பிரியாவின் மீது இருந்த சந்தேகமும் தன் காதல் சிதைந்த விதத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் சிவா வீட்டுக்கு வர, அதிசயமாக அங்கே நதியாவும் அவளுடைய கணவனும் அமர்ந்திருந்தனர்.
சிவா முதலில் அதிர்ந்தாலும், பிறகு பொதுவாக வரவேற்றான். நதியா நன்றாக பேச, அவனால் அவளிடம் கோபத்தை காட்ட முடியவில்லை. பெரியவர்களுக்கிடையே எவ்வளவு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவர்கள் பேசிக் கொள்வதில் தடையில்லயே.
நதியாவை கல்யாணியும் நன்றாகவே கவனித்தார். அவர்களிடம் பேசி விட்டு அனுப்பி வைத்தார்.
“என்னமா.. திடீர்னு வந்து நிக்கிறா?”
“எதுவும் சொல்லலடா.. ஆனா சண்முகிக்கு நடந்தத கேள்விப்பட்டுருக்கா.. அண்ணனும் வருத்தப்பட்டாராம். வந்து பேசனும்னு ஆசையாம். ஆனா என்ன நினைப்பீங்கனு தெரியலனு சொன்னாரு. அதான் நீங்க வரலனா நான் போறேன்னு வந்துருக்கா”
“இத்தனை வருசம் கழிச்சு திடீர்னு நம்ம வீட்டு மேல என்னமா அக்கறை?”
“தெரியலையே.. உங்கப்பா வேற இன்னும் வரல. வந்து என்ன சொல்ல போறாரோ தெரியல” என்று புலம்பினார்.
பாண்டியனுக்கு விசயத்தை சொல்ல அவர் ஒன்றும் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அவர் மனதில் கர்வம் இல்லை. எப்போதும் மகளின் நினைவு தான். வாழ்ந்து சாதித்தது எதுவுமே இல்லை என்று மனம் விரக்தியடைந்திருந்தது.
அதனால் ராமமூர்த்தியின் மீது கொண்ட கோபமும் குறைந்து போயிருந்தது. அவர்களும் இப்படி தங்கையை இங்கே கட்டி வைத்தவர்கள் தானே. இப்படித்தானே அவர்களும் அவர் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசை கொண்டிருப்பார்கள்.. என்று என்னவெல்லாமோ தோன்ற ஆரம்பித்தது.
நாட்கள் ஓடியது. வக்கீல் நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்யும் முடிவுக்கு வந்து விட்டார். நாளை காலை பதிவு செய்யலாம் என்று காத்திருக்க, இன்று வாசலில் வந்து நின்றது ராமமூர்த்தியின் கார்.
காரை பார்த்ததும் சண்முகி அதிர்ந்து எழுந்து நின்றாள். உள்ளே இருந்து இறங்கியவர்களை பார்த்ததும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்படி குடும்பமாக வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
கல்யாணியை அழைத்து விட்டு, “வாங்க மாமா.. வாங்க அத்த” என்று வரவேற்று உபசரித்தாள். பலவருடங்களுக்குப்பிறகு சந்தித்ததால் நல விசாரிப்புகள் நீண்டது.
“சண்முகிய நினைச்சு வருத்தப்படாத கல்யாணி. அவளுக்கு கல்யாணம் நடந்தப்பவே எங்களுக்கு வருத்தம் தான். சின்ன பிள்ளைய கட்டி வச்சுட்டீங்களேனு. ஆனா அவ சந்தோசமா வாழுறானு நாங்களும் சந்தோசப்பட்டோம். இப்ப இப்படியாகிடுச்சு. ஆனா சண்முகி நல்ல பிள்ளை. எங்க இருந்தாலும் அவ மனசுக்கு மகராசியா வாழுவா”
கல்யாணி தலையை மட்டும் ஆட்டினார். இது போல அவருக்கு ஆறுதல் சொல்லத்தான் யாருமே இல்லாமல் வருந்தினார். இப்போது அண்ணி ஆறுதல் சொன்ன போது மனதின் பாரம் குறைந்தது.
