இரண்டு நாட்களாக சிவா அலுவலகத்துக்கு வராதது பிரியாவுக்கு வருத்தமளித்தாலும், அமருக்கு பிடித்து தான் இருந்தது. சிவா தன் காயத்தை பற்றி சொல்லவில்லை போலும். சொல்லியிருந்தால் பிரியா மேலும் வருத்தப்பட்டு வேலையில் அதை காட்டியிருப்பாள்.
இப்போது அவள் தெளிவாக இருக்க, அதுவே அமருக்கு போதுமானதாக இருந்தது. வேலையும் தடையில்லாமல் நடந்தது.
சிவா பிரியா கேட்ட போது வக்கீலை தேடி அலைவதாக பொய் சொல்லிவிட்டான். அவனுக்கு பிரியாவிடம் முன்பு போல் உண்மையாக இருக்க முடியவில்லை. அவளிடமிருந்து ஒரு விலகல் தானாகவே வந்து விட்டது.
சண்முகி வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதுவும் வருத்தமாக இருந்தது.
கடன் கொடுத்தவர்கள் வேறு மேலும் ஒரு முறை பணத்தை நினைவு படுத்தி விட்டார்கள்.
எல்லாம் குழப்பத்தில் போய்க்கொண்டிருக்க, எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி வந்து சேர்ந்தது.
✦
வீட்டுக்கு வந்ததில் இருந்து அமைதியாக இருந்த கணவனை புரியாமல் பார்த்தார் கோதாவரி.
“எதாவது பிரச்சனையா?” என்று கோதாவரி கேட்க, நாதினியும் தந்தையை திரும்பிப் பார்த்தாள்.
“நேத்து பாண்டியனுக்கும் சிவாவுக்கும் ஆக்ஸிடென்ட் ஆக பார்த்துச்சாம்”
நாதினியின் கையில் இருந்த பேனா கீழே விழுந்தது.
“நாராயணா…” என்று கோதாவரி வாயில் கைவைத்தார்.
“என்னப்பா ஆச்சு?” என்று பதறிப்போனாள் நாதினி.
நடந்ததை சொன்னவர், “ஒரு நிமிஷத்துல தப்பிச்சுருக்காங்க.. கேட்டதுல இருந்து மனசே சரியில்ல” என்று வருத்தப்பட்டார் ராமமூர்த்தி.
“கடவுளே.. இப்படி ஏன் அந்த குடும்பத்துக்கு அடி மேல அடி விழுது? உங்க தங்கச்சி என்ன தான் பண்ணுறா? ஜாதக தோசம் எதாவது இருக்கானு பார்த்து தொலைய வேண்டியது தான?”
“அடிபடலயேபா?” என்று நாதினி கேட்க, “பெருசா எதுவும் இல்லனு தான் சொல்லுறாங்க.” என்று பதிலளித்தார்.
“புள்ளைங்களுக்கு ஒன்னுமாகாம கடவுள் தான் காப்பாத்தனும்” என்று கோதாவரி கடவுளை சரணடைய, நாதினிக்கு கண்கள் கலங்கி விட்டது.
பாடங்களை மூட்டை கட்டி விட்டு அறைக்குச் சென்று விட்டாள். இப்போது கடைசி தேர்வு நேரம். முதுகலை பட்டம் படித்துக் கொண்டிருந்தாள்.
படிப்பின் மீது கவனம் சிதறி விட சிவாவுக்காக வருந்தினாள். நாளை தேர்வை முடித்து விட்டால் போதும். நிம்மதியாக இருக்கும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, இப்போது மனம் காதலனுக்காக வருந்தியது. அந்த வருத்தத்தை தன் தோழியிடம் சொல்லி புலம்ப ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் தேர்வு முடித்ததும் வெளியே வந்த நாதினியின் தோழி விசயத்தை கேட்டு ஆறுதல் சொன்னாள்.
“இப்படி ஒன் சைடாவே லவ் பண்ணிட்டு இருக்கதுக்கு பேசாம வீட்டுல சொல்லிடேன்டி.. சேர்த்து வைப்பாங்க..”
“ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாதுடி.. சொல்லி வருத்தப்படுறத விட சொல்லாமலே போகட்டும்..” என்று நாதினி சொல்லி விட, இது அவளது தோழிக்கு சம்மதமாக இல்லை.
உடனே ஒரு முடிவுக்கு வந்தாள். இது வரை படிப்பு கல்லூரி என்று வாழ்க்கை போனது. இனியாவது தன் தோழி சந்தோசமாக இருக்கட்டும் என்று நினைத்தவள், நாதினியின் அக்கா நதியாவின் காதில் விசயத்தை போட்டாள்.
நாதினியின் தோழி கணேஷின் தங்கை. அவன் அறிவுரைப்படி செய்ய, நாதினியின் காதல் அவளது அக்காவுக்கு தெரிந்து விட்டது.
கணேஷ் அமர் சொன்னதை தான் செய்தான்.
“அவனோட மாமா மகள் அவன ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருக்காளாம்”
“அவங்க வீட்டுல லவ் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டாங்களா?”
“அதெல்லாம் ஒத்துக்குவாங்க.. அவளோட அக்காவுக்கு லவ் மேரேஜ் தான் நடந்தது.”
“அப்ப அவளோட லவ்வ அவ அக்கா கிட்ட சொல்லனும்”
“சொன்னா? அந்த ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாது”
“ஆகனும். ஆகும்.. அந்த பொண்ணு பேரென்ன?”
“நாதினி.. என் தங்கச்சியோட ஃப்ரண்ட் தான்”
“வாவ்! இது பெஸ்ட் ஆச்சே.. அப்ப உன் தங்கச்சி கிட்ட சொல்லி அவ லவ்வ அவ அக்கா கிட்ட சொல்ல சொல்லு. நாதினி அழுறா.. அவ குடும்பத்துக்காக பார்க்குறானு சென்டிமெண்டா பேசச் சொல்லு. ஏற்கனவே லவ் பண்ணி கல்யாணம் பண்ணவ.. கண்டிப்பா தங்கச்சி லவ்க்கு சப்போர்ட் பண்ணுவா. அவளே குடும்பப் பகைய கூட தீர்த்து வைக்க வாய்ப்பிருக்கு. அப்படி தீர்த்துட்டா.. நாதினி தான் சிவராமனோட பொண்டாட்டி.. அத யாராலயும் மாத்த முடியாது”
“இதுல ஒன்ன மறந்துட்ட.. நாதினி வீட்டுல ஒத்துக்கிட்டாலும்.. சிவா ஒத்துக்கனுமே? அவன் பிரியாவ இல்ல லவ் பண்ணுறான்?”
“பிரியாவ அவனே வேணாம்னு சொல்லுவான். சொல்லுற அளவுக்கு அவன தள்ளனும்”
“எப்படி?”
“இப்ப அவனோட பெரிய பிரச்சனை பணப்பிரச்சனை.. நாதினிய கல்யாணம் பண்ணா.. அவளுக்காக வரப்போற வரதட்சனை அவன் கடன தீர்க்கும். குடும்பம் ஒன்னு சேரும். நாதினியோட அப்பா அரசியல் செல்வாக்கோட வேற இருக்காரு. அவரு தயவு கண்டிப்பா அந்த குடும்பத்துக்கு வேணும். இது எல்லாமே சிவாவோட கல்யாணத்தால நடக்கும்னா அவன் பிரியாவ வேணாம்னு சொல்லிடுவான்”
“சொல்லலனா?”
“பிரியாக்கு அவன விட நான் முக்கியம்னு காட்டுவேன். அந்த நிமிசம் அவன் காதல் உடையும். அவன் வாயாலயே பிரியாவ வேணாம்னு சொல்லுவான். அவ என் கிட்ட வந்துடுவா. சொல்ல வைக்கிறேன்”
“எல்லாம் நடந்தா சரி” என்ற கணேஷ் இப்போது தங்கையின் உதவியுடன் நாதினியின் அக்கா நதியாவிடம் விசயத்தை சேர்த்து விட்டான்.
