Loading

அத்தியாயம் 12 :

ராயப்பன் பாரிக்கு முன்… மேசையை கடந்திருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அறையிலும் அவருக்கு வியர்த்து வடிந்தது. தோளில் கிடந்த கட்சித் துண்டினை எடுத்து நெற்றி கன்னம் என்று ஒற்றி எடுத்தார்.

அவரின் பதட்டம் கண்டு கண்ணாடி குவளையில் நிரம்பியிருந்த நீரினை மூடியை அகற்றிவிட்டு அவர் முன் நகர்த்தி வைத்தான் பாரி.

அப்போது அவருக்கு மிகவும் தேவையாக இருக்கவும் மறுக்காது முழு நீரையும் ஒரே மடக்கில் வாயில் சரித்து வெறும் குவளையை மேசையில் வைத்தவரின் கையில் அப்படியொரு நடுக்கம்.

ஆணையர் அலுலகத்தில் உள்ள மீட்டிங் அறையில் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்திருந்தான் பாரி வேந்தன். தன்னுடைய காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க இருந்தவனை ஆணையர் குமார் தான் தடுத்திருந்தார்.

“அவங்க பெரிய பதவியில் இருப்பவங்க, அவங்களை மத்த குற்றவாளி மாதிரி நடத்த முடியாது பாரி” என்றவர் அதற்கான ஏற்பாட்டைத் தன்னுடைய அலுவலகத்திலேயே ஏற்படுத்திக் கொடுத்தார்.

“இப்போலாம் ப்ரிசன்லே பல வசதிகள் இருக்கும்போது இது பெரிய விஷயமில்ல” என குமாருக்கு கொட்டும் வைத்திருந்தான் பாரி.

தண்ணீர் உள்ளே சென்றதும் சற்று தெம்பாக உணர்ந்தவர் அமிர்தாவின் அலைபேசியை பாரியிடம் கொடுத்தார்.

“இதை இப்போ நான் கேட்கலயே” என்றவன் சிறு தோள் குலுக்களுடன் எழுந்து நின்றான். அலைபேசியை எடுத்து ஜென்னிடம் கொடுத்தான்.

நடந்தவாறே ராயப்பனின் முதுகுக்கு பின்னால் வந்து நின்றவன்…

“சொல்லுங்க ராயப்பன்… யாரை தப்பிக்க வைக்க உங்கமேல என் பார்வைப்படுற மாதிரி தெளிவா நடிக்கிறீங்க?”

மீண்டும் அதே கேள்வியை திருப்பிக் கேட்டிருந்தான்.

“யா… யாரை…”

அவர் வார்த்தை வராது திணறிட… ரித்தேஷின் தந்தை மற்றும் முன்னால் காவல்துறை அமைச்சருமான சங்கரன் கணபதியுடன் அங்கு வந்தார்.

சங்கரனை ராயப்பன் எதிர்பார்க்கவில்லை.

ரித்தேஷின் முழு கவனமும் தந்தையின் மீதுதான் அதனாலேயே சங்கரன் தன்னை வெளிப்படுத்தாது அனைத்தையும் ராயப்பன் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறார்.

“இப்போ சொல்லலாமே ராயப்பன்” என்ற பாரி சங்கரனை பார்த்தவாறே கேண்டியை பிரித்து சுவைத்தான்.

“அன்னைக்கு நகைக்கடையிலே நான் உங்களை பார்த்துட்டேன் சங்கரன். எனக்கு பின்னால இருந்த உங்களை நான் பார்த்துடக் கூடாதுன்னு என்னைத் திரும்பி பார்த்துட்டே வேகமா கடையை விட்டு வெளியேறின நீங்க எனக்கு முன்னாலிருந்த கண்ணாடியை பார்க்கத் தவறிட்டிங்க” என்றவன்…

“இப்போ சொல்லுங்க என்கிட்ட என்ன சொல்லணும் நீங்க?” என்றான்.

ராயப்பனும் சங்கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க எதுவும் சொல்லவில்லைன்னாலும் நாட் ஆன் இஷ்யூஸ். என்னால இப்போவே குற்றவாளி யாருன்னு சொல்ல முடியும்” என்றவனின் பார்வையில் அத்தனை கூர்மை.

அதன் பின்பும் மறைப்பதில் எவ்வித பலனுமில்லையென ராயப்பன் தன் எண்ணத்தைக் கூறினார்.

ராயப்பனின் பயம் மற்றும் பதற்றத்திற்காக ஜென்சி மற்றும் கணபதியிடம் பாரி என்ன காரணம் கூறியிருந்தானோ அதையேதான் ராயப்பனும் சொல்லியிருந்தார்.

“இது அல்ரெடி நான் கெஸ் பண்ணது தான். புதுசா எதாவது சொல்லுங்க” என்றவனின் பார்வை சங்கரனிடம்.

“என் மகன் மீதுதான் எனக்கு சந்தேகம் மிஸ்டர்.பாரி” என்றார் உணர்வுகள் துடைத்த குரலில்.

“என்ன சந்தேகம்? எப்படி?” என்ற பாரி “முதலில் நடந்ததை அப்படியே சொல்லுங்க” என்றான்.

ராயப்பன் சங்கரனை பார்த்தார்.

முதலில் சங்கரனே பேசினார்.

“அமிர்தா இறப்பதற்கு ரெண்டு நாளைக்கு முன்ன…”

அன்று அமிர்தாவுக்கும் ரித்தேஷிற்கு பயங்கர வாக்குவாதம். எப்போதும் அமிர்தாவிடம் குழைந்து காதலாக கனிந்து மட்டுமே பார்த்திருந்த மகனின் கோபத்தை அன்று தான் சங்கரன் தன் காதுகளால் கேட்டார்.

அமிர்தாவும், ரித்தேஷும் தங்களது அறையில் போட்ட சண்டை வீட்டிற்குள்ளிருந்த சங்கரனுக்கு நன்கு கேட்டது.

சண்டையின் சாராம்சம் தான் புரியவில்லையே தவிர… வார்த்தைகள் நன்கு தெளிவாக காதில் விழுந்தது.

ரித்தேஷ் கோபமாக எதையோ மறுத்து வாதம் செய்திட… அமிர்தா முடியவே முடியாது தன் தந்தையிடம் இதனை சொல்லியே தீர்வேனென்று தர்க்கம் செய்தது புரிந்தது.