“நானும் புள்ளைங்கள வச்சுருக்கேனே.. என் மக.. நாதினி.. இப்ப தான் படிச்சு முடிச்சா.. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு போனா சொந்தத்துல மாப்பிள்ளைய வச்சுட்டு வெளிய தேடுறியானு கேட்குறாங்க. எங்களுக்கும் என்ன பதில் சொல்லனு தெரியல.. சிவாவ விட நதியா பெரியவ.. நடக்கல.. நாதினிக்கு சிவாவ கேட்கலாம்னு ஆசை தான். ஆனா நீங்க என்ன சொல்லுவீங்கனு தான் அமைதியா இருந்தோம். இப்பவும் சம்மதம் சொல்லித்தான் ஆகனும்னு இல்ல. முடியாதுனு சொன்னா கூட நம்ம சொந்தம் விட்டுப்போகாம இருந்துக்கலாம்..”
பேச்சோடு பேச்சாக நாதினியின் திருமண விசயத்தையும் உடைத்தார் கோதாவரி. இதை மற்ற பெண்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உடனே மறுக்கவும் முடியவில்லை. இத்தனை வருட பகைமையை மறந்து வீடு தேடி வந்தவர்களை உடனே மறுக்கவா முடியும்?
ராமமூர்த்தி தனக்கு தெரிந்த வக்கீலிடம் பேசுவதாக சொன்னார். அவரிடம் சொல்லி சுப்பிரமணியை சிறையில் தள்ளுவதாக சொல்ல, சண்முகி சந்தோசமடைந்தாள்.
அவன் சிறைக்குச் சென்று விட்டால் குருவை தைரியமாக அவள் அழைத்து வந்து விடலாம் அல்லவா?
பேசுவதை பேசி விட்டு அவர்கள் கிளம்பி விட, பாண்டியனும் சிவாவும் வந்ததும் விசயத்தை சொன்னார்கள்.
முதலில் சண்முகியின் விசயத்தில் அவர்களது உதவியை ஏற்க நினைத்தனர். ஆனால் நாதினிக்கும் சிவாவுக்கும் திருமணம் என்பது தான் நம்பக்கூட முடியவில்லை.
“அவங்களே சொன்னாங்களா?” என்று திரும்ப திரும்பக் கேட்டு உறுதி செய்தார் பாண்டியன்.
சிவாவோ பேரதிர்ச்சி அடைந்தான். அவன் ஒருத்தியை காதலித்துக் கொண்டிருக்க வேறு ஒருத்தியை திருமணம் செய்வதா?
ஆனால் இப்போது அவனது காதலை சொல்ல முடியுமா? சொல்லக்கூடிய நேரமா? பிரியாவிடம் பேசிப்பார்க்க வேண்டும் என்று நினைத்தான்.
அடுத்த நாளில் இருந்து அவனது காதலுக்கு மூடு விழா ஆரம்பமானது.
சிவா காலையில் சீக்கிரமாக சென்றான். இது கைபேசியில் பேசும் விசயம் அல்ல. நேரில் சொல்ல வேண்டிய விசயம். அதனால் அவளை பார்க்கச் செல்ல, அங்கே அவனுக்கு முன்பு அமர் நின்றிருந்தான்.
தன்னுடைய காரின் அருகே நின்று கைபேசியில் பேசிக் கொண்டிருந்த அமர் சிவாவை கவனித்தாலும் காட்டிக் கொள்ளவிலாலை.
அவனுக்கு தெரியும் சிவாவின் வீட்டுக்கு அவனுடைய மாமா குடும்பத்தினர் வந்து பேசி விட்டுச் சென்று விட்டனர். அந்த விசயத்தை பற்றி நாதினி தன் தோழியிடம் சொல்ல, அது கணேஷுக்கு தெரிய வர, இப்போது அமருக்கும் தெரிந்திருந்தது.
திருமண விசயத்தை பற்றி பேச சிவா வந்து நிற்பான் என்று தெரிந்ததால் தான் அமரும் வந்தான். அவனது மனதில் சில சந்தேகங்களை விதைக்க நினைத்தான்.
