Loading

அத்தியாயம் 11 :

அம்மன் கோவில்…

தமிழுக்காக சொல்லிய நேரத்திற்கு முன்னரே அவளை பார்க்கும் ஆவலில் பார்வதி இளாவை இழுத்துக்கொண்டு சின்னுவுடன் வந்துவிட்டார்.

பரிதி தமிழிடம்…

“ஜென்சி வீட்டுக்கு அடிக்கடி வந்து உன்னை யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க” என்று தமிழ் சென்னை வந்த அன்றே சொல்லியிருக்க… அவனால் தமிழுக்கு கொடுத்த வாக்கை மீற முடியாது, பார்க்க வர முடியாது என்று மறுத்தவளை அவனுக்காக என்று பேசி பேசியே அவர்களை சந்திக்க கோவிலுக்கு வர தமிழிடம் ஒப்புதல் பெற்றிருந்தான்.

பரிதி தங்களது குடும்பத் தொழிலான புட் ப்ரோடெக்ட் மேக்கிங் பேக்டரியை பார்த்து வருகிறான். பல்வேறு மாநிலங்களில் பல கிளைகள் உள்ளன. பெரிய பெரிய மார்க்கெட்களுக்கு இவர்களது தொழிற்சாலையிலிருந்து தான் பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் விநியோகம் ஆகின்றன.

பல்வேறு கிராமங்களிலிருந்து தான் காய்கறிகள், பழங்கள், இளநீர், போன்றவை கொள் முதல் செய்கின்றனர். வெளி மாநிலங்களில் இருந்தும் கூட கொள் முதல் செய்கின்றனர்.

அரசுவின் பண்ணையில் விளையும் அனைத்தும் பரிதியின் தொழிற்சாலைக்குத்தான் அனுப்பப்படுகிறது. குறிப்பாக தேங்காய்கள் மற்றும் இளநீர்.

கிங் புட்ஸ் என்ற பிராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை உணவுப்பொருட்களுக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகம். அதற்கு உணவுப்பொருட்களின் தரம், இயற்கை மாறாத சுவை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட வேதியியல் பொருட்களின் சரியான அளவு ஆகியவையே காரணம்.

கிங் புட்ஸ் என்றால் நம்பிக்கையாக வாங்கி பயன்படுத்தலாம் என்ற எண்ணம் நன்கு வேரூன்றியிருந்தது.

அதற்க்கு ஆரம்பம் தில்லையாக இருந்தாலும்… நல்ல முறையில் அதனை உலகம் பரவச்செய்தது அவரது மூத்த மகன் இளம்பரிதி.

இப்போதும் கூட கோதுமை, பார்லி, ஆவ்னா சடிவா (Avena Sativa)(ஓட்ஸ்) போன்ற தானியங்களை நேரடியாகச்சென்று தரம் பார்த்து வாங்குவதற்கே ராஜஸ்தான் செல்லவிருக்கிறான். அதனை தமிழிடமும் சொல்லிவிட்டே இரவு பயணத்திற்கான வேலைகளை கவனிப்பதற்காக மாலை, தாய் மற்றும் மனைவியுடன் பரிதி கோவிலுக்கு செல்லவில்லை.

தமிழுக்கு இளா மூன்றாம் முறை அழைப்பு விடுக்கும்போது தான் அவள் ஏற்றாள்.

தாங்கள் வந்து விட்டதாகக் கூற…

“இப்போ கெளம்பிடுதேன்’க்கா” என்றாள் தமிழ்.

“நீ இன்னுமாட்டிக்குமால கெளம்புல. உன்னைய பார்க்கணுமாட்டிக்குன்னு அத்தை ஒரு மணி நேரம் முன்னுக்கவே கூட்டியாந்துட்டங்கல… வெரசா வா” என சொல்லி வைத்துவிட்டாள்.

தமிழுக்கு அவர்களை பார்க்கக்கூடாது என்றில்லை… ஏன் தினமும் இளாவிடமும் பரிதியிடமும் அவளது மாமனார் தில்லையிடம் கூட வாரத்தில் இரண்டு நாட்கள் பேசி அவர்களின் நலன் அறிந்திடுவாள். ஆனால் பார்வதியிடம் ஏனோ அவளால் பேச முடிவதில்லை. தன்னால் தான் இப்பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிட்டதோ என்கிற தவிப்பும் குற்றவுணர்வும் தன்னிடம் பேசும்போது பார்வதிக்கு அதிகமாக வெளிப்படுவதால் அனைத்தும் சுமூகமாகட்டும் அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். பேசாவிட்டாலும் அவர் என்னுடைய அத்தை தானே! அது என்றும் மாறேதே! என அவரிடம் பேசுவதில்லை.

இப்போது பரிதி அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டுக்கொள்ள அவளால் பார்வதியின் சந்திப்பை மறுக்க முடியாது ஏற்றுக்கொண்டாள்.

“என்ன தமிழ் கையை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க?”

வேலை நேரம் ஆறு மணி முடிந்து சில நிமிடங்கள் கடந்திருக்க… வீட்டிற்கு செல்ல தமிழைத்தேடி அவி அவளது இருக்கைக்கு வந்தான்.

“அத்தை கோவிலுக்கு வர சொல்லியிருக்காங்க அவி. அல்ரெடி அவங்க வந்துட்டாங்க.” செல்வதற்கு மனமில்லையென அவளது குரலே காட்டிக்கொடுத்தது.

“யூ மீ பாரி அம்மா?”

மேலும் கீழும் தலையாட்டினாள்.

“விருப்பமில்லைன்னா எதாவது ரீஸன் சொல்லி, சாமி கும்பிட்டுட்டு அவங்களை போகச்சொல்லு. உன்னை புரிஞ்சிப்பாங்க. உன் புருஷன் மாதிரி அவங்க இல்லையே” என்று தன்னுடைய நண்பனுக்கும் சேர்த்து கொட்டு வைத்தான்.

“நீ வேற ஏம்ல அவனை நினைவூட்டுத” என்ற தமிழ் தலையை பிடித்தபடி, “நான் போகலன்னா வீட்டுக்கு வந்திடுவாங்கடா. அல்ரெடி கிளம்புனவங்களை பரிதி மாமா தான் பேசி கோவில்ல மீட் பண்ணிக்கோங்கன்னு ஏற்பாடு பண்ணாங்க.”

