வரம்-2
“ஏய்! ஸ்கூபி அவளுக்கு தான் உன்னைய பிடிக்காதுல்ல, அப்புறம் எதுக்கு அவளையே பாக்குற, இந்த மாதிரிலாம் பண்ணுன உன்னைய கொண்டுபோய் எங்கயாச்சும் விட்டுட்டு வந்திடுவேன்” என்றாள் பூர்ணா கோபமாக.
“ஏய்! பூர்ணா உன்னையத் தான் சொல்லனும் டி, இந்த நாய நீ தானே வளக்கனும்னு சொல்லி கேட்ட, உன்னையத் தானே பொண்ணு பார்க்க வந்திருக்காங்க கவனமா இருக்க வேணாமா, நா நடுவுல சமாளிக்காம இருந்திருந்தா இந்த வரன் நம்ம கைய விட்டுப் போயிருக்கும்” என்று பாட்டி திட்டினார்.
“ஆமா நா தான் எல்லாத்துக்கும் காரணம், உங்க சின்னப் பேத்தி செல்லப் பேத்தியை எதுவும் சொல்லாதீங்க ” என்றாள் கோபமாக.
“யாரு செல்லப் பேத்தி அவளா?? இல்ல நீயா??? இந்த நாய் அவளப் பார்த்தா உனக்கு என்ன வந்துச்சு?? இத பத்தி பேச அதுதான் நேரமா, அப்பப் பேச கூடாதுன்னு உனக்குத் தெரியாது” என்றார் கோபமாக.
“ஆமா எனக்குத் தான் எதுவும் தெரியாது, உங்க சின்னப் பேத்தி செல்லப் பேத்திக்கு எல்லாம் தெரியும், இது என்னோட நாய் இது எப்படி அவளப் பார்க்கலாம் ” என்று கண்களைக் கசக்கினாள்.
“அட என்னம்மா பூர்ணா இதுக்குப் போய் எதுக்கு அழுவுற, இப்ப இந்த நாய எங்கயாச்சும் அனுப்பனுமா சொல்லு அனுப்பிடலாம் ” என்றார் மோகன் பாசமாக.
அபுவிற்கு பகிர் என்று இருந்தது. ஸ்கூபியை பார்த்து பூர்ணாவிடம் செல்லுமாறு சைகை செய்து கெஞ்சினாள். ஸ்கூபியும் அதை புரிந்து கொண்டு பூர்ணாவிடம் சென்று அவள் காலை நக்கி அவளை ஏக்கமாகப் பார்த்தது. “நா என் ஸ்கூபிய எங்கயும் அனுப்ப மாட்டேன்” என்று அணைத்துக் கொண்டாள். அபுவிடமிருந்து பெருமூச்சு வந்தது.
“சரிமா உன் இஷ்டம்” என்றார் மோகன்.
“இந்த வரன் நல்ல படியாக அமைஞ்சுருச்சு மோகன் , இந்த கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சா போதும் ” என்றார் பாட்டி கவலையாக.
“அதுல ஒரு பிரச்சனையும் வராது கவலையை விடுமா” என்றார் ஆறுதலாக.
அபு அவள் ரூமிற்கு செல்லப் போனாள்,”ஏய்! சின்ன குட்டி எங்கப் போற???.
“ரூமுக்குப் போறேன் பாட்டி”.
“நீ ரூமுக்குப் போயிட்டா, இதெல்லாம் யாரு சுத்தம் பண்ணுறது???, உன் அம்மாவா??! அப்ப சமைக்கிறது யாரு??? உன் அக்காவா??! ” என்றார் நக்கலாக.
“அத்த அவ ரூமுக்கு போகட்டும் நா எடுத்து வச்சுட்டு சமைக்கிறேன்”, என்றார் மேகலா (அபுவின் அம்மா).
