அத்தியாயம் – 2
மருத்துவமனை டீனின் அறைக்குள் நுழைந்தவனின் நடை திடமாக ஒலித்தது, மேசை முன் சில மெடிக்கல் ஃபைல்ஸை கவனித்துக் கொண்டிருந்த டீன், அவனைப் கண்டவுடன்.. “யெஸ்… என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே” என்று மரியாதையோடு கேட்டார்…
கண்ணில் கூர்மையான ஒளியுடன் அமர்ந்திருந்தவன்,.. “கொஞ்ச நேரத்துக்கு முன்பு ஒரு பேசண்ட் இங்கே அட்மிட் ஆகிருக்காங்க, அவங்களோட ஒரு பொண்ணு மட்டும் வந்திருக்காங்க, அவங்களுடைய ஹெல்த் கண்டிஷன் என்ன?” என்றான் சுருக்கமாக,…
“ஒன் மினிட்ஸ்” என்றவாறு,.. ஃபைலை புரட்டி பார்த்தவர்,…
“எஸ் சார், அந்த பேசண்ட்க்கு சிவியர் கார்டியாக் ப்ராப்ளம், உடனடியா பைபாஸ் சர்ஜரி செய்யலைனா உயிர் பிழைப்பது கடினம், நாங்க prep start பண்ணிட்டோம், ஆனா… ஆபரேஷன்க்கு immediate advance payment தேவைப்படுது, ஃபேமிலி சைடுல ஏற்பாடு செய்ய முடியாம இருக்காங்க” அவர் சொன்னதை
கவனமாக கேட்டவனின் முகத்தில் ஒரு குளிர்ந்த உறுதி தெரிய, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, சற்றே தலையை சாய்த்தபடி, மெதுவான அதேசமயம் வலிமையான குரலில் சொன்னான்
“ஃப்ரம் திஸ் மூவ்மண்ட், அந்த பேசண்டோட ட்ரீட்மெண்ட் செலவுகளை நான் முழுமையா ஏத்துகிறேன், எந்தக் கட்டணத்துக்கும் அவங்க கவலைப்பட வேண்டாம், சர்ஜரியை உடனே ஸ்டார்ட் பண்ணுங்க, எத்தனை லட்சம் வேண்டுமானாலும் என் நேம்ல ரிஜிஸ்டர் பண்ணுங்க” என்று சொல்ல,… டீனின் கண்கள் சிறிது பெரிதானது…
அந்த உறுதியும், அவன் குரலில் இருந்த திடமான கட்டளையும் இவன் சாதாரணமானவன் அல்ல என்பதை அவருக்கு உணர்த்தியது..
“ஓகே சார்… வீல் ப்ரொசீட் இமீடியட்லி, தேங்க் யூ சார், பேசண்ட்க்கு இது லைஃப்-சேவிங் டிசிஷன்” என்று மரியாதையோடு பதில் அளித்தார்…
சிறு தலையசைப்போடு எழுந்து கொண்டவன்… “I don’t want any delay, She should survive at any cost”
என்று அழுத்தமான குரலில்
சொல்லிச் சென்றவனின் வார்த்தைகளின் ஒலி அறை முழுவதையும் ஆட்கொண்டிருக்க,.. ‘இவர் யார்?’ என்ற கேள்வி தான் அந்த டீனின் மண்டையை குடைந்து கொண்டிருந்தது….
தன் தாய்க்கான மருத்துவ கட்டணத்தை அங்கு ஒருவன் மொத்தமாக கட்டி முடித்துவிட்டான் என்பது தெரியாமல் அழுகையில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணவளருகில் வந்த அதே செவிலியர்,.. கருணையோடு அவளின் தோளில் கை வைத்து..