நதியா எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தாலும் பிறகு நாதினியின் மனதை புரிந்து கொண்டாள். தங்கையின் காதல் விசயத்தை இனி தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கொடுத்தாள்.
அப்போதே பெற்றோர்களை தேடி வந்து விசயத்தை சொல்லி விட்டாள். தேர்வு நன்றாக எழுதி முடித்ததால் நாதினி வீட்டிலேயே இருக்க, நதியா காதல் விசயத்தை சொல்லி விட்டாள்.
கோதாவரி மகளை அதிர்ச்சியோடு பார்க்க, ராமமூர்த்திக்கு இதை நம்ப முடியவில்லை. நாதினி அழுது கொண்டே இருந்தாள். இப்படி விசயம் உடையும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நதியா அவளுக்கு துணையாக இருந்தாள்.
“சிவா நல்ல பையன். அவனுக்கு கட்டி வச்சா நல்லா இருப்பா” என்று நதியா வாதம் செய்ய, “அந்த குடும்பத்துக்கும் நமக்கும் ஆகாதே” என்று கோதாவரி மறுத்தார்.
“உங்க பகைக்காக அவ வாழ்க்கைய இழக்கனுமா? இப்ப அந்த வீட்டுல ஏகப்பட்ட கஷ்டம் பிரச்சனை.. நாம நினைச்சா உதவலாம். அவங்க கூட பகைய மறந்து பேச இது ஒரு வாய்ப்பு.. நீங்க பேச முடியாதுனா சொல்லுங்க.. இவளுக்காக நான் பேசுறேன்..”
நதியா தீர்மானமாக சொல்லி விட பெற்றோர்கள் யோசிக்க ஆரம்பித்தனர்.
✦
சிவா காயத்தில் இருந்த கட்டை பிரித்ததும் அலுவலகம் வந்து விட்டான்.
வந்ததும் மனம் பிரியாவை தேட அவளை பார்க்கச் செல்ல, அன்று பிரியாவும் அமரும் ஒன்றாக காரில் வந்து இறங்கினர்.
பார்த்ததும் அவனது உள்ளத்தில் இருந்த சந்தேகம் பயங்கரமாக வளர்ந்தது.
அமரிடம் எதையோ கேட்டு சிரித்துக் கொண்டே பிரியா உள்ளே சென்று விட்டாள். சிவாவை கவனிக்கவில்லை. அமர் பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.
சிவா மனம் உடைந்து போக அமர்ந்து விட்டான். நாளுக்கு நாள் பிரியா அமரோடு நெருங்குவது நன்றாக தெரிந்தது. அமரிடம் அவனால் இப்போது கூட எந்த மாற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அமர் பிரியாவை தொட்டுப்பேசியது இல்லை. அவளோடு அவனை பார்க்கும் போது யாருக்கும் எந்த சந்தேகமும் வந்தது இல்லை. அப்படிப்பட்டவனை சிவா தான் அதிகம் சந்தேகப்படுகிறான்.
தன் சந்தேகம் தவறோ என்று அவன் நினைத்தாலும் மனம் அவன் பேச்சை கேட்பது இல்லை.
உணவு இடைவேளையில் பிரியா சிவாவை பார்த்து விட்டாள். புன்னகையுடன் அவனை நோக்கி நடந்தவள், அமர் அழைக்கவும் திரும்பினாள்.
அமர் எதோ சொல்ல சிவாவை அப்படியே மறந்து விட்டு அவனோடு வெளியேறி விட்டாள்.
அனைத்தையும் பார்த்திருந்த சிவாவின் மனதில் இருந்த காதல் சிதைய ஆரம்பித்தது. பிரியாவுக்கு அவன் இனி தேவையில்லை. அமர் மட்டும் போதும் என்று தெரிந்த போது அவன் துடித்தான்.
அவள் அவனுக்கு தான் வேண்டும் என்று போராட நினைத்தான். அவளை தன்னோடு அழைத்துச் செல்ல துடித்தான். ஆனால் எதற்கும் காலம் வழி விடவில்லை. அசையாமல் கண்கள் கலங்க நின்று விட்டான்.
தொடரும்.