Loading

அத்தியாயம் – 8

 

மனிஷாவின் அந்த வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும்  அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன…..

‘என்னால கால் நடக்க முடியாதவன் கூட வாழ முடியாது…’

அந்த சொல் ஒவ்வொரு கணமும் குத்திக்கொண்டே இருந்தது,
அவன் கைகள் வீல்சேரின் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்திருந்தன இரத்தம் வருமளவிற்க்கு…

‘ஒருநாள் ஒரு நிமிடம் கூட உன்னை விட்டு வாழ முடியாது தீரஜ் என்று சொன்னவளா இன்று இப்படி பேசினாள்’ என்று அவன் உள்ளம் கத்திக்கொண்டிருந்தது…

தனது அறையின் சாளரத்தில் இருந்த கண்ணாடி பிரதிபலிப்பில் தன் முகத்தைக் கண்டான், கண்ணீர் தடவிய கண்கள், சோர்ந்து போன தோற்றம், அந்த சிரிப்பில்லாத முகம். ‘இது நானா? நான் இந்த சக்கர நாற்காலிக்கு அடிமையா?’ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டான்.

‘வீல்சேர்ல உட்கார்ந்தவன் காதலிக்க முடியாதா? நேசிக்க முடியாதா? ஏற்கனவே இருந்த காதல் இதனால ஒன்னும் இல்லாம போகுமா? என்னவெல்லாம் சொல்லினாள், மனம் உருக உருக பேசினாளே, நான் இல்லைனா செத்துடுவேனு கூட சொல்லி இருக்காளே, ஆனா இன்னைக்கு என் கால்கள் இல்லைனதும் இன்னொருவன் பின்னாடி போயிட்டாளே, உண்மையாக நேசித்தவளால் இப்படியெல்லாம் போக முடியுமா? இல்ல கண்டிப்பா போக முடியாது, என் நிலமையில அவ இருந்தா அவளை என் நெஞ்சில் வைத்து தாங்கி இருப்பேன் ஆனா அவ?’

‘காதல் நேசம் எல்லாம் பொய், என்னை ஏமாற்றி இருக்கிறாள், எதற்காக இப்படி செய்தாள்?’ அன்றைய இரவு முழுக்க கத்தி கதறி அழுதான், தன் வலி குறையும் வரைக்கும் அழுதான், அதன் பிறகு மனதில் திடம் வந்தது போல் அவன் கண்களில் ஒரு தீர்மானம் பிறந்தது,..

‘இல்ல… நான் வீழ்ந்தவன் இல்லை… என் கால்கள் இப்போ வேலை செய்யலன்னா என்ன? என் கனவுகளுக்கு கால் வெட்டப்பட்டுவிடலையே…’  என்று தன்னிடமே கிசுகிசுத்தான்…

அவன் தந்தை தியாகராஜனின் கண்களில் இருந்த நம்பிக்கையற்ற பார்வையை நினைத்தான்…
‘என் அப்பாவுக்கு நான் பலவீனமா தெரியக் கூடாது, அவரை பெருமைப்படுத்தணும், என் நிம்மதி தான் அவரின் நிம்மதி’…

வீல்சேரில் அமர்ந்திருந்தவனின் இரு கைகளும் தன்னிச்சையாக மூடி, வலிமையோடு இறுக்கப்பட்டன, அவனது மனதில் அந்த நேரம் ஒரு வித சபதம் பிறந்தது….

‘மனிஷா எனக்குத் துரோகம் பண்ணினா பரவாயில்லை, ஆனா உலகமே என்னை குறை சொல்வதற்க்கு நான் விட மாட்டேன், என் வாழ்க்கை இன்னும் முடியல, இன்னும் என் சுவாசம் ஓடுது, என் உயிர் எனக்குள்ள இருக்கும் வரைக்கும் நான் போராடுவேன், என் சாதனையால, என் உழைப்பால, என்னை மறந்தவர்கள் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைப்பேன்…’ என்று சபதம் எடுத்தான்,..

மனிஷாவின் மறுப்பு, உடல் வலியை விட மனவலியை அதிகமாகக் குத்திக் கொண்டே இருந்தது, ஆனால் தீரஜ் தன் மனதை முழுமையாக சிதற விடக்கூடாது என்று முடிவு செய்தான்…

‘எதுவும் நடக்கலைனு என் மனசை நானே தேத்திக்கிட்டு வாழ்க்கையை தொடரணும், இல்லாட்டி நான் முற்றிலும் சிதறி போயிடுவேன்’ என்று அவன் தனக்குத்தானே உறுதியூட்டிக்கொண்டான்….