அமிர்தா என்றால் ரித்தேஷுக்கு அத்தனை பிரியம். அது திருமணத்தால் வந்த நேசமென்று அமிர்தா எண்ணியிருக்க… அதற்கு முன்பே ரித்தேஷ் அவளை காதலித்ததை கோபத்தில் சலிப்பாகக் கூறியிருந்தான்.

“நீ இந்த பாடு படுத்துவன்னு தெரிஞ்சிருந்தா உன்னை காதலிச்சிருக்கவே மாட்டேன். உன் அப்பன் கிட்ட உன் காதலை போட்டுக்கொடுத்தும் இருக்க மாட்டேன்.”

அந்த வார்த்தைகள் அமிர்தாவை எவ்வளவு பாதித்ததென்று அவளுக்கு மட்டுமே தெரியும்.

என்ன தான் ரித்தேஷிற்கு உண்மையாக நல்ல மனைவியாக அமிர்தா அன்பாக இருந்தாலும் பாரிக்கு துரோகம் இழைத்துவிட்ட குற்றவுணர்வு அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. அத்தோடு அவ்வுணர்வு தன் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று அவள் உள்ளுக்குள் மருகியது கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது அதற்கு முற்றும் முதல் காரணமும் ரித்தேஷ் எனும் போது இன்னும் அவன்மீது கோபம் அதிகரித்தது. அதில் அவளின் பிடிவாதம் வலுப்பெற்றது.

“என் அப்பாகிட்ட சொல்லி உன்னை உள்ள தள்ளுறேன்” என்றவள் வாக்கியத்தை முடிக்கும் முன் அவளை பளாரென்று ஓங்கி அறைந்தவன்,

மெத்தையில் விழுந்தவளை தூக்கி தன் மேல் சாய்த்து…

“சொன்னா கேளு அமிர்… நீ என் உயிர்டி. உன்னை போய் அடிக்க வச்சிட்டியே!” என்றவன் “ரொம்ப வலிக்குதாடி?” எனக் கேட்டுக்கொண்டே அடித்த அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க முனைந்தான்.

அவன் அதரம் தீண்டும் முன் முகத்தை திருப்பியவளுக்கு அந்நேரம் அவனின் உண்மையான அன்பும் அவளுக்கான அவனின் அந்நொடி வருத்தமும் நடிப்பாகத்தான் தெரிந்தது.

“இனி நடிச்சி என்னை ஏமாத்த முடியாது” என்று சொல்லியவளின் முகத் திருப்பலாலும் சேர்ந்து உண்டான கோபத்தில் மீண்டும் அவன் ஒரு அறை அறைந்திட இம்முறை அவளின் கண்ணீர் அணை உடைத்தது.

முதல் முறை அடியின் சத்தம் கேட்டபோதே அறைக்கு அருகில் வந்து எப்படி உள்ளே செல்வதென்ற தயக்கத்தோடு கைகளை பிசைந்தபடி நின்ற சங்கரன் இம்முறை கதவை திறந்து உள்ளே நுழையும் போது…

ரித்தேஷ்… அமிர்தா தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த அவளின் துப்பட்டாவை அப்படியே சுற்றி வளைத்து இறுக்கியபடி இருந்தான்.

கூடவே,

“சொன்னா கேட்க மாட்டியாடி நீ. இப்போ நீ சாகப்போற. இனி நீயில்லாம நான் எப்டிடி வாழ்வேன்” என்று கேட்டுக்கொண்டே மேலும் இறுக்க… அமிர்தாவின் கண்கள் மேல் சொருகயிருந்த வேளை சங்கரன் ரித்தேஷை பிடித்து இழுத்து தள்ளியிருந்தார்.

“நீயாடா இப்படி?” என்ற சங்கரன் தன்னுடைய மகனை பார்த்து “உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல ரித்தேஷ்” என்று அதீத வருத்தத்துடன் கூறினார்.

“அவளை விடுங்கப்பா” என்றவன் எழுந்து மீண்டும் அமிர்தாவை நெருங்க முயல… மீண்டும் மகனை கீழே தள்ளிவிட்டு அமிர்தாவை பிடித்து வெளியில் இழுத்து வந்தவர்… அவளை அவளது வீட்டில் விட்ட பின்னரே தன் வேகம் குறைத்தார்.

சங்கரனிடம் ராயப்பனுக்கு முப்பது வருட நட்பு. கட்சியில் ராயப்பன் சேரும் போது சங்கரன் அப்போதே சட்டமன்ற உறுப்பினர். எவ்வித பாகுபாடுமின்றி சங்கரன் ராயப்பனின் உண்மைத் தன்மை அறிந்து கட்சியைத்தாண்டி தன்னுடைய நட்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டார். அரசியலின் சூட்சமம் அனைத்தையும் ராயப்பனுக்கு சொல்லிக்கொடுத்ததோடு நல்வழிகாட்டியாகவும் இருந்தார்.

இருவரும் அரசியலில் எப்படியிருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் நேர்மையாக இருந்தனர்.

எதுவும் விளக்கம் கொடுத்தோ அல்லது தன் மகனின் செயலுக்கு பின்னால் நிச்சயம் காரணமிருக்கும் என்று பரிந்து பேசி தங்களுக்குள் மனக்கசப்பு வந்துவிடக்கூடாதென அமிர்தாவை ராயப்பனிடம் ஒப்படைத்துவிட்டு, அழுத்தமாக ஒரு பார்வை மட்டும் பார்த்து சென்றுவிட்டார்.

சங்கரன் வீட்டிற்கு வந்தபோது…

ரித்தேஷ் தீவிர யோசனையில் வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.

சங்கரனை கண்டதும் அவரின் அருகில் ஓடி வந்தவன்…

“அமிர்தா எங்கப்பா?” எனக்கேட்டு அவருக்கு பின்னால் பார்த்தவன் வாசல் வரை ஓடி திரும்பி வந்தான்.

“அய்யோ அப்பா அவளை எங்க விட்டுட்டு வந்தீங்க. என் அமிர் இல்லாம என்னால இருக்க முடியாது தெரியாதா உங்களுக்கு” என்று வெறிப்பிடித்தவன் போல் அவன் கத்தினான்.

“கொலை பண்ண பார்த்தியே… அப்போ ஒட்டு மொத்தமா போயிருப்பாளேப்பா” என்றவர் மேற்கொண்டு எதுவும் பேசாது சென்றுவிட்டார்.

