஒரு செய்தியாளர் கூற,

 

அவனுக்கு என்ன பேசுவதன்றே புரியாத நிலை தான்…

 

“எனக்கு இந்த வேலையைவிடவும் முக்கியமானது நிறைய இருக்கு மிஸ்டர்.. அதுக்கெல்லாம் முன்ன, என் வேலை பெருசா படலை. செய்ய வேண்டியதை செஞ்சுட்டேன்.. அவ்ளோதான்” என்று குரல் கரகரக்கக்கூறிவிட்டு, பலரின் கேள்விகளையும், அவமானப்படுத்தும் பேச்சுக்களையும் மீறி, தனது வண்டியில் ஏறிப் புறப்பட்டான்.

 

செய்தியில் தான் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியில், அக்னிகாவிற்கு நெஞ்சம் உடைந்தது.

 

‘ஏன் ப்ரியன் இப்படி பண்ணீங்க? உங்க கண்ணுல அந்த வலி.. அய்யோ.. காலத்துக்கும் என்னால அதை மறக்க முடியாதே..’ என்று அவள் ஆழ்மனம் கதறித் துடித்தது.

 

வீட்டிற்குள் வந்தமர்ந்த அண்ணனை, தங்கைகள் இருவரும், மிகுந்த சோகத்துடன் பார்த்தனர்.

 

நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், முன் வந்து, ஆளுக்கொரு புறம் மண்டியிட்டு அமர்ந்து, அவன் கரத்தினைப் பற்றிக் கொண்டனர், மஹதி மற்றும் சுசித்ரா.

 

மெல்ல கண் மலர்ந்து இருவரையும் பார்த்தான்.

 

“அ..அண்ணா.. வேலைய..” என்று சுசி தடுமாற்றமாய் கேட்க,

 

“என் ஸ்பார்கில் வேணுமே சுசிமா.. அ..அவ இல்லாம” என்று, நெஞ்சை நீவிக் கொண்டவன் கண்ணெல்லாம் கண்ணீர்…

 

“வலிக்குதுடா..” என்று மென்று விழுங்கினான்.

 

“அண்ணா.. நி..நீங்க வேலையை விட்டுட்டா மட்டும் நம்ம அக்னி கிடைச்சிடுவாளா?” என்று மஹதி கேட்க,

 

அவளைப் பார்த்தான்.

 

ஒரு முழு நிமிடம் அமைதியாய் பார்த்தவன், “கிடைச்சுடுவா..” என்று ஆழமான குரலில் கூற,

 

“அதெப்படி இவ்வளவு உறுதியா சொல்ற அண்ணா? அக்னி இருக்குற இடம் தெரிஞ்சுடுச்சா? எதுக்கு அண்ணா இப்படி அமைதியாவே இருக்க?” என்று சுசி கேட்டாள்.

 

“ஏன்னா.. கடத்தினவனோட நோக்கம், அவளைக் கொல்லுறது இல்லை..” என்று சிவப்ரியன் கூற,

 

“அப்றம்?” என்று இருவரும் ஒன்றுபோல் கேட்டனர்.

 

“அவ நல்லாருக்கனும்… அதுக்கு நான் அவகூட இருக்கனும்.. அதுக்கு இந்த வழக்குலருந்து நான் விலகனும்” என்று அவன் கூற,

 

பிரம்மை பிடித்த நிலையில், விரக்தியான முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்தாள், அக்னிகா.

 

அவளைக் கண்டு அதிர்வோடு எழுந்த தோழிகள், கண்கள் மூடி சாய்ந்தமர்ந்திருக்கும் சிவப்ரியனை நோக்க,

 

“போய் ஃபிரெஷ் ஆயிட்டுவா அக்னி” என்றான்.

 

வேகமாய் அவனிடம் வந்தவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைய, தோழிகள் இருவரும் அவர்களை அதிர்ந்து பார்த்தனர்.

 

“ஏன் ப்ரியன்? ஏன்? ஏன் இப்படி? ஏன் இப்படி பண்ணீங்க?” என்று அவன் சட்டையைப் பற்றி உலுக்கியபடி அவள் கத்திக் கதற,

 

சுசித்ராவிற்கும் மஹதிக்கும் ஒன்றுமே விளங்கவில்லை.