அதற்காக அலுவலகத்தை மீண்டும் கையாள ஆரம்பித்தான், ஆனால் முன்புபோல தினமும் அலுவலகம் செல்ல முடியவில்லை அவனால்,
காலை அலுவலகத்திற்க்கு தயாராகும் ஒவ்வொரு தருணமும் அவன் மனசுக்கு அது இன்னொரு சுமை போல இருந்தது…

வீல்சேரில் முதல் நாள் அவன் அலுவலகத்திற்கு சென்ற போது சிலர் அதிர்ச்சியாக பார்த்தனர், சிலர் பரிதாபமாக பார்த்தனர், மிடுக்கான கம்பீர நடையில் வலம் வருபவன் வீல்சேரில் வருவதை கண்டு சிலர் வருத்தம் கூட பட்டனர்,…

அந்த பார்வையெல்லாம் அவனுக்கு கோபத்தை மூட்டியது, தன்னை பரிதாபமாக பார்ப்பவர்களை எல்லாம் தன் தனல் பார்வையால் பொசிக்கினான், அவர்களும் அதனை உணர்ந்து இயல்பாக இருக்க ஆரம்பித்து விட்டனர்,…

தினமும் அலுவலகம் போய் வர சிரமமாக இருந்ததினால் இறுதியில், ‘வீட்டில் இருந்தே பார்த்துக் கொண்டு முக்கியமான மீட்டிங் இருந்தா மட்டும் போய் வரலாம்’ என்று முடிவெடுத்தான்….

அவன் அறை மெதுவாக அலுவலக அறையாக மாறியது, கம்ப்யூட்டர், கோப்புகள், தேவையான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் மேசையின் மேல் குவிந்து கிடந்தன,
வீல்சேரில் அமர்ந்தவாறே கிளையண்ட்களோடு வீடியோ கால் மூலம் பேசுவான்…

வெளியில் உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்க, அவனோ சக்கர நாற்காலியில் இருந்தபடியே தனது உலகத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான், மனம் எவ்வளவு வலித்தாலும், வேலை தான் அவனுக்கு ஒரே ஆறுதல்,
அவன் மனதை கட்டுக்குள் கொண்டு வர ஒரே வழி அலுவலகப் பணி…

தன் மனதிடத்தோடு அவன் தந்தையின் உற்சாகமும் ஆதரவும் அவனை மேலும் உறுதியானவனாக மாற்றியது…  “கால் இயங்காவிட்டால் என்ன மூளை நன்றாக வேலை செய்கிறது, இதயம் இன்னும் துடிக்கிறது, வாழ்க்கை முடியவில்லை மகனே, இனி தான் வாழ்க்கை தொடங்கப் போகுது” என்று அவன் தந்தை எப்போதுமே ஊக்கம் அளிப்பார்….

அதன்படி, தீரஜின் வாழ்க்கையை வியாபாரத்தில் மீண்டும் செதுக்க முயற்சித்தார் தியாகராஜன்,
கம்பெனியின் முக்கிய முடிவுகளை அவனிடம் ஆலோசித்து பேசத் தொடங்கினார், மெதுவாகவேனும் தீரஜ் மனதை வேலைக்குள் செலுத்தத் தொடங்கினான்…

இப்போது கூட்டங்கள், பங்குதாரர் சந்திப்புகள் அனைத்திலும் அவன் வீல்சேரில் உட்கார்ந்தபடி இருந்தாலும், உறுதியான குரலில் முடிவுகளைச் சொல்லி அனைவரையும் கவர்ந்தான்,
வியாபாரத்தில் அவன் கூர்மையான புத்திசாலித்தனம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது,..

தியாகராஜனின் மனம்  ‘என் பையன் உடம்பால் வீழ்ந்தாலும், மனதால் இன்னும் தலைவன் தான்’ என்று பெருமையுடன் நினைத்துக் கொண்டது,…

மகனின் முன்னிலையில் அவர் திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டிருந்தாலும் உண்மையில் தினம் தினம் உள்ளம் நொந்து கொண்டிருந்தார், மகனிடம் மனிஷா சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது, ஒருநாள் மனதை அடக்க முடியாமல் தங்கையிடம் நேராகக் கேட்டு விட்டார்…

“மனிஷா ஏன் அப்படி சொன்னா வனிதா? ரெண்டு பேரும் காதலித்தார்கள் தானே…” என்று துடிக்கும் குரலில் கேள்வியெழுப்பினார்…

வனிதாவோ… “நீங்க கேட்கிறது நியாயமா அண்ணா? கால் நடக்க முடியாதவன் கூட எப்படி என் பொண்ணாலே வாழ முடியும்? உங்க பையன் வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிக்காதீங்க, என் பொண்ணு வாழ்க்கையை பத்தியும் கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க…” அந்த வார்த்தைகள் எரியும் நெருப்பைப் போலத் தியாகராஜன் உள்ளத்தைக் எரித்தது, மனம் நொறுங்கிப் போனார், ஆனால் அதற்கு மேல் அவர் வாதிடவும் முடியவில்லை,
தங்கை குடும்பத்தின் மீதான பொறுப்பு அவரை சங்கிலி போல கட்டியிருந்தது…

அதன் பின் வனிதாவிடம் இதுபற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை அவர், ஆனால் மகனின் கண்களில் சோகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தருணமும் வலிக்க வலிக்க துடித்து போவார்,…

‘நீங்க மட்டும் தான்ப்பா எனக்கு துணை, எப்போதும் நீங்க எனக்கு துணையாக இருக்கணும்’ என்ற அவனின் வார்த்தைகளே அவரை வாழவைத்தது, தீரஜின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் அருகில் நின்று ஆறுதல் அளிக்கத் தொடங்கினார்….