மகனின் இன்னொரு முகம் கொடூரமானதென்று அவனின் சிறு செயலிலேயே தெரிந்துகொண்டவர் மேற்கொண்டு அதனை தெரிந்துகொள்ளும் திராணியின்றி மௌனமாகிவிட்டார்.

“அடுத்த நாளுக்கு மறுநாள் என் மருமகளை நான் பிணமாத்தான் பார்த்தேன்” என்று சொல்லி முடித்த சங்கரன் “அதனாலதான் என் மகன் மீது எனக்கு சந்தேகம்” என்றார்.

அவர் சொல்லி முடிக்கும்வரை எவ்வித குறுக்கீடும் செய்யாத பாரி… சில நிமிட அமைதிக்குப் பின்னர்,

“அன்னைக்கு… அதாவது ரித்தேஷ் அமிர்தா சண்டை நடந்த அந்த நேரம் உங்களைத் தவிர வீட்டில் யாருமில்லையா?” எனக் கேட்டான்.

“வீட்டில் சமையல் செய்யும் இருவரைத்தவிர யாருமில்லை. மத்தவங்கயெல்லாம் சாயங்காலம் ஆறு மணிக்கு போயிடுவாங்க.”

மீண்டும் பாரியிடம் சிறு யோசனை.

“அந்த ரெண்டு பேரும் எத்தனை வருஷமா வேலை பார்க்குறாங்க?”

“ரங்கசாமி அவரு பத்து வருசத்துக்கு மேல இருக்கார். கல்யாணி ஒரு வருசமாத்தான்.”

“இப்போ நீங்க சொல்லுங்க ராயப்பன்.”

அன்று நடந்தது என்ன என்று ராயப்பனுக்குமே இன்று தான் சங்கரன் சொல்லியிருந்தார்.

அவருக்குள்ளும் அக்கணம்… அவர்களின் சண்டைக்கான காரணம் என்னவாக இருக்குமென்கிற யோசனை தான். அதனால் பாரி கேட்டது விளங்காது விழித்தார்.

“அவங்களுக்கு எதாவது குடிக்க கொடுங்க அங்கிள்” என்ற பாரி அவர்களுக்கு சிறு இடைவெளி கொடுத்து வெளியேறினான்.

******

அவ்வறையை விட்டு வெளியில் வந்த பாரி… ஜென்னிடம் கொடுத்த அமிர்தாவின் அலைபேசியை வாங்கிக்கொண்டு தனியாக நகர்ந்து வந்து சுவற்றில் ஒரு கால் மடக்கி வைத்து சாய்ந்து நின்றவனாக அலைபேசியை நோண்ட ஆரம்பித்தான்.

ஜென்னிற்கு பாரியின் மீதே கண்.

அவனின் முகத்தை வைத்து ஏதேனும் அறிய முடிகிறதா என்று.

அது வேறு யாருடைய அலைபேசியாக இருந்தாலும் ஜென்னிற்கு இந்தளவிற்கு கவலை தோன்றியிருக்காது. பாரி இவ்வழக்கிற்காகத்தான் வருகிறான் என்று தெரிந்தது முதலே அவளுள் நெருடல் தான்.

எங்காவது ஓர் மூலையில் அமிர்தாவின் மீதான சாப்ட் கார்னரில், இதுவரை தமிழை பிரிந்திருப்பதற்கு பூவின் மீதான நட்பாக அவன் சொல்லுவதை யாரும் ஏற்காத நிலையில்… இன்னமும் தன்னால் தன்னுடைய முதல் காதலான அமிர்தாவை மறக்க முடியவில்லை என்று சொல்லிவிடுவானோ என்கிற பயம் அவளுள்.

ராயப்பனிடம் பேசிய அன்றே பாரிக்கு அமிர்தாவின் நினைவே இல்லையென தெரிந்த போதும்… காதல் விடயத்தில் மட்டும் யாரையும் கணிக்க முடியாது என்பது ஜென்னின் எண்ணமாக இருந்திட… அமிர்தாவின் இறப்பு விடயத்தில் குற்றவாளியை கண்டறிவதில் பாரி காட்டும் தீவிரத்தை ஜென்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

அப்போதும் இப்போதும் பாரிக்கும் தமிழுக்கும் இடையில் தேவையில்லாது குறுக்கே வருவதே அமிர்தாவின் வேலையாக இருப்பதாகத்தான் ஜென்னிற்கு தோன்றியது.

ஆனால் ஜென் மறந்த ஒன்று… பாரி ஒரு காவல்துறை அதிகாரியாக அமிர்தாவின் இறப்பை ஒரு வழக்காக மட்டுமே பார்க்கிறான் என்பது.

பாரி வழக்குகளை கையாளும் விதம் முன்பே அறிந்திருந்தால்… எல்லா குற்றவாளிகளையும் பிடிப்பதற்கு காட்டும் ஆர்வத்தைதான் இவ்வழக்கிலும் காட்டுகிறான் என ஜென்னிற்கு புரிந்திருக்கும்.

அதுமட்டுமில்லாது அமிர்தாவின் அலைபேசியில் எப்படியும் அவளது புகைப்படம் அத்தோடு ரித்தேஷுடனான புகைப்படங்கள் இருக்கலாம். அவற்றை பார்க்கும்போது பாரிக்கு முன்னால் காதல் வலியை கொடுக்குமோ என்று நண்பனின் மீது அக்கறையும் எழுந்தது.

அதனால் அவளின் முழு கவனமும் பாரியின் மீதே இருந்தது.

அந்நேரம் ஜென்னின் அலைபேசி ஒலித்தது. அவளின் கருத்தில் அவ்வழைப்பு பதியவில்லை.

“ஜென்… இட்ஸ் யூவர் மொபைல்.”

சற்று இடைவெளியில் இருந்த பாரி சொல்லிய பிறகே ஜென் தன்னிலை மீண்டும் அலைபேசியை எடுத்து திரை பார்த்தவள் கண்கள் சாசர் போல் விரிந்தது.

அவளால் நம்பவே முடியவில்லை.

ஒருவருடத்திற்கு மேலான பின்னர் அவியின் அழைப்பு அவளுக்கு.

நெஞ்சம் படபடத்தது. திரை மீதிருந்த விரல் நடுங்கியது.