நேற்று அமரின் கார் சர்வீஸுக்கு சென்றிருக்க அவன் காத்திருந்த போது, பிரியா அவனை தன் காரில் அழைத்துச் சென்று அவன் சொன்ன இடத்தில் விட்டாள். இது நேற்று மாலை எல்லோருமே வேலையை விட்டுச் சென்ற பிறகு இருவரும் தனியாக இருக்கும் போது நடந்த விசயம்.
அதைப்பற்றி பிரியா நிச்சயமாக சிவாவிடம் சொல்லியிருக்க மாட்டாள். அதை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டியது அமரின் கடமை அல்லவா?
பிரியாவின் கார் வந்தது. அமர் அந்த காரின் முன்னால் நின்று பிரியாவுக்கு கையாட்டி வைக்க அவனை பார்த்தபடி காரை மெதுவாக ஓட்டினாள் பிரியா.
கார் அருகே வந்ததும் அமர் விலகிக் கொள்ள பிரியா காரை பார்க் செய்தாள்.
அவள் இறங்கும் முன்பே அமர் அருகே சென்றான்.
“உங்க ஃபைல் பத்திரமா இருக்கு அமர்.. இந்தாங்க” என்று இறங்கி அவனிடம் நீட்ட அமர் உடனே புன்னகைத்தான்.
“நேத்து பேசிட்டே போனதுல உன் கார்ல போட்டு போயிட்டேன். வீட்டுல தேடி தேடி எவ்வளவு டென்சன் தெரியுமா?”
“இப்பலாம் நீங்க அடிக்கடி எதையாவது மறக்குறீங்க.. ஆர் யூ ஓகே?”
“இல்ல.. ப்ச்ச்.. பட் ஓகேயாகிடும்”
“ஏன் என்னாச்சு? எதாவது பிரச்சனையா?”
“அப்படி எதுவும் இல்லனு சொல்ல தான் ஆசை.. ஆனா.. தாத்தாவுக்கு ரொம்ப உடம்பு முடியல.. ஹாஸ்பிடல்ல இருக்காரு”
“மை காட்.. பெருசா எதுவும் இல்லயே?”
“இல்லனு தான் டாக்டர் சொல்லுறாரு. லெட்ஸ் ஹோப்”
“ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க..”
“நீ சொன்னா சரி தான். ஓகே நான் அப்புறமா வர்ரேன். அதுக்குள்ள புஷ்பா மேடம் கிட்ட திட்டு வாங்காம வேலை பாரு..”
“நான் திட்டு வாங்குறனா? எக்ஸ்கியூஸ்மீ?”
“உன்னை எக்ஸ்கியூஸ் பண்ணிட்டேன். பை” என்றவன் சிரிப்போடு திரும்பி நடக்க, “யூ… அமர்.. திரும்பி வாங்க பேசிக்கிறேன்” என்று முறைத்துக் கொண்டே சிரித்தாள்.
அவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே கையாட்டி விட்டு காரில் ஏறி கிளம்பி விட்டான்.
பிரியா தன் பொருட்களை எடுத்துக் கொண்டு காரை பூட்டி விட்டு நடக்க, சிவா முன்னால் வந்தான்.
அதுவரை அவனை பிரியா பார்க்கவே இல்லை. இப்போது பார்த்ததும் புன்னகைத்தவள், “என்ன சிவா.. சீக்கிரமா வந்துட்ட?” என்று கேட்டாள்.
‘அப்படி வந்ததால தான இதெல்லாம் பார்க்க முடிஞ்சது’ என்று நினைத்தாலும் “உன் கிட்ட பேச வந்தேன்” என்றான்.
“என்னனு சீக்கிரம் சொல்லு.. வேலை இருக்கு”
‘இவ்வளவு நேரம் அவன் கூட பேசும் போது வேலை இல்லையா?’ என்று சிவாவின் மனம் கேட்டது.
காதல் மேலும் மேலும் சிதைய ஆரம்பித்தது. ஆனால் அந்த காதலை காப்பாற்றிக் கொள்ளவும் அவன் போராட வேண்டும்.
