Loading

அத்தியாயம் 13

நாட்கள் மெல்ல மெல்ல நகர, பரிதியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக ஆரம்பித்து இருந்தன.

இரண்டு வாரம் மருத்துவமனையில் இருந்தவர்கள், அதன் பிறகு வீட்டிற்கு திரும்பினர்.

கை மற்றும் காலுக்கு அவ்வப்போது, மருத்துவர் வந்து பிஸியோ பயிற்சி கொடுத்து விட்டுச் சென்றார்.

அதன் பலனாக அவனுக்கு கையை கொஞ்சம் ஓரளவுக்கு அசைக்க முடிந்தது.

காலில் மட்டும் இன்னும் ஒரு மாத காலமாவது ஆகும் என்று கூறி இருந்தார்.

அன்று ஒரு நாள், அலுவலத்தில் இருந்து திரும்பிய இனியன் நேராக தன் அண்ணனை காணச் சென்றான்..

பரிதியோ உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும், பிறகு வரலாம் என்று எண்ணி திரும்பிப் போக ஆரம்பிக்கையில், “இனியா..” என்று தன் அண்ணனின் குரல் கேட்டு திரும்பினான்.

“என்னடா வந்துட்டு ஒன்னும் பேசாம போற..” பரிதி கேட்டதற்கு,

“உங்கிட்ட பேசத்தான் வந்தேன். ஆனால் தூங்கிட்டு இருக்கியேனு நினைச்சி சரி அப்புறம் வரலாம்னு கிளம்புனேன்..” என்றவன் கட்டிலுக்கு அருகில் அங்கு இருந்த சேரை இழுத்து போட்டு அமர்ந்தான்.

“சும்மா தான்டா படுத்துட்டு இருந்தேன். சரி சொல்லு.. ஆபீஸ்ல ஒர்க் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு. அப்புறம் பேக்டரிலையும் புரோடக்ஸன் எல்லாம் சரியா போகுதா..” இரண்டு இடங்களிலும் வேலை சரியாக நடக்கிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான்.

“ரெண்டு இடத்துலயும் பார்க்க கொஞ்சம் சிரமமா தான் இருக்கு. நீ திரும்ப வர்ற வரைக்கும் கொஞ்ச அங்குட்டும் இங்குட்டும் மாத்தி மாத்தி போய்கிட்டு தான் இருக்கும். பார்த்துக்கலாம். அது பிரச்சனை இல்லை..” என்றான் தம்பிக்காரன்.

“ம்ம்ம்.” என்று பெருமூச்சுடன் கூறிய பரிதியிடம்,

“ண்ணா.. இது உன்னோட திங்ஸ்.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொடுத்தாங்க. அதை வாங்கி வச்சேன். அதுக்கு அப்புறம் உங்கிட்ட கொடுக்க மறந்துட்டேன்..” என்றவன் அவனுடைய அலைபேசி, பர்ஸ் மற்றும்  அவன் அணிந்து இருந்த பொருட்கள் அடங்கிய ஒரு கவரையும் சேர்த்துக் கொடுத்தான்.

அதை வாங்கி ஓரமாக வைத்தவன், “போன் ஒர்க் ஆகுதான்னு பார்த்தியா..” என்று பரிதிக் கேட்க,

“இல்லனா.. நான் பாக்கல.. சார்ஜ் போட்டு வைக்குறேன்.. அப்புறம் பார்த்துக்கோ..” என்றவன் அவனது கட்டிலுக்கு அருகிலேயே இருந்த சுவிட்ச் பலகையில் அதனை வயருடன் இணைத்து  வைத்தான்.

மற்றுமொரு கவரை பிரித்துப் பார்க்க, அதில் அவன் அணிந்து இருந்த கை கடிகாரத்தை பார்க்க, அது கண்ணாடி மேல் உடைந்து இருந்தது.

“இதை மாத்தணும் கடையில் கொடுத்து,..”  என்றவன் ” அவன் கழுத்துச் சங்கிலியை எடுக்க, அதனுடன் மற்றும் ஒரு சங்கிலி இணைந்து வருவதைப் பார்த்த, பரிதியோ யோசனையுடன், ” இது யாரு செயின்.. ” என்று தம்பிக்காரனை பார்த்துக் கேட்டான்.

“உன்னோடது இல்லையா… இது எல்லாமே நான் உன்னோடதுனு தான் நெனச்சிட்டு இருந்தேன்..” என்றான் அவன்.

அதை தனியாக எடுத்துப்பார்க்க, “இந்த மாதிரி நான் எப்போடா போட்டு இருந்தேன். இது தான் என்னோட செயின்.. இது யாருதுன்னு தெரியல..” என்றவன்,

அந்த செயினில் இருந்த டாலரைப் பார்க்க, அது இதய வடிவில் இருந்தது. அதுவும் அதை இரண்டாக பிரித்துப் பார்க்கும் படி வடிவமைக்கப் பட்டு இருந்தது.