“ஏன் மகாராணி எடுத்து வச்சுட்டு போக மாட்டாங்களோ!!!” என்று கேட்டுக் கொண்டே வந்து மோகன் மற்றும் பாட்டியின் இடையில் உட்கார்ந்தாள் பூர்ணா.
“பூர்ணா உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் பெரியவங்க பேசுறப்ப நடுவுல வராதான்னு , சரி வா உனக்கு சமையல் கத்துத் தரேன்”.
“என்னம்மா உங்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசிட்டு அப்படியே சமாளிக்கிறீங்களா??” என்றாள் நக்கலாக.
“நீயும் என் பொண்ணு தான் அத ஞாபகத்துல வச்சுக்க ” என்றார் கண்டிப்பான குரலில்.
“அப்பா பாருங்கப்பா, அம்மா என்னையே திட்றாங்க, நா இந்த வீட்டுல இருக்குறது தான் எல்லாருக்கும் பிரச்சன” என்று புலம்பினாள்.
“அச்சோ! அப்படி எல்லாம் இல்ல மா, ஏன்மா இப்படி பேசுற??, ஏய்!! நீ ஒன்னும் சமையல் சொல்லித் தர வேணாம், அவ கத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல, அவளுக்கு கீழ வேல செய்ய நிறைய பேர் இருக்காங்க” என்றார் கோபமாக மேகலாவிடம்.
“ஏய்! என்னடி வரவர உன் குரல்ல உயர்த்தி பேசுற, கால்னா காசுக்கு புரோஜனம் இல்லனாளும் பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, ஏய்! சின்னக் குட்டி எதுக்கு நிக்கிற வந்து சுத்தம் பண்ணு ” என்று திட்டினார் பாட்டி.
அபு எதுவும் பேசாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். மேகலா தன் இளைய மகளின் நிலையை எண்ணி வருந்தினார் .மற்ற மூவரும் டிவியில் ஆழ்ந்தனர். சுத்தம் செய்து விட்டு தன் அறைக்குச் சென்றாள். மேகலா தன் போக்கில் வேலை செய்தாலும் அவர் மனம் பின்னோக்கி பயணம் செய்தது.
(பிளாஷ்பேக் ஸ்டார்ட்)
ராஜாத்தி மற்றும் சின்னையா அவருக்கு இரண்டு மகன்கள் ராஜமோகன் மற்றும் சந்திரமோகன். சின்னையா வசதியானவர் தன் சொந்த காலிலே நின்று சொத்து சம்பாதித்தவர். பல தொழில்களுக்கு அதிபதியாக இருந்தவர். ராஜாதி வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண். ராஜமோகன் கல்லூரி படிக்கும்போதே சின்னையா காலமானார். ராஜமோகன் தன் படிப்பை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார். தன் தம்பியை நன்றாக படிக்க வைத்து அப்பா இல்லாத குறையைப் போக்கினார்.
ராஜாவுக்கு தன் சொந்த அண்ணன் மகள் வசதியும், அழகும் கூடிய சுந்தரியை திருமணம் செய்து வைத்தார் ராஜாத்தி. கல்யாணம் முடிந்து மூன்று வருடம் கழித்து ஒரு மகள் பிறந்தாள். அவள்தான் பூர்ண வர்ஷினி. நேத்திகடன் முடிக்க அனைவரும் இரு கார்களில் கோவிலுக்குச் சென்றனர். கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும்போது ராஜாத்தி, சந்திரமோகன், பூர்ணா ஒரு காரிலும், ராஜமோகன் சுந்தரி ஒரு காரிலும் வந்தனர். வரும் வழியில் ராஜமோகன் வந்த கார் விபத்தானது. அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியிலே சுந்தரியின் உயிர் பிரிந்தது. ராஜா சிகிச்சையில் இருந்தார். டாக்டர் காப்பாற்ற முடியாது காப்பாற்றுவது கஷ்டம் என்று கூறி இருவரையும் ராஜாவிடம் பேச அழைத்து சென்றார்.
“அண்ணே..”, என்றார் அழுகையுடன்.