“சரி… வீட்டுக்கு வந்தா வரட்டும்.” அவிக்கு வீட்டிற்கு வருவதால் என்னவாகிடப் போகிறது என்றிருந்தது.

“அவன் பார்த்தான் அவ்வளவு தான். அதுவுமில்லாம” என்றவள் காரணத்தைக்கூறிட…

“நீ பேசினாலே கில்ட் ஆகுறாங்கன்னு பேசாம இருக்க ஓகே. பட் உனக்கு ஏன் நீ பேசலன்னாலும் அவங்க ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியல” எனக் கேட்டான்.

இக்கோணத்தில் தமிழ் யோசிக்கவேயில்லை.

“இன்னும் அது அவங்களுக்கு வேதனைதான!”

“தப்பு பண்ணிட்டேனா அவி.”

“இல்லைடா” என்றவன் “நான் ஒன்னு சொல்றேன் செய். அதுக்கு அப்புறம் ஆண்டிக்கு உன் லைஃப் அவங்களால் தான் ஸ்பாயில் ஆச்சுன்னு ஃபீல் பண்ண மாட்டாங்க!” என்றான்.

“என்னடா?”

“உன் லவ் அவங்ககிட்ட சொல்லிடு. இட்ஸ் சிம்பிள். ப்ராப்ளம் சால்வ்டு.”

“அவிஈஈஈ…” தமிழின் கண்கள் அகல விரிந்தது.

“என்ன மூஞ்சில அப்படியொரு ஷாக்?”

“உனக்கு…”

“யூ ஆர் மை ஃபிரண்ட். இதைக்கூட கெஸ் பண்ண மாட்டேனா? காலேஜ் டேஸ்லே தெரியும்.”

மேலும் அதிர்வு அவளிடம். தன்னுடைய காதல் பாரிக்கே தெரியாது என்றிருக்க… அவிக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பதில் தமிழுக்கு ஆச்சர்யம்.

“எப்படிடா?”

“அதை அப்புறம் பேசிக்கலாம். நீ ஸ்கூட்டி எடுத்துக்கோ. நான் கேப் புக் பண்ணிக்கிறேன்” என்றவன், போகலாமா வேண்டாமா என்று யோசித்தால் அவள் குழம்பிக்கொண்டே தான் இருப்பாளென்று அவளை கிளப்பி வண்டியில் அமர வைத்து அனுப்பிய பின்னரே தனக்கு கேப் புக் செய்தான்.

கோவிலிற்கு வந்து சேர்ந்த தமிழ் தயங்கி தயங்கித்தான் உள்ளே சென்றாள். அப்போதே நேரம் ஏழை தாண்டியிருந்தது.

கோவிலிற்கு வந்துவிட்டதாக அலைபேசியை எடுத்து அவிக்கு தகவல் அனுப்பிய கணம் ஜார்ஜ் இல்லாது அலைபேசி உயிரை விட்டது.

“சூப்பர்” என்று சொல்லிக்கொண்டவள் அதனை தன் கைப்பையில் போட்டபடி அவர்களைத் தேடினாள்.

கோவில் சுற்றுப்புறத்தில் அலசிட அவர்கள் தென்படவில்லை.

‘ஒருவேளை கிளம்பிட்டங்களோ’ என நினைத்தவள், ‘போன் பண்ணி கேட்கவும் முடியாதே’ என்று நகர, சின்னு ஓடிவந்து அவளது கால்களை கட்டிக்கொண்டாள்.

“சித்தி…”

“ஹேய் ஜாமூன் இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க?” எனக்கெட்டுக்கொண்டே குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்து மீண்டாள்.

“நீவர லேட்டாகும் தெரிஞ்சுது அதான் சாமி கும்பிடலாமேன்னு உள்ள போயிட்டோம்” என்ற இளா கீழே அமர, தமிழும் சின்னுவை மடியில் வைத்தபடி அமர்ந்தாள்.

“அத்தை எங்கக்கா?”

தமிழ் கேட்கும்போதே அவர்களது அருகில் உட்கார்ந்த பார்வதி… பிறரின் கவனம் ஈர்க்காது தமிழின் கன்னத்தில் மென் அறை ஒன்று வைத்தார்.

“கோபத்தை காட்டுறாங்களாமா!” இளா கேலி செய்தாள்.

“போடி” என்று இளாவை சொல்லியவர், தமிழின் கன்னத்தை வருடி…” இந்த அத்தை வேண்டான்னே முடிவு பண்ணிட்டியா?” என தழுதழுத்தார்.

“இதற்காகத்தான் இப்படி நீங்க அழுவீங்கன்னு தான் நான் உங்கக்கிட்ட பேசுறதே இல்லை” என்று அவர் கண் கலங்குவது பிடிக்காது வேகமாகக் கூறியவள்,

“என் லைஃப் அத்தை இது. நீங்க கேட்டீங்கங்கிறதுக்காக மட்டும் தான் நான் பாரியை மேரேஜ் பண்ணியிருப்பன்னு ஏன் நீங்களா நினைச்சிட்டு ஃபீல் பண்றீங்க.

அவன்கிட்ட சொல்லாம யார்கிட்டவும் சொல்ல கூடாதுன்னுதான் அமைதியா இருந்தேன்” என்றவள் ஒரு கணம் கண்களை மூடித்திறந்து…

“ஐ லவ் ஹிம் அத்தை. மோர் அண்ட் மோர். அவன்கிட்ட சொல்லாமலே என் லவ் நிறைவேற போகுதுன்னு சந்தோஷமாத்தான் நீங்க கேட்டதுக்கு ஓகே சொன்னேன். இதை சொல்லிட்டா உங்க வருத்தம் போயிடும் அப்படிங்கிற எண்ணமே எனக்கு வரல. அப்படி வந்திருந்தா எப்பவோ சொல்லியிருப்பேன். உங்கக்கிட்ட பேசாம இருந்திருக்க மாட்டேன். இப்போ கூட அவி தான் உன்னோட லவ் சொல்லிட்டன்னா ஆண்டிக்கு அவங்க பீல் குறையுமுன்னு சொல்லி அனுப்பினான்” என்றாள்.