உடலில் மெல்லிய பதட்டம் ஓட… சற்று தள்ளாடி சுவற்றில் சாய்ந்து நின்றாள். அவளையே கவனித்த பாரி இரண்டே எட்டில் அவளிடம் விரைந்து வந்து…

அவளைத் தாங்கி நின்றான்.

“யாரு ஃபோன்ல?”

பாரியின் கேள்விக்கு அவனிடம் அலைபேசியை காண்பித்தவள் “அவி” என்றாள்.

“அவன் தானே அட்டெண்ட் பண்ணு. இதுக்கு எதுக்கு ஷிவர் ஆகுற?” என்று பாரி சொல்லும்போதே அழைப்பு நின்று பாரியின் அலைபேசி ஒலித்தது.

தன்னுடைய அலைபேசியை பாக்கெட்டலிருந்து எடுத்தவன்…

“இப்போ எதுக்கு ரெண்டு பேருக்கும் கூப்பிட்டு இருக்கான்” என்றவாறே அதனை ஏற்று “ஹலோ” என்றான்.

“பாரி… அவ இல்லையா?”

“யாருடா?” தெரிந்துகொண்டே வினவினான்.

“ப்ளீஸ் பாரி.”

“என்னன்னு சொல்லு நான் சொல்லிடுறேன்.”

“உன்கிட்ட சொல்ல முடியாது.”

“அப்போ என்னாலும் சொல்ல முடியாது.”

“உனக்கு நான் சொல்லுறது பிடிக்காது பாரி. உனக்கு கோபம் வரும்.”

“ஜென் இங்கில்ல அவி. கேஸ் விஷயமா வெளிய போயிருக்கா(ள்).”

‘அப்படியென்ன இவன் சொல்வது தனக்கு கோபம் வரும்’ என்பதை தெரிந்துகொள்ளவே அருகிலேயே ஜென் நின்றபோதும் இல்லையெனக் கூறினான்.

ஜென் அவனது பொய்யில் அவனை முறைத்தாள்.

“பாரி தமிழ் மயங்கிட்டாடா. ஹை…”

“வாட்.”

அவி முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள் பாரி அதிர்ந்திருந்தான். தானாக அவனின் இதயம் அவளுக்காக நடுக்கம் கொண்டது. தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதன் வெளிப்பாடு பாரியிடம்.

“ஹை பீவர். பாடி ரொம்ப சூடா இருக்கு. அன்கான்ஷியஸ் ஆகிட்டாடா.”

“என்னாச்சு பாரி?”

பாரியின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த பதற்றத்தில் ஜென்னிற்கும் பதற்றமாக இருந்தது.

“ஜென் இருந்தா நல்லாயிருக்கும் பாரி. ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போகனும். தமிழ் நைட் வியர்ல இருக்கா(ள்)டா!” அவியின் குரலே தடுமாறித்தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

பாரி அமைதியாக இருக்க…

“ப்ளீஸ் பாரி. ஜென்கிட்ட சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பி வைடா. அதுக்குள்ள நான் எதாவது பர்ஸ்ட் எய்டு செய்றேன்” எனக்கூறி வைத்துவிட்டான் அவி.

அவி அலைபேசியை வைத்த பின்னரே நிகழ் மீண்டவன் வேகமாக விசாரணை நடந்து கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தவன்…

“மீதி நாளை வச்சுக்கலாம். இவங்களை அனுப்பிடுங்க” என்று கணபதியிடம் சொல்லியவன் ஜென்னை அழைத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் விரைந்தான்.

வேகமென்றால் அப்படியொரு வேகம். ஜென் பாரியின் தோளினை இறுகப்பற்றிக்கொள்ளும் நிலை.

காற்றைக் கிழித்துக்கொண்டு பாய்ந்திருந்தான்.

அமர்ந்த வாக்கிலேயே வண்டியை ஸ்டேன்ட் செய்தவன்… ஜென் இறங்குவதற்கு முன்பு வில்லிலிருந்து வீறுகொண்டு புறப்பட்ட அம்பாக ஜென்னின் வீட்டிற்குள் நுழைந்தவன், எங்கென்று பார்வையால் அலசி… திறந்திருந்த அறையினுள் மின்னலென நுழைந்திருந்தான்.

பாரியை கண்டதும்… ஈரத்துணியால் தமிழின் நெற்றியை துடைத்துக்கொண்டிருந்ததை நிறுத்தி… வந்து நிற்பவனை நம்பாது பார்த்தான் அவி.

தன்னையே ஒருமுறை கிள்ளி பார்த்துக்கொண்டான்.

தமிழின் அருகில் சென்றவன் அவளின் தலையை தூக்கி தன் மடியில் வைத்து தலையணையை சற்று நகர்த்த… முன்தின இரவு அவன் கொடுத்த ஆடை அவளின் தலைக்கு கீழே சுருண்டிருந்தது.

அதனை இரவு முழுக்க அவளுடைய அணைப்பில் வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

பாரிக்கு பின்னால் வந்த ஜென் கூட அவனது செய்கையை நம்பாது…

அவியிடம்,

“என்னாச்சு?” என்று வினவினாள்.

“என்ன என்னாச்சு. உன்னோடதான இருக்கா(ள்). அவள் எப்படி இருக்காங்கிறதை கூட கவனிக்க மாட்டியா?” என்று ஜென்னிடம் எகிறினான் அவினாஷ்.

“கேஸ் விசாரணை. சீக்கிரம் போயிட்டேன். நான் கிளம்பும்போது நல்லாத் தூங்கிட்டிருந்தாள். டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு அப்படியே போயிட்டேன்” என்ற ஜென்னை அவி முடிந்தளவிற்கு முறைக்க…

“கான்ஷியஸ் மிஸ் ஆகுற அளவுக்கு பீவர்” என்று பற்களுக்கு இடையில் கூறினான்.

“ஃபீவரா?” என்று பதறிய ஜென் தமிழின் அருகில் செல்ல… அவி அவளைத் தடுத்தான்.

“விடு நான் பார்க்கிறேன்.”

“பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்கல” என்று அவி கடுகடுக்க…

“உங்க சண்டையை வெளிய போய் வச்சிக்கோங்க” என்று கத்தினான் பாரி.

____________________________

தமிழுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அனைத்தையும் மறந்து அவள் மட்டுமே மனதில் முழுவதும் நிரம்பியிருக்க… பார்த்துக்கொண்டிருந்த விசாரணையைக்கூட விட்டுவிட்டு விரைந்து வந்திருந்தான் பாரி.