“ராஜா..”, என்று அழுதார் ராஜாத்தி. பூர்ணா ஆறு மாத குழந்தையாக மோகனின் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
“மோகன் இனி பூர்ணா உன் பொண்ணு ,எந்த கஷ்டம் வந்தாலும் அவளை விட்டுறாத அவ ஆசைப்பட்டது எல்லாம் ஒரு அப்பாவா நீ எல்லாத்தையும் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணி கொடு ” என்று கை நீட்டினார்.
“அண்ணே! அவ எப்போதுமே என் பொண்ணுதாண்ணே உனக்கு ஒன்னும் ஆகாது” என்று அழுதார்.
லேசாக சிரித்துக் கொண்டே, “சத்தியம் பண்ணு” என்றார் மீண்டும்.
“அண்ணே இவ ஆசைப்படுறது இவ நினைக்கிறது மட்டும்தான் நம்மளோட வீட்டில் நடக்கும் இது சத்தியம் ” என்று சத்தியம் செய்து கொடுத்தான். ராஜமோகன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது, பிறகு காரியம் எல்லாம் முடிந்தது.
மோகன் மற்றும் ராஜாத்தி பூர்ணாவைப் பார்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவராலும் குழந்தையை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். அதனால் மோகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.” ஒரு குழந்தையுடன் யாரும் திருமணம் செய்ய ஏத்துக்க மாட்டாங்க அதனால எனக்கு கல்யாணம் வேண்டாம் “, என்று மறுத்தார் மோகன்.
“நா நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி நம்ம தேவை எல்லாத்தையும் பூர்த்தி பண்ற மாதிரி நா பார்த்து முடிக்கிறேன்”, என்றார் ராசாத்தி உறுதியாக.
“இல்லம்மா வரவ பூர்ணாவ நல்லா பாத்துப்பான்னு என்ன நிச்சயம், வசதியான பொண்ணு பூர்ணாவ பார்த்துக்க மாட்டா வசதி கம்மியா இருக்கிறவங்கதான் பார்த்துப்பாங்க, அப்படி பார்க்குறதா இருந்தா பாருங்க, இல்லனா வேணாம்” என்றார் முடிவாக.
“உன் இஷ்டம் என்னமோ பண்ணு நம்மளால நாலு மாசம் கூட ஒழுங்கா பார்த்துக்க முடியல, வரவ என்ன பண்ணப் போறாளோ, வசதியான பொண்ணா இருந்தா கூட பரவால்ல இவன் இப்படி சொல்லுறான்” என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார் ராஜாத்தி.
மோகன் புரோக்கரை வரச்சொல்லி தன் மகளை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்கின்ற வரனாகப் பார்க்கச் சொன்னார். அப்படி பார்க்கும்போது கிடைத்தவர் தான் மேகலா. சாந்தமான குணம் கொண்டவர். வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர். ராஜாத்திக்கு மோகன் அவரை திருமணம் செய்ய விருப்பமே இல்லாமல் இருந்தார். திருமணம் நல்லபடியாக முடிந்தது. மோகன் பூர்ணாவுடன் அவர் அறையில் இருந்தார். மேகலா மோகனை எதிர்பார்க்காமல் பூர்ணாவிற்கும் பாலைக் கொடுத்து தூங்க வைத்தார்.
“மேகலா நா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”.
“சொல்லுங்க”.
“எனக்கு என் பொண்ணு தான் எல்லாமே அவ ஆசைப்படுறது தான் இந்த வீட்டுல நடக்கணும், நீ பூர்ணாவ எப்படி பார்த்துக்கிறியோ அத வச்சுதான் நமக்கு குழந்தை வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணுவேன்” என்றார் அழுத்தமாக.
மேகலாவின் மனம் உடைந்தது, நம்பிக்கை இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் என்று மனம் வலித்தது.
