Loading

ராமமூர்த்தி வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்க, “என்னங்க விசயம் தெரியுமா?” என்று வேகமாக ஆரம்பித்தார் கோதாவரி.

“என்னனு சொல்லு.. தெரியுமா இல்லையானு அப்புறம் சொல்லுறேன்” என்று ராமமூர்த்தி எப்போதும் போல் மனைவியை வம்பிழுத்தார்.

“உங்க தங்கச்சி வீட்டுல நடந்தது தெரியாதா?”

“என்னாச்சு?” என்று பதட்டமாக கேட்டார்.

“சண்முகி புருஷனுக்கு வேற ஒருத்தி கூட நாலு வருசமா தொடர்பிருக்காம்..”

ராமமூர்த்தி அதிர்ந்து போனார்.

“அவனெல்லாம் நல்லா இருப்பானா? பிச்சை எடுத்து தான் சாவான்.. நல்ல பிள்ளைய வச்சு வாழ துப்பில்லாம எப்படி ஒரு காரியத்த பண்ணிட்டான் பாருங்க?”

“இது எப்படி உனக்கு தெரியும்?”

“அவங்களுக்கு கடன் கொடுத்த உங்க ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தேன். அவரு தான் சொன்னாரு.. கேட்டதுல இருந்து மனசே ஆறல தெரியுமா?”

“சண்முகி எவ்வளவு நல்ல பிள்ளை.. அவளுக்குப்போய் துரோகம் பண்ணிருக்கானே.. இன்னுமா அவன அடிச்சு ஹாஸ்பிடல்ல போடல?”

“அத நான் கேட்கல. எனக்கு வருத்தமா போச்சு.. உங்க ஃப்ரண்ட் வேற கடன் பணத்த இப்பவே கொடுனு ஃபோன் பண்ணி கேட்குறாரு..”

“ப்ச்ச்.. அவனுக்கு அவன் கவலை.. நாம வேணா சொல்லி வைப்போம். கொஞ்ச நேரம் கொடுக்க சொல்லி..” என்றவர் கவலையோடு அமர்ந்திருந்தார்.

தங்கை கணவனோடு பகை வந்து விட்டாலும் தங்கையும் பெற்ற பிள்ளைகளும் நன்றாக வாழ வேண்டும் என்றே ஆசைப்பட்டார். சண்முகிக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்து வைத்தது அவருக்கு பிடிக்கவே இல்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் தானே புத்தி தெளியும் என்று நினைத்தார். ஆனால் அதை சொல்லக்கூட முடியாதே. குடும்பங்கள் எப்போதோ பிரிந்து விட்டது.

இப்போது அவளது வாழ்வு கெட்டுப்போனதை கேட்டு வருத்தமாக இருந்தது. அவள் கணவனை பார்த்தால் நன்றாக கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“எல்லாம் உங்க தங்கச்சிய சொல்லனும்.. ஒத்த பொம்பள பிள்ளைய அவசர அவசரமா ஒருத்தனுக்கு கட்டி வச்சு துரத்தனுமா? படிக்க வச்சுருந்தா நல்ல மாப்பிள்ளையா பார்த்து பொறுமையா கட்டி வச்சுருக்கலாம். ஆம்பள பிள்ளைய படிக்க வச்சுட்டு பொம்பள பிள்ளைய இப்படி செஞ்சுட்டா.. வாழ்க்கைய தொலைக்கிற வயசா சண்முகிக்கு?”

“நீ இதான் சாக்குனு கல்யாணிய திட்டாத”

“உடனே கோபம் வந்துடுமே.. நான் அவள தான் குறை சொல்லுவேன். அவளால தான் இப்படி ஆச்சு.” என்று தன் நாத்தனார் மீதிருந்த கோபத்தை காட்டி விட்டுச் சென்றார்.

பெற்றோர்கள் பேசுவதை எல்லாம் கேட்டிருந்த நாதினி மனம் வருந்தினாள். அந்த குடும்பத்தின் மீது பகை இருந்தது தான். ஆனால் அவளுக்கு எல்லோரையும் பிடிக்கும். முக்கியமாக சிவாவை மிகவும் பிடிக்கும்.

சிவா படித்த அதே கல்லூரியில் படித்தவள் அவள். அவளிடம் சிவா பேசியதில்லை தான். ஆனால் அவனை தூரமாக இருந்து பார்த்து பார்த்து மனதில் ஆசையை வளர்த்திருந்தாள்.

அவனுக்கும் பிரியாவுக்கும் இருக்கும் காதல் கதை பற்றி அவளுக்கு தெரிந்திருந்தால் ஒரு வேளை அவனை மறந்திருப்பாள். அது தெரியாததால் மனதில் ஆசை இருந்தது.