“எங்க வீட்டுல நடக்குற பிரச்சனை உனக்கு தெரியும்ல?”
“ம்ம்.. ஆமா.. ஏன்?”
“அதுல இப்ப ஒரு புது சிக்கல் வந்துருக்கு..”
“என்னாச்சு?”
“எனக்கு இப்ப கல்யாணம் பேசுறாங்க”
“என்ன? ஏன்? இருக்க பிரச்சனை போதாதா? புதுசா இப்ப என்ன கல்யாணம்?”
“என் மாமா குடும்பம் வந்து பேசுனாங்க” என்றவன் நடந்ததை சுருக்கமாக சொன்னான்.
“சிவா இது டூ மச்.. உன் அக்கா பிரச்சனையே தீரல.. அதுக்குள்ள உனக்கு எப்படி கல்யாணம் பேசுறாங்க?”
“அம்மாவுக்கு இதுல சம்மதம்.. இப்படியே குடும்பம் இணைஞ்சுடலாம்னு பார்க்குறாங்க”
“நீ என்ன சொன்ன?”
“எதுவும் சொல்லல..”
“ஏன்?” என்று கோபமாக கேட்டாள்.
“முதல்ல உன் கிட்ட பேசனும்னு நினைச்சேன்”
“முடியாதுனு சொல்லுறதுக்கு என் கிட்ட வேற பேசனுமா?”
“ப்ச்ச்.. முடியாதுனு சொன்னா கேள்வி கேட்பாங்க.. என்ன சொல்ல? நம்ம லவ்வ சொல்லிடவா?”
பிரியா சில நொடிகள் அமைதியாக நின்றாள்.
“நீயும் உன் வீட்டுல சொல்ல மாட்டேங்குற.. நானும் சொல்லாம இருந்தா எப்படி? இப்ப நீ தான் இதுக்கு பதில் சொல்லனும்”
பிரியா பெருமூச்சு விட்டாள்.
“இல்ல சிவா.. என்னால இத வீட்டுல சொல்ல முடியாது”
“இப்பவா? இல்ல எப்பவுமேவா?”
“என்ன சொல்ல வர்ர நீ?”
“ஏன் சொல்ல முடியாது?”
“இது சொல்லுறதுக்கான நேரமில்ல”
“எது நேரமில்ல? அப்ப அந்த நேரம் எப்ப வரும்?”
“தெரியாது. ஆனா இது நேரமில்ல சிவா.. புரிஞ்சுக்க”
“ஏன்னு கேக்குறேன்.. பதில் சொல்லு”
“இப்ப உனக்கு இருக்க பிரச்சனையோட சொன்னா என் வீட்டுல சம்மதிக்க மாட்டாங்க”
சிவாவின் காதல் மனம் உடைய ஆரம்பித்தது.
“உன் அக்கா பிரச்சனை பணப்பிரச்சனை எல்லாம் இருக்கும் போது சொன்னா தேவையில்லாம புது பிரச்சனை தான் வரும். சம்மதிக்க மாட்டாங்க. இதெல்லாம் முடியட்டும். நானும் என் வொர்க்க முடிக்கிறேன். அப்புறமா சொன்னா தான்…”
“இல்ல.. என் கல்யாண விசயம் பிரச்சனைய முடிக்கும்னு நினைக்கிறாங்க..”
“அது எப்படி முடியும்? உனக்கு கல்யாணம் ஆனா உன் அக்கா வாழ்க்கை சரியாகிடுமா? லாஜிக்கோட பேசு..”
சிவாவின் இதயம் உடைந்தே போனது.
“என்னால இப்போ வீட்டுல சொல்ல முடியாது. நீ அந்த கல்யாணத்த ரிஜெக்ட் பண்ணு.. அவ்வளவு தான்..” என்றவள் விடாமல் அதிர்ந்து கொண்டிருந்த கைபேசியை பார்த்தாள்.
“புஷ்பா மேடம் கூப்பிடுறாங்க.. நான் மேல போறேன்” என்று கூறி சென்று விட்டாள்.
தொடரும்.