” சரிங்க இனிமே அவ உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் பொண்ணு தான், நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க” என்றார் பொறுமையாக.
“ம்ம்.. சரி அதே மாதிரி இவ நமக்கு பொறந்தவ இல்லன்னு இவளுக்கு என்னைக்குமே தெரியக் கூடாது” என்றார் கட்டளையாய்.
“நா சொல்ல மாட்டேன்” என்றார் உறுதியாக.
“சரி” என்று பூர்ணாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டார் .பூர்ணாவின் மறுபக்கத்தில் மேகலா படுத்துக்கொண்டார். வீட்டில் அனைத்து வேலையும் மேகலா தான் செய்வார். செய்யவில்லை என்றால் ராஜாத்தி சாமி ஆடிவிடுவார் .பூர்ணாவைத் தன் மகளாகவே பார்த்தார்.
பூர்ணா மேகலா இல்லாமல் இருக்க மாட்டாள் அப்படி மாறிப் போனாள். இப்படியே இரண்டு வருடம் சென்றது மேகலாவின் இந்த அணுகுமுறையில் ஈர்க்கப்பட்டு மோகன் அவருடன் வாழ ஆரம்பித்தார். அதற்கு பரிசாக அபு உருவானாள். அபு பிறக்கும் போது மேகலா தன் தாய் வீட்டிற்கு சென்றார். பூர்ணா அவர் இல்லாமல் அழுது உடல்நிலை சரியில்லாமல் போனது அதனால் குழந்தை பிறந்த பத்தே நாளில் தன் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.
இப்படியே எந்த பிரச்சனையும் இல்லாமல் எட்டு மாதங்கள் சென்றது. இதைப் பொறுக்க முடியாத ராஜாத்தி பூர்ணாவிடம், “பூர்ணா நீ ஏன் எப்பப் பார்த்தாலும் அம்மா அம்மான்னு அவளையே சுத்திட்டு இருக்க?? உன்ன அவளா பெத்தா, இப்ப அவளுக்கு அவ குழந்தை வந்திருச்சு இனிமே அவ எங்க உன்ன கவனிக்கப் போறா கவனிக்க மாட்டா” என்று நான்கு வயது குழந்தையின் மனதில் நஞ்சை விதைத்தார்.
“பாட்டி என் அம்மா எங்க???” என்று அழுதாள். ராஜா மற்றும் சுந்தரி போட்டோவை எடுத்து வந்து காட்டினார் .இதை எதையும் அறியாமல் அபுவிற்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தார் மேகலா.
“அம்மா.. அம்மா..” என்று கத்தி கொண்டே உள்ளே வந்தாள்.
“என்னடா வாவா பாப்பாவ பாரு எப்படி சிரிக்கிறா உன் குரல் கேட்டதும்” என்றார் அன்பாக.
“அம்மா நீ என் அம்மா இல்லையா??” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
அபுவை கீழே படுக்க வைத்து விட்டு பூர்ணாவைத் தூக்கி மடியில் உட்கார வைத்து,” நா உன் அம்மாதான் பூர்ணா குட்டி அப்படி இல்லன்னு யார் சொன்னா?? நீ தான் என் முத பொண்ணு” என்று அணைத்து முத்தமிட்டார்.
“பாட்டி தான் சொன்னாங்க இவ வந்ததும் என்னைய கவனிக்க மாட்டீங்கன்னு ” என்றாள் அழுகையுடன்.
மேகலாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.” நா உன் அம்மா தான் நீ என் பொண்ணு தான், நீ தான் எனக்கு முதல அப்புறம் தான் பாப்பா” என்று சமாதானம் செய்தார்.
அன்று மாலை மீண்டும் இதே பிரச்சனை வந்தது. மோகன் வந்ததும் பூர்ணாவை தூக்கிக் கொண்டு அபுவை பார்க்க ரூமிற்கு சென்றார்.” அப்பா நா உங்க பொண்ணு இல்லையா??” என்றாள் மீண்டும் அழுகையுடன்.