இது பரிதி சொல்லிய விடயம் தான் என்றாலும், தமிழின் வாயாலேயே தான் காதலித்ததால் மட்டுமே பாரியை மணந்து கொண்டேன் எனக் கேட்கும்போது பார்வதிக்கு இன்னும் ஆசுவாசமாக இருந்தது.

“இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னாட்டி.” இளா தமிழை கடிந்து கொண்டாள்.

“பாரிக்கு என் மேல அப்படியொரு தாட்டே இல்லையே இளாக்கா!” அத்தனை வருத்தம் தமிழிடம்.

“ஹம்… எல்லாம் விதி வேறென்ன சொல்ல. அந்த அமிர்தாவை அவன் காதலிக்கிறான்னு சொல்லும்வரை நீங்க ரெண்டு பேரும் தான் காதலிக்குறீங்கன்னு நான், உன் மாமா எல்லாம் நினைச்சோம்” என்ற பார்வதியிடம் ஆதங்கமே மேலோங்கியிருந்தது.

“விடுங்கத்தை இனி நடக்கப்போறதை பார்ப்போம்” என்று இளா சொல்ல அதன் பின்னர் அவர்களின் பேச்சு கிராமத்திலுள்ள தமிழின் குடும்பம் சென்று, சின்னு புதிதாக வரைய கற்றுக்கொண்ட கரடி பொம்மை வரை நீண்டது.

கோவிலை விட்டு வெளியில் வரும்போது மழை தூறிக்கொண்டிருந்தது.

அதன் பின்னர் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று இரவு உணவினை முடித்துக்கொண்டே விடைபெற்றனர்.

உணவகத்திற்குள் அவர்கள் நுழையும் போது மழை வலுக்கத் துவங்கியிருந்தது.

“எங்களோட, காரில் வா தமிழ். டிராப் பண்ணிட்டு போறோம். மழை இருக்கே” என்று பார்வதியும் இளாவும் கூற மறுத்துவிட்டாள்.

“ஜென்சி ஸ்கூட்டி. நாளைக்கு அவளுக்கு தேவைப்படும்.”

“நம்ம வீட்டில் வேலை செய்யும் யாராவது விட்டு எடுத்துக்கலாம் தமிழ்.”

“அந்த யாராவதும் நனையனுமே அத்தை. நீங்க கிளம்புங்க. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி மழை நின்னதும் நான் கிளம்பிடுறேன்” என்றவளின் பேச்சினை மறுக்க முடியாது அவர்கள் கிளம்பும்போது நேரம் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றிட கிளம்பிய தமிழ் பாதி தூரம் வந்திருந்தபோது மீண்டும் மழை பொழிந்து வலுக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் மழையின் காரணமாகவும் சாலையோரம்  கடைகளும் எதுவுமின்றி வெறிச்சோடி இருக்க எங்கு நிற்பதென்று தெரியாது… சாலையோரப் பேருந்து நிறுத்துமிடம் வந்து சேர்வதற்குள் முழுவதுமாக நனைந்து போனாள்.

அலைபேசியும் அணைந்து கிடக்க ஜென்சிக்கு தகவல் கொடுக்க முடியாத நிலை.

மழை சற்று தன் வேகத்தை குறைத்திட… ‘அதான் நனைஞ்சுட்டோமே திரும்ப அதிகமா வரதுக்குள்ள போயிடலாம்’ என எண்ணி வண்டியை இயக்க அது உயிர்ப்பேனா என்று அடம்பிடித்தது. பலதடவை முயற்சித்தும் பலனில்லை. ஆளரவமற்ற பகுதியாக இருந்திட போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது.

‘எப்படி போவது. அட்லீஸ்ட் ஜென்னுக்கு சொல்லணுமே எப்படி?’ என்கிற யோசனையோடு அங்கிருந்து இரும்பிலான இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

*****

அறைக்குள் சென்ற அவி தன்னுடைய கோபம் வடியும் வரை குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.

எவ்வளவு நேரம் கடந்ததோ ஜென்னும் தன்னிலையில் மாற்றமில்லாது தலை கவிழ்ந்து இரு கைகளையும் கோர்த்து நெற்றியில் வைத்தவளாக அமர்ந்திருந்தவள்… யாரோ வரும் காலடி ஓசையில் எழுந்து நின்றாள்.

“என்னடா டோர் ஓப்பென்லே இருக்கு. இன்னும் தூங்கலையா நீ?” என்று அவியிடம் கேட்டுக்கொண்டே ரோந்து முடித்து வீட்டிற்கு வந்த பாரி கதவினை சாற்றித் தாழ்ப்பாள் இட… அவி நண்பனின் குரலில் அறையிலிருந்து வெளியில் வந்தான்.

இன்னும் ஜென் அங்கேயே நிற்பதைக்கண்டு…

“ஹேய் நீயின்னும் போகலையா” என்று எரிந்து விழுந்தான் அவினாஷ்.

அப்போதுதான் ஜென்னை பார்த்த பாரி… தாழிட்ட கதவை மீண்டும் திறந்து விட்டபடி…

“என்ன ஜென் இந்த நேரத்துல. எனி ப்ராப்ளம்?” என்று விசாரித்தான்.

பாரியின் பிரச்சினை என்ற வார்த்தையில் தான் இருவருக்கும் எதற்காக என்ற காரணம் நினைவில் வந்தது.

“தமிழ் இன்னும் வீட்டுக்கு வரலடா?”

“ஆமாம் பாரி… இளா அக்காவை பார்க்க கோவிலுக்கு போறேன்னு, ஆபிசிலிருந்து ஈவ்னிங் சிக்ஸுக்கு மேல் கிளம்பினாள். மழை வேற வருது. எங்க மாட்டிக்கிட்டான்னு கூடத் தெரியல” என்று அவினாஷ் கவலையாகக் கூறினான்.

“கால் பண்ணா மொபைல் ஆஃப் வருது பாரி.” ஜென் கைகளை பிசைந்தாள்.

“அதெல்லாம் வந்திடுவாள். கவலைப்படாமப் போய் தூங்குங்க.” அலட்சியமாகக் கூறிய பாரி அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தான்.

பாரியும் மழையில் நனைந்திருப்பான் போலும். குளிருக்கு இதமாக சூடாக ஏதேனும் குடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவன் பிளாக் டீ வைக்க கிச்சன் பக்கம் சென்றான்.

“உங்களுக்கும் வேணுமா?”