அப்படி ஆசை இருந்தாலும் கூட பெற்றோர்களுக்காக அதை மறைத்துக் கொண்டாள். அவர்களுக்கு நிச்சயமாக சிவாவை அவள் திருமணம் செய்வது பிடிக்காது. அனுமதிக்கவும் மாட்டார்கள். அவளது ஒரு தலைக்காதல் அவளோடு அழிந்து போக வேண்டியது தான்.

அவளுடைய அக்காவே போல காதலை வீட்டில் சொல்லி பெற்றோர்களின் ஆசியுடன் கரம் பற்றும் பாக்கியம் அவளுக்கு இல்லவே இல்லை.

‘பாவம் சண்முகி அண்ணி.. அவன போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு பக்கம் குடும்பப் பிரச்சனை. மறுபக்கம் காதலியின் மீது சந்தேகம் என்று சிவாவின் வாழ்வில் சந்தோசத்தை அடியோடு மறந்து விடச் செய்தது மனம்.

சுப்பிரமணியின் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் போதே, அடுத்து கடன்காரர்கள் வந்து நிற்கின்றனர்.

இப்போது அவ்வளவு நிறைய பணத்துக்கு எங்கே போவது என்று புரியவில்லை. அவர்களிடம் பெரிய சொத்தில்லை. நிறைய சேமித்து வைக்கவில்லை. பாண்டியன் சம்பாதிக்கும் பணம் வரவு செலவுக்கே சரியாகத்தான் இருக்கும்.

சிவாவும் சம்பாதிப்பதில் பாதிக்கும் மேல் கடனை அடைக்க பயன்படுத்தி விட்டதால் அவனிடமும் சேமிப்பு எதுவும் இல்லை. இப்போது கடனை அடைக்க அடுத்த கடன் தான் வாங்க வேண்டும். அது நடக்காத காரியம். என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை.

எல்லோரும் ஒருவித பயத்துடனும் கவலையுடனுமே நேரத்தை கடத்தினர்.

பிரியா ஊருக்குச் சென்று மூன்று நாட்கள் ஆன பிறகு சிவா அவளிடம் பேசுவதை குறைத்தான். நாளுக்கு நாள் அவள் மீது கோபமும் சந்தேகமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதை சரிபடுத்த வழியே இல்லை.

அவள் திரும்பி வந்த பிறகு தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தான். அப்படி காத்திருந்தால் மட்டும் அமர் விட்டு விடுவானா என்ன?

அமரின் அடுத்த வேலை ஆரம்பமானது.

சண்முகியிடம் விசயத்தை சொன்னவளிடம் ஆதாரங்கள் வந்து குவிந்து விட, அனைத்தையும் சண்முகிக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

சண்முகி மகனை நினைத்து கவலையில் இருந்தாள். சுப்பிரமணி மகனை பார்த்துக் கொள்கிறானா இல்லையா என்று தெரியவில்லை. பேசவும் வழியில்லை.

எப்படியாவது மகனிடம் தினமும் பேச வேண்டும் என்ற ஆசையோடு அன்று பள்ளிக்கு நேராக சென்று விட முடிவு செய்தாள். மகனுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருக்க அவளது கைபேசியில் ஆதாரங்கள் அனைத்தும் வந்து சேர்ந்தது.

சமைத்து டப்பாவில் அடுக்கியவள் ஆதாரங்களை எல்லாம் பார்த்து விட்டு இடிந்து போய் அமர்ந்து விட்டாள்.

விசயம் கேள்விப்படுவதற்கும் கண் முன்னால் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சுப்பிரமணிக்கு அலுவலகத்தில் நிறைய எதிரிகள் உண்டு. எல்லோரும் சத்தமில்லாமல் ஆதாரங்களை சேகரித்து வைத்திருந்தனர். என்றாவது ஒரு நாள் சுப்பிரமணிக்கு எதிராக பயன்படுத்தி அவனை அழித்து விட முடிவு செய்திருந்தனர் பலர்.

சண்முகி வந்து பார்த்து விட்டதை பார்த்து பலருக்கு சந்தோசம். ஆனால் சண்முகியை பார்த்தால் நிறைய சண்டை போடுபவள் போல தெரியவில்லை என்று சிலர் யோசித்தனர்.

இப்போது நீதிமன்றத்தில் சமர்பிக்க ஆதாரம் தேடுவதாக சொன்னதும் அத்தனை பேரும் தங்களது தாராள மனதை காட்டினர்.

உள்ளூரில் நல்லவன் வேசம் போட்ட சுப்பிரமணி வெளியூரில் செய்த அத்தனையும் வெளியே வந்தது. அவன் ஊருக்கு செல்லும் போது அவனோடு “அவளும்” செல்வது. அங்கே ஒரே அறையில் இருவரும் தங்குவது என்ற பல கூத்து நடந்திருக்கிறது.

ஒரே அறைக்குள் இருவரும் சென்று வருவதை படம் எடுத்திருந்தனர். சாப்பிடும் போது ஒருவருக்கொருவர் ஊட்டி விடுவது மற்றவர் எடுத்த காணொளியில் பின்னால் பதிவாகி இருந்தது.