“அட என்னாச்சுடா என் பூர்ணாவுக்கு?? நீ என் பொண்ணு தான், ஏன் இப்படி எல்லாம் பேசுற??” என்றார் வருத்தமாக.
“பாட்டிதான் சொன்னாங்க எனக்கு பாப்பா வேணாம் இவள நீங்க கொஞ்ச கூடாது” என்று அழுதாள்.
இதனைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மேகலா விற்கு பகீரென்று இருந்தது.” பூர்ணா இப்படில்லாம் சொல்லக் கூடாது இவ உன் தங்கச்சி டா” என்றார் பொறுமையாக.
“இல்ல இவ என் தங்கச்சி இல்ல, இவளப் பார்க்க ஆரம்பிச்சா என்னையப் பார்க்க மாட்டீங்க” என்று மோகனிடம் இருந்து இறங்கி ஹாலுக்கு சென்று பாட்டியைக் கூப்பிட்டாள்.
மோகன் மற்றும் மேகலா இருவரும் ஹாலுக்கு வந்தனர் .”பாட்டி நீங்க தானே சொன்னீங்க, என் அப்பா அம்மா இவங்க இல்லன்னு, இவங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துருச்சு இனிமே என்னைய பார்க்க மாட்டாங்கன்னு சொன்னீங்க தானே!!” என்றாள் பாட்டியிடம். பாட்டி முழித்தார்.
“அம்மா என்னம்மா இதெல்லாம்” என்றார் மோகன் கோவமாக.
“என்னடா நா என்ன பொய்யா சொன்னேன், உண்மையைத் தானே சொன்னேன், உன் பொண்டாட்டி பொழுதன்னிக்கும் அவ பெத்த புள்ள கூட தானே இருக்கா, நீ கூட வந்ததும் அவள தானே பார்க்கப் போற, இவ உன் பொண்ணா இருந்திருந்தா இவளப் பார்க்காம போவியா?? இல்ல என்னையத் தான் பார்க்காம போவியா???” என்றார் கோபமாக.
“அம்மா..”, என்றார் கோபமாக.
“என்னடா அம்மா, இவளே ஒரு பிச்சைக்காரக் குடும்பத்தச் சேர்ந்தவ, இவ கூட வாழ்ந்து குழந்தையும் பெத்துக்கிட்ட, உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா இவ மேல உனக்கு எப்படி பாசம் இருக்கும் , உன் அண்ணேன் குழந்தைய உன் குழந்தையா தானே வளர்ப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்க அத நீ சரியா பண்ணுறீயா!!??” என்றார் கோபமாக .
மோகன் விக்கிப் போய் நின்றார். அபுவைத் தூக்கிக் கொஞ்சும் போது அவரை அறியாமல் பாசம் அதிகம் ஆகியது. என் மகள், என் ரத்தம் என்ற எண்ணம் அவர் மனதில் ஓரத்தில் இருந்து எழுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது, அதை உணர்ந்தவர் குற்ற உணர்வு வந்தது.
“அத்த இப்ப இவரு இவள என்ன பார்க்கல, இவளையும் அபுவையும் நாங்க பிரிச்சி பார்த்ததில்ல, நீங்க பிரிச்சுடாதீங்க, இவ என் பொண்ணு தான் இனி இப்படி பேசாதீங்க” என்று மேகலா கோவமாக பூர்ணாவை தூக்கிக் கொண்டு சமையல் அறைக்கு சென்று அவளுக்கு பாலைக் குடிக்க வைத்தார்.பாட்டி உள்ளே சென்றார்.
“பூர்ணா இங்க வாடா ” என்று மோகன் சோபாவில் உட்கார்ந்தார்.
பூர்ணா அவரின் மடியில் வந்து உட்கார்ந்தாள்.” நீ என்னைய அப்பாவா தானே நினைக்கிற” என்றார் எதிர்பார்ப்புடன்.