“ச்சய்… பிரண்டுன்னு உங்கக்கிட்ட சொன்னேன் பாருங்க” என்ற ஜென்,

“நானே போய் தேடுறேன்” என வெளியில் செல்ல…

“எந்த கோவிலுக்கு போனான்னு தெரியாம எத்தனை கோவிலுன்னு தேடுவ” என்று அவளைத் தடுத்த அவி,

“டேய் உங்க அம்மா நெம்பர் கொடுடா” என பாரியிடம் கிச்சன் சென்று கேட்டான்.

எதற்கு என்ற பார்வை மட்டுமே பாரியிடம்.

“அவங்களுக்கு கால் பண்ணி கேட்கலாம் டா.”

அவி சொல்ல பாரி தன் தேநீரை சுவைக்க ஆரம்பித்தான்.

“ப்ளீஸ் பாரி. எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றபடி வந்த ஜென் பாரியின் செயலில் அப்பட்டமாக அதிருப்தியை காண்பித்தாள்.

அவி மற்றும் ஜென் இருவருக்கும் ஒரே நேரத்தில், கல்லூரி நாட்களில் பூ வருவதற்கு ஒரு நிமிடம் காலதாமதமானாலும் அவளுக்கு என்னவானதோ ஏதோவென்று நண்பர்களை பாரி படுத்தி வைக்கும் நிகழ்வு தோன்றி இருவருக்குமே மனம் கனத்த நிலை.

“இதை உன்கிட்ட எதிர்பார்க்கல பாரி.” ஒரு சேரக் கூறியிருந்தனர்.

“உனக்கு என்னாச்சு பாரி. எப்போயிருந்து நீயிப்படி ஆனடா. அவள் மேல கொஞ்சம் கூடவா உனக்கு அந்த பழைய அன்பு இல்லை. அவளை பழிவாங்க உனக்கு இந்த சிட்டுவேஷனா கிடைச்சுது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவி, பாரியின் மொபைலை எடுத்து பார்வதியின் எண்ணைத் தேடிட… வேகமாக அலைபேசியை பிடுங்கியிருந்தான் பாரி.

பாரி குடும்பத்தை விட்டு சென்றது முதல் பார்வதி அவனுக்கு அழைத்துக்கொண்டே இருக்க… அப்போது அவர்மீதிருந்த கோபத்தில் எப்போதாவது ஏற்று ஏதேனும் வார்த்தையை விட்டுவிடுவோம் என்கிற பயத்தில் அப்போதே பார்வதியின் எண்ணை பிளாக் செய்து டெலிட் செய்திருந்தான்.

அதனை அவியிடம் காட்டிக்கொள்ள என்னவோ போலிருந்தது. எண் நினைவிருந்தும் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை.

அதனால்…?

“நானே போறேன்” என்றவன் தமிழ் இருக்குமிடம் தெரிந்ததைப்போல் நேராக அத்திசையில் தன் இருசக்கர வாகனத்தை செலுத்தினான்.

மழையின் காரணமாக சற்று தாமதமாகவே இரவு நேர ரோந்து பணிக்கு பாரி சென்றான்.

மழையின் காரணமாகவும், அவி சொல்லியதாலும் தன்னுடைய இருசக்கர வாகனத்தை விடுத்து காவலர் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

பாரி கிளம்பிய சில நிமிடங்களிலேயே மீண்டும் மழை ஆரம்பமாகியது.

மிதமானத் தூறலாகவே இருக்க… ‘ரோந்தினை முடித்தபடி கிளம்பிவிடலாம்’ என நினைத்தவன் அதன்படி சுற்றுப்புறத்தை அலசியவாறு சென்றுகொண்டிருக்க… தூரத்தில் ஒரு பெண் தனது இருசக்கர வாகனத்தை இயக்க முயற்சித்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

யாரென்று அருகில் வந்தவன் அப்பெண் தமிழ் என்றதும் அப்படியே வாகனத்தை ஒரு பக்கமாக வளைத்து ஓட்டிச் சென்றுவிட்டான்.

கீழே இறங்கி என்னவென்று கூட பார்க்கவில்லை.

பாரியை கண்டதும் தமிழின் மனதில் எழுந்த ஒரு நிம்மதி அவனின் செயலில் எங்கோ ஓடிப்போனது.

‘ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட தனக்கு உதவ முடியாத இடத்தில் தானிருக்கின்றோமா?’ என்ற எண்ணம் எழ, கண்களில் முட்டி நின்ற கண்ணீரை வழிய விட்டவாறு செல்லும் அவனின் வாகனத்தை வெறித்தாள். தமிழின் கண்ணீர் மழையோடு கரைந்தது.

அப்படியே மழையில் நனைந்தபடி ஸ்கூட்டியில் அமர்ந்தவள், மழை பொழிகிறது, நேரம் கடக்கிறது, வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஜென் தேடுவாள் என்கிற எவ்வித நினைப்புமின்றி பாரியின் செயலில் சட்டென்று மனம் நோக அப்படியே ஸ்கூட்டியின் முன்னால் இரு கைகளையும் வைத்து தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

நேரம் பல தாண்டியிருக்க…

எவ்வளவு அடக்க பார்த்தும் அவளின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

ஒரு காலத்தில் அவளுக்கென்றால் முதலில் துடிக்கும் உயிர் பாரி. இன்று அவனே தன்னை யாரோப்போல் கடந்து சென்றது அத்தனை வலியை கொடுத்தது அவளுக்கு.

“வேந்தா” அவளின் உதடுகள் அரற்றிய அதே கணம்…

“என்னை அப்படி அழைக்க உரிமை உள்ளவள் என் பூ மட்டும் தான். எப்பவும் நீ என் பூ ஆகிட முடியாது” என்று பாரி அன்று கத்திய கத்தல் இன்றும் அவளின் உடலை தூக்கிப்போடச் செய்தது.

______________________

மழை முற்றிலும் நின்றிருந்தது.

ஈரத்தில் இருப்பவளை ஈரக்காற்றும் சேர்ந்து குளிர்விக்க… உடலில் அப்பட்டமான நடுக்கம்.

பாரியின் செயலில் மனதும் ரணப்பட்டிருக்க மொத்தமாகத் துவண்டிருந்தாள்.

மனம் சோர்ந்ததால் அனைத்து சக்தியும் வடிந்ததைப்போல் உணர்ந்தவள் மெல்ல வண்டியிலிருந்து இறங்கி நிற்க கால்கள் மரத்து இருந்தன. நிலையாக பாதம் பதிக்க முடியாது தள்ளாடியவள் வண்டியைப் பிடித்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள்.

மெல்ல அடி வைத்து பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

‘அத்தை சொன்னமாதிரி அவங்களோட கிளம்பியிருந்தா தேவையில்லாத வலி இப்போ இருந்திருக்காது’ என காலம் கடந்து யோசித்தாள்.

‘முதலில் இங்கிருந்து செல்ல வேண்டும் எப்படி?’ என அவள் சிந்திக்க… அவளின் அருகே பாரி தன் வாகனத்தில் வந்திறங்கினான். அவனோடு இன்னொருவரும் இறங்க யாரென்று தமிழ் கேள்வியாக அவரை ஏறிட்டாள்.

தமிழிடம் எதுவும் பேசாது ஒரு பார்வை மட்டும் பார்த்தவன், அந்த நபரிடம் அங்கு நின்றுகொண்டிருந்த ஸ்கூட்டியைக் காட்டினான்.

‘ஹோ… மெக்கானிக்.’ யூகித்தவள், பாரியையும் அளவிட்டாள்.

‘வீட்டுக்கு போயிட்டு வர்றான். ஜென் அவி எதாவது சொல்லியிருப்பாங்க’ என்று தானாகவே சரியாகக் கணித்தாள்.

மெக்கானிக் தமிழை மேலும் கீழும் பார்த்தவாறு வண்டியின் அருகே செல்ல அதன் பிறகே தன்னிலை உணர்ந்தாள்.

தமிழ் மொத்தமாக நனைந்திருந்தாள். அணிந்திருந்த டி-ஷர்ட் உடலோடு ஒட்டி அங்கங்களை தெளிவாக எடுத்துக்காட்டியது. பாரி மட்டும் இருந்திருந்தால் எவ்வித உணர்வும் தோன்றிருக்காதோ எண்ணவோ! அருகே யாரென்றே தெரியாத அந்நிய ஆடவன் ஒருவனும் இருக்க மிகவும் சங்கடமாக உணர்ந்தாள். மார்பிற்கு குறுக்கே தன் கை பையினை வைத்து பிடித்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு அவஸ்தையாக நின்றிருந்தாள்.

தமிழின் நிலை புரிந்ததோ என்னவோ…

தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டி அவளை பாராது நீட்டினான். உள்ளே குளிருக்காக ஆர்ம் கட் டி-ஷர்ட் ஒன்று அணிந்திருந்தான். வீட்டில் தானே இருக்கப்போகிறோமென்று ஆர்ம் கட் அணிந்தவன், அவி மற்றும் ஜென்னின் தொல்லை தாங்காது தமிழை அழைத்துவர கிளம்பிய நேரத்திலும் தன் நலன் எண்ணியே அங்கு வரவேற்பறையில் இருக்கையில் கிடந்த அவனது மற்றொரு டி-ஷர்ட்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டே வந்திருந்தான்.

நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நம்மைவிட நமக்கு அருகில் இருப்பவர் தான் அதிகம் நொந்துபோவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் மழையென்றும் பாராது ஒரு கொள்ளை கும்பலை அந்த மழை இரவிலேயே பிடிக்க வேண்டுமென்கிற அவன் ஆடிய தீவிர ருத்ர தாண்டவத்தில் அந்த ரவுடி கும்பல் பிடிபட்ட பின்னரே அவனின் தேகமும் மனமும் மழையை உணர்ந்தது. அந்தளவிற்கு வேலையென்றால் மூழ்கிப்போபவன் அடுத்த நாள் ஜூரம் வைத்து, மழையில் போட்ட ஆட்டத்திற்கு அவனை நன்கு வைத்து செய்து ஒரு வாரத்திற்கு மேல் அவனை வாட்டி வதைத்தே விடைபெற்றது.

அன்று தனிமையில் உறவுகளுக்காக அவன் ஏங்கியது. அக்கணமே தனக்கென்று பார்க்க யாருமில்லையென தன் உடல் நலனில் தானாக அக்கறையை ஏற்படுத்திக்கொண்டான்.

அதன் விளைவே ஆடைக்கு மேல் ஆடை.

ஆனால் அது இப்படி உதவும் என்று அவன் நினைக்கவில்லை. தமிழுக்கு அது உதவி தானே.

பாரி ஆடையை நீட்டிக்கொண்டே இருக்க…

தமிழ் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

‘கொழுப்பை பாரேன்.’ பாரியின் மனவோட்டம்.

“இவரு பார்த்தும் பார்க்காத மாதிரி இந்த ராத்திரி நேரத்துல கொட்டுற மழையில அம்போன்னு விட்டுட்டு போவாறு. திரும்ப வந்து பாவம் பார்க்குற மாதிரி கொடுத்தால் நாங்க வாங்கிக்கணுமோ!”

தமிழின் முணுமுணுப்பு அந்த நிசப்தத்தில் பாரிக்கு நன்றாகவே கேட்டது.

அப்போதுதான் அவளின் முகத்தை கூர்ந்து நோக்கினான். கண்கள் இரண்டும் சிவந்து தடித்திருந்தது.

‘அழுதிருப்பாள் போல’ என நினைத்தவனுக்கு தன் செயல் இப்போது சிறுமையாகத் தெரிந்தது.

‘பார்த்தும் பார்க்காததைப்போல் சென்றிருக்கக்கூடாதோ!’ வருந்தியவனை அவனது மனமே கடிந்து கொண்டது.

‘நீயொரு போலீசா இருந்தும்… சமூகத்தில் நடக்கும் அவலங்கள் நல்லாத் தெரிஞ்சும் இப்படி செய்தது சரியில்லை. அவளுக்கு உறவுங்கிற முறையில் உதவி செய்திருக்க வேண்டாம். போலீஸ்ங்கிற அடிப்படையில் யாரோ ஒரு பொண்ணுக்கு செய்யுற உதவியா செய்திருக்கலாம். கண்டுக்காமப் போயி அவளுக்கு வலியையும் உனக்கு குற்றவுணர்வையும் வாங்கிக்கிட்ட!’

மனதில் ஒலிக்கும் வார்த்தைகள் அவனது நெஞ்சத்தை தொட… தமிழின் முகத்திருப்பலை பெரிதுபடுத்தாது அவளது தோளின் மீது தன்னுடைய ஆடையை போட்டுவிட்டு நகர்ந்து நின்றுகொண்டான்.

அதனை எடுத்து அவனிடமே கொடுக்க கையை நீட்டியவள், மெக்கானிக்கின் பார்வை தன்னை தொட்டு மீள வேகமாக அணிந்து கொண்டாள்.

“வேலையை மட்டும் பாருங்க. பார்வை வேற எங்கோ போற மாதிரி இருக்கே! ஸ்டேஷன் போலாமா?” பாரியின் அழுத்தக் குரலில் மெக்கானிக் வண்டியை பழுது பார்த்துவிட்டு தான் அடுத்து நிமிர்ந்தார்.

“ரெடி சார்” என்றவர் குனிந்தபடியே பாரி அளித்த பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர, பாரி சென்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பார்த்து சற்று தூரம் சென்று வந்து தமிழின் முன் நிறுத்தினான்.

பாரியின் செயல்களை எல்லாம் ஒருவித மரத்த நிலையிலேயே தமிழ் பார்த்திருந்தாள்.

பாரி அவளிடம் எதுவும் பேசிடாது தன் வண்டியில் ஏறி அமர்ந்துகொள்ள…

மேலும் ஐந்து நிமிடங்கள் கடந்தன.

பாரி நகர்வதாக இல்லையென்றதும் தான்… தான் முன் செல்வதற்காக நிற்கிறான் என்பதை தானாக புரிந்து ஸ்கூட்டியை எடுத்திருந்தாள்.

தமிழுக்கு சற்று இடைவெளிவிட்டு அவளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அவள் பின்னேயே மெல்ல ஊர்ந்தான்.

‘இந்த வேகத்துக்கு தான் காலையில் அத்தனை ஆட்டமா’ என அவியிடம் இருசக்கர வாகனத்தில் செல்ல அவள் பேசிய பேச்சுக்கள் நினைவில் தோன்ற மெல்ல முணுமுணுத்தான்.

அவளுக்கு சைக்கிள் ஓட்டுவதற்கே  பயமென்று அவனுக்குத்தான் தெரியுமே! அதனாலேயே அவள் காலையில் ஸ்கூட்டியில் அவியை வைத்து ஓட்டிச்செல்வதை ஆச்சர்யமாக பார்த்தான். அவி மீது சற்று பொறாமையும் அந்நேரம் எழுந்ததோ? அவன் மட்டும் அறிந்தது.

இவர்கள் வந்து சேர, அவியும் ஜென்னும் அவரவர் வாசலிலேயே நின்றிருந்தனர்.

ஜென் வீட்டிற்கு நேராக தமிழைக் கண்டதும் வேகமாக அருகில் வந்த அவி…

“இப்படி நைட் வாட்ச்மேன் வேலை பார்க்க வச்சிட்டியே தமிழ்” என கிண்டல் செய்த அவிக்கு, பாரி தமிழைத்தேடி சொல்லும்போதே அவளைப்பற்றிய பயம் நீங்கியிருந்தது.

அவியின் தோளில் அடி ஒன்றை வைத்த தமிழ்…

“மழையில வண்டி நின்னுடுச்சுடா” என்றவள், ஜென்னின் கையிலிருந்த அலைபேசியை பறித்து இளாவிற்கு அழைத்து தான் எப்பவோ சென்றுவிட்டதாகவும் சொல்வதற்கு மறந்துவிட்டதாகவும் கூறி வைத்தாள்.

அப்போதுதான் இருவருமே தமிழ் அணிந்திருந்த பாரியின் உடையை கண்டு பதறியவர்களாக…

“தமிழ்… ஆர் யூ ஓகே?” என்று கேட்க…

“ஹம்… ஓகே தான்” என்று தோளை உயர்த்தி இறக்கி கூறினாள்.

“மழையில் நனைந்து என் ட்ரெஸ் ரொம்ப ஸ்டிக்கியா இருந்தது. சோ, டிசி சார் எனக்கு அவர் ட்ரெஸ் தர்மம் செய்தாரு.”

மதிலைத்தாண்டி வாயில் படியில் ஏறிக்கொண்டிருந்த பாரிக்கும் தமிழின் வார்த்தைகள் நன்கு கேட்டன.

‘அது தனக்கான குத்தல் பேச்சு’ என புரிந்துகொண்டவன், திரும்பியும் பாராது உள்ளே சென்றுவிட்டான்.

“பாரி வந்து ரொம்ப நேரமாச்சே. நீயெங்க மாட்டிகிட்ட?” அவி தமிழை விசாரிக்க…

அவளுக்கு பாரியை நினைத்து அடப்பாவி மொமண்ட்.

‘அப்போ கேடி போலீஸ் ஃபர்ஸ்ட் என்னை பார்த்திட்டு போனதை சொல்லாம, தேடுற மாதிரி வந்திருக்கான்’ என கணித்தவள் அதற்கேற்றவாறு கூறி சமாளித்தாள்.

அதன் பின்னர் தமிழ் ஈரத்தோடு இருப்பதை உணர்ந்தே இருவரும் அவளை விட்டனர்.

தமிழிடம் மட்டும் சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் சென்ற அவி… படுத்துவிட்ட பாரியை எழுப்பி, மாலையே தேய்த்து வைத்திருந்த சப்பாத்தியை வார்த்து, செய்து வைத்திருந்த உருளைக்கிழங்கு மசியலை சூடு செய்து அவி பறக்க அவன் முன் தட்டில் வைத்தான்.

அவியும் அவனுடனேயே சாப்பிட்டான்.

“சமைக்க திங்க்ஸ்?” பாரி கேள்வியாகப் பார்த்தான்.

“எனக்கு இந்த வெளி சாப்பாடெல்லாம் செட் ஆகாது மச்சான். அதான் ஈவ்னிங் பிளாட் போய் சமைக்க வேண்டிய வெசல்ஸ் மட்டும் எடுத்துக்கிட்டு வரும்போதே கொஞ்சம் வெஜ்ஜஸ் வாங்கிட்டு வந்தேன்” என்றபடி உணவினை வாயில் வைத்தான் அவி.

அதன் பின்னர் எதுவும் கேட்டிடாது உண்டு முடித்து தட்டினை எடுத்துக்கொண்டு கிச்சனிற்குள் நுழைந்த பாரி கையை கழுவிக்கொண்டு கிச்சனை பார்த்தவன் வெளியில் வந்து “இதுதான் கொஞ்ச திங்க்ஸ்சா மச்சான்” என அவியை முறைத்தான்.

தம்ளர் முதல் குளிர்சாதனப்பெட்டி வரை அனைத்தும் இருந்தது.

“எப்படியும் சமைப்பதற்கு இதெல்லாம் அத்தியாவசியம் தானே பாரி” என்றிட…

பாரி குளிர்சாதனப்பெட்டியை காண்பித்தான்.

“நமக்கு இருக்க வொர்க் லோடுக்கு… டெய்லி வெஜ் வாங்க மார்க்கெட் போக முடியாதுடா. அப்படியே வாங்கி வச்சாலும் கெட்டுப்போகும். அதுக்குத்தான் ஃபிரிட்ஜ்” என்று அசராதுக் கூறினான்.

“ஆஹான்…” என்ற பாரி…

“எப்படியும் இந்த கேஸ் முடிஞ்சா வேறெங்காவது டிரான்ஸ்பர் கேட்டு வாங்கியாவது இங்கிருந்து நான் போயிடுவேன் அவி”

“சோ?”

“இப்படிலாம் என்னை பேம்பர் பண்ணாதடா. அரவணைப்புக்கு பழகிட்டா ரொம்ப கஷ்டம். அப்புறம் தனியா இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். திரும்ப அதுக்கு பழகணும்” என்றவன்

“உன் ரூம் செட் பண்ணியிருந்தாலும் பரவாயில்லை… இன்னைக்கு ஒருநாள் என்னோடவே படுத்துக்கோ அவி” எனக்கூறிச்சென்று படுத்துவிட்டான்.

பாரியின் பேச்சு அவனது நான்கு வருட தனிமையை அவி உணர்வதாய். அதுவே குடும்பமாக ஒரு கூட்டுக்கள் வளர்ந்தவன், இந்த நான்கு வருடங்களாக தனிமையில் எந்தளவிற்கு வேதனையைஉணர்ந்திருக்கிறான் என்பதையும் உணர வைத்தது.

ஆனால் இது அவனால் அவனே அவனுக்காக ஏற்படுத்திக்கொண்டது. பிறரை குற்றம் சொல்லிட முடியாதே.

தனிமையில் பழகிவிட்டேன் இனி அதனுடையே பயணிக்க விரும்புகிறேன் என்றே அவியுடன் தங்காது காவலர் குடியிருப்பிற்கு வந்தான். ஆனால் அவியும் பின்னோடு வருவானென்று எண்ணவில்லை. தமிழ் கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ் சொல்லியதற்காக மட்டுமே அவி வந்திருப்பானென்பது உண்மையல்ல.

அவியும் தனிமையை வெறுப்பவன் தானே.

பாரி வருகிறான் என்றதும் அதிகம் மகிழ்ந்தது அவியின் மனம்.

ஆனால் அடுத்த நாளே அவன் கிளம்புவும் மிகவும் வருத்தம் கொண்டவன், மீண்டும் பாரி வருகிறான் என்பதில் மகிழ்ந்திருக்க… தமிழ் அவனுடன் இங்கு வந்து தங்க சொல்ல ஜென்னிற்காக யோசித்தவன் மறுப்பேதும் தெரிவிக்காது பாரியுடன் தங்க வந்துவிட்டான்.

தனிமை தான் எத்தகைய கொடுமை வாய்ந்தது.

இருவரும் உணர்ந்திருந்த போதும் தனிமையை விரட்ட மட்டும் முயற்சிக்கவில்லை.

இப்போது இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகிப்போயினர்.

உறக்கமில்லாது கண்களை மட்டும் மூடி படுத்திருந்த பாரியின் அருகில் அவி படுத்ததும் அவனது கையை எடுத்து தன்மேல் போட்டுக்கொண்டான் பாரி.

“நீ இங்கையே இருந்திடலாமே பாரி” என்ற அவி “எனக்கும் யாருமில்லை” என்றிட…

வேகமாக இமை திறந்து அர்த்தமாக அவியை ஏறிட்ட பாரியின் யோசனை ஜென்னிடம் சென்று நின்றது.

“கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் அவி. அவ்வளவு தான். தூங்கு” என்ற பாரி மேசையில் வீற்றிருந்த புகைப்படத்தை பார்த்தவாறே உறங்கிப்போனான்.

அது அவனது திருமண புகைப்படமா அல்லது சிறுவயது பாரி பூவிருந்த புகைப்படமா என்று அவிக்கு தெரியவில்லை. இரண்டும் அருகருகே இருந்தது.

அவனாகச் சென்று தமிழை அழைத்து வந்ததால் பாரி மாறி வருகிறானென்று மகிழ முடியாது… பாரி கணிக்க முடியாதவனென்று அவிக்கும் தெரியும்.

பாரி அவிக்காக யோசிக்க… அவி பாரிக்காக யோசித்தான். இருவரின் எண்ணமும் ஈடேறிடுமா?

******

வீட்டிற்குள் வந்த தமிழ் ஈர கூந்தலை மட்டும் நன்கு விரித்துவிட்டு அப்படியே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

பாரியின் உடையை பல முறை தமிழ் அணிந்திருக்கின்றாள். ஆனால் இப்போது? அவனுக்கே உரிமை உள்ளவளாக அணிவது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. அத்தோடு புதுவித உணர்வுகளையும் தோற்றுவித்தது.

அவனே உடலோடு ஒட்டியிருக்கும் கனா. நெஞ்சமெங்கும் தூவானத் தூறலின் சில்லிப்பு.

கண்ணாடியின் முன் வந்தவள்,

அணிந்திருந்த உடையை கழுத்து பகுதியில் பிடித்து இழுத்து வாசம் நுகர்ந்தாள்.

அவனது வாசம் நாசி நுழைந்து நுரையீரல் சேர மூர்ச்சையாகிப்போகும் விந்தை அவளுள்.

இதயம் துடித்தது.