இனியனோ, “ஆமா.. இது உன்னோடது இல்லதான். அப்போ இது யாருது…” என்ற குழம்பியவன், அந்த குழப்பதுடனே, “அன்னைக்கு நான் ஹாஸ்பிடல் வரும் போது, அதுக்கு முன்னாடியே உன்னோட திங்ஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க போல. அந்த பொண்ணு கிளம்பும் போது கொடுத்ததை வாங்கி வச்சேன். அதுக்கு அப்புறம் நான் இதை ஓபன் பண்ணியே பாக்கல..” என்றான் தம்பிக்காரன். 

இப்பொழுது தான் பரிதிக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது.

“இது அந்த பொண்ணோட செயினா தான் இருக்கனும்.. ” என்றான் அதனைப் பார்த்தவாரே..

“எப்படி சொல்ற..” இனியன் கேட்டதற்கு,

“அன்னைக்கு என்னை ஹாஸ்பிடல்ல சேக்கிறதுக்கு முன்னாடி நான் கடைசியா பார்த்தது அந்த பொண்ணோட முகம் தான். அந்த பொண்ணு அழுதது தான் இப்போ வரைக்கும் என் மூளைக்குள்ள பதிஞ்சி இருக்கு. கொஞ்ச நேரத்துல நான் திரும்பவும் மயக்கத்துக்கு போய்ட்டேன். ஆனால் அந்த பொண்ணு பேசுறது என் காதுல கேட்டுட்டே தான் இருந்துச்சு.எனக்காக தவிச்ச தவிப்பு இப்போ வரைக்கும் என் மனசை விட்டு அகலல…

அப்போ என் கைல ஏதோ பிடிச்சி இழுத்த போல இருந்துச்சு. அது என்னனு அப்போ புரியல. இப்போதான் புரியுது.. ” என்றான் தன் கையில் இருந்த சங்கிலியைப் பார்த்தவாறு..

“ஓஹோ…” என்று இழுத்தவாரு கேலியாக சொன்னான் தம்பிக்காரன்.

தம்பிக்காரனின் குரலில் தெரிந்த வித்தியாசத்தை உணர்ந்து அண்ணன்காரன் அவனைப் பார்க்க, அவனோ, “சரிதான்.. இது எங்கப் போய் முடிய போகுதுனு தெரியலயே..” என்றான் அண்ணனை பார்த்தும் பார்க்காமலும்.

“ஆனால் அண்ணா, அந்த பொண்ணு என்கிட்ட கொடுக்கும் போது, மறந்துருப்பாங்கனு நினைக்கிறன். பட் ஒரு வேளை அவங்க திரும்பி வந்து இருக்கலாம். ஆனால் நம்ம அங்க இல்லையே.. ப்ச்.. மிஸ் பண்ணிட்ட..” என்றான் அண்ணனைப் பார்த்து கவலைப்படும் தோரணையில்.

இப்பொழுது அந்த இதய வடிவ டாலரைப் பிரித்து பார்க்க, அதில் ஒரு பக்கம் ஒரு ஆணின் படமும், இன்னொரு பக்கம் ஒரு பெண்ணின் படமும் இருந்தது.

“கண்டிப்பா தேடி வந்து இருப்பாங்க. ஒரு வேளை, இது  அந்த பொண்ணோட அம்மா அப்பாவா கூட இருக்கலாம். அவங்க நியாபகமா போட்டு இருக்கலாம் இதை.. ” என்றான் யோசனையாக.

“எப்படி சொல்ற.. இது வேற யாராவது கூட இருக்கலாம்.. ” என்ற இனியனின் கூற்றிற்கு,

இல்லை என்பதாய் மறுப்பாக தலை அசைத்தான் பரிதி.

“இதைப் பாரு…” தம்பியிடம் காட்ட, அவனும் வாங்கி அதைப் பார்த்தான்.

“அதுல, ரெண்டு போட்டோவுமே பிளாக் அண்ட் வைட்ல இருக்கு. எப்படியும் ஒரு 25 அல்லது 30 வருசத்துக்கு முன்னாடி எடுத்து இருக்கலாம். அதை வச்சி தான் சொன்னேன். அதுவும் இல்லாம அந்த பொண்ணோட முகம் எனக்கு நியாபகம் இருக்கு. அங்க அந்த ஆண் நபர் போட்டோ கண்டிப்பா அப்பாவா தான் இருக்கனும். முக ஜாடை ஒத்துப் போகுது..” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான் அண்ணன் காரன்.