“ஆமாப்பா” என்றாள் வேகமாக.
“இனிமே இப்படி பேசக் கூடாது, உனக்கு என்ன வேணும், என்ன வேணாம் உன் இஷ்டம் போல இருக்கலாம், இந்த வீட்ல யாரும் உன்னையத் தடுக்க மாட்டாங்க” என்றார் உறுதியாக.
“சரிப்பா நா இப்படி பேச மாட்டேன் ஆனா நீங்க அபுவ தூக்கக்கூடாது, நீங்க என் அப்பா என் கூட தான் இருக்கனும்” என்றாள் கெஞ்சலாக.
மேகலாவின் காதுகள் அவர் கூறப்போகும் பதிலுக்காகக் காத்துக் கொண்டு இருந்தது.
” சரிடா நா சொன்னேன்ல என் பொண்ணு என்ன நினைக்கிறாலோ அதான் நடக்கும்னு” என்றார் உறுதியாக.
“அப்பா..”, என்று மகிழ்ச்சியில் அவர் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள் அந்தச் சிறு குழந்தை.
“பூர்ணா குட்டி ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க அப்பாவுக்குச் சொல்லித் தறியா”, என்று பேச்சை மாற்றி சமாதானம் செய்தார். அன்று இரவு மீண்டும் ஓர் பூகம்பம் வெடித்தது. மேகலாவின் பக்கத்தில் அபு படுத்திருந்தாள். அவளின் பக்கத்தில் பூர்ணாவும், பூர்ணாவின் பக்கத்தில் மோகன் படுத்து இருந்தனர். பூர்ணா எழுந்து மேகலாவிடம் வந்தாள்.
“என்னடா தூங்கலையா???” என்று தூக்கி மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
“அம்மா நா தான் உன் பக்கத்துல படுக்கணும் இவள தொட்டில்ல படுக்க வைங்க”, என்றாள் பிடிவாதமாக.
“என் பக்கத்தில் தானே படுக்கணும் நீ இந்தப்பக்கம் படு அபு இந்தப் பக்கம் படுக்கட்டும் அவ பாப்பால்ல” என்றார் பொறுமையாக.
“முடியாது அவளத் தொட்டில்ல போடுங்க, நா அப்பா அம்மா நடுவுல படுக்கணும்” என்று சத்தம் போட்டு அழுதாள்.
மோகன் எழுந்து என்ன விஷயம் என்று விசாரித்தார்.” பூர்ணா அழுகக் கூடாது அப்பா கிட்ட வா” என்றார்.
“முடியாது நா அம்மாகூட தான் இருப்பேன் இவளத் தொட்டிலில் போடச் சொல்லுங்க ” என்று அழுதாள்.
“மேகலா அவளத் தொட்டில்ல போடு”.
“சரி..”, என்று போட்டார். பூர்ணா இருவரின் நடுவில் படுக்க வைத்து தூங்க வைத்தாள். நடு இரவில் அபு பசியில் லேசாக சிணுங்க ஆரம்பித்தாள். மேகலா எழப் போனார், அவரை அணைத்துப் பிடித்து இருந்த பூர்ணாவை விலகினார்.
“அம்மா எங்க போறீங்க??”, என்று எழுந்து உட்கார்ந்தாள்.
“பாப்பா அழுகுறா டா பால் கொடுத்துட்டு வரேன்”, என்றார் பொறுமையாக.
“அம்மா என்னைய விட்டுட்டுப் போகாத”, என்று அழுதாள்.
அபுவின் சிணுங்கல் நின்றது. பூர்ணாவைத் தூங்க வைத்தார். அடுத்து சிறிது நேரத்தில் அபு அழுக ஆரம்பித்தாள். பூர்ணா மேகலாவை இம்மியளவும் கூட நகர விடாமல் செய்தாள். மோகனை மேகலா எழுப்பினார்.
“என்ன??”.