அவனவளுக்காக!

வாடிய மலரென கிடப்பவளை கண்டதும் தமிழின் பாரியாகிப்போனான்.

அவளுக்காக நெஞ்சம் மருகிட…

அவள்மீதான கோபமெல்லாம் அந்நொடி அவனுக்கு நினைவில் இல்லை. மனம் முழுக்க மறைந்திருந்த அவள்மீதான அன்பும் அக்கறையும் உடைப்பெடுக்க அவளை தன் மடியில் போட்டுக்கொண்டான்.

அந்நேரம் அவியும் ஜென்னும் மாறி மாறி வாதம் செய்திட…

“உங்க சண்டையை வெளியப்போய் வச்சிக்கோங்க” என்றி கத்தினான் பாரி.

அவனின் கத்தலில் இருவரும் அமைதியாக… அவி வைத்த ஈரத்துணியை எடுத்து மீண்டும் நீரில் நனைத்து தமிழின் நெற்றியில் ஒற்றி எடுத்தவன்… உதட்டினை மற்றொரு துணிக்கொண்டு ஈரப்படுத்தினான்.

அவளது கண்ணில் சிறு சுருக்கம். மீண்டும் நிர்மலமானத் தோற்றம்.

“என்னாச்சுடா?” என்று அவியிடம் கேட்டான்.

“ஆபீஸ் கிளம்பிட்டு கால் பண்ணேன் எடுக்கலடா. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்துட்டு உள்ள வந்து பார்த்தா எந்த அசைவும் இல்லாம படுத்திருக்காள். கூப்பிட்டு பார்த்தும் எழும்பல. எழுப்பலான்னு கை வச்சா பாடி நல்ல ஹீட். அப்போதான் தெரிஞ்சுது அன்கான்ஷியஸா இருக்கான்னு” என்று நடந்ததைக் கூறினான்.

“நைட் மழையில நனைஞ்சதால இருக்கும் பாரி. டோன்ட் ஒர்ரி” என பாரியின் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்ட வருத்தத்தில் அவனைத் தேற்றும் விதமாகக் கூறினான் அவி.

எப்போதும் துருதுருவென இருப்பவளை பார்த்துதான் பாரிக்கு பழக்கம். இப்போது அசைவின்றி கிடப்பவளை காண்கையில் கண்கள் கலங்கும் போலிருந்தது.

‘எங்கே முற்றிலும் உடைந்துவிடுவோமோ’ என நினைத்தவன்…

“கார் எடுடா” என்று அவியிடம் சொல்லியவாறு தமிழின் தலையை மெல்ல தலையணையில் வைத்துவிட்டு… “ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிவிடு ஜென்” எனக்கூறி அறையை விட்டு வெளியேறியவன்… கால்களை அகட்டி இடுப்பில் கைகளை குற்றி நின்று சன்னல் வழி வெளி வெறித்தான்.

அவி காரினை கொண்டு வந்து ஜென்னின் வீட்டின் முன் நிறுத்திட… ஜென்னும் தமிழுக்கு ஆடை மாற்றி வந்தாள்.

அறைக்குள் நுழைந்த பாரி தமிழை கைகளில் ஏந்தினான்.

ஜென் முன்பே காரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்க…

“நீ முன்னால உட்கார் ஜென்” என்றான் பாரி.

ஜென் மறுத்து கூறவர,

“அதான் சொல்றான்ல” என்று அவியிடமிருந்து அதட்டலாக வந்தது வார்த்தை.

“இவ்வளவு நாள் யாருன்னு கூட திரும்பி பார்க்காம இருந்துட்டு, இப்போ வந்து ஓவராத்தான் பன்றான்.” முணுமுணுப்புடன் ஜென் கீழிறங்கி முன்னேறி அமர, அவள் பேசியது அவிக்குத் தெளிவாக கேட்டது.

ஜென் பாரியை சாடியிருந்தாலும்… அவிக்கு தனக்காக சொல்லியது மாதிரியான பிம்பம். ஜென்னின் அவ்வார்த்தைகள் பாரி, அவி இருவருக்குமே பொருந்துமே.

தன் துணையை இருவருமே கண்டு கொள்ளாது தானே இருக்கின்றனர்.

பாரி தமிழை தன் மடியில் படுக்க வைத்தவாறு வண்டியில் அமர்வதில் கவனமாக இருக்க…

“அவனே மறந்துட்டு இருக்கான். நீ ஞாபகப்படுத்துற மாதிரி பேசி திரும்ப முருங்கை மரம் ஏறிடப்போறான். இதை யூஸ் பண்ணி சேர்த்து வைக்க ட்ரை பண்ணுவோம்” என்று பாரிக்கு கேட்காது ஜென்னிடம் மெல்ல கிசுகிசுத்தான்.

“அப்படியே உன் பிரண்ட் ரொம்பத்தான் இறங்கி வந்துட்டான் பாரு. இப்பவும் அவன் உச்சாணி கொம்பில் தான் இருக்கான். தமிழுக்கு உடம்பு சரியில்லைங்கிற பதட்டம் அவனை கொஞ்சம் நெகிழ்த்திருக்கு.” பாரியின் உண்மை நிலையை ஜென் அப்படியேக் கூறினாள்.

“உன் வாய் இருக்கே…” என்று ஏதோ நினைவில் சொல்ல வந்த அவி கப்பென்று மூடிக்கொண்டான்.

“டேய்… போடா.”

பாரி சத்தமிட்ட பின்னரே அவி வண்டியை இயக்கினான்.

செல்லும் வழியில் பாரி பரிதிக்கு அழைக்க… அழைப்பு ஏற்கப்படவில்லை. அதன் பின்னர் யாருக்கும் தெரிவிக்க மனம் ஒப்பவில்லை. இளாவிற்கு அழைக்கலாம்… ஆனால் அவள் எப்படி எடுத்துக்கொள்வாள். தமிழுக்கு ஒன்றென்று பயந்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அவளுக்கு அழைக்கவில்லை.

மருத்துவமனை வந்ததும் தமிழை பரிசோதித்த மருத்துவர்…

“பீவர் ரொம்ப ஹை ஆகியிருக்கு. அதனாலதான் அன்கான்ஷியஸ் ஆகியிருக்காங்க. இன்னைக்கு இங்கிருக்கட்டும். பீவர் குறைய ஆரம்பிச்சிட்டா வீட்டுக்கு போகலாம்” என்றவர், தமிழுக்கு எப்போ எந்த மருந்துகளை கொடுக்க வேண்டும் எனக்கூறி வெளியேறினார்.