“இன்னும் ஏமா அழுதுட்டே இருக்க?உங்க அம்மாவுக்கான சர்ஜரி அமௌன்ட் ஆல்ரெடி செட்டில்
ஆயிடுச்சு, நாளைக்கே ஆபரேஷன் வைக்குறாங்க, கவலைப்படாத” என்று சொல்ல,…
அதிர்ந்தவளோ.. “என்ன சொல்றீங்க சிஸ்டர்? எப்படி?… யார் பணம் கட்டினது?” என்றாள் திக்கிய குரலில்…
அந்த நேரம் தான் அவனும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் தன் மிடுக்கான நடையில்,.. அவனை கவனித்த செவிலி,… “அதோ வராரே அவர் தான் உன் அம்மாவோட எல்லா ட்ரீட்மெண்ட் செலவுகளுக்கும் தானே பொறுப்பேற்த்துக்கிறேனு டீனிடம் சொல்லி இருக்கார்” என்று சொன்னவரோ,.. “உனக்கு தெரிஞ்சவரா இவரு?” என்ற கேள்வியையும் வைத்தார்,..
வந்து கொண்டிருந்தவனை அதிர்வோடு பார்த்தது அவள் விழிகள், மேனியில் மழையின் ஈரத்துடன், முகத்தில் வழக்கமான அலட்சிய தோரனையுடன் தன்னை நோக்கி வருபவனை கண்டு அவளது மனம்,.. ‘இவரா? இவர் எதுக்காக… அம்மா ட்ரீட்மெண்ட்க்கு உதவி பண்ணனும்,..’ என்ற குழப்பத்தில் தத்தளிக்க, அவனோ அவளின் முன்னிலையில் வந்து நின்றான்…
இன்னும் கண்ணீருடன் நின்றவளோ அவனை நேராக நோக்கி, குரல் நடுங்கியபடி… “எதுக்காக சார் எனக்கு உதவி பண்ணுறீங்க” என்று கேட்டாள்,..
அவன் முகத்திலோ எந்தவித உணர்வுகளோ ஒரு சின்ன சிரிப்போ இல்லாமல், இயல்பான குரலில்… “எத்தனையோ பேருக்கு நான் உதவி பண்ணிருக்கேன், ட்ரஸ்ட்க்கு நிதி கொடுத்திருக்கேன், இப்போ கண்ணுக்கு முன்னாடி ஒரு உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்குறதை பார்த்துட்டு அமைதியா போக முடியல” அந்த வார்த்தைகள் அவளின் உள்ளத்தையே நெகிழச்செய்தது, இரு கைகளையும் ஒன்றிணைத்து, கலங்கிய விழிகளோடு,.. “ரொம்ப நன்றி சார்… என் உயிர் உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன், உங்களை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க கண்ல கடவுள் தான் எங்களை காட்டி இருக்காரு, அதோட சீக்கிரமே எப்படியாவது உங்க கடனையும் நான் அடைச்சிடுவேன் சார்” என்றாள் பூரண நன்றியுடன்,…
அவனோ திடீரென்று அவளை கடினமாய் நோக்கி.. “நான் சொன்னது புரியலையா? இது கடனா கொடுக்கல ஒரு உயிரை காப்பாத்தனுங்கிறதுக்காக பண்ணினது” அழுத்தமாய் சொன்னவன்,.. “இதோ… உன்னோட ஃபோன்” அவளது கைப்பேசியை அருகிலிருந்த இருக்கையில் வைத்துவிட்டு அதற்கு மேல் திரும்பி ஒரு பார்வை கூட பார்க்காமல் விறுவிறுவென்ற நடையுடன் நடந்து சென்று அவள் கண்களை விட்டு மறைந்திருந்தான்,…
பெண்ணவனோ திகைத்து நின்றிருந்தாள், அனைத்தும் கனவு போல இருந்தது, திடீரென்று வந்தான் உதவி செய்தான், பின் மீண்டும் திடீரென்று வந்தான் அவன் தாய்க்கான மொத்த செலவையும் செட்டில் செய்து விட்டு போய்விட்டான்,…
திகைப்பிலிருந்து வெளிவராமல் நின்றவளோ,.. ‘இவர் யார்? இவ்வளவு பணத்தை தியாகம் செய்து விட்டு போயிருக்கார்? நிச்சயம் இதெல்லாம் சாதரணம் இல்ல, கடவுள் தான் எங்களுக்காக தூதனா இவரை அனுப்பி இருக்கார், நான் வழிபட்ட இறைவன் என்னை கைவிடல’ என்று இறைவனுக்கு நன்றியை செலுத்தியவளுக்கு அந்த கணம் நெஞ்சுக்குள் ஒரு வித அச்சமும் பரவியது…
‘இது நல்லதிற்குத்தானா?’ என்று மனம் சிறிது பயந்தது, ஆனால் உடனே அவள் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு.