“அபுக்கு இந்த பால குடுங்க இவ என்னைய விட மாட்டேங்கிறா” என்றார் கெஞ்சலாக. அபு அழுகை அதிகரித்தது. மோகன் சென்று பாலைக் கொடுத்தார். குழந்தையின் அழுகை குறைந்து தூங்க ஆரம்பித்தது.
பூர்ணா எழுந்து மோகன் பால் குடுப்பதைப் பார்த்ததும் அவனிடம் இறங்கி சென்றாள்.” அப்பா இவ கிட்ட போக மாட்டேன்னு சொன்னீங்கல்ல” என்று அழுதாள்.
“பாப்பாவுக்குப் பசிக்கும் டா அதான் கொடுத்தேன் நீ வா தூங்கு” என்று தூக்கிச் சென்று படுக்க வைத்தார். மேகலா மற்றும் மோகன் இருவரையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். குழந்தையின் மனம் பாதித்ததால் பயத்தில் பூர்ணா அடிக்கடி எழுந்தாள். மேகலாவிற்கு அழுகையாக வந்தது. விடியற்காலையில் மீண்டும் அபு அழுதாள். மேகலா மற்றும் மோகனை எழவிடாமல் பூர்ணா பிடித்திருந்தாள். அழுத குழந்தை மீண்டும் தூங்கியது. மேகலா அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தார்.
மறுநாள் பூர்ணாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு அபுவைப் பார்த்தார். சிரிக்கும்போது குழி அழகாக அவள் கன்னத்தில் விழுந்தது.
” நீ ஏன்டி இந்த பாவப்பட்ட வயித்துள வந்து பொறந்த, உன் சிரிப்பப் பார்த்தா உன்னைய அழவிட தோணுமா” என்று அழுதார்.
மோகன் ஃபைல் எடுக்க வீட்டுக்கு வந்தார். “என்ன மேகலா?? என்ன பண்ற?? ஏதாச்சும் வாங்கனுமா ??? சொல்லு வாங்கி தந்துட்டுப் போறேன்” என்றார்.
“ஆமா வாங்கனும்” என்றார் வெற்றுக் குரலில்.
“என்ன வாங்கனும்னு சொல்லு வாங்கிட்டு வந்து தரேன்”.
“வரப்ப இந்த குழந்தைய கொல்ல விஷம் வாங்கிட்டு வாங்க” என்றார் கோவமாக.
“ஏய்! இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பேசுற??” என்றார் கோபமாக.
“வேற எப்படி பேசணும் சொல்றீங்க, எட்டு மாத குழந்தைக்குப் பால எடுத்து குடிக்கத் தெரியுமா, நைட்டு ஃபுல்லா பசில அழுதா, பூர்ணா கொஞ்சம் கூட நகர விட மாட்டேங்கிறா, பக்கத்து ரூம்ல இருக்க உங்க அம்மாவுக்கு தெரியாதா குழந்த அழுகுறது, பசியில்ல அழுது சாகுறதுக்கு ஒரேடியா விஷம் வச்சு சாவடிச்சுருறேன்” என்றார் கோபமாக.
மேகலா சொன்னதில் இருந்த உண்மை அவரைச் சுட்டது.” கொஞ்ச நாளைக்கு நா பூர்ணாவ பார்த்துக்குறேன், நீ அபுவ பார்த்துக்கோ” என்றார் .மேகலா எதுவும் பேசாமல் அபுவைத் தூக்கிக்கொண்டு வேற ரூமிற்கு சென்றார்.
காலையில் சமைக்கத் தாமதம் ஆனதால் அன்று மதியம் மேகலா பூர்ணாவுக்குச் சாப்பாடு குடுக்க அபுவைத் தூக்கிக்கொண்டு ஸ்கூலுக்கு சென்றார். பூர்ணாவுடன் படிக்கும் குழந்தைகள் அபுவைப் பார்த்ததும் அவளைக் கொஞ்சினர். அவ கன்னக் குழி அழகில் மயங்கினார்கள். குழந்தையின் பெற்றோரும் இவளைத் தூக்கிக் கொஞ்சினார்கள். இது எல்லாம் பார்த்த பூர்ணாவிற்கு வன்மம் மனதில் உருவானது. அன்றிரவு மோகன் பூர்ணாவுக்குப் பிடித்த பொம்மை, சாக்லேட் என வாங்கிக் கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டார். மேகலா வேறு அறையில் படுத்துக் கொண்டார்.