 

“ஏன் இப்படி பண்ணீங்க? சொல்லுங்க ப்ரியன்? எனக்காகவா? எனக்காகவாருந்துருந்தா தான் நிச்சயம் இதை நீங்க செய்திருக்கவே கூடாது. இதைவிட வேற எதாவது ஒன்னு வேணுமா நான் உயிரோட சாவு..” என்று அவள் முடிக்கும் முன் அவளை இறுக்கமான தன் அணைப்புக்குள் அடக்கியிருந்தான்.

 

அலறிக் கொண்டிருந்தவள் அப்படியே அமைதியாகி, அவனை வியப்பாய் நோக்க,

 

“ப்ளீஸ்டி..” என்று காற்றான குரலில் கூறினான்.

 

“வலிக்குது ப்ரியன்” என்று அவள் வலியோடு கிசுகிசுக்க,

 

“எனக்கும் தான்..” என்றான்.

 

“அப்றம் ஏன்?” என்றவள் அவன் முகம் நிமிர்த்திப் பார்க்க,

 

“நீ என்கூட இருக்கனுமே..” என்றான்.

 

“இப்படியொரு நிலையிலயா ப்ரியன்? நானே உங்க கனவு கலைந்துபோகக் காரணமா.. எப்படி ப்ரியன் என்னால நிம்மதியாருக்க முடியும்?” என்று அவள் அழ,

 

“நீ இல்லாம என்னால எப்புடிடி நிம்மதியாருக்க முடியும்?” என்று கேட்டான்.

 

இருவரின் காதல் தென்றலானது, வலியெனும் மலரின் வாசத்தினைக் களவாடிக் கொண்டு வந்து, அவ்விடத்தில் வீசியது…

 

பார்த்துக் கொண்டிருந்த மஹதிக்கும் சுசிக்கும் கண்கள் கலங்கி, அவர்களை மீறிய விசும்பல் ஒலியோடு கண்ணீர் பெருகியது…

 

“ப்ரியன்..” என்று அவன் முகம் பற்றியவள், “ப்ளீஸ்.. எதாவது பண்ணி திரும்ப வேலைல சேருங்க.. நீங்க இந்த கேஸை முடிச்சு வைக்கனும்..” என்று கெஞ்சுதலாய் கேட்க,

 

அவளையே அமைதியாய் பார்த்தான்.

 

“ப்ரியன் பேசுங்க ப்ரியன்.. என்னால முடியலை ப்ரியன்.. வலிக்குது ப்ரியன்.. கொல்லாதீங்க” என்று அவள் அழ,

 

அவனிடம் பதிலே இல்லை.

 

அவன் மார்பில் தன் விரல் மடக்கிக் குத்தியவள், “பேசுங்க ப்ரியன்..” என்று கூற,

 

சுசித்ரா அக்காட்சியைக் காண முடியாமல் அழுதபடியே அறைக்குள் ஓடினாள்.

 

மஹதியும் கண்ணீரோடு சுசியைத் தொடர்ந்து செல்ல,

 

“பேசுங்க ப்ரியன்.. பேசுங்க.. பேசித்தொலைங்களேன்.. நெஞ்சே வெடிச்சிடும் போல வலிக்குது” என்று அழுதாள்.

 

“ஓய்..” என்று அமைதியாய், அழுத்தமாய், பரிதவிப்பாய் அவன் அழைக்க,

 

கண்ணீர் திரை மின்னும் விழிகளும், ஈரம் பூசிய முகமுமாய், அத்தனை வலியோடு அவனை ஏறிட்டாள்.

 

“அவ்ளோ புடிக்குமாடி என்னை?” என்று அவன் கரகரத்தக் குரலில் கேட்க,

 

“ஹ்..எ..ஏன் ப்ரியன்..?” என்றாள்.

 

“சொல்லுடி” என்று இறைஞ்சுவதைப் போல் அவன் கேட்க,

 

“உயிரே போற மாதிரி வலிக்குதே.. இது சொல்லலையா நான் உங்களை எவ்ளோ விரும்புறேன்னு? தனியா சொல்லித்தான் உங்களுக்குத் தெரியனுமா? பிடிச்சதால தானே அவ்ளோ வலி சுமந்தேன்? பிடிச்சதால தானே விலகிப்போகத் துடிச்சேன்? பிடிச்சதால தானே ப்ரியன் உங்க கனவு கலைஞ்சு போனதுக்கு இப்படித் துடிக்குறேன்.. பிடிக்கும் ப்ரியன்.. ரொம்ப.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதான் இவ்ளோ வலிக்குது” என்று அழுதாள்.