“எப்போ கான்ஷியஸ் வரும்?”

பாரியும் ஜென்னும் காக்கி உடையில் இருக்க… தமிழுக்கு வேகமாகவே சிகிச்சை நடைபெற்றது.

“டாக்டர் கான்ஷியஸ்க்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்காங்க சார். ஒன் ஹவரில் கண் முழிச்சிடுவாங்க” என்று பாரி கேட்ட கேள்விக்கு செவிலிப்பெண் கூறிச்செல்ல…

படுக்கையில் கிடந்த தமிழுக்கு அருகில் சென்றான் பாரி.

கையில் வெயின் போட்டிருக்க… ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. மெல்ல நெற்றியில் கை வைத்து அவளின் தலை நோக்கி கோதியவன்,

‘உன்னை இப்படி பார்க்க என்னவோ மாதிரி இருக்குடா. கண்ணை திறந்திடு ப்ளீஸ்.’ வெளியில் சாதரணமாகத் தன்னை காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் தமிழை அந்நிலையில் கண்டவன் முற்றிலும் உடைந்திருந்தான்.

அக்கணம் பாரிக்கு ஒன்று தெளிவாக விளங்கியது…

இன்னும் எத்தனை வருடங்கள், யுகங்கள் ஆனாலும் தமிழை அவனால் வெறுக்க முடியாது. விலக முடியாது.

‘வெறுத்துக்கொண்டே நேசிப்பான்.
விலகிச்சென்று அவளையே சுவாசிப்பான்.’

‘தான் காட்டிக்கொள்ளும் கோபமெல்லாம் அன்று நடந்த நிகழ்வில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது தன்னை மீறி நடந்துவிட்டதற்காகத்தானே தவிர… நடந்த நிகழ்விற்காக அல்ல.’

‘தன்னுடைய ஆற்றாமையை நட்பு பூவென்று அமைதிபடுத்திக் கொண்டிருந்தானோ?’ அவனது கேள்விக்கு விடை அவனிடமே.

‘என்னால தமிழை ஏத்துக்க முடியுமா?’

‘இதோ முடியுதே! இவளுக்கு ஒண்ணுன்னதும் கோபம் மறந்து துடிக்கிறேனே! அப்போ எனக்கு இவள் மேல கோபமே இல்லையா?’

‘கோபமா எனக்கா? என்னால இவள் மேல கோபமும் கொள்ள முடியுமா?’

இங்கு கேள்வியும் அவனே, பதிலும் அவனே.

இருப்பினும் இவ்வளவு நாள் அவன் கொண்டிருந்ததெல்லாம்… வீண் பிடிவாதமாகத்தான் தெரிந்தது.

தற்போது அவளுக்கு இந்நிலைக்கூட தன்னால் தான் என்று குற்றவுணர்வில் தவிக்கின்றான்.

‘பார்த்ததும் உடன் அழைத்து வந்திருந்தால் மேலும் மழையில் நனையாமல் இருந்திருப்பாள்’ என தன் செயல் நினைத்து வருந்தினான்.

‘எழுந்திருடா… எனக்கு என்னவோ மாதிரி இருக்கு!’

பாரி மனதிற்குள் ஊமையாய் அரற்றிட… தமிழிடம் மெல்லிய அசைவு.

பாரியையே ஏதோ அதிசயம் போல் பார்த்திருந்த ஜென்… தமிழின் அசைவை உணர்ந்து…

“பாரி… தமிழ்” என்றாள்.

அப்போது தான் தமிழின் முகத்தில் ஏற்பட்ட சுருக்கத்தையும், கை அசைவையும் பாரி கவனித்தான்.

பாரி அவியை பார்க்க… அவன் மருத்துவரை அழைத்துவரச் சென்றான்.

மெல்ல இமை திறந்த தமிழ்… தனக்கு முன் மிக அருகில் அமர்ந்திருக்கும் பாரியை கண்டு ஆச்சர்யம் கொண்டாள். ஒரு கணம் அவளுக்கு மூச்சே உறைந்து போனது.

‘இது உண்மையா? எனக்கு பக்கத்துல இவனா?’

அகல விரிந்திருந்த அவளின் நயனங்களே தமிழின் மனவோட்டத்தை தெளிவாக்க… பாரிக்கு  புன்னகை அரும்பும் போலானது. அதனை இதழ்களுக்குள் ஒளித்துக்கொண்டான்.

தமிழின் பார்வையை தனக்குள் விழுங்கிக்கொண்டவன்,

“பார்த்துக்கோ ஜென்” என கண்காட்டிவிட்டு வெளியேறிவிட்டான்.

அவனுக்கே அவனை இப்போது தான் தெளிவாக புரிந்தது. அவனது மன ஆராய்வின் முடிவில் அவனுள் ஒரு கேள்வி.

‘அமிர்தாவுக்கு முன்னாடி இவள்(தமிழ்) காதலை சொல்லியிருந்தா நான் ஓகே சொல்லியிருப்பனா?’

சற்றும் தாமதமின்றி ஆமென்று ஓலமிட்டது அவனது உள்ளம்.

கூடவே அமிர்தாவிடமே அவளுக்காக (தமிழ்) சண்டையிட்ட நிகழ்வுகள் யாவும் மனதில் ஊர்வலம் சென்று… ‘உன் காதலை நீ உணரவேயில்லை’ என அவனின் தலையில் கொட்டியது.

உடன் “தமிழுக்கு உன் மீது காதல்” என அவி சொல்லியதும் நினைவில் ஆட… ‘கல்லூரி காலத்தில் தமிழுடன் ஏற்பட்ட பிரிவிற்கு காரணம் அவள் தன் மீது கொண்ட காதலாக இருக்குமோ’ என்றும் ஆராய்ந்தான்.

‘அவள் என்னை காதலித்தாளோ இல்லையோ… இப்போ காதலிக்கிறா(ள்) ங்கிறது எனக்காக என்னைத்தேடி இங்க வந்தது மட்டுமில்லாம, கடந்த நாலு வருஷமா என்னை ஃபாலோ பண்ணி என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கா(ள்). இதுவே போதும். என்மேல அவளோட இந்த பிடித்தம் போதும். எங்க வாழ்க்கை நேராக’ என சொல்லிக்கொண்டான்.

ஆழ்ந்து மூச்சினை உள்ளிழுத்து வெளியேற்றியவன்…

‘அவளின்றி நானில்லை, உறவுகளை தள்ளி வைக்கிறதை விட்டுட்டு… நடந்த கசப்பை தள்ளி வச்சா வாழ்க்கை நல்லா இருக்குமே!’ எல்லோருக்கும் நன்மையான ஒரு முடிவை எடுத்திருந்தான்.

‘உனக்கு ஞானம் வர அவளுக்கு எதாவது ஆக வேண்டும் போலிருக்கே.’ மனதின் கேலிக்கு சிரிப்புக்கூட வந்தது அவனிற்கு.

அதே சமயம்… ‘பூ’ என்ற நினைவு அதிகம் தாக்க, முன்பு போல் தயக்கமோ தவிப்போ… நட்பிற்கு துரோகம் செய்கிறோமோ என்கிற அவஸ்த்தை அவனிடம் தோன்றவில்லை.

மருத்துவர் அறைக்குள் சென்று தமிழை பரிசோதித்துவிட்டு வெளியில் வரும்வரை பாரி தன்னுடைய சுய அலசலில் ஆழ்ந்து போயிருந்தான்.

மருத்துவர் சென்றதும் பாரியின் அருகில் வந்த அவி… அவனது தோள் தொட்டு,

“ஷீ இஸ் ஆல்ரைட் டா. பீவர் டவுன் ஆனதும் கிளம்பிடலாம்” என்றான்.

“ம்” என்ற பாரி “அவளுக்கு சாப்பிட?” என்று இழுத்தான்.

“ஜென் பார்த்துப்பா(ள்).”

“ஓகே டா. நான் கிளம்புறேன்” என்றவன் அவி மறுப்பு சொல்லுமுன் தன் வேக எட்டுக்களுடன் சென்றிருந்தான்.

பாரிக்கு… அவள் மீது ஏற்கனவே காதலெல்லாம் இல்லை. ஆனால் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் அன்றே இருந்தது. அத்தோடு தமிழ் என்று பார்த்தவரை கண்களை மறைத்திருந்த அவள்மீதான கோபம், மனைவியென்று பார்க்கும் போது வெற்று பிடிவாதமாகத் தெரிகிறது.

வீட்டில் தமிழுக்கு ஜென் ஆடை மாற்றிய பின்னர், அவளை காருக்கு இரு கைகளிலும் ஏந்தியபடி வந்து இருக்கையில் கிடத்தும் போது தான் அவனே கவனித்தான். அது தமிழின் கழுத்திலிருந்த தாலி. அவன் கட்டியது. அவனது சட்டை பொத்தானில் மாட்டியிருந்தது.

மாட்டியிருந்த சங்கிலியை எடுப்பதற்குள் நெற்றி வியர்த்து விட்டது பாரிக்கு.

ஆனால்… மனம் முழுக்க பரவிய அதிர்வலை ஒன்றை மட்டுமே கூக்குரலிட்டது.

‘இவள் உன் மனைவி. உன்னவள்.’

அவ்வார்த்தைகளே பாரியை மனைவியாக அவளை பார்க்க வைத்தது. சிந்திக்க வைத்தது. மனதை ஆராய வைத்தது. அவனிற்கு புரிய வைத்தது. அதன் பலன் அவனுள் நல்ல மாற்றம்.

இனி பாரி என்ன செய்திடுவான்? அவனுக்கே வெளிச்சம்.

ஒப்ப முடியா விடயம் இன்று அவனுள் ஒப்பும் மாற்றமாய். மனைவியென்று மனம் சொல்லிக்கொண்டே இருக்க… அவனுள் புதிதாக ஒரு தடுமாற்றம். அதன் விளைவே தமிழை நேருக்குநேர் பார்த்திட முடியாது சென்றது.

மீண்டும் அவி தமிழ் இருக்கும் அறைக்குள் சென்றிட… தமிழின் கண்கள் ஆவலாக அவியின் பின்னால் பார்த்தது.

“போயாச்சு.” தமிழின் ஏக்கம் உணர்ந்து கூறினான்.

“அவனையெல்லாம் மாத்த முடியாது தமிழ். உனக்காக அவன் வருந்தியது நிஜம். நீ கண் திறக்கணும்னு அவன் துடித்தது நிஜம். ஆனா நேரடியாக் கேட்டா மனிதாபிமானம் அப்படின்னு ரீல் சுத்துவான். இவன் மாறப்போறதில்ல. கடைசிவரை அவன் பின்னாடியே நீ சுத்த வேண்டியது தான்.”

பாரி சென்றது கடுப்பை கிளப்பிட… இப்போது கூட இப்படியிருக்கின்றானேயென ஆத்திரத்தில் பேசிவிட்டான் அவி.

“நீ மாறிடுவியா அவி?”

அவன் சொன்னதை வைத்து அவனையே மடக்கினாள் தமிழ்.

“என்ன மாறனும்?”

சற்று கோபமாகத்தான் கேட்டான்.

“பாரி என்ன செய்றானோ அதைத்தான் நீயும் செய்யுற” என்ற தமிழ் ஜென்சியை பார்க்க… தமிழ் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவிக்கு அர்த்தமானது.

“இப்போ இந்த பேச்சு வேண்டாம் தமிழ்” என ஜென்னை முறைத்துக்கொண்டே சொல்லிய அவி “நான் வெளிய இருக்கேன்” என்று தமிழை பாராது வெளியேறியிருந்தான்.

ஒருவனுள் மாற்றம் முகிழ்த்திருக்க… மற்றொருவனுள் சீற்றம் அதிகரித்தது.

வேகமாக மருத்துவமனை விட்டு வெளியில் வந்து காரில் அமர்ந்த அவி உள்ளுக்குள் குமுறினான்.

தன் கோபத்தை யார்மீது காட்டுவதென்று தெரியாது, கார் ஸ்டியரிங்கில் கையினை ஓங்கி ஓங்கி குத்திக்கொண்டே இருந்தான்.

அன்று ஜென் சொல்லிய வார்த்தைகள் இன்றும் அவனது காதில் ஒலித்து மனதை இறுகச் செய்தது.

எப்போதுமே ஜென் கேட்ட அவ்வார்த்தையை அவனால் ஜீரணிக்க முடியுமென்று தோன்றவில்லை.

இந்த உலகத்தில் ரத்த சொந்தமென்று அவனுக்கிருந்த ஒரே உறவு. பறிகொடுத்துவிட்டு ஆதரவற்ற நிலையில் அவன் தவித்து தனித்து நின்ற போது… வாழ்வு முழுக்க உடன் வரப்போகும் உறவாக இருந்த ஒருத்தியும் உடனில்லாது வீம்பாக அவனை தவிர்த்து இருந்ததை நினைக்கையில் மனம் வெகுவாக கனத்துப்போனது. காயம் மேலும் வலியைக் கொடுத்தது.

“அம்மா…” கத்தி சொல்ல வேண்டும் போலிருக்க தொண்டை அடைத்தது.

அந்நேரம் பாரி அழைத்திட…

தன்னை நிலைப்படுத்தி அழைப்பை ஏற்றான்.

“அழுது முடிச்சிட்டன்னா காரிலிருந்து இறங்கி வா” என்றான்.

தமிழை நேருக்கு நேர் பார்த்திட… புதிதாக அவள் மீது தோன்றிய ஏதோ உணர்வு அவஸ்தையை கொடுக்க அங்கிருந்து சென்றவன்… வீட்டிற்கு சென்றாலும் நிலையாக இருக்க முடியாதென திரும்பி வந்திருந்தான்.

அப்போதுதான் தமிழ் அவியிடம் கேட்டது வெளியில் நின்று அறை கதவை திறக்க முயன்ற பாரியின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.

அவியின் கோபம் அவனது கண்களை மறைத்திருந்ததோ என்னவோ…

அவன் வெளியில் வரும்போது சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த பாரியை கவனிக்கத் தவறிவிட்டான்.

வேகமாக செல்லும் அவியின் பின்னே வந்த பாரி… அவி காரிலமர்ந்து லாக் செய்து கொண்டு வருந்துவது முன்பக்க கண்ணாடியில் தெரிய அவன் சற்று சமன்பட பொறுமை காத்தான்.

ஆனால் அவி சரியாவது போல் தெரியாததால் அவனை காரிலிருந்து இறங்க வைத்தான்.

அவி இறங்கியதும் பாரி அவனது காருக்கு அருகிலேயே நின்றிருக்க… முகம் கசங்க நண்பனை ஏறிட்டு பார்த்தான்.

பாரி என்ன நினைத்தானோ… நொடியும் கடக்காது அவியை ஆரத் தழுவியிருந்தான். அவனது தழுவல் நான் உனக்கிருக்கிறேன் என்பதை அவிக்கு உணர்த்தியது.

“எதுவா இருந்தாலும் கடந்திடலாம் அவி” என்று முதுகில் தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய பாரி அவனை தன்னிலிருந்து பிரித்து…

“சின்ன பையனாடா நீ. அழலாம் செய்யுற” என அவனின் மனதினை மாற்ற கேலி பேசினான்.

இருவரும் பேசிக்கொண்டே மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் சிறு பூங்காவிற்குள் நுழைந்திருந்தனர்.

ஒரு கல் மேடையை பார்த்து அமர்ந்தனர்.

“நீ டூயூட்டி போகல?”

“இல்லடா! போனாலும் மைண்ட் வேலையில் பதியும் தோணல.”

“அப்போ யூனிஃபார்ம் சேன்ஞ் பண்ணிட்டு வந்திருக்கலாம். எல்லாரும் உன்னையே பார்க்குறாங்க” என்ற அவியின் கூற்றில் பாரி சுற்றி பார்க்க… ஆங்காங்கே அமர்ந்திருந்தவர்கள் அவனை பார்த்து திரும்புவது தெரிந்தது.

“இது எனக்கு பழகிப்போச்சுடா” என்ற பாரி…

அவியையே ஆழ்ந்து பார்த்தான்.

“என்னடா பார்வைலாம் பலமா இருக்கு?” அவி சிரித்துக்கொண்டே கேட்டான். இப்போது இயல்புக்கு மீண்டிருந்தான்.

“நீ இன்னும் ஜென்னை லவ் பண்றியா?” என்று கேட்டு “இல்லைன்னு பொய் சொல்லாதே” என்றும் எச்சரித்தான்.

“அதான் உனக்கே தெரியுதே. அப்புறம் என்ன?” என்ற அவி, “லவ் இருக்கு. இல்லாம எங்க போகப்போகுது. அவள் கேட்ட வார்த்தையை கடந்து வர முடியாமதான் தவிக்கிறேன்” என்றான். தூரத்தை வெறித்தபடி.

“உங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை விட்டால் இன்னொருத்தர் இல்லை…”

“ஏன் நீயில்லையா?”

“என்னை சொல்லவிடு அவி.”

“சரி சொல்லு.”

நண்பனை முறைத்த வைத்தான் அவி.

“உன்னைத்தவிர அவளும்… அவளைத்தவிர நீயும் யாரையும் லைஃப் பார்ட்னாரா ஏத்துக்க… ம்ஹ்ம், பார்க்க கூட மாட்டிங்க. அவளுக்கு நீ. உனக்கு அவள். அப்படியிருக்க நடுவில் இந்த ஈகோ எதுக்கு அவி. இதையே நீ என்னை பார்த்தும் கேட்டிருக்கலாம். பட் என் விஷயம் வேற. அதைப்பத்தி அப்புறம் நீயெனக்கு அட்வைஸ் பண்ணு.

உன்னை விட்டா அவளுக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமில்லைன்னு நினை அவி. உன் உறவை கொடுத்து, அவளை உன் உறவா எடுத்துக்கோ. அப்புறம் நீ இந்த மாதிரி தனியாலாம் அழ வேணாம். ஜென்னே உன்னை தினம் தினம் அழ வைப்பாள். அப்புறம் உனக்கு அழறது பழகிப்போகும்” என்று பாரி சிரிக்காது கூறிட… அவி காண்டாக அவனை மொத்தி எடுத்தான்.

*****

நாளைய பதிவில்… தமிழ் பூ யாரென்று தெரிந்துவிடும். அதற்கடுத்து கடந்த கால நிகழ்வுகள். அவை சற்று பெரியதாக இருக்கும். சில அத்தியாயங்கள் செல்லும்.

படிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி🙏.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
41
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. தமிழ் பூ இரண்டும் ஓருவரே பிளாஷ் பேக் தான் தெரியனும்

      1. Author

        அடுத்து அந்த சந்தேகம் தீர்ந்திடுங்கா