“ம்ம்ம்ம்.. இது எல்லாம் சரி தான். அது எதுக்கு நமக்கு.. அந்த பொண்ணு எனக்கு கால் பண்ணும் போது இருந்த நம்பர் இருக்கும்னு நினைக்கிறேன்.
நான் வேணும்னா, அந்த பொண்ணுகிட்ட பேசி இந்த செயினை கொடுத்துருறேன்..” என்று பரிதியிடம் இருந்து அந்த செயினை வாங்கப் போக,

“அது எல்லாம் வேணாம். நான் எப்படி கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிறேன்..” என்றவன் அந்த சங்கிலியை தன் கைகளுக்குள் பத்திரப் படுத்திக் கொண்டான்.

“ரைட்டு.. கதை வேற மாதிரி போகுது. ஆல் தி பெஸ்ட் ண்ணா..” என்றவன் ஒரு சிரிப்புடனே அங்கிருந்து கிளம்பிப் போகையில், அவனது அலைபேசி அழைக்க, யார் என்று பார்க்க, அவனது பெண் தோழி ஷில்பா.

“அய்யயோ.. இவளா…” என்று பெயரைப் பார்த்து புலம்புவதை பார்த்த பரிதி,”என்ன டா..” என்று  கேட்கையில் “இது ஒரு இம்சை ண்ணா.. நான் பார்த்துகிறேன்.” என்று கூறி விட்டு வெளியேறினான்.

பரிதியும் புன்னகையுடன், “அன்னைக்கு மிஸ் பண்ணிட்டேன். இனி மிஸ் பண்ண மாட்டேன்..” என்றான் தன் கைகளுக்குள் இருந்த அந்த செயினைப் பார்த்து…

***************

இதற்கு இடையில் நிரஞ்சனாவும் விக்ரமை ஒரு வாரம் கழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு கண் கட்டை பிரித்து, சில நாட்களுக்கு அவனுக்கு கண்ணில் தூசி எதுவும் பட விடாமல் பார்த்துக் கொள்ளும் படியும், அதிகமான வெளிச்சம் எதையும் பார்க்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறி இருந்தார்.

வீட்டிற்கு வந்த பிறகு விக்ரம், “அக்கா.. ஏன் க்கா ஒரு வாரமா என்கூட சரியா பேசல. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கிளம்புற முன்ன வரைக்கும் நல்லா தான் பேசிட்டு இருந்த. அதுக்கு அப்புறம் நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்றியே தவிர வேற எதுவும் என்கிட்ட பேச மாட்டேன்ற. எனக்கு ஒரு மாதிரி இருக்குக்கா..” என்றான் வருத்தத்துடன்.

அவள் தன் தாய் தந்தையின் நினைவாக போட்டு இருந்த சங்கிலி, தன் கை விட்டுப் போனதில் இருந்து அவளுக்கு, தாயும் தந்தையும் கூடவே இல்லாவிட்டாலும், இதன் மூலம் தன்னுடனே இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் இப்பொழுது இருவரும் தங்களை மீண்டும் விட்டுப் போன உணர்வு அவளுக்கு ஏற்பட்டதால்,  அதன் நினைவிலேயே இருந்தவள்,  தன் தம்பியிடம் எப்பொழுதும் போல இல்லாமல் இருந்ததை கவனிக்கத் தவறி இருந்தாள் பெண்ணவள்.

“அது வேற ஏதோ நெனப்புல இருந்துட்டேன் விக்ரம். மத்தபடி ஒன்னும் இல்லை. நீ எதுவும் நெனச்சிக்காத அக்கா உங்கிட்ட பேசலனு.. இனி நீ திரும்பவும் காலேஜ் போகணும். விட்ட படிப்பை திரும்பவும் கன்டினியூ பண்ணனும். படிச்சி ஒரு பெரிய நிலைமைக்கு வரணும். அதைப் பத்தி மட்டும் யோசி.. இதை எல்லாம் நீ உன் மைண்ட்ல போட்டு குழப்பிக்காத.. சரியா..” என்றிட, அவனும் சரி என்று கூறினான்.

“அக்கா.. எப்போ இருந்து காலேஜ்க்கு போறது.. ” என்று கேட்டிட,

“ஒரு மாசத்துல போய்டலாம். ஆனால் இப்போ காலேஜ் ஆரம்பிச்சு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகிருச்சு. இப்போ பாதியில போனா சேப்பாங்களானு வேற தெரியல. அதை போய் விசாரிக்கணும். நீ கவலைப் படாத. எல்லாம் நல்ல படியா நடக்கும். நான் பார்த்துகிறேன்…” என்று தன் தம்பியின் தலையை லேசாக கலைத்து விட்ட படி கூறினாள் பேதையவள்.

 

நித்தமும் வருவாள்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்