‘கண்டிப்பாக நல்லதிற்குத்தான்… பணமில்லையென்றால் அம்மாவை காப்பாற்ற முடியாது, அவர் சொன்னாரே நிறைய ட்ரஸ்ட்களுக்கு கொடுத்திருக்கிறேன்னு, நிச்சயம் பெரிய மனசு கொண்ட நல்லவர்தான், கடவுள் தான் அனுப்பி வைத்திருக்கிறார்,
எப்படியாவது நான் அவரைக் கண்டுபிடிச்சி இந்த உதவிக்கான கடனை அடைச்சுவேன்’ என்று மனதில் ஒரு உறுதியான முடிவையும் எடுத்தாள்,…
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,….
அந்த காலை வேலையில் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள் மதுநந்தினி, காலை உணவோடு சேர்த்து மதிய உணவையும் சமைத்து முடித்தவள், அடுக்களையை ஒழுங்கு படுத்திவிட்டு, டிபன்பாக்சிஸ் தனக்கும் சிறிது உணவை போட்டுக்கொண்டு அவசர அவசரமாக அதனை கைப்பையினுள் திணித்து விட்டு அறைக்கு சென்றவள், தன் துப்பட்டாவை நேர்த்தியாக போட்டுவிட்டு, கையில் முக்கியமான ஃபைலையும் மறக்காமல் எடுத்து விட்டு, கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை சரி பார்த்துவிட்டு,… “அம்மா,.. நான் போயிட்டு வரேன்” என்று கத்தி சொல்லிவிட்டு வாசலை நோக்கி சென்றவள்,.. “நந்தினி” என்ற தாயின் குரலில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் நின்று திரும்பினாள்,..
தாயை கண்டவள்… “நீங்க ஏமா ரூமை விட்டு வந்தீங்க, ரெஸ்ட் எடுங்கம்மா ப்ளீஸ்” என்று இறைஞ்சலுடன் கூடிய பார்வையில் சொல்ல,..
அவள் தாய் பார்வதியோ,… “நான் நல்லா தான்டி இருக்கேன், ஹார்ட் ஆபரேஷன் முடிந்து ரெண்டு வருஷதுக்கு மேலாச்சு, ஆனாலும் இப்போ வரைக்கும் என்னை சின்ன வேலை கூடப் பார்க்க விடாம கொடுமை பண்ணுறடி நீ, இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நான் சும்மாவே உட்கார்ந்துட்டு இருக்கிறது, குறைந்தபட்சம் என்னை சமையல் வேலையாவது செய்ய விடலாம்ல” என்றார் ஆதங்கத்தோடு,…
அவ்வளவு நேரம் பம்பரமாய் சுழன்றவள், தாயின் வாடிய முகத்தை கண்டு சின்ன புன்னகையுடன் அவரருகில் வந்தவள்,.. “உங்க ஆதங்கம் எனக்கு புரியுதுமா, ஆனா எனக்கு பயமா இருக்குமா, அதனால தான் உங்களை எந்த வேலையும் செய்ய வேண்டாம்னு சொல்றேன், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அப்புறம் நீங்க கண்டிப்பா வேலை பண்ணலாம்” என்று சமாதானமாக சொல்ல,…
“சரி,… இன்டர்வியுக்கு போறியே, இந்த அம்மாகிட்ட சொல்லிட்டு போகணும்னு தோணுச்சா உனக்கு, நீ பாட்டுக்கு போற” அவர் கோபித்துக் கொள்ள,…
“என்னமா நீங்க, நான் இதை பத்தி தான் நைட்டே உங்க கிட்ட சொன்னேன்ல, காலைல எனக்கு டைம் இருக்காதுங்கிற விஷயத்தையும் சொன்னேன், இருந்தும் நீங்க இப்படி கேட்கிறது நியாயயமா” என்றாள் பாவமாக உதட்டை சுழித்து,…