 

அவள் முகத்தைத் தன் கரங்களில் தாங்கியவன், “எனக்கும் ரொம்ப புடிச்சுடுச்சுடி.. அ.. அதான்.. இவ்ளோ வலி குடுக்குறேன்” என்று கூறி, அவள் இதழில், மென்மையாய், தன் இதழ் பதித்தான்.

 

முதலில், அவன் தீண்டலில் அதிர்ந்து, விலகப் பார்த்தவளை, அவன் வலிய கரங்கள், வளைத்துப் பற்றிக்கொள்ள,

 

அவன் புஜங்களை இறுக பற்றிக் கொண்டாள்.

 

விழிகள் மலர்ந்து அவள் மருண்ட விழிகளைப் பார்த்தவன், பார்வையில் கனிவு காட்ட, அவள் மருண்ட விழிகள், தாமாய் மூடிக் கொண்டு, சிற்பி இதழ், அவனுக்கு ஒத்துழைத்தது, காதலாய்…

 

அமைதியானதொரு அறையில், கடிகாரத்தின் ‘டிக் டிக் டிக்’ ஓசையோடு, அவர்கள் முதல் சஞ்சரத்தின் சங்கீதம், மௌனமாய் இசைக்க, இருவரும், அதில் கட்டுண்டு, கரையுண்டு, கரைகடந்து, புவி மீண்டனர்…

 

அவன் விடுவித்த நொடியை உணராது, அவன் தோளில் தன் நெற்றி முட்டி சாய்ந்தவள் கரம், அவனை இன்னும் இருக்கமாக அணைத்துக் கொண்டது.

 

பால் திரிந்த நிலையென்றாயினும், நீ பெண்ணாகப்பட்டவள் என்று கூறிடும்படியாக, அவன் கொடுத்த உணர்வுகள், அவளுள் மறைந்திருந்த பெண்மையை, மலரச்செய்ய, அவளையும் மீறி, இன்ப ஊற்றாய் கண்ணீர் பெருகியது.

 

அவளை அணைத்திருந்தவன் கரம், அரவணைத்துக் கொண்டு தட்டிக் கொடுக்க, நாணமும், சந்தோஷமுமாய் அவனைப் பார்த்தாள்.

 

அவள் உணர்வுகளைக் கூறிடும் கண்ணாடியாய், அவள் விழிகள்…

 

“என்னடி?” என்று அவன் கூற,

 

“தேங்ஸ்..” என்றவள், அவனை அணைத்துக் கொண்டாள்.

 

மெல்லிய புன்னகை அவனிடம்…

 

“உன்னைக் கஷ்டப்படுத்துற எதுவும் செய்ய மாட்டேன்..” என்று கூறியவன், புரியாமல் நிமிர்ந்து பார்த்தவள் நெற்றி முடியைக் கோதி விட்டு, உள்ளே சென்றான்.

 

 

அன்றைய இரவு…

 

பெரும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்க,

 

அந்தக் காவல் நிலையத்தைச் சுற்றி பத்திரிக்கையாளர்கள், காவலர்கள் என்று பெரும் கூட்டம் ஒன்று கூடியிருந்தது.

 

கொட்டும் மழை தன் வேகத்தை அதிகரித்து, அதிகரித்தே சோர்ந்து போனது, ஆனால் அங்கிருந்த மனிதர்கள் அதன் உழைப்பை கணக்கிலேயே எடுக்காமல் அவரவர் பணியில் மூழ்கியிருந்தனர்.

 

ஒட்டுமொத்த மக்களையும்கூட அங்கு அவர்கள் பார்த்த வேலையால், கிடைக்கப்பெற்றச் செய்தி, அத்தனை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தியது…

 

‘காவல் துறையைச் சேர்ந்த, காவலதிகாரி திலகவதி தான், மர்ம உலோகக் கொலையாளி என்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திலகவதி ஒரு திருநங்கை என்றும், திருநங்கைகளை வன்முறைக்கு சொல்லாலும் செயலாலும் ஆட்படுத்தும் நபர்கள் மீது எழும் கோபத்தின் வெளிப்பாடாய் செயல்படுத்தியதே இந்தத் தொடர் கொலைகள் என்பதும், கண்டுபிடிக்கப் பட்டுள்ளது’ என்ற செய்தி, காவலதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், ஊர் மக்களென்று அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆட்படுத்தியது…

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments