பூ-19
செய்தியாளர்கள் பொதுக்கூட்டத்தில் நம் காவலர்கள் படை நின்றிருந்தது.
கேள்வி அம்புகள் ஒவ்வொன்றும் அத்தனை வேகத்தோடு அவர்களை நோக்கிக் குதித்து வந்தன. அதுவும் வந்த ஒவ்வொரு அம்பும், விஷம் தடவியதைப் போல் சுருக் சுருக்கென்றுதான் வந்து விழுந்தன.
“சார்.. நாலு கொளைகள் நடத்துடுச்சு. குற்றவாளியை எப்பத்தான் பிடிக்கப் போறீங்க?”
“சும்மாவே பெண்களுக்கு நைட்டு பத்து மணிக்கு மேல பாதுகாப்பில்லை. இப்ப ஆண்களுக்கும் பாதுகாப்பில்லைனு ஆகிடுச்சு. என்ன சார்? மனிதர்களா ராத்திரி வெளிய நடமாடக்கூட எங்களுக்கு உரிமை கிடையாதா?”
“இப்பவரை இந்த வழக்குல என்ன கண்டுபிடிக்கப்பட்டிருக்கு சார்? எதாவது முன்னேற்றம் இருக்கா?”
“குற்றவாளி யாரா இருக்கும்னு எதாவது அனுமானங்கள் இருக்கா? குற்றவாளியை எந்தளவு நெருங்கியிருக்கீங்க?”
“குற்றவாளியை நெருங்கும் முயற்சியில எதும் முன்னேற்றம் இருக்கா? முதல்ல முயற்சி இருக்கா? ஐ மீன்.. என்ன முயற்சி எடுக்குறீங்க?” என்று பல குரல்கள் வந்துகொண்டே இருந்தது.
“என்ன சார் எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,
“என்கிட்டருந்து பதில் வரனும்னா, அதுக்கு ஒவ்வொரு கேள்விக்கும் இடையில் நீங்க இடம் கொடுக்கனும். அப்பத்தான் என்னால பதில் சொல்ல முடியும்” என்றான்.
“என்ன சார்? போலீஸ் பிரஸ் கலவரத்தை எதும் ஏற்படுத்தித் தப்பிக்க நினைக்குறீங்களா? எல்லா பிரஸ் மீட்லயும் இப்படித்தானே கேள்விகள் கேட்கப்படுது?” என்று ஒருவர் கேட்க,
“எல்லா இடத்திலும் தப்பு நடக்குது அப்படிங்குறதுக்காக அது சரியாகிடாது மிஸ்டர்” என்று கம்பீரமாய் கூறியவன், நிமிர்ந்து நின்று, “எங்களால முடிஞ்சளவு எஃபோர்ட்ஸ் போட்டுட்டுத்தான் இருக்கோம். சீக்கிரமே அவனைப் பிடிச்சிடுவோம்” என்று கூறினான்.
“குற்றவாளி ஒரு ஆணா சார்?” என்று ஒரு பெண் கேட்க,
“இருக்கலாம்… ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம், திருநங்கையாகவும் இருக்கலாம்” என்று கூறினான்.
கூட்டத்தில் சில நொடிகள் சலசலப்பு எழ,
“கில்லர் செலெக்ட் செய்யும் விக்டிம்கள் எல்லாரும், ஏதோ ஒரு வகையில் திருநங்கைகளுக்குத் தொல்லை கொடுத்த நபர்கள்தான். ஒன்னு கில்லர் திருநங்கையாக இருக்கனும், இல்லைனா, பாதிப்புக்கு ஆட்படுத்தப்பட்டு உயிரிழந்த திருநங்கையின் சொந்தமா இருக்கனும்” என்று தெளிவாகக் கூறினான்.
“கொலையாளியோட பேட்டர்னுக்கு பின்னாடி என்ன காரணம் இருக்கு சார்?” என்று ஒருவர் கேட்க,
“வார்த்தைகளால் காயப்படுத்துவதால், உலோகத்தை உருக்கி வாயில் ஊற்றியிருக்கலாம். பாவமன்னிப்புக் கேட்கும் விதமா, தரையோடு உடலை அறைஞ்சு, ரத்தத்தால் மன்னிப்பு கேட்கும்படி உருவாக்கியிருக்கலாம் என்பது எங்கள் அனுமானம்” என்று கூறினான்.
“எல்லாமே அனுமானம் தானா?” என்று ஒருவர் கேட்க,
“குற்றவாளியைப் பிடிச்சு, அவன்பக்க வாதங்களைக் கேட்கும்வரை எங்களால அவன் இடத்திலிருந்து யோசிச்சு அனுமானிக்கத்தான் முடியும் சார்” என்று ராம் கூறினான்.
“கொலையாளி திருநங்கைகளுக்குத் தொல்லைக் கொடுத்தவர்களைத் தான் கொல்லுறான்னு எப்படி சொல்றீங்க சார்?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,
“தன்விஷா பெண் நலினங்கள் கொண்ட ஒரு ஆணை அசிங்கப்படுத்தி பேசியிருக்காங்க. தினேஷ் ஒரு திருநங்கையைக் கொலை செய்திருக்கார். சாத்விக் ஒரு திருநங்கையைக் காதலித்து, உண்மை தெரிந்ததும் தகாத முறைல திட்டியிருக்கார்” என்று திலகா கூற,
“திட்டுறதுக்குலாம் ஒருத்தரை கொலை செய்வாங்களா? இதெல்லாம் கோ-இன்ஸிடென்டா நடந்திருந்தா?” என்று கேட்டனர்.
“இதன் அடிப்படையில் தேடித்தான் நாங்க திலக்கை எங்க சந்தேக வட்டத்தில் எடுத்தோம். கொலையாளியும் அவரைக் கொலை செய்ய முயற்சித்து, எங்க படையால் காப்பாற்றப்பட்டார்” என்று சந்தோஷ் கூற,
“தகாத முறையில் பேசப்பட்டதால், தன்விஷா திட்டிய நபரோ, காதலிச்சு ஏமாற்றியதால், இறந்துபோன சாத்விக்கோட காதலியோ இதை செய்திருக்க வாய்ப்பிருக்கா?” என்று ஒருவர் கேட்டார்.
கேட்ட கேள்வி ஒரு நிமிடம் சிவப்ரியனை திக்கென்றுதான் உணர வைத்தது.
“எதையும் விசாரிக்காம சொல்ல முடியாது” என்று இறுக்கமாய் அவன் கூற,
மேலும் அவனைக் கேள்வகள் பல கேட்டு, குடைந்துவிட்டு விட்டனர்.
கூட்டம் முடிந்து அறைக்குள் சென்றவனுக்கு உண்மையில் அத்தனை சோர்வாக இருந்தது.
மற்றவர்களுக்கும் அவனைப் பார்க்கவே அத்தனைப் பாவமாக இருந்தது. தலைமை அதிகாரி, என்று சாதாரணமாகக் கூறிக் கொள்கின்றனர்.. ஆனால் அதற்குப் பின் இருக்கும் சுமைகள் அனுபவிப்போருக்கே புரியும்.
“சார்..” என்று ராம் அழைக்க,
பெருமூச்சு விட்டுக் கொண்டு எழுந்தவன், இறுக்கமான உணர்வோடு, “சரி வாங்க.. அந்த பழைய ரெகார்ட்ஸைப் பார்க்கலாம்” என்று கூறினான்.
அப்போதே மணி இரவு எட்டானது.
“சார்.. நீங்க வீட்டுக்குப் போறதுனா போங்க சார்” என்று திலகா கூற,
“போய்? அடுத்து இப்படி ஒரு மீட் வரும்படி ஆகும் முன்னவே நம்ம வேலையை முடிக்கனும்” என்று கூறினான்.
பழைய வழக்குகள் பற்றி ஆராய ஆரம்பித்தனர்.
“சார்.. இதைப் பாருங்களேன்.. இவங்க பெயர் சுஜா. இவங்க ஒரு திருநங்கை. இவங்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொலையும் செய்யப்பட்டிருக்காங்க. சுஜாவை ராஜன்னு ஒருத்தர் காதலிச்சிருக்கார். சுஜாவுக்காக காவல்துறைல புகாரெல்லாம் கொடுத்திருக்கார். ஆனா வழக்குல பெருசா எந்த முன்னேற்றமும் இல்லை” என்று ராம் கூற,
“அதுல உள்ள ராஜனுடைய தகவல்களை எடுத்து வைங்க ராம்” என்று கூறினான்.
“சார்.. சஷ்மிதானு ஒரு திருநங்கையைக் கூட வேலைப் பார்க்கும் பெண்மணி பொறாமை காரணமா பொய் புகார் கொடுத்து, ஒரு வருஷம் சிறைல இருந்திருக்காங்க. அப்றம் அவங்கமேல குற்றமில்லைனு நிரூபிக்கப்பட்டு வெளிய வந்திருக்காங்க. இருந்த வேலையும் போய், அடுத்து என்ன செய்யனு தெரியாம இருந்தவங்களுக்கு அடுத்து என்ன ஆனது எங்க போனாங்கனு எந்த தகவலும் இல்லை” என்று சந்தோஷ் கூற,
“அப்ப அந்த கூட வேலைப்பார்த்தப் பெண் உயிரோடு இருக்காங்களானு பார்ப்போம். சஷ்மிதா பழி தீர்க்கனும்னு வந்திருந்தா, நிச்சயம் அவங்க முதல் குறி அந்த பெண்ணாதான் இருந்திருக்கும்” என்று திலகா கூறினாள்.
அந்த கடலளவு வழக்குகளில், அவர்கள் மாநிலத்தில் திகழ்ந்தவற்றை மட்டுமாகத் தேடி அனைவரும் பார்வையிட, நேரம் திறந்துவிட்டக் குழாயிலிருந்து நீர் கொட்டுவதன் வேகத்தில் சென்றது.
“ஓகே டீம்.. மீதியை நாளைக்குக் காலைல வந்து பார்க்கலாம்” என்று கூறிய சிவப்ரியன், வெகுவாக சோர்ந்து போன உடலை அசைத்து, சோம்பல் முறித்து எழுந்தான்.
அனைவரும் ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட,
நேரத்தைப் பார்த்தவன், அக்னிகாவிடமிருந்து வந்திருக்கும் குறுஞ்செய்தியைக் கண்டு உள்ளே சென்றான்.
அவள் அவளது இருப்பிடத்தை (location) அனுப்பி வைத்திருந்தாள். காலை அவன் கேட்டபோதே அவள் செய்திருப்பது புரிந்தது.
மெல்லிய புன்னகையுடன் வெளியே செல்ல எத்தனித்தவன் கைப்பட்டு, அது திறந்துக்கொள்ள, ‘ப்ச்’ என்று அணைக்கச் சென்றவன், அவள் வீட்டை விட்டு எங்கோ சென்றுகொண்டிருப்பதாக அது காட்டுவதைப் பார்த்தான்.
அதில் அவன் புருவங்கள் சுருங்க, அவள் வீட்டிற்கு பக்கவட்டாகச் செல்லும் சாலையில் அவள் பயணித்துக்கொண்டிருந்தாள்.
‘இந்த நேரத்துல எங்க போறா?’ என்று நினைத்தவன் அவளுக்கு அழைப்பு விடுக்க நினைத்தான். அலைபேசியில் ஒலி அபயமாய் ஒலித்து அவளை இன்னலில் சிக்க வைத்திட்டால்? என்று எண்ணி அஞ்சியவன், உடனே வண்டியை எடுத்துக் கொண்டு, அவளை நோக்கி விரைந்து புறப்பட்டான்.
அவள் வீட்டிற்கு வந்து வண்டியைப் போட்டவன், அவள் செல்லும் திசை நோக்கி விரைந்து சென்றான்.
‘எங்கடி போற? தேவையில்லாம எங்கயும் போய் மாட்டிக்காதடி’ என்று நினைத்தவனாய் விரைந்து சென்றான்.
தற்போது ஒரே இடத்தில் அவள் நின்றுவிட்டதாய் அலைபேசி காட்ட, வேகமாய் சென்றான்.
நான்கு பக்கமும் சாலை பிரிந்து செல்ல, அதன் மையத்தில் நின்று, நான்கு பக்கமும் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்தாள், அக்னிகா.
அவளை நெருங்கி வந்துவிட்டவன், அப்படியே நின்று அவள் என்ன செய்கின்றாள் என்று பார்த்தான்.
‘ப்ச்’ என்றபடி சாலையில் கால்களை உதைத்துக் கொண்டு அவள் திரும்ப, அவளுக்கு வெகுசமீபமாய் அவள் முன் நின்றிருந்தான், சிவப்ரியன்.
சட்டென்று அவன்மீது மோதிக்கொண்டு நிற்பதில் மிரண்டு போய், “ஆ..” என்று லேசாய் கத்தித் தன் முகம் மூடிக் கொண்டவளாய் நகர,
பின்பக்கமாய் சாய்ந்தவளைப் பற்றிக் கொண்டு அமைதியாய் நின்றான்.
அவன் கரம் கொடுத்த கதகதப்பே, அந்த ஸ்பரிசத்தை அவளுக்கு உணர்த்திவிட, முகம் நிமிரும் முன்பே, அவள் உடல்மொழியில் ஒரு ஆசுவாசம் வந்தது.
கரம் விளக்கி அவனைப் பார்த்தவள், “ப்ர..ப்ரியன்..” என்க,
“அறிவுங்குறது எதும் இருக்கா இல்லையாடி உனக்கு? எங்கயும் மூளையை வித்துட்டு வந்துட்டியா?” என்று அத்தனை உஷ்ணமாய் கேட்டான்.
“ப்ரியன் நான்..” என்று அவள் ஏதோ கூற வர,
கோபத்தின் உச்சத்தில் புறங்கை ஓங்கி, “வாய மூடு” என்று கத்தினான்.
அதில் மிரண்டுபோய் அச்சத்துடன் அவள் விழிக்க,
அவள் கரம்பற்றித் தரதரவென்று இழுத்து அவள் வீட்டை அடைந்தான்.
“எதாவது என் வாய்ல நல்லா வந்துடும் அக்னிகா. மணி என்னனு பார்த்தியாடி நீ? அர்த்த சாமத்துல ஆளில்லாத ரோட்ல உனக்கென்ன வேலை? ஊர்ல உள்ளவனுங்க கிட்டயெல்லாம் ராத்திரி வெளிய போகாதீங்கடா கொஞ்ச நாளுக்குனு நான் அடிச்சுக்குறேன்.. இங்க என் வீட்டம்மாவே அர்த்த ராத்திரி ரோட்டுல அலைஞ்சுட்டு இருக்கா..” என்று அவன் கத்த,
“ப்ரியன் கத்தாதீங்க” என்றாள்.
“என்னடி கத்தாதீங்க? என்ன கத்தாதீங்க? உசுரு போச்சு தெரியுமா? ஏன்டி சாவடிக்குற என்ன?” என்று அவளைப் பற்றி உலுக்கியவன், “ஒருமுறை உன்னை உயிர்ப்பில்லாம பார்த்ததுக்கே இப்பவர பயந்து சாவுறேன்டி.. என்னடி தெரியும் உனக்கு? என்ன தெரியும்? நான் எப்படி தவிச்சேன்னு தெரியுமா? நீ பாட்டுக்கு தன்னந்தனியா போற? என்னைப்பத்தி யோசிக்கவே மாட்டியா? நீயில்லாம என் நிலைமை என்னவாகுமோனுலாம் நினைச்சுப் பார்க்க மாட்டியா? செத்துடுவேன்டி.. செத்துடுவேன்” என்று கத்திக் கொண்டே வந்து, கடைசி வரியை மட்டும் வேதனையோடு மொழிந்தான்.
அவன் வார்த்தைகளில் விக்கித்துப்போய் அவள் நிற்க,
அவள் முகம் பார்த்த பின்பே தன் பதட்டத்தில் கத்திவிட்டதை உணர்ந்தவன், ‘ப்ச்..’ என்று முகத்தை தேய்த்துக் கொண்டு, வீட்டு வாசல்படியில் தலையைத் தாங்கியபடி அமர்ந்தான்.
அவன் இறுக மூடிய விழியோரம் கண்ணீர் மினுமினுத்தது.
சில நிமிடங்கள் அவனையே பார்த்து நின்றவளுக்கு, தனக்கொன்றெனில் அவன் எத்தனை பதட்டம் கொள்கின்றான் என்பது அப்போது பூதாகரமாய் தெரிந்தது.
மெல்ல அவன் அருகே அமர்ந்து அவன் தோள் தொட்டவள், “சாரி..” என்க,
தன் தோளில் இருந்த அவள் கரத்தை சிறுபிள்ளை போல் உதறிவிட்டுத் திரும்பி அமர்ந்தான். அவன் அழுவதை மறைப்பதற்கான செயல் அதுவென்று புரிந்தது.
“ப்ரியன்..” என்று அவள் அழைக்க அவன் திரும்பினான் இல்லை…
அவன் தாடை பற்றித் தன்னை நோக்கச் செய்தவள், “நிஜமா சாரி. சத்தியமா இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்க,
வேதனையாய் அவளைப் பார்த்தவன், “சாரி அக்னி.. ப்ரஸ் மீட்லயே ரொம்ப ஸ்டிரெஸ் ஆயிட்டேன்.. வேலைவேற அதிகம் இன்னிக்கு.. அதோட நீ இப்படி தனியா போறதைப் பார்க்கவும் பயத்துல கத்திட்டேன்” என்று அவளுக்காக அவன் கடிந்துகொண்டதற்குக்கூட மன்னிப்பு வேண்டினான். அவன் கண்ணிலிருந்து மளமளவென்று நீர் வடிந்தது.
“ப்ச்.. ப்ரியன்” என்றவள், “நான் தான் உங்கட்ட சொல்லாம போயிருக்கக் கூடாது. விடுங்க” என்க,
அவளை அமைதியாய் பார்த்தான்.
இருளின் அந்தகார ஓசை அவ்விடத்தில். மெல்லிய குளிர் இருவர் தேகத்திலும் படிய, ஒருவரின் வாசமும் அருகாமையும், மற்றவரை சிலிர்க்கச் செய்தது.
அவள் கன்னம் பற்றியவன், “பயமாருக்கு அக்னி..” என்க,
“எ..ஏன் ப்ரியன்?” என்று தடுமாற்றமாய் கேட்டாள்.
“என்னமோ தெரியல.. ஏதோ மனசுக்கு நெருடலா இருக்கு..” என்று கூறியவன், கலங்கிய விழிகளுடன் அவள் கண்கள் பார்த்து, “உனக்கு.. எதாவது..” என்று கூற முடியாமல் நிறுத்தி, “ப்ச்..” என்று கண்கள் மூடி திரும்பிக் கொண்டான்.
அவன் துடிப்புகள் அவளை என்னவோ செய்தது.
‘ஒருத்தரால இத்தனை ஆழமா காதலிக்கத்தான் முடியுமா?’ என்று அவள் மனம் நினைக்க,
‘முடியும்’ என்ற பதிலாய் அவள் முன் அமர்ந்திருந்தான்.
அவன் நாசி துடித்து நடுங்க, கண்கள் கலங்கி சிவந்தது.
அவன் தாடை பற்றித் தன் புறமாக திருப்பி, “எனக்கு ஒன்னுமில்லை ப்ரியன்” என்று அவள் கூற,
அமைதியாய் அவளைப் பார்த்தான்.
இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் தீண்ட, மோன நிலையின் காதல் கீதம், அவர்களை காதலின் உலகத்திற்கு அழைத்துச் செல்லப் போதுமானதாய் இருந்தது.
அவள் விழி பார்த்தபடி, அவள் முகம் நோக்கி அவன் குனிய, அச்சத்திலும், படபடப்பிலும், நாணத்திலும், அவள் இமைகள் தாமாக மூடிக் கொண்டு, கரம், அவன் தாடையிலிருந்து புஜங்களுக்கு இறங்கி, அவனைப் பற்றிக் கொண்டது.
அவள் இடைசுற்றித் தன் கரம் கொடுத்துப் பற்றியவன், மற்ற கரத்தால் அவள் தாடை பற்றி, இதழ் நோக்கி இறங்க, ‘சொட்’ என்ற சப்தத்தோடு மழைத்துளி வந்து அவள் நெற்றியில் விழுந்தது.
அதில் பட்டெனக் கண் திறந்தவள் அத்தனை நெருக்கத்தில் அவன் முகம் கண்டு, பதட்டத்தில் அஞ்சி, பதறி நகர, அவனுமே தன் செயல் அறிந்து, அதிர்ந்தவனாய் நகர்ந்தான்.
அவனுக்கு அந்த சூழல் பெரும் சங்டகத்தைக் கொடுத்தது. ஆம்! அவனுக்குத்தான்… எங்கே தன் உணர்வைத் தவறாக புரிந்துக் கொள்வாளோ? என்ற அச்சம் அப்பட்டமாய் அவன் முகத்தில் தோன்றியது.
குளிர் காற்று வேகமாய் வீச, தூரல் சாரலாய் மாறி இருவர் தேகத்திலும் வந்து ஒட்டிக் கொண்டது. அதன் குளுமையும், அவன் கதகதப்பும் ஒருங்கே அனுபவிக்க இயலாமல் அவள் பட்டென்று எழுந்துகொள்ள, அவள் கோபம் கொண்டாளோ? என்று பதறி எழுந்தான்.
அவன் முகத்தைத் தயக்கத்தோடு பார்த்தவள் முகம் பார்த்தவனுக்கு, அதில் மிளிர்ந்த அவளது நாணமும், அச்சமும் அவன் பயத்தை அப்படியே துணி கொண்டு துடைப்பதாய் உணர்ந்தான்.
தூரல் பலம் பெற்று மழைக்கு வழிவகை செய்ய, அவனைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். அவனும் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
அவள் இமை குடைகள் படபடப்பதைக் கண்டவன், “ஸ்பார்கில்..” என்று பட்டின் மென்மையில் அழைக்க,
‘ஆங்’ என்பதாய் அவனைப் பார்த்தாள்.
“சாரி..” என்று அவன் துவங்க, அவளுக்கு பரவாயில்லை என்று சொல்ல நாணமும், எதுவும் கூறாமல் இருக்க அச்சமும் தடை போட்டது.
அதை புரிந்துகொண்டு மெல்ல புன்னகைத்தவன், “ஸ்பார்க்கில்.. இ..இது..” என்று கூற வந்து, வெட்கத்தில் சிலிர்த்த பிடறியைக் கோதிக் கொண்டான்.
அவன் உணர்வுகளை ஆச்சரியமாய் பார்த்து நின்றாள்.
“எனக்கு எப்படி விளக்கனு புரியலை ஸ்பார்கில்.. இது இயல்பு.. இது..” என்று தடுமாறி பெருமூச்சு விட்டவன், “இந்த உணர்ச்சிகள் காதலில் இயல்பு.. உன்னால எழும் என் உணர்வுகளுக்கு நீ மட்டுமேதான் அடைக்கலம். இதையெல்லாம் கேட்டுட்டு என்னால எப்படி உன் உணர்வுகளை சாடிஸ்ஃபை செய்ய முடியும்னு நீ கேட்க வருவ.. ஆனா ஒன்னு சொல்றேன் புரிஞ்சுக்கோ.. காதலில் காமுறுதல் ஒரு அங்கம் தானே தவிர, அதுதான் எல்லாமேனு இல்லை. நிச்சயம் உன்மீதான என் காதல், இந்த உணர்ச்சிகளையும் எனக்குத் தரும். ஆனா அதுக்கு கரைகாணா இரவின் மிச்சங்களைத் துணையா கொண்ட கூடல் மட்டும்தான் வழிவகையான்னா நிச்சயம் இல்லை. உன்னோட அருகாமை, சின்ன அரவணைப்பு, ஒரு முத்தம்… இதுவே போதும் என் மொத்த உணர்ச்சிகளையும் அடக்கி ஆள. இதை எப்படி விளக்கனும்னும் எனக்குப் புரியலை, நீ எப்படி எடுத்துப்பனும் எனக்குத் தெரியலை. உன்னை இது ஹர்ட் பண்ணுதானுகூட தெரியலை. ஆனா புரிஞ்சுக்கோ.. நீ எனக்கு ரொம்ப முக்கியம்.. உயிருக்கு மூச்சு போல, எனக்கு உன் காதல் வேணும்” என்று, விளக்கம் கொடுக்கத் தெரியவில்லை என்று கூறி, அத்தனை அழகாய், ஆத்மார்த்தமாய் தன் காதலை விளக்கியிருந்தான்.
அவனையே வியப்பாய் பார்த்து நின்றவளுக்கு வார்த்தைகளே வர மறுத்தது. கண்கள் மெல்ல கலங்க, இதழ்கள் துடித்தன…
மடிந்துபோன மலர் மீண்டும் துளிர்விடுவது இயல்பு தானே? அதில் என்ன பிழை இருந்துவிடப் போகிறது? மீண்டும் உயிர்பெற்று மரம் கொடுக்கப்போகும் நன்மைகளுக்குப் பின், அது முதல் ஜென்மமா இல்லை புணர் ஜென்மமா என்றெல்லாம் யார் ஆராயப்போகின்றனர்? அப்படியே ஆராய்ந்தாலும்தான் அதில் அந்த மரத்துக்கு என்ன துயர்? அது அதன் வாழ்வைத் துவங்கித், தொடரத்தானே போகின்றது?
இவ்வாறான எண்ணங்களில், அவள் மனம் கனிந்து, கண்கள் கலங்கியது.
“ப்ரியன்” என்றவளாய் அவனை இறுக அணைத்துக் கொண்டவள், வெடித்து அழ, அவளைத் தன்னுள் ஆழ புதைத்துக் கொண்டவன் முகம், பெரும் சந்தோஷத்தின் சாயலை கண்ணீராய் வெளிப்படுத்தியது…
கண்ணீர் வெளிப்படுத்தும் காதலுக்குத்தான் எத்தனை வலிமையுள்ளது?!
ஆத்மார்த்தமான காதல் கூட, அவர்களின் காதலுக்கு முன், தன் வார்த்தையின் தூய்மை குன்றுவதாய் உணர்ந்ததோ எனும் நிலை அங்கு உருவானது… காதலின் அம்சங்களாய்…
-தொடரும்…
செம