இப்படி ஆதரங்கள் பல வந்து விட பார்த்து பார்த்து சண்முகி துடித்துப் போனாள். இதே கையால் அவளுக்கு உணவு ஊட்டியிருக்கிறான். இதே கையால் அவளை அணைத்திருக்கிறான். அவளோடு சந்தோசமாக வாழ்ந்து கொண்டே வேறு ஒருத்தியோடும் அதை போலவே வாழ்ந்திருக்கிறான்.

இது எல்லாம் என்ன வாழ்க்கை? எதற்காக இப்படி ஒரு இரட்டை வாழ்வு? அவள் இதையெல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லையே.

கோபமும் அழுகையுமாக அவள் அமர்ந்திருக்க கல்யாணி மகளருகே வந்தார்.

“ஏன்டி அழுற?” என்று அவர் பதட்டமாக கேட்க, கைபேசியை அவரிடம் கொடுத்து விட்டு எழுந்து சென்று முகத்தை கழுவினாள்.

கல்யாணிக்கு பாதிக்கு மேல் பார்க்க கூட முடியவில்லை. மனம் வெறுத்துப் போக “இந்த கருமத்த வக்கீலுக்கு அனுப்பு..” என்று விட்டார்.

“அதுக்கு முன்னாடி வேற இடத்துக்கு அனுப்பனும்மா”

“எங்க?”

“அத எல்லாம் அனுப்புன பொண்ணு ஒன்னு சேர்த்து சொல்லிருக்கா.. இந்த ஆதாரத்த வச்சு நான் அவங்க ஆஃபிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணா அவன் வேலை போயிடுமாம்”

கல்யாணி திறந்தவாய் மூட மறந்தார்.

“அப்படியா சொல்லுற?”

“ஆமா…”

“அப்ப இவங்களே அனுப்ப வேண்டியது தான?”

“அவங்க அனுப்புனா பொறாமையில செய்யுறாங்கனு கண்டுக்க மாட்டாங்களாம். இதுவே நான் பொண்டாட்டினு அனுப்புனா கண்டிப்பா வேலை போயிடுமாம்”

“அப்ப செய்டி… இப்பவே அவன் வேலை போகட்டும்”

“அவன் வேலை மட்டுமில்ல.. அவ வேலையும் சேர்ந்து போகனும். ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கட்டும்”

“விளங்காம போறவ.. அவளுக்கு அடுத்தவ புருஷன் தான் வேணுமா?”

“இவனுக்கும் தான புத்தி புல் மேயுது.. பொண்டாட்டி புள்ள இருக்கும் போதே ஆடிருக்கான். ரெண்டுக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கிறேன். சிவா வரட்டும். அவன் கிட்ட சொல்லி அனுப்ப சொல்லுவோம். இப்ப நான் குருவ ஸ்கூல்ல போய் பார்த்துட்டு வர்ரேன்” என்று விட்டு கிளம்பினாள்.

உணவை எடுத்துக் கொண்டு அவள் செல்லும் போது மதிய உணவு இடைவேளையில் பள்ளியில் குரு தனியாக அமர்ந்திருந்தான்.

காலையில் சுப்பிரமணியை ஒரு வழியாக்கி விட்டான். துவைத்த சீருடை இல்லை. உணவு இல்லை. எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் கேட்டு அவன் கூச்சல் போட சுப்பிரமணிக்கு எப்படி சமாளிப்பது என்று விளங்கவில்லை.

பழைய சீருடை ஒன்றை எடுத்து அணிவித்து அனுப்பி வைத்தான். உணவு எதுவும் சாப்பிடவும் நேரமில்லை. வாங்கவும் நேரமில்லை.

பள்ளிக்கு பசியோடு வந்தவனுக்கு மயக்கத்தில் எதுவும் புரியவில்லை. இப்போதும் அவன் பசியோடு அமர்ந்திருக்க சண்முகி உணவோடு வந்து விட்டாள்.

அவளை பார்த்ததும் குருவின் கண்கள் கலங்கி விட்டது.

“ம்மா..” என்று ஓடி வந்த மகனை அணைத்துக் கொண்ட சண்முகி அவனை அமர வைத்து உணவை ஊட்டி விட்டு நடந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டாள்.

“வீட்டுக்கு போனதும் முதல்ல துணியெல்லாம் துவைச்சு போடுனு சொல்லுடா.. சாப்பாடு வேணும்னா நான் செஞ்சு கொண்டு வர்ரேன். ஆனா அவன துவைக்க சொல்லு.. அது கூட முடியாதாமா அவனுக்கு?” என்று சண்முகி பொங்கினாள்.

பிறகு மகனுக்கு அறிவுரைகள் சொல்லி விட்டு எதாவது வேண்டும் என்றால் பக்கத்து வீட்டு பெண்ணிடம் கைபேசியை வாங்கி அழைக்கச் சொல்லி விட்டு சென்றாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்