இத்தனை நாளும் அவனுடன் சேர்ந்து அனைவரைப்போலவும் ஒரு கணவன் மனைவி வாழ்க்கை வாழ்ந்திட வேண்டுமென்ற அவளின் ஆசை இந்நொடி பேராசை ஆகியது.

பாரி பின்னாலிருந்து அணைத்திருப்பதை போல் கற்பனையில் நெஞ்சம் விம்மியவள் மேலும் ஆழ்ந்து நுகர்ந்தாள் அவனது ஆடையை.

அந்நேரம் அவளை சாப்பிட அழைக்க வந்த ஜென்…

“பலமான ரொமான்ஸ் நடந்திருக்கும் போலவே” என்று தமிழின் தோளில் கட்டிக்கொண்டு வினவினாள்.

மோனை நிலை கலைந்து பதறி விலகிய தமிழ்…

“அது ஒன்னு தான் குறைச்சல்” என்று அலுத்துக்கொண்டாள்.

“அவன் மனசு மாறவேமாட்டான் ஜென்” என்ற தமிழ் “அவன் எந்தளவுக்கு என்னை வெறுக்கிறான்னு இன்னைக்கு தெரிஞ்சிடுச்சு” என்றாள்.

“எதை வச்சு சொல்ற?”

“ஆங்…” எனத் தடுமாறிய தமிழுக்கு பாரி பார்த்தும் பார்க்காது சென்றது மனதில் எழுந்து கண்களை கரிக்கச் செய்தது.

ஜென்னாகவே இருந்தாலும் அவளிடம் கூட பாரியை விட்டுத்தர மனமில்லாதவள்…

“அதுக்கு தனியா வேற ஏதாவது அவன் செய்யணுமா என்ன? பார்க்குற பார்வையே சொல்லுதே” என்று எதையோக்கூறி சமாளித்து வைத்தாள்.

தோழியை நம்பாத பார்வை பார்த்த ஜென்…

“உன் ஃபிரண்ட் இங்கவே செட்டிலாகிட்டான்” என்று மாலை அவி பிளாட்டிலிருந்து கொண்டு வந்தப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்ததை பற்றிக் கூறினாள்.

“அவியும் பாவம் தான் ஜென். அவனுக்குள்ள எவ்ளோ வேதனை. பட் அதெல்லாம் இல்லாத மாதிரி எவ்வளவு திடமா இருக்கான்.” நண்பனை நினைத்து சற்று கர்வமாகவே தமிழ் கூறினாள்.

“அவி அம்மாக்கு என்னாச்சு ஜென். அவங்க இப்போ அவனோட இல்லையா?” எனக் கேட்ட தமிழின் கேள்வியில் ஜென்னிற்கு அன்றைய நாளின் தாக்கம் முகத்தில் அறைந்தது.

“அவங்க… இறந்துட்டாங்க தமிழ்.”

“வாட்.” அப்படியொரு அதிர்வு தமிழிடம்.

“அவி என்கிட்ட சொல்லவேயில்லை ஜென்.” தமிழின் குரல் நடுங்கியது.

நண்பர்களுக்கு இடையேயான பிரிவு அவர்களுக்குள் நடந்த நிகழ்வினை அறிந்துகொள்வதில் பெரும் தடையாக இருந்துவிட்டது.

இதில் தமிழுக்கு பாரியைப்பற்றி சிந்தித்தே நாட்கள் நகர்ந்திருந்தன.

சில நிமிடங்களுக்கு பின்னர் சுயம் மீண்ட தமிழ்…

“நீயேன் அவிகிட்ட பேசுறதில்லை?” எனக் கேட்டாள்.

அவர்களின் காதல் மட்டுமே தெரிந்திருந்த தமிழுக்கு அவர்களுக்கான பிரிவின் காரணம் தெரிந்திருக்கவில்லை.

ஜென் எப்படி சொல்லுவாள். தவறு முழுக்க அவளிடம் தானே!

“ஓகே. உனக்கா எப்போ தோணுதோ அப்போ சொல்லு.”

“சாரி தமிழ்.”

“இட்ஸ் ஓகே ஜென். அவியும் சொல்லலன்னா மத்தவங்களுக்குத் தெரிய வேண்டான்னு நினைக்குறீங்க. புரியுது.” என்ற தமிழ்…

“பிரிவுக்கு பழகிடாதீங்க ஜென். அதுவே நிரந்தரமாகிடும்” எனக்கூறி “உன் மேல தப்பிருந்தா கொஞ்சம் கூட யோசிக்காத. அவன்கிட்ட பேசு. மன்னிப்பு கேளு. அவன்கிட்ட இறங்கிப்போகாம வேற யார்கிட்ட…” என விட்டுக்கொடுத்தால் தான் வாழ்க்கையென்று தாற்பரியம் கூறினாள்.

“அவிக்கு இப்போ என்மேல இருக்கிறது வெறுப்பு, கோபம் மட்டும் தான் தமிழ். காதல் கொஞ்சமும் இல்லை” என்ற ஜென் தன்னுடைய தந்தையின் இறப்பிற்கு பிறகு இன்றுதான் அழுகிறாள்.

அந்த அழுகை அவள் தந்தையின் இறப்பை நினைவூட்டிட… தன் மீது அத்தனை கோபமிருந்தும் அன்று தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தானே! அதோடில்லாமல் அவள் வேலைக்கு சேர்ந்து சற்று திடமாகும் வரை அவளுக்கு துணையாக இருந்தானே! என்னவொன்று அவளிடம் பேசிட மாட்டான். அருகினிலேயே இருந்தாலும் முகம் பார்த்திட மாட்டான்.

ஜென் மீது கோபமிருந்த போதும்… அவளை தனித்து விட்டுவிடவில்லை அவன். ஆனால் அவள்? நிதானமிழந்து சுயநலமாக பேசிவிட்டாளே! மாற்றிட முடியுமா?

அவியை நினைத்து அவனது காதலை நினைத்து வாய்விட்டு கதறினாள்.

“மொத்தமா இழந்துட்டேன் தமிழ். என் அவியை மொத்தமா தொலைச்சிட்டேன்” என்று தலையில் அடித்துக்கொண்டு புலம்பினாள்.

தமிழுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. அவளும் அப்படியொரு நிலையில் தானே இருக்கின்றாள்.

என்னவொன்று தமிழுக்கும் பாரிக்கும் மணம் ஆகிவிட்டது. அவ்வளவே.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
37
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்