“நியாயம் தான், என்ன இருந்தாலும் நீ என்கிட்ட வந்து சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு தான் போயிருக்கணும், முதல் தடவை இன்டர்வியூக்கு போற, அப்படியே போவியா” என்றவரோ,.. “இரு வரேன்” என்று சமையலறை நோக்கி செல்ல,… “கிச்சனுக்கு எங்கேமா போறீங்க, அங்கே உங்களுக்கு எந்த வேலையும் இல்ல” என்று அவரை பின்தொடர்ந்து அவளும் வர,…
அவரோ,… “ரொம்ப பண்ணாதடி, சக்கரை தான் எடுக்க வந்தேன்” என்று சொல்லிவிட்டு,… “வாயை திற” என்று கூறி அவள் வாயில் சக்கரையை அள்ளி போட்டவர்,.. “நல்லபடியா இன்டர்வியுயை முடிச்சு, இந்த வேலை உனக்கு கிடைக்கனும்” என்று ஆசீவாதம் செய்ய… “தேங்க்ஸ்மா” என்று மெல்ல தாயை அணைத்துக் கொண்டவள்,… “சாப்பிட்டு மறக்காம டேப்லட் போட்டுடுங்கமா, பக்கத்து வீட்டு கமலா அக்காகிட்ட சொல்லிட்டு தான் போவேன், அவங்களும் அடிக்கடி வந்து கவனிச்சிக்குவாங்க” என்று பல ஜாக்கிறதைகள் சொல்லி விட்டு புறப்பட்ட மகளை, கனிவுடன் பார்த்தவருக்கு கண்களும் தன்னை மீறி கலங்கி போனது,…
அவள் வயது பெண்கள் எல்லாம் சுற்றி திரியும் பறவைகளாக வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் தன் மகள் வாழ்க்கை இப்படி தன்னோடு மட்டுமே கட்டுப்பட்டு இருப்பது பார்வதியின் மனதை வலியடையச் செய்தது, அவர் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பு மதுநந்தினி இப்படியில்லை, மான் குட்டி போல துள்ளித் திரிவாள், தோழிகளுடன் சிரித்து விளையாடி, தனக்கென ஒரு உலகத்தை வைத்திருந்தாள், ஆனால் இப்போது அம்மா மட்டுமே அவளின் உலகம், தனக்கென ஆசை, பாசம் எதுவும் இல்லாமல், மொத்தமாக தாயின் பக்கமே தன்னை செலுத்தி விட்டாள்…
மதுநந்தினியின் தந்தை இயற்கை எய்திய பிறகு, தாய்க்கு மகளும், மகளுக்கு தாயும் மட்டுமே துணை, அதன்பின் அந்த வீட்டில் ஒரே ஒற்றை உறவாக அவர்கள் இருவரின் பாசமே நிலைத்து வந்தது, அவள் தந்தையின் இறப்புக்குப் பிறகு, அவர் பணியாற்றிய அலுவலகத்திலிருந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் பென்ஷன் வந்தது, அதை வைத்து தான் அந்த குடும்பத்தின் சக்கரம் எப்படியோ சுற்றியது….
மதுநந்தினி கல்லூரியின் முதல் வருடத்தில் இருந்தபோது தான் அவள் தந்தை உயிரிழந்தார், அப்போது அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவளுக்கு கல்லூரியில் இலவசமாக இருக்கை கிடைத்தது, அதனால் படிப்பு செலவு குறைந்து, வாழ்க்கைச் சுமை சற்று குறைந்தது….
அவள் இரண்டாம் வருட படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போது தான் பார்வதிக்கு திடீரென இதய நோய் வந்தது, அந்த நாள் முதல் தான் மதுநந்தினியின் உலகமே மாறி போனது….