நாட்கள் மெல்ல ஓடியது, ஒரே வீட்டில் இருந்தாலும் தீரஜ் மனிஷாவை முற்றிலும் புறக்கணித்தான், சில சமயம்
டைனிங் டேபிளில் பார்க்க நேரிட்டாலும், அவளின் முகத்தை நோக்கவே மாட்டான், மனிஷா ஏதாவது பேசினால் கூட பதில் சொல்லாமல்  தன் பிளேட்டில் மட்டும் பார்வையை பதித்திருப்பான்,..

அவள் சிரிக்கும் நேரங்களில் எல்லாம் அவனது மனதில் பழைய காயம் துளைத்துக் கொண்டே இருக்கும்,  ஒருகாலத்தில் அவனை எவ்வளவு இனிமையாய் காதலித்தாள், ‘உனக்காக நான் என் உயிரை கூட விட்டுவிடுவேன்’ என்று சொல்லிய அந்த நினைவுகள் எல்லாம் நஞ்சாகவே மாறிவிட்டது…

வெளியில் எல்லோரிடமும் உறுதியானவனாக நடந்து கொண்டாலும், உள்ளுக்குள் அவள் தந்த காயம் இன்னமும் ஆறவில்லை… ‘கால் வேலை செய்யலன்னா மனசும் வேலை செய்யாதா? காலில்லாதவனுக்கு காதலிக்க அருகதை இல்லையா?’ என்ற கேள்விகள் அடிக்கடி அவனை உள்ளுக்குள் சிதைத்து விடும்…

தியாகராஜன் இதையெல்லாம் கவனிக்கும் போதெல்லாம் மகனின் துன்பத்தை நீக்க முடியாமல் மனம் பிளந்து போவார், ஆனால் ஒரு நாள் இதெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்,…

இப்போது கதைக்கு வருவோம் மக்களே….

ஷியாமை நடு வீட்டில் அமர வைத்து தாயும் மகளும் மனசாட்சியே இல்லாமல் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தனர், தீரஜை கண்ட பின்னர் கூட அவர்களின் சிரிப்பு குறையவில்லை, வனிதா தான் திடீரென்று…”தீரஜ் இங்கே வா, ஷ்யாம் வந்திருக்கார், கல்யாண விஷயத்தை பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கோம்” என்று அழைக்க, அவனுக்கோ கடந்த இத்தனை மாதங்களில் இந்த மாதிரி பேச்சை எல்லாம் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது, ஆனாலும் மனதில் சிறு ஓரத்தில் வலியும் எடுத்தது,…

“எனக்கு டையர்ட்டா இருக்கு, நான் ரூம்க்கு போறேன்” வீல்‌ச்சேரின் சக்கரங்கள் தரையில் மெல்லிசை எழுப்பியபடி முன்னேறின, லிஃப்ட் கதவுகள் திறந்தபோது, அந்த சிரிப்பு இன்னும் பின்னால் கேட்கவே அவன் இதயம் ஒருவித தாங்காத வலியோடு சுருங்கியது…

அவன் லிஃப்ட் உள்ளே நுழைந்து, கதவுகள் மூடிக்கொண்ட போது தான் அவர்கள் சிரிப்பு மறைந்தது,..
அறைக்குள் சென்றதும், வீல்‌ச்சேரை சாளரத்தின் அருகே நிறுத்தினான், வெளியே பரந்து விரிந்த இருள், அவன் மனதின் வெற்றியைப் போலவே இருந்தது….

‘இவங்களை நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கிறதுல எந்த அர்த்தமுமில்லை,.. மறந்துடணும்’ கண்களை மூடி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான், அடுத்த நொடியில், மனதில் ஒரு முடிவு மலர்ந்தது…

‘என்னோட வாழ்க்கை இவங்களோட சிரிப்புக்குள்ள அடைஞ்சு போகக்கூடாது, நான் இன்னும் உயிரோட இருக்கேன், இன்னும் நிறைய செய்யணும், இந்த வலி என்னை உடைக்காதுன்னு உலகத்துக்கே காட்டணும்’
டேபிளில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டவன், அதில் இருந்த பல ஆவணங்களைத் திறந்து பார்த்தான், திட்டங்கள், புது வாய்ப்புகள், வெளிநாட்டு பங்குதாரர்களுடன் மேற்கொள்ள வேண்டிய கூட்டங்கள் ஒவ்வொன்றும் அவன் மனதில் புதிதாய் நெருப்பை ஊட்டியது…

‘மனிஷாவோ, அவங்க சிரிப்போ… இனிமே என்னை கட்டுப்படுத்த முடியாது, என் பாதை வேற, என் கனவு வேற,’ வழக்கம் போல் சொல்லும் ஜெபத்தை சொல்லிக்கொண்டு தீரஜ் தன் அடுத்த வேலைப்பாதையை சிந்தித்து, புதிய திட்டங்களை வரைவதில் மூழ்கி விட்டான், அவனது முகத்தில் இப்போது வலியை விட, ஒரு தீர்மானமே வெளிப்பட்டது….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
34
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்