நாட்கள் இப்படியே சென்றது அபுவின் சிரிப்புக்காக அவளைப் பார்க்க பக்கத்தில் இருக்கும் நிறைய பேர் வந்தனர். அவர்கள் யாரையும் வீட்டிற்குள் வரவிடாமல் பாட்டியை வைத்து தன் காரியத்தைச் சாதித்தாள்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது, மீண்டும் ஒரே அறையில் படுத்தனர். அபுவிற்குத் தனிப் படுக்கையாக மாறிப் போனது.
அபுவிற்கு ஐந்து வயது ஆனதும். நான்கு பேர் இருந்த அறை இப்போது மூன்று பேராக மாறியது. அபுவைத் தனி அறையில் படுக்க வைத்தனர். சிறுவயதிலிருந்தே தனியாக இருக்க பழகிக் கொண்டாள்.
“நா படிகிற ஸ்கூலில் அவளைச் சேர்க்கக்கூடாது” என்று பூர்ணா அழுதாள். அபுவை வேறு ஸ்கூலில் சேர்த்தனர். ஸ்கூலில் அவளுக்கு நெருங்கிய தோழியாக பிரியா மாறிப் போனாள்.
அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அபு நேராக மேகலாவிடம் சென்று, “அம்மா.. அம்மா..”, என்று புடவையைப் பிடித்து இழுத்தாள். பாட்டி மற்றும் பூர்ணா டைனிங் டேபிளில் உட்கார்ந்து இவர்களைப் பார்த்தனர்.
“என்னடா அபுகுட்டி ” என்று தூக்கி சமையல் மேடையில் உட்கார வைத்தார்.
“அம்மா இன்னைக்கு பிரியா ரசகுல்லா கொண்டு வந்தாம்மா, செம்ம டேஸ்டா இருந்தது எனக்கும் பண்ணி தாங்க ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
மேகலாவிடம் முதல் முதலாக அபு ஆசையாகக் கேட்டது இதுதான் என்பதால் ரொம்ப சந்தோஷப்பட்டார்.” சரி டா குட்டி பண்ணித் தரேன் ஆனா அம்மாவுக்கு ரசகுல்லா பண்ணத் தெரியாது” என்றார் கவலையாக.
“அம்மா பிரியா அம்மாவுக்கு பண்ணத் தெரியும், இந்தாங்க இதான் பிரியா வீட்டு நம்பர் அவங்க அம்மா கிட்ட கேளுங்க பிரியா வீட்டுக்குப் போனதும் அம்மா கிட்ட சொல்லி இருப்பா” என்றாள் வேகமாக.
“சரி வா பேசலாம்” என்று தூக்கிக் கீழே இறக்கி விட்டுப் போன் செய்து கேட்டார்.
“நீ போய் ட்ரஸ் மாத்திட்டு உடம்பெல்லாம் கழுவிட்டு வா நா பண்ணித் தரேன் அபு ” என்றார் சிரித்துக்கொண்டே.
“சரிமா” என்று சிரிப்புடன் சென்றாள். செல்லும் அபுவைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு சமையல் அறைக்குச் செல்லப் போனார் மேகலா.
அபுவின் சிரிப்பு நிலைக்குமா??? அபு ஆசைப்பட்ட ரசகுலா அவளுக்கு கிடைக்குமா??? நடக்கும் சம்பவத்தினால் அபுவின் மனம் எப்படி மாறப்போகிறது??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..
💗வரமாய் வருவேனடி💗……